Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒஸ்லோ ‘பிரகடனத்தை’ புலிகள் ஏற்றார்களா? இல்லையா?

Featured Replies

ஒஸ்லோ ‘பிரகடனத்தை’ புலிகள் ஏற்றார்களா? இல்லையா?

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய அமைப்புக்களிடையே எழுந்த வாதம் ஒன்று நம் கவனத்தை ஈர்த்தது.

சிறிலங்கா அரசாலும் விடுதலைப் புலிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒஸ்லோ ‘பிரகடனத்தை’ அடிப்படையாக வைத்தே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முன் வைக்கும் தீர்வுத் திட்டம் அமையும் எனக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தெரிவித்திருந்தார்.

பொங்குதமிழ் இணையத்திற்காக எழுதியவர் தாமரை காருண்யன்

ஒஸ்லோ ‘பிரகடனம்’ புலிகளால் எற்றுக் கொள்ளப்படவில்லை என தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தனது எதிர் வாதத்தை முன்வைத்தது.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுக்கு இறுதி மரியாதை செய்யச் சென்றிருந்த வேளை, கூட்டமைப்புச் செயலர் மாவை சேனாதிராஜா விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டதாகவும் இச் சந்திப்பில் பிரபாகரன் இதனை மாவைக்குத் தெரிவித்திருந்ததாகவும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கூறுகிறது.

இத் தகவலை மாவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் தெரிவித்ததாகவும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மேலும் தெரிவிக்கிறது.

உண்மையில் நடந்தது என்ன? ஒஸ்லோ ‘பிரகடனத்தை’ விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா?

இதனைத்தான் இச் சிறப்பு அங்கம் தனது கவனத்திற்கு எடுக்கிறது.

இவ் விடயத்தில் என்ன நடந்தது என்பதற்குள் நுழைய முன்னர், ஒஸ்லோ ‘பிரகடனம்’ என்ற பெயரில் உடன்பாடு எதுவும் செய்யப்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலை நோக்குவோம்.

இதற்குப் பதில் இல்லை என்பதே.

வட்டுக்கோட்டை பிரகடனம், திம்புப் பிரகடனம் என்பது போல் ஒஸ்லோ ‘பிரகடனம்’ என்ற வார்த்தை பாவனையில் வந்துள்ளதே தவிர அத்தகைய ‘பிரகடனம்’ எதுவும் ஒஸ்லோவில் மேற்கொள்ளப்படவில்லை.

அப்படியாயின் ஒஸ்லோவில் என்னதான் நடந்தது?

2002 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 2-5 ஆம் திகதிகளில் சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகள் அமைப்பும் நோர்வே அரசின் அனுசரணையுடன் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையினை நடாத்துகிறார்கள்.

விடுதலைப்புலிகள் தரப்பில் அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச் செல்வன், கருணா, அடேல் பாலசிங்கம் ஆகியோர் இப் பேச்சுக்களில் கலந்து கொள்கின்றனர்.

சிறிலங்கா அரச தரப்பினை பீரிஸ், மிலிந்த மொறகொட, ரவூப் ஹக்கீம், பேர்னாட் குணதிலக ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

அனுசரணையாளர்களாக நோர்வே அரச தரப்பிலிருந்து விடார் கெல்கிசன், எரிக் சோல்கெய்ம், யோன் வெஸ்பேர்க் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இப் பேச்சுக்களில் ஒரு முக்கியமான விடயத்தில் சிறிலங்கா அரசாங்க தரப்பும் விடுதலைப் புலிகள்; தரப்பும் உடன்பட்டுக் கொள்கின்றனர்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் வரலாற்றுபூர்வமாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் சமஸ்டி முறையில் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டுக் கொள்கின்றனர்.

ஒவ்வொரு சுற்றுப் பேச்சுக்களும் நடைபெற்று முடிவடைந்த பின்னர் பேச்சுவார்த்தைகளில் இடம் பெற்ற விடயங்களை நோர்வே ஒரு ஊடக அறிக்கையாக வெளியிடுவது வழக்கம்.

