Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஆனந்த விகடன்' வார இதழை விற்பனை செய்த பிரபல புத்தகசாலை உரிமையாளர் கைது

Featured Replies

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் பிரபல புத்தக விற்பனை நிலையமான 'பூபாலசிங்கம்' புத்தகசாலை உரிமையாளர் சிறீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்பு காவல்துறையால் கொழும்பில் கைது செய்யப்பட்டு கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய வான் தாக்குதல் தொடர்பான கட்டுரையும் அது தொடர்பான படங்களும் பிரசுரிக்கப்பட்டிருந்த 'ஆனந்த விகடன்' வார இதழை விற்பனை செய்தமை தொடர்பாகவே சிறீதரசிங் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளனர்.

'ஆனந்த விகடன்' வார இதழை யாழ்ப்பாணத்தில் உள்ள 'பூபாலசிங்கம்' புத்தகசாலைக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான பொதியை இரத்மலானை வானூர்தி நிலையத்திற்கு அனுப்பியபோது அதனை சோதனையிட்ட காவல்துறையினர் குறித்த விடயங்கள் தொடர்பான கட்டுரைகள் மற்றும் படங்கள் இருப்பதை கண்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதனை அடுத்து, நேற்று வியாழக்கிழமை மாலை இறக்குமதியாளரான சிறீதரசிங்கின் வெள்ளவத்தை வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் அவரை கைது செய்து கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக உறவினர்கள் பிரதி அமைச்சர் இராகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளனர்.

'ஆனந்த விகடன்' வார இதழை 'பூபாலசிங்கம்' புத்தகசாலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1981 ஆம் ஆண்டு ஆவணி மாதம் யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், யாழ். பொது நூல் நிலையம் ஆகியவை சிங்கள காடையர்களாலும் படையினராலும் திட்டமிடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டபோது யாழ். நகரின் மத்தியில் இருந்த 'பூபாலசிங்கம்' புத்தகசாலையும் பெருந்தொகையான நூல்களுடன் தீயிட்டு எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

தினமுரசு விக்கலாம்.. ஆனால் ஆனந்தவிகடன் விற்கக் கூடாது. என்னே ஜனநாயகம்.. முடியல்ல. அமெரிக்க தூதுவர் வளர்க்கும் சன நாய் அகம் வாழ்க..! :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை அதிர வைத்துள்ள பிரபாகரன் மகனும், விகடன் கட்டுரையும்!

சென்னை: ஆனந்த விகடனின் 30 ஆண்டு கால இலங்கைக்கான ஏஜென்ட் ஸ்ரீதர்சிங் நேற்று பயங்கரவாத தடுப்பு காவல் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படக் காரணம் விகடனில் வெளியாகியுள்ள ஒரு பரபரப்புக் கட்டுரைதான்.

'பிரபாகரன் மகன்' எனும் தலைப்பில் வெளியாகியுள்ள அந்த அதிரடிக் கட்டுரையை இங்கு தருகிறோம்

விகடன் கட்டுரை ..

சார்லஸ் ஆன்டனி - 20 ஆண்டுகள் கழித்து சிங்கள அரசாங்கத்துக்கு மீண்டும் ஒரு புலி சொப்பனமாக மாறியிருக்கும் பெயர்!

அன்று இருந்த ஆன்டனி, பிரபாகரனின் ஆத்மார்த்தமான நண்பன். இன்று இருக்கும் ஆன்டனி, உயிருக்குயிரான மகன்!

சார்லஸ் ஆன்டனியைப் பிரபாகரனால் மறக்க முடியாது. 25 ஆண்டுக்கு முன்னால், சாவகச்சேரி காவல் நிலையத்தைக் கைப்பற்றிய சம்பவம்தான் ஜெயவர்த்தனே அரசாங்கத்துக்குப் புலிகள் மீது பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.

ஒரு பஸ்ஸைக் கடத்தி, அதில் சார்லஸ் தலைமையிலான புலிப் படை காவல் நிலையத்தை நோக்கி வந்தது. இயந்திரத் துப்பாக்கிகள் முழங்க உள்ளே நுழைந்த சார்லஸ், அங்கு ஆயுத அறை எங்கே இருக்கிறது என்று தேடினார்.

ஒரு ரிவால்வர், 28 துப்பாக்கிகள், இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் என இருந்ததை அள்ளிக்கொண்டு வெளியேறினார்கள்.

