Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'முதலாம் விடிவெள்ளி'

Featured Replies

காட்சி - ஒன்று

இடம் : தமிழீழத்துக் கடற்கரையோரம் ஒரு குடிசை

பாத்திரங்கள் : சிற்பி, ஒரு பெரியவர்

நேரம் : மதியம்

(குடிசைக்குள் "டக் டக்" என்ற ஒலி எழும்பிக்கொண்டிருக்கிறது. தூரத்தே கடலலைகளின் ஓயாத இரைச்சல் ஒலித்துக்கொண்டிருக்கிறது...

குடிசையை நோக்கி அந்தப் பெரியவர் வந்து கொண்டிருக்கிறார்)

பெரியவர்: அதோ! ஒரு குடிசை தெரிகிறதே! அங்கே போய் யாராவது இருந்தால் உதவி கேட்போம்! ('டக் டக்' - ஒலி ஓயவில்லை)

குடிசைக்குள் யாரய்யா? (பெரியவருக்கு கீழ்மூச்சு - மேல் மூச்சு வாங்குகிறது)

சிற்பி : (குடிசைக்கு வெளியே ஓடி வந்து) வாருங்களய்யா! வாருங்கள்! இப்படி உடம்பெல்லாம் நனைந்து, மூச்சு வாங்க வருகின்றீரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன நடந்தது?

பெரியவர்: சொல்கிறேன்! ஐயா! (தடுமாறுகிறார்)

சிற்பி : ஐயா! இதோ இந்தக் கல்லின் மீது அமருங்கள்! சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் பிறகு பேசலாம்!

பெரியவர்: ஐயா! குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?

சிற்பி : ஓ! தாராளமாக! கொஞ்சம் இருங்கள், இதோ வந்து விடுகிறேன்!

(சிற்பி, குடிசைக்கு வெளியே சென்று, அங்கிருந்த இளநீர்

இரண்டையெடுத்து, அதன் தலையைச் சீவி உள்ளே எடுத்து வருகின்றான்)

சிற்பி : ஐயா! இதோ இந்த இளநீரைக் குடித்து உங்கள் தாகத்தை நீக்குங்கள்! இது தமிழீழத்து இளநீர்! மிகவும் இனிப்பாக இருக்கும்!

பெரியவர்: உங்கள் மக்களின் இனிமைப்பேச்சை விடவா? (சிரிக்கின்றார்)

சிற்பி : ஓ! ஓ! (மிகவும் ஆச்சரியத்துடன்) நன்றாகச் சொன்னீர்கள்! நம் செந்தமிழ் இனிமையான மொழிதானே! அதுதான் அப்படிச் சொல்லி விட்டீர்கள்!

(இருவரும் சேர்ந்து சிரிக்கின்றனர்)

பெரியவர்: அப்பாடா! இப்போது கொஞ்சம் களைப்பு நீங்கிவிட்டது ஊம்; இருந்தாலும் வெயிலின் கடுமை இன்னும் குறைந்த பாடில்லையே!

சிற்பி : இந்த ஓலைக் குடிசை 'குளு குளு' வென்று இருக்குமே! இங்கே, வெப்பம் அவ்வளவாக இருக்காதே!

பெரியவர் : ஆமாம்! ஆமாம்! (தலையை ஆட்டிவிட்டு) இதென்ன? கல்லில் எதையோ செதுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

சிற்பி : ஆமாம்! சொல்கிறேன், கேளுங்கள்! இது ஒரு சிலை! எங்கள் தமிழீழத்தின் மாபெரும் விடுதலை வீரன், தானைத் தளபதி, வெற்றி வேங்கை பிரபாகரன் அவர்களின் உருவத்தையே சிலையாக வடித்துக்கொண்டிருக்கிறேன்.

பெரியவர் : (ஆச்சரியத்துடன்) பிரபாகரனுக்குச் சிலையா?

