Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதாபிமானம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் மூத்தோர் அமைப்பின் அறிக்கை

Featured Replies

மனிதாபிமானம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் மூத்தோர் அமைப்பின் அறிக்கை

அனலை நிதிஸ் ச. குமாரன்

சிறிலங்காவில் சமூக முன்னேற்றம் உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று ‘தி எல்டர்ஸ்’; என்ற மூத்தோர் அமைப்பு ஆகஸ்ட் 3, 2010 அன்று அறிக்கைவாயிலாக தெரிவித்துள்ளதுடன் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரினால் நியமிக்கப்பட்டிருக்கும் மூவர் அடங்கிய ஆலோசனைக் குழுவுக்கு சிறிலங்கா முழு ஆதரவை அளிக்கவேண்டும் என்றும் இந்த அமைப்பு கேட்டுள்ளது. ஈழத்தமிழர் அழிக்கப்பட்ட பொழுது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததினால் ஏற்பட்ட விழைவே இந்த பேரவலம் ஆகவே உலக நாடுகள் மனிதாபிமானத்தை இழந்துவிட்டார்கள் என்று தமிழர்கள் பரவலாக கருதினார்கள். ஆனால், மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபிப்பதாற்போல் உள்ளது இந்த அமைப்பின் அறிக்கை.

தமிழர்களில் பலருக்கு இந்த அமைப்பினைப் பற்றி அறிய வாய்ப்புக்கள் குறைவே. இந்த அமைப்பு என்பது உலகின் முக்கிய தலைவர்களை உறுப்பினர்களைக் கொண்டதனால் இவர்கள் அதிகம் அறிக்கைகள் விடுவதை தவிர்ப்பார்கள். உலகில் சமாதானத்திற்கு ஆதரவு தருவதிலும், மனித அவலங்களின் முக்கிய காரணிகளை அகற்றும் நடவடிக்கைகளில் உதவுவதிலும், மானிடத்தின் நலன்களை வளர்ப்பதிலும் இந்த அமைப்பினர் செல்வாக்கையும் அனுபவத்தையும் பயன்படுத்துவதற்காகத் தான் இதனை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தி எல்டர்ஸ் என்ற மூத்தோர் அமைப்பினர் 1997-ஆம் ஆண்டு முன்னாள் தென் ஆப்ரிக்காவின் அதிபரும் பழம்பெரும் விடுதலை வீரருமான நெல்சன் மண்டேலா அவர்களினால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் உலகின் முக்கிய தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

டெஸ்மண்ட் டுடு தலைமயில் இயங்கும் இந்த அமைப்பில் மார்தி அஸ்திசாரி, கோஃபி அன்னான், இலா பட், லக்தர் பிரஷிமி, குரோ புருண்லான்ட், பெர்னாண்டோ ஹென்ரிகே கார்தொஷோ, ஜிம்மி கார்டர், கிராஸா மஷெல் மற்றும் மேரி ராபின்சன் உறுப்பினர்களாக உள்ளனர். நெல்சன் மண்டேலாவும், ஆங் சான் சூ சீயும் இந்த அமைப்பின் கௌரவ உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த வருடம் இடம்பெற்ற பாரிய யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இருந்து தாம் சிறிலங்காவில் இடம்பெற்று வரும் விடயங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறும் இந்த அமைப்பின் அறிக்கை சிறிலங்கா அரசையும் மற்றும் உலகின் வேறு பல பாகங்களில் உள்ள அதிகாரிகளையும் தொடர்புகொண்டு, சிறிலங்காவில் அனைத்துலக மனித உரிமைகள் மீறப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து கரிசனைகளை தாம் வெளியிட்டு வந்துள்ளதாக கூறியுள்ளது.

