Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு தாய்க்கிழவியும், அவர் பெற்ற மக்களும்.

Featured Replies

எண்பது வயது நிரம்பிய மூதாட்டி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத ஒரு தாய்க் கிழவி, மன நிலையும் கூட அத்தனை கட்டோடு இல்லாத ஒரு முதிர் வயதுப் பெண்மணி, இவரால் ஒரு தேசத்திற்கு என்ன சீர்குலைவு ஏற்படப் போகிறது, மன்மோகனும் அமெரிக்க நிறுவனமும் போட்டுக் கொண்டிருக்கிற அணு உலைச் சீர்கேடுகளை விடவும் இந்த வயதான தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? கருணாநிதியும் அவரது குடும்பமும் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழலை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? I P L கிரிக்கெட் விளையாட்டு என்கிற பெயரில் நடைபெறும் திரை மறைவு ஊழல்களை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கு இழுக்கு வந்து விடுமா?

உலகக் குடி உரிமைச் சட்டங்கள் யாவற்றிலும் மருத்துவ உதவி கேட்டு வரும் வயது முதிர்ந்தவர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுகிறதே? எத்தனை கொடுமையான குற்றம் புரிந்தவராக இருப்பினும், உயர் மருத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்ள எந்த நாடும் தடை விதிப்பதில்லையே, நாடாளுமன்றத்தையே தகர்க்கத் திட்டமிட்ட தீவிரவாதிகள் இதே தேசத்தில் பாதுகாப்போடு வாழ்கிறார்களே? கொடுங்குற்றம் புரிந்தவர்களையும் கூட மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு எந்த நாடும் தடை செய்யவில்லையே? உலகெங்கிலும் சென்று இந்த நாட்டின் உயர் குடிமக்கள் அனைவரும் மனித நேயத்தைப் பற்றி அரங்குகளில் வகுப்பெடுக்கிறார்களே? அந்த மனித நேயம் தமிழ் பேசுபவர்களுக்கு மட்டும் இல்லையா? ஏறத்தாழ இயக்கங்களை இழந்து விட்ட ஒரு வயதான பெண்மணியால் இந்த தேசத்திற்கு என்ன தீங்கு விழந்து விடப் போகிறது?

இப்படி எல்லாம் என்னைச் சுற்றிலும் கேள்விகள் பெருந்தீயாய்ப் பற்றி எரிகின்றன, ஆனால், எனக்குத் தெரியும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்பது, எனக்கு மட்டுமில்லை இங்கிருக்கும் எந்த முதுகெலும்பற்ற தமிழர்களாலும் ஒன்றும் செய்ய இயலாது, ஏனென்றால் இங்கு நாங்கள் தேர்வு செய்து எம்மை எதிரொலிக்கச் சொன்ன தலைவர்களும் முதுகெலும்பற்றவர்கள், அதிலும் மாநில முதல்வராக நாங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் அந்த மனிதர் முதுகெலும்பைக் கழற்றி விட்டு காங்கிரஸ் கொடுத்திருக்கும் ஆட்சி அதிகார எலும்பை அல்லவா மாட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒரு மாநிலத் தலைநகருக்கு யார் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்கிற செய்தி இந்திய வெளியுறவுத் துறை மற்றும் குடி உரிமை அலுவலர்கள் மூலமும், தேவைப்பட்டால் மற்ற மைய அமைச்சகங்கள் மூலமும் மாநில உளவுத் துறைக்குச் சொல்லப்படுகிறது, அல்லது கேட்டுப் பெற வேண்டியது அவர்களின் பணி. இவர்கள் கணக்குப் படியே பார்த்தாலும், இந்திய தேசத்தால் தேடப்பட்டு வந்த பிரபாகரனின் தாயார் இன்றைக்கு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த, உலக நாடுகள் பலவற்றால் அறியப்பட்ட ஒரு பெண்மணி, அவர் குடிஉரிமை கேட்டு விண்ணப்பம் செய்த போதே தமிழக முதல்வருக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது தெரிவிக்கப்பட்டிருக்கும். இல்லையென்றால், அவரது வருகை நிகழும் அந்தக் குறிப்பிட்ட நாளில் செய்தி உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும், ஆனால், ஐயாவுக்கு செய்தி தெரியாதாம், காலையில் செய்தித் தாள்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டாராம், அதைத் தான் நாங்களும் தெரிந்து கொண்டோமே முதல்வர் அவர்களே, பிறகு எதற்கு நானூற்று இருபது கோடியில் ஒரு கட்டிடம், அந்தக் கட்டிடத்தில் கிரிவலம் வருவதற்கு பல நூறு உறுப்பினர்கள், அதில் நடுநாயகமாய் வீற்றிருக்க நீங்கள், பிரபாகரனின் தாயார் வந்த செய்தியே சொல்லப்படவில்லை என்கிறார் முதல்வர், அதையும் எந்த ஒரு கூச்சமும் இன்றிச் சட்டசபையில் அறிவிக்கிறார். அப்படியென்றால், ஒரு மாநில முதல்வருக்கு அவர் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் மைய அரசு கொடுக்கும் மரியாதையின் லட்சணம் இவ்வளவு தானா??

தமிழர்களைச் சாரி சாரியாய்க் கொன்று குவித்த ராஜபக்சேயின் மகன் சென்னை வழியாக டெல்லிக்கு கிரிக்கெட் போட்டியை கண்டு களிக்கப் போகிறான், அது உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதே, தமிழர்களைக் கொன்றொழித்த சிங்களவனின் மகனுக்குப் பாதுகாப்பு அளியுங்கள் என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அனுப்பி இருக்கிறீர்களே, தமிழர்களுக்கு முதல்வரா இல்லை சிங்களவனுக்கு முதல்வரா நீங்கள்? ஒன்றும் புரியவில்லையே?

எல்லாவற்றுக்கும் காரணம் ஜெயலலிதாதான் என்று நீங்களும் உங்களுக்குக் குடை பிடிக்கும் வீரமணியாரும் வாய் கூசாமல் சொல்கிறீர்கள், பிரபாகரனின் தாயாரையும், தந்தையையும் இந்திய தேசத்தின் குடி உரிமைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க ஜெயலலிதா மைய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கும் போது, சமூக விடுதலை வீராங்கனை என்று பட்டம் கட்டி அவர் காலில் விழாத குறையாகக் கிடந்தாரே வீரமணி. அது உங்களுக்குத் தெரியாதா? இல்லை, வானூர்தி நிலையத்தில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் ஐயா வைகோவுக்குத் தெரியாதா? கருணாநிதியின் முதுகு சொரியும் அறிக்கைகளைத் அதிகம் தயாரித்து அடுத்த கூட்டணிக்கு அடித்தளமிடும் ஐயா ராமதாசுக்குத் தெரியாதா? இல்லை, வெண் சாமரம் வீசும் விடுதலைச் சிறுத்தைக்குத் தெரியாதா?

ஒரு வழியாக நினைவு மறந்த நிலையில் நடக்க இயலாது படுத்திருந்த ஒரு நோயாளியை, மருத்துவ உதவி பெறுவதற்காக முறையான அனுமதியோடு வந்திருந்த தாய்க் கிழவியை அனுமதிக்க மறுத்து அனுப்பி விட்டோம், மலேசிய அரசாங்கமும், மற்ற எந்த நாடுகளும் செய்ய மறுக்கும் ஒரு மனித நேயமற்ற செயலைச் செய்து மீண்டும் ஒரு முறை தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்கள் ஆக்கி இருக்கிறீர்கள், இது உங்களுக்குத் தெரியாமல் நடப்பதற்கு சாத்தியமே இல்லை, அப்படி உங்களுக்குத் தெரியாமலேயே நடந்திருந்தால் உங்களுக்கு மாநில முதல்வராக இருக்கும் தகுதி இல்லை. உங்கள் துரோக வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல் இது, உரக்கக் குரல் எழுப்பி, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரும்பப் பெறுவதன் மூலம் தடுக்கப்பட்டிருக்க வேண்டிய அப்பாவித் தமிழர்களின் படுகொலையை நீங்கள் கடைசி வரை தடுக்க முனையவில்லை, பிரபாகரன் என்கிற தனிப்பட்ட மனிதனின் மீது கொண்ட காழ்ப்புணர்வை அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் மீது கொட்டினீர்கள், உண்ணாநிலைத் தேர்தல் நாடகம் நடத்தி போர் நிறுத்தம் என்று ஊரை ஏமாற்றினீர்கள், அப்படி நீங்கள் சொன்ன பத்து நிமிடத்தில் போர் நிறுத்தம் எல்லாம் இல்லை என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தான் ராஜபக்ஷே.

