Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது: வைகோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது: வைகோ

"ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களும், எங்கள் வருங்காலத் தலைமுறையினரும் மன்னிக்கவே மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்" என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சா‌ற்‌றியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ‌றியு‌ள்ளதாவது:

"விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாய்? என்ற கவிஞன் பாரதியின் வேதனைக்குரல், நம் இதயச்சுவர்களில் மோதும் வகையில், அடுக்கடுக்கான துன்பச் செய்திகள் தாக்குகின்றன.

தன்னுடைய குடிமக்கள் மீது ‌விமான‌ங்ககளில் வந்து குண்டு வீசித் தாக்கும் மாபாதகத்தை, அடாஃல்ப் ஹிட்லருக்குப் பின்னர் உலகில் எந்த ஒரு நாடும் செய்யத் துணியாத கொடூரத்தை, இலங்கையில் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது ஏவி கொன்று குவிக்கிறது. இதைச் சொன்னதற்காகத்தான், சிறிலங்காவின் 'சண்டே லீடர்' ஆங்கிலச் செய்தித்தாளின் ஆசிரியரும், சிங்களவருமான லசந்த விக்கிரமதுங்க, ராஜபக்ச ஆட்களால் சில நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த ஒரு வார காலமாக முல்லைத்தீவு பகுதியில் சிங்கள வான்படையும், இராணுவமும் நடத்தும் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள்.

இத்தனை லட்சம் மக்கள் அவதிப்படும் முல்லைத்தீவில், இந்திய அரசு கொடுத்துள்ள குறைந்த தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளைத்தான் சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தி, இடைவிடாது எறிகணைகளை வீசுகிறது.

நேற்று, வல்லிபுனம் கோவிலுக்கும், மூங்கிலாறு பகுதிக்கும் இடையில், உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளிலும், சிங்கள இராணுவம் நடத்திய கோரத் தாக்குதலில், தாய்மார்கள், குழந்தைகள் உ‌ட்பட அப்பாவித் தமிழ் மக்கள் 500 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால், 'இங்கு தாக்குதல் நடக்காது; பாதுகாப்பான பகுதி' என்று இராணுவம் அறிவித்து விட்டு, அங்கு மக்கள் வந்தபின்னர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமுற்ற 2,000-க்கும் அதிகமான மக்கள், முதலுதவி கூடப் பெற முடியாமல், மருந்துகள் இன்றி, சிறுகச்சிறுகச் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஐ.நா. மன்றத்தின் இலங்கைக்கான அலுவலரும் இந்தத் தாக்குதலைக் கண்டித்து உள்ளார்.

எனவே, தமிழ் இனத்தை அழிக்க முற்படும் சிறிலங்கா அரசுக்கு, இந்திய அரசு உதவுகின்ற துரோகத்தை மூடி மறைக்க பிரணாப் முகர்ஜி கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

கடந்த மூன்று மாத காலமாக போர் நிறுத்தம் என்று ஒப்புக்குக்கூட மத்திய அரசு சொல்லவில்லை. அதைவிட, 'அது எங்கள் வேலை அல்ல என்று ஆணவத்தோடு சொன்ன பிரணாப் முகர்ஜி, இன்று திடீரென்று கொழும்பு செல்ல வேண்டிய மர்மம் என்ன?

உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடுங்கும் நெஞ்சோடு, கண்ணீர் விட்டுக் கதறும், துயரம் சூழ்ந்து உள்ள இந்த நேரத்தில், திடீரென்று விடுதலைப் புலிகளுக்கு பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவிப்பதன் மர்மம் என்ன?

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை 900 தடவைகளுக்கு மேல் துப்பாக்கியால் சுட்டு, 500-க்கும் அதிகமான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ததற்கு இந்திய அரசோ, பிரணாப் முகர்ஜியோ ஒரு வார்த்தையாவது கண்டனம் தெரிவித்தது உண்டா?

