Jump to content

பால்வினைத் தொழில்


Recommended Posts

பால்வினைத் தொழில்

Written by சந்திரவதனா

Wednesday, 22 July 2009 04:58

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் விபச்சாரம் வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியேகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றையவர்கள் போகமுடியாது.

தற்போது இந்த 21ம் நூற்றாண்டில் வெளிப்படையான அதாவது அங்கீகாரத்துடனான விபச்சாரமும், அங்கீகாரமற்ற அனுமதியில்லாமல் செய்யப்படும் விபச்சாரமும் மிகவும் மலிந்து கொட்டிக் கிடக்கின்றன.

பின்லாந்தில் விபச்சாரம் தவறான கண்கொண்டு பார்க்கப் படுவதே இல்லை. இங்கு யேர்மனியில் பல இடங்களில் அங்கீகாரம் பெற்ற விபச்சார விடுதிகள் இருந்தாலும், அங்கீகாரம் பெறாத விபச்சார விடுதிகள் அதை விட அதிகமாய் உள்ளன. பாவனையில் இல்லாத வீடுகள் கூட இதற்குப் பயன் படுத்தப் படுகின்றன.

இவைகளில் ஏறக்குறைய 400000 பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பால்வினைத் தொழில் செய்பவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஒரு வகையினர் தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுபவர்கள். இரண்டாவது வகையினர் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப் படுபவர்கள்.

இந்த முதலாவது வகையினரில் பாடசாலைப் பிள்ளைகளும் பல்கலைக் கழகப் பிள்ளைகளும் அடங்குவர். அம்மா அப்பாவிடமிருந்து கிடைக்கும் பொக்கற் மணி போதாத பட்சத்திலும், படிப்பதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியாத பட்சத்திலும் - வேறு வேலைகள் செய்வதை விட இந்த வேலையில் சுலபமாகப் பணத்தைச் சம்பாதித்து விடலாம் என்பது இவர்கள் கருத்து. இவர்கள் பெரும்பாலும் வீதிகளின் ஓரங்களில் காத்து நின்று, தம்மை இனம் காட்டுவார்கள். இவர்களில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அதை விட வசதியான வாழ்க்கைக்காக பாடசாலை விடுமுறைக்கு உல்லாசப் பயணிகள் நிறைந்த பணக்கார நாடான சைப்பிரசுக்குச் சென்று பால்வினைத்தொழில் செய்து சம்பாதித்து வருவார்கள்.

இரண்டாவது வகையினர் கூடுதலாக போலந்து, செக்கொஸ்லொவோக்கியா, உக்ரையின் போன்ற நாடுகளிலிருந்து தரகர்களால் கடத்திக் கொண்டு வரப்பட்டு கட்டாயப் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

இப்படி கடத்தி வரப் படுபவர்கள் விரும்பினால் கூட மீள முடியாத படி, துப்பாக்கி முனையிலும், குண்டர்கள் மத்தியிலும் காவல் வைக்கப் பட்டுத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் பணமும் மிகவும் சொற்பமே. இவர்களின் உடலுக்காகக் கிடைக்கும் பணத்தில் 70 வீதத்தைத் தரகர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். மிகுதி 30 வீதமே இவர்களிடம் கொடுக்கப் படுகிறது.

இது ஒரு துன்பியல் நிறைந்த நரக வாழ்க்கை. கட்டாயத்தின் பேரில் ஒருத்தி தன் உடலை ஒருவனின் இச்சைக்கு இரையாக்க பெண்களை நாடு கடத்தி விற்கும் இடைத் தரகரும், பெண்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து இச்சை தீர்க்க வரும் ஆண்களுக்கு பெண்களைக் காட்சிப் பொருளாகக் காட்டிப் பேரம் பேசி சிலமணி நேரங்களுக்கோ அல்லது ஒரு இரவுக்கோ வாடகைக்கு விடும் தலைமைத் தரகரும் அதில் பணம் சம்பாதிக்கும் அவலம் மிகவும் கொடுமையானது.

அனேகமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வாலிப வயதுப் பெண்கள் நினைக்கிறார்கள் யேர்மனி பணக்காரநாடு. அங்கு போனால் நல்ல வேலையுடன் வசதியாக வாழலாமென்று. அதனால் பத்திரிகைகளில் வேலைக்கான விளம்பரங்களைத் தேடி யேர்மனியின் உணவு விடுதிகளில் உணவு பரிமாறுபவருக்கான வேலைக்கோ, அல்லது பிள்ளைகளைப் பராமரிக்கும் பேபிமைண்டர் வேலைக்கோ அல்லது இது போன்ற இன்னும் வேறு வேலைகளுக்கோ விண்ணப்பிக்கிறார்கள்.

இது கூடுதலாகத் எமது தாயகத்திலிருந்து சவுதி போன்ற கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிப் போகும் எமது தமிழ் சிங்களப் பெண்கள் செய்வது போன்ற ஒரு ஒப்பந்தத்துடனான ஒரு வருட அல்லது இன்னும் கூடிய காலங்களுக்கான வேலையாகவே கருதப் படும்.

ஆனால் தாமும் பணம் சம்பாதிக்கும் காலம் ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இப்படி விண்ணப்பித்து வேலைக்கென யேர்மனிக்கு வந்து சேரும் வாலிபவயதுப் பெண்களுக்கு யேர்மனியில் காத்திருப்பது ஒரு பயங்கரமான, அருவருப்பான துயரம் தோயந்த எதிர்காலமே!

கூடுதலாக பேர்லினிலோ அல்லது ஹம்பேர்க்கிலோ தான் அவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். அங்கு சென்ற பின்தான் அவர்கள் கட்டாய பால்வினைத் தொழில் செய்ய வேண்டுமென்பது அவர்களுக்கு விளங்கப் படுத்தப் படும். அவர்கள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் பலாத்காரப் படுத்தி பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்தப் படுவார்கள். இதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு வாய்ப்பே இல்லை. கடத்தி வந்தவர்களைக் காவலில் வைத்திருப்பது போலவே இவர்களும் தப்பியோட முடியாத படி துப்பாக்கி முனைகளும் குண்டர்களும் காவலுக்கு நிற்பார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இப் பெண்கள் தப்பியோடினால் அவர்களது தாய்நாட்டில் இருக்கும் அவர்களது பெற்றோர்களும் சகோதரர்களும் துன்புறுத்தப் படுவார்கள், அல்லது கொலை செய்யப்படுவார்கள் என்று சொல்லிப் பயமுறுத்தப் படுவார்கள். இந்திய தமிழ் சினிமாக்களில் வரும் பிளாக்மெயில் தனமான வில்லத்தனம் போலவே அந்தப் பயமுறுத்தல் இருக்கும்.

இந்தத் தரகர்கள் கொடுக்கும் இப்படியான அதீதமான அழுத்தங்களினால் பொலீசிடம் போய் முறையிடும் துணிவு கூட இந்தப் பெண்களுக்கு இல்லாது போய்விடும்.

அதுமட்டுமல்லாமல் இந்த விபச்சார விடுதிகளை நடாத்துபவர்களின் முறைப் படி, தலைமைத் தரகரால் அப் பெண்கள் சில இரவுகிளப்புகளுக்கும் அரைகுறை ஆடைகளுடனோ அல்லது ஆடைகளே இல்லாமலோ நடனமாட கட்டாயமாக அனுப்பி வைக்கப் படுவார்கள்.

பல பெண்கள் உக்ரையின், லிற்றவ்வன், லெற்லாண்ட், ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து விசாவுக்கென ஏஜென்சியிடம் 750யூரோ கொடுத்து எதிர்காலத்தைப் பற்றியதான பலத்த நம்பிக்கையுடன் இங்கு யேர்மனிக்கு வந்து சேருகிறார்கள். ஆனால் இங்கே வந்ததும் தான் தாம் ஏஜென்சியால் ஏமாற்றப் பட்டதை உணர்ந்து தெரிந்து நம்பிக்கைகள் எல்லாம் தவிடு பொடியாக மனமுடைந்து, ஆனாலும் விடுதலையோ அதை விட்டு வெளியேற ஒரு வழியோ தெரியாமல் துவண்டு போகிறார்கள்.

இவர்களைக் கூட்டி வந்த தரகர்கள் இவர்களை விபச்சார விடுதிக்கு விற்பனை செய்வார்கள். இவர்களின் பெறுமதி சிலசமயங்களில 25000யூரோ வரை கூட உயர்ந்திருக்கும். உக்ரையின் நாட்டுப் பெண்கள் அழகானவர்களாம். அவர்கள்தான் அதிகம் விலை போவார்கள்.

