Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களத்திலும் அகதியாய் | கடலிலும் அகதியாய் | புலத்திலும் அகதியாய் | எனது பெயரோ ஈழத் தமிழன்!

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

செவிக்கினிய பல பாடல்களை எழுதியும், இறுவட்டாக வெளியிட்டும், மற்றும் பல்வேறு கலை முயற்சிகளில் ஈடுபட்டும், புலம்பெயர் கலைஞர்களுக்கு ஓர் முன்னோடியாக திகழக்கூடிய, எங்கள் மனங்களை தனது வசீகரமான வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல்களாலும் குளிரவைக்கின்ற நோர்வே வசீகரன் (யாழ் தமிழ்வாணம்) அவர்களின் கவிதைத்தொகுப்பை அண்மையில் நான் வடலி வலைத்தளம் ஊடாக பெற்று இருந்தேன்.

IMG3376-1252120686.jpg

எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழமுதம் சோழியான் அவர்கள் கவிதைகளை படித்துவிட்டு நூல்பற்றிய ஓர் விமர்சனம் எழுதி தருமாறு கேட்டு இருந்தார். கவிதைத் தொகுப்பை மேசையில் கிடத்தி, 360பாகையில் வெவ்வேறுவிதமாக தடவிப்பார்த்து, நுணுக்குக்காட்டி மூலம் ஆராய்ச்சி செய்து விமர்சனம் செய்வதற்கு நான் ஒரு பண்டிதரோ அல்லது இலக்கியவாதியோ இல்லை. ஆனாலும்.. நடுத்தர அறிவுள்ள ஓர் சாதாரண தமிழன் என்கின்ற அடிப்படையில் கவிதைத்தொகுப்பு பற்றிய எனது சில எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன்.

IMG3376-1252120797.jpg

'தமிழர் திருநாள்' கவிதைத்தொகுப்பை வாசித்தபோது, வாசித்தபின் ஏற்பட்ட எண்ணங்கள் என்று கூறும்போது இரண்டுவிடயங்கள் பற்றி சொல்லலாம். ஒன்று, கவிதைகளில் சொல்லப்படுகின்ற செய்தி, இரண்டு கவித்துவம்.

சொல்லப்படுகின்ற செய்தி:

IMG3376-1252120866.jpg

அவலங்களை விபரிப்பதற்கு எழுத்துக்கள் தேவையில்லை. கண்ணீரே ஒரு கவிதைதான். இந்தவகையில் பார்க்கும்போது கவிதைத்தொகுப்பில் உள்ள இருபத்துநான்கு கவிதைகளுமே இதயத்தை ஏதோ ஒருவிதத்தில் சுண்டி இழுக்கின்றன. சுனாமியாக இருக்கட்டும்... செஞ்சோலை படுகொலைகளாக இருக்கட்டும் அல்லது 'தேசத்தின் குரல்' பற்றிய அஞ்சலிப்பாவாக இருக்கட்டும்... அங்கு கவிதையை காணவில்லை, கவிதைபோல் உணரவும் முடியவில்லை.. சவப்பெட்டிகளும், உருக்குலைந்த பிணங்களும், வறுமை, துயரம், ஏமாற்றம்.. இவையென எதிர்மறையின் அனைத்து அம்சங்களும் கண்முன்னே வந்து காட்சியளிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக சோகம் மட்டுமே கவிதைத் தொகுப்பில் எதிரொலிக்கின்றது என்று நான் கூறவரவில்லை. வெற்றிகளின் விம்பங்கள், சந்தோசத்தின் சாயல்கள், முயற்சிகளின் திருவினைகள்.. இவை எல்லாவற்றையுமே கவிதைகள் சுமந்து வந்து இருக்கின்றன. ஆனால்.. சரியான காலத்தில் அல்ல!

இன்றுள்ள தாயக நிலமைகள் கண்முன்னே காணொளிகளாகவும், கனவிலும் வந்து குழப்பும்போது.. இப்படியான இக்கட்டான நிலமையில் நூலை படிக்கும்போது பல இடங்களில் அல்லது அடிக்கடி 'தமிழரின் திருநாளை' அல்ல 'தமிழரின் கரிநாளை' - ஓர் பெருஞ் சூனியத்தை - வெறுமையை உணரமுடிகின்றது. எப்படியெல்லாம் இருந்த தமிழினம் இப்படியாகிவிட்டதே என்று ஏமாற்றம் தோன்றுகின்றது.

