Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகப்பேய்

Featured Replies

அகப்பேய்

இன்று கவிதைப் பூங்காவில் முனிவர்ஜி அகப்பை என்ற தலைப்பில் ஒரு அற்புதக் கருவியைப்பற்றி கவிதை படைத்து என்னை மிகவும் வெறுப்புக்குள்ளாக்கியதன் பயனாய் ஆதியின் தேடலில் அகப்பேய் கிடைத்தது. இது அகப்பேய் சித்தர் மொழிந்தவை. யார் யாரோ எங்கெங்கெல்லாமோ தேடிச் சேகரித்த அகப்பேயை இங்கு கொண்டு வந்து அரங்கேற்றுவது ஆதி.

அகப்பேய் சித்தர் பாடல்கள்

நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய்

நாயகன் தாள் பெறவே

நெஞ்சு மலையாதே .....அகப்பேய்

நீ ஒன்றுஞ் சொல்லாதே. 1

பராபர மானதடி .....அகப்பேய்

பரவையாய் வந்தடி

தராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய்

தானே படைத்ததடி. 2

நாத வேதமடி .....அகப்பேய்

நன்னடம் கண்டாயோ

பாதஞ் சத்தியடி .....அகப்பேய்

பரவிந்து நாதமடி. 3

விந்து நாதமடி .....அகப்பேய்

மெய்யாக வந்ததடி

ஐந்து பெரும்பூதம் .....அகப்பேய்

அதனிடம் ஆனதடி. 4

நாலு பாதமடி .....அகப்பேய்

நன்னெறி கண்டாயே

மூல மானதல்லால் .....அகப்பேய்

முத்தி அல்லவடி. 5

வாக்காதி ஐந்தடியோ .....அகப்பேய்

வந்த வகைகேளாய்

ஒக்கம் அதானதடி .....அகப்பேய்

உண்மையது அல்லவடி. 6

சத்தாதி ஐந்தடியோ .....அகப்பேய்

சாத்திரம் ஆனதடி

மித்தையும் ஆகமடி .....அகப்பேய்

மெய்யது சொன்னேனே. 7

வசனாதி ஐந்தடியோ .....அகப்பேய்

வண்மையாய் வந்ததடி

தெசநாடி பத்தேடி .....அகப்பேய்

திடன் இது கண்டாயே. 8

காரணம் ஆனதெல்லாம் .....அகப்பேய்

கண்டது சொன்னேனே

மாரணங் கண்டாயே .....அகப்பேய்

வந்த விதங்கள் எல்லாம். 9

ஆறு தத்துவமும் .....அகப்பேய்

ஆகமஞ் சொன்னதடி

மாறாத மண்டலமும் .....அகப்பேய்

வந்தது மூன்றடியே. 10

பிருதிவி பொன்னிறமே .....அகப்பேய்

பேதமை அல்லவடி

உருவது நீரடியோ .....அகப்பேய்

உள்ளது வெள்ளையடி. 11

தேயு செம்மையடி .....அகப்பேய்

திடனது கண்டாயே

வாயு நீலமடி .....அகப்பேய்

வான்பொருள் சொல்வேனே. 12

வான மஞ்சடியோ .....அகப்பேய்

வந்தது நீகேளாய்

ஊனமது ஆகாதே .....அகப்பேய்

உள்ளது சொன்னேனே. 13

அகாரம் இத்தனையும் .....அகப்பேய்

அங்கென்று எழுந்ததடி

உகாரங் கூடியடி .....அகப்பேய்

உருவாகி வந்ததடி. 14

மகார மாயையடி .....அகப்பேய்

மலமது சொன்னேனே

சிகார மூலமடி .....அகப்பேய்

சிந்தித்துக் கொள்வாயே. 15

வன்னம் புவனமடி .....அகப்பேய்

மந்திரம் தந்திரமும்

