Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் காணாமல் போனோர்: வெளிவரும் உண்மைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இருண்ட நாட்களை மறக்கத் தயாராக இல்லை – வெளிவரும் அதிர்வுகள் ‐ GTN ற்காக ‐ பரப்பிரம்மா‐

(ஜி.ரி.என்)

அன்றாட செய்தி சேகரிப்புக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின், யாழ் அலுவலகத்தையும் எட்டிப் பார்ப்பது வழமை. பெரும்பாலும் அது மதிய நேரமாக இருக்கும். அந்த அலுவலகத்துள் கடந்துபோகும் நேரத்தில், வெறிச்சோடிப்போன முகங்களுடன் அவர்களை கண்டுள்ளேன். யாழ்ப்பாணத்தில் காணாமல் போதல்கள் கணக்கு வழக்கற்றிருந்த காலமது. வேலைக்குப்போகும் வழியில் இரவுகளில் வீடுகளினில், பாடசாலைக்கோ, பல்கலைக் கழகத்திற்கோ செல்லும் வழியிலென பல இடங்களில் அவர்கள் காணாமல் போனார்கள். வீதிகளிலும், காவலரண்களிலும் ஏன் இரவு வேலைகளில் வெள்ளை வான்களிலும் ஆட்பிடிக்கும் ஆவிகள் நடமாடியதாக மக்கள் அச்சங்கொண்டிருந்தனர்.அதிலும் காணமல் போனவர்களில் சிலர் தெரிந்தவர்களாகவும் இருந்தனர்.

ஊடகவியலாளர்கள் உட்பட பெரும்பாலானவர்களுக்கு, காணாமல் போனவர்கள் என்பது வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமே. காணாமல் போனோரது குடும்பங்களது வலிகள் சொல்லிப்புரிய வைக்க முடியாதவை. அண்மைக்கால குடா நாட்டின் புத்தி ஜீவியாகியிருக்கும் யாழ். ஆயரும். அந்த வகையிலேயே உள்ளடங்கிப்போனது பெரும்பாலான கத்தோலிக்கர்களது மனக் கவலை.

தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ் வந்திருந்த, மகிந்த, மரியாதை நிமிர்த்தம் ஆயரையும் சந்தித்திருந்தார். அருகில். டக்ளசும், பிரசன்னமாகியிருந்தனர். காணாமல்போனவர்கள் தொடர்பில், மனோ கணேசன் தங்களை குற்றச்சாட்டுகின்றாரேயென, தான் தப்பிக்கும் உத்தியுடன் ஆயர் கேள்வியொன்றை அங்கு முன்வைத்திருந்தார். மகிந்த வாய்திறக்கு முன் முந்திக்கொண்டார் டக்ளஸ். மே 18 இற்குப்பின்னர் யாழில்யாரேனும் காணாமல்போனார்களா? என பதில் கேள்வி எழுப்பினார் அவர். அதாவது மே 18க்கு முன்னர் காணாமல் போனமையெல்லாம் சரி, இனி காணாமல்போனால் தான் தவறு என்கின்றார் அவர்.

அல்லைப்பிட்டியில் காணாமல் போன வணபிதா ஜிம்பிறவுண் பற்றி இந்த நிமிடம்வரை வாய்திறக்காதவர் யாழ். ஆயர். ஜிம்பிறவுண் அடிகளார் காணாமல்போனமை பற்றி முன்னதாக மன்னார் ஆயர் இராயப்பு அடிகளாரே வெளிப்படுத்தியிருந்தார். ஜிம்பிரவுண் அடிகளுக்கான துரோகம் தொடர்பில் சக வணபிதாக்கள் பலரும் இன்றுவரை கருவிக்கொண்டிருப்பதும் வெளியே தெரியாததொன்று.

இந்த வகையில் குடா நாட்டினில் காணாமல்போன ஒவ்வொரு இளைஞன், யுவதி தொடர்பிலும் துரோகங்கள் மறைந்தே கிடக்கின்றன. உடனே நடவடிக்கை எடுக்காத, கிராம சேவையாளர்கள், புகாரை ஏற்க மறுத்த பொலிஸார், உறக்கத்திலேயே கிடந்த அரச அதிபர், முறைப்பாடுகளை மட்டுமே கோவைகளில் கட்டிவைத்துவிட்டு காவலிருந்த மனித உரிமை அதிகாரிகளென இந்த துரோகங்களின் பின்னர் மறைந்திருப்பவர்கள் பலர். தமது உயிரையும் பாதுகாத்து, மறுபுறம் பதவிகளையும் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியவர்களாக அவர்கள் அப்போது இருந்தனர்.