இனப் படுகொலையின் சுவடுகள் மறையாத இந்த ஓராண்டு காலம் முடிவதற்குள் ஒரு தமிழ் மூதாட்டியை மன நிலைப் பிறழ்வில் இருக்கிற தாய்க் கிழவியை மருத்துவம் செய்ய முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டுத் தேவைப்பட்டால் கடிதம் எழுதுவேன் என்கிறீர்கள், உங்கள் பொய்களுக்கும், நாடகங்களுக்கும் ராஜபக்ஷே பரவாயில்லை, மருத்துவம் பார்க்க அனுமதி கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தான். நீங்களும், உங்கள் இந்திய தேசமும் சிங்கள இன வெறியர்களை விடவும் கொடுங்கோலர்கள், உங்கள் ஆட்சிக் குடைகளின் கீழே சிக்கிக் கிடக்கும் நாங்கள் உண்மையில் பாவிகள்.

"பிரபாகரன்" என்கிற பெயர் தமிழினத்தின் அடையாளமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பது தான் இதில் உள்ளடங்கி இருக்கும் உண்மையான செய்தி, ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடியது மட்டுமன்றி ஒரு இனத்தின் ஒட்டு மொத்த அரசியல் விழிப்புணர்வுக்கும் காரணமாக அமைந்த பெயர் பிரபாகரன், தவறுகள் இழைக்காத, மாறுபட்ட பாதையில் பயணிக்காத விடுதலை இயக்கங்கள் இல்லை, அந்த வகையில் உலகின் பார்வையில் தவறாக அறியப்படுகிற சிலவற்றையும் கூட தனது விடுதலை வேட்கையின் தீவிரம் கருதியே அந்த மனிதன் செய்திருந்தான். இன்று இன உணர்வும், மொழி உணர்வும் இருக்கிற ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் அவன் தான் தலைவன், அவன் தான் முதல்வன், நீங்கள் ஊர் கூடி ஊளையிட்டாலும் உங்களுக்கு இருந்த தமிழினத் தலைவர் என்கிற போலிப் பெயர்களை அவனது சிந்தனைகள் நிரப்பி விட்டன. அப்படிப்பட்ட ஒரு தலைவனின் தாயை, உலகத் தமிழினத்தின் அன்புக்குரிய அந்தப் பெற்றவளை விரட்டி அடித்த பெருமையை நீங்களும் உங்கள் ஆட்சியும் பெற்றுக் கொண்டது முதல்வர் அவர்களே.

கடைசியாக மனதில் ஒன்று தான் தோன்றுகிறது முதல்வரே, உங்கள் கைகளால் கடிதம் எழுதி வந்து சிகிச்சை பெற்றுப் பிழைத்துக் கொள்வதை விடவும் அவர் செத்துப் போகட்டு.

http://tamizharivu.wordpress.com/2010/04/20/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0/

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை ஆறுமுகங்களை நம்பினால் இப்படித்தான் ஆகும்....

பிரபாகரனின் தாயார் திருப்பி அனுப்பப் படுவதைக் கண்டித்து விமான நிலையத்தில் நெடுமாறனும் வைகோவும் போராடிக் கொண்டிருந்த சமயம்... இந்த களேபரங்களை ஒரு காரில் அமர்ந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தார் தமிழக அரசியலின் வேறொரு வி.ஐ.பி.! இலங்கை நிகழ்வுகள் குறித்து தனக்கே உரிய சீற்றத்தோடு வெளிப்படுத்தி வரும் அந்த வி.ஐபி., 'எதற்கு ஆளுங்கட்சியின் பொல்லாப்பு' என்று நினைத்தாரோ என்னவோ... காரைவிட்டு இறங்காமலே சத்தமில்லாமல் திரும்பி விட்டாராம்.''

இந்த ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கும் ஆறுமுகம் யாரு என தெரிகிறதா...

மாமாவுக்கு குருமா குருமா ... செய்ய வருமா வருமா....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

ஈழத்து இறுதிப் போரின்போதான உச்சகட்ட இனப் படுகொலை நினைவுகள் யார் நினைவிலிருந்தும் எளிதில் அகலாது. முள்ளிவாய்க்கால் பயங்கரம் நிகழ்ந்து ஓராண்டு ஆகப்போகும் நிலையில், ஈழத் தமிழினத்துக்கு நடந்த கொடுமைகளை எண்ணி தமிழ்நாட்டுத் தமிழர்கள் 'குற்ற உணர்வோடு' உள்ளம் வெம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில், இன்னொரு 'இரக்கமற்ற' செய்தி இதயத்தை

அறுக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தயார் மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவரை தமிழகத்துக்குள் கால் பதிக்கவும் அனுமதிக்காமல் சென்னை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி வந்ததுமே தமிழினப் பற்றாளர்கள் பொங்கி எழத் தொடங்கியுள்ளனர். நடந்ததைக் கண்டித்து அடுத்தடுத்த போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு 'போர் முடிந்தது' என சிங்கள அரசு அறிவித்த நிலையில், அங்கு தங்கியிருந்த பிரபாகரனின் பெற்றோர்மற்ற தமிழ் மக்களோடு சேர்ந்து மாணிக்பண்ணை பகுதிக்குச் சென்று தஞ்சம் புகுந்தார்கள். அங்கு சிங்கள ராணுவத்தினர் பரிசோதித்தபோது பிரபாகரனின் அப்பா வேலுப்பிள்ளை தமது அடையாளத்தைச் சொன்னதும், ராஜபக்ஷே அரசு அதை வைத்தும் அரசியல் செய்ய விரும்பியது. தாமே முன்வந்து தாங்கள் யாரென்று சொன்னபிறகும்கூட அவர்கள் எங்கோ ஒளிந்து கொண்டிருந்ததாகவும், ராணுவத்தின் சோதனையில்தான் அவர்கள் பிரபா கரனின் பெற்றோர் என்பது தெரியவந்ததாகவும் கதை கட்டியது ராஜபக்ஷே அரசாங்கம். அவர்களைக் கைது செய்து, பல்வேறு இடங்களுக்கு அலைக்கழித்து... கடைசியாக பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமுக்குக் கொண்டுபோய் சிறை வைத்தார்கள்.

பிரபாகரனின் வயது முதிர்ந்த பெற் றோரைப் பார்ப்பதற்கு எவரையும் ராஜபக்ஷே அரசு அனுமதிக்கவில்லை. தமிழ் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள்கூட அவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களைச் சிறையில் வைக்கவில்லை என்றும், கௌரவத்தோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்றும் ராஜபக்ஷே சொல்லி வந்தா லும், உண்மையில் எந்த வசதியும் இல்லாமல் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட சூழலில்தான் அந்த மூத்த தம்பதி இருந்தார்கள். இந்த நிலையில் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் உடல்நலம் மிகவும் மோச மடைந்து, சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். வேலுப்பிள்ளை அவர்களின் உடலை அடக்கம் செய்வ தற்கு முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்கு பிரபாகரன் குடும்பத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர். அதுமட்டுமின்றி, பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று அங்கே பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும், சிவாஜிலிங்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பார்வதி அம்மாள் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேதான் கடந்த சில காலமாக வாழ்ந்து வருகிறார்.