சொல்லப்படுகின்ற செய்தி என்றவகையில் பார்க்கும்போது கவிஞர் எங்களுக்கு இருக்கக்கூடிய கடமைகள், பொறுப்புக்களை உணர்வித்து தாயக மக்களிற்காக எதையாவது செய்யத்தூண்டுவதில் எங்கள் மனம் ஈடுபடுவதற்கு - ஒருமைப்படுவதற்கு - ஒருமைப்பட வைப்பதில் வெற்றிபெறவில்லையோ என்று சந்தேகப்படவேண்டியுள்ளது.

எவரும் கவிதைகள் எழுதலாம், புத்தகங்கள் வெளியிடலாம். ஆனாலும் ஓர் படைப்பாளியின் உண்மையான வெற்றி என்பது பார்வையாளர்களின் மனதினை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பாதிப்பதோடுமட்டும் நின்றுவிடாது அவர்களை ஆக்கபூர்வமான வழியில் செயல்களை செய்யத்தூண்டும் வகையில் அமையவேண்டும். என்னைப்பொறுத்தவரையில் ஒருவரை ஆக்கபூர்வமான ஓர் செயற்பாட்டில் ஈடுபட வைக்காத எந்தவொரு கலைப்படைப்பும் பூரணத்துவம் வாய்ந்ததாக கொள்ளப்பட முடியாது.

இந்தவகையில் பார்க்கும்போது 'தமிழர் திருநாள்' கவிதைத்தொகுப்பு எவ்வளவு தூரம் தனது இலக்கினை அடைந்து இருக்கின்றது என சொல்வது சற்றுக்கடினமாக இருக்கின்றது. இனிவரும் படையல்களில் கவிஞர் வசீகரன் அவர்கள் இந்தவிடயத்தில் சற்று அதிகம் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்ப்போம்.

***

மக்களின் அவலம் என்கின்ற வகையில் கவிதைத்தொகுப்பில் உள்ள கீழ்வரும் வரிகள் நெஞ்சில் தீயாய் சுடுகின்றன:

பொங்கலுக்கு வெடி கொளுத்துவோம்.. கவிதையில் இருந்து

பசி வந்தாலும்

பத்தும் பறக்காது!

பற்றவைத்த அடுப்பாக

வயிறுதான் எரியும்!

***

பிள்ளையை சுமக்கும்

எங்கள் வயிற்றிலே

பிணங்களை சுமக்கின்றோம்!

***

பிஞ்சுகளைப் பிளந்த பிசாசுகள்.. கவிதையில் இருந்து

உங்கள் தாகம் தீர்த்துக்கொள்ள

தமிழனின் குருதியென்ன மதுபானமா?

பிணவெறி பிடித்த இனவெறிகளே!

IMG3376-1252120622.jpg

கவித்துவம்:

மரபுரீதியாக இல்லாத புதுக்கவிதையில் என்ன கண்டறியாத கவித்துவம் இருக்கின்றது என்று சிலர் கேட்கலாம். டுக்கு டக்கு டிக்கு என்று அடிகளாக இல்லாவிட்டாலும்.. சிந்தனைகளே வெவ்வேறு கோணங்களில் அழகாகத் தெறித்து சந்தங்களாகி சிந்துபாடுவது புதுக்கவிதையின் கவித்துவமாக கொள்ளப்படமுடியும் என்று நினைக்கின்றேன்.

வசீகரனின் கவிதையின் கவித்துவத்தை நான் விபரித்து நீங்கள் கேட்பதைவிட கவிதைத்தொகுப்பிலுள்ள சில மாதிரித்துண்டுகளை நீங்கள் வாசித்தால் உங்களுக்கு அவர் ஆளுமையை உணரக்கூடியதாக இருக்கும்.