சிற்பி : ஆமாம்! எங்கள் தமிழீழம் சுதந்திரம் பெற்று, இரண்டு நாட்களாகிவிட்டன. கேள்விப்படவில்லையா?

பெரியவர்: (சற்று தாழ்வான குரலில்) சில நாள்கள் கடலில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த எனக்கு, இதெல்லாம் எப்படியய்யா தெரியும்?

சிற்பி : அப்படியா? தமிழீழம் விரைவில் விடுதலை பெற்றுவிடும் என்பதை அறிந்து கொண்ட நான், அந்த வெற்றி வீரனுக்கு ஒரு சிலை வைப்போமே! என்ற உணர்வின் மேலீட்டால், சுமார் மூன்று மாத காலமாக, இங்கே இந்தச் சிலையைச் செதுக்கிக் கொண்டிருக்கிறேன்! அதற்கேற்றாற்போல், இரண்டு நாட்களுக்கு முன் சுதந்திர தமிழீழம் அமைந்துவிட்டது. இல்லை, இல்லை! போர் செய்து வெற்றியுடன் அடைந்துவிட்டோம்.

பெரியவர்: மகிழ்ச்சி! பெரிய மகிழ்ச்சி! நான் அண்டை நாடான தமிழகத்தில் தூத்துக்குடியில் வாழ்கிறேன்! மீன் பிடிப்பது என் தொழில்! எனது மீன் பிடிக்கும் மரக்கலம் கடலில் உடைந்து போனதால், அலைகளில் போக்கில் நீந்தி, நீந்தி இக்கரையை அடைந்தேன்! கடலில் இருக்கும் போது இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லையே!

சிற்பி : பாதகமில்லை! எப்படியோ உயிர் பிழைத்து வந்து சேர்ந்து விட்டீர்கள்!

பெரியவர்: எப்போதும் கடற்படை ரோந்து கப்பல்களால் அமளி துமளிபடும் ஈழத்துக்கடல் ஏது? இவ்வளவு அமைதியாக இருக்கின்றதே! என்று பார்த்தேன்! ஆமாம்! எதிரிகள் என்னைப் பார்த்திருந்தால் விட்டு வைப்பார்களா, என்ன?

சிற்பி : இனிமேல் நமது கடற்பகுதியில் எதிரிகள் வாலாட்டமுடியாது! நீங்கள் நிம்மதியாக மீன் பிடிக்கலாம்!

(இருவரும் சிரிக்கின்றனர்.)

பெரியவர்: தமிழனுக்கென்று ஒரு நாடில்லை! அவர்களுக்கென ஒரு நாடு, அதுதான் தமிழீழம்; எப்போது அமையுமென்று நானெல்லாம் ஏங்கியதுண்டு.

சிற்பி : (இடைமறித்து) நீங்கள் மட்டுமல்ல! தமிழனாய்ப்பிறந்த ஒவ்வொருவரும், அவர்கள் எங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, அவர்களுக்கும் இந்த உணர்வு அதிகம் இருந்தது என்றே சொல்லலாம்!

பெரியவர்: ஆமாம்! உலகின் நாடற்ற மக்களாக இந்தத் தமிழர்கள் என்னதான் செய்ய முடியும்?

சிற்பி : உலகத்தில் சிறிய மக்கள் தொகை கொண்ட நாடெல்லாம் சுதந்திர நாடுகளாக, மகிழ்ச்சியாகச் செயல்படுகின்றன. ஏறக்குறைய ஏழுக் கோடி மக்களைக்கொண்ட தமிழருக்கு ஒரு நாடு இல்லை; மிகவும் வேதனையாக இருந்தது.

பெரியவர்: (குறுக்கிட்டு) வேதனை மட்டுமல்ல; மிகவும் அவமானமாகவும் இருந்தது.

சிற்பி : அந்தச் சூழ்நிலை இப்போதில்லை; நாம் சுதந்தரத் தமிழீழத்தின் மக்கள்! இனிமேல் தமிழர் தலை நிமிர்ந்து வாழலாம்!

