Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?

Featured Replies

ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியிருக்கிறது. இது, புலிகள் இயக்கத்தின் தோல்வி மட்டுமல்ல; ஈழ விடுதலைப் போராட்டம் சந்தித்திருக்கும் ஒரு பாரிய பின்னடைவு. இத்தகையதொரு நிலைமை நெருங்குகிறது என்பதைக் கடந்த சில மாதங்களில் களநிலைமைகளிலிருந்து அனைவருமே புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும், இம்முடிவு நம்மை மாளாத் துயரத்தில் ஆழ்த்துகின்றது.

கொட்டகைகள், கூடாரங்கள், பதுங்குக் குழிகள் என 3 சதுர கி.மீ. பரப்பளவில் சிக்கித் தவித்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு போர்த் தாக்குதலை நடத்தி ஈவிரக்கமின்றி கோரமாகக் கொன்றொழித்திருக்கிறது, இனவெறி பிடித்த சிங்கள பாசிச அரசு. சூடானின் டார்ஃபரில் நடந்த இனப்படுகொலையை ஒத்ததாக நடந்துள்ள ஈழத் தமிழினப் படுகொலையில், கடந்த மே முதல் நாளிலிருந்து 19ஆம் தேதி வரை நாளொன்றுக்குச் சராசரியாக 1000 பேர் வீதம் குண்டு வீச்சினால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இந்நாட்களில் மட்டும் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த "தி டைம்ஸ்" நாளேடு கூறுகிறது. செயற்கைக் கோள் மூலம் பிடிக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையிலும், போர் நிறுத்தப் பகுதியில் பணியாற்றிய மருத்துவர்கள் கூறிய சாவு எண்ணிக்கையின் அடிப்படையிலும் அந்நாளேடு வெளியிட்டுள்ள இச்செய்தி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 50,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது என ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உற்றார் உறவினர்களைப் பறிகொடுத்துவிட்டு, யாருமே இல்லாத அனாதைகளாக படுகாயமடைந்தும் கைகால்கள் முடமாகியும், முட்கம்பியிடப்பட்ட வதை முகாம்களில் வேதனையில் துடிக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். 1983 ஜூலை கலவரத்தையடுத்து சிங்கள இனவெறி ஜெயவர்த்தனே அரசுக்கு எதிராகவும், ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் பொங்கி எழுந்த தமிழகம், இன்று ஒரு பார்வையாளனாக நிற்கிறது.

இக்கொடிய இன அழிப்புப் போரில் சீனாவும் பாகிஸ்தானும் ஆயுதங்களை வழங்கியுள்ளதோடு, சிங்கள பாசிச அரசுக்கு அரணாகவும் நின்றிருக்கின்றன. அமெரிக்காவையும் மேற்குலக நாடுகளையும் ராஜபக்சே அலட்சியப்படுத்திப் பேசிய பின்னரும் அந்நாடுகள் எதையும் செய்யவில்லை. ஐ.நா. மன்றமும் தலையிடவில்லை. எல்லாம் முடிந்த பிறகு எட்டிப் பார்த்துவிட்டு, கடமை முடிந்ததென பறக்கிறார் பான்கிமூன்.

இந்திய அரசோ, இந்த இனப்படுகொலைக்கு இறுதிவரை துணை நின்று வழிநடத்தியிருக்கிறது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் நிர்பந்தத்தால், ஐ.நா மனித உரிமை பாதுகாப்புபு பேரவையில் மேலை நாடுகள் இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாகக் குற்றம் சாட்டி கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யா, சீனா, பாகிஸ்தானோடு இந்தியாவும் இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்று அத்தீர்மானத்தைத் தோற்கடித்துள்ளது. "நாங்கள் பயங்கரவாதப் புலிகளுக்கு எதிராக நடத்திய போர் எங்களுக்காக மட்டுமல்ல; இந்தியாவுக்காகவும்தான்" என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார், ராஜபக்சே.

ஈவிரக்கமின்றி நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் இந்தப் படுகொலையின் கடைசி நாட்கள், இந்திய மேலாதிக்கத்தின் கோரமுகத்தை நமக்குக் காட்டுகின்றன. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, இறுதித் தாக்குதலைத் தீவிரப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு வழிகாட்டி இயக்கியிருக்கிறது இந்திய அரசு. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்களோ, மே 16 அன்று தேர்தல் முடிவுகள் வரும்வரை இறுதி முடிவு எதையும் எடுக்க வேண்டாமென புலிகளுக்கு ஆலோசனை கூறியிருப்பார்கள் போலும்!

