Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் குழுமத்திற்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்களின் குரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரசிக மனநிலையிலிருந்து பைத்திய மனநிலைக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை சன் குழுமம் உசுப்பேற்றி விட்டுக்கொண்டு இருக்கிறது. தன் படம், வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று ஒரு முதலாளியின் இயல்பாக இருக்கும் வேட்கையும், வேகமும் இங்கே வெறியாக மாறிவிட்டது. சகல நியதிகளையும், மாண்புகளையும் கிழித்தெறியும் அதன் அகோரப்பசியை ‘வியாபார உத்தி’ என்று சொல்வதற்கும், பாராட்டுவற்கும் ஒரு கூட்டமே இருக்கிறது.

‘சினிமாதானே, ஏன் இவ்வளவு சீரியஸாகிறீர்கள்’ என்கிறார்கள். ‘பொழுதுபோக்குக்குத்தானே படம், அதுகுறித்து ஏன் கவலைப்படவேண்டும்’ என எதிர்க்குரல்கள் கேட்கின்றன. அதையேத்தான் நானும் கேட்கிறேன். “சினிமாதானே, அதற்கு ஏன் ஆயிரம் பாற்குடங்களும், மொட்டையடித்தல்களும், காவடித்தூக்கல்களும்” என்று.

மனதில் விமர்சனங்கள் இருப்பினும், ‘நமக்கேன் வம்பு’ என கையது கொண்டு வாயது பொத்தி பல அறிவுஜீவிகள் நிற்கிறார்கள். ‘தமிழ்க் கலாச்சார, பண்பாட்டு பாதுகாவலர்களும், போராளிகளும்’ இங்கே, தங்கள் இளைஞர்கள் உலகத்தின் முன்னே கேவலப்படுத்தப்படுவதையும், கேலிக்குரியவர்களாய் சித்தரிக்கப்படுவதையும் கண்டு பொங்காமல் எங்கே போய்விட்டார்கள் எனத் தெரியவில்லை.

அமைப்பு ரீதியாக ஒரு குரல் இப்போது வந்திருக்கிறது. எந்திரன் திரைப்படத்திற்கான ஏற்பாடுகள் என்ற பெயரில் பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் படைப்பாளிகளின் குரல் இது. இப்படியான குரல்கள் மேலும் தொடர்வதும், ஒன்று சேர்ந்து ஒலிப்பதும் காலத்தின் அவசியம்.

“எதிரி எந்த மூலைக்கெல்லாம் செல்கிறானோ, அங்கெல்லாம் நாமும் சென்று நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும். அவனது வீடுகளுக்கு, அவனது திரையரங்குகளுக்கும் செல்ல வேண்டும்” என்றார் புரட்சிக்காரன் சே. அவரைக் கையிலும் நெஞ்சிலும் ஏந்த வேண்டிய இளைஞர்கள் இங்கு அலகு குத்திக்கொண்டு வருகிறார்களே....

கவலையும், கோபமும் எப்படி வராமல் போகும்?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு

28/21, வரதராஜபுரம் பிரதான சாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

-----------------------------------------

பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம் : தமுஎகச கண்டனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பான எந்திரன் திரைப்படம் தயாரானது முதல் அக்கம்பெனியார் படத்துக்கான விளம்பரம் என்ற பெயரில் செய்து வரும் ஆர்ப்பாட்டங்கள் நியாய உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரையும் கவலை கொள்ளச்செய்வதாக உள்ளன. தங்கள் கையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருப்பதாலும் தாங்கள் போட்ட பணத்தைப்போல பல மடங்கு சம்பாதித்துவிட வேண்டும் என்கிற வியாபார வெறியுடனும் தமிழக இளைஞர்களைத் தவறான வழியில் திசைகாட்டும் வேலையை சன் குழுமம் செய்து வருகிறது.அதிகாலை 4 மணி முதல் திரைப்படத்தைத் திரையிடுவது ,இளைஞர்கள் மொட்டை போட்டுக்கொள்வதையும் கோழிகள் அறுப்பதையும் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றுவதையும் மிகச்சிறந்த முன்னுதாரணமான பண்பாட்டு அசைவுகள் போல சன் டிவியிலும் தினகரன் பத்திரிகையிலும் திரும்பத் திரும்ப வெளியிட்டுத் தமிழக இளைஞர்களை மேலும் மேலும் அவ்விதமே செய்யத்தூண்டுகிறது.தமிழகத்தின் பலமான ஒரு உழைப்புச் சக்தியை இவ்விதம் சிதைக்கும் பணியை சன் குழுமம் செய்கிறது.சன் குழுமம் செய்து வரும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு நடவடிக்கையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொறுப்பும் மனச்சாட்சியும் உள்ள ஒவ்வொரு தமிழரும் இதைக் கண்டனம் செய்ய வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.தாம் விரும்பும் திரைக்கலைஞரைக் கொண்டாடும் ரசிக மனநிலையை ஒரு பைத்திய மனநிலைக்கு வழிநடத்தி இட்டுச்செல்லும் சன் குழுமத்தின் வியாபார வலையில் விமர்சனமின்றி வீழ்ந்துவிட வேண்டாம் எனத் தமிழகத்து இளைஞர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கண்டன அறிக்கையை தங்கள் இதழில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.

