Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழ ஏதிலிகளுக்கு இந்தியக் குடியுரிமை தேவையா? – பொன்னிலா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ ஏதிலிகளுக்கு இந்தியக் குடியுரிமை தேவையா? – பொன்னிலா

கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா தமிழகக் கட்சிகளுக்குமே ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம். ஆனால் என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை. ஏதாவது செய்து அதைச் சொல்லி உலகத் தமிழர்களிடம் இழந்த மதிப்பை மீண்டும் தூக்கி நிறுத்திவிடலாம் என்கிற உத்வேகத்தில் உதித்த ஐடியாதான் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் யோசனை.

திமுக நடத்திய அறிஞர் அண்ணாதுறை நூற்றாண்டு விழா மாநாட்டில் ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. டில்லிக்கும் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் முதலில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியா நிரந்தரக் குடியுரிமை கொடுக்குமா? அப்படிக் கொடுத்தால் பர்மா, திபெத், வங்கம், போன்ற நாடுகளில் இருந்து வந்து காலம் காலமாக இருக்கும் அகதிகளுக்கும் குடியுரிமை உண்டா? அவ்வாறு குடியுரிமை வழங்கும் பட்சத்தில் அது என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும். என்கிற எந்த பின்விளைவுகளைப் பற்றியும் யோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பதோடு, மத்திய அரசின் நூறு சதவீத ஈழ விரோத போக்கை மறந்தும் விடுக்கப்பட்ட கோரிக்கை என்றே தெரிகிறது.

எண்பதுகளின் ஜூலைக் கலவரங்களைத் தொடர்ந்து தமிழகத்திற்கு அகதிகள் வரத்துவங்கினர். கடந்த முப்பதாண்டுகளில் பல் வேறு காலக்கட்டங்களில் ஈழ அகதிகள் மண்டபம் வழியாக வந்த வண்ணமே இருந்தனர். ராஜீவ்கொலைக்குப் பிறகு ஈழ அகதிகளை வரவேற்பதில் மத்திய,மாநில அரசுகள் தயக்கம் காட்டின, புலிகள் ஊடுறுவார்கள் என்கிற ஒரு பூச்சாண்டி காரணமாக ஈழ அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் ஏராளமான தடைகளை ஏற்படுத்தியதோடு, கடல் எல்லையை வலுப்படுத்தியதன் மூலம் கண்காணிப்பின் மூலம் ஈழ மக்களை வடிகட்டினார்கள் மத்திய மாநில ஆட்சியாளர்கள். இதில் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இருவருமே ஒருப்போலவே நடந்து கொண்டனர். எண்பதுகளின் தொடங்கி இன்று வரை சுமார் (கடந்த ஆண்டு செப்டம்பர் மாத முடிவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி தமிழ் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 73 ஆயிரத்து 378 இலங்கை அகதிகள் வசிக்கிறார்கள் ) ஆனால் முகாமுக்குள்ளும் வெளியிலுமாக இரண்டு லட்சம் அகதிக் குடும்பங்கள் வாழ்வதாக தெரிகிறது. இவர்களை எப்படியாவது தமிழகத்தை விட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதில் இந்தியா முனைப்பு காட்டத் துவங்கியுள்ளது. மத்திய அரசின் கொள்கை இலங்கை அகதிகள் விவாகரத்தில் இப்படி இருக்க மாநில அரசோ, கட்டாயப்படுத்தி யாரையும் திருப்பி அனுப்பக் கூடாது என்றது. ஈழ அகதிகளை திருப்பி அனுப்பும் முயர்ச்சி 1992‐ல் ஒருமுறை முன்னெடுக்கப்பட்ட போது ராமதாசும், நெடுமாறனும் நீதிமன்றத்திற்குப் போய் தடையாணை பெற்றார்கள். தவிறவும் தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயர்ச்சி அப்போது கைவிடப்பட்டது. ஆனால் இப்போது இலங்கையில் போர் முடிந்து விட்டதாகவும் அங்கு சுமூகச் சூழல் நிலவுவதாகவும் இலங்கையின் குரலையே இந்தியாவும் பிரதிபலிக்கிறது. அதையே தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் மீது திணிக்கவும் பார்க்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அகதிகளை திருப்பி அனுப்பும் கொள்கை முடிவை எடுத்து பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில், மத்திய அரசின் விருப்பத்திற்கு நேர் எதிராக மாநில அரசு, அல்லது ஆளும் கட்சியான திமுக ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வேண்டும் என்று கோருகிறது.

ஒன்றிலோ அவர்களை இராணுவச் சர்வாதிகார இலங்கைக்கு திருப்பி அனுப்புவது, அல்லது அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுத்து இலங்கை பிரஜாஉரிமையைப் பறிப்பது. அகதி வாழ்வின் மிக மோசமான விளிம்புக்கு ஈழ அகதிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.பே

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில் இங்கிருக்கும் அகதிகளுக்கும் இந்தியா குடியுரிமை கொடுத்தால் ஒட்டு மொத்தமாக தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் கூட கிடைப்பதாக இருக்கும் பாராளுமன்ற அதிகாரத்தைக் கூட ஈழ மக்கள் இழக்க நேரிடும்.