இதே போல் நோர்வேயில் இடம் பெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுக்கள் தொடர்பாகவும் நோர்வே அரசு பேச்சுவார்தைகளில் பேசப்பட்ட விடயங்களை, எட்டப்பட்ட உடன்பாடுகளை ஓர் அறிக்கையாக வெளியிடுகிறது.

இவ் அறிக்கையில் இரு தரப்பும் பேச்சுவார்த்தைகளில் உடன்பட்டுக் கொண்ட விடயங்கள் குறிக்கப்படுகின்றன.

அறிக்கை கூறுகிறது:

‘விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தால் முன்வைக்கப்பட்ட ஒரு பிரேரணைக்குரிய பதிலாக – தமிழ் பேசும் மக்கள் வரலாற்றுபூர்வமாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில், உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சமஸ்டி முறையில், ஐக்கிய இலங்கைக்குகள் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டுக் கொண்டனர். இத்தகைய தீர்வு எல்லா சமூகத்தினக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதனையும் இரு தரப்பினரும் எற்றுக் கொண்டனர்.’ (http://www.norway.lk/Embassy/Peace-Process/peace/third/ இணைப்பை இறுதியாகப் பார்வையிட்ட திகதி 20.03.2010, மொழிபெயர்ப்பு கட்டுரையாளருடையது.)

மேலும் நோர்வேயின் இவ் அறிக்கை – மத்திக்கும் (Centre) பிராந்தியத்துக்கும் (Region) மற்றும் மத்திக்குமிடையிலான அதிகாரப்பங்கீடு குறித்த விடயங்கள், புவியியல் பிரதேசம், மனித உரிமைகள் பாதுகாப்பு, அரசியல் நிர்வாகப் பொறிமுறை, பொதுநிதி (Public Finance), சட்டம் ஒழுங்கு உள்ளடங்கலான பல்வேறு விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்ளை முன்னெடுக்கவும் இரு தரப்பினரும் உடன்பட்டுக் கொண்டதாகக் கூறுகிறது.

இந்த அறிக்கையே ஒஸ்லோ ‘பிரகடனம்’ என அழைக்கப்படலாயிற்று.

விடுதலைப்புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் 2004 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருந்த தனது நூலில் இவ் விடயத்தினைத் தெளிவுபடுத்தியிருந்தார்.

2010 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இதனை ஒஸ்லோ உடன்பாடு (Oslo Communique) எனக் குறிப்பிட்டிருந்தது.

ஓஸ்லோவில் விடுதலைப்புலிகள் இயக்கம் எடுத்திருந்த இந் நிலைப்பாடு பேச்சுவார்த்தைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக பிரபாகரனும் பாலசிங்கமும் நடாத்திய மந்திராலோனைகளின்; பெறுபேறாக வகுக்கப்பட்டிந்த தந்திரோபாயத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்தமும் அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் வந்த போது அதனைப் பிரபாகரன் அணுகியவிதம் முன்னைய காலங்களை விட வேறுபட்டது.

முன்னைய காலங்களில் யுத்தநிறுத்தத்தினையும் பேச்சுவார்த்தைகளையும் விரைவாக முடிவுக்கு கொண்டு வருவது பிரபாகரனின் அணுகுமுறையாக இருந்தது.

2002 இல் பிரபாகரன் அவ்வறு சிந்திக்கவில்லை.

யுத்தநிறுத்தத்தினை நீடிப்பதிலும் அதற்காக பேச்சுவார்த்தைகளத் தொடர்வதிலும் அவர் அக்கறை கொண்டிருந்தார்.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தாக்குதலுக்குள்ளாகிய பின்னர் தோற்றம் பெற்றிருந்த உலக நிலமைகள் தொடர்பாக அவர் கொண்டிருந்த கவனமும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அமைப்பு சார்ந்த தேவைகளும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் விருப்புநிலையும் இணைந்த வகையில் தொழிற்பட – அவை குறிப்பிட்டளவு காலம் யுத்தநிறுத்தத்தினை தொடர்வது என்ற முடிவுக்கு அவரை இட்டுச் சென்றிருந்தன.