கவித்துவம் என்கின்ற வகையில் கவிதைத்தொகுப்பில் உள்ள கீழ்வரும் சிதறல்கள் எனது மூளையில் சிந்தனையைத்தூண்டும் பொறிகளாய் பறக்கின்றன:

மாசி22ம் எங்கட மண்ணும்.. கவிதையில் இருந்து

தெருத் தேங்காயை எடுத்து

வழிப் பிள்ளையாருக்கு உடைச்சு

எங்கன்ர அவலத்தை சொல்லி

அழலாம் என்று பார்த்தால் - இப்ப

வீட்டிலையும் தேங்காய் இல்லை!

தெருவிலையும் தேங்காய் இல்லை!

***

ஆலமரத்தடியில் அம்மம்மா

சுருண்டு கிடக்கிறா சுருட்டோட!

அப்பு கள்ளென்றாலும்

குடிப்பம் என்று.. பசியிலதான்

பனைய பனைய பார்க்கிறார்!

***

சுனாமியும் சுடுகாடும்.. கவிதையில் இருந்து

சுட்டு எடுக்காத எந்த

சுதந்திரமும் சுதந்திரமில்லை!

சுட்டு எரிக்க வந்த

சுனாமியே சொல்லிப்போனது!

***

நம்மை மறந்த நமது நட்சத்திரங்கள்.. கவிதையில் இருந்து

ஈழத் தமிழ் பேசிய தெனாலி - நீங்கள்

வேட்டையாடி விளையாட மட்டும்தானா?

***

தமிழர் திருநாள்.. கவிதையில் இருந்து

இன்று புகலிடத்தின்

குளிர்க் கூடுகளில்

மின் அடுப்பில்

பொங்கல் பொங்க

மின் குமிழ்கள்

சூரியனைப் பார்த்து

விசிலடிக்கும்!

***

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்... கவிதையில் இருந்து

உன்னைப் புதைக்கும் இடத்தில்

உயிர் வாழப் பழகியதுண்டா?

***

சர்வதேசமே கண் திறவாயோ.. கவிதையில் இருந்து

நாங்கள் என்ன செய்ய?

நாலு எண்ணெய்க் கிணறுகள்

சுற்றிவர இல்லாத

முற்றத்தில் பிறந்துவிட்டோம்!

***

ஈழத் தமிழன்.. கவிதையில் இருந்து

களத்திலும் அகதியாய்

கடலிலும் அகதியாய்

புலத்திலும் அகதியாய்

எனது பெயரோ ஈழத் தமிழன்!

***

கார்த்திகை இருபத்துயேழு.. கவிதையில் இருந்து

கையில் தொலைபேசி

குடிக்க கரிக்கோப்பி

காதில் இசைப்பெட்டி

பனியிலே என்ன ஓட்டம்?

***

தேசத்தின் குரலான தேசபிதாமகன்.. கவிதையில் இருந்து

ஊரிலுள்ள பெரிசுகளின் முகவரியே...

உலகத்து இளசுகளின் முதல்வரியே!

***

கரும்புலி மில்லர்.. கவிதையில் இருந்து

நெருப்பில்லாமல்

புகையாது என்றார்கள்!

புகைந்து புகைந்து

நெருப்பானவன் நீ!

***

உங்கள் சிந்தனைக்கு:

நம்மவர் படைப்புக்கள், ஆக்கங்கள் எவ்வாறான சூழ்நிலையிலும் ஓயாமல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கவேண்டும். படைப்பாளிகள் ஓய்வு அடைந்தால் அது தமிழருக்கு நிரந்தரமான கரிநாள் உருவாக காரணமாகிவிடும். எனவே, தாயகத்து கலைஞர்கள், நம்மவர்களான புலத்து கவிஞர்கள், படைப்பாளிகளிற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு, ஊக்கம் அளிப்போம்!

நன்றி! வணக்கம்!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர் படைப்புக்கள், ஆக்கங்கள் எவ்வாறான சூழ்நிலையிலும் ஓயாமல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கவேண்டும். படைப்பாளிகள் ஓய்வு அடைந்தால் அது தமிழருக்கு நிரந்தரமான கரிநாள் உருவாக காரணமாகிவிடும். எனவே, தாயகத்து கலைஞர்கள், நம்மவர்களான புலத்து கவிஞர்கள், படைப்பாளிகளிற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு, ஊக்கம் அளிப்போம்!