பெரியவர்: சரியாகச் சொன்னீர்கள்! ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாய் ஆண்டிருந்த தமிழினம் பலவிதக் கொடுமைகளால், அந்நியரிடம் அடிமைப்பட்டு, வாழ்ந்ததை எண்ணிப் பார்க்கும் போது மிகவும் வேதனையாகத்தான் இருக்கின்றது.

சிற்பி : ஆமாம்! நம் முன்னோர்கள் சிறப்பாகத் திட்டமிட்டு, செயல்படவில்லை யென்று சொல்லலாமா?

பெரியவர்: அதுதான் உண்மை! ஒற்றுமையின்றிச் சிதறுண்டு, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, எதிரியிடம் காட்டிக் கொடுத்து வாழ்ந்ததாலே, அவர்கள் நம்மை வெகு எளிதில் ஏமாற்றி ஏறி தலைமேல் உட்கார்ந்து விட்டனர்!

சிற்பி : (சற்று உரத்த குரலில்) இந்தக் கசப்பான உண்மைகள் தமிழ் மக்களுக்கொரு பாடம்!

அதோ! பாருங்கள்! ஒரு மாட்டுவண்டி வருகிறது! அதில் இள முல்லையென இரு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிங்கே சற்றுநேரம் தங்கி இளைப்பாறித்தான் செல்வார்கள்.

அவர்களோடு உங்களை நகருக்கு அனுப்பிவைக்கிறேன். அங்கே மக்கள் சத்திரத்தில் தங்கியிருந்து, நாளை மாலை சமுதாய வீதியில் நடைபெறவிருக்கும் 'சுதந்தரத் தமிழீழத்தின்' அறிவிப்பு விழாவில் கலந்து கொள்ளுங்கள்.

பெரியவர்: ஆகட்டும்! நண்பரே!

சிற்பி : நாளை உங்களைச் சத்திரத்தில் சந்திக்கிறேன்!

இந்தப் பெண்கள் சத்திரத்தில் பொதுச்சேவை செய்பவர்கள். உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள்! சரி, புறப்படுங்கள்!

("சல்-சல்"- என்ற ஒலியுடன் மாட்டுவண்டி நகர்கின்றது).

இளமுல்லை : (பாடுகின்றாள்)

"கன்னித்தமிழ் ஈழத்திலே! " மணக்கும் கவிதை கொஞ்சம் பாடுங்களேன்!

(ஆய்! உர்! வேகமாய் ஓடுங்கள் காளைகளே! - கன்னித்தமிழ் ------

  • தொடங்கியவர்

காட்சி இரண்டு

இடம் : யாழ் நகரத்து சமுதாய வீதி!

மாபெரும் விழா மேடை!

பாத்திரங்கள் : வெற்றித்திருமகன் பிரபாகரன், மாவண்கிள்ளி, கரிகாலன், இளமாறன், நெடுஞ்சேரலாதன், இளமதி போன்ற முக்கிய தலைவர்கள்.

நேரம் : மாலை ஐந்து மணி.

(மேடையின் முன்புறம் மக்கள் கடல் அலையென திரண்டு கூடியுள்ளனர்.)

(ஒலிபெருக்கி அறிவிப்பு! 'இப்பொழுது வெற்றித்திருமகன் பிரபாகரன் அவர்கள் பேசுவார்கள்'.)

பிரபாகரன்: எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

எம் அன்பிற்கும், மரியாதைக்குமுரிய தமிழீழத்துத் தமிழ்ப் பெருங்குடி மக்களே!

(நா-தழுதழுக்கிறது - கண்களில் கண்ணீர் குளம் கட்டுகிறது. சற்றே அமைதி) எல்லோருக்கும் எம் இனிய வணக்கம்!

(கை கூப்பிச் சொல்கின்றார் - கூட்டத்தில் ஒரே அமைதி)

இன்று நாம் சுதந்திரத் தமிழீழத்தின் மக்கள்!

