Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா சிதறாமல் இருப்பதற்கு ஈழத் தமிழர்களை விட்டால் இந்திய அரசுக்கு வேறு மார்க்கம் இல்லை: கி.பி.அரவிந்தன்

Featured Replies

இந்திய இறையாண்மையின் பாதுகாப்புக்கு அல்லது இந்தியா சிதறாமல் இருப்பதற்கு ஈழத் தமிழர்களை விட்டால் இந்திய அரசுக்கு வேறு மார்க்கமில்லை என்பதே உண்மை என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கவிஞருமான கி.பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 'குமுதம்' குழுமத்தின் 'தீராநதி' மாத ஏட்டுக்கு அவர் வழங்கிய முழுமையான நேர்காணல் வருமாறு:

ஈழப் போராட்டத்துக்கு ஏற்பட்டிருக்கும் இன்றைய பின்னடைவுக்கு காரணமாக பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதிலிருந்து நாம் தொடங்கலாம். அந்த விமர்சனங்களில் முக்கியமானது, 'முப்பதாண்டுகலமாக நடந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்டம் என்பது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டமாக மட்டும் நடந்தது என்பது; இன்னொன்று, 09/11 அமெரிக்க இரட்டைக்கோபுரம் தாக்குதலுக்குப் பிறகான உலகச் சூழலை அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தவறியது. உங்கள் எண்ணம் என்ன?

உங்கள் கேள்வியே பதிலைச் சொல்லி நிற்கின்றது. 2002 இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு செல்லவும் கையெழுத்திடவும் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகள் அதன் பின்னரான அரசியல் போக்குகளை கையாள்வதில் திறனற்று போனதே அவர்களது வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும் என்றுதான் நானும் கருதுகிறேன். 'ஒற்றை மைய உலகில் போரும் சமாதனமுமென' சிந்திக்கவும் எழுதவும் முனைந்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு போன்றோர் வன்னிக்குள்ளேயே அருகில் இருந்தும் புலிகள் கேளாச் செவியர்களாக இருந்தது, 'கெடுகுடி சொற்கேளாது' என்பதற்கு உதாரணமாயிற்று.

அடுத்தது... புலம்பெயர் தமிழர்கள், ஈழத்தின் உண்மை நிலையையும் போராட்டத்தின் நியாயத்தையும் உலக மக்கள் மத்தியில் சரியாக எடுத்துச் செல்லவில்லை; உலக நாடுகள் தமிழர்கள் பிரச்சினையை புரிந்துகொள்ளாமல், சிங்கள அரசின் பக்கம் நிற்க இதுவொரு காரணம் என்ற விமர்சனமும் இப்பொழுது எழுந்துள்ளது. குறிப்பாக, உலகெங்கும் உள்ள தங்களைப் போன்ற ஒடுக்கப்படுகிற இனங்களையும்கூட ஈழத் தமிழினம் அடையாளம் காணத் தவறிவிட்டதாக சொல்கிறார்கள்.

ஆம். இது ஒரு வேதனையும் வேடிக்கையும் கொண்ட விடயம்தான். இதற்கு ஈழத் தமிழர்களின் உளவியல் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதாவது தாங்கள் ஒருவகையான 'தூய்மை' கொண்ட இனம் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஈழத் தமிழர்கள்; குறிப்பாக, யாழ்ப்பாணத் தமிழர்கள். இதனை யாழ்ப்பாணியம் எனவும் கொள்ளலாம். ஒருவகையில் பார்ப்பனியத்திற்கு நெருக்கமானவர்கள் இவர்கள். வெள்ளையர்களை தேவர்களாகவும் அவர்களுக்கு அடுத்தாக தாங்கள் இருப்பதாகவும் நம்புவர்கள். இன்னும் சொன்னால் ஐநூறாண்டு காலமாக ஐரோப்பியரின் ஆளுமையில் இருந்த அடிமைப்புத்தி அல்லது விசுவாசம் நிரம்பபெற்றவர்கள். இதனால் பல்தேசியத்தாருடன் இணைதல் அல்லது அவர்கள் துன்பத்தில் பங்கெடுத்தல் என்பவை பற்றி கவலையின்றி இருக்கின்றனர்.

