Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனரே அது இனப்படுகொலை அல்லாமல் வேறு என்ன? - பழ. நெடுமாறனுடன் நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்.வெப்துனியா.காம்: தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும், ஈழத் தமிழ் மக்கள் வாழ்க்கையிலும் ஒரு எதிர்பாராத சூழல் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய ஒரு தாக்குதல் நடத்தி போரை முடித்துள்ளதாக அறிவித்துள்ளது சிறிலங்க அரசு. பாதுகாப்பு வலயத்தில் இருந்து விரட்டப்பட்ட அல்லது அங்கு நடந்த தாக்குதலால் ஓடிவந்த சற்றேறக்குறைய இரண்டே முக்கால் லட்சம் மக்கள் இன்றைக்கு அங்கு வசதியற்ற 40 முகாம்களில் இருப்பதாக செய்தி வந்துள்ளது. அதே நேரத்தில் மீண்டும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடருமா? அல்லது எப்பொழுதுதான் தொடரும்? இதற்குப் பிறகு எந்த திசையில்தான் செல்வது? போன்ற பல்வேறுபட்ட கேள்விகள், பொதுவாக தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு ஒரு நெருங்கிய தொடர்புடையவர், ஈழத் தமிழ் மக்களை நன்கு அறிந்தவர் என்கின்ற அளவில், இன்றைய சூழல் பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

பழ. நெடுமாறன்: இன்றைக்கு தமிழீழத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சூழல், ஒரு தற்காலிகமாக பின்னடைவு. இதனால் அந்த போராட்டமே முடிந்துவிட்டது, ஓய்ந்துவிட்டது என்பது அல்ல. அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக சிங்கள அரசு மார்தட்டிக் கொள்வதும் அர்த்தமற்றது. எந்த நாட்டின் விடுதலைப் போராட்டமும் ஒரு போரின் மூலம் ஓய்ந்துவிடாது. இது தொடர்ந்து நடக்கும். சில நேரத்தில் அந்தப் போராட்டத்தில் ராஜதந்திர ரீதியான பின்னடைவுகளும் உண்டு.

தமிழீழத்தில் ஏற்பட்டிருக்கிற இந்த பின்னடைவு என்பது விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக நான் பார்க்கவில்லை. மாறாக, அவர்களுக்கு இன்னொரு வகையில் ஒரு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இன்றைய தமிழழ விடுதலைப் போராட்டத்தில், இப்போதைய இந்த சூழ்நிலையின் விளைவாக, உலகம் முழுவதும் வாழ்கிற புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு மகத்தான எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. இதுவரையிலும் அதுபோன்ற எழுச்சி ஏற்பட்டதில்லை. ஒட்டுமொத்தமான தமிழ் சமூகம் எழுந்து நின்று பேராடுகின்ற நிலைமை வந்துள்ளது. இங்கே தமிழ்நாட்டிலும் நாம் அதைப் பார்க்கிறோம். அந்த எழுச்சி இங்கேயும் இருக்கிறது.

இதன்விளைவாக, உலக நாடுகள் பல இந்தப் பிரச்சனையிலே அக்கறை கொண்டு இலங்கை அரசிற்கு எதிரான நிலையை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டன. ஆக, ராஜதந்திர ரீதியில் புலிகளுக்கு இதுவொரு வெற்றி. இதை மறைப்பதற்கு தங்களுடைய வெற்றியைக் காட்டி உலக நாடுகளை ஏமாற்றுவதற்கு ராஜபக்ச மேற்கொண்ட முயற்சி தோற்றுவிட்டது. ஒருபோதும் அது வெற்றி பெறாது. ராஜபக்சவிற்கு ஆதரவாக இருந்த மேற்கு நாடுகள் கூட தங்கள் நிலையை இப்போது மாற்றிக்கொண்டுவிட்டன. அது மிகவும் முக்கியமானது.

