Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளிருந்து ஒரு குரல்

Featured Replies

உள்ளிருந்து ஒரு குரல்

திகதி: 21.12.2008 // தமிழீழம் // []

எழுதியவர் - அம்புலி

2008 யூலை மாதம், மன்னார்க் கட்டளைப் பணியகப் போராளிகளும், 2ஆம் லெப்.மாலதி படையணியினரும் தேத்தாவாடியில் உடனடியாக ஒரு முன்னணிக் கோட்டை ஏற்பாடு செய்து அதில் காப்பிலீடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த உடனடி ஏற்பாடு போதிய காப்பானதாக இருக்கவில்லை. வெள்ளமெனத் திரண்டு வரும் கடலலைகளுக்கு முன்னால் சிறு சிறு கற்களைத் தூக்கிப் போட்டுத் தடுப்புச் செய்வதுபோல, மூர்க்கமும் போர்வெறியுங்கொண்டு முன்னேறும் சிங்களப் படைகளுக்கெதிராக மனத்திடத்தை மட்டும் காப்பாக முன்னிறுத்தியபடி புலிகள் சண்டை செய்து கொண்டிருந்தனர்.

தேத்தாவாடியில் அரண்களைப் போட்டு பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்வதற்குச் சிறிய கால அளவேனும் தேவையாக இருந்தது. இந்தக் கால அவகாசத்தைப் பெறுவதற்காகவும் வேலைசெய்து கொண்டிருக்கும் போராளிகள் மீது தாக்குதல் நடத்த வரும் எதிரியின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும் ஒரு அணி முன்னே ஊடுருவி தீக்கழிக்குச் சென்றது. மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த போராளிகள் ஆறுபேரும் மாலதி படையணிப் போராளிகள் ஆறுபேரும் வேவு அணியில் நான்கு பேருமாகப் பதினாறு பேர் கொண்ட அந்த அணி மூன்று நாட்களுக்குத் தேவையான உலருணவுடனும் தாக்குதலுக்குத் தேவையான வெடி பொருட்களுடனும் நகர்ந்தது.

முன்னே மூன்று கிலோ மீற்றர்கள் நகர்வு. நகரும் இடமெங்கிருந்தும் அடி கிடைக்கும் என்ற காரணத்தால் விழிப்புடனேயே அனைவரும் சென்றனர். இவர்களுக்கான கட்டளையை வழங்குவதற்காக மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த ஜானும் உடன் சென்றார். போகுமிடமெல்லாம் படையினர் அவ்விடங்களில் நடமாடியதற்கான அடையாளங்கள் இருந்தன. காலணித்தடம், நெகிழப்பைகள், குருதித் தடுப்புப் பஞ்சணைகள், தீப்பெட்டி போன்ற இன்னபிற அங்கே காணப்பட்டன. சென்ற இடத்தை அவதானித்து இரண்டு நிலைகளைப் போட்டுக் காப்பில் ஈடுபட்டவாறே அவ்விரவைக் கழித்தனர். அடர்காடு, மையிருட்டு அடுத்தவரைத் தொடுகையின் மூலமின்றி இனங்காண முடியாத இருள். அந்த இரவு ஒருவாறு விடிந்துவிட்டது.

அடுத்த நாட்காலை வேவுப் போராளிகளும், இவர்களுமாகச் சேர்ந்து தடயம் பார்த்துப் பொறி வெடிகளைப் புதைத்தனர். நிற்கும் இடத்துக்குச் சற்றுப் பின்னே புதிய முன்னணிக் கோட்டை அமைப்பதற்கான திட்டம் உருப்பெறுவதற்காக பின்னிருந்து ஊர்தியொன்று தருவிக்கப்பட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டது. ஊர்தியின் சத்தத்தை இனங்கண்ட படையினர் தமது தொலைத்தொடர்பு உரையாடல்களில் அவ்வூர்தியையும், போராளிகளையும் சுற்றிவளைத்துப் பிடிப்பதற்குத் திட்டமிட்டனர்.

