Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேலுக்கான சிறிலங்கா தூதுவரின் கண்மூடித்தனமான கருத்து - மகிந்தவின் சாணக்கியத்துக்கு முற்றுப்புள்ளி?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரேலுக்கான சிறிலங்கா தூதுவரின் கண்மூடித்தனமான கருத்து - மகிந்தவின் சாணக்கியத்துக்கு முற்றுப்புள்ளி?

[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:29 GMT ] [ தி.வண்ணமதி ]

அனைத்துலக சண்டியர்களில் ஒன்றான இஸ்ரேலுடன் சிறிலங்கா தனது சாணக்கியம் நிறைந்த நட்பினை பேணிவருகிறது, அதன் மூலம் தனக்கு ஒரு பலம் அதிகரித்திருப்பதாகவே சிறிலங்கா எண்ணுகிறது.

எனினும் இந்த நட்பு வல்லாதிக்கத்தை எதிர்த்துநிற்கும் மூன்றாம் உலகநாடுகளுடனான சிறிலங்காவின் உறவில் பாதிப்பினை உருவாக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.

இது தொடர்பாக 'கிரீன் லெப்ட்' [greenleft] என்ற ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி ஆய்வினை ’புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்திருப்பவர் தி.வண்ணமதி.

அதன் முழுவடிவம் வருமாறு,

”தகவல் பரிமாற்றம், படைத்தளபாடங்கள் மற்றும் படைசார் தொழிநுட்பங்களை வழங்கியதன் ஊடாக நாங்கள் முன்னெடுத்த பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு இஸ்ரேல் எங்களுக்குத் துணைநின்றது” என இஸ்ரேலுக்கான சிறிலங்காவினது தூதுவர் டொனால்ட் பெரேரா கூறுகிறார்.

கடந்த யூலை 21ம் நாளன்று வெளிவந்த Yedioth Ahronoth என்ற இஸ்ரேலியப் பத்திரிகையில் இஸ்ரேலுக்கான சிறிலங்காவினது தூதுவர் டொனால்ட் பேரோவினது செவ்வி வெளிவந்திருந்தது.

இந்தச் செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிரான போரின்போது இஸ்ரேல் வழங்கிநின்ற ஆதரவிற்கு சிறிலங்காவினது முன்னாள் விமானப்படைத் தளபதியும் இஸ்ரேலுக்கான சிறிலங்காவினது தூதுவருமான டொனால்ட் பெரேரா தனது நன்றியினைத் தெரிவித்திருந்தார்.

"தேவையான தகவல் பரிமாற்றம் மற்றும் இராணுவத் தொழில்நுட்பம் மற்றும் நவீன படைத்தளபாடங்கள் ஆகியவற்றைச் சிறிலங்கா பெறுவதற்கு வழிசெய்ததன் ஊடாக பயங்ரவாதத்திற்கு எதிராக நாங்கள் முன்னெடுத்த போரில் இஸ்ரேல் எங்களுக்கு உதவி வந்திருக்கிறது. எங்களுடைய விமானப்படையில் இஸ்ரேலியத் தயாரிப்பான கிபிர் விமானங்கள் 17 உள்ளன. அத்துடன் கடற்படையிருக்கான ரோந்துக் கலங்களையும் நாங்கள் இஸ்ரேலிடமிருந்து பெற்றிருந்தோம்”.

”சிறிலங்காவினது விமானப்படையிலுள்ள விமானிகளில் பலர் இஸ்ரேலிலேயே தங்களது பயிற்சிகளைப் பெற்றிருந்தார்கள். தவிர, கடந்த ஆண்டுகளில் பல பில்லியன் டொலர் பணத்தினை இஸ்ரேல் சிறிலங்காவிற்கு வழங்கியிருக்கிறது. இதுபோல இஸ்ரேல் சிறிலங்காவிற்கு அதிக உதவிகளைச் செய்ததன் விளைவாகவே நான் இங்கு தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறேன்” என தூதுவர் டொனால்ட் பேரேரா கூறினார்.

