Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீழ்ந்து போனதொரு தேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீழ்ந்து போனதொரு தேசம் ‐ யாழினி

வரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. அலையலையாய்ப் படிவுண்ட அதன் பக்கங்களுக்குள் ஒரு மீள முடியாத் துயரத்தின் சாட்சியாய் நாம் விசனித்திருக்கிறோம். ஒரு தேசம் தூர்ந்துகொண்டிருக்கிறது, எமதனைவரின் கனவுகளினூடு. தொடர்ந்தும் வரலாறு இந்தத் தருணத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. நாமனைவரும் எழுதிக்கொண்டிருக்கிறோம். இணையத்தின் மின்னதிர்வுகளின் வழி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானலைகள், தொலைக்காட்சிகளினூடு: சரி, பிழைகள் அலசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏமாற்றம், தோல்வி, கோபம், சந்தோஷம், கெக்கலிப்பு எல்லாவிதமான உணர்வுகளும் அரசியல் ஆய்வுகளினூடு வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதற்கு ஏதேனும் மீதமிருக்கிறதா என்ன? அரசியற் கட்டுரைகள் ஒரு மர்மத்தைத் துப்பறியும் ஆர்வத்துடனும். சுவாரசியத்துடனும் இந்த வீழ்ச்சியை ஆராய்கின்றன, சம்பவங்களை பட்டியலிடுகின்றன. இறந்து, தொலைந்து போனவர்கள், காயப்பட்டவர்கள் முகாம்களிலிருப்பவர்களைக் கணக்கிடுகின்றன. துப்பறியும் தொடரொன்றின் தவிர்க்க முடியா வாசகர்கள் போல பிறிதனைவரும் படபடப்புடன் பின்தொடர்கின்றனர். இதொரு தீவிர நம்பிக்கையின் வீழ்ச்சி; எங்களுக்கானதொரு தேசம் பற்றிய கனவொன்று எங்கள் முன் கலைந்து கொண்டிருக்கிறது. வரலாறு அதன் மர்மங்களுடன் எப்போதும் போல கடந்து கொண்டிருக்கிறது மிக மிக அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல்.

இலங்கையில் மட்டுமல்லாமல் உலகின் பல பாகங்களில் மிக முக்கியமாக ஆப்பிரிக்க நாடுகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனமுரண்பாடுகள் அனைத்தும் பின் காலனீயத்தின் விளைவுகளென்பது சொல்லித் தான் தெரியவேண்டியதில்லை. சாதாரண உட்பூசல்களையும் வளர்த்தெடுத்து பெரும் போரெனக் கொண்டுவந்து நிறுத்துவதில் மேற்குலக நாடுகளின் பிராந்திய வல்லரசுகளின் பங்கும் இனியுமெதுவு மில்லையென்றளவு அலசியாராயப்பட்டாயிற்று. இவையனைத்துக்கும் மேலாக ஊடகங்களின் அரசியல் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களின் நிலைப்பாடு இன்றைய உலகின் ஒட்டு மொத்த பொதுசன மனப்பாங்கையும் தன் கட்டில் வைத்திருக்கிறது. பொதுசன மனப்பாங்கின் மீதான ஊடகங்களின் ஆதிக்கத் தின் மிக வெளிப்படையான எதிர்வினை தான் ஊடகவியலாளர்கள் அதிகாரத்திலிருப்பவர்களால் கொல்லப்படுவதும், எச்சரிக்கப்படுவதும். நடந்துமுடிந்த யுத்தமும், அதன் தொடர்ச்சியான வீழ்ச்சியும் வெறு மனவே ஆயுத முனையிலான முறியடிப்பல்ல மாறாக, தமிழீழம் என்ற ஒரு கருத் தமைவின் தோல்வி. ஊடகங்கள், சர்வதேச உறவுகள், 911 க்குப் பிறகான மேற்குலக நாடு களின் உள்ளார்ந்த அச்சம் இவையனைத்தி னாலும் ஏலவே தீர்மானிக்கப்பட்டு விட்டிருந்தது.