மூன்று சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட நிலப்பரப்பில், தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட நிலையிலும் "துப்பாக்கிகளை மவுனிக்கச் செய்வது" என்ற தங்களது இறுதி முடிவை அறிவிப்பதற்கு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (மே 16) தெரியும்வரை புலிகள் காத்திருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தோல்வியை நோக்கித்தான் தள்ளப்பட்டுள்ளோம் என்பதும், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளை ராஜபக்சே அரசு நிராகரித்து விட்டது என்பதும் அவர்கள் அறியாததல்ல. இருப்பினும், அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்களும் புலிகளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட போதிலும், கடைசியாக எஞ்சியிருந்த புலிகள் இயக்கத் தலைவர்களே கொல்லப்படும் நிலை ஏற்பட்ட போதிலும், டெல்லியில் ஆட்சி மாறினால், மறுகணமே போர் நிறுத்தம் ஏற்பட்டு விடும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். கடைசி நாட்களின் நிகழ்வுகள் இதனைத் தெளிவாக நமக்குக் காட்டுகின்றன. இந்த மூட நம்பிக்கை மிகவும் பாரதூரமான இழப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருவேளை தமிழினவாதிகள் எதிர்பார்த்தது போல, ஜெயலலிதாவும் பாரதீய ஜனதாவும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் மறுகணமே போர்நிறுத்தம் வந்திருக்குமா? அப்படியொரு பிரமை புலிகளுக்கு இருந்திருந்தால், இங்கிருக்கும் தமிழினவாதிகள் அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, அத்தகையதொரு பிரமையை உருவாக்கும் பணியைத்தான் தமிழினவாதிகள் இங்கே செய்து கொண்டிருந்தார்கள்.

தேர்தலில் ஈழ எதிரி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அவரையே தனிஈழம் தேவையெனப் பிரச்சாரம் செய்ய வைத்தனர். போரில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்கள் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அனுதாபத்தையும், இனப்படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் நடந்த தீக்குளிப்புகளையும் வைத்து மாபெரும் ஆதரவு இருப்பதாக நம்பி, இதையே தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் மதிப்பிட்டனர். போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசுக்கு அமெரிக்கா உதட்டளவில் விடுத்த கோரிக்கையை, ஏதோ அமெரிக்க வல்லரசே தலையிட்டுப் போர்நிறுத்தம் செய்யக் கிளம்பி விட்டதைப் போல பிரமையூட்டி, ஒபாமாவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நோக்கி ரோசாப் பூங்கொத்து ஊர்வலம் நடத்தினார், பழ.நெடுமாறன்.

இவர்கள் உருவாக்கிய பிரமைக்குத் தங்கள் உயிரையும் கவுரவத்தையும் பலி கொடுத்திருக்கிறார்கள், தமிழீழ விடுதலைப் புலிகள். தேர்தலின் போது தனி ஈழம் பற்றி சவடால் அடித்த ஜெயலலிதா, தேர்தல் தோல்விக்குப் பிறகு கோடநாடு எஸ்டேட்டுக்குச் சென்று படுத்துக் கொண்டார். தேர்தலுக்குப் பின் அவர் விடுத்த அறிக்கையில் தனி ஈழம் பற்றியோ, ஈழத் தமிழினப் படுகொலை பற்றியோ, ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்றோ ஒரு வார்த்தை கூட இல்லை. இந்த அம்மையாரின் வெற்றிதான் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரும் என்று ஈழத் தமிழ் மக்களையும் புலிகளையும் நம்ப வைத்து படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள், இந்த ஈழ ஆதரவாளர்கள். இவர்கள் யாரை ஆதரித்தார்களோ, அந்தப் புலிகளையே காவு வாங்கிவிட்டது இவர்களின் பிழைப்புவாத அரசியல்!

தமிழீழத்தின் தலைநகராக புலிகளால் சித்தரிக்கப்பட்ட கிளிநொச்சி, சிங்கள இராணுவத்தால் கடந்த ஜனவரியில் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர் புலிகள் பின்வாங்கி முல்லைத் தீவுக்கு நகர்ந்தார்கள். சிங்கள இராணுவத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் புலிகளோடு முல்லைத் தீவு நோக்கி நெடும்பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

இம்மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தால் சிங்கள இராணுவம் தங்கள் மீது பாரிய தாக்குதல் தொடுக்காது என்றும், அதையும் மீறி தாக்குதல் தொடுத்தால், மக்கள் கொல்லப்படுவதன் விளைவாக மேலைநாடுகள் தலையிட்டுப் போரை நிறுத்துமாறு சிங்கள அரசை நிர்பந்திக்கும் என்றும் புலிகள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சிங்கள இராணுவமோ, கனரக ஆயுதங்களைக் கொண்டும் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியும் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றொழித்தது. வாயளவில் கண்டனம் தெரிவித்தற்கு மேல் எந்தவொரு மேலை நாடும் சிங்கள அரசை நிர்பந்திக்கவோ, தலையீடு செய்யவோ முன்வரவுமில்லை.

எந்த மக்களைப் பாதுகாப்புக் கேடயமாக புலிகள் கருதினார்களோ, அந்த மக்கள் சிங்கள இராணுவத்தின் கொடிய போர்த் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க, புலிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தக் கையறு நிலையில், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற ஆரம்பித்தார்கள். புலிகளால் இதனைத் தடுக்கவும் இயலவில்லை. பின்வாங்கும் பயணம் நீண்டு போகப் போக, புலிகள் தமது ஆயுதக் கிடங்குகளையும் பாதுகாப்பு அரண்களையும் கைவிட்டு செல்ல வேண்டியதாயிற்று. எந்த ஆயுதங்களைத் தமது விடுதலைக்கான அச்சாணியாக புலிகள் கருதினார்களோ, அவையெல்லாம் பெருஞ்சுமையாக மாறிப்போயின. சிங்கள இராணுவமோ, நவீன ஆயுதங்களைக் கொண்டு கொடூரத் தாக்குதலை வகைதொகையில்லாமல் கூட்டிக் கொண்டே போனது.