இப்போது நாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாலும், ஒரு புறம் வேதனையையும் தாங்கிக்கொண்டு இங்கே நிற்கின்றோம்!

ஆயிரங்கணக்கான வீரர்கள் , வீரமகளிர் வடித்திட்ட குருதியின் மேல்தான் இந்தச் சுதந்திரத் தமிழீழம் அமைக்கப்பட்டுள்ளது! என்பதை நினைவில் கொண்டு அவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌனப் பிராத்தனை செய்வோம்!

(எல்லோரும் அமைதியாக எழுந்து நிற்கின்றனர்! , இரண்டு நிமிடங்கள் கழிந்து)

நன்றி! நன்றி!

'எம் இனிய தமிழ்மக்களே!

நாம் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல! எதிரியின் கொடுமைகளுக்கு ஆளான தாய்மார்கள்! மகனை, மகளை வீரப்போருக்கனுப்பி இழந்துவிட்ட பெற்றோர்கள், பசியால், பட்டினியால் மடிந்தவர்கள், எதிரியின் வல்லுறவுக்கு ஆளாகி, மானத்தைக் காக்க மாண்டு போனவர்கள், - எதிரியின் சிறைச் சாலைகளில் வீரர்கள் பட்ட கொடுமைகள் பச்சிளங் குழந்தைகளின் கொலை! நாடிழந்து, வீடிழந்து, உறவிழந்து புலம் பெயர்ந்துபோன மக்கள் இப்படிச் சொல்லொண்ணாத் துன்பங்களை நம் மக்கள் அனுபவித்து விட்டனர்.

இவ்வளவுக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை.

சிறுபான்மை மக்களென நம்மை வாட்டி வதைத்ததோடு, உரிமைகளையும் பறித்துக்கொண்டனர். பிறந்த மண்ணிலே சொந்தத் தாயகத்தில் அழுத்தப்பெற்ற மக்களாக ஆக்கப்பட்டோம்.

ஒரு காலத்தில் ஆண்டிருந்த மக்கள் மீண்டும் தங்கள் தாயகத்தை ஆள நினைப்பதில் என்ன தவறு? உரிமைகளை நிலைநாட்டுவதில் என்ன தவறு?

கூட்டத்தில் ஒருவர் : தவறில்லை! தலைவா! தவறில்லை! கடந்த காலக் கசப்பினை மறப்போம்! இனி நமது சுதந்திரத் தமிழீழத்தைக் கட்டிக் காப்பதோடு, சீர்கேடுகளையெல்லாம் களைந்து புதுமைத் தமிழீழத்தைச் அமைப்போம்!

மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும்! இழந்தவற்றை மீட்போம்; அவற்றைச் செப்பனிடுவோம்!

இன்னும் நாட்டின் சட்டதிட்டங்கள் வரையப்படவில்லை. சட்டதிட்டங்கள் முழுமை பெற்றவுடன், பொதுத்தேர்தல் வழி மக்கள் நாடாளுமன்றப் பேராளர்களைத் தேர்ந்தெடுக்கலாம்! பின்னர், அமைச்சரவை அமைக்கப் பெற்று, நாட்டு நிருவாகம் முறையாகச் செயல்படும், தமிழ் ஆட்சிமொழியாகும்; ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இயங்கும்.

அதுவரை, நாட்டின் மூத்த அறிஞர்களைக் கொண்டு ஐவர் அடங்கிய குழு நாட்டின் நிருவாகத்தை நடத்தி செல்லும். மக்கள் யாவரும் முழுமையாக முழுமையான ஆதரவை வழங்கி காக்க வேண்டும்!

மக்கள் எவ்வித அச்சமுமின்றி நிம்மதியாக அன்றாட வாழ்க்கையைத் தொடரலாம்! எல்லைப் பகுதி, முக்கிய இடங்களில் எம் தலைமையின் கீழ் போர் வீரர்கள் சேவையில் ஈடுபட்டு, காத்து வருவர்!

