Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவே மருந்து என்பது தமிழ் மரபு.

Featured Replies

வளமைக்கு அடித்தளம் உயிரியல் பன்மயம். கம்பெனி விதைகள் திணிக்கப்பட்டால் உயிரியல் பன்மயம் அழியும். பச்சைப் புரட்சிக் காலத்தில் இப்படி நமது 30 ஆயிரம் நெல் வகைகள் அழிந்ததை யாரும் மறுப்பதற்கு இல்லை. இந்தியாவில் கத்தரி ரகங்களுக்கு பஞ்சமில்லை. 'வரகசிரிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்' என்று அவ்வை பிராட்டி குறிப்பிடுகிற வழுதுணங்காய் நமது கத்தரியே. கத்தரிக்காயின் இனங்களில் பன்மயம் இருப்பது போல அவை பயிரிடப்படும் இடங்களிலும் பயிரிடும் முறைகளிலும் வேறுபாடு நிலவுகிறது. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளு கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய் திருச்சியில் அய்யம்பாளையம் கத்தரிக்காய் நெல்லையில் வெள்ளைக் கத்தரிக்காய்... இப்படி பட்டியல் நீள்கிறது.

சமைத்து உண்ணுவதில்கூட குழம்பு வைப்பது பொரியல் செய்வது, வருவல் செய்வது, வத்தலாக்கிக் குழம்பு வைப்பது, ஆட்டிறைச்சியுடன் கலந்து உண்பது என்று நுகர்வ முறையும் கூட பல்வகைப்பட்டன. மொத்தத்தில் கத்தரிக்காய் என்பது நமது மக்களின் கலாசாரம். இத்தகைய கலாசார சரிவைத்தான் முதலாவதாக எதிர்நோக்குகிறோம். இப்படி ஒரு பேரிழப்பை சந்தித்து நாம் எதை அடையப்போகிறோம்.

பி.டி. என்ற இரண்டு எழுத்துக்கள் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற இரண்டு சொற்களின் முதல் எழுத்துக்கள். பேசில்லஸ் என்பது ஒரு நச்சுக் கிருமி. அதன் ஒரு அணுவை கத்தரிக்காயின் விதைக்குள் புகுத்துகிறார்கள். எந்த ஒரு உயிரும் வெளியில் இருந்து வரும் மாற்று அணுவை ஏற்பது இல்லை. அதனால் ஏற்க வைக்கும் விதத்தில் துணை அணுக்களையும் சேர்த்து கோவையாக்கி மனிதருக்கு ஊசி குத்துவது போல அல்லது மனித உடலில் புல்லட் பாய்ச்சுவது போல நச்சு உயிரியின் அணுவை கத்தரி விதைக்குள் புகுத்துகிறார்கள். எதற்காக இப்படிச் செய்கிறார்கள்.

பி.டி. பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் வறுமை மறையும் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். இது உண்மைக்குப் புறம்பானது. 2008-ம் ஆண்டு மே மாதம் 60 நாடுகளைச் சேர்ந்த 450 விஞ்ஞானிகள் கூடி சர்வதேச ஆய்வு அறிக்கை வெளியிட்டார்கள். உலக வங்கி சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் அறிக்கை மாற்றுப் பயிர்களால் பஞ்சமோ, வறுமையோ மறையக் கூடியவை அல்ல, என்பதை விரிவாக விளக்கினார்கள்.

'கத்தரிச் செடியின் தண்டு அல்லது காயை ஒரு புழு துளைக்கிறது. அந்தப் புழுவை கொல்லக்கூடிய நஞ்சு பி.டி. கத்தரி விதையில் சுரக்கிறது' என்று சொல்கிறார்கள். அதனை 'பி.டி. புரதம்' என்று சொல்கிறார்கள். 'எல்லா நஞ்சுகளுமே புரதம்தான். விதையில் திணிக்கப்பட்ட நச்சு உயிரி விதை முளைக்கும்போது தனது சுரப்பை தொடங்குகிறது. செடி முழுவதற்கும் பரவி செடியைத் தின்னும் புழுவைக் கொல்லுகிறது' என்று கூறுகிறார்கள். 'கத்தரிக்காயை சென்றடையும் நஞ்சு புழுவை மட்டும்தான் கொல்லும். மனிதருக்கு எந்த தீங்கும் செய்யாது' என்று கம்பெனிக்காரர்கள் சொல்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்ன? எங்கு சோதிக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை.