ஆரம்ப காலத்தில் நீங்கள் ஈரோஸ் அமைப்பில் இருந்தீர்கள். ஈரோஸ் போன்ற பல்வேறு அமைப்புக்கள் ஆரம்ப காலத்தில் போராட்டத்தில் இருந்தன. அதில் எவையெல்லாம் இன்றும் போராட்டத்தில் ஈடுபடும் பலத்துடன் உள்ளன?

உண்மையில் இன்று எத்தனை அமைப்புக்கள் இருக்கின்றன என்பதை எண்ணுவதை விடவும் ஈழத் தமிழர்களை யார் ஒன்றிணைக்கிறார்கள், பொது வேலைத்திட்டத்தை முன்வைக்கிறார்கள் என்பதே முக்கியமானது. வீழ்ந்துவிட்ட சமூகத்துக்குள் அரியாசனம் தேடுவதை தவிர்த்து ஒரு பொது வேலைத்திட்டத்தில் இணைவது என்பதே சமூக நலன் விரும்பிகள் செய்யக்கூடிய பணியாகும். ஈரோஸ் அமைப்பின் பணிகள் என்றோ முடிந்துவிட்டன. அதில் காலத்திற்கேற்ப என்ன மாற்றம் மேற்கொள்ளபட்டது என்பது பற்றி தகவல் எதுவும் இல்லை. அதை மீள கட்டிப்பிடித்திருப்பவர்கள் அரியாசன ஆசை கொண்டவர்கள் என்றே சொல்வேன்.

புலம்பெயர் தமிழர்கள் இப்பொழுது என்ன மனநிலையில் இருக்கிறார்கள்?

எம்மக்களின் மனோநிலை இன்னும் தெளிவடையவில்லை. சற்று நாளெடுக்கம் என்றே நினைக்கிறேன். முப்பது ஆண்டுகால மனப்பதிவை மாற்றுதல் என்பது இலகானதொன்றல்ல. எந்த சமூகத்திற்கும் தலைமை ஒன்று உண்டு. தலைவர்கள் என்றும் இருப்பர். அவர்கள் மீதான பற்றும் ஈர்ப்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பர். அப்படித்தான் ஈழத் தமிழ் சமூகமும்; தங்களுக்கான தலைமை அல்லது தலைவர் இல்லாத வெற்றிடம் ஏற்பட்டிருப்பதை நம்புதல் கசப்பானதுதான். இது போராட்ட முன்னெடுப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்தான். ஏனெனில், போராட்ட முன்னெடுப்புக்கு நம்பகம் என்பது முக்கியமானது.

ஆனாலும், இன்று புலம்பெயர் தமிழர்களே ஈழத் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்னும் நிலை. உலகெங்கிலும் சுமார் எவ்வளவு ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள்? இவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் கடந்த காலத்தில் நடந்ததா?

அண்ணளவாக ஒரு மில்லியன்; அதாவது, பத்து லட்சம் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். பிரித்தானியாவிலும் கனடாவிலும் அரை மில்லியன் ஈழத் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இம்மக்களை விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகள் பிணைத்திருந்தன. ஈழப் போராட்டத்தின் ஏகப்பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் தம்மை பிரகடனம் செய்திருந்ததால் புலம்பெயர் தமிழர்களும் அவர்களை நம்பியிருந்தனர். இந்த ஒருங்கிணைப்பு என்பது மேலிருந்து கீழான திணிப்பாக மேற்கொள்ளப்பட்டது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இனி வரும் காலங்களில் இது நடக்க வாய்ப்பில்லை. ஏனெனில், மேலிருந்து எதனையும் திணிக்கும் அளவுக்கு ஒரு ஆளுமை இப்பொழுதுள்ள யாரிடமும் இல்லை என்றே நினைக்கிறேன்.

கிட்டதட்ட முப்பதாண்டுகளாக ஈழத் தமிழர்கள் புலப்பெயர்வு வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் நாடுகளின் வாழ்க்கைச் சூழல், குறிப்பாக மேற்குலகம் அவர்களின் வாழ்வில் கலாசார, பொருண்மிய, அரசியல் மாற்றங்களைக் கொண்டிருக்கிறதா?