இதே வேளை யுத்த நிறுத்தத்தைத் நீண்ட காலம் தொடர்வதால் தமது இயக்கத்திற்கு வரக்கூடிய பாதிப்புக்களையும் அவர் உணராமல் இல்லை.

யுத்த நிறுத்தங்களை நீண்ட காலத்திற்குத் தொடர்வது அரசுகளுக்குச் சாதகமாக அமையும் அளவுக்கு போராடும் இயக்கங்களுக்கு இராணுவரீதியாக சாதகமாக அமைவதில்லை. இது உலகளாவிய ரீதியல் விடுதலை இயக்கங்கள் கண்ட ஒரு பட்டறிவு.

யுத்த நிறுத்த காலத்தினை அரச இராணுவ இயந்திரம் தன்னை மீள் ஒழுங்குபடுத்திக் கொள்ளப் பயன்படுத்தும்.

இக் காலத்தில் இராணுவத்தினருக்கு உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும் என்பதனால் தொழில்முறையாக இராணுவத்தில் இணைந்திருப்போர் இராணுவத்தினை விட்டுத் தப்பி ஓடுவது குறைவாக இருக்கும்.

மாறாக இராணுவ இயந்திரம் தனது வெற்றிடங்களுக்கு யுத்த காலங்களினைவிட இலகுவாக புதியவர்களைத் திரட்டிக் கொள்ளும்.

புதிய இராணுவத் தளபாடங்கள், கருவிகளைப் பெற்றுக் கொள்ளல், புதிய தொழில் நுட்பங்களை இராணுவ இயந்திரத்திற்குள் புகுத்திக் கொள்ளல், எதிர்காலத்துக்குத் தேவையான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளல் போன்றவை அரசுகளுக்கு விடுதலை இயக்கங்களை விட மிக இலகுவானது.

இதைவிட யுத்தம் நிகழாமல் இருந்தாலே அதன் வெகுமதி (peace dividend) அரசுகளுக்கு கிடைக்க ஆரம்பித்து விடும்.

யுத்தம் நிறுத்தப்படும் போது சிறிலங்கா அரசு குறைந்த பட்சம் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 2 வீதத்தினை சேமிப்பாகப் பெற்று விடும்.

விடுதலை இயக்கங்களைப் பொறுத்தவரை நிலைமை வேறுபட்டது

யுத்நிறுத்த காலத்தில் தாமாக விரும்பி விடுதலை இயக்கத்தில் இணைந்து கொள்வோர் தொகை குறைவாக இருக்கும்.

இதேவேளை, யுத்த நிறுத்த காலத்தில் இயக்கத்திலிருந்து விலகும் போராளிகள் தொகை அதிகமாக இருக்கும்.

குடும்பச் சுமைகளின் மத்தியில் போராட்டத்தில் இணைந்திருந்த போராளிகள் தமது குடும்பங்களின் மீது கவனத்தை செலுத்தத் தொடங்கும் நிலை உண்டாகும்.

பெற்றோர்களும் யுத்தம் இல்லாத போது குடும்பச்சுமையை பகிர்ந்து கொள்ளுமாறு தங்கள் பிள்ளைகளைக் கோருவார்கள். இதனால் விடுதலை இயக்கத்தை விட்டு விலகும் போராளிகள் தொகை யுத்த காலத்தை விட யுத்தநிறுத்த காலத்தில் அதிகமாக இருக்கும்.

விடுதலை இயக்கங்கள்; மரபுசார் யுத்தங்கள் புரியும் போது ஏற்படும் ஆட்பல இழப்பு யுத்த நிறுத்த காலத்தில் குறைவாக இருப்பினும் விலகும், இணையும் தொகையின் தாக்கத்துடன் இணைத்துப் பார்க்கும் போது, மொத்தப் போராளிகள் தொகையில் வீழ்ச்சிதான் ஏற்படும்.