கோட்பாட்டினடிப்படையில், ஒரு அரசு அல்லது தேசத்தின் நிலைபேற்றுக்கு மிக முக்கியமான மூலக்கூறுகளாக நிலப்பரப்பு, மக்கள் தொகை, அரசாங்கம், இறையாண்மை மற்றும் பிற நாடுகளின் அங்கீகாரம் போன் றவை வரையறுக்கப்படுகின்றன. அரிஸ் டோட்டில் போன்ற ஆரம்பகால அறிஞர்கள் முதல் நான்கு மூலக்கூறுகளையே பிரதான மாகக் கருதியிருந்தாலும், பிற நாடுகளின் அங்கீகாரம் என்ற இயல்பு நவீன அரசறிவிய லாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, அந் நிலப்பரப்பில் வாழும் குறிப்பிட்டளவு மக்கள், அவர்களை ஆள்வதற்கானதொரு அரசாங்கம்> அவ்வரசாங்கத்துக்குக் கீழ்ப் படியும் மக்களின் மனப்பான்மை, விருப்பு, பிற சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் இவையனைத்திலும் ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட மூலக்கூறுகளோ குறையுமானால் அவ்வரசு நிலைத்திருக்கச் சாத்தியமில்லை யென்பது கோட் பாட்டுரீதியில் மட்டுமல்லாது யதார்த்தத் திலும் நிரூபிக்கப் பட்டு விட்டதெனத் தெரிகிறது. தமிழீழம் என்ற தேசம் ஒரு அரசுக்கான பிறி தனைத்து இயல்பு களையும் கொண்டி ருந்தாலும் பிற நாடு களின் அங்கீகாரம் அதற்குக் கிடைத்திருக்காத ஒரே காரணத்தால் இன்று வீழ்ந்து விட நேர்ந்திருக்கிறதென்றே தோன்றுகிறது. ஆகக்குறைந்தது ஒரு குறித்த சில நாடுகளின் அங்கீகாரம் இருந்திருந்தாலே தமிழீழம் நிலைத்திருக்கக்கூடுமென்ற தவிப்பு தவிர்க்க முடியாதது. புலிகள் அரசியல் சார்ந்த நோக்குடன் செயற்படாமை குறித்த விமர்சனங்கள் இந்தவிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படத்தான் வேண்டும்.

ஆனாலும், நடந்துமுடிந்த போரின் பின்னரான அரசியலாய்வுகள், புலிகளுக் கெதிரான விமர்சனங்கள், ஒப்பீடுகளனைத் தும் இந்த இனப்பிரச்சனையின் அடித் தளத்தை விளங்கிக்கொள்ளத் தவறிவிட்டன வெனவே தோன்றுகிறது. காந்தியின், மாவோ யிஸ்டுகளின், சேயின் போராட்டங்களை உதாரணங்காட்டி எழுதப்பட்ட கட்டுரை களையும், வன்முறைக்கெதிரான விமர்சனங் களையும் வாசிக்க நேர்கையில் இனமுரண் பாட்டின் தோற்றம் குறித்த உண்மையான தெளிவு கட்டுரையாளர்களுக்கு இருந்திருக்க முடியுமாவென்ற சந்தேகமெழுந்தது. தமிழர்கள் வன்முறையைக் கையிலெடுத்தது இனப்பிரச்சனையின் மிக மிகப்பிந்தைய காலகட்டத்தில். அதற்கு முன்னர் தந்தை செல்வநாயகம் அமைதிவழிப் போராட்டங்கள் பலதை முன்னெடுத்திருந்தார். எத்தனையோ அரசியல் சீர்திருத்தப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுமிருந்தன. அனைத்தும் தோல்வியுற்ற நிலையில், ஏறக்குறைய அறுபதாண்டு காலத்துக்குப் பிறகு ஆயுதந்தாங்கிய போராட்டம் ஆரம்பித்திருக்க வன்முறைதான் இத்தனை அழிவுக்கும் காரணமென்ற ரீதியில் வெளி வரும் கட்டுரைகள் விசனத்தைத் தூண்டுகின்றன. 60களில், 1977ல் தமிழர்கள் மீதான இனப்படுகொலை இடம்பெற்றபோது எந்தவித ஆயுதந்தாங்கிய பெரிய அமைப்பு களும் தமிழர்கள் மத்தியில் இருக்கவில்லை யெனும் மிகச்சிறிய தரவுகூட படைப்பாளி களுக்குத் தெரிந்திருக்காதா என்ன.