வாழ்வியல் முறைகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளதுதான். இது தவிர்க்க முடியாதது. ஆனால், உளப்பண்பாட்டில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக நான் கருதவில்லை. மேற்குலகிலேயே கருவாகி உருப்பெற்ற இளைய தலைமுறையினரிடம் கூட உளப்பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனக்கு அது குறித்த சில சந்தேகங்கள் உண்டு. அதாவது புலம்பெயர் இளையோர் எனத் தம்மை அழைப்பவர்கள் நடாத்தும் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டபோது அவர்களின் நடைமுறைப் பண்புகள் மிகவும் பிற்போக்கானதாக, நவீனத்துவத்தை உள்வாங்காதவர்களாக இருப்பது கண்டு அதிர்ந்து போனேன். எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் நிலை கவலையளிப்பதாக இருந்தது.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் இலங்கை அரசை ஆதரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் இந்தத் தனது ஆதரவு தமிழ் குழுக்களை ஒருங்கிணைத்து தேசீய ஒருமைப்பாடு கருத்தரங்குகள் தொடங்கி முதலீடு தொடர்பான உரையாடல்கள் வரைக்கும் நடத்திக் கொண்டிருக்கிறார்களே; சர்வதேச அளவில் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

ஆனால், இலங்கை அரசின் இம்முயற்சிகள் சர்வதேச அளவில் கவனத்தை பெறவில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது நல்லது. புலிகள் இல்லாத நிலையில் சர்வதேசம் இவற்றிற்கு ஆதரவு வழங்கும் என்றும் நான் நம்பவில்லை. செல்வராசா பத்மநாதனின் முயற்சிக்கும், அவரது நாடு கடந்த அரசு பற்றிய கருத்தாக்கத்திற்குமே சர்வதேச ஆதரவு கிட்டிவருவதாக நான் அறிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனப்பட்டிருக்கிறது. ஆனாலும், மீதி இருக்கும் போராளிகள் மூலம் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், வன்னி மக்களிடம் நேரடியாகச் சென்று பணி செய்ய முடியாத சூழலில் அது எந்தளவுக்கு சாத்தியம்?

இது ஒரு முக்கிய பிரச்னைதான். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் ஈழத் தமிழர்களின் அரசியல் பிரதிநித்துவத்தை இழக்காதிருப்பது ஓர் ஆறுதலை அளிக்கின்றது. அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் (யாழ்பாண மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல்கள்) தமிழ் தேசிய கூட்டமைப்பு கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பது அவர்களுக்கு ஊடாக பணி செய்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. யாழ்ப்பாண நகரத்தில் 80 சவீதத்தினர் வாக்களிக்காமல் இருந்ததும் அவர்களுள் இருக்கும் சிறிலங்கா அரசு மீதான அதிருப்தியையே காட்டுகின்றது. இவை புலம்பெயர் தேசத்தில் உருவாக்கப்படும் பொது வேலைத்திட்டத்தை, ஈழத்தின் உள்ளேயும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதென்பதையே உணர்த்துகின்றன.

இலங்கையில் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் மக்கள் முகாம்களில் இருக்கிறார்கள். இவர்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட 10 ஆயிரம் போராளிகளும் அவர்களின் பிரதான தளபதிகளும் எங்கே இருக்கிறார்கள், அவர்களின் நிலை என்ன என்பது பற்றி அறிய முடிந்ததா?

அறியமுடியவில்லை. என்னால் மட்டுமல்ல மனித உரிமை ஆர்வலர்களாலும், செயற்பாட்டாளர்களாலும் கூட அறிய முடியவில்லை என்பதே கவலை தரும் செய்தியாகும். இந்தியா நினைத்தால் இதனை வெளிப்படுத்த முடியும்.

நீண்ட காலமாக பிரான்சில் வசித்தும் இன்னும் பிரான்ஸ் குடியுரிமை வாங்காமல் இருக்கிறீர்கள், ஏன்? இலங்கைக்கு, குறிப்பாக உங்களின் பிறந்த ஊருக்கு திரும்பிச் செல்லும் நம்பிக்கை இன்னும் இருக்கிறதா?