கொரில்லாப் போர் முறையிலிருந்து முன்னேறி, கிரமமான இராணுவத்தையும் வான்படையையும் கட்டியமைத்து வலுவடைந்த புலிகள், பிந்தைய அசாதாரண நிலையை கவனத்தில் கொண்டு, தமது நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், இலட்சக்கணக்கான மக்களைப் பாதுகாக்கவும் இராணுவ ரீதியில் தமது செயல்தந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்த போதிலும் அதனை உதாசீனப்படுத்தினார்கள். கிரமமான படைகளைக் கலைத்துவிட்டு, மீண்டும் தற்காப்பு கொரில்லா போர்முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு புறநிலைமைகள் நிர்பந்தித்த போதிலும், அதை ஏற்க மறுத்தார்கள். மேலைநாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும், இந்தியத் தேர்தல் முடிவுகள் போர்நிறுத்தத்தைக் கொண்டு வரும் என்று குருட்டுத்தனமாக நம்பிப் பேரழிவையும் பின்னடைவையும் சந்தித்துள்ளார்கள்.

புலிகள் மட்டுமே தமிழீழத்தின் ஏகபோக பிரதிநிதிகளாகச் சித்தரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், புலிகள் இயக்கத் தலைவர்களும் தளபதிகளும் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டு, புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள பெருந்தோல்வியால், இன்று ஈழ விடுதலைப் போராட்டம் தலைமை ஏதுமின்றித் தத்தளிக்கிறது. புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான பத்மநாபன், தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்களால் 'துரோகி' என்று முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில், இயக்கத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்ல எவருமே இல்லாத அவலம் நீடிக்கிறது. ஈழத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வந்த இதர குழுக்களும் தனிநபர்களும் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு புலிகளால் ஒடுக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திச் செல்ல தலைமை ஏதுமின்றி, ஒரு பாரிய வெற்றிடம் நிலவுகிறது.

இது கசப்பான உண்மை என்ற போதிலும், இத்தகைய பின்னடைவுக்கும் பேரழிவுக்கும் காரணம் என்ன? சீனாவும் பாகிஸ்தானும் சிங்கள பாசிச அரசுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி ஆதரவாக நின்றதும், இந்தியா இந்த இனப்படுகொலைப் போருக்கு இறுதிவரை துணை நின்று வழிநடத்தியதும் தான் காரணமா? அல்லது ஐ.நா. மன்றமும் மேலை நாடுகளும் பாராமுகமாக இருந்ததுதான் காரணமா?

இவையெல்லாம் புறக்காரணிகள்தாம். இத்தகைய நிலைமைகளை எதிர்கொண்டு இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் ஆற்றல்மிக்கதாகச் சித்தரிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் மூடத்தனமும் இராணுவ சாகசவாதமும்தான் இப்பேரழிவுக்கும் மீளமுடியாத பின்னடைவுக்கும் பெருந்தோல்விக்கும் முதன்மையான காரணங்கள். புலிகளிடம் சரியான அரசியல் தலைமை இல்லாமை, சரியான இராணுவ உத்திகள் இல்லாமை, யாரையும் பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதிப்பது என்கிற சந்தர்ப்பவாதம்; அரசியல் நேர்மையற்ற அணுகுமுறை, புலிகள் இயக்கத்துக்குள்ளும் ஜனநாயகமற்ற பாசிச சர்வாதிகாரம் முதலான ஈழ விடுதலைக்கே எதிரான போக்குகளே இப்பேரழிவையும் மீண்டெழ முடியாத தோல்வியையும் தோற்றுவித்துள்ளன.

எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் இலட்சியத்தையும் கடமைகளையும் வகுத்துக் கொண்டு, அந்த இலட்சியத்தை அடைவதற்குத் தடையாக நிற்கும் எதிரிகள் யார், நண்பர்கள் யார், ஊசலாட்டம் கொண்ட சமரச சக்திகள் யார், எந்தச் சக்திகளுடன் ஐக்கியப்பட வேண்டும், எந்த சக்திகளை வென்றெடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக வகுத்துக் கொண்டு தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகளோ தொடக்கம் முதலே இந்த அடிப்படையான பிரச்சினையில் தெரிந்தே தவறிழைத்தார்கள்.

ஈழ விடுதலைக்குத் தொடக்கம் முதலே எதிரியாக இருந்து சீர்குலைத்த இந்திய அரசுடன் பகைத்துக் கொள்ளாமல், "தாஜா" செய்ததோடு, இந்திய உளவுப் படையான "ரா" (RAW)விடம் ஆயுதங்களும் பயிற்சியும் நிதியும் பெற்று, அதன் வழிகாட்டுதலின்படி அப்பாவி சிங்கள குடிமக்களைக் கொன்றும், ஈழத்திலிருந்து இசுலாமியர்களைக் கெடு வைத்து விரட்டியும், இதர போராளிக் குழுக்களை அழித்தொழித்தும், தமது ஏகபோக சர்வாதிகாரத்தை நிறுவிக் கொண்டனர்.

எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஜனநாயகப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்க வேண்டும். மக்கள் மத்தியில் எந்தளவுக்கு ஜனநாயகம் பேணப்படுகிறது என்பது, இனவிடுதலையின் மீது கொண்டுள்ள உறுதிக்கு ஒரு அளவுகோல். ஆனால் சிங்கள இனவெறியை எதிர்த்தும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் நின்று, புலிகளின் மனித உரிமை மீறல்களையும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளையும் விமர்சித்த குற்றத்திற்காக ராஜினி திரணகம, வசந்தன் முதலாலோனார் உள்ளிட்டு ஏராளமானோர் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டார்கள்; அல்லது அவர்கள் காணாமல் போனார்கள். புலிகள் இயக்கத்துக்குள்ளேயே பல முன்னணித் தலைவர்களும் தளபதிகளும் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். பிரபாகரனும் அவரது வட்டாரத்தைச் சேர்ந்த விசுவாசிகளும் கொண்ட சிறுகும்பலாக இயக்கத் தலைமை மாறிப் போனது.

தேசிய இன விடுதலை என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டதாகவும் சுயசார்பானதாகவும் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒரு தேச விடுதலை இயக்கம் ஊன்றி நிற்கிறது என்பதுதான் அதன் புரட்சிகர தன்மைக்கான அளவுகோல். இன்றைய சூழலில், ஏகாதிபத்திய உலகமயமாக்கலை எதிர்க்காமல், எந்தவொரு தேசிய இனமும் விடுதலையைச் சாதிக்கவும் முடியாது.

ஆனால் புலிகளோ, எந்த ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து எந்தப் போராட்டத்தையும் நடத்தியதேயில்லை. தமது தலைமையிலான தமிழீழம் இந்தியாவுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் கீழ் படிந்தே இருக்கும் என்று புலிகள் வாக்குறுதி அளித்து, அந்நாடுகளைத் "தாஜா" செய்தார்கள். கிழக்கு திமோர், கொசாவோ பாணியில் மேலைநாடுகள் தலையிட்டு தமக்கென தனி ஈழத்தை அமைத்துத் தரும் என்று நம்பினார்கள். அந்த அளவுக்குத்தான் அவர்களது உலக அரசியல் கண்ணோட்டம் இருந்தது. ஏகாதிபத்திய உலகக் கட்டமைவில் தேசிய இன விடுதலை என்பது எவ்வளவு சிக்கலானது, உலக நாடுகளின் மக்கள் மத்தியில் இதற்கு ஆதரவாக பொதுக்கருத்தையும் பொது நிர்பந்தத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பன போன்ற விரிந்த அரசியல் பார்வை புலிகளிடமோ, அவர்களின் ஊதுகுழலாகச் செயல்பட்ட தமிழக பிழைப்புவாத அரசியல்வாதிகளிடமோ இருந்ததில்லை. மேலை நாடுகள் தங்களைப் பயங்கரவாதிகள் எனத் தடை செய்திருப்பதற்கான உலக அரசியல் சூழல் மற்றும் பிற காரணிகளைப் புலிகள் புரிந்து கொள்ளவுமில்லை.

ஒருபுறம் அமெரிக்க உலக மேல்நிலை வல்லரசு; அதன் தெற்காசிய விசுவாச அடியாளாக இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசு. மறுபுறம், உலகமயமாக்கலைச் சாதகமாக்கிக் கொண்டு புதிய சந்தைக்காகவும் ஆதிக்கத்துக்காகவும் விரிவடைந்து வரும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் போட்டா போட்டி. இந்துமாக் கடலில் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, இன்று இந்த ஆதிக்க சக்திகளின் பகடைக் காயாக மாற்றப்பட்டிருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகளின் போட்டியையும் கூட்டையும் பயன்படுத்திக் கொண்டு, ஈழ விடுதலைப் போரை அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் ராஜபக்சே அரசு எவ்வித எதிர்ப்புமின்றி நசுக்கும் சூழலைப் பற்றி புலிகள் பாரதூரமாக உணரவில்லை. அதற்கேற்ப தமது அரசியல் இராணுவ செயலுத்திகளை வகுத்துக் கொள்ளவுமில்லை.

இன்னும் சொல்லப்போனால், மக்களைத் திரட்டி எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் புலிகள் நடத்தியதேயில்லை. கடந்த பத்தாண்டுகளில் போர் நிறுத்தத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் அணிதிரட்டலையும் அரசியல் போராட்டங்களையும் நடத்த புலிகள் முயற்சிக்கவேயில்லை. அரசியல் பிரிவு என்றழைக்கப்பட்ட ஒரு குழுவை புலிகள் உருவாக்கியிருந்த போதிலும், அது மக்களிடம் அரசியல் பிரச்சாரம் எதையும் செய்ததுமில்லை. மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளைத் தோற்றுவித்து எதிரியை மண்டியிடச் செய்ய முடியும் என்பதை புலிகள் எந்தக் காலத்திலும் உணரவுமில்லை.