இனப்பிரச்சனையின் அடிவேரை நோக்கிய தேடல் எங்களை காலனித்துவ காலங்களுக்கு வழிநடத்திச் செல்லும். காலனீய காலகட்டம் இனங்களுக்கிடையிலான விரிசலை மிகத் தந்திரமான முறையில் மேம்படுத்தியதன் மூலம் அதிகாரத்தை ஆதிக்க சக்திகளின் கையில் திணித்திருந்தது. 1921ல் மனிங் தற்காலிக யாப்பு சீர்திருத்தம் மனிங் தேசாதிபதியால் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கியக் கூறுகளை விளங்கிக் கொள்ள அதற்கு முன்னரான இலங்கையின் அரசியல் நிலைவரம் குறித்த தெளிவு முக்கியமாகப் படுகிறது. 1912லிருந்து 1921 வரையிலான காலகட்டத்தின்போது சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் இணைந்தே சுதந்திரப் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அப்போதைய அரசியல் சூழ்நிலை இனரீதி யான பாகுபாடன்றி, தீவிர தேசியவாதம், மிதவாதமென்ற பாகுபாடுகளையே கொண் டிருந்தது. முன்னைய குறூ‐மக்கலம் அரசியல் சீர்திருத்தத்தினூடாக அரசியலரங் குக்கு வந்த கற்றோர் குழாமினர் மகஜர் அனுப்புதல், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகளினூடாக தீர்வுகாண முற்பட்ட அதேவேளை, ஏ.ஈ. குணசிங்க, விக்டர் கொரயா தலைமையில் இயங்கிய தீவிர தேசியவாதிகள் பகிஷ்கரிப்பு, வேலை நிறுத்தம், ஆர்ப்பார்ட்டங்கள் போன்ற நடவடிக்கைகளினூடாக பூரண சுதந்திரத்தை வலியுறுத்தி நின்றனர். இந்தப் படித்த மிதவாத அரசியலுக்கும், தீவிரவாத அரசியலுக்கு மிடையிலான வேறுபாடும் பிளவும், அதன் தாக்கங்களும் இலங்கை அரசியல் வரலாறு முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

தீவிர தேசியவாதிகள் சூரிய மல் போன்ற இயக்கங்களினூடாக அடித் தட்டு மக்களின் நலன்களைக் கவனித்தும், மலேரியாவினால் ஆயிரக்கணக்கானோர் இறந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு சேவைசெய்தும் வந்திருந்த அதே தருணத்தில்தான் மிதவாதிகள் இங்கிலாந்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டும், வாக்குரிமை கற்றோருக்கும், சொத்துள்ளோருக்கும் மட்டும் வரையறுக் கப்படவேண்டுமென விவாதித்துக் கொண்டு மிருந்தனர். இலங்கையின் அரசியல் வரலாற் றினடிப்படையில் மிதவாத அரசியல் எப் போதும் அடித்தட்டு மக்களின் நலனைப் புறக்கணித்தபடியே நகர்ந்துகொண்டிருப்பதை தெளிவாகவே அவதானிக்கலாம். இதில் குறிப் பிடத்தகுந்த விடயம், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் மிதவாத அரசியலை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தவர்கள் தமிழ்த்தலைவர்கள். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் தமிழ்த் தீவிரவாத அரசியலுக்கு சார்பாயிருந்தாலும் சேர்.பொன். அருணாசலம்

சேர்.பொன். இராமநாதன் ஆகியோரின் மிதவாதம் அவற்றையெல்லாம் விழுங்கித் தீர்த்துக் கொண்டு தன்னை அரசியலரங்கில் நிலை நாட்டத் தொடங்கியிருந்தது.

1915ல் கண்டியில் ஆரம்பித்த சிங்கள, முஸ்லீம் கலவரம் இலங்கை முழுவதும் பரவத் தொடங்கியதன் விளைவாக பல சிங்களத் தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்க தமிழ்த்தலைவர்கள் இங்கிலாந்து வரை சென்று கடும் முயற்சி செய்தனர். இவ்வரசியல் சம்பவங்களை ஆராய்கையில் வெளித்தெரியும் சுவாரசியமான அவதா னிப்பு, தமிழர்கள் எந்தக் காலத்திலும் தங்களை சிறுபான்மையினராகக் கருதியிருக்க வில்லையென்பது. அவர்கள் தங்களை சிங்கள வருக்குச் சரிசமமாகக் கருதி, சரிசமமான அதிகாரங்களை எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்றாற்போல, 1919ல் இலங்கையில் தீவிர, மிதவாதிகள் அனைவருமிணைந்து இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவான போது அதன் தலைவராக ‐ முழு இலங்கைக்குமென ‐ ஏகமனதாகத் தெரிவானவர் சேர்.பொன். அருணாசலம். சிங்கள, முஸ்லிம் கலவரத்தின்போது கூட தமிழ்த்தலைவர்கள் மற்றுமொரு சிறு பான்மையினமான முஸ்லிம்களைப் புறக் கணித்து சிங்களவர்களையே சார்ந்திருந்தனர். அரசியல் சீர்திருத்தங்களின் போது தமக்குச் சரி சமமான அதிகாரங்களைக் கோரியிருந்தனர்.

