Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொக்கைப் பதிவு உடல் நலத்திற்க்குக் கேடு !

Featured Replies

மொக்கைப் பதிவு என்பது யாதெனின் …” என்று துவங்கும் குறளை வள்ளுவர் எழுதவில்லை. அது கணினியோ இணையமோ பதிவர்களோ இல்லாத காலம். ஓலைச் சுவடியின் மீது எழுத்தாணியால் கீறத் தெரிந்தவர்களெல்லாம் வலையேற்றம் செய்யும் வாய்ப்பு அன்று இல்லை. இன்று இருக்கிறது.

‘காலம் கெட்டுப் போச்சு’ என்று புலம்பும் இலக்கிய சநாதனிகள் இல்லை நாங்கள்.

கல்வியறிவு வாழ்க! கருத்துச் சுதந்திரம் வாழ்க! எனவே, ”மொக்கைப் பதிவும் வாழ்க!” என்று எங்களால் கூவ முடியவில்லை. தமிழ் மணத்தின் நட்சத்திரப் பதிவில் ஏறியவுடன், “எம்மைத் தவிர அனைவரும் மொக்கைகளே” என்று உலகுக்கு அறிவிக்கும் நவீன இலக்கிய தாதாக்களும் நாங்கள் இல்லை.

நாங்கள் என்ன தரம், என்ன ரகம் என்பதை பதிவுலகம் கூறட்டும். நாம் ”மொக்கைப் பதிவென்பது யாது?” என்ற தத்துவஞானக் கேள்விக்கு மட்டும் விடை காண முயல்வோம். இது குறித்த முன்னோடி ஆய்வுகளைப் பல பதிவர்களும் செய்திருக்கிறார்கள் எனினும் அந்த ஆய்வுக் கடலில் ‘வினவு’ம் ஒரு துளியாகச் சேர வேண்டாமா?

முன்னொரு காலத்தில் அருந்ததி ராயும், ஜூம்பா லகரியும் சொந்தமாக்க் கணினி வாங்கி, அதில் எந்தத் திட்டமுமில்லாமல் தட்டத் தொடங்கினார்களாம். பிறகு தட்டியவைகளைச் சேர்த்துக் கட்டியபோது அது நாவலாகி விட்டதாம். புக்கர் பரிசும் பெற்று விட்டதாம். எல்லாம் அவர்கள் சொன்னதுதான். எழுத்தாணி பிடித்தவனெல்லாம் வள்ளுவனாக முடியாது என்பது போல தட்டத் தெரிந்த அம்பிகளெல்லாம் அருந்ததி ராயும் ஆக முடியாது. இது தெரிந்த விசயம்.

என்றாலும் கையெழுத்துப் பத்திரிகை, உருட்டச்சு பத்திரிகை, சிறு பத்திரிகை அப்புறம் குமுதம், ஆனந்தவிகடன் என்று படிப்படியாக ‘உழைத்து முன்னேறிய’ எழுத்தாளர் பெருமக்கள் பார்த்துப் பெருமூச்செறியும் வகையில் ‘இன்று எங்கெங்கு காணினும் பதிவரடா’ என்கிற நிலை. இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா முதலிய நாடுகளில், கோபால் பல்பொடியைத் தோற்கடிக்கும் விதத்தில், ஒரே நேரத்தில் பளிச்சிடும் உலக வரைபடத்தின் நட்சத்திரங்கள், எல்லாப் பதிவர்களையும் ‘உலக நாயகனே … எழுது …எழுது..’ என்று உந்தித் தள்ளுகின்றன.

டாஸ்மாக் — சுண்டக்கஞ்சியைக் காட்டிலும் வலியது ஹிட்ஸ் போதை. ”நீ மட்டும் முற்றும் துறந்த முனிவனா?” என்று கேட்காமல் பொறுமையாகப் படியுங்கள். எழுதுபவர்களின் நோக்கமோ, திறமையோ எழுத்துக்கான உந்துதலாக இல்லாமல், மேற்படி ”போதையே” உந்துவிசையாக மாறிவிடுகின்ற அபாயகரமான தருணத்தில்தான் மொக்கை அவதரிக்கிறது.