:unsure: யாழில வந்து என்னை மாதிரி குப்பைகொட்டுற படப்பாளி மாருக்கும் ஊக்கம் தருவியளோ? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசீகரன் அண்ணாவின் படைப்புக்குள் பலதையும் படித்துள்ளேன்... கேட்டுள்ளேன்... உணர்வுகளை சுண்டி இழுக்கும் வரிகளின் சொந்தக்காரன் அவர்! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படைப்பாய் சேகரித்து வெளியிட்டுள்ளார்.

கனவுகள் கொண்ட எம் வாழ்வில் அவர் கற்பனைக்குள் ஓடிய ஈழத்தமிழினத்தின் நிஜங்களை வரியாக்கி அதை நூலாக்கியமை பாராட்டத்தக்கது. ஈழத்தமிழர்கள் மத்தியில் பல்லாயிரம் எழுத்தாளர்கள் உள்ளார்கள், அவர்கள் சிறந்த முறையில் ஊக்கிவிக்கப்படவில்லை. அவர்களும் நாளை தமது திறமைகளோடு வெளியே வர வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் வசீகரன் அண்ணாவின் நூலுக்கு ஈழத்தமிழர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்

  • தொடங்கியவர்

:unsure: யாழில வந்து என்னை மாதிரி குப்பைகொட்டுற படப்பாளி மாருக்கும் ஊக்கம் தருவியளோ? :)

உங்கடை தகைமையை நீங்கள் ஏன் குறைச்சு எடைபோடுறீங்கள். சிட்னி கோசிப், மற்றும் நீங்கள் எழுதிய கதைகளைகூட புத்தகமாய் வெளியிடலாம். வலைத்தளத்தில படைப்புக்கள் செய்வது சற்று வித்தியாசமான அனுபவமாக இருக்கலாம். பொழுதுபோக்கை மையப்படுத்தியதாய் இருக்கலாம் அல்லது பொழுதுபோக்காக செய்யப்படலாம். அதற்காய் வலைத்தளங்கள் மூலமான படைப்பாளிகள் குப்பை கொட்டுபவர்கள் என்று சொல்வதற்கு இல்லை. தமிழர் திருநாளில் இருக்கின்ற வசீகரனின் பல கவிதைகள் வலைத்தளம் மூலம் உலா வந்தவையே. எனவே, உங்கள் ஆக்கங்களை தொடருங்கள்... முன்புபோலவே என்றும் ஊக்கம் தருவோம் புத்தன். :(

அன்புக்குரிய கலைஞன், மாப்பிள்ளை(இருவரும் ஒருவரே என்பது எனக்கும் தெரியும்)

வார்த்தைகளில் வெறும் நன்றி சொல்லி உங்கள் உள்ளம் நனைக்க விரும்பவில்லை. அதற்கும் மேலாக இப்படிப் பொறுமையாக நீங்கள் செய்த பெரும்பணிக்கு என் உள்ளத்தால், இதயத்தால் ஆயிரம் நன்றிகள் சொல்கிறேன். என்னைப் புரிந்துகொண்ட பல நண்பர்களில் நீங்களும் முக்கியமான நண்பர் (கலைஞன்). என்னுடைய நூலினை வலைத்தளத்தின் ஊடாக அதை வாங்கியது மட்டுமன்றி ஒரு விமர்சனத்தை எழுதவேண்டும் என்று எண்ணியதற்காகவும், உங்களை எழுத ஊக்குவித்த சோழியான் அண்ணாவிற்கும் எனது வாழ்த்துக்கள்.

தமிழர் திருநாள் நூலுக்கான விமர்சனத்தை ஆரம்பித்த விதம் கலைஞனுக்கே கை வந்த கலை. எங்களுடைய படைப்புகளுக்கு விமர்சனம் செய்ய பெரிய இலக்கியவாதியாகவோ, பெரிய பண்டிதனாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை என்பது எனது உறுதியான கருத்து. சாதாரன தமிழனாக, வாசகனாக விமர்சனம் கேட்பதே எனக்குப் பிடிக்கும். எங்களைப் போன்ற இளம்படைப்பாளிகளை இனங்கண்டு ஆதரவளித்து, உற்சாகமூட்டுபவர்கள் என்னபை; போன்று வளர்நிலையில் உள்ள கலைஞர்களும், மக்களும் தான்.