இதே வேளையில் இன்னொரு வகையாக ஒரு அபாயம் ஈழத் தமிழர்களுக்கு இல்லை, மாறாக இந்தியாவிற்கு இந்தச் சூழலினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் போரை நடத்துவதற்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்ததன் மூலம் அங்கே பலமாக கால் ஊன்றியாகிவிட்டது. அதை தடுக்கும் சக்தி படைத்தவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமேதான். ஆனால் இந்திய அரசு விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக செய்த முயற்சி என்பது, இந்தியாவிற்கு அபாயத்தை இந்தியாவின் தெற்கு வாயிலில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

இப்போது இந்திய அரசு, இந்த இறுதிகட்டத்திலேயாவது உணரவேண்டும். உணரத்தவறினால், பின்னால் இந்தத் தவறை திருத்துவதற்கான வழியே கிடைக்காது. ஆக, அங்கே ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலை பலவிதமான தாக்கங்களை இலங்கை அரசியலிலும், உலக அரசியலிலும் ஏற்படுத்தியுள்ளது. இது எந்த வகையில் திரும்பும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தமிழ்.வெப்துனியா: ராஜதந்திர ரீதியாக கிடைத்த வெற்றி என்று கூறுகின்றீர்கள். ஆனால், இதுவரை ஐ.நா.வோ அல்லது எந்தவொரு நாடோ அங்கே இனப்படுகொலை நடத்தப்படுகிறது என்று கூறவில்லை. இனப்படுகொலை நடக்கிறது என்பதை, நடந்துள்ளது என்பதை கூறினால் மட்டுமே அரசியல் ரீதியான ஆதரவு ஈழத் தமிழர்களுக்கு வலிமையாகக் கிட்டும் நிலை ஏற்படும். அது ஒரு அடிப்படை அமையும். ஆனால், அந்த நிலை ஏற்படவில்லையே?

நெடுமாறன்: 1983 ஆம் ஆண்டு கொழும்புவில் மிகப்பெரிய அளவில் இனப்படுகொலை நடத்தப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள், “It is a systematic genocide going on in Sri Lanka. We cannot tolerate it or we cannot be a silence spectator” என்று சொன்னார். இதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கிறது என்று எச்சரித்தார்.

இந்தியாவின் பிரதமரின் வாயினால், அது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்பது 1983ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்றைய இந்திய அரசு அந்த நிலையில் இருந்து வழுவிப் போய்விட்டது. இது உள்நாட்டுப் பிரச்சனை, இதில் நாம் எப்படி தலையிட முடியும் என்ற நிலைப்பாட்டை இன்றைய இந்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இது இந்திரா காந்தி அம்மையார் எடுத்த நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான நிலை. இவர்கள் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யவில்லை. மாறாக, இந்திரா காந்திக்கு, பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் துரோகம் செய்திருக்கிறார்கள் என்றுதான் இதற்குப் பொருள்.

இந்தியா எடுத்த அந்த நிலையை, அன்றைக்கு உலகத்தில் பல நாடுகள் எடுக்கவில்லை என்பது உண்மை. ஆனால், இன்றைக்கு உலக நாடுகள் அதை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் அங்கே செல்ல வேண்டிய அவசியம் என்ன? எது அவரை நிர்ப்பந்தப்படுத்திற்று. அங்கே போரில் கொல்லப்பட்ட, அதுவும் கடைசி கட்டத்தில் கொல்லப்பட்ட 20,000 பேரில் ஒருவர் கூட சிங்களவர் இல்லையே? 20 ஆயிரம் பேரும் தமிழர்கள்தானே? அந்த 20 ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் யார்? சிங்களவர்கள். அப்படியானால் என்ன அது? இலங்கை ராணுவத்தில் தமிழர்களும் இருந்து அந்த ராணுவம் இந்தத் படுகொலை செய்திருந்தால் அது இனப்படுகொலை என்று சொல்ல முடியாது.

இப்போது, இந்தியாவில் உள்ள ராணுவத்தில் எல்லா இனத்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இலங்கையில் அப்படி இல்லை. முழுக்க முழுக்க சிங்களவர்களையே கொண்ட ராணுவம் அது. அந்த ராணுவம் 20 ஆயிரம் தமிழ் மக்களை படுகொலை செய்தது என்று சொன்னால், அது இனப்படுகொலையா? இல்லையா? இது உள்ளங்கை நெல்லிக்கனி போல எல்லோருக்கும் விளங்கக்கூடிய ஒரு உண்மைதானே?

ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் அங்கே போய் பார்த்துவிட்டு வந்து இதைத்தானே சொல்லியிருக்க வேண்டும். அங்கே 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே தவிர, எப்படி கொல்லப்பட்டார்கள், ஏன் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லவில்லை. அதேபோல, பல்வேறு நாடுகளும் இந்தத் தகவலை கொடுத்திருக்கினறன. ஆனால், இந்த நிலைப்பாட்டில் இருந்து அவர்கள் நிச்சயமாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது, வேறு வழியில்லை, அவர்கள் இதை இனப்படுகொலை என்று ஒத்துக்கொள்ளப் போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

தமிழ்.வெப்துனியா: ஆனால், தமிழர்கள் இந்த இனப்படுகொலையை உலகத்திற்கு முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற பல்வேறு விதமான போராட்டங்கள் எல்லா நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஆயினும் ஐ.நா.வினுடைய பாதுகாப்புப் பேரவை இதுவரை விவாதிக்கவில்லை. விவாதிக்க, சீனாவும், ரஷ்யாவும் அனுமதிக்கவில்லை. இதைத்தான் அங்கு பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளாரே பான் கீ மூன்?

நெடுமாறன்: ஐ.நா. சபையோ, அதன் பாதுகாப்புப் பேரவையோ எல்லா காலங்களிலும் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ளவில்லை. ஈராக் பிரச்சனையில் ஐ.நா. அவையின் அனுமதியில்லாமல், அமெரிக்கப் படைகள் போய் இறங்கி ஈராக் மக்களைக் கொன்று குவித்தார்கள். அப்போது ஐ.நா. பாதுகாப்பு சபை என்ன செய்தது? வேடிக்கை பார்த்தது. ஒன்றும் செய்யவில்லை. இதைப்போல நிறைய சம்பவங்களை நான் சுட்டிக்காட்ட முடியும்.

சில நேரங்களில் ஐ.நா. செயலற்றுப் போயிருக்கிறது. இதுபோன்ற கொடுமைகள் நடைபெறும் போது, அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு படைத்த ஐ.நா. முற்றிலுமாக செயலற்றுப் போய் ஒரு Silent Spectator என்ற முறையில் ஐ.நா. விளங்குகிறது. ஐ.நா.வின் இந்தப் போக்கு உலகத்திற்கு தீமை பயப்பதைவிட, ஐ.நா.விற்கே அழிவைத் தேடிவிடும். ஐ.நா.விற்கு முந்தைய அமைப்பு, முதல் உலகப் போர் முடிந்தபிறகு சர்வதேச அமைப்பு (League of Nations) அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் aது செத்துப்போயிற்று. ஏன் செத்துப் போயிற்று? ஹிட்லர் மாறி மாறி ஐரோப்பாவில் பெல்ஜியத்தைப் பிடித்தார், போலந்தைப் பிடித்தார். இப்படி ஒவ்வொரு நாடாக அவர் பிடித்து ஒரு இனப்படுகொலையை அவர் தொடர்ந்தபோது, சர்வதேச சபை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. செயலற்றுப் போய்க் கிடந்தது. அதனால் அது செத்துப்போச்சு. அந்த நிலைமை இப்போதைய ஐ.நா.விற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

தமிழ்.வெப்துனியா: மிகச் சரியாக சொன்னீர்கள். அப்படி ஒரு நிலை உள்ளபடியே ஐ.நா.வை அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால், ஐ.நா.வினுடைய மனித உரிமை மன்றத்தில், ஈழப் பிரச்சனையில் அங்கே நடந்த மனித உரிமை மீறலையெல்லாம் எந்தவிதத்திலும் விவாதிக்காமல், சிறிலங்க அரசைப் பாராட்டி ஒரு சான்றிதழை வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில், மேற்கத்திய நாடுகளில் கூட அது வருத்தத்தையும், எதிர்ப்பையும் உண்டாக்கியுள்ளது.

ஆனால், பொதுவாக இப்பிரச்சனையில், தெற்காசியாவில் நடக்கக்கூடிய பிரச்சனைக்கு, தென் ஆசியாவில் இருந்து மிகப்பெரிய அளவிற்கு ஆதரவு இல்லையே?

நெடுமாறன்: அதற்குக் காரணம், ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எல்லா நாடுகளும் உறுப்பினர்கள் அல்ல. அமெரிக்கா கூட அதில் இல்லை. சில குறிப்பிட்ட நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அந்த நாடுகள்தான் அதில் அங்கம் வகிக்கின்றன. எனவே, அதில் இந்தத் தீர்மானம் வெற்றிபெறவில்லை என்பது விளங்கிக்கொள்ளக் கூடியதுதான். ஏனென்று சொன்னால், சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையின் சார்பு நாடுகள். இந்தியாவும் அதன் சார்பு நாடுகளில் இணைந்து நின்றுதான் இந்தத் தீர்மானத்தை தோற்கடித்தன. நீங்கள் கேட்கிறீர்கள் தென் ஆசியாவில் இந்த நிலைமை வந்துவிட்டது.

