Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தெட்ட தெளிவான யுத்தம். போரின் இரு புறத்திலும் அவரவர் தமக்கே உரிய ஆயுதங்களை தேர்வு செய்து கொள்கின்றனர் ‐ அருந்ததி ராய் டெஹல்காவின் ஷோமா சௌத்ரிக்கு வழங்கிய நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது தெட்ட தெளிவான யுத்தம். போரின் இரு புறத்திலும் அவரவர் தமக்கே உரிய ஆயுதங்களை தேர்வு செய்து கொள்கின்றனர் ‐ அருந்ததி ராய் டெஹல்காவின் ஷோமா சௌத்ரிக்கு வழங்கிய நேர்காணல்

05 November 09 11:24 am (BST)

arundhatiroybyjohnohara.jpg

ஷோமா: நாடு முழுவதும் வன்முறை வளர்ந்த வண்ணம் இருப்பதைக் காணும் இச்சூழலில், அந்த அடையாளங்களிலிருந்து நீங்கள் என்ன உணருகிறீர்கள்? இதன் பின்னணியை எவ்வாறு நாம் இனங்காண வேண்டும்?

அருந்ததிராய் : இந்த அடையாளங்களை (வன்முறையின்) காண்பதற்கு நீங்கள் ஒன்றும் தலைசிறந்த அறிவாளியாக இருக்க தேவையில்லை. தீவிர நுகர்வு கலாசாரத்தினாலும், முன்முனைப்புள்ள பேராசை வெறி கொண்டும் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ள மத்திய தர வர்க்கம் நம்மிடையே உள்ளது. மூலாதாரங்களை சுரண்டுவதற்காக அடிமை உழைப்பை உருவாக்க காலனிய நாடுகளை தம் வசம் கொண்டிருந்த மேற்கத்திய நாடுகளைப் போலல்லாமல், இந்த நிகழ்வுப் போக்கை வளர்த்தெடுப்பதற்கு உள்நாட்டிலேயே நாம் காலனி பிரதேசத்தை உருவாக்க வேண்டியுள்ளது. நம்மை விட கீழே தாழ்ந்துள்ள பகுதிகளை (வளர்ச்சி பெறாத) கொண்டிருக்க வேண்டியுள்ளது. நமது உறுப்புகளையே நாம் உண்ணத் துவங்கி விட்டோம். நலிந்தவர்களிடம் இருந்து மூலாதாரங்களையும், நீரையும், நிலத்தையும் கையகப்படுத்துவதன் மூலமே, இங்கு உருவாக்கப்பட்டுள்ள பேராசை வெறியை நாம் பூர்த்தி செய்து கொள்ள இயலும். சுதந்திர இந்தியாவில் இதுவரை நடத்தப் பெறாத பிரிவினைவாத போராட்டத்தை நாம் காணவிருக்கிறோம். மத்திய தர வர்க்கமும் நாட்டின் பிற பிரிவினரிடையேயிருந்து பிரிந்து போக யத்தனிக்கின்றனர். இது ஒரு மேலிருந்து கீழான பிரிவினைப் போக்காகும். நெடுங்கிடை வழியே பிரிவது அல்ல. அவர்கள் உலகில் எங்கோ காணப்படும் மேல்தட்டு வர்க்கத்தினருடன் இணைந்து இருக்க உரிமை கோரிப் போராடுகிறார்கள்.

நிலக்கரி, கனிம வளங்கள், பாக்ஸைட், நீர் மற்றும் மின்சாரம் ஆகிய அனைத்தின் மீதான தமது மேலாதிக்கத்தை அவர்கள் நிறுவுவதில் வெற்றி கண்டு விட்டனர். இந்த நாட்டின் நிலப்பரப்பில் அதிக அளவிலான புதிய வல்லரசுகளின் புதிய உயர்குடிமக்களின் பெரும் விளையாட்டு சாதனங்களான மகிழுந்துகளையும், வெடிகுண்டுகளையும், சுரங்கங்களையும் உருவாக்க அவர்கள் விரும்புகின்றனர்.

எனவே, இது தெளிவான யுத்தமாக மாறிவிட்டது. போரின் இருபுறத்திலும் உள்ளவர்கள் தமக்கே உரிய ஆயுதங்களை தேர்வு செய்கிறார்கள். அரசாங்கங்களும், பெரு நிறுவனங்களும் கட்டமைப்பின் மறுசீரமைப்பிற்கான முயற்சியில் முனைப்புடன் செயல்படுகின்றனர். உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும், நட்புறவிலான நீதிமன்ற ஆணைகளும், நட்புறவு கொண்ட திட்ட உருவாக்குநர்களும், பெரும் நிறுவனமயமாக்கப்பட்ட ஊடகங்களின் நட்புறவிலான உதவியுடனும், காவல் துறையின் பல பிரயோகத்தின் மூலமும் இவை மக்களின் தொண்டைக் குழிக்குள் திணிக்கப்படுகின்றன.