மனதளவில் நொறுங்கிப் போனது மட்டுமின்றி, பக்கவாத நோயாலும் பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் பார்வதியம்மாள், அதற்கான முழுமையான மருத்துவ வசதிகள் மலேசியாவில் இல்லாத காரணத்தால்தான் தமிழகத்துக்கு வந்து சிகிச்சை பெறுவதற்கு விரும்பினார். முறைப்படி விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டு, மலேசியாவிலிருக்கும் இந்திய தூதரகமும் மருத்துவ காரணங்களுக்காக ஆறு மாதங்கள் தமிழகத்தில் தங்கியிருக்க அவருக்கு அனுமதி வழங்கிவிட்டது. இப்படி உரிய ஆவணங்களோடும் அனுமதியோடும் தமிழகம் வந்த பார்வதி அம்மாளை குடியுரிமைத் துறை அதிகாரிகள் விமான நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்பியிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானமென்றே கருதவேண்டி இருக்கிறது.

பிரபாகரனின் பெற்றோரான வேலுப்பிள்ளை அவர் களும், பார்வதி அம்மாளும் இறுதிப் போருக்கு முன்பாக நீண்ட காலம் தமிழகத்தில்தான் தங்கியிருந்தார்கள். 1983-ம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் மீது ஏவப்பட்ட கலவரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்த அவர் கள், திருச்சியில்தான் தங்கியிருந்தார்கள். இருபது ஆண்டு காலம் அவர்கள் இங்கே வாழ்ந்து வந்தனர். ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு ஏற்பட்ட அசாதாரணமான சூழலிலும்கூட அவர்களுக்குத் தொந்தரவு எதுவும் ஏற்படவில்லை. 2002-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டுக்குப் பிறகு, அங்கு சற்றே நிலைமை மேம்பட்ட காரணத்தால், மீண்டும் தாயகத்துக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக அந்தத் தம்பதி 2003-ல் இலங்கைக்குப் போனார்கள்.

இன்று அந்த மூதாட்டிக்கு ஏற்பட்ட நிலைக்கு ஒரே காரணம் அவர் பிரபாகரனின் தாய் என்ற பார்வைதான். அந்தப் பார்வையே சரியா, தவறா என்ற விவாதம் இருக்கும் நிலையில்... அதையெல்லாம் தாண்டி அந்தக் குடும்பத்தின் மாண்பு இங்கே கவனித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. காரணம், பிரபாகரனின் குடும்ப வரலாற்றை அவ்வளவாக எவரும் அதிகம் அறிந்த தில்லை.

இலங்கை வல்வெட்டித்துறை பகுதியில் மிக்க சிறப்போடு வாழ்ந்த குடும்பம் அது. 'திருமேனியார் குடும்பம்' என்றுதான் மரியாதையோடு அழைப்பார்கள் இந்த குடும்பத்தாரை. வல்வெட்டித்துறையிலிருக்கும் புகழ்பெற்ற சிவன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்கள் அந்தக் குடும்பத்தினர். அந்தக் கோயிலே பிரபாகரனின் முன்னோர்களால் கட்டப்பட்டதுதான். பார்வதி அம்மாளின் குடும்பத்தை 'எசமான் குடும்பம்' என்று அழைப்பார்கள். பிரபாகரனின் அப்பா வேலுப்பிள்ளையின் குடும்பத்தைப் போலவே பார்வதி அம்மாளின் பெற்றோரும் புகழ்பெற்று விளங்கியவர்கள் அங்கே!

பிரபாகரனின் முன்னோர்களில் ஒருவ ரான ஐயம்பிள்ளை என்பவர் புகழ்பெற்ற வணிகராகத் திகழ்ந்தவர். புகையிலை மற்றும் சாயப் பொருட்களை கடல்வழியாகப் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டுசென்று விற்பனை செய்தவர். டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கையின் புகழ்பெற்ற வணிகர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அவருடைய மகனான வேலாயுதம் என்பவரும் அதேபோல வாணிபத்தில் சிறந்து விளங்கியவர். அவரது பிள்ளையான வெங்கடாசலம் காலத்தில் அந்தக் குடும்பத்தின் வியாபாரமும், செல்வ வளமும் பலமடங்குப் பெருகியது. அவர் சொந்தமாக பன்னிரண்டு கப்பல்களை வைத்து வாணிபம் செய்தவர். இந்தியா, பர்மா, மலேசியா முதலான நாடுகளுக்கு அவர் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய வணிகராகத் திகழ்ந்தார். அவரை வல்வெட்டித்துறை மக்கள் 'பெரிய தம்பி' என்று அன்போடு அழைப்பார்கள். வெங்கடாசலம் தன்னுடைய சொந்தப் பணத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டினார். 1867-ம் ஆண்டு அந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. அந்தக் கோயில் கட்டி முடியும்வரை மேலே உடை உடுத்து வதில்லை என்று திறந்த மேனியராக அவர் இருந்த காரணத்தினால்தான் 'திருமேனியார்' என்று அவரையும், 'திருமேனியார் குடும்பம்' என்று அவர் சந்ததியினரையும் மக்கள் அழைத்தார்கள்.

இடையில் வீட்டுக்குக்கூடச் செல்லாமல், கோயில் கட்டும் இடத்திலேயே தங்கியிருந்து... அதை முழுமையாகக் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் நடத்திய பெருமைக்குரியவர் இந்தத் 'திருமேனியார்' வெங்கடாசலம்! அவருடைய மகனின் பெயர் திருவேங்கடம். திருவேங்கடத்தின் மகன்தான் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை. அவரும் தமது முன்னோர்கள் போலவே கடவுள் பக்தி கொண்ட வராகவும், பொது சேவையில் நாட்டம் கொண்டவராகவும் இருந்தார். அவருக்கு அரசியலில் எந்தவித விருப்பமும் இருந்தது கிடையாது. தம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்ந்த பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது.

இலங்கையைப் பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த 1943-ம் ஆண்டில் தனது பத்தொன்பதாவது வயதில் அரசுப் பணியில் வேலுப்பிள்ளை சேர்ந்தார். முதலில் ரயில்வே துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சிபெற்று மாவட்ட நில அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். முப்பத்தொன்பது ஆண்டுகள் கருத்தோடு வேலை செய்து, 1982-ம் ஆண்டில் அவர் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு சிங்களவர்கள் மீது எந்த வெறுப்பும் இருந்ததில்லை. சிங்கள மொழியிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார் அவர். அம்மொழியில் தேர்வும் எழுதி வெற்றி பெற்றவர். நேர்மையும் கறார்த்தன்மையும் கொண்ட அதிகாரியாக அறியப்பட்ட வேலுப்பிள்ளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பிறகு, தமிழகத்தில் அவர் வந்து தங்கியிருந்த இருபது ஆண்டுகளில் ஒரு சிறு பிரச்னையும் அவரது குடும்பத்தினரால் எழுந்ததில்லை.

தற்போது பிரபாரனின் தாயார் பார்வதிஅம்மாள், சிகிச்சைக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு நோய்த் துன்பத் தோடு திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து ம.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருக்கிறது. உண்மையில், இந்த உண்ணாவிரதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டித்து அவருடைய வீட்டின் முன் நடத்தப்படுவதே சரியாக இருக்கும். ஏன் தெரியுமா..?