கனடா, ஐரோப்பா, அவுஸ்திரெலியா போன்ற நாடுகளில் இருக்கும் எம்மவர்களில் 99 வீதமானவர்கள் சிறிலங்காவுக்கு திரும்பிப் போகமாட்டார்கள்.

அகதி தஞ்சம் மறுக்கப்பட்டவர்களே திருப்பி அனுப்பப்படுவார்கள். இதே போல இந்தியாவில் இருப்பவர்களில் சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சனை தீராமல் தேவையின்றிப் போகமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக திருமாவளவன் தான் வைத்ததாக குமுதம் முச்சந்தி செய்திகள் சொல்கிறது.

சரி அதை விடுங்க நான் முக்கிய விஷயத்துக்கு வர்றேன். நம்ப இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இருக்காரே. அந்தாளு தமிழர்தானான்னு ஒரு கேள்வி. புதுசா வந்த மனுஷன் கொஞ்சம் ஆதரவா நடந்துக்குவாருன்னு பார்த்தா ஏதேதோ பேசி சிக்கல்ல மாட்டியிருக்காரு. பிரபாகரன் பற்றி ஏதும் தெரியாது. ஆனால் அவர் இல்லை. இந்திய அரசாங்கம் கேட்ட அவரோட இறப்பு சான்றிதழ் கொடுப்பார்கள், ஆனால் கொடுக்க முடியாதுன்னு குண்டக்க மண்டக்க பேட்டி தர்றாரு. அங்கன இருக்குற அகதிமுகாம் தமிழர்களை பார்க்க ஒரு குழுவை அழைச்சிகிட்டு போவீங்களான்னு கேட்டா அது என்ன விலங்கியல் பூங்காவான்னு நக்கல் பண்ணியிருக்காரு. கேட்டதும் நம்ம தலைவருங்க டென்ஷனாயிட்டாங்க. மவனே காமெடி கீமெடி பண்ணிட்டிருக்கியா?ன்னு ஆளாளுக்கு காய்ச்சி எடுக்கத் தொடங்கிட்டாய்ங்க. வைகோ, பழ.நெடுமாறன், ராமதாஸ், திருமா, டாக்டர்.கிருஷ்ணசாமின்னு பெரும் பட்டாளமே அந்த புதிய தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி மேல பாய்ஞ்சிருக்காங்க. இப்போ...ஐயோ நான் அப்படி சொல்லவே இல்லைன்னு கதறிகிட்டிருக்காராம் வடிவேலு. ஆனாலும் அவருக்கு எதிரான எதிர்ப்பு குரலும் போராட்டமும் நின்ன பாடில்லை. உடனடியா அவரை வெளியேத்தணும்னு ஒத்தைக் காலில் நிக்குறாங்க. எப்படி சமாளிக்குறதுன்னு தெரியாம தவிக்குறாராம்" என்றார் சுவருமுட்டி.

"ஒண்ணும் பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க. நம்ப தமிழ் தலைவருங்க எல்லாம் சும்மா வாய் சவடால்தான். ரெண்டு நாளைக்கு கத்திட்டு போய்டுவாங்க. அதுக்கு மேல ஒண்ணும் செய்யமாட்டாங்க. அப்படியும் விடாம போராடினா நம்ப சென்ட்ரல் கவர்மெண்ட் இருக்கு காப்பாத்த. அதுவும் இல்லேன்னா நம்ப தமிழின தலைவர் இருக்காரு. விட்டுக்கொடுக்கமாட்டாரு. இதுக்கே இம்புட்டு குதிக்கிற நம்ப தலைவருங்க மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை என்ன செய்யப்-போறாங்களாம்? சினிமாவுல விஜயகாந்த் புள்ளி விபரத்தோட சொல்ற மாதிரி கடந்த ஆறேழு மாதமா சிங்கள கடற்படை தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு ஏதும் நடத்தலை அப்டீன்னு சொல்லியிருக்காரே. என்ன அர்த்தமாம்? அப்புறம் எதுக்கு முதல்வர் கலைஞர் மத்திய அரசுக்கு மீனவர்கள் தாக்குதல் குறித்து கடிதம் எழுதிகிட்டு இருந்தாராம்? அப்டீன்னா கலைஞரை சேர்த்தும் சிதம்பரம் கிண்டல் செய்யுறாரா. என்னப்பா அநியாயம் இது. நடுக்கடலில், அதுவும் இந்திய எல்லைக்குள்ளவே வந்த சிங்கள கடல் சிப்பாய்ங்க, நம்ப தமிழக மீனவர்களை புடிச்சு அம்மணமாக்கி அடிச்சு உதைச்சிருக்கானுங்க. அது என்னாவாம். சுட்டாதான் கேவலமா. கோவணம்கூட இல்லாம அவமானப்படுத்தினானே. அதுக்கு என்ன பண்றதாம்! நம்ப தமிழினத் தலைவரான முதல்வரு இதுக்கு என்ன சொல்லப்போறாரு?" என்று காய்ச்சினார், கோட்டை கோபாலு.