மூத்தோர் அமைப்பின் கவலையான விடயங்கள்

மூத்தோர் அமைப்பு தமது அறிக்கையில் சிறிலங்காவில் சமீபகாலமாக இடம்பெற்று வரும் நிகழ்வுகளை பட்டியல் போட்டுள்ளது. பின்வரும் விடயங்களில் தாம் மிகவும் கவலை கொண்டுள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது:

(அ) அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், அரசியல் போட்டியாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர் தண்டிக்கபடுதல், அச்சுருத்தபடுதல், படுகொலை செய்யப்படுதல் மற்றும் காணாமல் போதல்

(ஆ) முன்னாள் போராளிகள் என்று சந்தேகிக்கப்படும் சுமார் 8இ000 பேர் எவ்வித முறையான குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் சட்டப் பிரதிநிதித்துவத்திட்கும், குடும்பத்தினரையும், சுயாதீன கண்காணிப்பாளர்களையும் சந்திப்பதற்கும் அனுமதியில்லாத நிலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கபட்டுள்ளது;

(இ) விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிந்து ஒரு வருடத்துக்கும் அதிக காலமாகிவிட்ட நிலையிலும் யுத்தகால அவசரச் சட்டங்கள் அரசாங்கம் இன்னும் விலக்கிக்கொள்ளாமல் இருப்பது

(ஈ) சிறிலங்காவின் முப்பது வருட கால உள்நாட்டு போருக்கு ஆணிவேராக அமைந்துள்ள - இனச் சிறுபான்மையினர் அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்படுதல் என்ற விடயத்தை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவது

(உ) ஐநா மன்றம் தொடர்பில் ஏற்கமுடியாத வகையில் நடந்து கொள்வது. சிறிலங்காவில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட இருதரப்பினரும் செய்ததாக குற்றம்சாட்டப்படும் சர்வதேசச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களுக்குக் காரணமானவர்களை அச்செயல்களுக்கு பொறுப்பேற்கச் செய்வது தொடர்பான விவகாரங்களில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐநா தலைமைச் செயலாளர் நிபுணர் குழுவொன்றை அமைத்ததை அடுத்து கொழும்பில் உள்ள ஐநா அலுவலகங்களை சிறிலங்கா அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் முற்றுகையிட்டிருந்தது.

இப்படியாக மூத்தோர் அமைப்பினர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். இந்த அமைப்பில் கூறப்பட்டிருக்கும் விடயங்களை எப்படியாக சிறிலங்கா கையாளப்போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஐநாவின் அலுவலகத்தையே முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தி அலுவலகத்தையே மூடுமளவே காரியத்தை செய்த சிறிலங்கா அரசு இந்த மூத்தோர் அமைப்பின் அறிக்கையூடாக எழுப்பப்பட்டிருக்கும் காரணிகளுக்கு விடைதர முடியுமா என்பது சந்தேகமே.

தமிழர் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும் என்னவென்றால் அரசியல் மற்றும் இராஜதந்திர சாணக்கியத்தை முன்னர் எப்போதும் இல்லாதவாறு உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் சேர்ந்து ஈழத்தில் சொல்லனாத் துயரத்தையும், தமிழரின் தாயகப் பிரதேசங்களையும் அபகரித்து சிங்கள மயமாக்க எடுத்திருக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதன் தலைவர்கள் என்னதான் சொல்லுகின்றார்கள்

இவ் அமைப்பின் தலைவரான தென் ஆப்ரிக்காவின் அதிமதிப்புக்குரிய வணபிதா டெஸ்மண்ட் டுடு கூறியதாவது: "சிறிலங்காவில் அர்த்தமுள்ள இன நல்லிணக்கத்தை எட்ட வேண்டும் என்பதில் கூடுதலான ஈடுபாட்டை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்துவது அவசியம். அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் தொடர்ந்தும் தண்டிக்கப்படுவது, காணாமல் போவது போன்றவை நிஜமாகவே அச்சமூட்டும் விடயங்களாக அமைந்துள்ளன. கடந்த காலங்களில் அமைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விசாரணை ஆணையங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவதில் துரதிஷ்டவசமாக தவறியே வந்துள்ளன. சிறிலங்காவின் ஜனாதிபதி அமைத்துள்ள படிப்பினை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையம் சிறிலங்காவில் நிலைக்கக்கூடிய சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவரப் பாடுபடுமா என்பது சந்தேகத்திற்கு உரியதே."