மேலும் நேரடி இராணுவ அழுத்தம் யுத்த நிறுத்த காலங்களில் குறைவாக இருப்பதால் பொது எதிரிக்கு எதிரான கவனம் குறைந்து விடுதலை இயக்கங்களுக்குள் உள்முரண்பாடுகள் தோன்றுவதற்கான நிலைமைகள் கூடுதலாக இருக்கும்.

ஆயுத தளபாடங்கள் சார்ந்தும் யுத்த நிறுத்த காலங்களில் விடுதலை இயக்கங்களுக்குரிய வாய்ப்புக்கள் அரசுகளை விட மிகக்குறைவுதான்.

விடுதலை இயக்கங்கள் இராணுவத்தினரிடமிருந்து ஆயுத தளபாடங்களைப் கைப்பற்றுவதனையும், வெளிநாடுகளில் கொள்வனவு செய்தோ அல்லது உதவிகள் மூலம் பெற்றோ எடுத்து வருவதனையும் தமது சொந்தத் தயாரிப்புக்களையுமே ஆயுத தளபாடங்களுக்காக நம்பியிருக்க வேண்டும்.

இவற்றில் சொந்தத் தயாரிப்புக்களில் தங்கியிருப்பதன் மூலம் மரபுசார் யுத்தம் புரிவது இலகுவானது அல்ல.

யுத்த நிறுத்த காலத்தில் இராணுவத்திடமிருந்து படைக்கலன்களை கைப்பற்ற முடியாது. ஆயுதங்களைக் கடத்தி வந்தால் சமாதானத்தில் விசுவாசம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து விடும்.

இதனால் ஆயுதத் தளபாடங்கள் விடயத்தில் யுத்த நிறுத்த காலங்கள் விடுதலை இயக்கங்களுக்கு ஒப்பீட்டளவில் பாதிப்பானவையாகவே அமையும்.

விடுதலை இயக்கங்கள் எவ்வளவுதான் முயன்று தன்னை யுத்த நிறுத்த காலங்களில் பலப்படுத்திக் கொள்ள முனைந்தாலும் அரசுகளுக்கு ஈடாக அதனைச் செய்வது இலகுவான விடயமாக இருப்பதில்லை.

இவையெல்லாம் சிறிலங்காவுக்கு அரசு என்ற வகையில் வாய்ப்புக்களையும் விடுதலைப்புலிகளுக்கு விடுதலை இயக்கம் என்ற வகையில் பாதிப்புக்களையும் தரக் கூடியவை.

எனினும் இத்தகைய பாதிப்புக்களைக் கையாள மாற்றுத் திட்டங்களை வகுத்துக் கொண்டு யுத்தநிறுத்தத்தை நீட்டிச் செல்லும் முடிவினையே பிரபாகரன் எடுத்திருந்தார்.

2002 இல் ரணிலுடன்தான் பிரபாகரன் புரிந்துணர்வு உடன்பாட்டினை எட்டியிருந்தார். சந்திரிகா ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் இருந்த காலம் அது.

முதல் ஒரு வருடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. அதன் பின்னர் வாய்ப்புக் கிடைத்தால் சந்திரிகா, ரணில் அரசாங்கத்தினைக் கலைத்து விடுவார்.

இது விடுதலைப்புலிகளின் திட்டத்திற்கேற்ற வகையில் நிலைமைகளைக் கையாள்வதற்கான வாய்ப்புக்களைக் குறைத்து விடும்.

இவையெல்லாம் பிரபாகரன் – பாலசிங்கம் மந்திராலோசனைகளில் ஆராயப்படுகின்றன.

இதன் ஊடாகத்தான் சுயநிர்ணய உரிமையினை உள்ளக – வெளியக சுயநிர்ணய உரிமையாகப் பிரித்து அணுகுவது என்ற முடிவினை முதன் முறையாக விடுதலைப்புலிகள் இயக்கம் எடுக்கிறது.