இலங்கையெனும் நாட்டில் சிங்களவருக்கு எந்தளவு உரிமையிருக்கிறதோ, அதே உரிமை (அல்லது அதற்கும் மேலால்) தமக்குமிருக்கிறதெனக் கருதியிருந்தனர். இந்த ஒற்றுமையினையும், இலங்கைத் தேசிய காங்கிரஸினையும் குலைப்பதற்கான மனிங் தேசாதிபதியின் தந்திரமான முயற்சியின் வெளிப்பாடாக மனிங் தற்காலிக அரசியல் சீர்திருத்தம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தச் சீர்திருத்தத்தின் வழி அதுவரை காலமிருந்த இனவாரியிலான பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டு பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப் படுத்தப்பட்டது. பிரதேசவாரிப் பிரதிநிதித் துவம் நடைமுறைக்கு வந்த பின்னர்தான் தமிழ்த் தலைவர்கள் தாங்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினரென்ற விழிப்புணர்வை எய்தினரெனலாம். பிரதேசவாரிப் பிரதிநிதித் துவம் பெரும்பான்மையினருக்கு அதிகளவி லான சட்டசபை அங்கத்துவம் கிடைக்க வாய்ப்பளித்திருந்ததுடன் தமிழர்களை முற்றுமுழுதாகப் புறக்கணித்திருந்தது. சேர்.பொன். அருணாசலம் மிக வெளிப்படை யாகவே இந்த அரசியல் சீர்திருத்தம் இலங்கையில் இனப்பிரிவினையைத் தூண்டு வதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் சிங்களத் தலைவர்கள் வாக்குறுதியளித் திருந்த மேல்மாகாணத் தமிழருக்கான ஒரு அங்கத்துவம் பின்னர் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த விரிசலுடன் இலங்கைத் தேசிய காங்கிரஸ் உடைந்து> தமிழ்த்தலை வர்கள் வெளியேறினர்.

1921ல் ஏற்பட்ட இந்த முரண்பாட்டைச் சரிசெய்ய பிறகான காலங்களில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. டொனமூர் அரசியல் யாப்பு (1931), சோல்பரி அரசியல் யாப்பு (1947), பண்டா‐செல்வா ஒப்பந்தம் (1965), மாவட்ட அபிவிருத்திச் சபைகள் (1981), இலங்கை இந்திய ஒப்பந்தம் மற்றும் அதன் வழிவந்த 13வது திருத்தச் சட்டம் (1987), பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின் தீர்வு யோசனைகள் (1997), ஐக்கிய தேசிய முன்னணியின் சமாதான உடன்படிக்கை (2002) போன்ற முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் போர் தீவிரமடைந்து இன்று இத்தனை அழிவுகளுக்கு மத்தியில் முடிவுக்கு வந்திருக்கிறது. இலங்கை ஆய்வாளரொருவர் கூறியது போல, விடுதலைப் புலிகள் அமைப்பானது இந்த இனப்பிரச்சனையின் ஒரு விளைவேயழிய, அவர்கள் இதன் காரணகர்த்தா அல்ல. நடந்துமுடிந்த அழிவுக ளனைத்தும் இந்த இனமுரண்பாட்டினை ஒரு உறைநிலைக்குக் கொண்டுசென்றிருக் கின்றனவே தவிர, தீர்வினை எட்டவில்லை. அதனை எட்ட நாம் கடக்க வேண்டிய பாதை இன்னும் தொலைதூரத்திலிருக்கிறது.

வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. திருகோணமலை சார்ந்த பகுதிகளில் அவை ஏற்கனவே உறுதியாக நிலை நிறுத்தப்பட்டுவிட்டன. தென்னிலங்கைச் சிறைகளிலிருந்து சிங்களக் கைதிகள் விடுவிக்கப்பட்டு புனருத்தாரண வேலைகளுக்காக வடகிழக்கில் குடியமர்த்தப்பட இருக்கிறார்கள்.