இந்தியாவில் மூத்த உயிரியல் தொழில்நுட்ப விஞ்ஞானியான புஷ்பா பார்கவா 'ஒரு உணவு பாதுகாப்பானதா என்று கண்டறிவதற்கு நிறைய சோதனைகள் நடத்த வேண்டும். அந்தச் சோதனைகள் நடத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல மாறாக நடத்தப்பட்ட சோதனைகள் முறையாக செய்யப்படவில்லை. உணவு பாதுகாப்பானதா என்பதை சோதிப்பதற்கு உரிய ஆய்வுக்கூடம் இனிமேல்தான் நிறுவப்பட வேண்டி உள்ளது. பி.டி. கத்தரிக்காயை உற்பத்தி செய்த மான்சான்டோ - மகிகோ கம்பெனி கொடுத்த விண்ணப்பத்தில் உள்ள கருத்துக்களை நமது ஆராய்ச்சி நிறுவனங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டன. பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கி உள்ளார்கள். இப்படி அனுமதி வழங்கியது உலகத்தின் முன்பு இந்திய விஞ்ஞானத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது' என்றும் 'இந்திய அரசு பி.டி. கத்தரிக்கு அனுமதி வழங்குமானால் குடியாட்சி வரலாற்றில் அது மாபெரும் ஆபத்தாக முடியும்' என்றும் எச்சரித்து இருக்கிறார்.

தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் கூடுதல் பொதுச்செயலாளரும், மற்றும் இந்திய உயிரி மருத்துவ சங்க உறுப்பினருமான டாக்டர் உஷாராணி 'இந்தியாவில் மரபணு மாற்று உணவுகளை சரமாரியாக உட்கொண்டால் இனிவரும் சந்ததிகள் ஆண்மைக் குறைபாடுகள் உள்ளவர்களாகவோ மலட்டுத்தன்மை உள்ளவர்களாகவோ மூளை மற்றும் உடல் வளர்ச்சி குறைந்தவர்களாகவோ ஆக்குவதற்கு நாம் வழிவகுத்தவர்கள் ஆவோம்' என்று குறிப்பிடுகிறார்.

பி.டி. கத்தரி பாதுகாப்பானது என்று கூறும் விஞ்ஞானிகள் 'கத்தரியில் உருவாகும் புரதம் காரத்தன்மை கொண்ட புழுக்களை மட்டுமே அழிக்கும். மனித உடம்பில் அமிலத்தன்மை உள்ளது. ஆதலால் மனிதருக்கு தீங்கு பயக்காது' என்கிறார்கள். இதற்கு என்ன ஆதாரம்? இதை முறைப்படி நிரூபித்த பிறகுதானே பயிரிட அனுமதி கொடுக்க வேண்டும்.