2003-ம் ஆண்டு பிரபாகரனின் பெற்றோர் இலங் கைக்கு சென்றவுடன் அன்று தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த அ.தி.மு.க. அரசு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை அனுப்பியது. 'மீண்டும் வேலுப்பிள்ளை குடும்பத்தினர் தமிழகம் வருவதற்கு அனுமதிக்கக்கூடாது. அதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்' என்பதே அந்தக் கோரிக்கை. மத்திய அரசும் அதனடிப்படையில் தடை ஆணையைப் பிறப்பித்தது. அந்தத் தடை ஆணையின் அடிப் படையில் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படக் கூடாத நபர்களின் பட்டியலில் வேலுப்பிள்ளை தம்பதியின் பெயரும் இடம் பெற்றுவிட்டது. தற்போதும் அதன் காரணமாகத்தான் விமான நிலைய அதிகாரிகள் பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் - அவருக்கு உரிய விசா வழங்கப்பட்டிருந்தும்கூட! பார்வதி அம்மாள் இங்கே தமிழகத்துக்கு ஒரு சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு அரசியல் நிகழ்ச்சி களுக்காகவோ வரவில்லை. தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளக்கூட இயலாத நிலையில் இருக்கும் அவர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத்தான் இங்கு வந்தார். பல்வேறு நோய் களுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கி, தமிழகம் உலகப் புகழ் பெற்று வருகிறது. இதைத் தமிழக அரசும் பல சமயங்களில் பெருமையோடு சொல்லிக் கொள்வதைப் பார்க்கிறோம். அப்படி இருக்கும்போது பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டிருப்பது எந்த விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் இங்கே எந்தவித பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடக்கூடிய வாய்ப்பு இல்லை. இது இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு ஒன்றும் தெரியாத விஷயமும் அல்ல.

'ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளால்தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்' என்று சொல்லி தற்போதைய அரசும் தனது பொறுப்பிலிருந்து நழுவிக்கொண்டுவிட முடியாது. அவர் திருப்பி அனுப்பப்பட்டது ஒருவேளை தமிழக முதல்வருக்கு தெரியாமலேகூட நடந்திருக்கலாம். ஆனால், இப்போது அந்த நிலையை மாற்றி மீண்டும் அவரை இங்கே வரச்சொல்வதற்கு தமிழக முதல்வரால் முடியும். தமிழக அரசின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ரத்து செய்து, தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து பார்வதி அம்மாளின் பெயரை நீக்குமாறு தமிழக முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். இந்த அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம்தான் இருக்கிறது.

உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரமும் தாய்ப் பாசத்தின் பெருமை உணர்ந்த ஒரு தமிழர் என்பதால் இதை உணர்வுபூர்வமாக அவரால் புரிந்து கொள்ள முடியும்.

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்த உண்மைகள் இப்போதுதான் மெள்ள மெள்ள வெளியாகத் தொடங்கியுள்ளன. அங்கு நிகழ்த்தப்பட்ட போர்க் காலக் குற்றங்கள் குறித்து விசாரித்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு, அண்மையில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த அமைதிக்கான நிறுவனம் ஒன்றின் முன்முயற்சியில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை 'துப்ளின் அறிக்கை' என்று அறியப்படுகிறது. 2009-ம் ஆண்டு மே மாதத்தில் யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை ஆய்வு செய்த அந்தத் தீர்ப்பாயம், அங்கே போர்க்கால குற்றங்கள் நிகழ்ந்திருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகத் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உலக அளவில் எழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கையை தமிழக அரசும் இந்நேரம் வலியுறுத்தியிருக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் அதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வைத்தான் பார்க்கிறோம். ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை தமிழ்நாட்டு மக்கள் கைவிட்டுவிடவில்லை. அவர்களுடைய உணர்வு நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டே இருக்கிறது. இதைத் தமிழக அரசும், மத்திய அரசும் புரிந்துகொள்ள வேண்டும்.

பார்வதி அம்மாள் தமிழகத்துக்கு வந்து, உரிய சிகிச்சை பெற்றால்தான் தமிழ்நாட்டின் மனிதாபி மானத்துக்கு மறுபடி உயிர் கிடைக்கும்.

- Vikatan

  • தொடங்கியவர்

பிரபாகரனின் தாயார் செய்த குற்றம் தான் என்ன?

அனலை நிதிஸ் ச. குமாரன்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் (80 வயது) என்ன குற்றம் செய்தார் என்று கூறாமலே நடு இரவில் சென்னை வானூர்தி நிலையம் வந்தடைந்தவுடன் தரை இறங்கவிடாமலே திரும்பவும் மலேசியா நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள் இந்திய வல்லாதிக்க ஆட்சி. இதற்கு துணை போய்விட்டார் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி. சென்னையில் நீங்கள் தரை இறங்குவதற்கு அனுமதியில்லை என்று கூறி விமானத்தை விட்டுக் கீழே இறங்குவதற்கு கூட பார்வதி அம்மாளை அனுமதிக்கவில்லை.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 16-4-2010 இரவு மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் அவரை இறங்க அனுமதிக்காமல் தடுத்து, அதே விமானத்தில் மலேசியாவிற்கு மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டனர். பிரபாகரனின் தாயார் தனது சிகிச்சைக்காக விசா பெறலாம் என்ற நிலையில் அரசின் உத்தரவு அமைந்து மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் அந்த விசாவினைப் பெற்று அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது, மத்திய அரசினுடைய அதிகாரிகள் சிலர், விமான நிலையத்தில்-விமானத்துக்குள்ளே நுழைந்து, தவறுதலாக உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறி மலேசியாவுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். அவரை அழைத்துச் செல்வதற்காக சென்னை வானூர்தி நிலையம் சென்றிருந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் அதிர்ச்சியுடன் தமது வீடுகள் திரும்பினர்.

வேடிக்கை என்னவென்றால் தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் இந்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற கடும் கொந்தளிப்பான நிலைக்குப் பின்னர் கருணாநிதி தனது வழக்கமான நீலிக்கண்ணீர் வடிப்பு நாடகத்தை வெளிப்படித்தினார்.

கருணாநிதியின் கண்துடைப்பு நாடகம்

தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் தனது பேச்சில் கூறியதாவது: “இதுபற்றிய முழுத் தகவலை மறுநாள் காலையில் பத்திரிகைகளைப் படித்த பிறகே தெரிந்து கொள்ள முடிந்தது. இதேபோல ஒரு சம்பவம் 1985-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவும் அன்றிருந்த மாநில அரசின் வேண்டுகோள்படிதான் இடப்பட்டது எனக் கூறப்பட்டது. அதில், உண்மை எதுவோ எனக்குத் தெரியாது. எங்களுக்குச் செய்தி கிடைத்து உடனடியாக, டெசோ அமைப்பின் சார்பாக சென்னையில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக, சந்திரஹாசன் மீதான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதற்குப் பிறகு, பாலசிங்கம் மீதான நாடு கடத்தும் உத்தரவும் திரும்பப் பெறப்பட்டது."

மேலும் அவர் கூறியதாவது: “பார்வதியம்மாள் தமிழகத்துக்கு வருவது பற்றி அவரிடமிருந்தோ அவர்களுக்கு துணை புரிய விரும்புகிறவர்களிடம் இருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ, தகவலோ நேரடியாக வரவே இல்லை. மத்திய அரசுக்கும் பார்வதியம்மாளுக்கும் இடையே தான் இந்தப் பயணம் பற்றிய செய்தித் தொடர்பு இருந்திருக்கிறதே தவிர, தமிழக அரசுக்கு இதிலே எந்தவிதமான தொடர்பும் கிடையாது. கடந்த 2003-ம் ஆண்டில், தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தின் 2-வது பத்தியில், இலங்கைத் தமிழர்கள் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதியம்மாள் ஆகியோர் இந்தியாவுக்குள் சட்ட ரீதியாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும். அவர்களது பெயர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கடிதம் எழுதி, அதன் காரணமாக தடை விதிக்க ஏற்பாடு செய்தவர்கள்-எங்கே அந்த உண்மை இங்கே வெளியிடப்பட்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ-மிக முக்கியமான இந்தப் பிரச்சனையில் எல்லா கட்சியினரும் குரல் எழுப்புகின்ற இந்தப் பிரச்சனையில் அவர்கள் (அதிமுக) மாத்திரம் வராமல் இருந்து விட்டார்கள் என்பதைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். அவர்கள் தான் இன்றைக்கு மாபெரும் கூட்டணியில் இருக்கிறார்கள். அது தமிழர் கூட்டணி எனச் சொல்லப்படுகிறது.”