நமது நாட்டின் தேசியக்கொடி புலிச்சின்னம் பொறித்த சிவப்புநிறக்கொடி. அதோ! அந்தக் கம்பத்தில் மிகவும் கம்பீரமாகப் பறக்கிறது. தாய் மணிக்கொடியை வணங்கிக் காப்போம்! நன்றி! நன்றி! வாழ்க! தமிழீழம்!

அறிவிப்பாளர் : (ஒலிபெருக்கி வழி) அடுத்து மூத்த அறிஞர்களில் ஒருவரான உயர்திரு. கரிகாலன் அவர்கள் பேசுவார்!

கரிகாலன் : எம் அன்பு சுதந்திர தமிழீழத்துத் தமிழ் மக்களே! வணக்கம்.

இங்கே அமைக்கப்பெற்ற ஐவர் கொண்ட குழுவில் எனக்குப் பொதுத்துறை வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக மக்களின் பிரச்சினை, தொடர்பு வசதிகள், தண்ணீர், மின்சாரம் பொதுப் போக்குவரத்து முதலியவற்றைக் கவனித்துக்கொள்வேன்!

குறிப்பாகச் சுதந்திரத் தமிழீழத்திற்கென்று ஒரு புதிய தலைநகரம் உருவாக்கப்படவேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ளது போல, சகல நவீன வசதிகளையும், விசாலமான சாலைகளையும், நவீன வீடுகளையும் அந்நகரம் கொண்டிருக்கும்!

இயற்கையோடு கூடிய பூங்கா நகராக, எழில் மிகுந்த நகரமாக அமைக்கப்படும். மக்களுக்கு சுமையில்லாத வகையில், உறவு நாடுகளிலிருந்து பொருளுதவிப் பெற்று, அந்நகரம் அமைக்கப்படும். அதுவே நம் தாயகத்தின் நினைவுச்சின்னம்! வணக்கம்!

அறிவிப்பாளர் : தொடர்ந்து கவிஞர் மாவண்கிள்ளி அவர்கள் உரையாற்றுவார்கள்!

மாவன்கிள்ளி : மதிப்பிற்குரிய தமிழ்க்குடிமக்களே!

வணக்கம். சுதந்திரத் தமிழீழத்தில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு கல்வித்துறையாகும்!

இத்துறையே ஒரு நாட்டின் கண்களெனப் போற்றப்படும். நவீன காலத்திற்கேற்பப் புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படும். சைவமும்

தமிழும் தழைத்தோங்கிய நமது நாட்டின் கல்வியில் மீண்டும் இவை

இடம்பெறுவதோடு, காலத்திற்கேற்ப அறிவியல், பொறியியல், மருத்துவ இயல், கணிதவியல், ஆகியவற்றோடு கணினி தொழில் நுட்பத்துறை, குறிப்பாகத் தொழிலியற்கல்வி போன்றவை இடம் பெறும்; தமிழே ஆட்சிமொழி!

தாய்த் தமிழீத்திற்காகப் போராடி உயிர்கொடுத்த வீரர்களின் வரலாறும் தவறாமல் பாடநூல்களில் இடம் பெறும், மக்கள் வழங்குகின்ற கருத்துகளையும் மனதிற் கொண்டு கல்வித்துறை இயங்கும் நன்றி!

சுதந்திரத் தமிழீழம் வாழ்க!

அறிவிப்பாளர் : இதோ! வருகிறார் உயர்திரு இளமாறன் அவர்கள்.

இளமாறன் : என் அன்புக்குரிய பழங்குடித் தமிழ்ப்பெரு மக்களே! வணக்கம்.

வேளாண்மைத்துறையும், மக்கள் நலத்துறையும் எமக்களிக்கப்பட்டவை. மக்கள் தொடர்ந்து வேளாண்மையில் ஈடுபட வேண்டும். போதிய உதவிகளை இத்துறை வழங்கும்.