இந்த நிகழ்வுப் போக்கை எதிர்த்து நிற்பவர்கள் இதுவரையிலும், தர்ணா, உண்ணாநிலைப் போராட்டம், சத்தியாக்கிரகம், நீதிமன்றத்தை அணுகுவது மற்றும் அவர்கள் நட்புறவுடன் கூடியதாக கருதிய ஊடகங்களை அணுகுவது என பல வழிமுறைகளை முயற்சித்து விட்டனர். தற்போது மென்மேலும் அதிகமான மக்கள் துப்பாக்கி ஏந்த முயல்கின்றனர். இத்தகைய வன்முறை வளர்ந்திடுமா? வளர்ச்சி வீதமும் பங்குச் சந்தை புள்ளி நிலவரமும் என்பதை மட்டுமே அளவுமானியாக கொண்டு அரசாங்கம் வளர்ச்சியின், மக்களின் சேம நலன்களை கணக்கிட்டால், இந்த வன்முறை மேலும் அதிகரிக்கும். நான் இந்த அறிகுறிகளை இவ்வாறு காண்கிறேன். மேலும் வானத்தில் எழுதப்பட்டுள்ளவைகளை வாசிப்பது கடினம் அல்ல. அங்கு அது என்ன சொல்கிறது. பெரும் கொட்டை எழுத்துக்களில், மலத்தின் அசிங்கங்கள் மின்விசிறியின் இறக்கைகளில் படிந்துள்ளதாக அது குறிப்பிடுகிறது.

ஷோமா: நீங்கள் முன்பொருமுறை, நான் சுயமாக வன்முறையில் ஈடுபடாவிட்டாலும் தற்போது நாட்டில் நிலவும் சூழலில் கண்டிப்பது ஒழுக்கத்திற்கு மாறானது என்பதாக மாறிவிட்டது என்று கருதுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள்? இதுகுறித்து சற்று விளக்கமாக கூறமுடியுமா?

அருந்ததிராய்: ஒரு கொரில்லா படைவீரனாக ஆகியிருந்தால் நான் ஒரு சுமையாக தான் மாறியிருப்பேன். நான் ஒழுக்கத்திற்கு மாறானது என பயன்படுத்தினேனா? என்பது ஐயமாக உள்ளது. ஏனெனில், ஒழுக்கம் என்பதே நழுவல் நிறைந்த வணிகமாக மாறியுள்ளது. தட்பவெப்பம் போன்ற மாறும் தன்மையுடையதாகி விட்டது. பல பத்தாண்டுகளாக வன்முறையற்ற (அஹிம்சை) இயக்கங்கள் நாட்டின் சனநாயக நிறுவனங்களின் கதவுகளையும் தட்டிப் பார்த்து விட்டன. அந்த இயக்கங்கள் யாவும் வெறுத்தொதுக்கப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டு விட்டன. போபால் விஷவாயுவினால் பாதிக்கப்பட்டவர்கள், நர்மதா பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றை பாருங்கள். நர்மதா பாதுகாப்பு இயக்கத்திடம் அனைத்து வசதிகளும் இருந்தது. உயர் மட்டத்திலான தலைமை, ஊடக பிரச்சாரம், பிற இயக்கங்களை விட அதிக அளவிலான நிதி ஆதாரம் அனைத்தும் இருந்தன.

பின் தவறு எங்கு நிகழ்ந்தது? மக்கள் தமது நீண்ட கால யுக்தியை மாற்றியமைத்துக் கொள்ள மறுயோசனை செய்வது கட்டாயம் நிகழ்த்தக் கூடியதுதான். தாவோஸ் மாநாட்டில், உலக பொருளாதார மேடையில் சத்தியாகிரகப் போராட்டத்தை உயர்த்திப் பிடிக்க சோனியா காந்தி முயற்சிக்கும் போது நாம் நிமிர்ந்து அமர்ந்து யோசனை செய்ய வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. உதாரணமாக, சனநாயக தேச அரசு என்ற ஒரு கட்டமைப்பினுள்ளேயே பெருந்திரள் மக்களின் ஒத்துழையாமை இயக்கம் என்பது சாத்தியமாகுமா? பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வெகுசன ஊடகங்கள் வந்துவிட்ட காலத்தில், பொய் பரப்புரை நிகழும் கால கட்டத்தில் அது சாத்தியமாகுமா? பிரபலங்களின் அரசியலுடன் பின்னிப் பிணைக்க முடியாத அளவு உண்ணாநிலை போராட்டங்கள் தொடர்பு கொண்டுள்ளனவா? நங்கலா மச்சி அல்லது பட்டி சுரங்கங்களின் மக்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் பங்குபெற்றால் எவரேனும் அதனைக் குறித்து கவலைப்படுவாரா? ஐராம் ஷர்மிலா கடந்த 6 ஆண்டுகளாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்துகிறார். அது நமக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும். பெரும்பாலான மக்கள் எப்படியிருந்தாலும் பட்டினியில் கிடக்கும் இந்த நிலப்பரப்பில் உண்ணாநிலைப் போராட்டம் ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது ஒரு முரண்பாடாகவே எனக்கு தோன்றுகிறது. நாம் தற்போது வித்தியாசமான கால, இடங்களில் அமர்ந்துள்ளோம்.