"அட விடுப்பா. இதுக்குபோய் டென்ஷன் ஆகலாமா? என்ன நடந்துடுச்சு. யார் அவமானப்பட்டா என்ன? நமக்கு சென்ட்ரல்ல கேட்ட பதவி கிடைச்சா சரிதானே. மொத்த தமிழனோட மானமே அதுலதான அடங்கியிருக்கு. கலைஞருக்கு சாதகமா சென்ட்ரல்ல காரியம் நடந்துகிட்டு இருக்கிற வரைக்கும், சிங்களவன் நம்ப மீனவர்களை கோவணம் கட்டி ஊர்வலமே நடத்தி காட்டினாலும் கவலைப்படமாட்டாரு. கேட்டது கிடைக்கலன்னாதான் ஐயகோ, உடன் பிறப்பேன்னு இனமானத்தை பத்தி பேசுவாரு. இன்னொரு விஷயத்தை சொல்றன் கேளு. நம்ப திமுக- காங்கிர எம்.பி.ங்க எல்லாம் டெல்லிக்கு போனாங்க. இலங்கையில் இருக்குற அகதி முகாம்களில் இருக்குற ஈழத்தமிழ் மக்களை உடனே விடுவிச்சு, அவிங்களோட பழைய இடத்துக்கே அனுப்பி வைக்கணும்னு கோரிக்கையை வச்சிருக்காங்க. பிரதமரும், அன்னை சோனியாவும், ஆகட்டும் செய்துட்டா போச்சுன்னு உத்திரவாதம் கொடுத்திருக்காங்க. ஏன்யா...இதுக்கு முன்னாடி பல தடவை டெல்லிக்கு போய் நின்னீங்க. அப்பாவி தமிழ் மக்கள் மீது குண்டுவீச்சு நடத்தகூடாது. உடனடி போர் நிறுத்தத்துக்கு வழிசெய்யுங்கன்னு எத்தனை முறை கதறி கோரிக்கை வச்சீங்க. அப்போவெல்லாம் செய்யாத பிரதமரு இப்போ மட்டும் எப்படி செய்யப் போறாருன்னு கேட்டா அது வேற, இது வேறன்னு டபாக்கிறாய்ங்க. நல்ல தமாஷ் பண்றாங்கப்பா" என்று நக்கலடித்த சுவருமுட்டியை முந்திகொண்டு "எம்பா சுவருமுட்டி. இங்கன இருக்கிற இலங்கை அகதிகளுக்கு எல்லாம் இந்திய குடியுரிமை வேணும்னு வேற கேட்டிருக்காரே தலைவரு. எம்புட்டு அக்கறை பார்த்தீயா?" என்று மேலும் வாயை கிளறினார்.

"இதுதான் வேண்டாம்ங்கிறது. சும்மா ஏதாவது கேட்டு என்னைய உசுப்பேத்துவீங்க. நான் மனசுல பட்டதை சொல்லுவேன். அப்புறம் என்னைய வம்புல மாட்டிவிட்டுட்டு நீங்கபாட்டுக்க கிளம்பிடுவீங்க. முதல்ல நம்ப ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமைங்கிறது இருக்கட்டும். இந்திய நாட்டுல திபெத், சீனா, பாகிஸ்தான், பர்மா அகதிகள் என நிறையபேரு இருக்காங்க. அவிங்க யாரையும் சிறப்பு முகாம்னு சொல்லி தனியா பிரிச்சு பல வருஷமா உள்ள வைக்கல. ஆனா ஈழத்தமிழ் அகதிகளை மட்டும் அப்படி செங்கல்பட்டு முகாமில் வச்சிருக்காங்க. அதுவும் ரொம்ப வருஷமா. எந்த மீடியாவும் பார்க்க அனுமதி கிடையாது. மற்ற ஆதரவு இயக்க தலைவர்களையும் உள்ளே விடுறதில்லே. வெளியில இருக்கிற மற்ற அகதிகள் நிலைமையும் மோசமாதான் இருக்கு. நம்ப தமிழின தலைவரு, முதலில் இதை சரி பண்ணட்டும். பிறகு டெல்லிகிட்ட இந்திய குடியுரிமை பூவை காதுல சுத்தத்ட்டும். கேழ்வரகுல எண்ணெய் வடியுற கதைன்னு சொல்வாங்களே. இதுதான் அது. திடீர்னு இலங்ககை தமிழ் அகதிகள்மேல அக்கறை வந்திருக்கிற மாதிரி, அதை அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவுல தி.மு.க-வின் தீர்மானமா வேற போடுறாரு. மகள் கனிமொழிக்கு எம்.பி. சீட்டுக்கு எந்த தீர்மானம் போட்டாரு? மகன் அழகிரிக்கு மத்திய மந்திரி பதவி வாங்க எந்த தீர்மானத்தை போட்டாரு? இன்னொரு மகனுக்கு துணை முதல்வர் பதவிக்கு எந்த தீர்மானத்தை போட்டாரு? சத்தமில்லாம குடும்பத்துக்குள்ள பேசி பட்டுன்னு நடத்தி காட்டிடலையா? அந்த மாதிரி மாநில அதிகாரத்தை வச்சிருக்கிற கலைஞர் உடனே முகாம்களில் இருக்கிற இலங்கை அகதிகளுக்கு செய்ய வேண்டியதை தாராளமா செய்யலாமே. யாரு தடுப்பாங்க. எந்தவித விசாரணையும் இல்லாம சிறப்பு முகாம்ங்கிற ஸ்பெஷல் ஜெயிலில் வச்சிருக்கிற அகதிகளையும் சாதாரண முகாமுக்கு மாற்றலாமே. ஏன் செய்யல? ஆக, ஆகாத வேலைக்குத்தான் தீர்மானம் போடுவாரு"போட்டுத் தாக்கினார் சுவருமுட்டி.