ஐநாவின் முன்னாள் பொதுச்செயலாளரான கோஃபி அன்னான் கூறியதாவது: "சிறிலங்காவின் செயற்பாடுகள் தொடர்பில் உலகநாடுகள் அதிலும் குறிப்பாக சிறிலங்கா மீது அதிக செல்வாக்கு செலுத்தக்கூடிய அதன் நட்புறவு நாடுகள் வாளாதிருந்து வருகின்றன. சட்டத்தின் மாட்சிமையை நிலைநாட்டுவது மற்றும் மனித உரிமைகளை மதித்து நடக்கபடுவதை உறுதிசெய்வது போன்றவற்றில் சர்வதேச சமூகம் எல்லா நாடுகளிடமும் ஒரே விதமாக நடக்க வேண்டும். வேண்டியவருக்கு ஒரு விதம், வேண்டாதவருக்கு ஒரு விதம் என்று செயல்படக்கூடாது. மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருப்பது என்பது உலகில் எந்த பாகத்தில் நடந்தாலும் சரி, அது மற்ற மற்ற இடங்களிலும் சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகத் தான் அமையும்."

பின்லாந்தின் முன்னாள் பிரதமரும் சர்வதேச மத்தியஸ்தருமான மார்தி அஸ்திசாரி கூறியதாவது: "சர்வதேச விழுமியங்களை மீறி நடக்கும் நாடுகள் ஒன்றை உன்னிப்பாக அவதானித்து வரும். சர்வதேச கண்டனத்தைத் தவிர்ப்பதில் சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதாகத் தோன்றுவதைப் பார்த்து அவர்கள் மேலும் மோசமாக நடப்பதற்கு தைரியம் பெறுவார்கள். உலகில் கூடுதலான ஜனநாயகத்தையும், மனித உரிமைகளுக்கான கூடுதலான மரியாதையும், வன்முறை குறைவதையும் காண விரும்புபவர்கள் அனைவருக்கும் இது நிச்சயம் கவலையைத்தான் தரும்."

அல்ஜீரியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ஐநாவின் முன்னாள் தூதுவருமான லக்தர் பிரஷ்மி கூறியதாவது: "காலனித்துவ ஏகாதிபத்தியம், வன்முறை கொண்டு அடக்கியாள்வது, மனித உரிமை மறுக்கப்படுவது போன்ற விடயங்களை ஒன்று சேர்ந்து எதிர்த்த மூன்றாம் உலகநாடுகளில் முக்கிய பங்காற்றிய ஒரு நாடாக சிறிலங்கா இருந்து வந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு நாடு கடந்த முப்பது வருடகாலமாக மோசமான உள்நாட்டு யுத்தத்தில் உழலக் காரணமாக இருந்த விடயங்கள் அந்நாட்டில் மீண்டும் தோன்றி புதியதொரு பிரச்சனை உருவாவதைத் தடுத்து சமாதானத்தை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு சிறிலங்காவின் நட்புறவு நாடுகளுக்கு உள்ளது. சிறிலங்கா அரசாங்கங்களின் நடவடிக்கைகளை விமர்சித்து குரல்கொடுப்பதென்பது சிறிலங்கா மக்களுக்கு எதிர்ப்புக் காட்டுவதாகாது. தவிர அது சிறிலங்காவின் உள்நாட்டு விடயத்தில் தலையிடுவது என்பதும் ஆகாது. மாறாக, சிறிலங்காவில் அனைத்து மக்களுக்கும் நீதியும் சமாதானமும் முன்னேற்றமும் கிடைக்க வேண்டும் என்பதற்கு நாம் தரும் ஆதரவின் வலுவான ஒரு வெளிப்பாடாகவே அது அமையும்."

