Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரனுடன் ஒரு சந்திப்பு…

Featured Replies

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரனுடன் ஒரு சந்திப்பு…

டென்மார்க்கில் வாழ்ந்து வரும் திரு. வேலுப்பிள்ளை மனோகரனை அலைகள் காரியாலயத்தில் சந்தித்துப் பேசினோம். அவர் தந்திருக்கும் நீண்ட அனுபவங்களை அலைகள் வாசகர்களுக்கு சுவைபட தருவதில் பெருமையடைகிறோம்.

தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மூத்தவர் வேலுப்பிள்ளை மனோகரனாகும். தனது தம்பி ஓர் இனத்தின் தேசியத் தலைவராகவும், சகல அதிகாரங்களுடனும் வாழ்ந்தால் அண்ணனாக இருப்பவர் எத்தகைய அதிகாரமுடையவராக இருப்பார் என்பதைச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. ராஜபக்ஷ அதிபராக இருக்க அவருடைய சகோதரரும் மகனும் அரசியலில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை எண்ணிக் கொண்டு அவர்களோடு வேலுப்பிள்ளை மனோகரனுடன் ஒப்பிட்டால் இவருடைய நேர்மையும், பிரபாகரனுக்கு சரியான அண்ணன் என்பதும் இலகுவாகவே புரியவரும்.

அலைகள் பத்தாவது ஆண்டு விழாவின் தலைமையை ஏற்று, முதல் முதலாக ஒரு விழாவில் கருத்துரையாற்ற இருப்பது பலருடைய கவனத்தையும் தொட்டுள்ளது. புதுமாத்தளன் போருக்குப் பிறகு பிரபாகரன் குடும்பத்தில் இருந்து ஒருவர் மேடைக்கு வருகிறார். அந்த விழா அலைகளின் பத்தாண்டு வெற்றி விழாவாகவும், இளம்புயல் 100 வது நாள் விழாவாகவும் அமைகிறது. அதன் பொருட்டு இந்த சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது..

கேள்வி : நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?

மனோகரன் : நானும் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறோம். வேலையும் வாழ்வுமாக நாட்கள் நகருகின்றன.. மற்றப்படி சொல்வதற்கு எதுவும் இல்லை. எல்லோரையும் போலவே எனது வாழ்வு நகர்கிறது..

கேள்வி : நீங்கள் பிரபாகரனின் சொந்த அண்ணன். உங்களுக்கு ஓர் உரிமை இருக்கிறது. அதிகாரத்தில் சகோதரன் இருந்தால் அண்ணனுக்கு இயல்பாகவே அதிகாரம் வந்துவிடும். அதோ பாருங்கள் சிங்கள ஆட்சியை… கோத்தபாய ராஜபக்ஷ, பசில்ராஜபக்ஷ போன்றவர்களுக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது.. அதுபோல நீங்களும் ஏன் அதிகாரத்தை பெற முயற்சிக்கவில்லை..?

மனோகரன் : எனது தம்பி பிரபாகரன் போராட்டத்தை தமிழ் மக்களின் தேசிய சொத்தாக கருதினார். அங்கு குடும்பம், தாய், தந்தை, அண்ணன் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்தவித அதிகார துஷ்பிரயோகங்களும் செய்யாமலே என் தந்தை போலவே தம்பியும் நேர்மையின் வடிவாக வாழ்ந்து காட்டியுள்ளார். அவருக்கு அண்ணனாக வாழ்வது மிகவும் கடுமையான ஒரு யாகம் என்றே கூறுவேன். தம்பியின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாத ஓர் அண்ணனாக வாழ்வதுதான் சிறந்த வாழ்வென்று கருதி வாழ்ந்தேன். தம்பி என்பதற்காக தேசத்திற்கு சொந்தமான வாகனத்தில் நாம் ஏறி பயணிக்க முடியாது. தம்பியின் அதிகாரத்தை பயன்படுத்தாது நாம் நமது சொந்தக் கால்களிலேயே நடந்தோம். தம்பி போராட்டத்தில் இருந்த ஆரம்ப காலங்களில் எங்களோடு உறவு கொள்ளவே அயலவர்கள் பயந்தார்கள். எனது தாயும் தந்தையும் பொலிகண்டி கந்தவன ஆலய மடத்தில் படுத்து வாழ்ந்த காலங்கள் உண்டு. தங்கள் வீட்டைத் தாண்டிப் போனால் ஆமியால் ஆபத்தென்று கூறி போகக் கூடாது என்று கூறியவர் பலர் உண்டு. ஆனால் தம்பியின் ஆட்சி வந்தபோது அவர்கள் வரவேற்றனர். அப்போதும் நாங்கள் பழையதை மறவாது வாழ்ந்தோம். பிரபாகரனின் ஒழுக்கத்திற்கு உரிய தியாக வாழ்வை என் தந்தையும் தாயும் வாழ்ந்தார்கள். நானும் அவ்வழிதான் நடந்தேன், என் தம்பி குடும்பம் என்று தனியாக எங்களை கவனித்ததே கிடையாது.