சங்கடமான கேள்வியை முன்வைத்துள்ளீர்கள். எனது அரசியல் வேட்கைகள் நிறைவேறி, எனது ஊருக்கு திரும்ப வேண்டுமென்ற நம்பிக்கையுடனேயே இன்றும் உள்ளேன். எனது பணிகளைக்கூட அந்நோக்கிலேயே மேற்கொள்கிறேன். அரசியல் வேட்கைகள் எதுவும் நிறைவேறாத எனது ஊரை திரும்ப சென்று பார்ப்பதைவிடவும் புலம்பெயர்ந்த நாடொன்றிலேயே புதைபடுவது மேலானது என்ற எண்ணமே என்னிடம் உண்டு. அகதி நிலையை துறந்து, சிறிலங்கா குடியுரிமையில் வாழவேண்டுமென்ற நிர்பந்தம் ஏற்படுமானால் நாடற்றவன் என்ற நிலையை பெறுவதற்கான சட்ட போராட்டத்தை நடத்தவே முயற்சிப்பேன். இவ்வெண்ணம் கொண்ட என்போன்றோருக்கு நாடு கடந்த அரசு என்ற கருத்தாக்கமும் செயல்வடிவமும் உதவியாக இருக்கும் என்றே நம்புகிறேன். உங்கள் கேள்வி சட்டவாளர்களுடன் ஆலோசனை நடத்த என்னை உந்துகின்றது.

தனி ஈழம் மலர்ந்தாலும், எந்த புலம்பெயர் தமிழரும் ஈழத்திற்குச் செல்லமாட்டார் என்றொரு விமர்சனம் முன்பு முன்வைக்கப்பட்டது. இப்போதோ, 'இலங்கையில் போர் முடிந்துவிட்டது; தமிழர்கள் இலங்கைக்கு திரும்பி வந்து முதலீடு செய்ய வேண்டும்' என இலங்கை அரசு கோரிக்கை விடுகிறது. அதற்கான முயற்சிகளையும் புலத்தில் செய்கிறது. புலம்பெயர் தமிழர்கள் திரும்பிச் செல்வது குறித்த பேச்சுக்களையும் விமர்சனங்களையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதலில் இக்கேள்வியை ஈழத் தமிழர்களுக்கு மட்டும் பொருத்திப் பார்க்காமல் புலம்பெயர்ந்த அனைத்து சமூகங்களின் நடைமுறைகளுடனும் ஒப்பிட்டு பார்ப்பது பொருத்தமானது. வெளியேறியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிய வரலாற்றை யூதருடன் பலரும் ஒப்பிடுவதுண்டு. ஆனால், அது எம்முடன் பொருத்தக்கூடியதா என்பது சந்தேகமே. இதேவேளையில் அமெரிக்காவிற்கு அடிமைகளாக இழுத்துவரப்பட்ட ஆப்பிரிக்க மக்களிடையே சுதந்திர இயக்கம் தோற்றம்பெற்ற வேளையில், ஆப்பிரிக்காவிற்கு திரும்புதல் என்பது அடிப்படைக் கருத்தாக இருந்தது. வில்லியம் கார்வெ என்பவர் இவ்வியக்கத்தை தோற்றுவித்திருந்தார். ஆனால், அந்த இயக்கம் வெற்றிபெறவில்லை. இவ்வாறே புலம்பெயர்ந்த பல தேசியத்தார் பெரும்பாலும் திரும்பிச் சென்றதில்லை. ஆதலால், ஈழத் தமிழர்களின் மனோநிலையிலும் திரும்புதல் இனிய கனவாக மட்டுமே இருக்கும். இரண்டாவது, திரும்புதல் என்பது பொருளாதாரத்துடனும் இணைந்தது. பொருளாதாரம் கையில் சேரும்போது திரும்புதல் என்னும் தீர்மானத்தை எடுப்பவர்களாக அடுத்த தலைமுறை மாறிவிடுகின்றது. அத்துடன் சாதிய கட்டுமானத்தை கொண்ட, ஐனநாயக மறுப்பு கொண்ட எம் சமூக அமைப்பில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் தேசங்களே அனைத்து வாய்ப்புக்களையும் வழங்குகின்றன. ஆதலால், அவர்கள் திரும்புதலை விரும்பார் என்றே நினைக்கிறேன்.