மிகவும் வலுவான, சிக்கலான எதிரிக்கு எதிராக அணி திரண்டுள்ளோம். நாம் அரசு சாரா நிறுவனங்கள் மிகுந்துள்ள சகாப்தத்தில் உள்ளோம். அதாவது, பொய் பிரச்சார புலிகள் நிறைந்த காலகட்டத்தில் நாம் உள்ளோம். தற்போது வெகுசன செயல்பாடு என்பதே ஏமாற்றும் வணிகமாக இருக்கக்கூடும். நிதி உதவியுடன் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும், தர்ணாக்களும், தீவிரமான நிலையை முன்வைக்கும் சமூக மேடைகளும், அதன் பின்னர் நாம் பேசப்பட்டதுடன் தொடர்ந்த செயல்பாடு ஏதும் அற்று இருப்பதும் போன்றவற்றை நாம் காண்கிறோம். உண்மை போல தோற்றமளிக்கும் எதிர்ப்பு நடவடிக்கையின் அனைத்து வடிவங்களையும் நாம் காண்கிறோம். மிகப்பெரும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை வளர்த்து எடுக்கும் பண முதலைகளின் நிதி ஆதரவு பெற்ற சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிரான கூட்டங்கள் நடைபெறுகின்றன.

நமது சூழலுடன் இணைந்த அமைப்பை அழித்து ஒழிக்கக் காரணமான பெரு நிறுவனங்களினால் சூழலிய செயல்பாட்டிற்கும், மக்களின் கூட்டு நடவடிக்கைக்கும் பரிசுகளும், பட்டங்களும், நிதி உதவிகளும் அளிக்கப்படுகின்றன. ஒரிசாவில், காடுகளில் பாக்ஸைட்டு கனிமத்தை வெட்டியெடுக்க முயலும் வேதாந்தா என்ற அன்னிய கம்பெனி, ஒரு பல்கலைக் கழகத்தைத் துவக்க விரும்புகிறது. டாடாக்களிடம் இரு அறக்கொடை நிறுவனங்கள் உள்ளன. அவை நாடு முழுவதிலும் உள்ள செயல்வீரர்களுக்கும், வெகுசன இயக்கங்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிதி உதவி அளிக்கின்றன. அதனால்தான் நந்தி கிராமத்தில் காணப்பட்டதை விட சிங்கூரில் மக்கள் திரள் அதிகமாக ஈர்க்கப்படவில்லையோ என்னவோ?

ஆம். டாடாவும், பிர்லாவும், காந்திக்கும் கூட நிதி உதவியளித்தனர். காந்திதான் இந்தியாவின் முதல் அரசு சாரா நிறுவனமாக இருந்திருக்கக்கூடும். தற்போது, பெரும் ஓசை எழுப்பும் நிறைய அறிக்கைகளை எழுதும், அரசுக்கு எந்தவித நெருக்கடியும் எழுப்பாத சமூகமாக திகழும் அரசு சாரா நிறுவனங்களை நாம் காண்கிறோம். இவற்றிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? இந்த வெளி முழுவதும் உண்மையான அரசியல் நடவடிக்கைகளை நீர்த்து போக செய்யும் தொழில் நுணுக்கம் வாய்ந்தவர்களால் நிரப்பப்படுகின்றன என்பதே ஆகும். உண்மை போல் தோன்றும் எதிர்ப்பு என்பது தற்போது ஒரு பெருஞ்சுமையாக மாறிவிட்டது.

முன்பு ஒரு சமயம் மக்கள் திரள் இயக்கங்கள் நீதிக்காக நீதிமன்றத்தை நாடி நின்றன. ஆயின், நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக அநீதியான தீர்ப்புகளை பொழிந்து தள்ளிவிட்டன. அவர்களின் மொழிப் பிரயோகங்கள் ஏழை மக்களை கேவலப்படுத்துவதாக, அவர்களின் மூச்சைத் திணறடிப்பதாக உள்ளன. சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றில் எந்த ஒரு தேவையான கட்டுமான அனுமதியும் பெறாத வசந்த் குஞ்ச் மால் என்ற கட்டிடத்தின் கட்டுமானம் செய்ய அனுமதி அளித்த வழக்கில் பெரு நிறுவனங்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்ற கேள்விக்கே இடம் இல்லை என்று பட்டவர்த்தனமாகக் குறிப்பிடுகின்றனர். பெரு நிறுவன உலகமயமாக்கலும், பெரு நிறுவன நில அபகரிப்பும் நிறைந்த சகாப்தத்தில் அதாவது என்ரான், மன்சான்டோ, ஹாலிபர்ட்டன் மற்றும் பெக்டெல் கால கட்டத்தில் இவ்வாறு குறிப்பிடுவது மிகையாகவே இருக்கும். பெரு நிறுவனமாகியுள்ள ஊடகத்துடன் இணைந்து நீதிமன்றமும் புதிய தாராளவாத திட்டத்தின் தான்தோன்றித்தனமான கூட்டாகவே காணப்படுகிறது.