இன்னமும் சொல்வேனே .....அகப்பேய்

இம்மென்று கேட்பாயே. 16

அத்தி வரைவாடி .....அகப்பேய்

ஐம்பத்தோர் அட்சரமும்

மித்தையாங் கண்டாயே .....அகப்பேய்

மெய்யென்று நம்பாதே. 17

தத்துவம் ஆனதடி .....அகப்பேய்

சகலமாய் வந்ததடி

புத்தியுஞ் சொன்னேனே .....அகப்பேய்

பூத வடிவலவோ. 18

இந்த விதங்களெல்லாம் .....அகப்பேய்

எம்இறை அல்லவடி

அந்த விதம்வேறே .....அகப்பேய்

ஆராய்ந்து காணாயோ. 19

பாவந் தீரவென்றால் .....அகப்பேய்

பாவிக்க லாகாதே

சாவதும் இல்லையடி .....அகப்பேய்

சற்குரு பாதமடி. 20

எத்தனை சொன்னாலும் .....அகப்பேய்

என் மனந்தேறாதே

சித்து மசித்தும்விட்டே .....அகப்பேய்

சேர்த்துநீ காண்பாயே. 21

சமய மாறுமடி .....அகப்பேய்

தம்மாலே வந்தவடி

அமைய நின்றவிடம் .....அகப்பேய்

ஆராய்ந்து சொல்வாயே. 22

ஆறாறும் ஆகுமடி .....அகப்பேய்

ஆகாது சொன்னேனே

வேறே உண்டானால் .....அகப்பேய்

மெய்யது சொல்வாயே. 23

உன்னை அறிந்தக்கால் .....அகப்பேய்

ஒன்றையும் சேராயே

உன்னை அறியும்வகை .....அகப்பேய்

உள்ளது சொல்வேனே. 24

சரியை ஆகாதே .....அகப்பேய்

சாலோகங் கண்டாயே

கிரியை செய்தாலும் .....அகப்பேய்

கிட்டுவது ஒன்றுமில்லை. 25

யோகம் ஆகாதே .....அகப்பேய்

உள்ளது கண்டக்கால்

தேக ஞானமடி .....அகப்பேய்

தேடாது சொன்னேனே. 26

ஐந்துதலை நாகமடி .....அகப்பேய்

ஆதாயங் கொஞ்சமடி

இந்த விடந்தீர்க்கும் .....அகப்பேய்

எம் இறை கண்டாயே. 27

இறைவன் என்றதெல்லாம் .....அகப்பேய்

எந்த விதமாகும்

அறைய நீகேளாய் .....அகப்பேய்

ஆனந்த மானதடி. 28

கண்டு கொண்டேனே .....அகப்பேய்

காதல் விண்டேனே

உண்டு கொண்டேனே .....அகப்பேய்

உள்ளது சொன்னாயே. 29

உள்ளது சொன்னாலும் .....அகப்பேய்

உன்னாலே காண்பாயே

கள்ளமுந் தீராதே .....அகப்பேய்

கண்டார்க்குக் காமமடி. 30

அறிந்து நின்றாலும் .....அகப்பேய்

அஞ்சார்கள் சொன்னேனே

புரிந்த வல்வினையும் .....அகப்பேய்

போகாதே உன்னை விட்டு. 31

ஈசன் பாசமடி .....அகப்பேய்

இவ்வண்ணங் கண்டதெல்லாம்

பாசம் பயின்றதடி .....அகப்பேய்

பரமது கண்டாயே. 32

சாத்திரமும் சூத்திரமும் .....அகப்பேய்

சங்கற்பம் ஆனதெல்லாம்

பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்

பாழ் பலங்கண்டாயே. 33

ஆறு கண்டாயோ .....அகப்பேய்

அந்த வினை தீர

தேறித் தெளிவதற்கே .....அகப்பேய்

தீர்த்தமும் ஆடாயே. 34

எத்தனை காலமுந்தான் .....அகப்பேய்

யோகம் இருந்தாலென் ?