வளர்ந்து வருகின்ற எங்களைப் போன்ற படைப்பாளிகளை தட்டிக்கொடுத்த வளர்த்தெடுக்கும் மனப்பக்குவமும், படித்த அல்லது தடித்த பழைய படைப்பாளிகளுக்கு இல்லை! ஆகவே அவர்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பதும் இல்லை கலைஞன். வளர்ந்து வரும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வெளியில்கொண்டு வருவதற்கு மனம் இடம் கொடுப்பதும் இல்லை. இது எங்கள் சமூகத்தின் மீது நான் முன்வைக்கின்ற காட்டமான விமர்சனம்.

இந்த நிலை மாறுவதற்கு இப்போது யாழ்இணையம் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இது தொடர்பான பல ஆரோக்கியமான விவாதங்களும் இங்கே இடம் பெறுகின்றன. அதற்காக நான் எல்லோரையும் சொல்லவில்லை 20 விழுக்காடு கொண்ட இலக்கியவாதிகள் மட்டுமே ஊக்கப்படுத்த இருக்கிறார்கள். மிகுதியாக உள்ளவர்கள் பேசுவதேயில்லை. எங்களுடைய படைப்புகள் சும்மா பறவாயில்லை, இன்னும் வளர வேணும் தமிழகத்தின் படைப்புகள் போல் இல்லை என்று சொல்லிச் சொல்லியே பல படைப்பாளிகள் முளையிலேறே கிள்ளி எறியப்பட்டுள்ளார்கள். இந்த நிலை 2010 ஆண்டுக்குப் பிறகு ஆவது மாறும் என்று எதிர்பார்க்கிறேன்.

கலைஞன்: இந்த நூல் சரியான காலத்தில் வரவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது இந்த வருடம் கடுமையான போரும், வாழ்வுமாய நாங்கள் வாழ்ந்த போதே வெளிவந்தது. ஆனால் மனிதப்பேரவலங்களுக்கு மத்தியில் காணாமல் போய்விட்டது. இந்த வருடம் தைமாதம் 14 திகதி ஒரு கோவிலில் வைத்தே வெளியீடு செய்தேன். எங்கள் படைப்புகளை நாங்களே வெளியிட்டு வைக்க வேண்டிய சூழ்நிலையில்தான் நாங்கள் வாழ்கின்றோம். அந்த வகையில் காந்தளகம், வடலியின் வரவும் எங்களை நோக்கி வருகிறது. மேலும் பல பதிப்பகங்கள் இருக்கலாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் வடலி (பொடியங்கள்), காந்தளகம், தோழமை பதிப்பகத்திற்கு இந்தத் தருணத்தில் எனது நன்றிகள்.

மற்றும்படி கலைஞன் தன்னுடைய நேரத்தை ஒதுக்கி இப்படி ஒரு ஆழமான விமர்சனத்தை அளித்ததற்கு யாழ்கள நண்பர்கள் சார்பிலும், தமிழமுதம் சோழியான் அண்ணா சார்பிலும் எனது நன்றிகள். விமர்சனம் செய்யவும் பல கலைஞர்கள் மாப்பிள்ளை போல் உருவாக வாழ்த்துக்கள். அப்போது தான் எங்கள் படைப்புகள் மளிகைக் கடைகளில் தூசிபிடிக்காமல், மக்களை வாங்கத் தூண்டும். ஒரு புத்தகம் வெளியீடு செய்து 200 புத்தகங்கள் கூட விற்கமுடியாமல் எட்டுக் கோடி தமிழர்கள் என்று சொல்லி பெருமையாக வாழ்வதில் வலிகளே மிச்சம். ஆனாலும் எனது ஆக்கங்கள் பல வடிவங்களில் வரும்.

புத்தன், நிதர்சன் இருவருக்கும் நட்பின் வணக்கங்களும் நன்றிகளும். சாந்தி அக்கா சொன்னது போல் எத்தனை வலிகளையும் கடந்து நான் வருவேன். எத்தனை இழப்புகள் வந்தாலும் நல்ல படைப்புகளை வழங்க தினமும் போரடுகின்றேன். வேறு ஒரு பதிவில் என்னைப் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள் சாந்தி அக்கா. மிக்க நன்றிகள்.

மீண்டும் ஓரு இறுவட்டுடன் உங்களை கார்த்திகை மாதம் சந்திக்கினறேன்.