இன்றைக்கு தென் ஆசியாவில் தலைமை தாங்கக் கூடிய ஒரு நாடாக கருதப்படுவது இந்தியாதான். இலங்கையில் ஏறத்தாழ ஒரு லட்சம் தமிழர்கள் இந்த ஐந்து மாத காலத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மூன்றரை லட்சம் தமிழர்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டு அவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்கள். உணவில்லாமல், மருந்தில்லாமல் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் இந்திய அரசிற்கு தெரியாமல் இருக்கிறதா என்றால், தெரியும். தெரியவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்வாரானால், அவருடைய ரா உளவுத்துறை தங்களுடைய வேலைகளில் முற்றிலுமாகத் தோற்றுவிட்டது என்பதுதான் அதற்குப் பொருள். இந்தியாவிற்கு எல்லாம் தெரியும். இந்த நிலைமைக்கு இந்தியாவும்தானே ஒரு காரணம்? சிங்கள ராணுவம் தமிழர்களை கொலை செய்கிறது என்று சொன்னால், அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தது இந்தியாவும்தானே. கிரிமினல் சட்டப்படி ஒரு கொலை நடந்தால், அந்தக் கொலையை செய்தவனை விட, அவனை ஆயுதம் எடுத்து கொலை செய்ய வைத்தவனுக்கு அதிக தண்டனை விதிக்கப்படுகிறது. கிரிமினல் புரொசிஜர் கோடு அதுதான். அதைத்தானே இந்தியா செய்தது, சீனா செய்தது, பாகிஸ்தான் செய்தது.

இவர்களுக்கு, தாங்க முடியாத சுயநல நோக்கத்துடன் சேர்ந்த பார்வை. அதே நேரத்தில் தொலைநோக்கு பார்வை இல்லாமல் இவர்கள் செயல்பட்டார்கள் என்பதற்கு இதைவிட சீரிய உதாரணம் வேறு கிடையாது. இந்திய அரசியலில், தற்போது பிரதமராக இருந்தாலும் சரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியா இருந்தாலும், அவர்களுக்கு தொலைநோக்கு பார்வை கொஞ்சமும் இல்லை. இந்திரா காந்திக்கு இருந்த அந்த தொலைநோக்குப் பார்வை இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

இலங்கை இனப்பிரச்சனையில் இந்திரா காந்தி அவர்களுக்கு இரண்டு தெளிவான கொள்கை இருந்தது. ஒன்று, இலங்கை, இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உட்பட்ட ஒரு நாடாகத்தான் இருக்க வேண்டும். அதை அது மீறக்கூடாது. இரண்டாவது என்ன? இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை என்பதை சிங்கள அரசு தீர்க்க வேண்டும், இல்லையென்றால் இந்தியா தலையிட்டு அதைத் தீர்க்கும். ஈழத் தமிழர்களின்பால் அவருக்கு அனுதாபம் இருந்திருக்கிறது. இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான போக்குகள் வரவிடமாமல் தடுக்க வேண்டுமென்றால், ஈழத் தமிழர்களை வைத்துதான் தடுக்க முடியும் என்பதிலே அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டவர். இந்திரா காந்தி அவர்கள் உயிரோடு இருந்த காலம் வரை எந்த அந்நிய நாடும் இலங்கையில் தலையிட முடியவில்லை. அனுமதிக்கவில்லை அவர். இலங்கை அரசிற்கும் இந்திராவை மீறிச் செயல்படுகின்ற துணிச்சலும் கிடையாது.