"என்னப்பா இப்படி சொல்றே. கலைஞர் கேட்ட இந்திய குடியுரிமை பற்றி சென்ட்ரல் கவர்மெண்ட் ரொம்ப அக்கறை எடுத்துகிட்டிருக்காமே. கூடிய சீக்கிரத்தில் அதைச் செய்யுறதா சொல்றாங்களே.நம்ப சென்ட்ரல் மினிஸ்டர் ப.சிதம்பரம் கூட நடக்கும்னு சொல்லிட்டு போறாரே. கலைஞரோட முயற்சியை நீ ரொம்பதான் நக்கல் பண்ற. இது நல்லதில்லே" கோட்டை கோபாலு.

"வேண்டாம்யா. உள்ளதைச் சொல்றன். திரும்பவும் என் வாயை புடுங்கற. ஒரு விஷயத்தை சொல்லட்டுமா. கேட்டா அப்படியான்னு சொல்வே. நம்ப தமிழ் எம்.பி.ங்க எல்லாம் டெல்லிக்கு போனாங்க இல்ல. பிரதமரை சந்திக்குற அந்த நிகழ்ச்சியில திருமாவளவன் கலந்துக்க முடியல. தாமதமா போயிருக்காரு. அதுக்கு பிறகு சோனியாவை சந்திச்சப்போதான் திருமா கலந்துகிட்டாரு. அந்த நேரத்துல தமிழ்நாட்டுல இருக்கிற இலங்கை அகதிகள் எல்லாம் பல வருஷமா இங்கன இருக்காங்க. அவிங்களுக்கு இந்திய குடியுரிமை வேணும்னு கேட்டதோட, தமிழ்நாட்டுல இருக்கிற அகதிகள் முகாம் நிலையை பற்றியும் எடுத்துச் சொன்னாராம். கவனமா கேட்ட சோனியா அப்படியான்னு ஆச்சர்யப்பட்டு இந்த விஷயத்தை பிரதமர்கிட்ட சொன்னீங்களான்னு கேட்டிருக்காரு. "இல்லீங்கம்மா. நான் லேட்டா வந்தேன்னாரு திருமா. போய் பிரதமர்கிட்ட சொல்லுங்கன்னு முடிவா சொன்னாரு. அந்த நேரத்துல கூட இருந்த டி.ஆர். பாலுகிட்ட திருமா பேசியிருக்காரு. அப்புறம் கூட்டா சேர்ந்து பிரதமர்கிட்ட பேசியிருக்காங்க. அந்த சம்பவம் பத்தின தகவல் அப்படியே தமிழின தலைவருக்கு வந்தது. ஆகா நடந்துடும் போலிருக்கே. அந்த அம்மா சோனியா இம்புட்டு விவரமா காதுகொடுத்து கேட்டிருக்கே. விடக்கூடாதுன்னு ப்ளான் பண்ணாரு. உடனே நடந்த அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தீர்மானம் போட்டு அவரு கையில எடுத்கிட்டாரு. இந்த விஷயத்தை ஒரு காங்கிரஸ் கட்சி வி.ஐ.பி.தான் எதார்த்தமா சொன்னாருப்பா" என்றார், சுவருமுட்டி