நன்றி வணக்கம்.

Edited by Tamizhvaanam

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்கள் முயற்சியைப் பாராட்டியே ஆகவேண்டும்.

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பை மற்றவர் விமர்சிக்கும்போது மிகுந்த ஆக்கமும் ஊக்கமும் ஏற்படுகிறது. அது புகழ்ச்சியாக இருந்தாலும், வாத விவாதமாக இருந்தாலும் படைப்பாளியைச் செம்மைப்படுத்தும். எந்த ஆக்கம் அதிகம் பேச வைக்கிறதோ அது அதிகமான மக்கள் பார்வைக்குச் செல்லும். அதிகம் பேச வைக்கும் படைப்புகள் பல சமயங்களில் முரணான படைப்புகளாகவே இருக்கும்.

கலைஞன் நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி உண்மையிலேயே நம்மவர்களுக்குள் ஒரு முன்னுதாரணமாக அமையும். வலைப்பூக்களை பார்த்தோமானால் அங்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பலர் மிகவும் பிரயோசனமாகவும் தமக்குத் தெரிந்த நூல்களை விமர்சித்தும் நூல்களை வாசிக்கத்தூண்டும் ஊக்கத்தை வழங்குகிறார்கள். முகமறியாமலே எழுத்துகளின் மூலம் படைப்பாளியைக் காண்கிறார்கள். நாம் எங்களின் போராட்ட சூழலிலேயே அதிக அக்கறை செலுத்துவதால் எங்களுக்குள் இருக்கும் படைப்பாளிகளை வெளிச்சத்தில் கொண்டு வந்து அடையாளப்படுத்தத் தவறுகிறோம். ஒரு சிலர் நல்ல படைப்பாளிகளை அடையாளங்காட்டினாலும் அவ்வடையாளம் குறுகிய வட்டத்திற்குள்ளேயே நின்று விடுகிறது. எல்லையற்றவனே சிறந்த படைப்பாளி. இன்று வடலியடிப் பெடியள் ஆரம்பித்திருக்கும் இந்ந நூல்களை வெளியிடும் பணி மகத்தானது. ஈழவர் படைப்பு என்பதை இந்திய நாட்டில் அச்சேற்றுவது சிக்கல்கள் நிறைந்தது. அதிலும் எமது விடுதலை சம்பந்தமான எழுத்துகளை நூலாக்குவதென்றால் பலவித இழுத்தடிப்புகள், பேய்க்காட்டல்கள் உயிரோட்டமான பல படைப்புகளை அகற்றச் சொல்லும் வேண்டுகோள்கள் என்று நீண்ட நடைமுறைகளைக் கொண்டது. இந்த விடயத்தில் வடலி ஒரு தெளிவான வரலாறை உடையதாக இருக்கிறது. இலகுவாகப் படைப்பாளிகளின் நூல்களை இழுத்தடிப்புகள்,அதிக அளவு பொருட்செலவுகள் இன்றி வெளியீடு செய்வது. வடலிப்பெடியள் பாராட்டுக்குரியவர்கள் மட்டுமல்ல ஈழவர் படைப்பை உலகளாவிய ரீதியில் அறிமுகம் செய்யும் பெருமைக்கும் உரியவர்கள்.

இன்ற யாழ்க்களத்தில் ஆரம்பித்திருக்கும் வசீகரனின் நூல் விமர்சனம் ஒரு விமர்சகரோடு மட்டுப்படாமல் அந்நூலை ஏற்கனவே பெற்றுள்ள ஒவ்வொருவரும் தத்தம் பார்வையைப் பதிவு செய்தால் அந்தப்படைப்பாளிக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும். மற்றவர்களுக்கு மட்டுமா உங்கள் அறிவுரை உங்களுக்கு இல்லையா என்று நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது. தொடர்ந்து வரும் காலத்தில் எனது பார்வையில் என்ற தலைப்பில் பல ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களைப் பற்றி எழுத உள்ளேன். அதில் வடலிப்பெடியளின் நூல்களும் அடங்கும். இப்போதே ஆரம்பிக்கலாம் ஆனால் ஒரு படைப்பாளியை அலசுவது என்பது அமைதியாக இருந்து செய்ய வேண்டியபணி.