உங்கள் இளமைக்காலங்களில், ஈழத்துக்கு அடுத்தபடியாக அதிக வருடங்கள் நீங்கள் சென்னையில்தான் இருந்தீர்கள். சென்னையில் இருந்ததுக்கும் புலத்தில் இருப்பதுக்கும் வேறுபாடாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

சென்னைக்கு வந்ததே பின்தளம் ஒன்றை கட்டியெழுப்பும் பணியாகத்தான். ஆனால், புலம்பெயர்ந்தது ஒதுங்கிச் செல்லும் மனோநிலையில்தான்; இருந்தும் ஒதுங்கிச் செல்ல முடியவில்லை என்பது வேறு விடயம். ஆதலால், இரண்டும் ஒன்றல்ல. கருத்துக்களை காவிச் செல்வதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறேன். கலை - இலக்கிய பண்பாட்டு தளங்களிலேயே அதிகம் நடமாடி வருகிறேன். சென்னையில் தங்கியிருந்தபோது இளமையும் அதனுடன் கூடிய வேகமும் இருந்தது.

இப்பொழுது அரசியல் ரீதியாக நீங்கள் தனிமைப்பட்டிருப்பதாக உணருகிறீர்களா?

நீங்கள் என விளித்தது என்னை மட்டுமா அல்லது நான் சார்ந்த சமூகத்தையா? ஈழத் தமிழ்ச் சமூகத்தவர்கள் அனைவருமே அரசியல் ரீதியாக தனிமைப்பட்டுள்ளோம். இந்த தனிமைதான் சிறிலங்கா எம்மை தோற்கடிக்க உதவியது என்பதும் மிக முக்கியமானது. உலக அரசியலின் போக்கை எமது அரசறிவியலாளர்கள் புரிந்திருந்த போதும் அதனை எமது சமூகம் விளங்கிக்கொள்ள மறுத்து வருகின்றது. அல்லது அக்கறை கொள்ள மறுக்கின்றது என்றே நினைக்கிறேன். இந்த அரசியல் தனிமையை போக்கவே தற்போது பலரும் முனைந்து வருகின்றார்கள். எனது பணியும் அதை நோக்கியதே.

'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' மூலம் போராட்டத்தை முன்னெடுத்து தாயக நிலத்தை மீட்பது எந்தளவுக்கு சாத்தியம்?

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (கிழிசி) பாலஸ்தீன விடுதலை இயக்கம் (றிலிளி) என்பன மறைமுக அரசை நிறுவி நடத்தியவர்கள்தான். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மொசாம்பிக்கிலும், பாலஸ்தீன விடுதலை இயக்கம் துனுசியாவிலும் இவ்வகை அரசுகளை நிறுவினர். இன்றைக்கு அவர்கள் வீழ்ந்தவர்களாக இல்லையே. அவர்களிடம் சட்டபூர்வ அரசு என ஒன்று உள்ளதே. நாடு கடந்த அரசு பற்றிய விளக்கமளிக்க நான் பொருத்தமானவன் அல்ல. நான் இன்னமும் அதனை விவாத அதாவது உரையாடல் நிலையிலேயே வைத்துள்ளேன்.

யுத்தத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது இந்தியா மௌனமாக சகித்துக் கொண்டிருந்தது. போருக்கும் உதவியதாக தமிழகமே சொன்னது. இத்தகைய சூழ்நிலையில் இன்னும் 'நாடு கடந்த தமிழீழ அரசை' அமைத்திருப்பவர்கள் இந்தியாவை நம்பி இருப்பது போல் தெரிகிறதே?

கி.பி.அரவிந்தன்: இந்தியாவை தவிர்த்த மாற்றுத் தெரிவு ஏதும் எங்களுக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இலங்கைத் தீவின் அரசியல் என்பது இந்திய துணைக்கண்ட நலனுடன் பிணைந்தது. எங்கள் அரசியல் நியாயத்தை இந்திய நலனுடன் எப்படி இணைப்பது என்பதே எதிர்காலத்தில் எங்கள் அரசியல் போராட்டத்தில் முக்கிய பங்கை வகிக்கும். அதனையே நாடு கடந்த தமிழீழ அரசை அமைத்திருப்பவர்களும் நம்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.