“அப்படிப்பட்ட நண்பர்கள் இந்தப் பிரச்சனையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இது முழுக்க முழுக்க தமிழக அரசுக்கு உரிய பிரச்சனை என்பதைப் போல ஏடுகளில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்துக்குத் தொடர்பு கொள்கிறேன். பார்வதியம்மாள் திரும்ப அனுப்பப்பட்டு விட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது. ஆனால், இந்தச் செய்தி முறையாக, உரிய வகையில் எனக்குச் சொல்லப்படவில்லை. அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை. அதன் காரணமாக, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மலேசியாவுக்கே திரும்பச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அங்கே மருத்துவ வசதி பெறுவதாக செய்திகள் வந்திருக்கின்றன. மீண்டும் தமிழகம் சென்று மருத்துவம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று பார்வதியம்மாள் அறிவித்தால், அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அது பற்றி கடிதம் எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது. மத்திய அரசின் பதிலைப் பற்றி-அது என்ன கூறுகிறது என்பதைப் பற்றி, அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால், அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன்", இப்படியாக நீலிக்கண்ணீர் விட்டார் முதல்வர் கருணாநிதி.

70-ஆம் ஆண்டுகளில் செல்வராஜா யோகச்சந்திரன் என்றழைக்கப்படும் குட்டிமணியை நாடு கடத்தினார் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி. பின்னர் சிங்கள ஆட்சியாளர்களினால் கைது செய்யப்பட்டு கண் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட பின்னர் கருணாநிதியோ ஏதோ தனது பழைய நாசகார வேலைகளை மறைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் குட்டிமணி மற்றும் ஐம்பதுக்கும் அதிகமான தமிழ் மாந்தர்கள் படுகொலையை தனது கட்சி வளர்ச்சிக்கான பிரச்சாரமாக கருணாநிதி மேற்கொண்டார்.

பாவம் இந்த பார்வதி அம்மாள். படுத்த படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக ஒரு பெண்ணும் சென்றார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் சென்ற விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர். அத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர். பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று போற்றப்படும் தமிழகத்திற்குள் பார்வதி அம்மாள் தனக்கு உரித்துடைய தமிழகத்துக்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்திய அரசு ஆறு மாத காலத்திற்குரிய விசாவை அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்? அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்று சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும். காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும்.

மானத்தமிழ் தலைவர்கள் என்ன கூறுகின்றார்கள்?

நெடுமாறன் கூறியதாவது: “பார்வதி அம்மாள் அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல நானும் வைகோ அவர்களும் சென்றிருந்தோம். அவர் வருகையை நாங்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவரது உடல்நலம் மட்டுமே எங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. வெளியில் தெரிந்தால் கூட்டம் கூடும். அது அவரது உடல் நலனுக்குக் கேடாக முடியும் என்ற காரணத்தினால் அவர் வருகையை வெளியிடவில்லை. விமான நிலையத்திற்கு வைகோவும் நானும் சென்ற போது நாங்கள் வருவதற்கு முன்பே அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல் படையினர் பாய்ந்தோடி வந்து எங்களை வழிமறித்துத் தடுத்தார்கள். விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நாங்கள் செல்வதற்குரிய அனுமதிச் சீட்டுகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களைப் பிடிவாதமாக அனுமதிக்க மறுத்து பிடித்துத் தள்ளும் அளவிற்கு காவல்துறையினர் அட்டூழியம் புரிந்தனர். தொடர்ந்த தள்ளு முள்ளுக்கு நடுவேதான் நாங்கள் விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதியையே அடைய முடிந்தது. விமான நிலையத்தில் தனியான பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். ஆனால் சென்னை புறநகர்க் காவல்படையினர் அத்து மீறி செயல்பட்டு எங்களைத் தடுத்தார்கள். முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாமல் இது ஒரு போதும் நடந்திருக்க முடியாது. இந்திய அரசு விசா வழங்கிய பிறகு கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இரக்கமற்ற இந்தக் கொடிய செயலுக்கு அவரே முழுமையான பொறுப்பாளி ஆவார். உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியத் தலைவரான பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்தத் தாயாரை, தாய்த் தமிழகத்தை உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டியடித்த கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்."

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கூறியதாவது: “விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை தமிழகத்தில் தங்க வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய பிரபாகரனின் தாயார், சிகிச்சை பெற சென்னை வந்தபோது அவரைத் திருப்பி அனுப்பிய செயல் மனிதாபிமானமற்றது. கொடுங்குற்றம் புரிந்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்குக் கூட, தண்டனையை நிறைவேற்றும் முன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால், பார்வதி அம்மாளை சிகிச்சைக்கு அனுமதிக்காமல், திருப்பி அனுப்பி விட்டனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்கவும், அவர் வாழ்நாள் முழுவதும் தமிழகத்தில் தங்கியிருக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்."

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளதாவது: “விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ஒரு பயணியாக வந்துள்ளாரே தவிர ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக அல்ல. இந்த விஷயம் பற்றி தனக்கு தெரிவிக்கவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி குறைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. சென்னை விமான நிலையத்தில் மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தகவல் உடனடியாகத் தெரிந்திருக்கும். அப்படியிருக்க தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி சொல்வது நம்பக்கூடியதாக இல்லை. இந்திய அதிகாரிகள் மூலம் விசா பெற்றுத்தான் பார்வதி அம்மாள் சென்னை வந்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் தன்னை இறங்கவிடமாட்டார்கள் என்று அவர் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அவரை இறங்கவிடாமல் தடுத்தது இந்திய அரசுதான். ஆகவே இத் தகவல் தெரிந்தும் மௌனம் சாதித்துள்ளது தமிழக அரசு. ஆகவே, தடை ஆணை விதித்த இந்திய அரசும் அதற்கு துணை போன முதல்வர் கருணாநிதியும்தான் மீண்டும் பார்வதி அம்மாள் சென்னைக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக பார்வதி அம்மாள் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போம் என்று சொல்வது என்ன நியாயம்? 2003-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரபாகரனின் பெற்றோர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர தடைவிதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்த சூழ்நிலை வேறு, இன்றைய நிலை வேறு. 2003-ம் ஆண்டு பட்டியலை பல ஆண்டுகள் கழித்துதான் பரிசீலிக்க வேண்டும் என்பதில்லை. தமிழக அரசின் சார்பில் முதல்வர் கருணாநிதி இந்த தகவல் தனக்கு தெரிந்த உடனேயே இன்றைய சூழ்நிலையை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அந்தப் பட்டியலை ரத்து செய்திருக்கலாம். ஏன், இதை இன்றுகூட செய்யவில்லை என்பதுதான் கேள்வி."

சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியதற்கு மத்திய அரசின் தவறான உள்நோக்கமே காரணம் என்று பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை: “பார்வதி அம்மாளை பிரபாகரனின் தாயாராக பார்க்காமல், முறையான அனுமதி பெற்று மருத்துவ சிகிச்சை பெற வந்த 80 வயது மூதாட்டி என்ற முறையில் பார்த்தால், அவரைத் திருப்பி அனுப்பிய மத்திய அரசின் செயல் மனிதாபிமானமற்றது. பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்து பலர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

நாடாளுமன்றத்தைத் தாக்க சதி செய்த அப்சல் குரு, மத்திய அரசால் விருந்தாளி போல் நடத்தப்படுகிறார். மும்பை தாக்குதலுக்குக் காரணமான கசாப்பிற்கு இன்று பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கூட இங்கு ராஜபட்ச சகோதரர்களுக்கு மத்திய அரசால் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் வயதானவர் என்ற முறையிலாவது பார்வதி அம்மாள் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்திருக்க வேண்டும். மத்திய அரசின் இந்தப் போக்கு, ஒரு தவறான உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. மத்திய அரசின் இந்தப் பாரபட்சமான நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்த முடிவு தமிழக அரசுக்கோ, முதல்வர் கருணாநிதிக்கோ தெரியாமல் இருக்க சாத்தியமில்லை. பார்வதி அம்மாள் தமிழகத்தில் இருந்தபோது, பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவே இருந்தனர். இன்று ராஜபக்சவை திருப்திப்படுத்துவதற்காக எடுத்துள்ள முடிவை மனிதாபிமானமற்றது என்றுதான் கூற வேண்டும்."