"ங்கொய்யால.. இம்புட்டு விஷயம் இருக்கா. அதான பார்த்தேன். ஏன்னா இத்தனை வருஷமா கலைஞர் தமிழ் நாட்டுலதான இருக்காரு. முதல்வராகி மூன்று வருஷமாகுது. இம்புட்டு நாளும் தோணாத இந்த உணர்வு திடீர்னு எப்படி வந்துடிச்சின்னு அப்பவே சந்தேகப்பட்டேன்" என்ற ஆட்டோ அன்வர்பாய், "இப்போ அதுலேயும் ஒரு சிக்கல் இருக்காமே. மத்திய அதிகாரிங்க சிலபேரு அந்த மாதிரி இந்திய குடியுரிமை கொடுக்க முடியாது. நிறைய சிக்கல்கள் இருக்குதுன்னு சொல்றாங்களாம். இலங்கை தமிழ் அதிகளுக்கு மட்டும் அப்படி கொடுத்துட்டா மற்ற நாட்டுல இருந்து வந்த அகதிகளுக்கும் கொடுக்க வேண்டியிருக்கும்.அவங்களும் கோரிக்கை வைப்பாங்க. பாகிஸ்தான் அகதிகள் என்றால் இளப்பமா என்று முஸ்லீம் அமைப்புகள் குரல் கொடுக்கும்.இப்படியே ஒவ்வொரு நாட்டு அகதிகளுக்கும் ஆதரவா எல்லாரும் வந்துடுவாங்க. அதனால குடியுரிமை கொடுக்குறது சிக்கலான விஷயம்தான்னு அடிச்சு சொல்றாய்ங்க. ஆனாலும் கலைஞர் கேட்கிறாரு. ப.சிதம்பரமும் சொல்றாருன்னு சும்மா கேட்டிகிட்டிருக்கு சென்ட்ரல்! கேட்டாக்கா உடனே செய்துடவா போறாங்க. அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா.." என்று கலாய்த்ததோடு, "இன்னொரு சங்கதியும் இதுல இருக்குப்பா... இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க கூடாது. அப்படி செய்தா அது அவர்களுக்கு பாதிப்பாதான் போய் முடியும். பிறகு இலங்கையில் இருக்கிற அவர்களின் சொத்து சுகம், உரிமைன்னு எல்லாத்தையும் அப்படியே விட்டுட வேண்டியதுதான்ங்கிற எதிர்ப்பு குரலும் கிளம்பியிருக்கு. காங்கிரஸ் கட்சி எம்.பி.யான சுதர்சனம் நாச்சியப்பன் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்காரு. வெளிநாட்டுல இருக்கிற தமிழர்கள் எல்லாம் இலங்கைக்கு போகணும். குறைந்த பட்சம் வீட்டுக்கு ஒருவராவது போகணும்.அங்க போய் அவர்களின் பூர்வீக சொத்து இருக்கிற இடத்துல உட்காரணும். எங்கட நிலம், பூமி இந்த இடத்துல இருக்கு அதை திருப்பி கொடுன்னு கேட்கணும். அப்பதான் ராஜபக்சேவுக்கு உண்மயான நெருக்கடி வரும். அப்படி செய்யாம போனா இலங்கை அரசுக்குதான் ரெட்டை சந்தோஷம் வரும். நம்ப தமிழனோட நிலத்தை எல்லாம் எடுத்து சிங்களவனுக்கு கொடுத்துடுவான். நம்ப பூர்வீக இடத்துல சிங்கள குடியிருப்பை கொண்டு வந்துடுவான்னு சொல்றாரு..." என்றார்.

"என்னப்பா இது விளையாட்டு விஷயமா என்ன. இருக்கிறவன் உயிருக்கே உத்ரவாதம் இல்லேன்னுதான் இப்படி அகதியா வெளிநாட்டுக்கு ஓடிவந்திருக்காங்க.அவிங்கள போய் நீங்க உங்க சொந்த இடத்துக்கு போங்கன்னு சொல்றது சரிப்படுமா?"-சித்தன்.

"அதைத்தான் நான் கேட்டேன். அதுக்கு அந்த காங்கிரஸ் எம்.பி. என்ன சொல்றாரு தெரியுமா?அதையே மத்திய மாநில அரசுகிட்ட கோரிக்கையைா சொல்லுங்க. உலக நாட்டுக்கு கோரிக்கையைா சொல்லுங்க. நாங்க இத்தனை ஆயிரம் பேர் சொந்த நாட்டுக்கு போகிறோம். அனைவருமே அப்பாவி மக்கள்தான். எங்கள் மீது புலி முத்திரை ஏதும் குத்தகூடாது. எந்தவித ஆயுதத்தையும் எடுத்துகிட்டு போகல. எங்க பேரில் எந்தவித பொய் வழக்கையும் பதிவு பண்ணக்கூடாது. எங்க சொந்த இடத்துல சுதந்திரமா இருக்க எல்லாவித உத்ரவாதமும் கொடுக்கணும்னு சொல்லுங்க. இந்தியாவையும் உலக நாடுகளையும் அப்படி நிர்பந்தம் பண்ணுங்க. அழுத்தம் கொடுங்க. அதுக்கு எந்த நாடும் முடியாதுன்னு மறுக்காதே. அது மனித உரிமை பிரச்னை அல்லவா. கட்டாயம் ஒத்துழைக்கும். அந்தமாதிரி ஒத்துழைப்போட போகும்போது அங்க சிங்கள அரசு ஏதாவது தொந்தரவு செய்தா, அப்போது இந்த நாடுகள் எல்லாம் தலையிட்டு தட்டி கேட்க தயங்காதே. ஏன் அதை செய்ய மறுக்கிறீர்கள்னு சொல்றாரு" என்றார்.