ஆனால், இன்றைக்கு என்னவாயிருக்கிறது. சீனாவும், பாகிஸ்தானும், இன்னும் வேறு சில நாடுகளும் அங்கே தலையிட்டு எல்லாம் செய்துவிட்டார்களே. இந்தியா என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது. அது உள்நாட்டுப் பிரச்சனை அதில் எப்படி நாம் தலையிட முடியும் என்று சொல்கிறது. உள்நாட்டுப் பிரச்சனையில் எதற்கு சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், உக்ரைனும் ஆயுதங்களை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். தலையிட்டார்கள். இந்தியா ஏன் தலையிட்டது? எதற்காக ஆயுதம் கொடுத்தீர்கள்? சரி, அதன் விளைவு என்ன இன்றைக்கு? அதுதான் முக்கியமானது. சீனாவும், பாகிஸ்தானும் எதற்காக அந்த நாட்டிற்கு ராணுவ ரீதியான உதவி, நிதியுதவி எல்லாம் செய்கிறார்கள். என்ன அவசியம். இலங்கை என்ன சீனப் பொருட்களையெல்லாம் விற்பதற்கு பெரிய சந்தையா? எதுவும் கிடையாது. அப்படியானால் அவர்களுக்கு வேறு ஒரு நோக்கம் இருக்கிறது. இலங்கைக்கு இந்த ஐந்து ஆண்டுகளில் அளித்த அனைத்து கடனுதவிகளையும் சீனா ரத்து செய்துள்ளது. நீ திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டது. ஏன்? எந்த பொருளாதார ரீதியான ஆதாயம் இல்லாமல் சீனா ஏன் இதை செய்கிறது. பாகிஸ்தான் ஏன் இதைச் செய்கிறது. இந்தியாவிற்கு எதிராக ஒரு தளமாக நமக்கு எதிர்காலத்தில் இலங்கை பயன்பட வேண்டும் என்கின்ற நோக்கத்துடன்தானே அவர்கள் செய்கிறார்கள்.

அம்பாந்தோட்டையில் சீனா ஒரு துறைமுகத்தை அமைக்கிறதே. அம்பாந்தோட்டை எங்கே இருக்கிறது. மன்னார் பகுதியில் இருக்கிறது. இந்தியாவிற்கு நேர் எதிர்த்த கரையில். நம்முடைய சேதுக் கால்வாயில் இருந்து அந்த துறைமுகம் 10 கி.மீ. தொலைவில்தான் அமைகிறது. சேதுக் கால்வாயில் போகிற இந்திய கடற்படை கப்பல்களையெல்லாம் அங்கே இருந்துகொண்டு அவர்கள் கண்காணிக்க முடியும். எல்லாம் செய்ய முடியும். இது எவ்வளவு பெரிய அபாயத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்துவிட்டது? இது எங்கே கொண்டுபோய் விடப்போகிறது. அதனை வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர்கள் விடுதலைப் புலிகள். அவர்கள் மண்ணை மீட்பதற்காக மட்டும் போராடவில்லை. தங்கள் மண்ணில் எந்த அந்நிய வல்லரசும் கால் தடம் பதித்துவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் போராடினார்கள்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், தங்கள் மண்ணை மீட்பதற்காக தங்கள் மண்ணில் அந்நிய வல்லரசுகள் ஆதிக்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் போராடுகிறார்கள் என்று சொன்னால், போராடினார்கள் என்று சொன்னால், இந்தியாவை பாதுகாப்பதற்காகவும் அவர்கள் போராடியிருக்கிறார்கள் என்பதுதானே பொருள்? அதை ஏன் டெல்லியில் உள்ள பெரிய மனிதர்கள் கொஞ்சமும் உணரவில்லை.

தமிழ்.வெப்துனியா: இந்த அளவிற்கு இதை நீங்கள் தெளிவாக வரையறுத்துக் கூறினீர்கள். ஆனால், இந்தத் தெளிவு ஏன் நமது இந்திய மத்திய அரசிற்கு வரவில்லை. ஏன் அவர்கள் சிங்கள அரசிற்கு, சிங்கள மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசிற்கு ஆதரவளிப்பதில் இந்த அளவிற்கு போட்டி போட்டுக் கொண்டு உதவுகிறார்கள்?