தானிய உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு பெற்றால், யாரிடமும் உணவிற்காகக் கையேந்தும் நிலை வராது. மேலும் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

மக்கள் உடல் நலத்துறை எல்லா விதமான உதவிகளையும் வழங்கி நோயிலிருந்து விடுபட்டு வாழ உதவி செய்யும், குழந்தைகள் நலனில் அதிக அக்கறை செலுத்த திட்டமிட்டுள்ளோம்,

சுதந்திர மண்ணின் எதிர்காலத் தலைவர்கள் அவர்கள் தாமே! குழந்தை பிறப்பை ஊக்கப்படுத்தி உதவி நிதிகள்

வழங்குவோம்! நன்றி! நன்றி!

அறிவிப்பாளர் : ஏனையத் துறைத்தலைவர்கள் தங்கள் பொறுப்பின் விளக்கங்களைத் தமிழீழத்துச் சுதந்திர வானொலியில் வெளியிடுவார்கள்! இப்போது தலைவர் பிரபாகரன் அவர்கள்...... மீண்டும் பேசுவார்!

பிரபாகரன் : (எழுந்து மேடைக்கு முன்னால் வந்து - தம் கைகளை மேலே உயர்த்தி - உரத்த குரலில்)

தமிழீழம் வாழ்க!

மக்கள் கூட்டம் : தமிழீழம் வாழ்க! வாழ்க!

தமிழ் மக்கள் வாழ்க!

மக்கள் கூட்டம் : தமிழ் மக்கள் வாழ்க! வாழ்க!

பிரபாகரன் :இதுகாறும் சீர்குலைந்து வாழ்க்கையில் மனம் வெதும்பிப்போய் எப்படியோ வாழ்ந்து கொண்டிருந்த மக்கள், இப்போது மகிழ்ச்சியாய் இருப்பதைக் காண்கிறேன்; இது தொடர வேண்டும்!

விடுதலைப் போராட்ட உணர்வுகள் மதிக்கப்பட, போற்றப்படவேண்டியவை!

எம் மக்களுக்கு ஒன்றைச் சொல்வேன்: நாளை விடியலில் கிழக்கே தோன்றும் விடிவெள்ளியே சுதந்திரத் தமிழீழத்தின் முதலாம் விடிவெள்ளி! அது தோன்றும்போது நமக்கும் விடிவு பிறந்து விட்டது அல்லவா? நாளைய விடியலில் அந்த முதல் விடிவெள்ளியைக் காணத் தவறாதீர்கள்!

மக்கள் கூட்டம் : (மகிழ்ச்சி பொங்க) ஆகட்டும் தலைவா!

பிரபாகரன் : உங்களுக்கு எம் சிந்தனை விருந்தை அளித்துள்ளேன்! ஆய்ந்தறிந்து

தெரிந்து கொள்வது மக்களைப் பொறுத்தது. விடிவெள்ளி முளைக்கும்போது நம் மனத்தும் மறுமலர்ச்சி எண்ணங்கள் உதயமாக வேண்டும்; அதுவே நம் வெற்றியின் அடித்தளமாக அமைந்து விடும். அடக்குமுறையால் மக்களின் உணர்வை அடக்கி, ஒடுக்க முடியாது என்பதை உலகோர் உணரட்டும்! பறவைகளுக்குச் சுதந்திரமாகப் பறந்து திரிந்து வாழ்கின்ற உரிமை இருக்கும்போது, அது ஏன் மக்களுக்கு இருக்கக் கூடாது? சிந்தியுங்கள்! வணக்கம்! வாழ்க!

  • தொடங்கியவர்

காட்சி - மூன்று

இடம் : யாழ் நகரில் மக்கள் சத்திரம்.

பாத்திரங்கள் : சிற்பி, பெரியவர்.

நேரம் : காலை.

(பெரியவர் தம் காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு, வெளியே முற்றத்தில் வந்து அமர்கின்றார். சிற்பியும் அவரைத் தேடி வந்துவிட்டார்.)