இடைத் தரகர் அந்தப் பணத்தை முக்கிய தரகரிடம் பெற்றுக் கொண்டு போன பின்னர் அந்த முக்கிய தரகர் தான் கொடுத்த 25000யூரோவையும் இந்தப் பெண்களிடமே பெற்றுக் கொண்டு விடுவார். அதாவது இந்தப் பெண்கள் தமது உடலை இன்னொரு ஆடவனின் இச்சைக்கு இரையாக்கும் போது வரும் பணத்தில் அந்த 25000யூரோ கணக்கு வைத்துக் கழிக்கப் படும். எப்படியானதொரு கொடுமை இது என்பது எத்தனை பேருக்குப் புரியும்.

புரிந்த ஆண்கள் கூட தமது இச்சை தீர்ந்தால் போதுமென்ற எண்ணத்துடன் இப்படியான சிவப்பு விளக்குப் பகுதிகளுக்குச் சென்று இந்தக் கொடுமைகளுக்கு உரமும் வலுவும் கொடுப்பது எத்துணை அவலமானது. யேர்மனியில் மட்டும் ஒரு நாளைக்கு பத்துஇலட்சம் ஆண்கள் விலைமாதர்களிடம் போய் வருகிறார்களாம்.

இதே நேரம் எல்லாப் பெண்களுமே கடத்தப் பட்டு பலாத்காரத்தின் பேரில்தான் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. போலந்து, செக்கொஸ்லொவோக்கியா போன்ற நாட்டுப் பெண்களில் பலருக்கு இங்கு யேர்மனியில் வேலை என்ற பெயரில் என்ன காத்திருக்கிறது என்பது தெரியும்.

ஆனாலும் வறுமை, எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் போன்ற காரணங்களால் யேர்மனிக்கு வந்து இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். சிலகாலங்களுக்கு உழைத்து விட்டு, அந்தப் பணத்துடன் தாய் நாடுகளுக்குத் திரும்பி நல்லதொரு வசதியான வாழ்வைத் தொடங்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை நிறைந்த ஆசை. அதற்காக ஏஜென்சிக்கு 750யூரோ கொடுத்து சட்டத்துக்கு முரணாக விசா பெற்று அவர் மூலமாகவே இங்கு யேர்மனிக்கு வந்து சேர்ந்து பால்வினைத் தொழிலை பணத்துக்கான ஒரு தொழிலாகச் செய்கிறார்கள்.

இப்படித் தாம் விரும்பி இத்தொழிலில் ஈடுபடும் கிழக்கு ஐரோப்பியப் பெண்கள் 30 வீதமானவர்கள் மட்டுமே! மிகுதி 70 வீதமான கிழக்கு ஐரோப்பியப் பெண்களும் ஏஜென்சிமார்களால் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டு விபச்சார விடுதி நடத்துனர்களாலும், இரண்டாவது தரகர்களாலும் கட்டாய பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது யேர்மனிய அரச நிறுவனங்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இந்த இரண்டாவது வகைப் பால்வினைத்தொழில் செய்யும் பெண்களில் தாய்லாந், பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாட்டுப் பெண்களும் அடங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய ஆண்களால் ஏமாற்றப் பட்டே இங்கு அழைத்து வரப் படுகிறார்கள். ஐரோப்பிய ஆண்கள் இந்தக் கொடுமையைச் செய்வதற்கென்றே உல்லாசப் பயணிகளாக தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளுக்குப் போகிறார்கள். அங்கு வறிய அழகிய பெண்கள் மேல் காதல் கொண்டது போல நடித்து, திருமணம் செய்வதாகப் பொய் சொல்லி இங்கு கூட்டி வந்து பால்வினைத் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்துகிறார்கள். இந்த ஆண்களில் பெண்களை இங்கு கொண்டு வந்து விற்பவர்களும் இருக்கிறார்கள். சொந்தமாகவே விபச்சாரவிடுதி வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அதை விட பெண்களை ஏமாற்ற முடியாத பட்சத்தில் கடத்தியும் கொண்டு வருகிறார்கள். கடத்தலுக்கு இடைத்தரகராக நின்று உதவி செய்பவர்கள் பெரும்பாலும் தாய்லாந்து பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்களாகவே இருக்கிறார்கள்.