இன்றைய உலகமயச் சூழலில், ஆசியப் பிராந்திய இந்து மகாசமுத்திர அரசியலில், இன விடுதலைப் போர் ஒன்றை இந்தியா ஆதரிக்கும் என இன்னமும் நம்புகிறீர்களா?

ஈழத் தமிழர்களின் அரசறிவியலாளர், சிந்தனையாளர் என நான் மதிக்கின்ற மு.திருநாவுக்கரசுவின் வார்த்தைகளில் சொல்வதானால் இந்திய இறையாண்மையின் பாதுகாப்புக்கு அல்லது இந்தியா சிதறாமல் இருப்பதற்கு ஈழத் தமிழர்களை விட்டால் இந்திய அரசுக்கு வேறு மார்க்கமில்லை என்பதே உண்மை.

'ஈழம் என்கிற கருத்து செத்துவிட்டது' என்கிறார் 'இந்து' ராம்; 'ஈழம் சாத்தியமில்லை' என்கிறார் ஷோபா சக்தி. நீங்கள் என்ன நம்பிக்கையில் தொடர்கிறீர்கள்?

கி.பி.அரவிந்தன்: ஈழம் என்னும் கருத்து வரலாற்று பூர்வமானது. அது சிலரது மன வக்கிரம் சார்ந்த ஒன்றல்ல. நரிகள் ஊளையிடுவதனால் சூரியன் மறைந்து விடுவதில்லை. ராமும் சோபா சக்தியும் ஓரே புள்ளியில் சந்திப்பது ஆச்சரியமானதொன்றல்ல.

புதினம்

இந்திய இறையாண்மையின் பாதுகாப்புக்கு அல்லது இந்தியா சிதறாமல் இருப்பதற்கு ஈழத் தமிழர்களை விட்டால் இந்திய அரசுக்கு வேறு மார்க்கமில்லை என்பதே உண்மை என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கவிஞருமான கி.பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

இல்லை சிதறும் வெகுவிரைவில் உலக வரை படத்தில் இந்தியா இருக்காது. பல நாடுகள் வரும்.

இனப்போராட்டங்கள் வெகுவாக எழுச்சி பெறுகின்றன.

இனங்களை அடக்கி ஆண்ட ரசியா இல்லாமல் போய் 18நாடுகள்.

யூகோசிலாவாக்கியா பல நாடுகள்.

அடுத்தது இந்தியா.

இந்தியா பாகிஸ்தான் எல்லாம் உடைய வேண்டும்

அதாவது புலம்பெயர் இளையோர் எனத் தம்மை அழைப்பவர்கள் நடாத்தும் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டபோது அவர்களின் நடைமுறைப் பண்புகள் மிகவும் பிற்போக்கானதாக, நவீனத்துவத்தை உள்வாங்காதவர்களாக இருப்பது கண்டு அதிர்ந்து போனேன். எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் நிலை கவலையளிப்பதாக இருந்தது

அப்பாவும் மகனும் சேர்ந்து பஜனை பாடிக்கொண்டும்,இந்திய சாமிமாரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுகொண்டுமிருந்தால் எப்படி நவீனத்துவதை இளைய சமுதாயம் பெறும்

இந்தியா சிதறாமல் இருப்பதற்கு ஈழத் தமிழர்களை விட்டால் இந்திய அரசுக்கு வேறு மார்க்கமில்லை என்பதே உண்மை.
:(

மீண்டும் ... மீண்டும் ... அதே தப்புக்கணக்குகள்!!! .........????

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு சாதகமாகவிருந்த இந்தியாவை ஒரு ஜே ஆர் தனது புத்தி சாதுரியத்தால் தன்னினத்திற்கு சாதகமாக்கினான் ஆனால் சிங்களவர்களின் இரத்தத்தில் இந்திய எதிர்ப்புணர்வு ஊறிய ஒன்று,இரண்டு பக்கமும் தவறுள்ளது இந்தியாவுக்கு மற்று மொரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.