முத்தனு மாவாயோ .....அகப்பேய்

மோட்சமும் உண்டாமோ ? 35

நாச மாவதற்கே .....அகப்பேய்

நாடாதே சொன்னேனே

பாசம் போனாலும் .....அகப்பேய்

பசுக்களும் போகாவே. 36

நாணம் ஏதுக்கடி .....அகப்பேய்

நல்வினை தீர்ந்தக்கால்

காண வேணுமென்றால் .....அகப்பேய்

காணக் கிடையாதே. 37

சும்மா இருந்துவிடாய் .....அகப்பேய்

சூத்திரஞ் சொன்னேனே

சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்

சுட்டது கண்டாயே. 38

உன்றனைக் காணாதே .....அகப்பேய்

ஊனுள் நுழைந்தாயே

என்றனைக் காணாதே .....அகப்பேய்

இடத்தில் வந்தாயே. 39

வானம் ஓடிவரில் .....அகப்பேய்

வந்தும் பிறப்பாயே

தேனை உண்ணாமல் .....அகப்பேய்

தெருவொடு அலைந்தாயே. 40

சைவ மானதடி .....அகப்பேய்

தானாய் நின்றதடி

சைவம் இல்லையாகில் .....அகப்பேய்

சலம்வருங் கண்டாயே 41

ஆசை அற்றவிடம் .....அகப்பேய்

ஆசாரங் கண்டாயே

ஈசன் பாசமடி .....அகப்பேய்

எங்ஙனஞ் சென்றாலும். 42

ஆணவ மூலமடி .....அகப்பேய்

அகாரமாய் வந்ததடி

கோணும் உகாரமடி .....அகப்பேய்

கூடப் பிறந்ததுவே. 43

ஒன்றும் இல்லையடி .....அகப்பேய்

உள்ளபடி யாச்சே

நன்றிலை தீதிலையே .....அகப்பேய்

நாணமும் இல்லையடி. 44

சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்

சுட்டது சொன்னேனே

எம்மாயம் ஈதறியேன் .....அகப்பேய்

என்னையுங் காணேனே. 45

கலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்

கண்டார் நகையாரோ?

நிலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்

நீயார் சொல்வாயே. 46

இந்து அமிழ்தமடி .....அகப்பேய்

இரவி விடமோடி

இந்து வெள்ளையடி .....அகப்பேய்

இரவி சிவப்பாமே. 47

ஆணல பெண்ணலவே .....அகப்பேய்

அக்கினி கண்டாயே

தாணுவும் இப்படியே .....அகப்பேய்

சற்குரு கண்டாயே. 48

என்ன படித்தாலும் .....அகப்பேய்

எம்முரை யாகாதே

சொன்னது கேட்டாயே .....அகப்பேய்

சும்மா இருந்துவிடு. 49

காடும் மலையுமடி .....அகப்பேய்

கடுந்தவம் ஆனால்என்

வீடும் வெளியாமோ .....அகப்பேய்

மெய்யாக வேண்டாவோ. 50

பரத்தில் சென்றாலும் .....அகப்பேய்

பாரிலே மீளுமடி

பரத்துக்கு அடுத்தஇடம் .....அகப்பேய்

பாழது கண்டாயே. 51

பஞ்ச முகமேது .....அகப்பேய்

பஞ்சு படுத்தாலே

குஞ்சித பாதமடி .....அகப்பேய்

குருபா தங்கண்டாயே. 52

பங்கம் இல்லையடி .....அகப்பேய்

பாதம் இருந்தவிடம்

கங்கையில் வந்ததெல்லாம் .....அகப்பேய்

கண்டு தெளிவாயே. 53

தானற நின்றவிடம் .....அகப்பேய்

சைவங் கண்டாயே

ஊனற நின்றவர்க்கே .....அகப்பேய்

ஊனமொன்று இல்லையடி. 54

சைவம் ஆருக்கடி .....அகப்பேய்

தன்னை அறிந்தவர்க்கே

சைவம் ஆனவிடம் .....அகப்பேய்!

சற்குரு பாதமடி. 55

பிறவி தீரவென்றால் .....அகப்பேய்!

பேதகம் பண்ணாதே

துறவி யானவர்கள் .....அகப்பேய்!

சும்மா இருப்பார்கள். 56

ஆரலைந் தாலும் .....அகப்பேய்!

நீயலை யாதேடி

ஊர லைந்தாலும் .....அகப்பேய்!

ஒன்றையும் நாடாதே. 57

தேனாறு பாயுமடி .....அகப்பேய்!

திருவடி கண்டவர்க்கே

ஊனாறு மில்லையடி .....அகப்பேய்!