கேள்வி : குடும்பம் – போராட்டம் இரண்டும் வேறுவேறான சங்கதிகள் இவைகளுக்குள் பிரபாகரனின் பணி எப்படி நகர்ந்தது என்பதைக் கூற முடியுமா ?

மனோகரன் : ஓர் சிறிய உதாரணத்தைக் கூறுகிறேன். ஒரு தடவை என் தம்பியின் மகன் சாள்ஸ் தனக்கு ஒரு விளையாட்டு பொருள் வேண்டும் என்று கேட்டார். அதற்கு பதில் கொடுத்த பிரபாகரன், நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி தனக்கு இதுவரை வாழ்க்கைக்கு ஆதாரமான மாதச் சம்பளத்தை வழங்கவில்லை, அதனால் விளையாட்டு பொருளை வேண்ட முடியவில்லை என்று பிள்ளையை சமாதானம் செய்தார். தனது பிள்ளைக்கு ஒரு விளையாட்டுச் சாமானை வாங்கக் கூட அவர் போராட்டத்தில் தனக்கிருந்த அதிகாரத்தையோ பாவித்தது கிடையாது, என் தம்பியும் தந்தை போலவே எளிமையான வாழ்வையே வாழ்ந்தார்.

கேள்வி : அவர் அவ்வளவு நேர்மையாக இருந்தாலும், வெளிநாடுகளில் அவர் பெயரில் இங்குள்ளோர் நடாத்திய நிர்வாகங்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும் இவை குறித்து உங்கள் தம்பிக்கு ஏன் அறிவிக்கவில்லை ?

மனோகரன் : உண்மைதான், நான் வாழ்ந்த டென்மார்க்கில் நடந்த சம்பவங்கள் பலதை ஆதாரத்துடன் எழுதி வன்னியில் வாழ்ந்த என் தந்தையிடம் அனுப்பி, தம்பியிடம் கொடுக்கும்படி கூறினேன். நான் அனுப்பிய கடிதம் கிடைத்ததும் என் தந்தை வேலுப்பிள்ளை ஒரு வேலை செய்தார். அந்த முறைப்பாட்டுக் கடிதத்தை திறந்து பார்க்காமலே எனக்கு திருப்பி அனுப்பினார். உடைக்கப்படாத அக்கடிதத்தின் மேல் உறையில் ஒரு குறிப்புரை எழுதி இருந்தார். நான் அவருடைய தந்தை, நீ அவருடைய அண்ணன். நாம் இருவரும் குடும்பத்தவர், தியாகமே வடிவான ஒரு போராட்டத்தில் உறவு முறை என்ற காரணத்தை பயன்படுத்தி யாதொரு தாக்கத்தையும் செய்தல் கூடாது என்று சுட்டிக் காட்டியிருந்தார். அதே கடிதம் என் தந்தையாரிடம் இருந்து பிரபாகரனுக்கு போயிருந்தால் அவர் அதைவிட நீண்ட குறிப்புரையுடன் உடைத்துப் பார்க்காமலே எனக்கு திருப்பி அனுப்பியிருப்பார். இதுதான் அண்ணன் – தம்பி – தந்தை என்ற எங்கள் முக்கோண உறவுப் போராட்டத்தின் பரிமாணம். இந்த நேர்மையும், ஒழுக்கமும் என் தந்தையின் பாரம்பரியத்தால் வந்தது.