சீனாவைச் சேர்ந்த ஒரு விலைமாது சொல்கிறார். "நான் எனக்குப் 17 வயதாக இருந்த போது எனது ஒன்று விட்ட சகோதரியுடன், வேலை எடுத்துத் தருவதாகச் சொன்ன ஒரு உறவு மாமாவுடன் பஸ் ஏறினேன். நான்கு மணித்தியாலப் பயணம் என்றார் மாமா. ஆனால் நான்கு நாட்கள் காடுகள் மேடுகள் கடந்த பயணம் அது. அது கடத்தல் என்று தெரிய முன்னமே பயத்தில் வீடு திரும்ப மன்றாடினேன். மாமா விடவில்லை. பர்மா எல்லையில் நாமிருவரும் விலைபேசப் பட்டோம். அவர்கள் எம்மை ஒரு சட்டைத்துணி போல, ஒரு ரவிக்கை போல ஆராய்ந்து பார்த்தார்கள். கன்னி கழியாமல் இருக்கிறோமா என்பதைக் கூட கவனமாக ஆராயந்தார்கள். இப்போ நான் இந்த வாழ்வில் இருந்து மீளமுடியாதவளாகி விட்டேன். " என்று.

2002 மாசி பிற்பகுதியில் பேர்லினில் அங்கீகாரம் பெற்ற ஒரு விபச்சாரவிடுதியில் ஏறக்குறைய 1000 வெளிநாட்டுப் பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதும், அவர்களால் அவர்களை வாடிக்கையாளர்களிடம் வாடகைக்கு விடும் தலைமைத் தரகர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தப் பெண்கள் பாதிக்கப் பட்டவர்களாகவே கண்டு கொள்ளப்பட்டார்கள்.

சிலபெண்கள் - இவர்களைப் பெண்கள் என்று சொல்வதை விட சிறுமிகள் குழந்தைகள் என்று கூடச் சொல்லலாம். அவ்வளவு இளம் வாலிப வயதுப்பெண்கள் இவர்கள். தரகர்களிடம் முரண்படும் சமயங்களில் தரகர்களால் அடித்துத் துன்புறுத்தப் படுகிறார்கள்.

பேர்லினில் இந்த வருட பெப்பரவரி மாத இறுதியில் ஒரு ரஷ்ய இளநங்கை மிகவும் கொடுமைப் படுத்தப் பட்ட நிலையில் பொலீசாரால் விடுவிக்கப் பட்டிருக்கிறாள். இவளை 3 ரஷ்யர்கள் 8மணி நேரமாகத் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அந்த ரஷ்யர்களில் ஒருவருக்கு அன்று பிறந்தநாளாம். அதைக் கொண்டாடு முகமாகவே அந்த இளநங்கை சித்திரவதை செய்யப் பட்டிருக்கிறாள்.

எல்லோரும் நினைப்பது போல போலந்து நாட்டையோ ரஷ்ய நாட்டையோ சேர்ந்த தரகர்கள்தான் பெண்களை கட்டாய பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலான விபச்சார விடுதிகளின் சொந்தக் காரர்களும், தலைமைத் தரகர்களும் யேர்மனியர்களாகவே இருக்கிறார்கள். ரஷ்சியர்கள் அனேகமாக இடைத் தரகர்களாகத்தான் இருக்கிறார்கள்.

விபச்சார விடுதிகளிலும் தரகர்கள் மத்தியிலும் பெண்கள் கடைச்சரக்குகளாகத் தான் பாவிக்கப் படுகிறார்கள். இந்தப் பெண்களுக்குக் கிடைக்கும் பணமும் மிகவும் குறைவானதே. சராசரியாக அரைமணித்தியாலத்துக்கு ஒரு அறைக்கு 50யூரோ என்றே வசூலிக்கப் படுகிறது. இதில் அந்த அரைமணி நேரமும் யாரோ ஒரு காமுகனின் இச்சைக்கு எந்த உணர்வுகளுமின்றிய ஒரு ஜடம் போல தன் உடலை பலியாக்கிய பெண்ணுக்குக் கிடைப்பது வெறும் 15யூரோ மட்டுமே.