ஒன்றையும் நாடாதே. 58

வெள்ளை கறுப்பாமோ .....அகப்பேய்!

வெள்ளியுஞ் செம்பாமோ

உள்ளது உண்டோ டி .....அகப்பேய்!

உன் ஆணை கண்டாயே. 59

அறிவுள் மன்னுமடி .....அகப்பேய்!

ஆதாரம் இல்லையடி

அறிவு பாசமடி .....அகப்பேய்!

அருளது கண்டாயே. 60

வாசியிலே றியதடி .....அகப்பேய்!

வான் பொருள் தேடாயோ

வாசியில் ஏறினாலும் .....அகப்பேய்!

வாராது சொன்னேனே. 61

தூராதி தூரமடி .....அகப்பேய்!

தூரமும் இல்லையடி

பாராமற் பாரடியோ .....அகப்பேய்!

பாழ்வினைத் தீரவென்றால். 62

உண்டாக்கிக் கொண்டதல்ல .....அகப்பேய்!

உள்ளது சொன்னேனே

கண்டார்கள் சொல்வாரோ .....அகப்பேய்!

கற்வனை அற்றதடி. 63

நாலு மறைகாணா .....அகப்பேய்!

நாதனை யார் காண்பார்

நாலு மறை முடிவில் .....அகப்பேய்!

நற்குரு பாதமடி. 64

மூலம் இல்லையடி .....அகப்பேய்!

முப்பொருள் இல்லையடி

மூலம் உண்டானால் .....அகப்பேய்!

முத்தியும் உண்டாமே. 65

இந்திர சாலமடி .....அகப்பேய்!

எண்பத்தொரு பதமும்

மந்திரம் அப்படியே .....அகப்பேய்!

வாயைத் திறவாதே. 66

பாழாக வேணுமென்றால் .....அகப்பேய்!

பார்த்ததை நம்பாதே

கேளாமற் சொன்னேனே .....அகப்பேய்!

கேள்வியும் இல்லையடி. 67

சாதி பேதமில்லை .....அகப்பேய்!

தானாகி நின்றவர்க்கே

ஓதி உணர்ந்தாலும் .....அகப்பேய்!

ஒன்றுந்தான் இல்லையடி. 68

சூழ வானமடி .....அகப்பேய்!

சுற்றி மரக்காவில்

வேழம் உண்டகனி .....அகப்பேய்!

மெய்யது கண்டாயே. 69

தானும் இல்லையடி .....அகப்பேய்!

நாதனும் இல்லையடி

தானும் இல்லையடி .....அகப்பேய்!

சற்குரு இல்லையடி. 70

மந்திரம் இல்லையடி .....அகப்பேய்!

வாதனை இல்லையடி

தந்திரம் இல்லையடி .....அகப்பேய்!

சமயம் அழிந்ததடி. 71

பூசை பசாசமடி .....அகப்பேய்!

போதமே கோட்டமடி

ஈசன் மாயையடி .....அகப்பேய்!

எல்லாமும் இப்படியே. 72

சொல்ல லாகாதே .....அகப்பேய்!

சொன்னாலும் தோடமடி

இல்லை இல்லையடி .....அகப்பேய்!

ஏகாந்தங் கண்டாயே. 73

தத்துவத் தெய்வமடி .....அகப்பேய்!

சதாசிவ மானதடி

மற்றுள்ள தெய்வமெல்லாம் .....அகப்பேய்!

மாயை வடிவாமே. 74

வார்த்தை அல்லவடி .....அகப்பேய்!

வாசா மகோசரத்தே

ஏற்ற தல்லவடி .....அகப்பேய்!

என்னுடன் வந்ததல்ல. 75

சாத்திரம் இல்லையடி .....அகப்பேய்!

சலனங் கடந்ததடி

பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்!

பாவனைக் கெட்டாதே. 76

என்ன படித்தால்என் .....அகப்பேய்!

ஏதுதான் செய்தால்என்

சொன்ன விதங்களெல்லாம் .....அகப்பேய்!

சுட்டது கண்டாயே. 77

தன்னை அறியவேணும் .....அகப்பேய்!

சாராமற் சாரவேணும்

பின்னை அறிவதெல்லாம் .....அகப்பேய்!