நெடுமாறன்: அதாவது, இப்போது இருக்கக்கூடிய இந்திய அரசின் தலைமை, அவர்களுக்கு உலகப் பிரச்சனைகளில் தெளிவான பார்வையோ அல்லது தொலைநோக்கோ யாருக்கும் கிடையாது. மன்மோகன் சிங், அவர் ஒரு அதிகாரியாக இருந்து வந்தவர். அரசியல்வாதி அல்ல. மற்றும் அந்த அமைச்சரவையில் இருப்பவர்கள் எல்லாம் யார்? மிகப்பெரும்பாலானோருக்கு உலக அரசியல் பற்றி எதுவும் தெரியாது. நேரு அவர்கள் காலத்தில் அணி சாரா கொள்கை ஒன்றை வகுத்து, ஆசிய, ஆப்ரிக்க நாடுகளையெல்லாம் ஒன்றிணைத்து ஒரு வலுவான மூன்றாவது சக்தியை உருவாக்கியதன் விளைவுதான் சோவியத் முகாமும், அமெரிக்க முகாமும் மோதிக்கொள்ளாமல் போயிற்று. மூன்றாவது முகாம் எழுந்து இந்த மோதலுக்கு நடுவே நின்று தடுத்தது. ஒரு போர் மூளாமல், மூன்றாவது உலகப் போர் மூளாமல் தடுத்தது என்று சொன்னால், நேரு அவர்களின் தொலைநோக்கு பார்வையும், அவர் வகுத்த திட்டமும்தான் அதற்கு காரணம். அதே வெளிநாட்டுக் கொள்கையை இந்திரா காந்தி அப்படியே பின்பற்றினார். வாஜ்பாய் கூட அதை அப்படியேதான் பின்பற்றினார். வாஜ்பாய் காலத்தில் அதை மாற்றம் செய்யவில்லை. அதே அணிசாரா கொள்கையைத்தான் வாஜ்பாயும் பின்பற்றினார்.

ஆனால், இன்றைக்கு என்ன? அணிசாரா கொள்கையை ஆழ குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஆசிய, ஆப்ரிக்க நாடுகளையெல்லாம் அமெரிக்க முகாமுக்கும் போகவேண்டாம், ரஷ்ய முகாமுக்கும் போகவேண்டாம். நாம் ஒன்றாக இருப்போம் என்று சேர்த்த இந்தியாவே இன்றைக்கு அமெரிக்க முகாமுக்கு போய்விட்டது. அணு உடன்பாடு என்ற பெயரில் அமெரிக்காவின் எடுபிடி பிள்ளையாக மாறிப்போயிற்று. இந்தியாவே இப்படி ஆன பிறகு மற்ற நாடுகள் என்னவாகும்? அவரவர்கள் ஆதாயம் தேடி, அமெரிக்காவைத் தேடி ஓடுவார்கள். சீனாவைத் தேடி ஓடுவார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இவர்கள் அமெரிக்கா முகாம்களுக்கு போய் சேருவதற்கு முன்னால், ஆழமாகச் சிந்தித்தார்களா? யாரைக் கேட்டுக் கொண்டு இந்த முடிவெடுத்தார்கள்? காங்கிரஸ் கட்சியில் விவாதித்தார்களா? எதுவுமே இல்லையே? இப்படிப்பட்டவர்கள் கையில் இந்தியா ஒப்படைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன்.

தமிழ்.வெப்துனியா: இந்தியா அமெரிக்காவோடு கைகோர்த்துள்ளது என்கின்ற நிலை நிலவுகிறது. அணு சக்தி ஒப்பந்தத்தையும் தாண்டி அமெரிக்காவுன்ற் ஒரு Strategic Partnership தந்திராபோய கூட்டாண்மை என்கின்ற ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவைத் தாண்டி அமெரிக்கா ஈழத் தமிழ் மக்களுக்கு சார்பாக வரமுடியும், வரக்கூடும் என்கின்ற சாத்தியம் ஏதேனும் உள்ளதா?

நெடுமாறன்: இந்தக் கேள்வி, ஒரு ஆழமான கேள்வி இது. அமெரிக்கா இன்றைக்கு ஈழப் பிரச்சனையில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை எடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறது. காரணம், சீனாவின் ஆதிக்கம் அங்கு வந்துவிடக்கூடாது என்று அமெரிக்கா கருதுகிறது. சீனா ஏன் இலங்கையை நாடுகிறது. அரேபியா நாடுகளில் இருந்து எண்ணெயை ஏற்றிக்கொண்டு ஆசிய நாடுகளில், சீனா, ஐப்பான் போன்ற நாடுகளுக்கெல்லாம் செல்கின்ற கப்பல்கள் இலங்கையைத் தொட்டுக் கொண்டு செல்கின்றன. சீனாவில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களெல்லாம் இலங்கையைத் தொட்டுக் கொண்டுதான் மேற்கு நாடுகளுக்குச் செல்கின்றன. ஆக, இந்தக் கேந்திரமாக இருக்கும் கடல் மார்க்கம் தங்கள் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்று சீனா நினைக்கிறது. அதே நினைப்பு அமெரிக்காவிற்கும் இருக்கிறது. ஆகவே, அவர்கள் எதிர்க்கிறார்கள். குறுக்கிடுகிறார்கள். வல்லரசுகளின் ஆதிக்கத்தில் இலங்கை இனப்பிரச்சனை சிக்கிக் கொண்டிருக்கிறது.