கூடுதலான பெண்கள் தமக்குக் கிடைக்கும் இப்பணத்தைச் சேமிக்கிறார்கள். சில பெண்கள் இதைத் தாய் நாட்டில் வறுமையில் வாழும் தமது தாய்தந்தையருக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்தப் பணத்தை பெற்றோருக்கு அனுப்புவதைத் தவிர்த்து சேமிக்க வேண்டுமென தலைமைத் தரகர்களால் வற்புறுத்தப் படுகிறார்கள். ஏனெனில் இவர்கள் ஒரு யேர்மனிய ஆணை மணமுடிக்கும் பட்சத்தில்தான் விசாப் பிரச்சனையின்றி தொடர்ந்தும் யேர்மனியில் வாழ்வதற்கான வாய்ப்பும், இவர்களின் உடல்கள் மூலம் தரகர்கள் பணம் சம்பாதிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கிறது.

ஒரு விலைமாதை திருமணம் செய்து கொள்ள ஒரு யேர்மன் ஆண் 7500யூரோவை எதிர்பார்க்கிறான். அப்பணத்தை இப்பெண்களே சேமித்து, ஒரு யேர்மனிய ஆணைத் திருமணம் செய்து, தமக்கு உழைத்துத் தர வேண்டுமென இவர்கள் தரகர்களால் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள். இது ஒரு அடிமைத் தனம் போன்றதுதான். முற்காலத்தில் மனிதர்கள் விற்கப் பட்டு அடிமைகளாக வாழ்ந்தது போன்றுதான் இன்றைய விலைமாதர்களும் வாழ்கிறார்கள். இவர்களின் உணர்வுகள் மதிக்கப் படுவதில்லை. பெரும்பாலான சமயங்களில் தரகர்களால் மிதிக்கப் படுகிறார்கள். தரகர்களால் மட்டுமல்ல. உடலுறவு பணத்துக்காக என்பதால் இவர்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் என்ன செய்தாலும் வாய் பேசாது வலிகளைத் தாங்க வேண்டிய அவலத்திலும் இருக்கிறார்கள். எந்த உண்மையையும் வெளியில் சொல்ல தைரியமில்லாத படி அச்சப் படுத்தியே வாழ வைக்கப் படுகிறார்கள்.

இந்த விலைமாதர்கள் மீது அங்கு வந்து போகும் வாடிக்கையாளர்களில் யாருக்காவது விருப்பமோ காதலோ வந்தால், விலைமாதின் வயதுக்கும், உடல்வாகுக்கும், அழகுக்கும் முக்கியமாக அவளால் விடுதிக்கும் தரகருக்கும் வரும் வருமானத்துக்கும் ஏற்ப பேரம் பேசப்பட்டு, அவள் வாடிக்கையாளருக்கு விற்கப் படுவாள். அவள் தன்னை ஒரு கடைச்சரக்காக, அழுக்குத் துணியாக உணர்ந்து கொண்ட போதும், அவளின் பெறுமதி பல்லாயிரக்கணக்காக இருக்கும். அவளின் இந்தப் பெறுமதி 25000யூரோ வைக் கூடத் தாண்டியிருப்பதாக பேர்லினைச் சேர்ந்த பெண்கள் சங்கத்துக்கான காரியதரிசி Helga Korthaase சொல்கிறார்.

இவர்களில் ஓரிருவர் வாடிக்கையாளர்களால் நியமாகவே காதலிக்கப் பட்டு விடுதலை பெற்று குடும்பம் குழந்தையென்று வாழும் நிகழ்வுகளும் அபூர்வமாக நடந்துள்ளன.

இந்த வருட ஆரம்பத்தில் விலைமாதர்கள் தமது பால்வினைத்தொழிலை பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றதொரு சட்டம் யேர்மனியில் அமுல் படுத்தப் பட்டது. பதிவு செய்வதால் அவர்களுக்கான எல்லா காப்புறுதிகளும் செய்யப் பட்டு, அவர்களது எதிர்காலம் செழுமைப் படுத்தப் படும் என்பதும், பதிந்து பால்வினைத் தொழிலைச் செய்யும் போது தரகர்களினதும் விபச்சாரவிடுதி நடத்துனர்களதும் அவர்கள் மீதான அராயஜகம் தவிர்க்கப்படும் என்பதும் யேர்மன் அரசின் நம்பிக்கையான நன்நோக்கம்.