பேயறி வாகுமடி. 78

பிச்சை எடுத்தாலும் .....அகப்பேய்!

பிறவி தொலையாதே

இச்சை அற்றவிடம் .....அகப்பேய்!

எம்இறை கண்டாயே. 79

கோலம் ஆகாதே .....அகப்பேய்!

குதர்க்கம் ஆகாதே

சாலம் ஆகாதே .....அகப்பேய்!

சஞ்சலம் ஆகாதே. 80

ஒப்பனை அல்லவடி .....அகப்பேய்!

உன்ஆணை சொன்னேனே

அப்புடன் உப்பெனவே .....அகப்பேய்!

ஆராய்ந்து இருப்பாயே. 81

மோட்சம் வேண்டார்கள் .....அகப்பேய்!

முத்தியும் வேண்டார்கள்

தீட்சை வேண்டார்கள் .....அகப்பேய்!

சின்மய மானவர்கள். 82

பாலன் பிசாசமடி .....அகப்பேய்!

பார்த்தக்கால் பித்தனடி

கால மூன்றுமல்ல .....அகப்பேய்!

காரியம் அல்லவடி. 83

கண்டதும் இல்லையடி .....அகப்பேய்!

கண்டவர் உண்டானால்

உண்டது வேண்டடியோ .....அகப்பேய்!

உன்ஆணை சொன்னேனே 84

அஞ்சயும் உண்ணாதே .....அகப்பேய்!

ஆசையும் வேண்டாதே

நெஞ்சையும் விட்டுவிடு .....அகப்பேய்!

நிட்டையில் சேராதே. 85

நாதாந்த உண்மையிலே .....அகப்பேய்!

நாடாதே சொன்னேனே

மீதான சூதானம் .....அகப்பேய்!

மெய்யென்று நம்பாதே. 86

ஒன்றோடு ஒன்றுகூடில் .....அகப்பேய்!

ஒன்றுங் கெடுங்காணே

நின்ற பரசிவமும் .....அகப்பேய்!

நில்லாது கண்டாயே. 87

தோன்றும் வினைகளெல்லாம் .....அகப்பேய்!

சூனியங் கண்டாயே

தோன்றாமல் தோன்றிவிடும் .....அகப்பேய்!

சுத்த வெளிதனிலே. 88

பொய்யென்று சொல்லாதே .....அகப்பேய்!

போக்கு வரத்துதானே

மெய்யென்று சொன்னக்கால் .....அகப்பேய்!

வீடு பெறலாமே. 89

வேதம் ஓதாதே .....அகப்பேய்!

மெய்கண்டோ ம் என்னாதே

பாதம் நம்பாதே .....அகப்பேய்!

பாவித்துப் பாராதே. 90

நன்றி

மூலம்

http://tamilnanbargal.com

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

பொழிப்புரை எழுதினால் சித்தர் என்ன சொல்ல வருகின்றார் என்று விளங்கும் :)

  • தொடங்கியவர்

பொழிப்புரை எழுதினால் சித்தர் என்ன சொல்ல வருகின்றார் என்று விளங்கும் :)

இதைத்தான் இப்பிடிச் சொல்றதோ? :)

mky1.jpg

  • தொடங்கியவர்

முக்கிய குறிப்பு,

அகப்பேய் சித்தரின் பாடல்கள் பற்றி பல இடங்களில் பலர் கருத்துகளைப் பதிந்துள்ளார்கள் அக்கருத்துகளை ஆதி தேடிவந்து இணைத்துவிடுகிறேன். இப்போதைக்கு இங்குள்ள சில குறிப்புகளைப் படித்து இயலுமானவரை கருத்தை அறிய முற்படுக. :)

இவர் அலையும் மனதைப் பெண்பேயாக உருவகப்படுத்தி, முன்நிறுத்தி, அகப்பேய் என்று ஒவ்வொரு அடியிலும் விளித்துப் பாடுவதால் அகப்பேய்ச் சித்தர் எனப்பட்டார். 'அகப்பேய்' என்பது மருவி, இவரை 'அகப்பைச் சித்தர்' எனக் கூறுவதும் உண்டு. இவரைப் பற்றிய மற்றெந்த குறிப்பும் இல்லை.இவர் பாடல்களில் சைவம் என்பதற்கு அன்பு என்று பொருள். அகங்காரம் அற்று வாழவேண்டும், சாதி வேற்றுமை, சாத்திர மறுப்பு போன்ற கருத்துகள் பேசப்படுகின்றன.