ஏற்கெனவே மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உட்கொண்ட விலங்குகளுக்கு என்ன ஆனது என்பதை புரிந்துகொண்டால் பி.டி. கத்தரி என்ன செய்யும் என்பது புரிந்துவிடும். பி.டி. பருத்தியை உட்கொண்ட ஆடுகள் ஆந்திரம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் மடிந்துபோயின. ஆஸ்திரியா நாட்டில் எலிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் கொடுக்கப்பட்ட மரபணு மாற்று மக்காச்சோளம் இனப்பெருக்கச் சிக்கல் மற்றும் மலட்டுத் தன்மையை கொண்டு வந்தன. மரபணு மாற்று சோயா மொச்சையை சாப்பிட்ட எலிகளுக்கு பிறந்த குட்டிகளின் இறப்பு விகிதம் ஆறு மடங்கு அதிகரித்தது என்று ரஷ்ய அறிவியல் கழகம் கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பி.டி. பட்டாணியை உட்கொண்ட எலிகளுக்கு நுரையீரல் நோய் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பி.டி. வயல்களின் அருகில் வாழ்பவர்களுக்கு மகரந்தம் உதிரும் நேரத்தில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு தருமபுரி சேலம் மாவட்டங்களில் பி.டி. பருத்தி காய் வெடிக்காமல் உழவர்கள் கண்ணீர் வடித்தார்கள். அப்போது ஒரு ஏக்கருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் கம்பெனி கொடுத்த இழப்பீடு வேளாண் அமைச்சர் கைகளாலேயே வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2009-2010) தருமபுரி உழவர்கள் பயிர் செய்திருந்த மான்சான்டோ - ராசி கம்பெனி கொடுத்த பருத்திச் செடிகள் காய்க்கும் பருவத்தில் வாடி, வதங்கி நிற்கின்றன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மரபணு மாற்றுச் சோளத்தை உட்கொண்ட எலிகளின் சிறுநீரகங்கள் சிறுத்துப் போனதை மான்சான்டோ நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. இவை போக மான்சான்டோ கம்பெனி கட்டி அவிழ்த்து விட்ட பொய்களையும் திருட்டுத்தனங்களையும் ஜெஃப்ரி ஸ்மித் என்ற அமெரிக்க விஞ்ஞானி மரபணு சூதாட்டம் (ஜெனட்டிக் ரவுளட்) என்ற புத்தகத்தில் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இவ்வளவு தகிடுதத்தங்கள் நடந்திருந்தபோதும் அவசரம் அவசரமாக பி.டி. கத்தரிக்கு அனுமதி வழங்கியது எதற்காக?

ஒட்டகம் கூடாரத்திற்குள் மூக்கை நுழைப்பது போல இன்று கம்பெனிகள் திணிப்பது பி.டி. கத்தரிக்காய்! தொடர்ந்து பி.டி. தக்காளி, பி.டி. வெண்டை, பி.டி. நிலக்கடலை, பி.டி. மரவள்ளி, பி.டி. உருளை, பி.டி. மக்கா, பி.டி. சோயா எல்லாம் வரவுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும், ஆய்வுக்கூடங்களிலும் அமெரிக்க கம்பெனியின் ஆதரவுடன் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்க கம்பெனிகள் ஒட்டுமொத்த உலகப் பயிர் சாகுபடியை ஏகபோகமாக்குவதற்கு வலைவிரிப்பது புரிய வருகிறது. இதில் விவரம் அறிந்த ஐரோப்பிய நாடுகள் விலகி நிற்கின்றன. முதல் முதலாக ஒரு உணவுப் பயிர் இந்தியாவில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுவே பி.டி. கத்தரி.

உலகமயமாக்கத்தில் ஒரு பிரிவான காப்புரிமை சட்டத்தைப் பயன்படுத்தி பி.டி. மரபணுவுக்கு காப்புரிமையும் பெறுகிறார்கள். இதன் மூலம் உலகில் உள்ள அத்தனை உழவர்களும் கம்பெனிகளுக்கு கப்பம் (ராயல்டி) கட்ட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வருகிறார்கள்.

உணவே மருந்து என்பது தமிழ் மரபு. ஆனால் இப்படி பாக்டீரியாவை திணித்துத் தரும் கத்தரிக்காய் எப்படி மருந்தாகும்.

இந்த தலைப்பு நாவூற வாயூற பகுதியிலும் பார்க்க, அறிவியல் பகுதிக்கே மிக பொருத்தமானது (மட்டுறுத்துனர்களின் கவனத்துக்கு).