அவர்களது கவனமெல்லாம் நவீன ஆயுதங்களின் இருப்பை அதிகரிப்பதிலும் சாகசவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும்தான் இருந்தது. சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக இராணுவ ரீதியில் மேலாண்மை பெற்றுவிட்டாலே, ஏகாதிபத்திய நாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து தனி ஈழத்தை உருவாக்கித் தரும் என்று கணக்கு போட்டு, ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவைப் பெறுவதுதான் அவர்களது 'அரசியல்' வேலையாக இருந்தது.

சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சே கும்பலின் இனவெறி பாசிச சர்வாதிகாரத்தை எதிர்க்கும் அரசியல் சக்திகளுடன் இணைந்து, பொது எதிரிக்கு எதிராக பரந்த ஐக்கிய முன்னணி கட்டியமைத்துப் போராட சாத்தியப்பாடுகள் இருந்தபோதிலும், அரசியல் மூடத்தனத்தால் அவற்றை புலிகள் அறிந்தே புறக்கணித்தார்கள். இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தேர்தலில் தோற்றதற்கும், ராஜபக்சே கும்பல் ஆட்சிக்கு வந்ததற்கும் மிக முக்கிய காரணமே புலிகளின் சந்தர்ப்பவாத அரசியல்தான்.

இந்த சந்தர்ப்பவாதம் 2002இல் தாய்லாந்து நாட்டில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானபோது அப்பட்டமாக வெளிப்பட்டது. தேசிய சுயநிர்ணய உரிமைக்கு சந்தர்ப்பவாதமாகவும் துரோகத்தனமாகவும் "பிரதேச தன்னாட்சி" என்று விளக்கமளித்தார், புலிகளின் அரசியல் தலைமை குருநாதர் ஆண்டன் பாலசிங்கம். ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டு தமது ஏகபோக ஆட்சி அமைவதையே "பிரதேச தன்னாட்சி" என்று விளக்கமளித்தார். அதேசமயம், தனிஈழம் கோரிக்கையை இன்னமும் கைவிட்டுவிடவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக இது "இடைக்காலத் தீர்வு" என்று பூசி மெழுகினார்.

இப்படி சந்தர்ப்பவாதமும் சாகச வழிபாடும் தனிநபர் துதியும் கொண்ட புலிகள், முப்பதாண்டு காலமாக பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்ட ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்து படிப்பினைகளைப் பெற முன்வராமல், தொடர்ந்து பிரமைகளில் மூழ்கிப் போயினர். மறுபுறம், ஏகாதிபத்தியங்களின் ஆசியோடும், சிங்கள இனவெறி சக்திகளின் ஆதரவோடும், நவீன ஆயுதங்களின் வலிமையோடும் மிகக் கொடிய போரை ராஜபக்சே கும்பல் ஈழ மக்கள் மீது ஏவியது. உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனவெறிப் படுகொலைகளில் ஒன்றாக அமைந்த இப்போரில், பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களோடு, புலிகளின் தலைமையும் கொன்றொழிக்கப்பட்டு, ஈழ விடுதலைப் போராட்டம் பேரழிவையும், பின்னடைவையும் சந்தித்து கையறு நிலையில் தத்தளிக்கிறது. ஈழத் தமிழினத்தையே தோற்கடித்து விட்ட வெற்றிக் களிப்பில் கூத்தாடுகிறது, சிங்கள இனவெறி.

இன்றைய சூழலில், சிங்கள இராணுவ வதை முகாம்களிலிருந்து ஈழத் தமிழர்களை மீட்டு அவர்களை மீளக் குடியமர்த்துவது, தமிழர் பகுதிகளைச் சிங்கள காலனியாக்க முயலும் இந்தியஇலங்கை அரசுகளின் கூட்டுச் சதியை முறியடிப்பது, ராஜபக்சே கும்பலை போர்க்குற்றவாளியாக அறிவித்துத் தண்டிப்பது, ஈழ மக்களின் நியாயமான சுயநிர்ணய உரிமைப் போரை மீண்டும் கட்டியமைப்பது ஆகிய பெரும் போராட்டக் கடமைகள் ஈழ மக்களின் முன்னே, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் முன்னே, ஈழ ஆதரவாளர்களின் முன்னே நிற்கிறது. கடந்த முப்பதாண்டு கால ஈழ விடுதலைப் போராட்டத்தை விருப்பு வெறுப்பின்றி மீளாய்வு செய்து படிப்பினைகள் பெறுவதும், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்குவதும், ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான இயக்கப் போக்கின் ஒரு பகுதியான ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு அனைத்துலக மக்களிடம் ஆதரவு திரட்டுவதும் இதற்கு முன்தேவையாக இருக்கிறது.

புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், ஈழத் தமிழ் மக்கள் தமது நியாயமான விடுதலைப் போராட்டத்தைத் தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமை; நம் கடமை.