நாடு பிரியாத வகையில் தேசியப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியினை உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் மேற்கொண்டு அதில் ஏற்படும் நிச்சயமான தோல்வியின் போது, வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதற்கு அனைத்துலக ஆதரவினைக் கோருவது என்பதுதான் வகுக்கப்பட்டிருந்த தந்திரோபாயம்.

இதனை 2002 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் வெளிப்படுத்துகிறார்.

இதன் தொடர்ச்சியாக அடுத்த வாரம் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளில் இம் முடிவு எடுக்கப்படுகிறது.

இந்த தந்திரோபாயத்துடன் பேச்சுவார்த்தை அணுகப்பட்டாலும் நோர்வே அரசு விடுத்தது போல் ஓர் அறிக்கையில் இவ் உடன்பாடு பதிவு செய்யப்பட்டது ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக மாறிவிட்டிருந்தது .

வழமையாக பேச்சுக்களில் பேசப்படும் விடயங்கள் அறிக்கையாவதனை விடுதலைப்புலிகள் தரப்பில் பாலசிங்கம்தான் முடிவு செய்வார். ஒஸ்லோவிலும் இந் நடைமுறையே பின்பற்றப்பட்டது.

நோர்வேப் பேச்சுவார்த்தைகள் குறித்த நோர்வேயின் அறிக்கை வெளியாகியவுடன் இது ஒஸ்லோ ‘பிரகடனமாக’ ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டது.

விடுதலைப்புலிகள் தனித் தமிழீழக் கொள்கையினை கைவிட உடன்பட்டுக் கொண்டனர் என்ற சாரத்தில் செய்திகள் வெளியாகின.

தராக்கி ‘சிவராம்’ போன்ற தமிழ்த் தேசிய பத்திரிகையாளர்கள் திம்புவில் முன்வைக்கப்பட்ட தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படை நிலைப்பாடுகள் தமிழ் மக்களின் அரசியல் முதுசம் என்றும்- அவை தந்திரோபாய நோக்கத்தில்கூடச் சமரசம் செயயப்பட முடியாதவை என்ற அர்த்தத்தில் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

இச் சூழல் விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகள் மத்தியில் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்தது.

மில்லருக்கும் திலீபனுக்கும் நாம் என்ன பதிலைச் சொல்லப் போகிறோம் என சில போராளிகள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இக் கேள்விகள் பிரபாகரனையும் சென்றடைந்தன. போராளிகள் குழப்பமடைவதாகவும் இயக்கத்தினை விட்டு வெளியேறுவோர் தொகை அதிகரிக்கும் போன்ற கருத்துக்களும் அவரிடம் தெரிவிக்கப்படுகின்றன.

இதே வேளை ஒரு முக்கியமான அவதானிப்பை இங்கு பதிவு செய்தல் பொருத்தமானது. வன்னியில் விடுதலைப்புலிகள் அமைப்பால் வெளியிடப்பட்டிருந்த ஒரு நாட்காட்டியின் அட்டைப்படம் பிரபாகரன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதனை மில்லரும் திலீபனும் வானத்திலிருந்து பார்ப்பது போல வடிவமைக்கப்படடிருந்தது.

இது பிரபாகரன் சம்மதத்துடன் அச்சடிக்கப்பட்டு வன்னியில் பரவலாக விநியோகிக்கப்பட்டிருந்தது.

இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தினையும் பதிவு செய்து செல்லுதல் பொருத்தமானது.

அறிவியல் அணுகுமுறைகளை விட குறியீடுகள் நடைமுறையில் சக்தி வாய்ந்தவை எனக் கடந்த அங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் மாவீர்கள் மிகச் சக்திவாய்ந்த குறியீடுகளாக- போராட்ட இலட்சியத்தில் விட்டுக்கொடுப்பற்ற உறுதிப்பாட்டுக்கு உதாரண புருசர்களாக இருந்தார்கள்.