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கையில் கூறியுள்ளதாவது: “பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டதற்குக் காரணம் 2002 இல் அ.தி.மு.க. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு எழுதி பெற்றுக்கொண்ட கடிதம்தான் என்பதையும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி அம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் பக்கவாத நோயினால் தாக்குண்டு, பெரிதும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, இலங்கையிலிருந்து மலேசியாவிற்குச் சென்று, அங்கு சரியான சிகிச்சைக்கு வழி இல்லை என்பதற்காக விசா பெற்று இங்கே (தமிழ்நாட்டிற்கு) மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ள நிலையில், 16.4.2010 அன்று விமான நிலையத்தில் அவரை இறங்கவிடாமல், திருப்பி அனுப்பியது மனிதநேயத்திற்கு விரோதமான செயல் என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை விடுத்திருந்தோம் (17.4.2010). பல கட்சியினரும் உணர்ச்சிபூர்வமாக அறிக்கை விடுத்தனர். அ.தி.மு.க.வைத் தவிர! சட்டப்பேரவையில் இந்நிலை ஏற்பட்டதற்கு மூல காரணம் 2002 இல் பிரபாகரனின் தாய், தந்தையர் இலங்கை சென்றுவிட்ட நிலையில், அவர்கள் மீண்டும் திரும்பி வந்தால், அவர்களை அனுமதிக்கக்கூடாது என்று ஒரு ஆணையை மத்திய அரசுக்கு எழுதிப் பெற்ற பெருமை ஜெயலலிதாவைத்தான் சாரும். அவர்கள் முதல்வராக இருந்தபோதுதான் இந்தச் சாதனையைச் செய்தார்! நம் அதிகாரிகளுக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை இதனால்தான் என்ற உண்மையை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்கள். அதோடு, பிரபாகரனின் தாயார் இங்கே வந்து மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால், மத்திய அரசுக்கு தமது அரசு கடிதம் எழுதி உதவிடத் தயார் என்றும் குறிப்பிட்டிருப்பது மிகவும் மனிதாபிமானத்துடன் கூடிய நல்ல செயல்; நம் முதல்வரின் கூற்றை வரவேற்பதோடு, அவர்கள் இம்முயற்சியைச் செய்யவேண்டும் என்றும் உலகத் தமிழர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இதற்குமுன்புகூட, ஜெயலலிதா (அ.தி.மு.க.) ஆட்சியின்போது தோழர்கள் பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன் போன்றவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு, பேசத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தில் வாங்கிய நிலை தொடர்வதை ரத்து செய்து, அவர்களது வாய்ப்பூட்டை விலக்கிய செயலும் கலைஞர் அரசின் மனிதநேயம் மனித உரிமைக் காப்பினைக் காட்டுவதாகும். எனவே, இதற்குக் காரணமான அ.தி.மு.க. ஆட்சிபற்றி தமிழ்கூறும் நல்லுலகம் தெரிந்துகொள்வது முக்கியமாகும்."

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: “இந்திய குடிவரவைச் சார்ந்த அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொண்டதற்கு, கடந்த 2003ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கைச் சுற்றறிக்கையே காரணம் என்பது தெரியவருகிறது. அதாவது 1980க்குப் பின்னர் தமிழகத்திற்கு வந்த மேதகு பிரபாகரன் அவர்களின் பெற்றோர் 2003ஆம் ஆண்டு வரையில் திருச்சிராப்பள்ளியிலேயே தங்கியிருந்தனர். 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து பலரும் ஈழத்திற்குத் திரும்பினர். அதே போல மேதகு பிரபாகரன் அவர்களது பெற்றோரும் 2003ஆம் ஆண்டு தமது தாயகத்திற்குத் திரும்பினர். அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் தமிழகத்திற்கு வர தடை விதிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருக்கிறார். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையிலேதான் அவர்கள் தமிழகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அந்தத் தடையின் அடிப்படையில்தான் அதிகாரிகள் அன்னை பார்வதி அம்மாள் அவர்களை சென்னையில் இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிய வருகிறது. அதாவது, பார்வதி அம்மாள் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கு அன்றைய அதிமுக அரசு பெற்ற தடையாணைதான் காரணம் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. எனினும், அதனைக் காரணம் காட்டி அவரை இங்கு மருத்துவம் பெறவிடாமல் திருப்பி அனுப்பிய நடவடிக்கையானது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். இந்நிலையில் இந்திய அரசின் அனுமதி மறுப்புப் பட்டியலிலிருந்து அன்னை பார்வதி அம்மாள் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழகத்திற்கு அவரை அழைத்து வரவேண்டும் எனவும் தமிழக அரசை வற்புறுத்துகிறோம்."

இந்தியா தமிழருக்கு எதிரான செயல்களை தொடர்ந்தும் செய்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை நிரூபித்து காட்டியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: “தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தாயர் இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளமைக்கு நாம்தமிழர் இயக்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நாம்தமிழர் இயக்கத்தின் தலைவரும் தமிழ் உணர்வாளரும் இயக்குனருமான செந்தமிழ் சீமான் தனது கண்டனத்தினை வெளியிட்டுள்ளார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் தனது உடல்நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி அனுமதி பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல் மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளமை மனிதாபிமானம் அற்றசெயல் மட்டுமல்ல, சட்டவிரோதசெயல் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்தியமண்ணிற்கு தொடர்பில்லாத இத்தாலியர் தொடங்கி மாறுபாடி குஜராத்தி, மலையாளி, தெலுங்காளி வரையில் அனைவரும் உல்லாசமாக வாழவும் அதிகாரத்திலும் இருக்கையில் எங்கள் அன்னையின் உடல்நலத்திற்கு சிகிச்சை பெற இந்தமண்ணில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது வெட்கக்கேடான விடயம் என்றும், தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் சிகிச்சை அளிக்கமுடியாது ஆனால் பாக்கிஸ்தான் நாட்டு சிறுவனுக்கு சிகிச்சைபெற இந்தியா உதவி உலகத்திற்கு படம் எடுத்துக் காட்டியவர்கள் இதில் இரட்டைவேடம் போடுகின்றார்கள். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் எங்கள் தேசியத்தலைவர் அவர்களின் தாயாரை மனிதாபிமானம் அற்று திருப்பி அனுப்பியதன் மூலம் இந்திய மாநில அரசுகள் தமிழர்களுக்கு எதிரான தங்கள் செயல்களை தொடர்ந்து செய்துகொண்டு இருக்கின்றதை வெளிக்காட்டி நிற்கின்றது."

தேசியத் தலைவர் பிரபாகரனை தமது முடிசூடா மன்னனாக போற்றிய பல தமிழ் நாட்டுத் தலைவர்கள் இன்று பல மாறு பட்ட கருத்துக்களை பல வடிவங்களில் கூறுகின்றார்கள். குறிப்பாக வீரமணி அவர்கள் இன்று ஜெயலலிதா மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க முனைகின்றார். இவர் பல காலகட்டங்களில் ஜெயலலிதாவுடன் செயலாற்றியவர். இன்று கருணாநிதியுடன் செயலாற்றிக்கொண்டிருக்கின்றார். ஆக இப்படியான தமிழ் நாட்டுத் தமிழர்களினால் தான் இன்று ஈழப் போராட்டம் இந்த நிலையை அடைந்திருக்கின்றது என்றால் மிகையாகாது.