புகழ் பெற்ற வலைப்பதிவர்களுக்கு வரும் ஹிட்ஸூம், புல் அரிக்கவைக்கும் கும்மிகளும் ”நாமும் அது போல ஆக மாட்டோமா” என்று பதிவர்களின் சிந்தனையை அரிக்க ஆரம்பிக்கிறது. என்ன எழுதுவது, என்ன தலைப்பிடுவது என்பதை தமிழ் மணம் சூடான இடுகையில் இடம் பிடிக்கும் ”நோக்கமே” தீர்மானிக்கிறது. விளைவு - தினமலர் போஸ்டர் தந்திரம். பதிவேற்றிவிட்டு ஹிட்சுக்காக காத்திருப்பது, உலக வரைபடத்தை விரித்து வைத்துக் கொண்டு ஒளிரும் நட்சத்திரங்களுக்காக ஏங்குவது, மறுமொழி போடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லி, நன்றி கூறலையே மறுமொழி எண்ணிக்கையைக் கூட்டும் தந்திரமாக்குவது, தனக்குப் பின்னூட்டம் போடும் பதிவர்களுக்கு மட்டும், அவர்கள் போட்ட பின்னூட்டம் எத்தனை ரூவாயோ அதே அளவுக்கு மொய் எழுதுவது, விமரிசிப்பவர்களின் வலைப்பதிவில் அனானியாகச் சென்று இறங்கி மொட்டைக் கடுதாசியைச் செருகுவது… என்று எல்லா வகைத் தந்திரங்களையும் கீழ்மைகளையும் பதிவர்களுக்கு வலையுலகம் கற்றுத் தருகிறது.

படிப்பவர்களும் பதிவர்களுக்குக் கற்றுத் தருகிறார்கள். ஷகீலாவும் பர்தாவும் பெண்ணினத்தை இருபுறமும் தாக்குவது பற்றி நாங்கள் ஒரு பதிவு எழுதினோம். ஷகீலா என்ற சொல்லைப் பயன்படுத்தியதுதான் நாங்கள் செய்த பாவம். இன்றைக்கும் பலான நோக்கத்துக்காக ஷகீலாவைத் தேடும் பக்தர்கள் சிலர் கூகிள் வழியாக ”வினவு” க்குள் இறங்கி, ஏமாந்து, மனதுக்குள் கெட்டவார்த்தை சொல்லி திட்டிவிட்டுப் போகிறார்கள்.

மெய் உலகம் எப்படி இருக்கிறதோ, அப்படித்தானே இருக்கும் மெய் நிகர் உலகம்? ஜெயலலிதா கட் அவுட்டுகள், பூப்பு நீராட்டு விழா போஸ்டர்கள், ஊட்டியில் டூயட் பாடும் திருமண வீடியோ மிக்சிங்குகள் ஆகியவற்றால் நிரம்பியதன்றோ நமது மெய்யுலகம்! இதன் பிரதியான மெய்நிகர் உலகில் ஜெயமோகனின் சுற்றுலா ஆல்பமும், சாருநிவேதிதாவின் பாரிஸ் பாரும் பதிவுகளின் சைடு பாரில் ”என்னைப் பார் யோகம் வரும்” என்று இளிக்கின்றன. கட் அவுட் வைத்தால் காசு, பிளாக்கில் போட்டால் ஓசி!

இப்படி எந்த விதமான கருத்துடனோ, கொள்கையுடனோ கூடாமல், ”இயற்கைக்கு விரோதமான முறையில்” சுய இன்பர்கள் பெற்றெடுப்பவையே மொக்கைகள் என்று பொதுவாகக் கூறலாம்.

பதிவர்களின் எழுத்தூக்கத்தையும் ஆர்வத்தையும் கருக்குவது எம் நோக்கமல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இரகசியமாக ஓட்டுப் போடுவது என்ற முறையில் அல்லாது வேறு விதத்தில் தமது கருத்துரிமையைப் பயன்படுத்தத் தெரியாத மக்கள் நிரம்பிய நாட்டில், ஒரு கருத்தைக் கூறவும், விவாதிக்கவும் முன்வரும் எந்த முயற்சியும் வரவேற்கத் தக்கதே.

ஆனால் அப்படி ஒரு கருத்து இருக்க வேண்டுமே!

தீபாவளித் திருநாளன்று பல் விளக்காமல் குலோப் ஜாமூன் சாப்பிட்டது, பிள்ளைக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்தது, அய்யங்கார் மனைவி இறால் குஞ்சில் இட்லிப் பொடி செய்து தந்து நெகிழ்வித்தது, ஜட்டி தெரியும்படியாக பாண்ட் அணிந்து கல்லூரி மாணவிகளின் இதயத்தை ஊடுறுவியது போன்றவையெல்லாம் தேடிக்கிடைக்காத அனுபவங்களாக முன்மொழியப்படும்போது, பாரிசை சென்னை டாவடித்த அக்கப்போரும் ஒரு கருத்தாக வழிமொழியப்படுகிறது. மொக்கைகள் பல்கிப் பெருகுகின்றன.

