Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மண்ணே வணக்கம்!

Featured Replies

பகுதி ஒன்று

1997 முதல் இலங்கை சென்றுவருகிறேன். முதலில் கிரிக்கின்ஃபோ வேலையாக. இப்போது கிழக்கு பதிப்பகம் வேலையாக. மொத்தம் 30 தடவையாவது போயிருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் இம்முறைதான் யாழ்ப்பாணம் செல்ல வாய்ப்பு கிடைத்தது.

யாழ்ப்பாணம் நகரில் மத்தியக் கல்லூரி வளாகத்தில் கல்விக் கண்கட்சி ஒன்று நடைபெற்றது. இரண்டு நாள்கள். இது இரண்டாவது ஆண்டு. சென்ற ஆண்டு போர் முடிவுற்ற நிலையில் அந்தக் கண்காட்சி நடைபெற்றது. ஆனால் மாணவர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர் என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர். அவர் ஒரு சிங்களவர். 2009-ல் அவர் யாழ்ப்பாணம் வந்தது அதுவே முதல்முறையாம். பயமாக இருந்தது என்றார். திடீரென தமிழர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அடித்துவிடுவார்களோ என்ற பயம். அப்படி ஏதும் நடக்கவில்லை என்றார். இம்முறை அவரைப் பார்த்தால் அச்சம் கொண்டவர் மாதிரி தெரியவில்லை.

கொழும்பு ரத்மலான விமான நிலையத்திலிருந்து குட்டி விமானத்தில் யாழ் குடாவின் பலாலி விமானப்படைத் தளம் வரை பறந்து செல்லமுடிகிறது. சென்ற ஆண்டெல்லாம் பாதுகாப்புச் சோதனை அவ்வளவு பலமாக இருக்குமாம். 7-8 மணி நேரங்கள் விமான நிலையத்திலேயே இருக்கவேண்டுமாம். இப்போது சாதாரணமாக எல்லா விமான நிலையங்களிலும் ஆகும் அதே நேரம்தான். அன்று எங்களோடு யாழ்ப்பாணம் வந்தோரில், கிழக்கு பதிப்பகம், பிரிட்டிஷ் கவுன்சில், என்று யாழ் கல்விக் கண்காட்சியில் பங்குபெறுவோர்தான் இருந்தனர். அதைத்தவிர போடியிலிருந்து புடைவை வியாபாரம் செய்யும் ஒரு கோஷ்டியும் வந்திருந்தது. நாற்பது நாள்களுக்கு ஒருமுறை அவர்கள் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்று அங்கே வியாபாரம் செய்வார்களாம்.

தாழப் பறந்த குட்டி விமானம், உண்மையில் பயணிகள் விமானத் தரத்தில் ஆனதல்ல. ஓயாத சத்தம். அதைத் தடுக்க காதுகளுக்கு அடைப்பான்கள் தேவை. விமானத்தில் காற்றழுத்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை. மேகத்தின்வழியாகப் போகும்போது விமானம் கொஞ்சம் அபாயகரமாக ஆடும். ஆனால் சில வசதிகளும் உண்டு. மேகங்கள் மறைக்காதபோது தெளிவாகப் படங்கள் எடுக்கலாம். அதுவும் வட இலங்கையின் காயல் பகுதிகள், மணலும் நீரும் சுழல் ஓட்டமும் பார்க்க அலுப்பூட்டாதவை.

தரைவழியாகச் செல்வது அந்நிய நாட்டோருக்குத் தடை செய்யப்பட்டுள்ளது என்றார்கள். பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற்ற அந்நியர்களே யாழ்ப்பாணம் செல்லமுடியும். அவர்களுக்கும் விமானத்தில் செல்வதற்கே இப்போது அனுமதி தரப்படுகிறது என்றார்கள்.

நாங்கள் சென்றது இன்பச் சுற்றுலா அல்ல. ஒருவித வருத்தம், அதேசமயம் மகிழ்ச்சியுடனேயே நான் யாழ்ப்பாணத்தைப் பார்த்தேன். வரலாற்றுத் துயரங்கள்மீதான வருத்தம். ஏதோ ஒருவித அமைதி நிலவுகிறதே என்ற மகிழ்ச்சி. உடைந்த, ஆள் அற்ற வீடுகள் தரும் வருத்தம். ஆனால் கட்டடங்கள் எழும்பிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் மகிழ்ச்சி.