சிற்பி : (மகிழ்ச்சியோடு) ஐயா! பெரியவர் அவர்களே! காலைச் சிற்றுண்டியெல்லாம் முடிந்ததா?

பெரியவர்: ஆமாம்! முடிந்தது! இங்கே இளமுல்லையும், இளமல்லியும் என்னை நன்றாகவே கவனித்துக் கொண்டனர். பெயருக்கேற்ற குணமுள்ள மகளிர் இருவரும் பல்லாண்டு நலமே வாழ வேண்டும்!

சிற்பி : (சிரித்துவிட்டு) பெரியவர் ஆசி நலம் பெறட்டும்! ஆம்; வந்த வேலையை மறந்துவிட்டேன் பார்த்தீர்களா?

இன்று மாலை, உங்கள் நாடு திரும்புவதற்கான பணிகளைச் செய்து முடித்துவிட்டேன்!

மன்னார்த்துறையிலிருந்து கப்பல் மூலம் தங்கள் நாட்டிற்குச் செல்லலாம்! ம்! புறப்படுங்கள்! வெளியே பேருந்து நிலையத்திற்குச் செல்வோம்!

(இருவரும் பேசிக்கொண்டே நடக்கின்றனர்.)

பெரியவர்: சிற்பியாரே! உங்களின் இந்த உதவிக்காகப் பெரிதும் நன்றி நவில்கின்றேன்! உங்கள் அன்பான, கனிவான உபசரிப்பு என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது! ஆமாம்; நான் உங்கள் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா? என் பெயர் இளங்கோ!

சிற்பி : ஆமாம்; நானும் சொல்ல மறந்துவிட்டேன்! பொறுத்தருள வேண்டும்! என் பெயர் கதிரவன்!

பெரியவர்: நல்ல பெயர்! பெயருக்கேற்றவாறு உங்கள் பணியும் சுறுசுறுப்பாகவே இருக்கின்றது!

சிற்பி : அதிகம் புகழ்கின்றீர்கள்!

(இருவரும் "கொல்" லென்று சிரிக்கின்றனர்)

பெரியவர்: தமிழீழத்து விடுதலை வீரனை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்காகப் பெரிதும் மகிழ்கின்றேன்! அவ்வீரனை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை!

சிற்பி : உங்கள் துடிதுடிப்பு எனக்குப் புரிகின்றது!

பெரியவர்: தமிழீழத்தின் விடுதலைப் போராட்ட வீரன். போரில் மட்டுமல்ல, பேச்சிலும் வல்லவர்! தம் கருத்துகளை மிகவும் ஆணித்தரமாக, நிதானத்தோடு, மக்கள் மனத்தில் விதையாகத் தூவிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது!

சிற்பி : இன்னும் சிலையமைப்பு முழுமைபெறாத காரணத்தால் பிறிதொரு நாளில் அச்சிலையின் திறப்பு விழா நடைபெறும்.

பெரியவர்: (சற்று உணர்ச்சியுடன்) அவசரம் வேண்டாம்! நிதானமாக, சிறப்பாகச் செய்ய வேண்டும்.

கல்லிலே கலைவண்ணம் காணவேண்டாமா, என்ன? (இருவரும் சிரிக்கின்றனர்)

சிற்பி : சிலை திறப்புவிழாவில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அப்போது உங்கள் நாட்டுப் கடப்பிதழ் பயன்படுத்த வேண்டும்! மறவாதீர்கள்! ஒருவேளை, தமிழகமும், தமிழீழமும் அண்டை நாடுகளுக்கு மட்டும் சென்றுவர சிறப்புக் கடப்பிதழ் வெளியிடக்கூடிய சாத்தியமுண்டு.

பெரியவர்: (குறுக்கிட்டு) மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் உள்ளதுபோல, என்று சொல்கிறீர்கள்?