சரத்குமார் அரசியலுக்கு வருவதற்கான நியாயத்தை எம்ஜியார் வழங்குவது போல, மொக்கை சமஸ்தானங்களுக்கான ஊக்கத்தையும் நம்பிக்கையையும் மேற்படி மொக்கை சக்கரவர்த்திகள் வழங்குகிறார்கள். 100 கோடி ரூபாய் பணத்தை ஷங்கரிடம் கொடுத்து பிரம்மாண்டமாய் படம் எடுக்கச் சொன்னால், 30 கோடிக்கு ஒரு கண்ணாடி மாளிகை கட்டி ரஜினியை ஆடவிட்டு, அடுத்த பிரம்மாண்டத்துக்கு ஃபேர் அண்டு லவ்லியைப் பிதுக்கச் சொல்கிறாரே, அது குலோப்ஜாமூன் மொக்கை மா…திரி இல்லை?

“சரக்கே இல்லையென்றாலும் ருசிகரமாக இருக்கிறது, அபத்தமாக இருந்தாலும் நகைச்சுவையாக இருக்கிறது, முட்டாள்தனமாக இருந்தாலும் விறுவிறுப்பாக இருக்கிறது” என்று பலவகையான ரசனை நியாயங்கள் மொக்கைகளுக்கே ஒரு எழுத்து மோஸ்தர் என்னும் அந்தஸ்தை வழங்கி ஆசி கூறுகின்றன.

“கொசு அடிக்க குண்டாந்தடியா? இதற்கு இத்தனை ஆய்வு தேவையா?” என்று பதிவர்கள் அலுப்படைய வேண்டாம். மொக்கைகள் கொசுவுக்கு நிகரானவை என்பதென்னவோ உண்மைதான். ஆனால் கொசுவின் வலிமையை அதன் தோற்றத்தை வைத்தா கணிக்க முடியும்? அது பரப்பும் தொற்று நோயல்லவா அதன் உண்மையான வலிமை.

குன்னக்குடி, லால்குடி போன்ற பல கில்லாடிகள் தம் ஆயுளையே பிடிலுக்கு அர்ப்பணித்திருந்தாலும், நீரோ மன்னன் வாசித்த பிடில் மட்டும்தான் உலக வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது. காரணம், அவன் பிடில் வாசித்த மேடையின் பின்புலம். ”கூடிச் சோறு நிதம் தின்று தினம் சின்னக்கதைகள் பல பேசி.. வாடிக் கிழப்பருவமுற்று விழுபவர்கள்” எப்போதும் வேடிக்கை மனிதர்களாக மட்டுமே இருப்பதில்லை. பரந்து விரிந்து பிரம்மாண்டமாகக் கிடக்கும் இந்த மெய் நிகர் உலகத்தை, கூச்சமோ அருவெறுப்போ இல்லாமல் தமது சின்னக் கதைகளால் நிரப்பும் மொக்கைகளை நீரோக்கள் என்றோ அற்பர்கள் என்றோ அழைப்பது மிகையா என்ன?

எப்போதும் சீரியஸாக உம்மென்றோ, அனல் கக்கும்படியாகவோ, அழுது கண்கள் வீங்கியபடியோதான் எழுத வேண்டும், நகைச்சுவையும் எள்ளலும் கூடாதென்று நாங்கள் கூறவில்லை. சாப்ளினை விடவா? ஒலியே இல்லாத ஒரு கலை மொழியில் மார்க்ஸை மொழிபெயர்த்து உலகுக்கு வழங்கிய சாப்ளினுடைய நோக்கத்தில் நேர்மை இருந்ததனால்தான் அந்த நகைச்சுவையில் கூர்மை இருந்தது. சிரிப்பு எங்கே முடிகிறது, துயரம் எங்கே தொடங்குகிறது என்று பிரித்தறிய முடியாத வெளியை, எளிய மக்களின் வாழ்க்கையை, ரசிகனுக்கு அறிமுகப்படுத்தியது.

வாழ்க்கையை நேருக்கு நேர் சொந்தக் கண்ணால் பார்க்கும் ஆற்றலும் தைரியமும் இல்லாதவர்களிடமிருந்துதான் ‘லாஃபிங் கேஸ்’ நகைச்சுவை உற்பத்தியாகிறது. மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையின் கொடூரத்தை யாரால் உளப்பூர்வமாக வெறுக்க முடிகிறதோ, அவர்களிடமிருந்து உண்மையான நகைச்சுவையும் தோன்றுகிறது. தம்முடைய கீழ்மையை உணர்ந்து அச்சப்படுவது யாருக்கு கைவருகிறதோ அவர்களுக்கு மட்டுமே சுய எள்ளலுக்கான தைரியம் வருகிறது.