கொழும்பிலும் சரி, யாழ்ப்பாணத்திலும் சரி, ஒரு காட்சி மகிழ்ச்சியைத் தந்தது. அனைத்தையுமே இழந்துபோன தமிழர்கள் பகுதியில் பிச்சை எடுப்போர் யாரும் கண்ணில் படவில்லை. கோயில் வாசல் என்றாலே கையேந்தும் மக்கள் உள்ள தமிழகத்தையும் (இந்தியாவையும்) பார்த்தபின், நல்லூர் கந்தசாமி கோயில் வாசலில் பிச்சைக்காரர்களைக் காணாதது மகிழ்ச்சியைத் தந்தது.

(தொடரும்…)

  • தொடங்கியவர்

பகுதி இரண்டு

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடக்கும்போதோ அல்லது போருக்கு இடைப்பட்ட காலத்தின்போதோ கொழும்பு செல்லும்போதெல்லாம் அங்குள்ள தமிழர்களிடம் பேசும்போது கொஞ்சம் சங்கடமாகவே இருக்கும். நாம் ஏதேனும் தவறாகச் சொல்லிவிடுவோமோ, ஏதேனும் விதத்தில் ஏற்கெனவே நொந்துபோயுள்ளவர்களின் மனத்தைப் புண்படுத்திவிடுவோமோ என்று தோன்றும். தயங்கித் தயங்கித்தான் போர் பற்றிப் பேச ஆரம்பிப்பேன். அதேபோல தெளிவான பதிலும் மறுபக்கத்திலிருந்து வராது.

இம்முறை யாழ்ப்பாணத்தில் சந்திக்கும் தமிழர்களிடம் என்ன பேசலாம்? பேசலாமா, கூடாதா? எப்படி ஆரம்பிப்பது? இப்படிப் பல தயக்கங்கள். யாழ்ப்பாண மக்கள் முந்தைய சண்டைகளின்போதும், பின்னர் பொருள்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்டபோதும் கடும் திண்டாட்டத்தில் இருந்தவர்கள் ஆயிற்றே? யாருடைய அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நான் முதலிலேயே சந்தித்துப் பேசியவர் சொன்னதைக் கேட்டு விக்கித்துப் போய்விட்டேன்.

அவர் யாழ்ப்பாணத்துக்காரர்தான். ஆனால் அதைவிட முக்கியமாக போரின் கடைசி மாதங்களில் முல்லைத்தீவில் இருந்தவர். சாதாரணமாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவரிடம் யாழ் தமிழைப் பற்றி ஜோக் அடித்துக்கொண்டிருந்தேன். ஆனால் முல்லைத்தீவில், முல்லிவாய்க்காலில் இறுதிச் சமரின்போது மாட்டிக்கொண்டவர் என்றவுடன் எனக்குப் பேச்சே வரவில்லை.

அவருடைய மனைவி, மூன்று குழந்தைகள், தாய், தந்தை, சகோதரர்கள், அவர்களுடைய குடும்பங்கள் என அனைவரும் முல்லைத்தீவுக்கு வற்புறுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மனித வளையம் இருக்கும்வரைதான் தங்களுக்குப் பாதுகாப்பு என்று புலிகள் நினத்தனர். அவ்வளவு சிறிய இடத்தில் பல லட்சம் மக்கள். சுற்றி, கையில் துப்பாக்கி ஏந்திய புலிகள். மக்கள் அங்கிருந்து வெளியேற முயன்றால் சுடப்படுவார்கள். சண்டை தொடர்கிறது. குண்டுகள் வீசப்படுகின்றன. அதிலும் மக்கள் சாகிறார்கள். மக்களுக்கு உணவு இல்லை. உடல் நலக்குறைவு. மேலே கூரை இல்லை. திண்டாட்டம். ஒரு கட்டத்தில், நண்பர், தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் தப்பி வெளியே வந்துவிடுவது என்று திட்டமிட்டு இரவோடு இரவாகக் கிளம்புகிறார்.

பெரிய மண் முகடு. அதை நண்பரும் அவரது இரண்டு குழந்தைகளும் தாண்டிக் குதிக்கின்றனர். ஆனால் மனைவியாலும் மற்றொரு குழந்தையாலும் தாண்ட முடியவில்லை. தன் இரு குழந்தைகளின் உயிரையாவது காப்போம் என்று தப்பி வவுனியாவரை வந்துவிடுகிறார் நண்பர். மனைவியும் ஒரு குழந்தையும் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்.