முன்னாள் ஐயர்லாந்தின் பிரதமரும் மனித உரிமைகளுக்கான ஐநாவின் முன்னாள் உயர்ஷ்தானிகருமான மேரி ராபின்சன் கூறியதாவது: "சிறிலங்காவிற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்தியிருப்பதுதான் சரியான அணுகுமுறை. ஆனால் அது மட்டும் போதாது. சிறிலங்காவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு தொடந்து அழுத்தம் தரவேண்டியது அவசியம். சிறிலங்காவின் சூழ்நிலையை மேன்படுத்துவதில் அரசாங்கங்கள் மட்டுமே உதவ முடியும் என்றும் கிடையாது. சிறிலங்காவுடன் வியாபாரம் செய்பவர்கள், அங்கு விடுமுறைக்காகச் செல்பவர்கள் போன்றோரும், சிறிலங்காவின் மக்கள் அனைவருக்கும் மேலும் நியாயமான, செழிப்பான ஒரு எதிர்காலம் கிடைப்பதில் உதவக்கூடிய தெரிவுகளை தங்களளவிலும் செய்ய முடியும்."

சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா செய்ய வேண்டியவை

மூத்தோர் அமைப்பினர் சிறிலங்காவை பின்வரும் நடவைக்கைகளை செய்யவேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த அமைப்பினர் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இதனைச் செய்வதற்கு சிறிலங்காவை வற்புறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துளார்கள்.

(அ) யுத்தகால அவசரச் சட்டங்களை விலக்கிக்கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து பிரஜைகள் அனைவருடைய மனித உரிமைகளையும் மதித்து நடக்க சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையான ஈடுபாடு காட்ட வேண்டும்

(ஆ) முன்னாள் போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படும் 8,000 பேரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் சென்று பார்க்கவும், அவர்களுக்கு உதவிகள் செய்யவும் உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும்

(இ) ஐநா தலைமைச் செயலாளர் நியமித்துள்ள நிபுணர்கள் நாட்டுக்குள் வர விசா வழங்குவது உள்ளிட்டு அவர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்;

(ஈ) நிஜமான ஆதாரங்கள் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமே ஒழிய அரசியல் தேவைகளுக்காக அவை முன்னேடுக்கப்படுக்கூடாது...நீதித்துறையின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்

(உ) துன்புறுத்தல், அச்சுறுத்தல், அநியாயமான கட்டுப்பாடுகள் போன்றவை இன்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஊடகத்துறையினர் சிறிலங்காவில் தமது பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும்

(ஊ) காணிப்பிரச்சனைகள், பொருளாதார முன்னேற்றம் போன்ற விவகாரங்கள் தொடர்பிலும், இனச் சிறுபான்மையினர் அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்ற நெடுங்கால பிரச்சனை சம்பந்தமான அரசியல் சாசன சீர்திருத்தங்கள் தொடர்பிலும், சிறிலங்காவின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களிடம் அர்த்தமுள்ள கலந்தாலோசனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்

(எ) சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளுக்கும் அவ்வைமைப்பின் ஊழியர்களுடைய பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்.

யுத்தம் முடிந்துவிட்ட பெருமூச்சுடன் சிறிலங்கா செல்லும் உலகத் தமிழரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே செல்லுகின்றது. கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்வதிலும், தமது வீடுகளை மறுசீரமிப்பதற்காகவும் படையெடுக்கும் உலகம் அனைத்தும் பரந்து கிடக்கும் தமிழருக்கு ஒன்று மட்டும் புரியாததாகவுள்ளது. முன்னாள் ஐயர்லாந்தின் பிரதமர் மேரி ராபின்சன் கூறியது போன்று சிறிலங்காவிற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இடைநிருத்தியிருப்பதால் மட்டும் சிறிலங்கா மீது அழுத்தத்தை கொடுக்க முடியாது. சிறிலங்காவுடன் வியாபாரம் செய்பவர்கள், அங்கு விடுமுறைக்காகச் செல்பவர்கள் போன்றோரும் மறைமுகமாக உதவுகின்றார்கள். இதனை கவனத்தில் எடுத்து தமிழர்கள் செயல்பட்டால் நிச்சயம் பெரும் மாறுதலைக் காணமுடியும்.