கட்டுரையாளர் சொல்வதை போல், எம்மிடம் இருக்கும் இனப்பல்வகைமை/ மரபணு பல்வகைமை இந்த மரபணுமாற்றப்பட்ட இனக்களை பயிர் செய்கைக்கு கொண்டுவரும் போது இல்லாது போகும் சாத்தியம வளர்முக நாடுகளில் அதிகம் என்றே நினைக்கிறேன். குறிப்பிட்ட தாவர வகைகளின் மரபணு பல்வகைமையை பேணுவதற்காகவே சில நாடுகளில் மரபணு வங்கிகள்??? செயற்படுகிறன. அவை ஒவ்வொரு வகை தாவரம், பயிர்களின் வெவ்வேறு வகை மாதிரிகளை பலவருடம் பாதுக்காப்பாக சேமித்து வைப்பார்கள் பிற்காலத்தில் குறிப்பிட்ட வகை பயிர்கள் தேவைப்பட்டால் அங்கிருந்து பெறலாம்.

உதாரணம் கத்தரி என்று வைத்துக்கொள்வோம்,

ஈழத்தில்

ஊதா, வெள்ளை, முட்டை வடிவம், நீண்டது, மட்டுவில் முட்டி என பலவகை கத்தரி வகைகள்.

ஆனால் அபிவிருத்தியடைந்து வரும் இப்படியான வேறுபட்ட வகையான பயிர் வகைகள் விவசாயிகள் தமக்கிடையை பகிர்வதுடன், தாங்களே விதைகளை உற்பத்தி செய்து பயன் படுத்திவந்தனர்/ பயன்படுத்தி வருகிறனர். பல சந்தர்ப்பங்களில் இப்படியான விவசாயிகளால் மட்டும் பேணி காக்கப்படும் பயிர் இனங்கள் மரபணு வங்கிக்ளை சென்றடைவதும் இல்லை. அதை செய்யும் வளமும், திட்டமும், ஆரவமும் வளர்முக நாடுகளில் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் மரபணு மாற்றிய தாவரங்கள் பயிர்ச்செய்கைக்கு வரும் போது பாரம்பரியமாக பயிரிடப்பட்ட தாவரங்களின் மரபணுக்கள் உலகத்தில் இல்லதே அழிந்து போகும் சாத்தியம் அதிகம். அவ்வாறு அழிந்தல் அவற்றை மீளப்பேற முடியாது.

இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லா விட்டாலும், ஈழத்தில் எனக்கு தெரிய இல்லாது போய்விட்ட ஒரு கத்தரி வகை, மட்டுவில் முட்டி கத்தரி எனும், பெரிய கத்தரிக்காய் வகை. இவை மட்டுவில் பகுதியில் உள்ள விவசாயிகளாலேயே பயிரிடப்பட்டுவந்தது. தென்மராட்சி இடப்பெயர்வின் போது மட்டுவில் மக்களும் இடம் பெயர்ந்தார்கள். இதனால் அவர்களால் அந்த கத்தரி வகையின் விதைகளை பேணி காக்க முடியவில்லை. நான் அறிந்த வரை இப்போது மட்டுவில் முட்டி கத்தரியை யாழில் காண முடியாது.

நெல் வகையில் மொட்டை கறுப்பன் (பூனகரி மொட்டை கறுப்பன் என்று) ஒரு நெல்லினம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போல பெரிய கறுப்பன், பச்சை பெருமாள் என பல நெல்லினங்கள் விவசாயிகளால் பாரம்பரியமாக பயிடப்பட்டு வந்தது. பெரிய கறுப்பன் எனும் வகை மிக உயரமாக வளரும், அதிக வெள்ளம் வரும் தாழ்வான வயல் பகுதிகளுக்கு ஏற்றது. ஆனால் அதிக விளைச்சல் தர மாட்டாதது. விளைச்சல் அதிகம் தராத காரணத்தால் விவசாயிகள் பெரிய கறுப்பனை பயிரிடுவதை நிறுத்தி விட்டார்கள், ஏனெனில் அதிக விளைச்சல் தரும் பல நெல் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவை பாவனைக்கு வந்து விட்டன. இப்போது பெரிய கறுப்பன் நெல் வகை எனக்கு தெரிந்து ஒரு இடமும் கிடைக்காது. எமக்கு ஏதும் தேவைக்கு பெரிய கறுப்பன் நெல்லின மரபணுக்கள் தேவை என்றால் அவை எமக்கு இனி எப்போதும் கிடைக்காது.

Edited by KULAKADDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.