நல்லவேளையாக, போர் முடிந்ததும் அவர்கள் உயிரோடு இருப்பது தெரிகிறது. முல்லைத்தீவில் அவருடைய தந்தை மட்டும்தான் உயிர் இழக்கிறார். மற்றவர்கள் அனைவரும் வவுனியா முகாமில் பல மாதங்கள் இருக்கிறார்கள். அதிலிருந்து அவர் எப்படி வெளியேறுகிறார் என்பது தனிக்கதை.

இப்படிப்பட்டதோர் அனுபவத்தை சமநிலையில் ஒரு மனிதனால் சொல்லமுடியுமா என்று ஆச்சரியமாகப் பார்க்கிறேன். ஏதோ எந்திரன் சினிமா பார்த்துவிட்டு விமரிசனம் செய்வதுபோல இடியாப்பம், சொதி காலை உணவுடனும் டீயுடனும் இந்த உரையாடல் நடக்கிறது.

2006 வரை மக்கள் புலிகள்மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார்களாம். நம் உரிமைகளை மீட்டுக்கொடுக்க வந்தவர்கள் என்று. ஆனால், 2006-2009 காலத்தில் புலிகள் கடும் அட்டூழியம் செய்தார்கள் என்றார் நண்பர். அதற்குமுன் அவர்கள் தெருக்களில் வந்து தன்னார்வலர்களை அழைப்பார்கள். சிலர் புலிகளுடன் சேர்ந்துகொள்ளப் புறப்படுவார்கள். ஆனால் 2006-க்குப் பிறகு, கட்டாய ஆள் சேர்ப்புதான். தாய், தந்தை தடுத்தால் அவர்கள் அடிக்க, அல்லது சுடப்படுவார்கள். வண்டிக்குமுன் விழும்பெற்றோர்களை வண்டி அரைத்துவிட்டு முன்னே செல்லுமாம். ஆனால், புலிகளின் இடைமட்டத் தலைவர்களுக்குத் தெரிந்தவர்கள் வீடுகளை மட்டும் விட்டுவிடுவார்கள். அல்லது பணம் லஞ்சமாகத் தரும் வீடுகளை விட்டுவிடுவார்கள். எல்லா அமைப்பிலும் இருக்கும் ஊழல் இங்கும் புகுந்துள்ளது.

(தொடரும்)

  • தொடங்கியவர்

பகுதி மூன்று

நாங்கள் யாழ்ப்பாணம் சென்றது ஒரு வெள்ளிக்கிழமை அன்று. அடுத்த இரு நாள்கள்தான் கல்விக் கண்காட்சி. பலாலி விமானதளத்திலிருந்து கிளம்பிய ராணுவப் பேருந்து எங்களை யாழ் நகரின் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டது. நல்ல பசி.

அருகே ஒரு உணவுக் கடைக்குச் சென்றோம். அது ஒரு ரெண்டுங்கெட்டான் நேரம்- காலை சுமார் 11 மணி இருக்கும். கடைக்குள் நுழையும்போதே ஹரன்பிரசன்னாவை மீன் வாசனை தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. வேறு கடைக்குச் செல்லலாம் என்றால் அதற்குள் எனக்கெல்லாம் பசி தாங்கவில்லை. ஒருமாதிரி அவரையும் இழுத்துக்கொண்டு உள்ளே சென்றோம்.

இடியாப்பம் இருந்தது. தமிழகத்தில் (நான் பார்த்ததுவரை) தட்டுக்கு இரண்டு (அல்லது மூன்று) என்று போட்டுக்கொடுப்பார்கள். ஆனால் இங்கு ஒரு பெரிய தட்டில் 40 துண்டுகளாவது இருக்குமாறு கொண்டுவந்து வைத்துவிடுகிறார்கள். ஆளுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம். பிறகு அவர்கள் குத்துமதிப்பாக எவ்வளவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஏதோ கணக்கு வைத்து பணம் வசூலிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழக இடியாப்பங்கள் வெளுத்து இருக்கும். யாழ் இடியாப்பம் (கொழும்பிலும்கூட) சற்றே சிவப்பு/பழுப்பு வண்ணத்தில் உள்ளன. எதனால் என்று நுணுகி ஆராயும் திறன் கொண்ட நாஞ்சில் நாடன் இல்லை நான்.

இடியாப்பத்துக்கு சொதி, சாம்பார் தொட்டுக்கொள்ள. காலை நேரம் வந்திருந்தோம் என்றால் தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னியும் கிடைத்திருக்கும்.

வயிறார உண்டோம். அங்கிருந்து தங்குமிடத்துக்குச் செல்ல ஒரு வேன் பிடிக்கச் சென்றோம்.