நாம் அனுதாபப் படவேண்டியது இந்தியாவிற்காகத்தான். நியாயமாக இந்த கடல் மார்க்கம் இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அதுதான் இந்தியாவிற்கு பாதுகாப்பு. நேரு காலத்தில், இந்திரா காந்தி காலத்தில் அதை தங்கள் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தார்கள். இன்றைக்கு அதை இழந்துவிட்டது இந்தியா. அமெரிக்காவும், சீனாவும் அங்கே போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா அதை வேடிக்கை பார்க்கிற ஒரு நாடாக இருக்கிறது, எதிர்காலத்தில் அவர்கள் அமெரிக்காவையும் கண்டிக்க முடியவில்லை, சீனாவையும் கண்டிக்க முடியவில்லை. இவர்கள் இலங்கைக்குத் தேவையான ராணுவ உதவியை Logistic Support என்றெல்லாம் செய்தால் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று இவர்கள் நினைத்ததெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை படுதோல்வியடைந்துவிட்டது. ஏதோ புலிகளை அங்கே ஒழித்தாகிவிட்டது. நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம் என்று இலங்கை கொக்கரிக்கிறது. இனிமேல் இந்தியாவின் தயவு அவர்களுக்குத் தேவையில்லை. இந்தியா சொன்னபடி அவர்கள் ஒருபோதும் கேட்கப் போவதும் இல்லை. சீனாவின் முழுமையான பிடிக்குள் இலங்கை போய்விட்டது. ஆக, இந்தியா என்ன செய்வது என்று தெரியாமல் தனது கைகளைப் பிசைந்துக் கொண்டு நிற்கிறது.

தமிழ்.வெப்துனியா: இந்த அளவிற்கு இலங்கை அரசிற்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆயுதங்களைக் கொடுத்தது, ராணுவ ரீதியான ஆலோசனைகளை வழங்குவது, பெருமளவிலான அந்த ராணுவ நடவடிக்கைக்கு உதவி செய்வது இதற்கெல்லாம் காரணம் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அடிப்படையில்தான் அவர்கள் உதவி செய்தார்கள். அதே நேரத்தில் இன்றைக்குக் கூட சர்வதேச ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளைப் பார்த்தால், ஒரு பக்கத்தில் அவர்கள், இலங்கை அரசு இறுதிகட்டத்தில் செய்த மிகப்பெரிய மானுட படுகொலையை கண்டிக்கின்ற அதே நேரத்திலும், விடுதலைப் புலிகள் எனும் பயங்கரவாத இயக்கம் முடிந்துவிட்டது என்று கூறுகின்றார்கள். ஆக பயங்கரவாதம் என்ற அந்த முன் சொற்றொடர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், அவர்கள் முன்னின்று நடத்திய தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரியாக ஆகிவிட்டது என்று கூறலாமா?

நெடுமாறன்: விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடைபெறுகின்ற விடுதலைப் போராட்ட இயக்கங்களையெல்லாம் பயங்கரவாத பட்டம் சூட்டி ஒழித்துவிட அந்தந்த நாட்டு அரசுகள் முயற்சி செய்தன. சுபாஷ் சந்திரபோஸை பயங்கரவாதி என்று அமெரிக்காவும், பிரிட்டனும் சொல்லவில்லையா? பகத்சிங்கை பயங்கரவாதி என்று பிரிட்டிஷ் அரசு அவரை தூக்கில் போடவில்லையா? சரி, நம்முடைய காலத்தில் பார்க்கவில்லையா, பாலஸ்தீனத்தில் அரேபியர்களையெல்லாம் ஒன்று திரட்டி தங்கள் மண்ணை மீட்க போராடிய யாசர் அராஃபத்தை பயங்கரவாதி என்றுதானே அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் குற்றம் சாற்றின. எவ்வளவு காலத்திற்குப் பின்னால் அவர்கள் மாறினார்கள். வியட்நாமிலே ஹோசிமின்னை அதேபோலத்தான் பிரெஞ்ச் அரசு குற்றம் சாற்றியது. பயங்கரவாதி என்று சொன்னது. சியாங்கே சேக்கை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய மாசே துங்கை பயங்கரவாதி என்றுதான் சொன்னார். அதேபோல அமெரிக்காவும் சொன்னது. இவர்கள் சொன்னதனாலேயே அவர்கள் பயங்கரவாதிகள் ஆகிவிடவில்லை.