"என்னமோப்பா, அவிங்களை வச்சி காமெடி ஏதும் பண்ணாம இருந்தா சரிதான்" என்ற சுவருமுட்டி

-குமுதம் முச்சந்தி

கந்தப்பு குமுதத்தின் சிண்டு முடியிற வேலையைப் பார்த்து ரொம்பத்தான் சந்தோசப்படுறீங்க போல. ஆனால் திருமாவளவனின் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ரவிக்குமார் விகடனில் என்ன சொல்லியிருக்கின்றார் என்பதையும் கொஞ்சம் பாருங்க. - வசம்பு

குடிமக்கள் ஆவார்களா அகதிகள் ? - எம்.எல்.ஏ.ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)

''கண்ணீர்த் துளிகள் சிறைக்கூடங்களாகமாறியது எப்படி என்பதை அகதிகளிடம்... கேள்!'' என்று ஈழத்துக் கவிஞர் சேரன் கவிதை ஒன்றில் குறிப்பிட் டிருப்பார். ஈழத் தமிழர்கள் மனம் விரும்பி அகதிகளானவர்கள் இல்லை. சொந்தங்கள் அகாலத்தில் கொலையுண்டபோது, தஞ்சம் அடைந்த நாட்டிலும் அவர்களுக்கு நிம்மதியில்லை. இந்திய அரசின் பாராமுகத்தாலும், பாரபட்சத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இப்போது சற்றே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இருளடர்ந்து போயிருக்கும் அவர்களின் வாழ்வில் சிறு தீபத்தை ஏற்றியிருக்கிறது. தி.மு.க. நடத்திய அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் ஈழத் தமிழ் அகதிகளைப் பற்றிப் பேசியிருந்தது. ''1984-ம் ஆண்டு முதலே தமிழகத்துக்கு அகதிகளாக வந்த தமிழர்கள் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, தமிழகத்தில் 115 முகாம் களில் மொத்தம் 73,572 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியிருக்கின்றனர். இஃதன்னியில் அகதிகளாக வந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்காமல் வெளியே பல்வேறு இடங்களில் அவரவர்களது சொந்தப் பொறுப்பில் தங்கியிருக்கின்றனர். ஆக, மொத்தமாக ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமிழகத் திலேயே தற்சமயம் அகதிகளாக உள்ளனர்...'' என்று குறிப் பிட்டுள்ள அந்தத் தீர்மானம், ''தமிழ் அகதிகளை இந்திய குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின் கீழ் மறு குடியமர்த்தும் முயற்சியாக மத்திய அரசோடு கலந்து பேசி அவர்கள் தமிழகத்திலேயே நிரந்தரமாகக் குடியிருக்க வழிவகை செய்து தரவேண்டுமென்றும், அவர்கள் தங்குவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்துக்குமான ஏற்பாடுகளை யும் செய்து தரவேண்டும்...'' என்றும் வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதில் ஆனந்த விகடனில் (18.06.2006) ஈழ அகதிகள் குறித்துக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டுத் தமிழக முதல்வர் அவர்கள் விடிகாலையிலேயே என்னைத் தொலைபேசியில் அழைத்து, தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம் களுக்குச் சென்று பார்வையிட்டு, அறிக்கையன்றைத் தரும்படி எனக்கு ஆணையிட்டார்கள். நானும் பல்வேறு முகாம்களைப் பார்வையிட்டு 04.07.2006 அன்று முதல்வரிடம் ஈழத் தமிழ் அகதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தேன். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முதல்வர், உடனடியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். தமிழ் அகதிகளுக்கு அது வரை மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த பணக்கொடை மிகமிகக் குறைவாக உள்ளது என்பதை அறிக்கையில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். ஒரு குடும்பத்தின் தலைவருக்கு மாதம் ஒன்றுக்கு 200 ரூபாய், குடும்பத் திலுள்ள வயது வந்த பிற உறுப்பினர்களுக்கு 144 ரூபாய், முதல் குழந்தைக்கு 90 ரூபாய், அடுத்தடுத்த குழந்தைகளுக்கு 45 ரூபாய் என்றுதான் பணக்கொடை மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் குறைவு என்பதை உணர்ந்த முதல்வர் உடனடியாக மாநில அரசின் சார்பில் அதே அளவு தொகையைச் சேர்த்து அந்த பணக்கொடையை இரு மடங்காக உயர்த்தி ஆணையிட்டார்கள். அது மட்டுமின்றி, அகதி முகாம்களின் நிலைமைகளைச் சீர்படுத்திட பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதல்வர் ஆணையிட்டார்.