சிற்பி : ஆமாம்! ஆமாம்! சரியாகவே தெரிந்து வைத்துள்ளீர்கள்! அழைப்பு உங்களைத் தேடி வரும். அவசியம் கலந்துகொள்ள வேண்டும்!

பெரியவர்: ஆகட்டும் நண்பரே! வல்லவன், நல்லவன் சிலை திறப்பு விழா! நானில்லாமலா?

(இருவரும் வாய்விட்டுச் சிரிக்கின்றனர்)

பல்லாயிரக்கணக்கான மக்களோடு நானும் கலந்து கொள்வேன்!

சிற்பி : 'புதியதோர் உலகம் செய்வோம்! - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!" என்று எங்கள் தலைவர் மிகவும் உணர்ச்சி மேலிட்டால் சொன்ன வரிகளைக் கேட்டீர்களா?

பெரியவர்: அதுமட்டுமல்ல! மிகவும் பெருந்தன்மையோடு

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" - என்று சொல்லி உலகோர் மனத்தில் இடம் பிடித்தாரே அதை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை!

சிற்பி: ஒன்றுபட்ட தமிழ் மக்களாக வாழ்வோம்! சரி நேரமாகிறது! சென்று வாருங்கள்! நன்றி!

___________x___________

குறிப்பு:

(கதையும், கதை மாந்தர்களும் கற்பனை)

(ஒருவேளை, நாளை உண்மையாகலாம்.)

ஆக்கியவர் : பெ.மு.இளம்வழுதி

நன்றி செம்பருத்தி.

  • தொடங்கியவர்

நன்றி இராவணன் அண்ணா :)

தலைப்பு சரியாக உள்ளது .

மிகவும் நல்லாயிக்கு உங்கள் கற்பனை வளம்.... .மிகவும் அருமை. நன்றி

தமிழனின் பண்பாட்டையும் எதிர்கால அரசியல் நிகழ்வுகளையும் மிகவும் அருமையாக எமது தமிழில் கூறியுள்ளிர்கள். வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

மிகவும் நல்லாயிக்கு உங்கள் கற்பனை வளம்.... .மிகவும் அருமை. நன்றி

தமிழனின் பண்பாட்டையும் எதிர்கால அரசியல் நிகழ்வுகளையும் மிகவும் அருமையாக எமது தமிழில் கூறியுள்ளிர்கள். வாழ்த்துக்கள்

ரமா இதை எழுதியது நான் அல்ல. :)

எழுத்தாளர் பெ.மு.இளம்வழுதி

பி.கு : ஆக்கம் யாருடையது எங்கிருந்து கிடைக்கப் பெற்றது என்ற விடயங்கள் நாடகத்தின் முடிவிலேயே குறிப்பிட்ப் பட்டிருக்கிறது..

  • தொடங்கியவர்

தமிழனின் பண்பாட்டையும் எதிர்கால அரசியல் நிகழ்வுகளையும் மிகவும் அருமையாக எமது தமிழில் கூறியுள்ளிர்கள்.

அப்படியானால் என் தமிழ் வேறா :?: :?:

மன்னிக்கவேண்டும் கரிகாலன் மாறி கூறிவிட்டேன்

இந்த தகவல்களை இனைத்ததிற்கு நன்றி

நாடகம் நன்றாக இருக்கிறது.. :) இங்கு இணைத்தமைக்கு

நன்றி கரிகாலன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடகம் நல்லா இருக்கண்ணா :) இங்க போட்டதுக்கு

நன்றி அண்ணா

நாடகம் நன்றாக இருக்கிறது.. இணைத்தமைக்கு

நன்றி கரிகாலன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான நாடகம் கரிகாலன் இணைத்தமைக்கு நன்றி :P :P

நாடகம் நன்றாக இருக்கிறது நன்றி கரிகாலன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்குநாடகம் நன்றி கரிகாலன்

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நாடகம் நன்றாக இருக்கிறது. இணைத்தமைக்கு நன்றி கரிகாலன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.