கேள்வி : சமீபத்தில் உங்கள் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை மரணமடைந்தார். அவருடைய மரணத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

மனோகரன் : எனது தந்தையார் மரணம் மர்மமாக உள்ளது. புதுமாத்தளனில் இறுதி நேரம் நடந்தது என்னவென்ற உண்மைகள் பல அவருக்கு தெரிந்திருக்கும். தான் அறிந்த உண்மைகளை யாருக்கும் மறைக்கும் பழக்கம் உடையவர் அல்ல அவர். எத்தனையோ உண்மைகளை எடுத்துச் சொல்லக்கூடிய போரின் சாட்சியமாக அந்த மண்ணிலேயே வாழ்ந்தவர். அவருடைய குரல் உலகின் முன் வெளிவர முடியாதபடி அமுக்கப்பட்டுவிட்டது. அவர் இறந்த காரணத்தால்தான் அவர் எங்கே வைக்கப்பட்டிருந்தார் என்ற உண்மை தெரியவந்தது. இல்லாவிட்டால் அவர் இறக்கும்வரை எங்கிருக்கிறார் என்பது பற்றிய மர்மம் மேலும் பல காலம் நீடித்திருக்கும். மேலும் அவர் எங்கு சென்றாலும் தனது முக்கிய ஆவணங்களையும், குறிப்புக்களையும் சிறிய பையில் வைத்து கையோடு கொண்டு செல்வார். புதுமாத்தளனில் கூட அவர் அதை எடுத்தபடியே வந்திருக்கிறார் ஆனால் இன்றுவரை அவருடைய முக்கியமான ஆவணங்களைக் கூட நாம் பெற முடியவில்லை.

கேள்வி : இங்கிருந்து உங்கள் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனுபவங்கள் உண்டா ?

மனோகரன் : வன்னியில் இருந்து அடிக்கடி என்னுடன் பேசுவார். கடந்த ஆண்டு தை மாதம் நிலமை மோசமடைந்தது. அதற்கு முன்னர் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடர்பு கொண்டார். அப்போது நிலமை மிகவும் மோசமடைந்துவிட்டதாக தெரிவித்தார். ஓரளவு நிலமை சீருக்கு வர தொடர்பு கொள்வதாகக் கூறியிருந்தார். பின்னர் அவருடைய மரணச் செய்திதான் இணையத்தில் வெளியாகியிருக்கக் கண்டோம். அவர் உயிருடன் இருந்திருந்தால் உலகத்தின் எத்தனையோ பதிலற்ற கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் கிடைத்திருக்கும்.

கேள்வி : உங்கள் தந்தையார் தன் கருத்துக்களை சுதந்திரமாக சொல்லும் ஒருவராகவே இருந்தார். பிரபாகரன் வன்னியில் நடாத்திய ஆட்சி பற்றிய அவருடைய கருத்து என்னவாக இருந்தது.