பொதுவாக தெருக்களின் இரு ஓரங்களில்தான் நம் ஊரில் ஆட்டோக்கள், வேன்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கே தெருவின் நடுவில் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றுக்கு இரு புறமும் போக்குவரத்து.

வேன் டிரைவரிடம் பேர் கேட்டேன். அவர் சிவதாசன் என்று சொன்னது எனக்கு சிலுவைராஜன் என்று கேட்டது! அல்லது இரண்டு பேர்களுமே இல்லாமல் அது வேறு ஏதோ பெயராகவும் இருக்கலாம்.

நாங்கள் தங்கச் சென்ற இடம் புதிதாக எழுந்துள்ள ஒரு கட்டடம். கடந்த ஓர் ஆண்டுக்குள் வந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். UNDP அலுவலர்கள், ஜீப்பில் செல்லும் என்.ஜி.ஓக்கள், இலங்கை முழுவதிலிருந்து யாழ் நகருக்கு முதன்முதலாக வந்து பார்த்துச் செல்லும் சிங்களவர்கள், எங்களைப் போன்ற ஒரு சில தமிழக ஆசாமிகள் ஆகியோர்கள் வந்து தங்கும் இடம். வசதியில் குறைவு ஏதும் இல்லை. தண்ணீர்தான் கொஞ்சம் உப்பு. சோப்பு போட்டால் நுரை வரவில்லை.

அன்று மதியம், கல்விக் கண்காட்சி நடக்க உள்ள மத்தியக் கல்லூரிக்குச் சென்று புத்தக அடுக்குதல் காரியங்களைக் கவனிக்கவேண்டியிருந்தது. அதற்குமுன் மதிய உணவு. காலை உணவின்போது நேர்ந்த கதியைக் கண்டு பயந்திருந்த ஹரன்பிரசன்னா, மலாயன் கஃபே என்ற உணவகத்தின் பெயரை எப்படியோ கேட்டு வைத்திருந்தார். நேராக அங்கே சென்றோம். எனக்கோ, சத்யாவுக்கோ வெளி நாடுகளில் உணவு ஒரு பிரச்னையாக இருக்காது. ஏதோ கிடைக்கும் சைவ உணவை – அது பாஸ்தாவோ, சாண்ட்விச்சோ – சாப்பிட்டுவிடுவோம். ஆனால் எங்களுடன் வந்தவர்கள் அப்படியில்லை. ஒரு தமிழனின் அடையாளமாக சாதத்தை நட்ட நடுவில் வைத்து அதன்மீது சாம்பார், குழம்பு வகையறாக்களைச் செலுத்தி, கறி, கூட்டு என்று பிசைந்து சாப்பிட்டால்தான் உண்டு. எனவே அவர்களை அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிட்டு, நானும் சத்யாவும் லைட்டாகச் சாப்பிட்டுமுடித்தோம். அதுவும் எனக்கு என் கவலை. காலை விமானத்தில் ஏறும்போது கையில் உள்ள பெட்டிகளோடி ஆட்களையும் தனியாக ஏறி நின்று எடை பார்த்தார்கள். ஹரன்பிரசன்னா அதற்கெல்லாம் கவலைப்படுகிறாரா என்று தெரியாது. ஆனால் நான் ஒரு பத்து கிலோ அதிகமாக இருப்பதாக எடைகாட்டி தெரிவித்தது.

மத்தியக் கல்லூரி வாயிலிலிருந்து பார்த்தால் யாழ் நூலகம் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. கல்லூரிக்கும் நூலகத்துக்கும் இடையில் ஒரு கிரிக்கெட் மைதானம். சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். யாழ் நூலகத்தினைப் பார்க்கும்போது மனத்தைப் பிசைந்தது. நூலகத்தை எரிக்க எப்படித்தான் சிலருக்கு மனம் வரும்? எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நூலகம் நான்கு முறை எரிக்கப்பட்டுள்ளது. யாழ் நூலகத்துக்கோ வேறு எந்த நூலகத்துக்கோ இனியும் அந்தக் கதி நடக்கக்கூடாது. அடுத்த நாள் போய் நூலகத்தைச் சுற்றிப்பார்க்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.