இந்த உரையாடல் ஒற்றாடலின் மூலம் தெரியவந்ததால் ஊர்தி உடன் பின்னுக்கு அனுப்பப்பட்டது. அன்று மதியம் ஊர்தி நின்ற இடத்தைக் குறிவைத்து எறிகணைகள் மழைபோல வந்து பொழியத் தொடங்கின. இதனால் ஊடுருவிச் சென்று நிலைகொண்ட அனைவரும் தமது நடமாட்டத்தை நிறுத்திக் காப்பில் இருந்தனர். அன்றிரவு அவ்விடத்தை விட்டுப் பின்னகர்ந்து வேறிடத்தில் நிலை கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளை கிடைத்தது. எப்படியும் இவர்களை மோப்பம் பிடித்துப் படையினர் வந்து தாக்குவார்கள் என்பதை இவர்களும் அறிந்திருந்ததால் கட்டளைக்கேற்ப பக்கவாட்டாக இடம்மாறி அதற்குப் பின்னே நகர்ந்து வேறோரிடத்தில் அந்த அணி காவலில் நின்றது.

முக்கோணவடிவத்தில் ஒருபுறம் வேவு அணியும், இன்னொரு பக்கம் பெண்புலிகளும், மறுபுறம் மன்னார்க் கட்டளைப் பணியகத்தினருமாக நிலையைப் போட்டு விடிய விடிய மாறி மாறி விழித்திருந்தனர். ஒருபுறம் நிற்பவர்களுக்கும் மறுபுறத்தில் நிற்பவர்களுக்கும் நாற்பது மீற்றர்களே இடைவெளி. அதிகாலை நான்கு மணிக்குக் காடுமுறிக்கும் சத்தம் கேட்டது. பெண்புலிகளின் பக்கம் காவலில் நின்ற வசியரசி புதியவர் என்பதால் சான்மொழியைத் துணைக்கு எழுப்பினார். சத்தங்கேட்டு அனைவருமே விழிப்பு நிலைக்குச் சென்று தகுந்த காப்புக்களில் நின்றனர்.

படையினர் பன்னிரண்டு பேரளவில் நகர்ந்து வருகின்றனர் என்பது அவதானிக்கப்பட்டது. நகர்ந்து வருபவர்கள் இவர்கள் போட்ட முக்கோணக் காப்பை அவதானித்தால் அந்த முக்கோணத்தின் மூன்று புறமிருந்தும் புலிகள் தமது எதிர்ப்பைக் காட்டத் தயாராக நின்றனர். கண்டமேனிக்குப் பரவலாக நகர்ந்த சிங்களப்படைகள் இவர்களுக்கு கிட்டவாக நகர்ந்து இவர்களது முக்கோண நிலையின் உட்புறத்தே வந்துவிட்டனர். சான்மொழி எழுந்து காப்பில் நிற்க ஜான்மாதிரி ஒரு உடற்பருமனானவர் அவரது உடையமைப்புடனேயே அவர்களுக்கு அருகில் வருவது தெரிந்தது. வந்தவர் P.மு சுடுகருவி வைத்திருப்பதைப் பார்த்தவுடன் இவர் ஜானல்ல என்பதைச் சான்மொழி இனங்கண்டார்.

எனினும் உள்ளே வந்த படையினரை ஒரு பகுதியினரும் சுட முடியாது. சண்டை வெளிப்புறமாகவே நடைபெறலாமென எதிர்பார்க்கப்பட்டது. இப்போது முக்கோணத்தின் உள்ளே எதிரிகள் தாக்கினால் மறுபுறத்திலிருக்கும் எம்மவர்களே பலியாகக் கூடும். இதையுணர்ந்த போராளிகள் முக்கோணத்தை விட்டுப் படையினர் வெளியேறு மட்டும் மறைவாக இருந்தனர். உள்ளே வந்தவர் கொற்றவையின் தலையை எட்டிப்பிடிக்கும் தூரத்துக்கு வந்துவிட்டார். மூன்று மீற்றரில் இப்போது எதிரி. மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த பாலு சடுதியாகச் செயற்பட்டு கொற்றவைக்கருகே வந்தவனை விழுத்திவிட்டார்.