புதிய ஜனநாயகம், ஜூன்'2009

புதிய ஜனநாயகம், ஜூன்'2009 மின்னிதழை முழுமையாக டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும்

வினவு தளத்திலிருந்து http://www.vinavu.com/2009/06/09/the-eelam-question

இதன் மறுமொழிகள் http://www.vinavu.com/2009/06/09/the-eelam...stion/#comments

தொடர்புடைய பதிவுகள்

ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !

வீழ்ந்துகிடக்கும் போதுதான் எவராலும் விமர்சிக்க முடிகிறது. காரணம் தேட வேண்டும். அது எழுவதற்கு உதவ வேண்டும். வெறும் அலசல்களாக இருக்கக் கூடாது.

புலிகள் செய்ததெல்லாம் தவறு என்ற அடிப்படையிலேயே எழுதப்பட்ட கட்டுரை. பிழைகளை மட்டுமே சொன்ன நீங்கள் புலிகள் என்ன செய்திருந்தால் இந்த சூழ்ச்சியில் இருந்து வெளியே வந்திருக்கலாம் என்பதையும் நீங்களே சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் தனி நபர் துதி பாடலை எப்போதும் செய்வதில்லை தமிழகம் போல நண்பரே

மக்களைத் திரட்டி எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் புலிகள் நடத்தியதேயில்லை. கடந்த பத்தாண்டுகளில் போர் நிறுத்தத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் அணிதிரட்டலையும் அரசியல் போராட்டங்களையும் நடத்த புலிகள் முயற்சிக்கவேயில்லை. அரசியல் பிரிவு என்றழைக்கப்பட்ட ஒரு குழுவை புலிகள் உருவாக்கியிருந்த போதிலும், அது மக்களிடம் அரசியல் பிரச்சாரம் எதையும் செய்ததுமில்லை. மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளைத் தோற்றுவித்து எதிரியை மண்டியிடச் செய்ய முடியும் என்பதை புலிகள் எந்தக் காலத்திலும் உணரவுமில்லை

மக்களை திரட்டி மக்கள் போராட்டம் செய்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்ற தோரணையில் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.உலகில் அப்படி விடுதலை அடைந்த நாடு இல்லை என்றே சொல்லலாம்.எகாதிபத்திய நாடுகளின் துணையுடன் விடுதலை பெற்ற நாடுகள் பல உண்டு.நாங்கள் சரியான எகாதிபத்திய நாட்டை தெறிவு செய்யவில்லை என்று சொல்லுங்கோ எற்றுகொள்லாம்.

உண்மையில் மக்கள் போராட்டம் என்பது வரட்டு சித்தாந்தம் ஒழிக மக்கள்போராட்ட கருத்தாதிக்கம்

  • தொடங்கியவர்

மக்களை திரட்டி மக்கள் போராட்டம் செய்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்ற தோரணையில் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.உலகில் அப்படி விடுதலை அடைந்த நாடு இல்லை என்றே சொல்லலாம்.எகாதிபத்திய நாடுகளின் துணையுடன் விடுதலை பெற்ற நாடுகள் பல உண்டு.நாங்கள் சரியான எகாதிபத்திய நாட்டை தெறிவு செய்யவில்லை என்று சொல்லுங்கோ எற்றுகொள்லாம்.

உண்மையில் மக்கள் போராட்டம் என்பது வரட்டு சித்தாந்தம் ஒழிக மக்கள்போராட்ட கருத்தாதிக்கம்

நண்பர்களே,

வினவு சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் இக்கட்டுரை புதிய ஜனநாயகம் ஜூன் மாத சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. புதிய ஜனநாயகம் இதழ் கடந்த 24 வருடங்களாக தமிழகத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. 80களில் தமிழகத்தில் தங்கியிருந்த எல்லாப் போராளிக்குழுக்களின் தோழர்களும் இப்பத்திரிகையை அறிவார்கள். தற்போதைய தலைமுறைக்கு இப்பத்திரிகை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது புலிகள் பின்னடைவை சந்திருக்கும் சூழலில்தான் புதிய ஜனநாயகம் புலிகளின் மீதான விமரிசனத்தை வைக்கிறது என்பதல்ல. சொல்லப்போனால் புலிகள் பாரிய வெற்றியடைந்திருக்கும் நேரத்தில் கூட இத்தகைய விமரிசனங்களை அப்பத்திரிகை எழுதியிருக்கிறது. இந்திய இராணுவம் இலங்கைக்கு சென்றால் அது ஆக்கிரமிப்பு இராணுவமாகத்தான் செயல்படும் என ஆரம்பத்திலேயே இதை அம்பலப்படுத்தியது புதிய ஜனநாயகம் மட்டும்தான். பின்னர் புலிகள் இந்திய இராணுவத்தை எதிர்த்தபோதும் அதை ஆதரித்து தமிழகத்தில் குரல் கொடுத்த்து இந்த பத்திரிகைதான். அதே போல ராஜிவ் கொலை நடந்த ஒரிரு தினங்களிலேயே அதை பழிக்குப் பழி என அட்டைப்படக் கட்டுரை வெளியிட்ட புதிய ஜனநாயகம் ராஜிவை யார் கொன்றார்கள் என்பது முக்கியமல்ல, மாறாக ஈழத்தில் தமிழ் மக்களை வேட்டையாடிய இந்திய ராணுவத்தை அனுப்பி குற்றம் புரிந்த்து ராஜீவ்தான் என எழுதியது. ஆனால் அப்போது லண்டனில் இருந்த புலிகளின் தளபதி கிட்டு ராஜீவ் கொலையை புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் சஞ்சிகைகளின் நிருபர்கள்கூட செய்திருக்கலாம் என பேட்டியளித்தார். காரணம் எமது நிலைப்பாடுகள் புலிகளுக்கு எப்போதும் உவப்பானதாக இருந்த்தில்லை. இருந்த போதும் அதே கிட்டு இந்திய கடற்படையில் அநீதியான முற்றுகையின் போது மரணமடைய நேர்ந்த போதும் அதை இந்திய அரசின் சதி என எழுதியது இதே புதிய ஜனநாயகம்தான். இப்படி கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இச்சஞ்சிகை ஈழத்திற்காக சமரசமில்லாமல் குரல் கொடுத்து வருகிறது என்பதோடு புலிகளின் தவறுகளையும் அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்த்து. தமிழகத்தின் ஓட்டுக்கட்சி தலைவர்களை மலை போல நம்பிய புலிகள் இத்தகைய தீவிர இடதுசாரிக் குழுக்களை பொதுவாக சட்டை செய்வதில்லை.