புது டெல்லியில் இருந்து பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் அத்வானி இந்திய நாடாளுமன்றத்தில் பார்வதி அம்மாளின் நிகழ்வை வன்மையாக கண்டித்து பேசியுள்ளார். இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவில் சிவப்பு கம்பள மரியாதை அளித்து அவர்களுக்கு அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தும் நடுவண் அரசுஇ பாவம் ஒன்றும் அறியா பிரபாகரனின் தாயார் மட்டும் நாட்டுக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இது மனிதாபிமானத்திற்கு விழுந்த பலத்த அடியாகத் தான் பார்க்கவேண்டும் என்று கூறியதன் மூலம் அத்வானி போன்ற வட இந்தியத் தலைவர்கள் தமிழ் நாட்டுத் தலைவர்களிலும் விட பரவாயில்லை போலும். நிச்சயம் பார்வதி அம்மாளை நாட்டுக்குள் விடாமல் செய்ததன் மூலம் இந்தியா மீண்டும் பெரும் தவறை இழைத்துவிட்டது. மனிதாபிமானம் பேசிய புத்தர், காந்தி, நேரு என்று பல தலைசிறந்த தலைவர்கள் பிறந்த இந்திய நாடு இன்று தலை குனிந்து வெட்கப்படும் நிகழ்வை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு குற்றமும் செய்யாத பார்வதி அம்மாளை நாட்டுக்குள் விடாமல் செய்ததன் மூலம் மீண்டும் ஈழத் தமிழரின் வெறுப்புக்குள்ளாகியுள்ளது இந்திய நடுவண் அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இயங்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி. இந்தியாவின் ஈழத் தமிழர் விரோத போக்கு எல்லை கடந்து சென்று கொண்டிருக்கின்றது என்பதை பல கடந்த கால நிகழ்வுகள் மற்றும் இந்த சம்பவம் மூலம் நிரூபணமாக்கப்பட்டுவிட்டது.

இக்கட்டுரையில் குறை நிறை இருந்தால் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com அல்லது nithis.s.kumaaran@gmail.com

  • தொடங்கியவர்

தாயாரை திருப்பி அனுப்பியதில் தமிழக அரசுக்கு தொடர்பு இல்லை: வழக்கில் இருந்து விடுவித்து ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, ஏப். 28-

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பார்வதியம்மாளை மலேசியாவில் இருந்து சிறப்பு விமானத்தில் தமிழகம் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஜெயசிங் ஆஜராகி வாதாடியதாவது:-

இந்த வழக்கில் மத்திய அரசையும், மாநில அரசையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்கள். பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. வெளிநாட்டவர்கள் வருகையும், அனுமதி வழங்குவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது என்று கூறினார்.

இதை நீதிபதிகள் ஏற்று கொண்டு வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர். பின்னர் நடந்த வாதத்தில் மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி நாளை பதில் அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தம்பி என் கதியைப் பார்த்தாயா? திருமாவேலன்.

கடந்த பதினாறாம் தேதி இரவில் எத்தனையோ பேரைச் சுமந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் புலித் தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதியும் இருந்தார். உடன் வந்தவர்களுக்கு அவர் வயதான மூதாட்டி, அவ்வளவுதான். ஆனால், சென்னை விமான நிலையம் அவரை வேறு மாதிரியாகப் பார்த்தது. 'நீங்க இங்கே இறங்குவதற்கு அனுமதி இல்லை. எனவே, வந்த விமானத்திலேயே மலேசியா போகலாம்' என்றார்கள் அதிகாரிகள். பார்வதிக்குப் பக்கத்தில் துணையாக இருந்த பெண்ணுக்கு தலையை ஆட்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஆனால், அந்தத் தாய்க்கு அதுவும் தெரியவில்லை. ஏதோ நடக்கிறது என்று தெரிகிறது. ஆனால், என்னவென்று புரியவில்லை. லேசாக இமைகள் அசைகின்றன. ஆனால், உள்ளுணர்வுக்கு அதை முழுமையாக யோசிக்கும் சக்தி இல்லை. அவர் இங்கு வந்தது சொந்தங்களைச் சந்திக்கவோ, இங்குள்ள புலி ஆதரவாளர்களை உசுப்பேற்றவோ, ராஜபக்ஷே போர்க் குற்றவாளி என்று பிரசாரம் செய்யவோ அல்ல. தன்னுடைய நோவுக்கும் உடல் நலிவுக்கும் மருந்திட்டுக்கொள்வதற்காக! தவித்த வாய்க்குத் தண்ணீர் மறுப்பதுபோல்தான் சிகிச்சை அவருக்கு இங்கே மறுக்கப்பட்டு இருக்கிறது.

திருக்குறளும், குறிஞ்சிப்பாட்டும், நாலடியாரும், திரிகடுகமும் விருந்தோம்பலை எப்படி எல்லாம் வியந்தோதியிருக்கிறது என்று மாநாடு கூட்டி நம்முடைய முதுகை நாமே தட்டிக்கொள்ளக் காத்திருக்கும் நேரத்தில்தான், இப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்திருக்கிறது.

அப்பா வேலுப்பிள்ளை வல்வெட்டித்துறைக்காரர். அம்மா பார்வதி பருத்தித்துறையைச் சேர்ந்தவர். வேலுப்பிள்ளை அரசு அதிகாரியாக இருந்ததால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊர் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். பிரபாகரன் ஆயுதம் தூக்கி தலைமறைவான காலத்தில் இந்தக் குடும்பத்துக்கு வீடு கிடைக்காமல், கிடைத்தாலும் அங்கு நிரந்தரமாகத் தங்க முடியாமல் அலைந்து வந்தார்கள். ஒருகட்டத்தில் இந்தியா வந்து திருச்சியில் தங்கினார்கள். அங்கே போர் மேகம் சற்று விலகிய சமயம் ஈழத்துக்குப் போனார்கள். இறுதிப் போர் முற்றுகைக்குப் பிறகு... எல்லாம் முடிந்த பிறகு... முள்வேலி முகாமில், ராணுவப் பாதுகாப்புக்குப் போனவர்கள்... அதைஅடுத்து இலங்கை ராணுவத்தின் கடுமையான கண்காணிப்புப் பிடிக்குள் இருந்தார்கள். வேலுப்பிள்ளை மறைவைத் தொடர்ந்து அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் முயற்சியால் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பார்வதி அம்மாள். அங்கு அவருக்கு குறுகிய காலமே விசா தரப்பட்டு இருந்தது. எனவே, பிரபாகரனின் அக்கா வினோதினி, தான் இருக்கும் கனடாவுக்கே தாயாரை அழைத்துச் செல்ல விரும் பினார். அங்கு மருத்துவச் செலவு அரசாங்கத்தின் வசமாக இருப்பதால், ரொம்பவே யோசித்துதான் விசா கொடுப்பார்கள் என்று தெரியவர... மலேசியாவில் இருந்து தமிழகம் அழைத்து வந்து, பார்வதி அம்மாளுக்கான சிகிச்சையை முடித்துவிட்டு, அதன்பிறகு யார் பாதுகாப்பில் வைத்திருப்பது என்று முடிவெடுக்க நினைத்தார்கள். பழ.நெடுமாறன் இதற்கான முயற்சிகளைச் செய்தார். பிரபாகரனின் தாய் நெடுமாறன் வீட்டில் தங்கப்போவதாகத்தான் முகவரியும் தரப்பட்டது.