விழுந்தவன் தனது துப்பாக்கியால் கொற்றவைக்குச் சுட அதைக்கண்ட பரணிதா விழுந்தவனுக்கு மறுபடியும் சுட்டு அவனைச் செயலிழக்கப் பண்ணினார். இப்போது அனைவரையும் அனைவரும் இனங்கண்டு விட்டனர். உள்ளே வந்தவர்களை ஒருவாறு முக்கோணத்தின் வெளியே தள்ளியாகிவிட்டது. வெளிப்புறமாக எல்லோரும் தாக்கத்தொடங்கினர். "மகே அம்மே" என்ற சத்தம் வெளிப்புறமிருந்து கேட்கத் தொடங்கியது. முக்கோணத்தில் நின்ற போராளியொருவருக்குப் பாதக்காலில் பெரிய காயம்.

கட்டளைப் பணியகத்துடனான தொடர்பு சீராக இருக்க, நின்ற இடத்திலிருந்து இவர்களைப் பின்வாங்கி வருமாறு கட்டளை கிடைத்தது. வந்தவர்கள் இவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு "மகே அம்மே" சொல்லிக்கொண்டு பின்வாங்கி விட்டனர். எறிகணைகள் துரத்திவந்து விழுவதற்கிடையில் காயக்காரரை யும் தூக்கிக்கொண்டு அந்த ஊடுருவல் அணி பின்வாங்கியது. சற்றுப் பின்னே சென்று தடிவெட்டிக் காவு படுக்கை செய்து அவரைத் தூக்கலாமென்று சுற்றிலும் அவதானித்தால் விடத்தல் பற்றைகளே எங்கும் தென்பட்டன. வேறு வழியின்றி விடத்தல் தடிவெட்டி முள்ளைச் சிராய்த்து விட்டு காயக்காரரை காவு படுக்கையில் தூக்கிக்கொண்டு தேத்தாவாடிக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த இரண்டு நாட்களும் போதிய உணவும், நீரும், ஓய்வுமின்றி இருந்ததால் ஏற்கெனவே இரத்த அழுத்தம் இருந்த ஜானுக்குக் களைப்பாக இருந்தது. அவர் தனது நோயையும், இயலாமையையும் அதுவரை வெளிக்காட்டவில்லையெனினும் முன்னணிக்கோட்டுக்கு அண்மித்த வழியில் மயங்கிக் கீழே சரிந்தார். தனது தந்தையைப் போன்ற அகவையிலிருந்த அவரை சான் மொழியும் இன்னுமொருவருமாகத் தூக்கிச் சென்று அவருக்குரிய இடத்தில் விட்டனர். இவர்கள் ஊடுருவிச் சென்ற கால இடைவெளியைப் பயன்படுத்தி தேத்தாவாடி முன்னணிக்கோடு சண்டைக்குத் தயாரான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தது. அந்த ஏற்பாடுகள் நிறைவடையும் முன்னரே அந்த முன்னணிக் கோட்டின் ஒருபுறம் தனது அணியை காவலில் நிறுத்தியிருந்த அமர்வாணத்தின் பகுதியில் சண்டை தொடங்கி விட்டிருந்தது.

பாப்பா மோட்டையில் நின்ற 2ஆம் லெப்.மாலதி படையணியின் முறியடிப்பு அணியில் ஒருவராகத் துளசியும் நின்றார். அடிக்கடி படையினர் முன்னகர்வதால் அடிக்கடி முறியடிப்புச் சமர்களும் நடந்துகொண்டிருந்தன. காலை, நண்பகல், மாலை, இரவு என்று காலவேறு பாடுகளற்றுச் சண்டைகள் தொடர்ந்தன. முன்னணிக் கோட்டுக்கும், அதற்கான முதன்மைத் தளத்துக்கும் ஐம்பது மீற்றர் இடைவெளியே இருந்தது. ஒவ்வொரு நாளும் டாங்கிகளின் சூடுகள் இவர்களைத் தேடிவந்தன. முதன்மைத் தளத்துக்கருகே வீதி இருந்ததால் அவ்வீதி வழி டாங்கியுடன் படையினர் முன்னேற முற்பட்டனர்.