சார்லஸைக் குறிவைத்துத் தேடியது சிங்கள ராணுவம். யாழ்ப்பாணத்துக்குப் பக்கத்தில் மீசாலை என்ற இடத்தில் அவர் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைக்க… போய் இறங்கினார்கள்.

பனை மரங்களுக்குள் ராணுவம் பதுங்கியிருக்க, வெட்டவெளியில் மாட்டிக்கொண்டனர் சார்லஸூம் இரண்டு போராளிகளும்.

முதல் குண்டு நெஞ்சில் பாய்ந்தது. உயிரோடு தான் பிடிபடக் கூடாது என்று நினைத்த சார்லஸ், ‘என்னைக் கொன்றுவிடு.

எந்தப் புலியையும் ராணுவம் உயிரோடு பிடிக்கக் கூடாது’ என்று சக போராளிக்கு உத்தரவு போட்டார். அவன் சம்மதிக்கவில்லை. மீண்டும் கட்டாயப்படுத்தி கெஞ்சினார் சார்லஸ். கடைசியில் அழுதுகொண்டே சுட்டான் அவன்.

‘பிரபாகரன் இந்த அளவுக்கு உடைந்துபோய் நான் பார்த்ததில்லை’ என்று கிட்டு சொல்லும் அளவுக்கு அந்த மரணம் பிரபாகரனைப் பாதித்தது. ஆன்டனியை மறக்க முடியவில்லை அவரால்.

இரண்டு ஆண்டுகள் கழித்து தனக்கு மகன் பிறந்தபோது, ‘சார்லஸ் ஆன்டனி’ என்று பெயர் வைத்தார். மீசாலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட சார்லஸ் மீண்டு வருவான் என்று சிங்கள ராணுவம் கனவிலும் நினைத்திருக்காது.

சாதாரணமாக சைக்கிளில் போய் இயக்கத்தை வளர்த்த பிரபாகரன், இன்று விமானத்தை வைத்து சிங்கள அரசுக்குச் சிக்கல் கொடுத்துவரும் குடைச்சலின் பின்னணியில், அவரது மகன் சார்லஸ் இருப்பதாகச் சந்தேகப்படுகிறது சிங்கள அரசு.

விமானக் குண்டுவீச்சில்தான் சார்லஸின் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. இன்று சார்லஸூக்கு 23 வயது. அவர் பிறந்த காலங்களில்தான் சிங்கள ராணுவம் அதிகமாக விமானப் படைத் தாக்குதலைத் தொடங்கியது. இதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்று புலிகள் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.

‘குண்டுவீச்சில் இருந்து பாதுகாப்பு’ என்ற புத்தகம் போட்டு வீடு வீடாகக் கொடுத்தார்கள். அம்மா மதிவதனியுடன் பெரும்பாலும் பதுங்கு குழிகளில்தான் வளர்ந்தார் சார்லஸ். புதுக்குடியிருப்புப் பள்ளியில் தொடக்கக் கல்வி படித்தார். அட்வான்ஸ் லெவல் வரை படித்ததாகச் சொல்கிறார்கள்.

அதாவது, இங்கு நம் ப்ளஸ் டூ போல. ஜெனரல் சர்டிஃபிகேட் ஆஃப் எஜுகேஷன் என்று இதற்குப் பெயர்.

இதை அவர் முடிக்கும்போது இலங்கையில் போர்ச் சூழல் குறைந்து ரணில் விக்கிரமசிங்கே ஆட்சிக் காலம் ஆரம்பமானது. எனவே, தன்னை உயர் படிப்புக்காக வெளி நாட்டுக்கு அனுப்பிவைக்க மகன் ஆசைப்பட்டுக் கேட்கிறார். ‘ அது பாதுகாப்பானதல்ல’ என்று பிரபாகரன் நினைக்கிறார்.

கொழும்பில் படிக்க அனுப்பலாமா என்ற யோசனை. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், அதையும் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால், மகனது படிப்புக்குத் தடை போட பிரபாகரனுக்கு மனமில்லை. காரணம், சார்லஸின் டெக்னாலஜி ஆர்வம்.