மனோகரன் : அதை அறிவதற்கு சிறிது காலம் முன்னர் செல்வது அவசியமாகும். எனது தந்தை டி.எல்.ஓ ( மாவட்டக் காணி அதிகாரி ) வாக பணி புரிந்த காலத்தில் முத்தையன்கட்டு குடியேற்றத் திட்டம், வன்னி படித்த வாலிபர் குடியேற்றத் திட்டம் போன்றவற்றை ஆரம்பித்தவரில் அவரும் ஒருவராக இருந்தார். அப்போது காணிகளை வழங்குவது அவர்தான். படித்த தமிழ் வாலிபர்களை அங்கு குடியேற்றுவதற்கு அவர் இரவு பகலாக போராடினார். அங்கு தமிழ் வாலிபர்கள் குடியேறாவிட்டால் அந்த இதய பூமியை சிங்களக் குடியேற்றமாக மாற்ற விரும்புவதாக அரசு அவரிடம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து எனது தந்தை பழைய வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான வவுனியா செல்லத்தம்பு, உடுப்பிட்டி இராஜலிங்கம் போன்றோருக்கு விடயத்தை விளங்கப்படுத்தி படித்த தமிழ் வாலிபர் குடியேற்றங்களை வன்னி நோக்கி நகர்த்தும்படி வலியுறுத்தினார். ஈழத்தை மீட்பதென்பது ஈழ மண்ணில் தமிழன் பரந்து வாழ்வதால்தான் தீர்மானமாகும் என்றும் கருதினார். ஆனால் அன்று அவர் நினைத்தது போல பெருந்தொகையாக வன்னியின் வெற்றிடங்களை நோக்கி மக்களை நகர்த்த முடியாது போன கவலை அவருக்கு இருந்தது. பின் என் தம்பி பிரபாகரன் அதை ஒரு குறுங்காலத்தில் செய்து, வன்னியில் ஒரு அழகான தமிழீழ அரசையே சகல படைபலங்களோடும் உருவாக்கியபோது என் தந்தை பெரு மகிழ்ச்சி கொண்டார். வன்னியில் நடைபெற்ற நிர்வாகம் அவருக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. கிளிநொச்சியின் சிறப்பைக் கண்டு அவர் பெருமகிழ்வடைந்தார். அன்று தான் பார்த்த கிளிநொச்சிக்கும், பிரபாகரன் காலத்து கிளிநொச்சிக்கும் பெரிய வேறுபாடு இருந்ததாக போற்றினார். தன்னால் முடியாத விடயத்தை பிரபாகரன் சிறப்பாக செய்ததாக போற்றினார்.

கேள்வி : அனுராதபுரத்தில் உங்கள் தந்தை வாழ்ந்த காலம், எல்லாளன் சமாதி , உங்கள் தம்பியின் பிறப்பு இவைகள் பற்றி ஒரு தை உள்ளது. அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்..

மனோகரன் : அனுராதபுரத்தில் எல்லாளன் சமாதி இருந்த இடம், பாழடைந்த கோயில் இவற்றுக்கு அருகால் போகும் வீதியில்தான் எங்கள் வீடு இருந்தது. அந்த இடம் அன்று முற்றிலும் அமைதி நிறைந்த பகுதியாக இருந்தது. இனம்புரியாத ஓர் அமைதி அங்கு நிலவும். சுமார் இரண்டாயிரம் வருடங்களாக சிங்கள மக்கள் எல்லாளன் சமாதிக்கு விளக்கேற்றி வருகிறார்கள். அந்த விளக்கு ஈட்டி போல எரியும். அதைப் பார்க்கும்போது மாமன்னன் மறத்தமிழன் எல்லாளனே அங்கு அருவமாக வாழ்வது போன்ற பிரமையும், மதிப்பும் ஏற்படும். அத்தகைய உணர்வுகளை என் தந்தையும், தாயும் மனதில் தாங்கி வாழ்ந்த காலத்தில் அதே எல்லாளன் சமாதி இருந்த இடத்தில் கருவுற்றார் பிரபாகரன். என் தம்பியின் வாழ்வைச் சீர்தூக்கிப் பாருங்கள், எல்லாளன் போலவே அவர் தமிழ் மீது காதல் கொண்ட ஒருவராக வாழ்ந்த வாழ்வு புரியும்.

கேள்வி : இந்த விடயம் சிங்கள ஆட்சியாளருக்கு தெரியுமா ?

மனோகரன் : எமக்கு முன்னரே இதை சரியாக மோப்பம் பிடித்தவர்கள் சிங்கள ஆட்சியாளர்தான். தம்பி போராடப் புறப்பட்ட காரணத்தால் இராணுவத்தால் அடிக்கடி கைது செய்யப்படுபவர்கள் நானும் என் தந்தையும்தான். எண்ணற்ற தடவைகள் கைது செய்யப்பட்டு யாழ். கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்ட அனுபவம் எனக்கு இருக்கிறது. அதுபோல ஒரு தடவை எனது தந்தையை பிடித்து குருநகர் இராணுவ முகாமிற்கு கொண்டு சென்றார்கள். ஓர் இராணுவச்சிப்பாய் அவரை கொதிக்கும் வெயிலில் நிறுத்தி வைத்திருந்தான். அந்த நேரம் அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரை உள்ளே அழைத்துச் சென்று உரையாடினார். அப்போதுதான் பிரபாகரன் சாதாரணமான பிறப்பல்ல என்று தாம் நினைப்பதாக சொன்னார். ஏதோ ஒரு தாக்கம் இல்லாமல் பிரபாகரன் இவ்வளவு உறுதி கொண்ட ஒருவராக, தமிழீழப் பற்றுக் கொண்டவராக இருக்க முடியாது என்றும் கருதுவதாகக் கூறினார். அப்போதுதான் எனது தம்பி அனுராதபுரத்தில் கருவுற்ற ஒரு தமிழன் என்பதை சிங்களம் அறிந்து அதிர்ச்சியடைந்தது.