அருணன் ச.தமிழ்ச்செல்வன்

மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்

தமுஎகச தமுஎகச

http://mathavaraj.blogspot.com/2010/10/blog-post_05.html

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நியாயமான கவலைதான். ஆனாலும் யார் கேட்கப்போகிறார்கள்??

சினிமாவை உண்மையென்று நம்பி உயிர்வாழும் ஒரு சமூக உண்டென்றால் அது தமிழ்நாட்டில்தான். இவர்கலைத் திருத்த முடியாது, இதில் அநியாயம் என்னவென்றால் இவர்கலைத் தொடர்ந்து இப்போது யாழ்ப்பாணத்திலும் இந்த கூத்துக்கள் நடக்கிறதாம். மக்களை உணர்வற்ற மந்தைகளாக வைத்திருக்க கருநாநிதி அங்கே செய்வதை மகிந்தவும், டக்கிளசும் இங்கே செய்கிறார்கள். அவர்களை யாரால் தட்டிக் கேட்க முடியும்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்திரன் – சமூக பலகீனத்தின் வெற்றி

இந்த கட்டுரை எந்திரன் திரைப்படம் குறித்த விமர்சனமோ கருத்தோ அல்ல. எந்திரன் திரைப்படம் வெளியீடு குறித்து சன் டிவியில் திரும்ப திரும்ப வந்து கொன்டிருக்கும் விளம்பரங்கள் இந்த கட்டுரையினை எழுதத் தூண்டியது என சொல்லலாம்.

திரைப்படத்தின் முதல் நோக்கம், வியாபார வருமானம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. எந்திரனும் அதற்கு விதி விலக்கல்ல. எந்திரன் வெளிவருவதற்கு முன்பே அதன் வியாபர வெற்றி நோக்கி செய்த விளம்பரங்கள், அதீத அளவில் இருந்தன..

திரைப்படம் வெளியான பின்பு அதனை ஒட்டி சன் டிவியில் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன‌

அது தயாரிப்பாளர்களின் உரிமை.. அவர்களின் வியாபார வெற்றி மீதான கண்ணோட்டம் அவர்களுக்கு இருக்கும் சமூக கடமையினை மறக்கடிக்கச் செய்து விட்டது.

திரைப்படம் உலகெங்கும் வெளியானதை ஒட்டிய நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு நிகழ்ச்ச்சி வெளிவருவதாக முன்னோட்டம் சன் டிவியில் இரண்டு நாட்களாக காணப்படுகிறது.

ஒரு திரையரங்கின் முதல் காட்சி கதவுகள் திறக்கப்படுகின்றன மந்தையென மக்கள் கட்டின்றி ஒழுங்கின்றி ஓடிப் பிரவகித்து உள் நுழையும் காட்சி

திரையரங்கம் ஒன்றின் வெளியே திரைப்படத்தின் விளம்பரமாக வைக்கப்பட்டுள்ள பேனர் அதில் ரஜினி காந்த். அதற்கு ரசிகர்களின் பாலாபிஷேகம்

திரைப்படத்தின் ப்ரிண்ட் திரையரங்கம் ஒன்றிற்கு கொண்டு வரப்படும் காட்சி. யானை மீது வைத்து ஊர்வலம். ஊர்வலத்தில் ஒருவர் அலகு குத்திக் கொண்டும் வருகிறார். தீச்சட்டி ஒத்த ஒரு அமைப்பினை சுமந்து வருவதாகவும் தெரிகிறது.. நிறைய பால்குடங்கள் சுமந்து பெண்கள் ஆண்கள் ஊர்வலம்

ரசிகர்கள் திரைப்படத்தின் வெளியீடு குறித்து மொட்டை அடித்துக் கொள்வதும் காட்டப்படுகிறது. எந்திரன் என தங்கள் சிகையின் ஊடே அலங்காரம் செய்து கொள்வதாகவும் காட்சிகள் வருகின்றன‌

திரைப்பட கதையின் நாயகன் ரஜினி காந்தும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் உற்சாகம் கொப்பளிக்கும் சிரிப்பினை சுமந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுகின்றனர். படம் வியாபார ரீதியில் வெற்றி பெற்றதன் அடையாளமாக அந்த தழுவலையும் சிரிப்பையும் கருதலாம்.