யாழ். குடா நாட்டினில் காணாமல் போதல்கள் என்பது நீண்ட கால வரலாற்றை கொண்டேயிருக்கின்றது. கடலுக்கு தொழிலுக்கு சென்று கடற்படையினரால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்கள், பாதுகாப்பு வலயங்களுள் சிக்கிய உடமைகளைப் பார்வையிடப்போய் காணாமல் போனவர்களென, காணாமல்போனோர் பட்டியல் ஆரம்பமானது. சகோதர யுத்தத்தினால் கடத்தப்பட்டு மண்டையில் போடப்பட்டு காணாமல் போனவர்களது எண்ணிக்கையும் கணிசமானதே.

ஆனாலும் வகை தொகையற்ற கைதுகளும், காணாமல் போதல்களும் தொடங்கியது, யாழ், குடா நாடு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த 1996ம் ஆண்டுகளிலாகும். வலிகாமத்திலிருந்து பாரிய இடப்பெயர்வுக்குள்ளாகியிருந்த மக்கள், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவின் அன்பொழுகும் அழைப்பின் பேரில் ஊர் திரும்பிய வேளையில் தமது பிள்ளைகளை பறிகொடுக்க தொடங்கினர். நாவற்குழி களஞ்சிய முகாம் முன்பாக ஏற்கனவே பறிகொடுத்த தமது பிள்ளைகளை விடுவிக்க கோரி,கண்ணீருடன் கெஞ்சிக்கொண்டிருந்த அந்தத் தாய்மாரை தாண்டியே எல்லோரும் யாழ். திரும்பினோம்.

1996 முதல் 2002 வரையான சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலப்பகுதியினுள் மட்டும் சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் காணாமல் போயிருந்தனர். அதிலும் கைதடி – நாவற்குழியில் சுற்றி வளைப்பொன்றினில் ஒரே நாளில் பிடித்துச் செல்லப்பட்ட 34 இளைஞர்களும் இன்றுவரை வீடு திரும்பியிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் உறுப்பினர்களிருவர், வன்னிக்குச் செல்ல ஒரு சிலர் உதவியமையே ஒட்டுமொத்த இளைஞர்களும் காணாமல் போக காரணமாகியது.

மீண்டும் 2006 ஆகஸ்ட் 11 முதல் மூண்ட மோதல்களையடுத்து, இம்முறை காணாமல் போனோரது எண்ணிக்கை ஆயிரத்தினையும் தாண்டியுள்ளது. உண்மையில் இந்த நிமிடம்வரை காணாமல் போனவர்கள் தொடர்பான உண்மையான புள்ளிவிவரங்கள் எதுவுமே எத்தரப்பிடமும் இல்லை. காணாமல் போனவர்களை கடத்தியவர்களை தவிர.

பெரும்பாலும் காணாமல்போனவர்களில் கணிசமானோர் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் சாட்சிகள் உண்டு. இவை தவிர உள்ளுர் முகாம்களில், கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகியதில் உயிரிழந்தோர் அங்கங்கேயே புதைக்கப்பட்டனர். அவற்றில் ஒரு சில எலும்பு கூடுகளாக பின்னர் மீட்கப்பட்டிருந்தது.

உயர்பாதுகாப்பு வலயப்பகுதியினில்வைத்துப் படுகொலை செய்யப்பட்ட பின்னர் செம்மணி மற்றும் கைதடி வெளிப்பகுதிகளில் 2002ம் ஆண்டிற்கு முன்னர் கணிசமான உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது. இரவிரவாக இராணுவ டிரக் வண்டிகளில் எடுத்து வரப்படும் சடலங்கள் அப்பகுதிகளுக்கு பொறுப்பாக இருக்கும் படை அதிகாரிகளால் பொறுப்பேற்றப்பட்டு செம்மணி மற்றும் கைதடி வெளிகளில் புதைக்கப்பட்டன. இத்தகைய உற்சாகத்திலேயே கிருஷாந்தி குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டு, செம்மணியில் புதைக்கப்பட்ட கதை அனைவரும் அறிந்ததே.