சின்ன வயதில் இருந்தே எதையாவது பிரித்து மேய்வதில் ஈடுபாடு காண்பித்திருக்கிறார். போர்ப் பயிற்சிகளைவிட, போர் ஆயுதங்களைக் கையாளுவது, அது பற்றி படிப்பதில்தான் ஆர்வம் அதிகம் இருந்திருக்கிறது.

முதலில் ஏற்பட்டது கப்பல் ஆர்வம். படகுகள் கட்டும் பிரிவில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். சில மாதங்களில் கம்ப்யூட்டரைக் கையாளும் ஆர்வமாக அது மாறியிருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி ஆஸ்திரேலியாவில் இருந்து கம்ப்யூட்டர் படித்த 8 பையன்கள் கிளிநொச்சிக்குள் வந்திறங்கினர். அவர்கள் சார்லஸூக்குக் கற்றுக்கொடுத்தனர்.

அந்த எட்டு பேரும் பிரபாகரனால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள். கிளிநொச்சியில் இருந்து படிப்பில் ஆர்வமான பையன்களை பிரபாகரன் தேர்ந்தெடுத்து, பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தாராம்.

அவர்கள், அங்குள்ள மொனாஸ் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் படித்ததாக சிங்களப் பத்திரிகை ‘தி பொட்டம்லைன்’ எழுதுகிறது. சார்லஸூக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்த ஆசான்கள் இவர்கள்தானாம். இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சார்லஸ் வலம் வந்தார்.

அடுத்ததாக, கிளிநொச்சிக்கு வந்து இறங்கியதுதான் இப்போது கலக்கிக்கொண்டு இருக்கும் வான் படை. இளம் நீல நிற வரிப்புலிச் சீருடையும் ‘வானோடி’ என்று பொறிக்கப்பட்ட சின்னத்தையும் பொருத்தி ஒரு படை கட்ட வேண்டும் என்பது பிரபாகரனின் பல்லாண்டுக் கனவு.

அவருடன் அப்பையா அண்ணை என்று ஒருவர் ஆரம்ப காலத்தில் இருந்திருக்கிறார். அவர்’நான் விமானம் செய்யப் போறேன்’ என்று சில வேளைகளில் ஆர்வம் காட்டி இருக்கிறார். அப்போது, எல்லாரும் அவரைக் கிண்டல் செய்வார்களாம்.

கடற்படையில் வேலை பார்த்த தனது நண்பன் டேவிட் மூலமாக ‘கடற்புலி’களை ஆரம்பித்த பிரபாகரன், வான் படைக்கு ஒரு நண்பரைத் தேடினார். சங்கர் கிடைத்தார். கனடாவில் ஏரோநாட்டிக்ஸ் படித்தவர். ஏர் கனடாவில் வேலை பார்த்தவர். முதல் கட்டமாக பழைய விமானம் வாங்கப்பட்டது.

மாவீரர் துயிலுமிடம், வற்றாப்பளை அம்மன் கோயில் ஆகிய இடங்களில் 10 ஆண்டுகளுக்கு முன் இந்த விமானத்தை வைத்துப் பூத் தூவினார்கள். ‘பிரபாகரன் வைத்திருக்கும் விமானம் பூ தூவத்தான் லாயக்கு’ என்று சிங்களத் தளபதிகள் காமென்ட் அடித்தார்கள்.

‘விமானங்களை வாங்குவதற்கு முன் இயக்குவதற்கு ஆட்களைத் தயார் பண்ணுங்கள்’ என்று சங்கர் சொல்ல, ஒரு டீம் பிரான்ஸ், மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ‘சம்பந்தப்பட்ட நாட்டில் கொண்டுபோய்விட வேண்டியது எங்கள் வேலை.அங்கேயே ஏதாவது வேலை பார்த்துப் படித்து முடிக்க வேண்டியது உங்களது சாமர்த்தியம்’ என்ற அடிப்படையில் 20 பையன்கள் அனுப்பப்பட்டார்கள்.

வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களும் உதவ, படிப்பை முடித்து 2002-ல் இந்தக் குழு கிளிநொச்சி வந்து இறங்கியது. இவர்கள் விமானப்படை சம்மந்தமான தொழில்நுட்பங்களை சார்லஸூக்கு ஊட்டினார்கள்.

அவர்களுக்கு தீனியாக சிறு விமானங்கள் தயாராக இருந்தன. ஒரு ஆள் மட்டும் பயணிப்பவை. செக்கோஸ்லோவேகியா நாட்டின் ‘சிலின் இசட் 143 எல்’ ரக விமானங்கள் இவை.