போராட்ட இலக்கினை அடைவதற்காக வளைந்து நெளிந்து சிறிது தூரம் பயணம் செய்ய முற்பட்டாலும் மாவீரர்களுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்ற கேள்வி எழுந்து விடும் போது இம் முயற்சியில் ஈடுபடும் அனைவருக்கும் சங்கடமும் குற்ற உணர்வும் தொற்றிக் கொள்ளும் நிலை இருந்தது.

சர்வதேச சூழலை அனுசரித்து மேற்கொள்ள முனைந்த தந்திரோபாய நகர்வினையும் இலட்சியத்திற்கான ஈகம் என்ற குறியீட்டின் ஊடாக எழுந்த உணர்வுநிலையினையும் ஒரு சமனிலையில் வைத்திருப்பது எல்லா வேளைகளிலும் நடைமுறைச் சாத்தியமாவதில்லை.

இச் சூழல் பிரபாகரனை முன்னைய தந்திரோபாயம் குறித்து மீள் பரிசீலனை செய்ய வைத்தது.

இருந்தும் இவர் உடனடியாகத் தனது தந்திரோபாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தாய்லாந்திலும், பெப்பவரி மாதம் ஜேர்மனியிலும், மார்ச் மாதம் யப்பானிலுமாக மேலும் மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கிறார்.

இதற்கிடையில் யப்பானில் நடைபெறவிருந்த நிதி உதவிகள் தொடர்பான கூட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டமொன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது. சிறிலங்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட இக் கூட்டத்திற்கு தடைசெய்யப்பட்ட இயக்கம் என்ற காரணம் கூறி விடுதலைப்புலிகள் அழைக்கப்படவில்லை.

மொத்தமாக ஆறு கட்டப் பேச்சுக்கள் நடைபெற்று முடிவடைந்தன. பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைக்கு வருவதாக இல்லை.

இதற்குப் பின்னரும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தால் முன்னைய அரசியல் வாதிகளுக்கும் தமக்கும் வித்தியாசம் இல்லை என மக்கள் நினைக்கத் தொடங்குவார்கள் எனப் பிரபாகரன் கருதினார்.

பேச்சுவார்த்தைகளைத் தொடருவதில்லை. அதேவேளை யுத்தத்தினையும் ஆரம்பிப்பதில்லை என்ற முடிவினை பாலசிங்கத்துடன் கலந்து பேசாமலே தனக்குள் எடுத்துக் கொள்கிறார்.

‘பிரபாகரன் மீண்டும் மீசை வளர்த்து விட்டார். இதனால் சண்டையைத் தொடங்கப் போகிறார் என எழுதுவார்கள். இனிக் கொஞ்சக் காலத்திற்கு பேச்சுவார்த்தைகளும் இல்லை. சண்டையும் இல்லை’ எனக் கூறிக் கொள்கிறார்.

பிரபாகரனின் புதிய அணுகுமுறையின் விளைவாக இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம் தயாரிக்கப்படுகிறது.

மாவை சேனாதிராஜா பிரபாகரனைச் சந்தித்தபோது சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே யுத்தம் ஆரம்பமாகியிருந்தது. இச் சந்திப்பில் ஒஸ்லோ ‘பிரகடனத்தை’ – அவசரத்தில் பிறந்த குழந்தை எனவும் அது தற்போது இறந்து விட்டது எனவும் பிரபாகரன் மாவையிடம் கூறியிருந்ததாக ஒரு தகவல் உண்டு.

உண்மையில் விடுதலைப்புலிகள் ஒஸ்லோ ‘பிரகடனத்தை’ ஏற்றுக் கொண்டார்கள் எனக் கூறுவதனைவிட அதனை ஒரு தந்திரோபாய அணுகுமுறையாகப் பயன்படுத்த முனைந்து – அதனைத் தொடர முடியாமல் இடைநிறுத்திப் புதிய அணுகுமுறையினைப் பின்பற்றினார்கள் என்று கூறுவதே சரியானது.

http://www.aathavanonline.com/

இணைப்புக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.