உண்மையிலேயே காணாமல்போதல் சம்பவங்களுக்கு படைத்தரப்பே காரணமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் ஏற்றுக்கொண்டிருந்தார். இக்காணாமல் போதல் சம்பவங்களில் அரச படைகளுடன் அவர்கள் ஆதரவு பெற்ற தமிழ் ஆயுதக் குழுக்களும் நெருங்கிய வகையில் தொடர்பு பட்டதை குடா நாட்டு மக்கள் அறிந்திருந்தனர். அண்மையில் கொக்குவில் பகுதியில் தமிழ் இளைஞரொருவரை கடத்தி கப்பம் கோர படைத்தரப்பு முற்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், உடனடியாக தான் யாழ் மாவட்ட படைத்தலைமையிடம் இனிமேலும் நாங்கள் இவ்வாறெல்லாம் செய்ய முடியாதென சுட்டிக் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார். இங்கு நாங்கள் என்பதை இரு தடவைகள் வலியுறுத்தி கூறுவதன் மூலம், அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களை அச்சமூட்ட அவர் முற்பட்டிருக்கலாம். ஆனால் மறுபுறம், தன் வாயாலேயே அவர் தமது பங்கு பற்றிய உண்மைகளையும் ஒப்புக்கொண்டிருந்தார்.

கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள இளைஞர், யுவதிகளது குடும்பங்களது நிலையோ பரிதாபகரமானது. காணாமல் போன தமது உறவுகள் உயிருடன் உள்ளனரா? அவ்வாறாயின் எங்கே உள்ளனர் என கேள்விகளுடனேயே அவர்களது வாழ்க்கை தொடர்கின்றது.

பெரும்பாலான குடும்பங்கள், தமது உறவுகள் கொல்லப்பட்டிருக்கலாமென்பதை நம்ப இன்று வரை தயாராகவில்லை. அவர்கள் தமது கணவன்மார் அல்லது பிள்ளைகள் உயிருடன் இருப்பதையே நம்புகின்ற நிலையில். அவர்களை விடுவிக்க பரிதாபகரமாக அலைகின்றனர். அவ்வகையிலேயே அவர்கள் இலட்சக் கணக்கில் பணத்தை இழக்கும் பரிதாபகரமும் தொடர்கின்றது.

இவ்வாறான பணம் பறிப்பு பின்னணியில் படைப்புலனாய்வினரும், ஆயுதக் குழு பிரதிநிதிகளும் உள்ளடங்கியுள்ளனர் என்பது மறுக்கப்பட முடியாததொன்று. எனது நண்பரான வர்த்தகரொருவர் இதுவரை 22 இலட்ச ரூபாயை இவ்வாறு இழந்துள்ளாக கூறினார். கொழும்பு செல்ல, யாழ் நகர முகாமில் பாஸ் அனுமதி பெறச் சென்றவேளை அவரது மகன் காணாமல் போயுள்ளார். இளங்குடும்பஸ்தரான அவர் கடத்தப்பட்டவேளை, மனைவி கர்ப்பிணி. தற்போது குழந்தைக்கு மூன்று வயது, ; அவன் எனது மகன் நலமாக இருப்பதாக கூறும் உரையொன்றை, கைத்தொலைபேசியில் பதிவு செய்து தியேட்டரில் வைத்துப்போட்டுக்காட்டினான். அதை நம்பியே கேட்டபோதெல்லாம் பணங்கொடுத்தேன். இன்று அவனையும் தியேட்டரில் காணவில்லை, மகனையும் இதுவரை காணவில்லை என்றார் பரிதாகபரமாக.

இதுவோர் உதாரணம் மட்டுமே. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இவ்வாறு நம்பி ஏமாந்துள்ளன. அவ்வகையிலேயே அண்மையில் யாழ் நகரில் இடம் பெற்ற பணம் பறிப்பு சம்பவமும். இப்பணப்பறிப்பு வலைப்பின்னல் யாழுக்கு அப்பால் வவுனியா, மன்னார், கொழும்பு மற்றும் இந்தியாவரை நீண்டு பின்னப்பட்டுள்ளதே உண்மை. அந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த வகையினில் தான், யார், யாழ்ப்பாணம் வந்தாலும் தமக்கு விடிவு கிட்டுமென தேடி ஓடுகின்றார்கள். மனோ கணேசன் தொடங்கி; சரத், ரணில், டக்ளஸ் மகிந்த, மகிந்தவின் பாரியார் ஷிராந்தியென அது தொடர்கின்றது.

ஆனால் எல்லோரும் அவர்களையும் நல்லதோர் வாக்கு வங்கியாகவே இப்போது பார்க்கின்றனர். முன்னதாக மனித உரிமைகளை பெயர்களில் தாங்கி அரச சார்பற்ற அமைப்புக்கள் பலவும் செய்த மோசடி போலத்தான் இதுவும் இருக்கின்றது.