ஆனால் அவர்களும் பலரும் கவனிக்கத் தவறியது இப்படி சினிமா மோகம் எத்தகைய சமூக பலவீனம் என்பதே.

பாலாபிஷேகம் செய்வதும், பால்குடம் தூக்கிவருவதும், அலகு குத்திக் கொண்டும்,மொட்டை அடித்துக் கொள்வதும், யானை மீதும் ஊர்வலம் வருவது யார் யார்…

இந்த சமூகத்தின் அடையாளம் என கருதப்படும் இளைஞர்கள்..

அவர்கள் ஒரு சாதாரண வியாபார சினிமாவின் வெளியீட்டுக்கு இப்படி மோகித்து.. இப்படியான செய்கைகளில் ஈடுபடுவார்கள் அவர்களின் ரசனையும், பகுத்தறிவும், மெச்சூரிட்டியும் இந்த அளவுதான்

இப்படியான பலவீனத்தைத்தான் அந்த சினிமா எந்திரன் குழுவும் விரும்புகிறது. இப்படியான இளைய சமூகத்தின் பலவீனத்தின் மீது தான் எந்திரனின் வியாபார வெற்றி எழுப்பப்பட்டுள்ளது.

திரைப்படம் வெளியான அன்று விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் அலாராம் வைத்த விழிப்பினைச் சுமந்து திரையரங்க வாசல் அடைந்து, அங்கிருந்தபடியே அங்கு தன்னைப் போலவே பிரஞ்ஞையுடன் வந்திருக்கும் ஏராளனமானவர்களின் எண்ணிக்கையினை எஸ். எம் .எஸ் , டுவிட்டர், இமெயில் என எல்லா நவீன சாதனங்களின் உதவியுடன் உலகிற்கு சொல்லி சமூக சேவை செய்தவர்கள், முதல் காட்சி கண்ணுற்று வெளிவந்த கணம் முதல் மனதுக்குள் வாக்கியங்களை தட்டச்சு செய்தபடி விரைந்தோடி வந்து கணிணி முன் அமர்ந்து விமர்சனம் எழுதிய பதிவர்கள் .. இதில் கவிதை மட்டுமே எழுதுபவர்கள், திருப்புகழ்/ கந்தரலங்காரம் விளக்கம் என ஆத்திகம் மட்டுமே எழுதுபவர்கள் கூட விதிவிலக்கில்லாமல் ஒரு பெரும் கோஷ்டி முதல் விமர்சனம் எழுதி கட்டாயம் பார் என பரிந்துரைக்கும் நல்ல காரியம் செய்தவர்கள்

இப்படியான சமூக பலகீனங்களின் அடையாளம் எந்திரன்.. அதன் வியாபார வெற்றி இப்படியான பல்கீனத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது. அதன் தொடர் வியாபார வெற்றி இப்படியான பலவீனங்கள் மேலும் பலவீனமடைவதின் அறிகுறி

தமிழ் சார்ந்த ஊடகங்களின் பிதாமகனான சன் டிவிக்கு ஒரு வேண்டுகோள் .. நீங்கள் திரைப்படம் எடுப்பதை நான் சாடவில்லை. அதற்கு விளம்பரம் செய்வதையும் நான் ஒன்றும் சொல்லவில்லை. அந்த நிகழ்ச்சிகளில்,, பாலாபிஷேகம், பால்குடம், யானை ஊர்வலம், அலகு குத்தி ஊர்வலம் வருதல், இதெல்லாம் நிஜமாகவே உங்களுக்கு பலமாகத் தெரிகிறதா..?

மனம் தொட்டு சொல்லுங்கள்

இதெல்லாம் சமூக பலவீனமாகத் தெரியவில்லையா..?

இப்படியான சமூகத்தினையா நம் சமூகம் என அடையாளம் காட்ட விழைகின்றீர்கள்..?

இப்படியான பலவீனத்தையா நம் சமூகம் என தொலைக்காட்சியில் உலகெங்கும் ஒளி/ஒலி பரப்ப இருக்கின்றீர்கள்…?

இது தான் நம் சமூகத்தின் கலை ரசனை என சொல்லப் போகின்றீர்களா…?

http://nkl4u.in/?p=4558

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.