கேள்வி : எல்லாளன் என்று சொன்னீர்கள்… அலைகள் விழாவில் எல்லாளன் அரங்கிற்கு நீங்கள் தலைமை தாங்குவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?

மனோகரன் : முதலில் அலைகள் இணையப்பத்திரிகை ஆற்றிவரும் சேவையை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அலைகள் ஆரம்பிக்கப்பட்டது எனக்கு தெரியும் ஆனால் பத்து வருடங்கள் இவ்வளவு விரைவாக ஓடிவிட்டதைத்தான் நம்ப முடியவில்லை. அலைகளை ஆதரிப்பதும் கலைகளை ஆதரிப்பதும் வேறு வேறல்ல, ஆகவே அனைவரும் அலைகள் பத்தாண்டு விழாவை ஆதரிப்பது நல்லது. எந்தவித இலாப நோக்கும் இல்லாமல் அலைகள் இந்த சமுதாய பெரு வெள்ளத்தில் அயராது பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னர் ஊடகங்கள் இல்லாத காரணத்தால் செய்திகளை உடனுக்குடன் அறிவது கடினமாக இருந்தது. ஆனால் இப்போது இணையம் வந்த காரணத்தால் உடனுக்குடன் செய்திகளை அறிய முடிகிறது.. புதுமாத்தளனில் நடைபெற்ற நிகழ்வுகளை இணையம் உடனுக்குடன் தந்தது. மக்களின் அழிவுகளை உயிரைக் கொடுத்து எத்தனையோ ஊடகவியலாளர் பதிவுகளாக்கி இணைய வழி அனுப்பினார்கள். ஆனால் ஒரு கேள்வி இவ்வளவு தூரம் இணையம் வளர்ந்தும், உண்மைகளை உண்மையான ஒளிப்படங்களாக வழங்கியும் உலக நாடுகள் அந்த வளர்ச்சியை மதித்து நடந்தனவா என்று கேட்க வேண்டும். இணையத்தோடு உண்மையின் வெற்றியும் இணைந்து நடக்க வேண்டும். ஊடகத்தின் உன்னதம் உண்மையின் வெற்றியாக அமைய வேண்டும். சகல் 4 தொலைக்காட்சியில் வெளியான ஒளிப்படம் உலகத்திற்கு சொன்னதென்ன.. இணையத்தை மட்டும் ஒளியில் பார்த்துக் கொண்டு, உண்மையை இருளில் வைத்திருப்பது சரியல்ல.. இதை உலக வல்லரசுகள் புரிய வேண்டும். அதேவேளை புலம் பெயர் தமிழ் மக்கள் நல் வாழ்விற்காகவும் சிந்தனை மேம்பாட்டிற்காகவும் தளராத மனதுடன், தள்ளாடாத செயலுடன் பத்தாண்டுகளை இணையத்தால் எழுதிக் கடப்பது மிகப்பெரிய சாதனை அதை அலைகள் செய்தது, செய்கிறது அதை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

கேள்வி : தங்கள் தாயார் எங்கே ?

மனோகரன் : அவர் தற்போது மலேசியாவில் இருக்கிறார். அவரை கனடா அழைத்துச் செல்ல எனது சகோதரியார் முயற்சி செய்கிறார்.

கேள்வி : சரி… உங்கள் தம்பியார் பிரபாகரன் எங்கே.. ?

தொடரும்…

பேட்டியின் அடுத்தபகுதி நாளை மறுதினம் புதன் வெளியாகும்…

அலைகள் 12.04.2010

http://www.alaikal.com/news/?p=35953

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி இறைவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.