மேலும், ‘ஹமாஸ்’ அமைப்பினையும் விடுதலைப் புலிகள் அமைப்பினையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுக் கருத்துத் தெரிவித்த தூதுவர் பெரேரா,

பலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுக்கும் போருக்குத் தனது ஆதரவினையும் தெரிவித்தார். காசா நோக்கிச் சென்றுகொண்டிருந்த நிவாரணக் கப்பல் இஸ்ரேலினால் இலக்குவைக்கப்பட்டது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தூதுவர் பெரேரா, ”இராணுவத்துடன் தொடர்புடைய ஒருவன் என்ற வகையில் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற இஸ்ரேலின் கரிசனையினைப் புரிந்துகொள்ளமுடிகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடர்பில் எமக்கு அதிக அனுபவம் இருப்பதனால், பயங்கரவாதத்தினை எதிர்க்கும் நாடுகள் எவையோ அவை அனைத்துக்கும் சிறிலங்கா தனது ஆதரவினை வழங்கும்” எனக் கூறினார்.

பலஸ்தீனத்திற்கு எதிராக கண்மூடித்தனமாக முன்வைக்கப்பட்ட இந்தக் கருத்து சிறிலங்கா அரசாங்கத்தினை தர்மசங்கடத்திற்குத் தள்ளியிருந்தது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இஸ்ரேலியப் பத்திரிகைக்குத் தான் வழங்கிய செவ்வி தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டதாக தூதுவர் டொனால்ட் பெரேரா பின்னர் குறிப்பிட்டிருக்கிறார்.

எது அவ்வாறிருப்பினும் போர் இடம்பெற்ற வேளையில் சிறிலங்காவிற்கு இஸ்ரேல் வழங்கிநின்ற காத்திரமான ஆதரவு மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் ஆகியவற்றை இந்தச் சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

அனைத்துலக சமூகத்தின் வேறுபட்ட தரப்பினர் ஒவ்வொருவரையும் சாந்தப்படுத்துவதற்கு ஏதுவாக குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்சவினது தலைமையிலான அரசாங்கம் ஒன்றுடனொன்று முரண்பட்ட கருத்துக்ளை அவர்களுக்கு வழங்கி வருவது இந்தச் செவ்வியின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கியூபா, பொலிவியா மற்றும் வெனிசுவேலா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்கங்களுடன் பேசும்போது உலகின் மேலாதிக்க சக்திகளின் கொடுமைக்குத் தானும் அகப்பட்டிருக்கிறது என்ற தோற்றப்பாட்டையே மகிந்த ராஜபக்சவினது அரசாங்கம் காட்ட முனைகிறது.

ஆனால் சிறிலங்கா இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடு என்பதையே டொனால்ட் பேரேராவினது இந்தச் செவ்வி எடுத்துக்காட்டுகிறது. தனது பலத்தினைக் காட்டி ஏனைய நாடுகளை வெருட்டி வைத்திருக்கும் ஐக்கிய அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல் தானும் ஒரு சண்டியனாகவே செயற்பட்டு வருகிறது.

அண்மையகாலம் வரை மூன்றாம் உலக நாடுகளின் ஆதரவினைத் தனதாக்குவதில் சிறிலங்கா வெற்றிபெற்றிருக்கிறது என்றே கூறவேண்டும்.

சிறிலங்காவில் மோசமாகிச்செல்லும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடந்த ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்படுவதற்கு ஏற்ற அழுத்தங்களைத் தொடர்புடைய நாடுகள் மீது சிறிலங்காவினால் பிரயோகிக்க முடிந்திருக்கிறது.

பதிலாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தோற்கடித்துச் சிறிலங்கா வெற்றிவாகை சூடியதை வாழ்த்தும் வகையில் ஐ.நாவின் மனித உரிமைச் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.

சிறிலங்காவில் ”மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் அது மேம்படுத்தப்படுவதற்குமான உதவிகள் வழங்கப்படவேண்டும்” என்றும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனித உரிமைச் சபையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்குச் சிறிலங்காவிற்கு உறுதுணையாக இருந்தது மூன்றாம் உலக நாடுகள்தான்.