உண்மையில் காணாமல் போனவர்களது நிலைதான் என்ன? அவர்களில் பெரும்பாலானவர்கள் இல்லாமல் இருக்கலாம், சிலர் தென்னிலங்கை தடுப்புக் காவலில் இருக்கலாம் என்கின்றார் சரத் பொன்சேகா. அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அது உண்மையாக இருக்கலாம். ஏனெனில் இராணுவத்தளபதியாக இருந்து ஓய்வு பெறும் வரை அவரது நேரடி கண்காணிப்பிலேயே யாழ்ப்பாணம் இருந்தது. அவரது நம்பிக்கைக்குரியவர்களே தளபதிகளாகவும் இருந்தனர்.

கடத்தப்பட்டவர்களில் வீட்டில் வைத்து கடத்தப்பட்ட ஒரேயொரு பல்கலைக்கழக மாணவன் மட்டும், சில நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தான். அவனும் கூட பல்கலைக்கழக மாணவர்களது போராட்டத்தையடுத்தே விடுவிக்கப்பட்டிருந்தான். யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியுள்ள அவன், அந்த இருண்ட நாட்களை மறக்க தயாராக இல்லை. இரவில் வெள்ளை வானில் வந்தவர்கள் பெற்றோர் கதறக் கதற என்னை இழுத்துச் சென்றனர், கண்களையும், கைகளையும் பின்புறமாக கட்டிய நிலையில் என்னை, வானின் தரையில் படுத்தினர். கால்களால் நான் அசையாதவாறு நெரித்தபடி இருந்தனர். இரவிரவாக எங்கெங்கோ கொண்டு செல்லப்பட்டேன். எல்லா இடங்களிலும் அடி உதையும், சித்திரவதைகளும்தான்

கடைசியாக நான் நகரப் பகுதியிலுள்ள ஞானம்ஸ் ஹோட்டலுக்கு கொன்டு செல்லப்பட்டேன். அப்போது அதற்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் மார்க் முன்பாக (இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த இவரே தற்போதைய யாழ் மாவட்ட தளபதியாக பதவியுயர்வுடன் உள்ளார்) நிறுத்தப்பட்டேன்.. இதுவரை யாழில் காணாமல் போனவர்கள் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை காண்பிக்குமாறு அவர் தன் சிப்பாய்களுக்கு உத்தரவிட்டார்.;. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கொலை காட்சிகள் கதறவைத்தன. கழுத்து வெட்டிக் கொலை, தூக்கு தண்டனை, தலையில் சம்மட்டி அடி, ....... என ஒவ்வொருவரும் கொலை செய்யப்படும் காட்சிகள் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் என்னால் பார்வையிட முடியாது தலையை திருப்பிக்கொண்டேன். அதன் பின்னர் அவர் நீண்டதொரு பிரசங்கத்தை நடாத்தினார். நான் விடுவிக்கப்படுவேனென அக்கணத்தில் நினைத்திருக்கவேயில்லை என்றான்.

இதே போன்றே நாவற்குழி படுகொலையுடன் கப்டனிலிருந்து பதவியுயர்வு பெற்ற அதுல கொடிப்பிலி இன்று பிரிகேடியராக பதவியுயர்வுடன் உள்ளார். (நடேசன், புலித்தேவன் படுகொலையுடன் முக்கிய பங்காற்றியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளவர்களுள் ஒருவர்). ஒட்டு மொத்தத்தில் காணாமல் போனோரது விடயங்களுடன் தொடர்புபட்ட படையினர் எல்லோருமே பதவியுயர்வு பெற்றேயுள்ளனர்.

உண்மையில் 1998களின் பின்னர் உருப்பெற்ற யாழ் மாவட்ட காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கம், போராட்டங்கள் மற்றும் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல்செய்வதென மும்முரமாக செயற்பட்டது. ஆனாலும் சமாதான காலத்தில் புலிகளது தலையீடுகளால் அவ்வமைப்பே சிதைந்து போனது. அவ்வமைப்பு மீள கட்டியெழுப்பப்பட படைத்தரப்பு பின்னர் அனுமதித்திருக்கவில்லை.

தற்போதைய அவசர தேவை காணாமல் போனோரது குடும்பங்கள் ஒன்றிணைக்கப்படவேண்டும். தமக்காக அவர் கெஞ்சித் திரியவில்லை. போராடியே தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு தமிழ் சமூகம் முழு அளவினில் உதவவேண்டும்.

நன்றி: www.globaltamilnews.net

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.