முதல்வர் கலைஞரிடம் நான் சமர்ப்பித்த அறிக்கையில், மாநில அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளாக 28 கோரிக்கைகளையும், மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டியவையென்று ஐந்து கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தேன். 33 பரிந்துரைகள் அடங்கிய எனது அறிக்கையில் 32-வது பரிந்துரையாக ஒன்றைக் குறிப்பிட்டிருந்தேன். ''இந்தியாவில் பிறந்த அகதிக் குழந்தைகள், இந்தியர்களைத் திருமணம் புரிந்துகொண்ட அகதிகள், இந்தியாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கும் அகதிகள் ஆகியோரிடம் அவர்களது குடியுரிமை தொடர்பாக விருப்பத்தேர்வினைக் கேட்கும் விதமாக இந்தியக் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்!'' என்று நான் வேண்டியிருந்தேன். இதற்காக மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டிருந்தேன்.

''இந்திய குடியுரிமை சட்டம் 1955-ன் பிரிவு 3-ன்படி இந்தியாவில் பிறக்கும் எந்தவொரு குழந்தையும் இந்திய பிரஜையாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால், 1986-ம் ஆண்டில் அந்தப் பிரிவு திருத்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் 1986-ன்படி அது நடைமுறைக்கு வந்த 1987 ஜூலை முதல் தேதிக்குப் பிறகு இந்தியாவில் பிறக்கும் எந்தவொரு குழந்தையும் அதன் பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்தால் தான் அந்த குழந்தைக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். ஆனால், இந்த விதியும்கூட இங்கு பின்பற்றப்படவில்லை. அகதி ஒருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவரைத் திருமணம் புரிந்து அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் இந்திய பிரஜை களுமாகவும் இல்லாமல், அகதி என்ற பதிவும் இல்லாமல் இரண்டும்கெட்டான் நிலையில் தவிக் கின்றன. இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும்கூட இந்தியக் குடியுரிமை - இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ள இன்றைய சூழலுக்கேற்ப குடியுரிமை சட்டத்தைத் திருத்தி 10 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் தொடர்ச்சியாக வாழும் அகதிகளிடத்தே விருப்பத் தேர்வினைக் கேட்டு அவர்கள் விரும்பினால், இந்திய குடியுரிமையைத் தேர்ந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். அது போலவே, இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு முன்பிருந்தது போல குடியுரிமை அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும்...'' என்றும் நான் அந்த அறிக்கையில் வேண்டியிருந்தேன்.

முதல்வரிடம் வழங்கிய அறிக்கையில் நான் முன்வைத்திருந்த கோரிக்கைகள் பலவும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. குடியுரிமை தொடர்பான எனது கோரிக்கையும் இன்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அது தொடர்பாக வலியுறுத்துவதற்கு தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கையில் வதை முகாம்கள் என்று சொல்லப்படத் தக்க நிலையில் மூன்று லட்சம் தமிழர்களைத் திறந்தவெளி சிறைச் சாலைகளில் அடைத்து வைத்து சிங்கள அரசு கொடுமை செய்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், அது குறித்து உலக நாடுகள் பலவும் ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளும் கவலையும், கண்டனமும் தெரிவித்து வருகின்றன. இந்தத் தருணத்தில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்காக முதல்வர் மேற் கொண்டுள்ள இந்த முயற்சி வரலாற்றில் என்றும் நிலைபெற்றிருக்கும்.

இந்தியாவுக்கு அகதிகள் வருவது இன்று, நேற்று நடப்பதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஈரானைச் சேர்ந்த ஸோராஷ்ட்டியர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அங்கிருந்து அகதிகளாக வெளியேறி இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் குஜராத்தில் வந்து தஞ்சமடைந்தார்கள். அவர்கள்தான் தற்போது பார்ஸிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இப்போதோ சீனா, நேபாளம், இலங்கை, மியான்மர், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு கடந்த ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 4 லட்சத்து 20 ஆயிரத்து 400 அகதிகள் உள்ளனர். அதில் திபெத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர். ஈழத் தமிழர்கள் ஒரு லட்சத்து 2 இரண்டாயிரத்து 300 பேர், மியான்மரிலிருந்து அகதிகளாக வந்து மிசோராம் மாநிலத்தில் தங்கியிருப்பவர்கள் 75 ஆயிரம் பேர். நேபாளத்திலிருந்து வந்திருக்கும் அகதிகள் 50 ஆயிரம் பேர். பங்களாதேஷிலிருந்து அகதிகளாக வெளியேறி இங்கு வந்திருப்பவர்கள் 35 ஆயிரத்து 900 பேர். ஆப்கானிஸ்தானிலிருந்து 31 ஆயிரத்து 200 பேர், பூட்டானிலிருந்து வந்திருப்பவர்கள் 15 ஆயிரம் பேர்.