இந்தப்பகுதி நல்ல ஆரோக்கியமாகத் தொடர வேண்டும்.

என்றோ கூறியதை நினைவில் நிறுத்தி செயலில் காட்டியுள்ளீர்கள் கலைஞன். நன்றி.

நானும் கருத்துக் கூறலாம்னா.. புத்தகத்தை வாங்கினால்தானே.. வாங்கிய பின் கூறுகிறேன். :icon_mrgreen:)

  • தொடங்கியவர்

நன்றிகள் வசீகரன், சகாரா அக்கா, சோழியன் மாமா..

ஓர் படைப்பை உருவாக்கியவனுக்குத்தான் தெரியும் அதை வெளியில்கொண்டு வருவதற்கு எதிர்கொள்கின்ற வேதனைகள், பிரச்சனைகள். ஆனால்... விமர்சனம் செய்பவர்களின் நிலமை அவ்வாறானது இல்லை. சும்மா குந்தியிருந்து யாரும் எதையும் விமர்சித்துவிட்டு போகலாம்.

ஆனாலும்.. நடைமுறைச் சாத்தியங்கள் இல்லாவிட்டாலும் சில இலக்குகளை வைத்து, அந்த அளவுகோலின் அடிப்படையில் நடுவுநிலமையுடன் விமர்சனம் செய்யவேண்டிய தார்மீகப்பொறுப்பு விமர்சகர் என்கின்ற முகமூடியை அணிந்துகொண்டு படைப்புக்களை விபரணம் செய்கின்ற எவருக்கும் உண்டு.

இந்தவகையில்... விமர்சனங்கள் எதிர்மறையான பாதிப்புக்களையும் படைப்பாளிகளிற்கு ஏற்படுத்தலாம். முன்பு ஒருதடவை ஓர் குறும்படம்பற்றி கருத்துக்களை பகிர்ந்தபோது.. குறிப்பிட்ட படைப்பாளி அக்கருத்துக்களை கேட்டுவிட்டு கடும்சீற்றம்கொண்டு கலையை ரசிக்கத்தெரியாத உமக்கு 'கலைஞன்' என்கின்ற பெயர் ஓர் கேடா என்று கேட்டு இருந்தார்.

இவ்வாறே, நடைமுறை வாழ்விலும் விமர்சனங்கள், விமர்சகர்கள் பல்வேறு தரப்புக்களின் சீற்றத்துக்கு ஆளாகவேண்டி இருக்கின்றது. இதற்கு அண்மையில் பகிர்ந்துகொள்ளப்படுகின்ற தாயகபோராட்டம்பற்றிய விமர்சனங்களும் விதிவிலக்கு இல்லை.

எனினும், பின்னூட்டல்கள் என்பவை அது படைப்பாளியாக இருந்தாலும் சரி, போராளியாக இருந்தாலும் சரி ஆக்கபூர்வமான வகையில் உள்வாங்கிக் கொள்ளப்படவேண்டும். பின்னூட்டல்களை உள்வாங்கி அதன் அடிப்படையில் தங்கள் முயற்சிகளை செப்பனிடத் தயங்குகின்ற எந்தவொரு படைப்பாளியும், தனிமனிதனும், நிறுவனமும்.. ஓர் குறிப்பிட்ட அளவுக்குமேல் வளர்ச்சிபெற முடியாது.

அதேசமயம், தங்கள் தனிப்பட்ட விறுப்பு, வெறுப்புக்களை காட்டாது, எதையும் சொல்லலாம் என்கின்ற மமதையில் இல்லாது, குறிப்பிட்ட படைப்பாளியை - ஜீவனை - அல்லது ஜீவன்களை - அவர்தம் ஆற்றலை - ஆற்றல்களை ஒட்டநறுக்குவதுபோல் அல்லாது பொறுப்புணர்வுடன் விமர்சனம் செய்யப்பட வேண்டும்.

தொடர்ந்து நாங்கள் எல்லோரும் ஓர் குழுவாக இயங்கி.. ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவோம். எனது விமர்சனங்கள், கருத்துக்களிலும் பலப்பல தவறுகள், குறைகள் இருக்கலாம். அவற்றை நானும் திருத்திக்கொள்ள முயற்சிக்கின்றேன்.

நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.