மனித அனுபவங்கள் எல்லாவற்றிற்கும் நிலைக்களன் உடம்புதான். துன்பங்களை அனுபவிப்பதற்கும் அதுதான் கருவி. பேரின்பத்தை அனுபவிப்ப தற்கும் அதுதான் கருவி. சித்தர்களின் பார்வையில் உடம்பு என்பது மோட்ச சாதனம். அதாவதுஇ வீடுபேற்றுக்கான கருவி. இது ஒரு பழைமையான கருத்து யோகம் என்கிற மனோ-வேதிச் செயலுக்கு அதுவே அடிப்படை. இந்த மனோ-வேதிச் செயல் காயசாதனை என்று சொல்லப்படும். அகப்பேய்ச் சித்தர் காயசாதனையைத் தேகஞானம் என்கிறார்.

யோகம் ஆகாதே அகப்பேய்!

உள்ளது கண்டக்கால்

தேகஞானமடி அகப்பேய்!

தேடாது சொன்னேனே. (செ.26)

இந்த நிலையில் உடம்பு தூய்மைப்படுத் தப்பட்டு சிதைக்க முடியாத தன்மையைப் பெறுகிறது. அதனால் அழியாத் தன்மை உடையதாகிறது. காயசாதனையை “மெய்யு ணர்வு உடற்கூறு” என்கிறார் மிர்சியா எலியட். அழியாத்தன்மை அல்லது சாவாமை என்பது மரணத்திற்குப் பின்னும் வாழ்தல் என்று கருத வேண்டாம். ஒருவன் தன் உடம்புக்குள்ளேயே தனக்காக ஏற்படுத்திக் கொள்கிற ஒரு சூழலாகும் அது. சித்தர்கள் உடம்பை ஆக்கபூர்வமான ஒன்றா கவே கருதுகிறார்கள். இந்த நிலைப்பாடுஇ உடம்பைப் பழித்தும் அதனை ஓர் இழி பொருளாக எண்ணியும் வசைபாடுகிற மற்ற சமயச்சிந்தனைகளிலிருந்து முற்றிலும் மாறு பட்டதாகும்.

சமயங்களின் தீமையைப் பற்றி கூறுவதற்காக அகப் பேய்ச் சித்தர் தனது பாடலில்

சமய மாறுமடி அகப்பேய்

தம்மாலே வந்தவடி

அமைய நின்றவிடம் அகப்பேய்

ஆராய்ந்து சொல்வாயே

ஆறாறு மாகுமடி அகப்பேய்

ஆகாது சொன்னேனே

வேறேயுண்டானால் அகப்பேய்

மெய்யது சொல்வாயே

உன்னையறிந்தக் கால் அகப் பேய்

ஒன்றையும் சேராயே

என்று சமயங்களின் சுய நலத்தினையும் அவற்றிலிருந்து மனிதன் விலக வேண்டிய அவசியத்தையும் கூறுகின்றனர். மேலும் அவரே

சாதி பேதமில்லை அகப்பேய்

தானாகி நின்றவருக்கு

ஓதி உணர்ந்தாலும் அகப்பேய்

ஒன்றுதான் இல்லையடி

என்ற கடவுள் மறுப்புக் கொள்கையையும் முன் வைக்கின்றார்.

மேலும்,

மந்திரமில்லையடி அகப்பேய்

வாதனை இல்லையடி

தந்திரமில்லையடி அகப்பேய்

சமயம் அழிந்ததடி-

என்று தேவையற்ற சடங்குகளை ஒழித்தால் மனிதனின் சங்கடங்கள் குறையும் என்றும் அதேபோல் சமயங்கள் யாவும் சடங்குகளினால்தான் நிலைத்து நிற்கின்றன என்ற உண்மையை தர்க்கரீதியாக விளக்குகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.