இத்தகைய சூழலில், இத்தகைய சனநாயக நிகழ்வுப் போக்குகளின் முடிவற்ற தன்மையால், சோர்ந்து, களைத்துபோய், கடைசியாக கேவலப்படுத்துவதாக கருதும்போது மக்கள் என்னதான் செய்ய வேண்டி உள்ளது? ஆம். ஏதோ அவர்களிடம் இருக்கும் தேர்வுக்கான பாதை இரண்டே வழியை கொண்டதாக வன்முறையா? அல்லது அமைதி வழியா? (வன்முறையற்ற) என்பதாக மட்டுமல்ல. ஆயுதப் போராட்டங்களில் நம்பிக்கை கொண்டுள்ள அரசியல் காட்சிகள் உள்ளன. ஆனால், அவை அவர்களது அரசியல் யுத்தியின் ஒட்டுமொத்தத்தில் ஒரு பகுதியேயாகும். இத்தகைய போராட்டங்களில் பங்கு பெறும் அரசியல் செயல்வீரர்கள் மிகவும் மிருகத்தனமாக கொலை செய்யப்பட்டனர். ஆயுதம் ஏந்தி போராடுவது என்பதன் மூலம் இந்திய அரசின் எண்ணற்ற வன்முறை தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று, இம்மக்கள் முன்பே தெளிவாக அறிந்திருந்தனர்.

ஆயுதப் போராட்டம் என்பது ஒரு மூலயுத்தியாக மாறும்போது, உலகம் முழுவதும் சுருங்கி, நிறங்கள் முழுவதும் கறுப்பு வெள்ளை நிறத்தவையாக சுருங்குகின்றன. ஆயின், மக்கள் அத்தகைய நடவடிக்கையை, தமது அனைத்து பிற தேவைகள் யாவும் தோல்வியுற்றதன் விளைவாக வெறுப்புற்றதன் விளைவாக எடுக்கும்போது, நாம் அதனைக் கண்டிக்க வேண்டுமா? நந்திகிராமம் மக்கள் வெறும் பாடல்களை முன்வைத்திருந்தால், மேற்கு வங்க அரசாங்கம் பின்வாங்கி இருக்குமா? நாம் செயல்பாட்டு திறனற்று இருக்கிறோம் எனப் பொருள்படும் காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆயின், செயல்திறனோடு செயல்படுவது என்பதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டி உள்ளது. இத்தகைய விலையை கொடுக்க தயாராகி முன்வந்துள்ளவர்களை கண்டிப்பது எனக்குக் கடினமாக உள்ளது.

ஷோமா: நீங்கள் அடிமட்டத்தில் பரவலாக பயணம் செய்து வந்துள்ளீர்கள். முக்கியமான நெருக்கடி நிறைந்த பகுதியாக சிலவற்றை உங்களால் குறிப்பிட இயலுமா? இத்தகைய பிரதேசங்களில் மோதல் களத்தின் நிலை பற்றிய சில பரவலான விவரங்களை அளிக்க இயலுமா?

அருந்ததிராய்: இது ஒரு பெரிய கேள்வியாகும். இதற்கு நான் என்னவென்று பதிலளிக்க இயலும்? காஷ்மீரில் ராணுவ ஆக்கிரமிப்பு, குஜராத்தில் புதிய பாசிசம், சட்டீஸ்கரில் உள்நாட்டுப் போர், ஒரிசாவை பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாடல், நர்மதா பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கடிக்கப்படுவது, மக்கள் பட்டினியின் விளிம்பில் வாழ்வது, காட்டு நிலப்பரப்புகள் அழித்தொழிக்கப்படுவது, மேற்கு வங்க அரசாங்கம் தற்போது டௌ கெமிக்கல்ஸ் என்று அழைக்கப்படும் யூனியன் கார்பைடு நிறுவனத்தை நந்திகிராமில் முதலீடு செய்ய கெஞ்சி மகிழ்ச்சியூட்ட முயல்வதை காண்பதற்கு போபால் விஷவாயுவினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்து இருப்பது போன்றவை. நான் சமீபத்தில் ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராட்டிரம் பகுதிகளுக்கு செல்லவில்லை. இருப்பினும், லட்சக்கணக்கான விவசாயிகள் தமது உயிரை மாய்த்துக் கொள்வதைக் குறித்து நாம் அறிவோம்.