இந்தக் காப்புறுதிகளில் சுகவீனக்காப்புறுதி, பென்சன்காப்புறுதி... போன்ற பல நல்ல விடயங்கள் அடங்குகின்றன. ஆனாலும் இதுவரையில் எந்தப் விலைமாதரும் வந்து இதற்கான அலுவலகத்தில் தம்மைப் பதிந்து கொள்ளவில்லையென இவர்களுக்கான சட்டங்களுக்கும், தேவைகளுக்கும் பொறுப்பான Juanita Henning கவலை தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒரு விலைமாது கொடுத்த பதில் பத்திரிகைச் செய்தியாக வந்துள்ளது. அவர் கூறுவதாவது "பால்வினைத்தொழிலில் நேரடியாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதால் அந்த வேலை செய்பவர்களை மற்றைய வேலைகள் செய்பவர்கள் போலக் கருதாமல் ஒரு வர்த்தக நிறுவனம் வைத்திருப்பவர் போலவே கருதுகிறார்கள். அதனால் அதற்காக வசூலிக்கப் படும் வரிகளும் வர்த்தகர்களுக்குப் போலவேதான் வசூலிக்கப் படும். அதாவது ஒரு விலைமாது ஒருநாளைக்கு 250யூரோ உழைப்பதாகக் கணக்குப் போட்டு அதன் படியே எல்லா வரிகளும் காப்புறுதிகளுக்கான பணங்களும் அறவிடப்படும். இது மிகவும் அதிகம். இதன் காரணமாகவே நானுறுஆயிரம் விலைமாதர்களில் ஒருவர் கூடப் பதிந்து கொள்ள முன்வரவில்லை."

இந்த விபச்சாரம் யேர்மனியில் மட்டுந்தான் என்று சொல்வதற்கில்லை. உலகளாவப் பரந்து கிடக்கிறது. மேற்கு ஆபிரிக்காவில் உள்நாட்டுச் சண்டை காரணமாக கென்யா, சீராலியோன்... போன்ற நாடுகளிலிருந்து தப்பியோடி வரும் பெண்குழந்தைகள் அவர்களுக்கான உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு பின்னர் விலைமாதர்கள் ஆக்கப் படுகிறார்கள்.

பெண்குழந்தைகள் பாலுறவுக்கு இணங்கும் பட்சத்திலேயே அவர்களுக்கு உண்ண உணவும், நோய்களுக்கான மருந்தும் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களால் வழங்கப் படுகிறது. கிட்டத்தட்ட 40 நிறுவனங்களில் வேலைசெய்யும் 70 பேர்கள், இந்தத் துர்வேலையைச் செய்து கொண்டிருந்ததை UNO உதவி நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.

இதற்கு ஃபறீ ரவுணைச் சேர்ந்த ஒரு பெண் சொல்கிறார். "இது ஒன்றும் புதிதல்ல. இங்கு உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுடன் பாலுறவு கொள்வதால்தான் அகதிகளாகத் தப்பியோடி வந்த சிறுமிகள் பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள். " என்று.

UNHCR சொல்கிறது. "ஆபிரிக்காவில் மிகவும் பாதிக்கப் படுபவர்கள் குழந்தைகளே. இவர்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் முதலில் இராணுவத்தாலும் பின்னர் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலும் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கோ அல்லது பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னர் உணவு உடை மருந்து பாடசாலை போன்றவற்றுக்காக பாலுறவுக்கு வற்புறுத்தப் படுகிறார்கள். அதன் பின் விலைமாதர்களாக்கப் படுகிறார்கள்." என்று

பால்வினை என்னும்

பாழ் கிணற்றுக்குள்

வாழ்விழந்த பெண்கள்

மீள வழி உண்டா.........!

ஏழ்மையினாலும்

சில மனிதர்களின் இச்சையினாலும்

சூழ உள்ளவர்களின் சூழ்ச்சியினாலும்

ஊனமானது உடல்கள் மட்டுமல்ல!

இவர்கள் உள்ளங்களும்தான்!

சந்திரவதனா

யேர்மனி

பிரசுரம் - பெண்கள் சந்திப்பு மலர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.