நாங்கள் புலிகளுக்கு விற்கவில்லை என்று அந்த நாடு மறுக்கிறது. வாங்கியதை அப்படியே பயன்படுத்தாமல், அதில் பல மாறுதல்களைச் செய்துள்ளார்களாம். இங்குதான் சார்லஸின் முக்கியப் பங்கு இருந்ததாகச் சொல்கிறார்கள்.

இப்போது வான் படையை ரத்னம் மாஸ்டர் என்பவர் வழிநடத்தி வருகிறாராம். சிறு விமானத்தை அதிக பயன்பாடு உள்ளதாக மாற்றும் வேலையை சார்லஸ் டீம் பார்த்து வருகிறது.

600 கி.மீ தூரம் போய் திரும்பத்தான் அதில் எரிபொருள் நிரப்ப முடியும். அதாவது ஒரு முறை கொழும்பு போய்விட்டுத் திரும்ப முடியும்.

விமானத்தில் குண்டு நிரப்பிக்கொண்டு போய் ஓர் இடத்தைத் தாக்க வேண்டும் என்று முடிவெடுக்கும்போது, அவ்வளவு எடையைக் கொண்டுசெல்ல இந்த விமானங்கள் வசதிப்படவில்லையாம்.

எனவே, சுமார் 240 கிலோ எடைகொண்ட குண்டுகளைப் பொருத்தும் பலம்கொண்டதாக மாற்றும் காரியங்களை சார்லஸ் டீம் பார்த்ததாம். அதே போல், ரேடாரின் கண்ணுக்குப் படாமல் தப்பிக்க வைக்கவும் இவர்களது குழு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

சமீபத்தில் நடந்த தாக்குதலுக்காக இரவு 8.30-க்குக் கிளம்பிய புலிகளின் விமானத்தை 9.20-க்குத்தான் சிங்களப் படை அறிய முடிந்திருக்கிறது.

அதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் சண்டை அதிகமாக நடக்கும் புதுக்குடியிருப்புக்குத் தென் மேற்குப் பகுதியில் இருந்துதான் விமானங்களைக் கிளப்பியிருக்கிறார்கள்.

ஒரு விமானம் வீழ்த்தப்பட்டது. இன்னொன்று வருமான வரிக் கட்டடத்தின் 3-வது மாடிக்கும் 12-வது மாடிக்கும் மத்தியில் புகுந்தது. 240 கிலோ குண்டு வெடித்ததில் அந்தக் கட்டடமே தீப்பிடித்து எரிந்தது.

புலிகள் வைத்திருக்கும் விமானத்தை ‘குரும்பட்டி மெஷின்’ என்று சிங்களவர்கள் கிண்டல் செய்வார்களாம். வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கும் தேங்காய்க்குக் குரும்பு என்று பெயர். அந்தக் குரும்பை வைத்து இதுவரை எட்டு முறை குடைந்தெடுத்துவிட்டார்கள்.

அதுவும் குண்டுகளைக் கட்டிக் குதிக்கும் வான் கரும்புலிகள் வந்த பிறகு அச்சம் அதிகமாகி இருக்கிறது. ‘பலவீனமான இனத்தின் பலமான ஆயுதம்தான் கரும்புலிகள்’ என்று பிரபாகரன் சொல்கிறார்.

‘உன்னுடைய எதிரி உனக்கு எந்தக் கஷ்டத்தைக் கொடுத்தானோ, அதையே அவனுக்குத் திருப்பிக் கொடு’ என்பது இந்தக் கரும்புலிகளின் லட்சிய முழக்கமாம். ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்’ என்று வான் புலிகளின் சட்டையில் எழுதப்பட்டிருக்கிறது.

அதுதான் கண்டம்விட்டுக் கண்டம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

நன்றி: விகடன்

ஏற்கெனவே புலிகளின் விமான தாக்குதல் மற்றும் சார்லஸ் ஆன்டனியின் வான்படை வழிநடத்தும் திறன் போன்றவை குறித்து செய்திகள் வெளியிட்டதாலேயே உதயன் மற்றும் எதிரொலியின் பிரதம ஆசிரியர் ந.வித்யாதரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- தட்ஸ் தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.