ஆந்திராவில் நிகழும் போலி மோதல் குறித்தும் பயங்கர ஒடுக்குமுறை குறித்தும் நாம் அறிவோம். இப்பகுதிகள் ஒவ்வொன்றும் தமக்கே உரிய தனித்துவமான வரலாறு, பொருளாதாரம், சூழலியல் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவை எதுவும் எளிதாக ஆய்வுக்குட்படுத்தப்பட இயலாது. ஆயின், சர்வதேச கலாசார, பொருளாதார அழுத்தங்களை அவர்கள் மீது திணிக்கும் ஒரு தன்மையை இவையனைத்திலும் காண முடியும். ஹிந்துத்துவா திட்டம் தனது நச்சுக்களை மீண்டும் பரப்புவதற்கு தயாராக இருப்பதை எவ்வாறு குறிப்பிடாமல் இருக்க முடியும்? இவையனைத்தையும் விட மிகப் பெரிய குற்றச்சாட்டு என்னவெனில், தீண்டாமையை இன்னும்கூட வளர்த்து எடுத்து, கடைபிடித்து கலாசாரமாக கொண்டுள்ள சமூகமாக நாம் உள்ளோம். நமது பொருளாதாரவாதிகள் வளர்ச்சி வீதத்தை குறித்த எண்களை பெருமையோடு ஒருபுறம் சித்திரிக்கும்போது, லட்சக்கணக்கான மக்கள் மனித மலத்தை உயிர்வாழ பொருள் ஈட்ட வேண்டி தலையில் சுமக்கும் நிலை மறுபுறம் காணப்படுகிறது. அவர்கள் மலத்தை தனது தலையில் சுமக்காவிடில் பட்டினி கிடந்து சாவை நோக்கி தள்ளப்படும் நிலையில் உள்ளனர். இதுதான் வல்லரசின் சீரழிந்த நிலை.

ஷோமா: வங்காளத்தில் காணப்படும் அரசு மற்றும் காவல் துறையினரின் வன்முறையை எவ்வாறு நாம் காண வேண்டும்?

அருந்ததிராய்: இரட்டைத் தன்மை, இரண்டு விதமாக பேசுதல் உள்ளிட்ட அரசு வன்முறை மற்றும் காவல்துறை வன்முறை அனைத்து அரசியல் கட்சிகளாலும், பொது நீரோட்ட இடதுசாரிகள் உட்பட அனைவராலும் நேர்த்தியாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை வேறு எந்த விதத்திலும் மாறுபட்டு காண இயலாது. கம்யுனிஸ்டுகளின் துப்பாக்கி ரவைகள் முதலாளித்துவ துப்பாக்கி ரவைகளிலிருந்து எந்தவிதத்தில் மாறுபட்டவை? எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சௌதி அரேபியாவில் பனி வீழ்ச்சி இருந்தது. ஆந்தைகள் பகலில் ஊளையிட தொடங்கிவிட்டன. சீன அரசாங்கம் தனிச் சொத்துரிமைக்கான உரிமையை அங்கீகரிக்கும் வகையில் சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது. இவையாவும் தட்பவெப்ப மாற்றங்களால் ஏற்பட்டுள்ளதா என நான் அறியவில்லை. சீன அரசாங்கம் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் முதலாளித்துவமாக மாறியுள்ளது. எனவே, பாராளுமன்ற இடதுசாரிகள் மட்டும் வேறுபட்டு இருக்க வேண்டும் என நாம் ஏன் எதிர்பார்க்கிறோம்? நந்திகிராமமும், சிங்கூரும் தெளிவான அறிகுறிகள். அனைத்து புரட்சியும் கடைசியில் முன்னேறிய முதலாளித்துவத்தில் தான் வந்து சேருமோ என்று நாம் வியக்கும்படியாக இவை திகழ்கின்றன.

பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி, சீனப்புரட்சி, வியட்நாம் யுத்தம், நிறவெறிக்கெதிரான போராட்டம், காந்திய வழி என கருதப்பட்ட சுதந்திர போராட்டம் அனைத்தையும் குறித்து சிந்தித்து பாருங்கள். இவையனைத்தும் எங்கு வந்து முடிகின்றன? இதுதான் நமது கற்பனைகளின் முடிவா?

ஷோமா: மாவோயிஸ்டுகள் பீஜப்பூரில் தாக்குதல் நடத்தினர். அதில் 55 காவல்துறையினர் உயிர் இழந்தனர். இந்த கலகக்காரர்கள் அரசின் மறுபக்கம் தானா?

அருந்ததிராய்: கலகக்காரர்கள் எவ்வாறு அரசின் மறுபக்கமாவார்கள்? நிறவேற்றுமைக்கு எதிராக போராடியவர்கள். அவர்கள் பயன்படுத்திய வழிமுறை எத்தகைய மிருகத்தன்மையதாக இருப்பினும் எவரேனும் அதனை அரசின் மறுபக்கம் என்று கூற இயலுமா? அல்ஜீரியாவில் பிரஞ்சு படைக்கு எதிராக போராடியவர்களை குறித்து என்ன சொல்ல இயலும்? அல்லது காலனிய ஆட்சியை எதிர்த்து போராடியவர்களே ஆகட்டும். அல்லது ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைக்கு எதிராக போராடுபவர்களாக இருக்கட்டும். இவர்கள் அனைவரும் அரசின் மறுபக்கம் ஆகிவிடுவாரா? எளிதான புதிய அறிவிப்புகளினால் முன்வைக்கப்படும் மனித உரிமை சொல்லாடல்களின் மூலம் உந்தப்பட்டு அர்த்தமற்ற கண்டன குரல்களை எழுப்பும் வகையில் நாம் செயல்படுவது நம்மையும் ஒரு அரசியல்வாதியாக செயல்படச் செய்து, அனைத்து வடிவத்தில் இருந்தும் உண்மையான அரசியலை உறிஞ்சி துப்பி விடுகிறது.