எந்த அமெரிக்கா யாசர் அராஃபத்தை பயங்கரவாதி என்று குற்றம் சாற்றியதோ, மாசே துங் பயங்கரவாதி, கோசிமின் பயங்கரவாதி என்று குற்றம் சாற்றினார்களோ, அவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதிகள் பிற்காலத்தில் கைகுலுக்கவில்லையா? ஆக பயங்கரவாத பட்டங்களைச் சூட்டி தேசிய விடுதலை இயக்கங்களை ஒடுக்குவதற்கு முயற்சி செய்தார்கள். அது முடியாமல் போனதால் அங்கீகரித்தார்கள். அதுதான் உலக வரலாறு.

இன்றைக்கு பிரபாகரனையோ, விடுதலைப் புலிகளையோ எந்தெந்த நாடுகள் பயங்கரவாதிகள் என்று குற்றம் சுமத்துகின்றதோ, அந்த நாடுகளே நாளைக்கு தேசிய விடுதலை இயக்கமாக அங்கீகரிக்கும், அங்கீகரித்து தீரவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தமிழ்.வெப்துனியா: இறுதியாக ஒரு முக்கியமான கேள்வி. தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் அனைத்தும் இன்றைக்கு சிறிலங்க ராணுவ அரசினுடைய, ராணுவத்தினுடைய கட்டுப்பாட்டு பகுதிகள் ஆகிவிட்டன. ஒருபக்கத்தில் பார்த்தால், சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டு இலங்கையில் தமிழர்கள் பகுதிகள் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சற்றேறக்குறைய 3 லட்சம் மக்கள் தங்களுடைய வாழ்விடம் இழந்து அகதிகளாக சொந்த மண்ணிலேயே இருக்கக்கூடிய ஒரு சூழல். மற்றொரு பக்கம் அவர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும் என்று கூறி தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் வரை போராடிக் கொண்டிருக்கின்றனர். இப்படி நடைபெறுகின்ற போராட்டங்கள் எல்லாம் எந்தெந்த கோரிக்கைகளை முக்கியமாக முன்வைத்து நடக்க வேண்டும் என்று தாங்கள் கருதுகின்றீர்கள்?

நெடுமாறன்: இந்தப் போராட்டங்கள் சரியான திசைகளில்தான் சென்றுக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றும் தவறில்லை. உடனடியாக, முகாம்களில் வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் முதன்மையான கோரிக்கை. அங்கே தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவம் வெளியேற வேண்டும் என்பதும் முக்கியமான கோரிக்கை.

20 ஆயிரம் தமிழர்களை கடைசிகட்டத்தில் படுகொலை செய்த ராஜபக்சயும், அவருக்கு துணையாக நின்றவர்களையும் யுத்த குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை. உலக நாடுகள் உடனடியாக முன்வந்து பாதிக்கப்பட்ட 3 லட்சம் மக்களை காப்பாற்றுவதற்கு, உணவு, மருந்து எல்லாம் அளிப்பதற்கு உடனடியாக உதவ முன்வரவேண்டும். இது உலக சமுதாயத்தின் கடமையாகும். அதை அவர்கள் செய்ய முன்வரவேண்டும். இந்த கோரிக்கைகள்தான் இப்போதைக்கு முக்கியம்.

விடுதலைப் போராட்டத்தை மீண்டும் தொடர்வது என்பது இதற்கு அடுத்தபடியாகத்தான். அதை பிரபாகரன் அவர்களும், விடுதலைப் புலிகளும் என்ன செய்ய வேண்டுமோ, எப்படி செய்ய வேண்டுமோ அப்படி அவர்கள் செய்வார்கள். அதற்கு முன்னால் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி உலகை நாம் நமக்கு ஆதரவாக அணி திரட்ட வேண்டும். அதன்மூலம் மட்டுமே இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

http://tamil.webdunia.com/newsworld/news/i...090604129_1.htm

Edited by senthil5000

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.