பார்வதி அம்மாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்ல. பிரபாகரனது அண்ணன் மனோகரன் தனது தம்பிக்கு இயக்கம் தொடர்பாக ஒரு கடிதம் அனுப்பிவைத்தபோது, அப்பா வேலுப்பிள்ளை - பார்வதியின் முகவரி அதில் இருந்தது. கடிதத்தைப் பெற்ற அந்தப் பெற்றோர், 'நீ பிரபாகரனுக்கு அண்ண னாக இருப்பது குடும்பம் சம்பந்தப்பட்டது. அவன் இயக்கத்தை நடத்துபவன். சொந்த பந்தத்தை முன்னிட்டு இப்படி உறவு கொண்டாடுவது தவறு' என்று சொல்லி, அந்தக் கடிதத்தைப் பிரிக்காமலே திருப்பி அனுப்பிவைத்தார்கள் அந்தத் தம்பதி. ஆனால் இன்று அவரை இயக்கத்தைக் காரணமாகக் காட்டி சிகிச்சைக்கு மறுத்திருப்பது ஆச்சர்யமானது!

கடந்த 10 ஆண்டுகளாகவே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் பார்வதி அம்மாள். சர்க்கரை வியாதியும் இருப்பதால் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டது. கிட்னி பாதிப்புக்கும் ஆளானவர். அண்மையில் தன் கணவர் வேலுப்பிள்ளை மறைந்த பிறகு, திடீர் திடீரென்று 'ஐயா... ஐயா..' என்று அவர் நினைப்பில் அழ ஆரம்பித்தால் வெகுநேரம் வரை விசும்பல் தொடர்ந்துகொண்டே இருக்குமாம். பார்வதி அம்மாள் தானாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை நிதானப்படுத்த முடியாது.

அதாவது... உடல் இயக்கத்தின் மிக முக்கியமான சிந்தனை, பேச்சு, அசைவுகள், நடை ஆகிய நான்குமே பாதிக் கப்பட்டுதான் இருந்தார்.

ஏப்ரல் 16-ம் தேதி காலைதான் இந்தியா செல்வதற்கான அனுமதி அவருக்குக் கிடைத்ததாம். அன்று இரவு விமானத்திலேயே இடம்பிடித்தார்கள். அவருடன் உதவிக்காக விஜயலட்சுமி என்ற நர்ஸ் வந்திருந்தார்.

இந்தத் தகவலை வைகோவிடம் மட்டும் சொல்லியிருக்கிறார் நெடுமாறன். அவர்கள் இருவர் மட்டும் தான் விமான நிலையத்துக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கு தமிழக போலீஸ் படை பலமாகக் காத்திருந்தது. இருவரையும் உள்ளேயே செல்லவிடாமல் தடுத்துவிட்டது. அந்தப் பெரும் போராட்டம் முடிவதற்குள், பிரபாகரனின் தாயார் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார். இதுபற்றி வைகோ, ''தமிழனைத் தலை நிமிரவைத்த பிரபாகரனைப் பெற்றெடுத்த தாயைத் திருப்பி அனுப்பியதன் மூலம், தீராத பழியை தமிழ்நாடு அடைந்துவிட்டது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாவம் நம்மை விட்டுப் போகாது. அவர் ஒன்றும் ஆள்மாறாட்டம் செய்து ரகசிய பெயரில் இந்தியாவுக்கு வரவில்லை. சொந்தப் பெயரில்தான் வந்தார். அவர் நெடுமாறன் வீட்டில் தங்கப்போவதாகத்தான் முகவரியையும் கொடுத்திருக்கிறார். அவரை மத்திய அரசுதான் திருப்பி அனுப்பியது என்றால், அவர்கள் ஏன் முன்னர் அனுமதி கொடுத்தார்கள். இப்போது மறுத்தார்கள். இரண்டுக்கும் மத்தியில் என்ன நடந்தது? 'மத்திய அரசாங்கமே கருணாநிதியின் ஆலோசனைப்படிதான் நடக்கிறது' என்று மன்மோகன் சிங் சொல்வது உண்மையானால், இந்த நடவடிக்கையும் கருணாநிதி சொன்னதால்தானே நடந்திருக்கும்?'' என்று கொதித்தார்.

''நீங்கள் அனைத்துத் தமிழ் உணர்வாளர்களையும் அழைத்துச் செல்லாமல் இந்த விஷயத்தை ரகசியம் காத்தது ஏன்?'' என்று வைகோவிடம் கேட்டபோது,

''இப்படியரு பலமான ஏற்பாட்டை நாங்கள் செய்திருந்தால் கருணாநிதிக்கு வேறு காரணமே தேவைப்பட்டு இருக்காது. புலிகளை வைத்து அரசியல் நடத்த பார்வதியைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லி, அதையே காரணமாகக் காட்டி திருப்பி அனுப்பியிருப்பார். அவரை இங்கு மாநாட்டுக்கு அழைத்து வரவில்லை. எங்களுக்கு பார்வதி தாயைக் குணப்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கம். தமிழ் உணர்வாளர்கள் வருத்தப்படலாம். ஆனால், அப்படிச் செய்திருந்தால் கருணாநிதிதான் லாபம் அடைந்திருப்பார்'' என்று பதில் அளிக்கிறார்.

''எத்தனையோ கொடூரங்களை நடத்திக் காட்டிய இலங்கை அரசேகூட பார்வதி அம்மாள் விடுதலைப் புலி இயக்கத்தின் உறுப்பினர் அல்ல என்ற விளக்கத்தை ஏற்றுக்கொண்டுதான் மலேசியா செல்ல அனுமதித்தது. மலேசியாவும் தங்க அனுமதித்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பிய உடனேயே யோசிக்காமல் மறுபடியும் ஒரு மாத கால அனுமதியை மலேசியா வழங்கியுள்ளது. மலேசியாவில் இருந்து கிளம்பிச் சென்ற ஒருவர், அடுத்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் வந்து இறங்க சட்டப்படி அனுமதி கிடையாது. அதைச் சொல்லி மறுத்திருந்தால் பார்வதி, மீண்டும் கொழும்புக்குத்தான் போயிருக்க வேண்டும். ஆனால், அவருக்குத் துணையாகச் சென்றவரோ மலேசிய பிரஜை. விசா இல்லாமல் கொழும்பில் இறங்க முடியாது. தனியாக அநாதை யாகத்தான் பார்வதி அனுப்பிவைக்கப்பட்டு இருப்பார்'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கியூபா ஹவானாவில் நடந்த அணி சேரா மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்தார். அவர் மீது தமிழகத்தில் சூளைமேடு, கீழ்ப்பாக்கம் பகுதி காவல் நிலையங்களில் வழக்குகள் இருக்கின்றன. அவரும் நிம்மதியாக இங்கு வந்து போகிறார். பத்திரிகைகளுக்கு வெளிப்படை யாகப் பேட்டிகள் கொடுப்பார். ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தைச் சேர்ந்த பரந்தன் ராஜன் குரூப் இங்கு வெளிப்படையாக இயங்குகிறது. அவர்கள் மீதும் வழக்குகள் உண்டு என்றெல்லாம் சுட்டிக்காட்டு கிறார்கள் ஈழத் தமிழ் உணர்வாளர்கள்.

இரவு பத்தரை மணிக்கு வந்த பார்வதி ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு இறக்கிவிடும்போது அதிகாலை மூன்றரை. இந்த ஐந்து மணி நேரத்தில் நடுவானத்தில் அவர் நடுங்கிப்போய்விட்டாராம். சென்னை யில் இறக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள் என்பதைச் சிரமப்பட்டு அவர் நினைவில் பதியவைத்தபோது... அவரது உதட்டில் இருந்து, ''தம்பி, என் கதியைப் பார்த்தாயா?'' என்று 'எங்கோ' இருக்கும் தன் மகனை நோக்கி வார்த்தைகள் வந்தனவாம். கூடவே, கண்களில் இருந்து அலை அலையாக இயலாமை கலந்த நீர்த் துளிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.