தமிழக மக்களையும், உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்காக, அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று, புதிதாக ஏதோ ஞானோதயம் ஏற்பட்டதைப் போல் பிரணாப் முகர்ஜி, கொழும்பு செல்லும் முன் கூறுகிறார்.

ஐந்தரை லட்சம் ஈழத் தமிழர்கள் இருக்கும் முல்லைத்தீவில், இடைவிடாத தாக்குதலும், வான் குண்டுவீச்சையும் சிங்கள அரசு நடத்துகையில், அப்பாவித் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் பேரழிவு ஏற்படும் என்பது, பிரணாப் முகர்ஜிக்குத் தெரியாதா?

த‌மி‌ழ் இன‌த்தை‌க் கரு அறு‌க்க‌த் தா‌க்குத‌ல்!

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, தமிழ் இனத்தையே கரு அறுக்கத்தானே ராஜபக்ச இந்தத் தாக்குதலை நடத்துகிறான்? அதனால்தான், அகங்காரத்தோடு, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரண் அடைய வேண்டும்’ என்று கொக்கரிக்கிறான்.

இப்பிரச்சனையின் பின்னணியை, உண்மை நிலையைத் தமிழக மக்கள், உணர வேண்டும் என்பதற்காக,சில சம்பவங்களை இதோ பட்டியல் இடுகிறேன்:

இலங்கையில் தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, இராணுவத் தாக்குதல் நடத்தும் சிங்கள அரசுக்கு, இந்திய அரசு நான்கு ஆண்டுக்காலமாக, ஒரு கொடிய உள்நோக்கத்தோடு, இராணுவ உதவிகளைச் செய்து வந்து உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பொறுப்பு ஏற்ற உடன், முதல் வேலையாக சிறிலங்காவுடன் இராணுவ ஒப்பந்தம் போட முனைந்ததும், அதைத் தடுப்பதற்குப் பல வழிகளிலும் நாம் போராடியதன் விளைவாக, அந்த ஒப்பந்தம் போடாவிட்டாலும், அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளை இந்தியா நிறைவேற்றும் என்று, அந்தச் சமயத்திலேயே இந்திய அயலுறவு அமைச்சர் நட்வர்சிங் சொன்னதை, தொடக்கத்தில் மறைமுகமாகவும், பின்னர் வெளிப்படையாகவும் இந்திய அரசு செய‌‌ல்படுத்தி வந்துள்ளது.

சிறிலங்கா ‌விமான‌‌ப்படைக்கு ராடா‌ர்களைக் கொடுத்து, சிங்கள ‌விமா‌னிகளுக்கு இந்தியாவில் பயிற்சி தந்து, இந்திய ‌விமான‌ப்படையின் தொழில்நுட்பப் பிரிவினரை இலங்கைக்கே அனுப்பிவைத்ததோடு, பலாலி ‌விமான தளத்தை இந்திய அரசின் செலவிலேயே பழுது பார்த்தும் கொடுத்தது.

சிறிலங்கா கடற்படையுடன் இந்தியக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்துகொண்டதோடு, சிங்களக் கடற்படையினருடன் இணைந்தே கடற்புலிகளின் படகுகள் மீதான தாக்குதலிலும் உதவி, புலிகளுக்குப் பொருட்கள் கொண்டுவந்த கப்பல்கள் மீது தாக்குதலும் நடத்தி, புலிகளின் மரக்கலங்களைக் கடலில் மூழ்கடித்தது.

குறைந்த தொலைவு தாக்கும் ஏவுகணைகளையும், இராணுவத் தளவாடங்களையும் சிங்களத் தரைப்படைக்கும் வழங்கியது.

வட்டி இல்லாக் கடனாக ஆயிரம் கோடி ரூபாயும் கொடுத்து, சிங்கள அரசு பாகிஸ்தான், சீனா, இஸ்ரேலிடம் கப்பல் கப்பலாக ஆயுதங்களும், போர் ‌விமான‌ங்களும் வாங்குவதற்கும் வழிசெய்து, சிங்கள இராணுவத்தினருக்கும், ‌விமான‌ப்படையினருக்கும் பயிற்சியும் கொடுத்தது.