நாம் எவ்வளவுதான் மரபுவாதியாக இருக்க விரும்பினாலும் நமது ஒளி வட்டங்களை எவ்வளவுதான் மெழுகுறச் செய்தாலும், நாம் கடைப்பிடிப்பதற்கான மரபு ரீதிக்கான தேர்வுகள் நம்மிடம் தற்போது ஏதும் இல்லை. நீங்கள் எங்களுடன் இல்லையெனில், நீங்கள் பயங்கரவாதிகளுடன் இணைந்து நிற்கிறீர்கள் என்று புஷ் முன்வைத்த கொள்கையை பின்பற்றி வரும் சட்டீஸ்கர் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு, நிதி உதவி தரப்பட்டு நடத்தப்படும் உள்நாட்டுப் போர் சட்டீஸ்கரில் நடைபெறுகிறது. இந்த உள்நாட்டுப் போரில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி சட்டவிரோதமாக தான் தோன்றித்தனமாக செயல்படும் அமைப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட பாதுகாப்பு படையினருடன் கூடி செயல்படும் சல்வா ஜூடும் என்ற அமைப்பும் ஆகும். இது அரசாங்கத்தினால் பின் துணையளிக்கப்பட்டு சாதாரண மக்கள் ஆயுதங்களை ஏந்தி செயல்பட, சிறப்பு காவல்துறை அதிகாரியாக செயல்பட உந்தப்பட்டுள்ள மக்கள் படையாகும்.

இதனையே இந்திய அரசு காஷ்மீரிலும், மணிப்பூரிலும் நாகலாந்திலும் முயன்றுள்ளது. பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் சித்திரவதைக்குள்ளாயினர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். இதனைக் கண்டு எந்த ஒரு வாழைக்குலை குடியரசும் தற்பெருமையடித்து கொள்ளும். இவ்வாறு தோல்வி கண்ட போர் யுத்திகளை அரசாங்கம் இறக்குமதி செய்து மத்திய இந்தியாவில் முயற்சிக்க விரும்புகிறது. ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்கள் அவர்களது கனிவளம் மிகுந்த நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து காவல்துறையின் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கான கிராமங்கள் காலி செய்யப்பட்டுள்ளன. அந்நிலங்கள், இரும்புத்தாது நிறைந்தவை. டாடா, எஸ்ஸார் ஆகிய பெருநிறுவனங்களின் கண்களை உறுத்திய வண்ணம் உள்ளது. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. ஆயின் அவ்வொப்பந்தங்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என எவருக்கும் தெரியவில்லை. நிலம் கையகப்படுத்தல் துவங்கிவிட்டது.

இதுபோன்ற நிகழ்வுகள் உலகிலேயே பெரிதும் அழிவுக்கு உள்ளான கொலம்பியாவில் நிகழ்ந்தது. அரசாங்கத்தின் துணையுடன் செயல்படும் மக்கள் படைக்கும், கொரில்லா போராளிக்குகளுக்கும் இடையே வலைச் சுருளாக வளர்ந்து வரும் வன்முறையை நோக்கி அனைவரின் கவனம் குறையும் போது, ஓசையின்றி அங்குள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் எடுத்துச் செல்கின்றன. சட்டீஸ்கரில் அத்தகைய காட்சியின் அரங்கேற்றம் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆம். 55 காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்டது கோரமானதுதான். ஆனால், மற்ற அனைவரும் அரசாங்கத்தின் திட்டங்களால் பாதிக்கப்படுவது போன்றுதான இவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசாங்கத்தையும், பெருநிறுவனங்களையும் பொறுத்தவரை இவர்கள் பீரங்கிக்கு இரையாகும் மனித உயிரினம் என்பது மட்டும்தான். அவர்கள் கிளம்பியெழும் பகுதியில் இன்னும் பலர் இதற்கு தாயராக இருப்பர். முதலைக் கண்ணீர்கள் சிந்தப்படும். முக்கிய தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் நம்மை சற்று தாக்கி பேசுவர். அதன்பின்னர், மேலும் பீரங்கி இரைக்கு ஆட்கள் தயாராக்கப்படுவர். மாவோயிஸ்ட்டு கொரில்லாக்களைப் பொறுத்தமட்டில், சிறப்பு காவல்துறை அதிகாரிகள் என்பவர்கள் நேரடியாக ஒடுக்குமுறைகளை, சித்திரவதையை, காவல்துறை கட்டுப்பாட்டில் கொலை செய்வதை, போலி மோதலை நடத்தும் இந்திய அரசின் ஆயுதம் அவர்கள் பாவப்பட்ட அப்பாவியான பொதுமக்கள் அல்ல. அப்படி நினைத்து பார்க்கக்கூட இயலும் எனில், அது கற்பனையே.