முதன்மைத் தளத்திலிருந்து எதிரிகளை இனங்கண்டதால் இவர்களும் பக்கவாட்டாகவே அடிக்கத் தொடங்கிவிட்டனர். டாங்கிச் சூடுகள் பற்றை பறகுகளையெல்லாம் கிளப்பியெறிந்ததால் எங்கோ நிம்மதியாகக் கூடுகட்டியிருந்த குளவிகள் தமது இருப்பிடத்தையிழந்து சினங்கொண்டு பறந்து படையெடுத்து வந்தன. ஈழமங்கை முதன்மைத் தளத்திலிருந்து முன்னணி நிலைகளுக்குக் கட்டளை வழங்கிக் கொண்டிருந்தார். அருகே நடைபெறும் சண்டையையும் வழிப்படுத்திக் கொண்டிருந்தார்.

குளவிகளின் கோபம் ஈழமங்கையை நோக்கித் திரும்பியது. கட்டளை வழங்க முடியாது குளவிகள் அவரைக் கொட்டித் தள்ளின. புவிநிலைகாண் தொகுதியுடன் நின்ற பிருதுவி ஈழமங்கை மயங்கிச் சரிய அவரது நடைபேசியை எடுத்துத் தானே கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தார். ஈழமங்கையைப் பின்னுக்கு அனுப்பிவிட்டு அவ்விடத்தைப் பொறுப்பெடுக்க அகமதி வந்தார். சிறிது நேரத்துக்குள் அவ்விடம் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. முன்னே, பின்னே பக்கவாட்டாக என்று எங்கும் சிங்களப் படைகள்.

கப்டன் மல்லிகாவுடனான முறியடிப்பு அணிமட்டும் அவ்விடத்தில் நிற்க ஏனையோர் அனைவரும் பகுதிப் பொறுப்பாளர் சத்தியாவின் கட்டளைக்கமைவாகப் பின்வாங்கிச் சென்றனர். அன்றைய நாள் இவர்களுக்கு உணவு கொடுக்க வந்து படையினரிடம் மாட்டிக்கொண்ட உழுபொறியை மீட்கும் பணி இரவிரவாகத் தொடர்ந்தது. உழுபொறியின் ஓட்டுநருடன் தேவா தலைமையில் சென்ற முறியடிப்பு அணி உழுபொறியை மீட்பதற்கான சண்டையைச் செய்தது. P.K யும், 50 கலிபருமாக அடித்துக் கொடுக்க, ஆண், பெண் போராளிகளடங்கிய முறியடிப்பு அணி அன்றிரவே சண்டையிட்டு உழுபொறியை மீட்டு வந்தது.

ஓயாது சண்டை, ஓயாது வேலை, ஊனுறக்கமில்லை, ஒழுங்கான குளிப்பு, முழுக்கில்லை, சேற்று வாடை, ஈரஆடை, குளவிகளும், நுளம்புகளும், பாம்புகளும் உறையுமிடத்தில் வாழ்க்கை என்றிருந்தாலும் போராட மறுப்பதில்லை புலிகள். சிங்களப் படைகளுக்கு இது அந்நியமண் புலிகளுக்கோ இது உரிமை மண். வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இதுதான் நமது நிலம். இந்த நிலத்தில் நெருப்பெரித்து மக்களைக் கலைத்து அந்த நெருப்பிலே குளிர்காய வருகின்றான் எதிரி. அவன் மூட்டிய நெருப்புக்குள்ளேயே அவனைத் தள்ளி விழுத்திவிடக் கானகமெங்கும் காத்திருக்கின்றனர் புலிகள். நெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை. புலிகளின் பணியும் இன்னும் முடியவில்லை.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.