எவ்வாறிருப்பினும், இந்த ஆண்டு இராசதந்திர ரீதியில் சிறிலங்கா அரசாங்கம் குறைந்தளவிலான வெற்றிகளையே பெற்றிருக்கிறது எனலாம்.

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு மூவர் அடங்கிய வல்லுநர்கள் குழுவினை ஐ.நாவின் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் நியமிக்கும் தீர்மானத்தினைச் சிறிலங்காவினால் தடைசெய்ய முடியவில்லை.

அத்துடன் குறித்த இந்தத் தீர்மானத்தினை எதிர்த்து ஓர் அறிக்கையை அணிசேராநாடுகளை வெளியிட வைப்பதற்கும் சிறிலங்காவினால் முடியவில்லை.

குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாக அணிசேரா நாடுகளின் அமைப்பானது முடிவுகளை எடுக்கும்போது வாக்குகளின் அடிப்படையில் அது அமைவதில்லை. மாறாக பொதுவான கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். ஆதலினால், வல்லுநர்கள் குழுவினை அமைக்கும் பான் கீ மூனின் தீர்மானத்தினை அணிசேரா நாடுகளில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் ஆதரிக்கின்றன என நாம் அர்தப்படுத்திவிடமுடியாது.

அதேநேரம் வல்லுநர்கள் குழுவினை அமைக்கும் பான் கீ மூனது தீர்மானத்தினை எதிர்க்கும் விடயத்தில் மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் இல்லை என்பதையும் இது காட்டவில்லை.

அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் உள்நாட்டு விவகாரத்துடன் தொடர்புடைய விடயங்களில் முடிவுகளை எடுக்கும்போது அணிசேரா நாடுகள் தயக்கத்துடன்கூடியதொரு போக்கைக் கடைப்பிடிப்பதுதான் வழமை.

குறிப்பிட்ட ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி அதற்கு எதிராக மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பாக அணிசேரா நாடுகள் எப்போதுமே சந்தேகத்துடன்கூடிய பார்வையினையே கொண்டிருக்கின்றன.

மனித உரிமைகள் தொடர்பான இதுபோன்ற விசாரணைகள் பெரும்பாலும் மூன்றாம் உலக நாடுகளை இலக்குவைத்தே மேற்கொள்ளப்படுகின்றன. இதேநேரம், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்ட உலகின் வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராக எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. தனது சொற்படி நடக்கத் தவறும் நாடுகள் எவையோ அவற்றுக்கெதிராகவே 'மனித உரிமைகள்' என்ற ஆயுதத்தினை ஐக்கிய அமெரிக்காவும் ஏனைய மேற்குநாடுகளும் கையில் எடுப்பதுதான் வழமை. ஈரான், கியூபா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

உண்மையில் இவை நியாயமான கரிசனைகள்தான். ஆனால் மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் அடக்கியாளும் போக்கினை அடிப்படையாகக் கொண்டது என நாம் அர்த்தப்படுத்திவிடமுடியாது. உண்மையில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்குமாயின் விசாரணைகள் இடம்பெறுவது அவசியமானதே. அத்துடன் வல்லாதிக்க நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் அனைத்தும் கவனிக்கப்படாது கைவிடப்படுகின்றன என்றும் நாம் கூறிவிடமுடியாது.

உதாரணமாக, தனது நாட்டுக்குள் வரும் அகதிகள் மற்றும் பழங்குடியினரை அவுஸ்ரேலியா மோசமாக நடாத்துகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினது மதம்சார் பாகுபாட்டிற்கு எதிரான குழு இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவினை எடுத்துக்கொண்டால், புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ்ச் சமூத்தினர் முன்னெடுத்த போராட்டங்களின் விளைவாகவே சிறிலங்காவிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வாதம் வலுப்பெற்றது. போரின் இறுதிநாட்களில் 30,000 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் எனக் கூறி புலம்பெயர் தமிழர்கள் மேற்கு நாடுகளின் நகர வீதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

சில சமயங்களில், இதுபோன்ற பெருமெடுப்பிலமைந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினால் உலகின் வல்லாதிக்க நாடுகளின் செயற்பாட்டில் செல்வாக்கினைச் செலுத்தமுடியும் என்பது உண்மையே.

விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சிறிலங்கா முன்னெடுத்த போருக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பத்தில் தனது காத்திரமான ஆதரவினை வழங்கி நின்றது. ஆனால், இந்த நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்த தொடர்ச்சியான போராட்டங்கள் சிறிலங்காவினது மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தனது கவனத்தைச் செலுத்தவேண்டிய நிலைக்கு அதனைத் தள்ளியது எனலாம். இதன் விளைவாக சிறிலங்காவில் மனித உரிமை நிலைமைகள் மேம்படும் வரைக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் என்ற வரிச்சலுகையினை இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்திருக்கிறது.

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக வல்லுநர்கள் குழுவினை அமைப்பது என்ற தீர்மானத்தினை செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுப்பதில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் முன்னெடுத்த போராட்டங்களும் காத்திரமான பங்கினை வகித்தன என்பதை மறுக்கமுடியாது.

சிறிலங்காவினது மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் அதிகரித்துச் செல்லும் கரிசனையின் வெளிப்பாடே அணிசேரா நாடுகளின் குறிப்பிட்ட சில அங்கத்துவ நாடுகள் பான்கீ மூன் நியமித்த வல்லுநர்கள் குழுவிற்குத் தங்களது ஆதரவினை வழங்கி நிற்கிறார்கள்.

எது எவ்வாறிருப்பினும் சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஆண்டொன்று கடந்துவிட்ட நிலையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதும், குழுவின் அங்கத்தவர்கள் தங்களது பணியினை ஆரம்பிப்பதில் காலத்தினைத் தாழ்த்துவதும் இந்தக் குழு எதிர்பார்த்த விளைவுகளைப் பெற்றுத் தராது என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஒரு முயற்சி என்றல்லாமல் மனித உரிமைகள் தொடர்பான எழுந்திருக்கும் கரிசனைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடாகவே இது தெரிகிறது. தவிர, பான் கீ மூன் அமைத்திருக்கும் இந்த வல்லுநர்கள் குழுவிற்கு எதிரான எதிர்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது.

இந்தக் குழுவானது தனது பணியினைச் சரிவர முன்னெடுத்திருந்தால் சிறிலங்காவில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கி ஆளப்படுவது தொடர்பாக அனைத்துலக ரீதியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுவதற்கு அது வழிவகுத்திருக்கும். ஆனால் சிறிலங்காவிலும் சிறிலங்காவிற்கு வெளியேயும் தமிழ் மக்களும் அவர்களது துணை அமைப்புக்களும் போராட்டங்களுக்கு மாற்றீடாக ஐ.நாவின் இந்த வல்லுநர்கள் குழு அமையாது.

எது எவ்வாறிருப்பினும், சிறிலங்கா இஸ்ரேலுடன் நெருங்கிய உறவினைக் கொண்டிருக்கிறது என்ற உண்மை வெளிவந்திருப்பதானது தமிழ் மக்களது போராட்டம் அனைத்துலக ரீதியில் ஆதரவினைப் பெறுவதற்கும் இவர்களது குறிக்கோள் வலுவடைவதற்கும் வழிவகுக்கலாம்.

http://www.puthinappalakai.org/view.php?20100906101968

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, புலம்பெயர் தமிழர் வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடத்தியது வீணாகவில்லை என்று கட்டுரை சொல்கிறது. இதுவே உண்மையும் கூட. சில சாதகமான விளைவுகள் ஏற்பட ஒருவேளை ஆண்டுகள் செல்லலாம். ஆனால் எல்லாம் வீணானது என்றல்ல..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.