மாவோயிஸ்டுகளும் பயங்கரவாதத்தை, பலப்பிரயோகத்தை பயன்படுத்தும் முகவர்களாக இருப்பர் என்பது குறித்து எனக்கு ஐயம் இல்லை. அவர்களும் சொல்லொணா கொடுமைகளை இழைத்துள்ளனர் என்பதிலும் எனக்கு ஐயம் இல்லை. வட்டார மக்களின் கேள்விக்கிடமற்ற ஆதரவை அவர்கள் பெற்றிருப்பதாக அவர்கள் குறிப்பிடுவது குறித்தும் எனக்கு ஐயம் உண்டு. ஆயின், எவருக்கு தான் அத்தகைய ஆதரவு உள்ளது? இருப்பினும், எந்த ஒரு கொரில்லா படையும் வட்டார மக்களின் ஆதரவு இன்றி இருக்கவிட முடியாது. எந்த ஒரு தர்க்கத்திலும் அது சாத்தியமில்லை. மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு பெருகி வருகிறதேயொழிய குறையவில்லை என்பதற்கான குறிப்பான பொருள் உண்டு. மக்களுக்கு அவர்கள் எவ்வளவுதான் மோசமாக இருப்பினும் குறைந்த அளவு மோசமான இவர்களை தேர்வு செய்வதை தவிர அவர்களல்லாமல் வேறு எவருடனும் இணையும் வகையிலான தேர்வு எதுவும் இல்லை.

ஆயின், மிகப்பெரிய அநீதிக்கு எதிராக போராடும் எதிர்ப்பு இயக்கங்களை, அநீதியை நிலைநாட்டும் அரசுக்கு இணையாக ஒப்பீடு செய்வது அர்த்தமற்றதாகும். அமைதி வழியிலான அனைத்து விதமான போராட்ட முயற்சிகளுக்கும் அரசு தனது கதவை அடைத்து விட்டது. எனவே, மக்கள் ஆயுதத்தை கையில் ஏந்தும்போது பல வடிவிலான வன்முறை, புரட்சிகர, பட்டவர்த்தமான கொலைகார முயற்சி, கட்டுபாடற்ற கூலிப்பட்டாள வன்முறை வெளிப்படும். ஆனால், இத்தகைய சூழலை உருவாக்கியுள்ளதற்கான காரணம் அரசாங்கத்தையே சாரும்.

ஷோமா: நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள், வெளி ஆட்கள் என பலவிதமான சொல்லாடல்கள் மிகவும் எளிதாக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றனவே?

அருந்ததிராய்: சுய விளம்பரத்தை மட்டுமே நம்பி இருந்த அரசாங்கங்கள், தனது மக்களே தமக்கெதிராக கிளம்பி எழுவதை எண்ணிப் பார்க்க இயலாமல், ஒடுக்குமுறையின் துவக்க நிலையில் பொதுவான குற்றச்சாட்டுக்கான சொல்லாடலாக வெளிஆட்கள் என்ற பிரயோகத்தை பயன்படுத்தினர். தற்போது வங்காளம் அந்த வகையிலான கட்டத்தில்தான் காணப்படுகிறது. இருப்பினும், வங்காளத்தில் ஒடுக்குமுறை ஒன்றும் புதியதன்று. அது அடுத்த உச்சநிலையையே எட்டி உள்ளது என சிலர் கூறக்கூடும். எவ்வாறிருப்பினும், வெளி ஆட்கள் என்பவர் யார்? யார் இந்த எல்லையை நிர்ணயிப்பது? அது என்ன கிராமப்புற எல்லைக்கோடா? தாலுகா அடிப்படையிலா? அரசு அடிப்படையிலா? மாவட்டமா? மாநிலமா? குறுகிய வட்டார இன ரீதியிலான அரசியல், புதிய கம்யூனிச மந்திரமாக மாறிவிட்டதா?

நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள் என குறிப்பிட்டால்.... நன்று... இந்தியா ஒரு காவல்துறை அரசாக மாறிவிடப் போகிறது. அங்கு கருத்துக்கு ஒவ்வாமல் இருப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுவதான ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இஸ்லாமிய பயங்கரவாதி எனப்படும்போது அவர் இஸ்லாமியராக இருக்க வேண்டும். எனவே, நம் அனைவரையும் அங்கப்படுத்த அது சிறந்ததாக இருக்காது. இதனைவிட மிகப்பெரும் பயன்பாட்டு வசதிக்கான பரப்பு அவர்களுக்கு தேவைப்படுகிறது. எனவே, இந்த இலக்கணப்படுத்தலை சற்று நெகிழ்வாக, வரையறை செய்யாமல், விட்டுவிடுவது சிறந்த யுத்தியாகிறது. ஏனெனில், நாம் அனைவரும், நக்ஸலைட்டுகளாக, மாவோயிஸ்டுகளாக, பயங்கரவாதிகளாக, பயங்கரவாத ஆதரவாளர்களாக சித்திரிக்கப்பட்டு, மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகள் என்பவரை குறித்த அறியாத, அறிய விருப்பமற்றவர்களால் ஒதுக்கி தள்ளப்படும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை. ஆம். கிராமப்புறங்களில் அத்தகைய நிகழ்வு துவங்கிவிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கிராமப்புறங்களில் கறாறற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அரசை தூக்கியெறிய முயன்ற பயங்கரவாதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உண்மையான மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகள் என்பவர்கள் யார்? நான் இந்த கருத்து குறித்து ஆழமாக அறியவில்லை எனினும், மேலோட்டமாக வரலாற்றை சுட்டிக்காட்ட முடியும்.