இலங்கையில் நிலவிவரும் விகிதாசார முறையிலான தேர்தலினடிப்படையில் இந்தக் குடியேற்றங்களுக்குப் பின்னர், சனநாயக முறையில் தமிழர்கள் பாராளு மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியுமா என்பது சந்தேகமே. சனநாயக அரசியல் முறையிலிருக்கும் விரிசல்களைப் பயன் படுத்தி இலங்கையரசாங்கம் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கும் இக்குடியேற் றங்கள் இனிமேலான இலங்கையரசியலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை வினைத்திறனான முறையில் மட்டுப்படுத்தவே வாய்ப்பளிக்கின்றன. இந்த சனநாயகம் யாருடைய சனநாயகமென்ற கேள்வியெழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மீண்டுமொருமுறை தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட மாட்டாதென்பதற்கான எந்த உத்தர வாதங்களுமில்லை. 60களில், 70களில், 80களில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மீண்டும் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லாமலில்லை. இப்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதே அதுவன்றி வேறென்ன என்று யாரேனும் கேள்வியெழுப்பக்கூடும். இவையெல்லாவற்றுக்கும் மத்தியில் அங்கு வாழும் மக்களின் எதிர்காலம். உங்களைப் போலவே என்னிடமும் எந்தவிதப் பதில்களு மில்லை.

பிற்குறிப்பு:

சமீபத்தில் கிழக்கிலங்கைப் பல்கலைக் கழக பேராசிரியர் மௌனகுருவின் கூத்து பற்றிய ஒளிப்பதிவொன்றைக் காணநேர்ந்தது. இலங்கையின் மரபார்ந்த தமிழ் கூத்து வடிவத்துக்கும், சிங்களக் கூத்து வடிவத்துக்கு மிடையிலான ஒற்றுமைகளைக் கண்டறியும் பயிற்சிப் பட்டறையின் ஒளிப்பதிவது.

மிகப்பிர பலமான சிங்கள தமிழ்க் கலைஞர்கள் அதில் பங்குபற்றியிருந்தனர். தமிழ்க்கலை ஞர்கள் தமது புகழ்பெற்ற இராவணேசன் கூத்தையும்> சிங்களக் கலைஞர்கள் சிங்கபாகு கூத்தையும் ஆடிக்காட்ட மாற்றி மாற்றி இரு தரப்பினரும் பின்னணி இசை வழங்கிய மிக அருமையான நிகழ்வது.

இனிமேல் இலங்கையில் என்றாவதொருநாள் இரு இனத்தினரும் சுமுகமான வாழ்வொன்றைக் கொண்டு நடத்துவது சாத்தியமென்றால், அது இத்தகைய கலைஞர்களின் கையில்தான் தங்கியிருக்கிறதென, அந்த ஒளிப்பதிவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது தோன்றியது. பேராசிரியர் மௌனகுரு கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் இன்னியம் என்ற (உடுக்கு,பறைகளுடனான) தமிழ் வாத்தியக் குழுவொன்றை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் பட்டமளிப்பு விழாவின் போது இசைக்கச் செய்துவருவது மேலதிகத் தகவல்.

அவை சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாத்தியங்களென்பதால் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு நிலவியிருந்தாலும் தங்களது விடாமுயற்சி அதை சாத்தியப்படுத்தி யிருந்ததென அண்மையில் கனடாவில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கூறியிருந்தார். கூத்தை ஒரு பல்கலைக் கழகப் பாடநெறியாக்கியதும் அவரின் முயற்சியே.

‐ அணங்கு

நன்றி_

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18733&cat=1

Edited by ஜீவா

காலத்திற்கு ஏற்றதொரு ஆக்கம்.சிங்களனுக்கு தமிழன் ஒரு மனித இனமாகக் கூட புலப்படவிலை என்பதே, முட்கம்பி வேலி சிறைகள்.தமிழ் தேசியம் அதற்கான தமிழர் உரிமைப்போராட்டம் என்பவை சிங்களனுக்கு நன்கு விளங்கியவை.ஆனால் ஒன்றுமே விளங்காத மாதிரி செயற்பட அல்லது தமிழருக்கு ஒரு குறையுமில்லை என்று கூறுவற்கே அவனுக்கு பாராளுமன்றம் என்ற கவசம்.இந்த (மாய) திரையை திறக்க விடாமற் பண்ணியதே எங்கள் ஆயுத போராட்டம்.ஆனால் தற்போது கவலையான விடயமே இதுதான்.தமிழனுக்கு தாய்வீடு என்பது கனவாகிப் போகுமா?காலம் பதில் சொல்லும்.அதுவரை எங்கள் கடமையை எண்ணி ஒற்றுமையுடன் செயற்படுவோம் என்பதே,மனதுக்கு ஆறுதல் தரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.