இப்படி பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள அகதிகளை அணுகுவதில் இந்திய அரசு ஒரே விதமாக நடந்துகொள்ளவில்லை என்பது வேதனையளிக்கும் உண்மை. திபெத்திலிருந்து அகதிகளாக வந்திருப்பவர்களுக்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் கொடுத்து வருகிறது. ஏறத்தாழ அவர்கள் இந்தியக் குடிமக்களாகவே நடத்தப் படுகிறார்கள். நேபாளத்திலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கும் இங்கே எந்த விதத் தடையும் கிடையாது. ஆப்கானிஸ்தானிலிருந்து அகதி களாக வந்திருப்பவர்களுக்கு மத்திய அரசு விசேஷ சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. அவர்கள் இங்கு 12 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாகத் தங்கியிருந்தால் இந்திய குடியுரிமைக்காக அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்பீட்டளவில் பார்த்தால் ஈழத் தமிழ் அகதிகள்தான் இந்திய அரசால் மிகவும் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். தமிழக அரசின் இப்போதைய முயற்சியால் அந்த நிலை மாற்றப்படவேண்டும்.

காஞ்சிபுரம் மாநாட்டுத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது போல் ஈழத் தமிழ் அகதிகள் எல்லோரும் தமிழகத்திலேயே நிரந்தரமாகக் குடியிருக்க வழிவகை செய்யப்பட வேண்டு மென்றால், இந்திய குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். ஏற்கெனவே பங்களாதேஷ் அகதிகள் குறித்த ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நமது உச்ச நீதிமன்றம், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அகதிகளின் குடியுரிமை குறித்து ஒட்டுமொத்தமாக அரசு முடிவெடுப்பது சரியல்ல என்ற பொருள்படப் பேசியிருப்பது கவனிக்கத் தக்கதாகும். இங்குள்ள ஈழத் தமிழ் அகதிகள் இங்கேயே நிரந்தரமாகத் தங்க வைக்கப்பட வேண்டுமென்றால் ஒவ்வொருவரையும் தனித்தனியே விண்ணப் பிக்கச் செய்து அவர்களுக்குக் குடியுரிமை கொடுக்க வகை செய்யவேண்டும். அதற்கேற்ப இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தான் அகதிகள் விஷயத்தில் மத்திய அரசு மேற் கொண்டுள்ள நடவடிக்கையை நாம் இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்துவதோடு மட்டுமின்றி, மேலும் சில அழுத்தங்களை மத்திய அரசுக்குத் தமிழக அரசு கொடுக்கவேண்டும். அகதிகள் தொடர்பாக ஐ.நா. சபை 1951 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தங்களில் இந்தியா இது வரை கையெழுத்திடவில்லை. அவற்றில் கையெழுத்திடுமாறு இந்திய அரசைத் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு. பி.என்.பகவதி அவர்களால் 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'அகதிகள் குறித்த தேசிய சட்டத்தை' உடனே நிறைவேற்ற வேண்டுமெனவும்; அகதிகளுக்கான ஐ.நா. சபையின் அமைப்பான யு.என்.ஹெச்.சி.ஆர். இந்தியாவில் சட்டபூர்வமாக செயல்பட அனுமதிக்க வேண்டுமெனவும் மத்திய அரசை முதல்வர் வலியுறுத்த வேண்டும்.

மத்திய அரசிடம் குடியுரிமை உள்ளிட்ட விஷயங்களுக்காக தமிழக அரசு வலியுறுத்துவது சரியானதுதான். ஏனென்றால், அது மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விஷயமாகும். ஆனால், இங்குள்ள அகதிகளுக்கு கௌரவமான வீடுகளைக் கட்டித் தருவது தமிழக அரசின் அதிகார வரம்புக்கும், சக்திக்கும் உட்பட்ட விஷயமாகும். அது போலவே, இங்குள்ள அகதிகள் சுதந்திரமாக நடமாடவும், சொந்தமாகத் தொழில் செய்ய வும், இங்கே அவர்கள் சொத்துகளை வாங்க அனுமதிப்பதும்கூட மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதுதான். ஏற்கெனவே, ஈழத் தமிழ் அகதிகளுக்கு எண்ணற்ற நன்மைகளைப் புரிந்து வருகின்ற தமிழக முதல்வர், அவர்களுக்கு இத்தகைய வசதி களையும் ஏற்படுத்தித் தந்து தாய்த் தமிழகத்தின் இதயத்தில் ஈரம் வற்றிவிடவில்லை என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். இதை அவர் மட்டுமே செய்ய முடியும்!

நன்றி விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.