உலகில் மானிடமே செத்துவிட்டதாக தமிழர் கருதியிருக்கும் இவ்வேளையில் மூத்தோர் அமைப்பு விடுத்திருக்கும் அறிக்கை ஓரளவு மகிழ்சியே. தமிழர்களின் கோடான கோடி ஆசிர்வாதங்களும் மதிப்பும் இந்த அமைப்பின் மீது வந்துசேருவது மட்டுமல்லாது இதன் செயற்பாடுகள் மூலமாக பெரும் நெருக்கடியை சிறிலங்கா மீது கொடுத்து நீதியின் பக்கமே நியாயம் என்பதற்கு இணங்க ஆதரவு கொடுத்தால் மேலும் பல ஆயிரம் கோடி புண்ணியங்கள். ஒவ்வொரு தமிழரும் இவ் மின்னஞ்சல் ஊடாக இந்த அமைப்பினருக்கு நன்றியை தெரிவிப்பதுடன், ஏதேனும் மனித உரிமை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இருந்தாலும் அனுப்பி வைப்பதன் மூலமாக தமிழர் மீது உள்ள நியாயத்தை எடுத்துரைக்கலாம். மூத்தோர் அமைப்பின் மின்னஞ்சல்: media@theElders.org

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

உலகின் மூத்த தலைவர்களே, நீங்கள் சப்பாத்தின் அளவுக்குக் காலை வெட்டுவீர்களா?

* இனரீதியான, சிறுபான்மையினரின் நீண்ட கால அரசியல் ஓரங்கட்டலுக்கு முடிவு காணப்படவேண்டும்.

*காணிப் பிரச்சினைகள், பொருளாதார அபிவிருத்திப் பணிகள் மற்றும் அரசமைப்புச் சீர்திருத்தம் போன்ற விடயங்களில் நாட்டின் வடக்குகிழக்கு மக்களுடன் அர்த்தமுள்ள விதத்தில் கலந்துரையாடல்களை ஆரம் பிக்கவேண்டும்.

* சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளிகளாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடியாக ஐ.சி.ஆர்.சி. நிறுவன உதவிகள் கிடைக்கச் செய்தல் வேண்டும்.

* அரசியல் சார்ந்த நோக்கமில்லாமல் சாட்சிகளின் அடிப்படையிலேயே வழக்கு விசாரணைகளை நடத்து வதை உறுதிப்படுத்த, நீதித்துறையில் அரசியல் தலை யீட்டை நிறுத்தவேண்டும்.

உலக மூத்த தலைவர்கள் சில நாள்களுக்கு முன்னர் இலங்கை குறித்து விடுத்த அறிக்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தொட்டு காட்டியவற்றில் மேற்கண்ட வையும் சிலவாகும்.

ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் ஒவ்வாத பல கருமங்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவது குறித்த நீண்ட அறிக்கை அது. அரசாங்கத்தின் அநீதியான, ஜனநாயக விரோதமான, சகிப்புத்தன்மையற்ற விவாதங்கள், அரசோடு இணைந் திருப்பவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளுதல் மற்றும் பல சீர்கேடுகள் குறித்து உலகின் மூத்த தலைவர்கள் தமது அறிக்கையில் கனதியாகவும், எச்சரிக்கும் தொனியிலும், காத்திரமாகவும் குறிப்பிட் டுள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையை இலங்கை அரசு இரண் டாம் தரத்தில் வைத்து நடத்தியதையும் உலக மூத்த தலைவர்கள் அமைப்புக் கண்டித்துள்ளது.

இப்போது, முன்னாள் ஆர்ச் பிஷப் டெஸ்மன்ட் டுட்டு வைத் தலைவராகக் கொண்டு உலகின் முது பெருந் தலைவர்கள் பன்னிருவர் அங்கம் வகிக்கும் உலக மூத்த தலைவர்கள் மன்று, இலங்கையில் எவரும் துணிச் சலுடன் பேச முடியாத பல அநீதிகளையும் எடுத்து வெளிப்படுத்தி, விவரித்துள்ளது.

இனரீதியான சிறுபான்மையினரின் நீண்டகால அரசியல் ஓரங்கட்டலுக்கு முடிவு காணப்படவேண்டும் என்பதனை உலகின் முதுபெரும் தலைவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அறுபது வருடங்களுக்கு மேலாக நீண்டு வளர்ந்து, இப்போது அகோர வடிவம் பெற்றுள்ள இனப் பிரச் சினைக்கு முதலுரிமை கொடுத்துத் தீர்க்கப்படவேண் டும் என்பதில் "ஒரு சதத்துக்கேனும்' அக்கறையில்லா மல், அதனை அடிப்பெட்டியில் அடுக்கி வைத்திருக் கிறது இந்நாட்டு அரசு.