எனவே இப்போது யாழில் வெளியிடப்பட்டிருக்கும் இக்கட்டுரையை மேற்கண்ட பின்னணியோடு இணைத்து படிக்கவே இங்கே விளக்கமளித்துள்ளோம். இக்கட்டுரையோடு கூடவே இம்மாத புதிய ஜனநாயகத்தின் எல்லா கட்டுரைகளயும் டவுண்லோடு செய்ய நீங்கள் வினவு தளத்திற்கு வந்து பெறலாம். அதை மின்னிதழ் வடிவிலும், எழுத்துரு வடிவிலும் நீங்கள் பெற முடியும். மற்றபடி இந்த கட்டுரைதொடர்பாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளை புதிய ஜனநாயகம் இதழுக்கு அனுப்பி வைக்கிறோம். நன்றி.

நட்புடன்

வினவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியிருக்கிறது. இது, புலிகள் இயக்கத்தின் தோல்வி

.................

மக்களின் அரசியல் போராட்டம் மட்டுமே இன விடுதலையை பெற்றுத்தரும் என்று இந்த கட்டுரை சொல்லுவதாக நான் நினைக்கவில்லை. ஆயுத பலம் உச்சத்தில் இருந்தபோது, சிங்கள இனவெறி அரசு போர்நிறுத்தம் செய்துகொள்ள முன்வந்தபோது, இப்போது நடைபெறுவது போன்று ஆர்ப்பாட்டங்களும், கவன ஈர்ப்பு நிகழ்வுகளும் தமிழர் போராட்டத்தை, தமிழின விடுதலையின் அவசியத்தை உலகறிய செய்திருக்க வேண்டும் என்று இவர் நினைக்கிறார். ஆனாலும் அதுவும் கூட ஒரு இனத்தை கருவறுக்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்ட பேய்களை தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா என்று சொல்ல முடியாது.

ஆனால் தமிழனின் துயரம், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை இன்னும் கூட உலகமும், ஏன், அனைத்து தமிழர்களுமே கூட புரிந்துகொண்டதாய் கூற முடியாது. தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழ தமிழர்களின் அனுபவங்களும், மற்றும் இணையங்களில் செய்திகளுடன் இணைக்கப்படும் வாசகர்களின் கருத்துகளும் இதற்கு சாட்சி.

இந்த வார ஆனந்த விகடனில், ஈழ சகோதரன் ஒருவர் தமிழ்நாட்டிலேயே அவருடன் பேசுபவர்கள் அனைவருமே, "என்ன நடக்கிறது ஈழத்தில்?" என்ற கேள்வியில் ஆரம்பித்து, "ஏன் போன இடத்தில் சண்டை போடுகிறீர்கள்?" என்ற கேள்வியில் முடிப்பதை நிருபன் பகுதியில் கூறியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன் என்னுடன் பணிபுரியும் சக தோழர்கள் இருவரை, "ஈழத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?" என்று கேட்டேன். ஒருவர், தன்னுடைய அறியாமையை மவுனமாக இருந்து ஒப்புக்கொண்டு, தெரியாது என்று தலையை ஆட்டினார். மற்றொருவர், "சுமார் நூறு வருஷத்துக்கு முன்னாலே இலங்கை காடாக இருந்தது. பிரிடிஷ்காரங்க இங்க இருந்து ஆளுகள கூட்டிட்டு போயி..." என்று ஆரம்பித்தார்.