இவை இல்லாதவர்கள் அனைவரும் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட கருத்துலகின் ரீசைக்கிள்டு சரக்குகளாக இணையத்தில் குவிகிறார்கள். வணிகச் சினிமா, வணிகப் பத்திரிகை, வணிக அரசியல் ஆகியவற்றால் ஐம்புலன்களும் நிரப்பப்பட்டு, ‘கழுகாரின் கண்கள், அரசுவின் நாவுகள், வம்பானந்தாவின் அறிவு, மிஸ்டர் மியாவின் தோல்’ ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட மனிதர்கள் கருத்துச் சுதந்திரத்தைக் கைப்பற்றும்போது மொக்கைகளை மட்டுமே பிரசவிக்க முடியும்.

இதைப் பேசக்கூடாது, இதை எழுதக் கூடாது என்று குறிப்பான கருத்துகள் மீது ஆளும் வர்க்கங்கள் விதித்திருந்த தடையை எதிர்த்துப் போராடித்தான் மனித குலம் கருத்துச் சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறது. சின்னக் கதைகள் பேசி மகிழ்வோர் சுதந்திரமின்மையினால் என்றும் அவதிப்பட்டதில்லை. எனவே, சுதந்திரத்தின் மாண்பையும் அவர்கள் உணர்வதில்லை. அவர்களுடைய விசைப்பலகையின் எல்லா பட்டன்களும் எஸ்கேப் பட்டன்களே. பட்டன் ஒன்றுதான் எனும்போது பதிவர்கள் எத்தனை ஆயிரமாய் இருந்தும் பயனென்ன?

பல்லாயிரம் பதிவர்களை இணையம் பெற்றெடுத்திருக்கும் இதே காலகட்டத்தில் தான் பல இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். கும்மிப் பதிவுகளைப் பொழியும் ஐ.டி உலகின்மீது பிங்க் ஸ்லிப்புகள் பொழிகின்றன. ரம்பாவின் தற்கொலை வதந்தியின் மீது பதிவர்களின் பார்வை முழுதும் பதிந்திருந்த அதே நாளில்தான், பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனை, ஏழைகளின் பார்வைகளை இலவசமாகப் பிடுங்கியது. சிங்கள இராணுவம் குண்டு மழை பொழியும் இதே நாளில்தான் இந்தியாவில் ரிலீஸ் ஆகிறார் ஜேம்ஸ்பாண்டு. பங்குச் சந்தையால் சூறையாடப்பட்ட அமெரிக்க மக்களின் தற்கொலைச் செய்திகளுக்கு அக்கம்பக்கமாக, அந்தப் பங்குச் சந்தையில் புத்திசாலித்தனமாகச் சூதாடுவதற்குச் சொல்லித்தருகிறார்கள் அம்பிகள்.

ஆயிரம் பேர் ஆடுவதற்கு இடமளிக்கும் மேடை ஆயிரம் பேரையும் நடனக் கலைஞராக்கி விடுவதில்லை. தலைவர்கள் - மந்தைகள், மேதைகள் - பாமரர்கள் என்று பிரிந்து கிடக்கும் அவமானமான நிலை முடிவுக்கு வருவதை இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. ஆனால் அது அந்த சாத்தியத்தை மட்டுமே வழங்குகிறது.

நீரோ ஒரு மன்னன். அல்லது அவனைப் போல மேலும் சில மன்னர்கள். அவ்வளவு மட்டுமே அன்று சாத்தியம். அது மன்னராட்சிக்காலம். இது ஜனநாயகம். எல்லோரும் இந்நாட்டு மன்னர். ‘ரோம்’ இன்னும் எரிந்து கொண்டுதானிருக்கிறது.

இக்கட்டுரை வெளிவந்த தளம் ; http://vinavu.wordpress.com

இதன் பின்னூட்டங்களை வாசிக்க ; http://vinavu.wordpress.com/2008/11/10/tmstar1/#comments

இணையப்பதிவுகள் / பதிபவர்கள் பற்றி நன்றாக அலசி ஆராய்ந்து, நிதானத்துடன் எழுதப்பட்ட கட்டுரை.

குன்னக்குடி, லால்குடி போன்ற பல கில்லாடிகள் தம் ஆயுளையே பிடிலுக்கு அர்ப்பணித்திருந்தாலும், நீரோ மன்னன் வாசித்த பிடில் மட்டும்தான் உலக வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது. காரணம், அவன் பிடில் வாசித்த மேடையின் பின்புலம்.

இது தான் உலகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.