1987 தொடங்கி 89 வரை, இந்திய இராணுவத்தை அனுப்பி, ஈழத் தமிழர்களின் உரிமைப் படை அணியான விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியதோடு மட்டுமன்றி, அப்பாவித் தமிழர்கள் பலர் சாவுக்கும் காரணமான இராணுவத் தாக்குதல் நடத்திய துரோகத்தைவிடக் கொடுரமான முறையில், வஞ்சகமாக இந்திய அரசு இலங்கைத் தீவில் தமிழர் இன அழிப்பு போரில் பங்காளியாகச் சேர்ந்து, இப்போது, படு நாசத்தையும் ஏற்படுத்தி விட்டது.

அதனால்தான், கடந்த மூன்று ஆண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் மத்திய அரசு துரோகம் செய்கிறது என்பதையும், அங்கு விழுகின்ற ஒவ்வொரு தமிழனின் பிணத்துக்கும், அவன் சிந்துகிற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்று உள்ள கட்சிகளில் முக்கியமாக இன்று தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க.வும்தான் பொறுப்பாளி ஆவார்கள் என்று குற்றம் சாட்டி வந்து உள்ளேன்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழகச் சட்டமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்தை, இந்திய அரசு அவமதித்து உதாசீனப்படுத்தியது.

இலங்கையில் சிங்கள இராணுவம் தமிழர்களின் காவல் அரணான விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க, சிங்கள அரசோடு சதித்திட்டம் வகுத்து இந்திய அரசு செயற்பட்டதும், தமிழ் இனத்துக்குச் செய்த துரோகம் மட்டும் அல்ல, இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களைக் காவு கொடுக்கின்ற வடிகட்டிய முட்டாள்தனமும் ஆகும்.

சிங்கள மண்ணில், பாகிஸ்தானும் சீனாவும் கால் பதித்து விட்டன. இந்தியாவின் தென்முனையில், இந்தியாவுக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களை, அடிமை இருளிலே தள்ளுவதால், இயல்பாக ஏற்படும் தற்காப்பு அரணையும் உடைத்துவிட்டு, எதிர்காலத்தில் தென்முனையிலும் பகை நாடுகளின் ஆபத்தை வலியத் தேடி இந்திய அரசு உருவாக்குகிறது.

துரோக‌த்‌தி‌ன் உ‌ச்சக‌ட்ட‌ம்!

துரோகத்தின் உச்சகட்டமாக, இந்திய அரசு, சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு உதவ, இந்திய இராணுவ டாங்கிகளையும், 3,000 இராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது.

இது உண்மையாக இருக்கக்கூடாது என்று உள்ளம் பதறினாலும்கூட, இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏராளமான இராணுவ டாங்கிகள், தமிழகத்தில் ஈரோடு வழியாகக் கேரளாவுக்கு அனுப்பப்பட்டபோது எடுத்த படம், நேற்றைய (26.1.2009) தினத்தந்தி ஏட்டின் ஈரோடு பதிப்பில் வெளியாகி உள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அரசு செய்து வந்து உள்ள துரோகங்களையும் நினைக்கையில், இந்தக் கொடிய துரோகத்தை இந்தியா செய்து இருக்கவும் கூடும் என்ற எண்ணமே வலுக்கிறது.

மொத்தத்தில் ராஜபக்ச அரசு நடத்துகின்ற இன அழிப்பு போரை பின்னால் இருந்து இயக்கி வந்து உள்ள இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஒரு கொடூரமான குறிக்கோளுடன், தீங்கான நோக்கத்துடன், ஆலகால விசம் நிறைந்த வஞ்சக சதித்திட்டத்தைத் தீட்டி, அதனைச் செயல்படுத்துகிறது என்ற உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும்.

ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களும், எங்கள் வருங்காலத் தலைமுறையினரும் மன்னிக்கவே மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இணைய உலகம் (webdunia)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.