அதனைத் தீர்ப்பதில் உணர்வுபூர்வமான விருப்பம் எதுவும் இன்றி, தமிழர் தாயகத்தில் உள்ள நிலங்களைப் பறிப்பதிலும் அவற்றில் சிங்களக் குடியேற்றங்களை நடத்துவதிலும், இலங்கையின் பத்து மாகாணங்களில் சிங்களவரும் பௌத்தமும் ஒன்றித்து நிலைத்திருந்தனர் என்ற எடுகோளுடன் மீண்டும் அதே நிலையைத் தோற்றிவிப்பதிலேயே அரசும், அதன் பிரதானிகளும் தமது சக்தியையும் நேரத்தையும் ஓய்வு ஒழிச்சலின்றிச் செலவிட்டு வருகின்றனர்.

ஆகையால் உலகின் மூத்த பெருந்தலைவர்களின் சொல் இங்கு இலங்கை அரசினது காதில் ஏறும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஐக்கிய நாடுகள் சபையுடன் மோதும் தமக்கு இவர்கள் யார் புத்தி சொல்ல, என்ற மமதையுடன் அரசு தட்டிக்கழித்து விடும்.

இனப்பிரச்சினை என ஒன்று இந்த நாட்டில் உண்டு என்பதனை மறந்தும் மறைத்தும் செயற்படும் போக்கு வெளிக்காட்டப்படும் இன்றைய சூழ்நிலையில் எவரும் எங்களைத் தட்டிக் கேட்கவோ அல்லது அறி வுரை கூறவோ தகுதி அற்றவர்கள். நாம் நினைத் ததையே செய்து முடிப்போம் எங்களது பிரச்சினைகளையும் விவகாரங்களையும் நாமே கையாள்வோம்; யாரும் அறிவுரையோ வழி நடத்தல்களோ காட்டத் தேவையில்லை அயலில் உள்ள இந்தியாவுடனேயே தமிழர் விவ காரத்தில் பிரச்சினையில் சடுகுடு ஆடும் வல்லமை யும் ஓர்மமும் எங்களுக்கு இருக்கிறது என்ற மிதப்புடன் ஜனநாயகம், மக்கள் உரிமைகள், மனிதாபிமானம் குறித்து, எவர் எதனை எடுத்துச் சொன்னாலும் எங்கள் காதில் போட்டுக்கொள்ளமாட்டோம், எந்தக் "கொம்பன்' சொல்லும் எங்கள் காதில் ஏறாது இது எங்கள் நாடு. அதனை ஆட்சி செய்பவர்கள் நாம். அதற்கான அதிகாரத்தை மக்கள் ஜனநாயக வழி நின்றுதான் தந்திருக்கிறார்கள் எவரையும் தயவு பண்ண வேண்டும் என்று எமது செல்நெறியில் இல்லை.

இத்தகைய தார்மீகத்தையும் தத்துவத்தையும் மீறி எதுவும் எங்களிடம் பலிக்காது என்று அடம்பிடிக்கும் இலங்கை அரசினருக்கு இனப்பிரச்சினை விடயத்தில் அதன் நண்பர்கள் எடுத்துக் கூறினாலும் கூட, அவர் களுக்கு அது ஒவ்வாமையாகவே மாறும்.

இலங்கை அரசின் இந்த ஒட்டுமொத்தச் சித்தாந்தம் உலகின் மூத்த தலைவர்கள் குழாமுக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. யாரால் என்ன செய்ய இயலும்....? இதனை மனதில் வைத்தே வெளி உலகத்தின் செயற்பாடு அமையவேண்டும்.

சப்பாத்துக்கு ஏற்றமாதிரி காற்பாதத்தை வெட்டிக்கொள்ளும் முயற்சி எவ்வாறு இருக்கும்....?

[ உதயன் ] - [ Aug 12, 2010 04:00 GMT

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.