நான் அதிர்ச்சியுடன் உடனே அவரை கையமர்த்தி, "இருபத்தஞ்சாயிரம் வருஷத்துக்கு முன்னமே அங்க தமிழன் வாழ்ந்திருக்கான். அங்க தென் பகுதியில குடியேறின சிங்களர்கள், தமிழர்கள ஒழிச்சிட்டு தங்கள் அரசாங்கத்த நிறுவிக்கிட்டாங்க. இப்போ மொத்த தமிழினத்தையும் அங்க இருந்து விரட்ட பாக்குறாங்க " என்று படபடப்புடன் கூறி, அமெரிக்க இளையோர் தயாரித்த ppt-யை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். இத்தனைக்கும் அவர் கணிணியியலில் முதுகலை பட்டம் பெற்ற தமிழர். தமிழ் நாட்டு தமிழனின் நிலையே இது என்றால், மற்ற இனத்தவரின் புரிதலை பற்றி என்ன சொல்ல?

ஆனாலும் ஆறுதல் அளிக்கும்விதமாக, தினத்தந்தி, தினமணி ( இப்பத்திரிக்கை பூணூல் போட்டவர்களின் பத்திரிகை என்று சொக்க தங்கத்தை பார்த்து சொக்கிப்போய், அவள் பாதத்தை நக்கிக் கிடக்கும் தமிழின தலைவர் சொன்னது) பத்திரிக்கைகளில் வரலாற்று ஆதரங்களுடன் தமிழர்களே இலங்கையின் பூர்வ குடியாகள், சிங்களர்கள் வந்தேறிகள் என்பதை ஆதரங்களுடன் நிரூபிக்கும கட்டுரைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இவரை போன்றோர் படிக்க வேண்டுமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறுமனே எதிர்கருத்துக்கள்வைப்புது மட்டுமே சிறந்ததாக அமையாது அந்தவகையில் அடுத்த நடவடிக்கைளுக்கான தேடுதல்கள் மிக அவசியமானது.

இந்தவகையில் முதலில் நாம் செய்யவேண்டிய முக்கிய பணி புலம்டிபயர் இளையோரின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதில் எம்மில் சிலர் குளிர்காயள நினைப்பதுடன், அவர்களது தாயம் நோக்கிய செயற்பாடுகளைத் திசைதிருப்பிவிடுவதைத் தடுக்கவேண்டும்.

வீடுபுகுந்து அசிட் அடிக்கும் அளவிற்கு அவர்களை சிந்திக்கமுடியாத

வெறும் இனவெறி ஊட்டப்பட்டவர்களாக மாற்றவேண்டாம்.

புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் இம்மாதிரியான நிகழ்வுகள்

எமக்குச் சாதகமாக அல்லாது, எதிரிக்குச் சாதகமான விளைவுகளையே தரும்.

83 ஆண்டுக்கலவர காலத்தில் பாரிஸ் நகரில்

சிங்கள இளைஞருக்கு எதிராக கத்திக்குத்துப் போன்ற வன்முறைகளில்

ஈடுபட்டதன் எதிர்விளைவுகளை அன்று இளைஞனாக இருந்து நேரில் கண்ட

அனுபவத்தில் சொல்கிறேன் புலத்தில் வன்முறைப்போராட்டம் எமக்குப் பாதகமானது.

தமிழரசுக்கட்சி அதன் பின் வந்த அனைத்துப் போராளி அமைப்பக்கள்

என யாவும் இளைஞர்களை தெளிந்த அரசியல் சிந்தனையும்

தீர்க்கதரிசனமும் கொண்டவர்களாக, போராளிகளாக உருவாக்காமல்,

இன உணர்வுகளைத் தூண்டி

தமது இலக்கு நோக்கிய தெளிவான பார்வையற்ற

வெறும் இன உணர்வுமட்டுமே ஊட்டப்பட்டு

வளர்த்ததுவும் எமது பாரிய பின்னடைவிற்கும். அதன்பின் இன்று ஏற்பட்டுள்ள

அரசியல் வெற்றிடத்திற்கும் எம்மை வழிநடத்த

அடுத்தகட்டத் தலைமைத்துவத் தகுதியுடையவர்கள்

இல்லாதுபோனதற்கும் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது

இளைஞர்கள் எமது சிந்தனைகளிலிருந்துமாறுபட்ட கோணங்களில் சிந்திக்கிறார்கள்.

மாறிவரும் உலகியல் முறைமைகளுக்கும் இன்றைய

புறச்சுhழல்களிற்கும் ஏற்ப நவீன போராட்டவடிவங்களை முன் எடுக்கமுனைகிறார்கள்.

உதாரணமாக ஜனனி ஜனநாயகம் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்குப் போட்டியிட்டதன் மூலம்

லண்டனில் எமது வாக்கு வங்கியன் பலம் ஐம்பதாயிரத்திற்கு மேல் என எடுத்துக்கட்டடியது

வாக்கு வங்கியை நம்பி அரசியல் நடத்தும் இங்கிலாந்து அரசியல் கட்சிகளிற்கு

எம்மை நோக்கிய பார்வையை இந்தநடவடிக்கை திருப்பியிருக்கும்.

தயவுசெய்து இளையோரை அவர்கள்பாணியில் புலம்பெயர் சுhழலிற்கேற்ப அவர்கள் போராட்டங்களைத் தொடரவிடுங்கள்.

Edited by naanal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.