இந்திய கம்யூனிஸ கட்சி, என்பது 1925ல் உருவானது. 1964இல் இதிலிருந்து பிளவுபட்டு தனியான கட்சியாக மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி, உருவானது. இவையிரண்டும், பாராளுமன்ற அரசியல் கட்சிகள் ஆகும். 1967ல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசின் பிளவுபட்ட குழுவினருடன் இணைந்து வங்காளத்தில் ஆட்சிக்கு வந்தனர்.

அச்சமயம், கிராமப்புறங்களில் பட்டினியால் வாடிய விவசாயிகளிடையே பெரிய அளவிலான கொந்தளிப்பு ஏற்பட்டது. வட்டார தலைவர்களான கனு சன்யால் மற்றும் சாரு மஜீம்தார் ஆகியோரின் தலைமையில் விவசாய கலகம் நக்ஸல்பாரி என்ற மாவட்டத்தில் தோன்றியது. அதன்பின்னர் நக்ஸலைட்டுகள் என்ற பெயர் பிரபலமானது. 1969ல் அரசாங்கம் வீழ்ந்து, காங்கிரசு கட்சி சித்தார்த் சங்கர் ரே தலைமையில் ஆட்சியைப் பிடித்தது.

நக்ஸலைட்டுகளின் கலகம் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்டது. மஹாஸ்வேதா தேவி அக்கால கட்டத்தினைக் குறித்து சக்திவாய்ந்த எழுத்துக்களைப் படைத்துள்ளார். 1969ல் மார்க்ஸிய லெனியவாதிகள், கட்சியில் இருந்து பிரிந்து போயினர். சில ஆண்டுகள் பின்னர், 1971ல் மேலும் பல கட்சிகளாக பிரிந்தன. (விடுதலை) என்று பீகாரில் மையமாக கொண்டு செயல்படும் கட்சி, (புதிய சனநாயகம்) என ஆந்திராவிலும், பீகாரிலும் செயல்படும் அமைப்பு, (வர்த்தக போராட்டம்) என வங்காளத்தில் செயல்படும் அமைப்பு என பல அமைப்புகளாக பிரிந்தன. இக்கட்சிகள் யாவும் பொதுவான குறியீடு அடிப்படையில் நக்ஸலைட்டுகள் என்றழைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் தம்மை மார்க்ஸிய லெனினியவாதிகளாகவே கருதுகின்றனர். மாவோயிஸ்டுகளாக அல்ல. அவர்கள் தேர்தலிலும், வெகுசன இயக்கங்களிலும், வேறு வழியின்றி கடைக்கோடிக்கு தள்ளப்பட்டதால், ஆயுதம் தாங்கிய போராட்டத்திலும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அச்சமயம் பீகாரில் செயல்பட்டு வந்த மாவோயிஸ கம்யூனிஸ மையம் (MCC) 1968ல் உருவானது. மக்கள் யுத்தம் எனப்படும் (PW) ஆந்திராவின் பல பாகங்களில் செயல்வடிவில் இருந்த கட்சி 1980ல் உருவானது.

சமீபத்தில், 2004ம் ஆண்டு MCC மற்றும் PW இணைந்து CPI (மாவோயிஸ்டு) உருவானது. அவர்கள் பட்டவர்த்தனமாக ஆயதப் போராட்டத்திலும் அரசைத் தூக்கியெறிவதிலும் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் தேர்தலில் பங்கேற்பதில்லை. இந்தக் கட்சிதான் பீகாரிலும், ஆந்திராவிலும், சட்டீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட்டிலும்; கொரில்லா யுத்தம் மூலமாகப் போராடி வருகிறது.

ஷோமா: தற்போது நமது சமூகத்தில் செய்தி பரிமாற்றத்தில் (communication )சிதைவு ஏற்பட்டுள்ளதா?

அருந்ததிராய்: ஆம்.

டெஹல்காவின் ஷோமா சௌத்ரி அருந்ததி ராய் உடன் மேற்கொண்ட நேர்காணலிலிருந்து:

நன்றி: உள்நாட்டுப் பழங்குடி மக்கள் மீதான ராணுவ தாக்குதல் நடவடிக்கையை நிறுத்தக் கோரி குடியுரிமைப் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள பிரசுரத்திலிருந்து.

globaltamilnews.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.