-தொடரும்

  • தொடங்கியவர்

பகுதி நான்கு

யாழ் நூலகம் இன்று பார்ப்பதற்கு அமைதியாக உள்ளது. வாசலில் செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் உள்ளே நுழையவேண்டும். சுற்றுலா வந்திருக்கும் பார்வையாளர்கள் மாலை 5 மணிக்குத்தான் உள்ளே நுழையவேண்டும் என்று வாசலில் தட்டி வைத்துள்ளார்கள். காவல் ஒன்றும் பிரமாதமாக இல்லை. நானும் சத்யாவும் சுற்றுலாக்காரர்கள்தான் என்றாலும் நேராக உள்ளே சென்றோம். செருப்புகள் கழற்றிவைக்கப்படும் இடத்தில் வைத்துவிட்டு தரைத்தளத்துக்குள் நுழைந்தோம்.

இடது பக்கம் சஞ்சிகைகள். வலதுபக்கம் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடிய புத்தகங்கள். முதல் தளத்தில் ரெஃபரன்ஸ் புத்தகங்கள். கீழே தமிழ்ப் புத்தகங்களையும் ஆங்கிலப் புத்தகங்களையும் தனியாகப் பிரித்து துறைவாரியாக அழகாக அடுக்கி வைத்துள்ளார்கள். நிறைய கிழக்கு பதிப்பகப் புத்தகங்கள் இருந்தன. அங்கும் இங்குமாகப் புத்தகங்களை எடுத்து, எவ்வளவு பேர் எந்தப் புத்தகத்தை வாங்கிச் சென்றுள்ளனர் என்று பார்த்தேன். சுஜாதா, ரமணி சந்திரன் போன்ற கதைப் புத்தகங்கள்தான் அதிகமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கனமான இலக்கியப் புத்தகங்களோ, அ-புதினங்களோ அதிகம் கையாளப்பட்டிருக்கவில்லை.

மேலும் நாங்கள் நூலகத்தில் இருந்தபோது அங்கே அதிகமாக வாசகர்கள் தென்படவேயில்லை.

முதல் தளத்தில் ரெஃபரன்ஸ் புத்தகங்கள் அழகாக வைக்கப்பட்டிருந்தன. இங்கே சில ஆராய்ச்சி மாணவர்கள் (நான்கைந்து பேர்) உட்கார்ந்திருந்தனர். நானும் போய் ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் படிக்க ஆரம்பித்தேன் (ஹொய்சாலர்கள் கட்டடக்கலை – மூன்று தொகுதிகள்). நூலக அலுவலர் வந்து நான் படிக்கும் புத்தகத்தை ஒரு பேரேட்டில் பதியச் சொன்னார். அதன்படி செய்துவிட்டு தொடர்ந்து படிக்க ஆரம்பித்து, கடைசியில் படம் பார்ப்பதில் மட்டுமே முடிந்தது. அமைதி என்றால் நிஜமான அமைதி. சென்னை நூலகங்களில் படிப்பதைத் தவிர வேறு பல நிகழ்ச்சிகளும் அரங்கேறும். யாழ் நூலகத்தில் ஆட்களும் அதிகமில்லை; படிப்பதைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.

வெளியே வரும்போது அந்தப் படத்தைக் கவனித்தேன். முகப்பிலேயே உள்ளது. கண்ணாடி ஃபிரேமுக்குள் அடித்து நொறுக்கப்பட்டு எரிக்கப்பட்ட நூலகக் கட்டடம் பற்றிய தகவலும் (ஏன், யாரால் எரிக்கப்பட்டது போன்ற விவரங்கள் இல்லை) எப்படி மீண்டும் மறுநிர்மாணம் செய்யப்பட்டது என்ற தகவலும் இருந்தது.

யார் எரித்தார்கள் அந்த நூலகத்தை?

மே 1981 இறுதியில் தேர்தல் தொடர்பான வன்முறையில் சில காவலர்கள் தாக்கப்பட்டு இறந்துள்ளனர். தொடர்ந்து, யூ.என்.பி கட்சியின் அமைச்சர்களான சிரில் மாத்தியூ, காமினி திஸ்ஸநாயகே ஆகியோர் தூண்டுதலில் காவலர்களும் குண்டர்களும் சேர்ந்து நடத்திய வெறித் தாக்குதலில் ஜூன் 1, 1981 அன்று நூலகம் எரிக்கப்பட்டுள்ளது. பல பழைமையான சுவடிகள், எண்ணற்ற நூல்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.

பின்னர் ஓரளவுக்குக் கட்டப்பட்ட நிலையில், புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தபோது ராணுவம் நடத்திய குண்டுவீச்சுகள், தாக்குதல்கள் ஆகியவற்றில் கட்டடம் மேலும் அழிந்துள்ளது. 1998-ல்தான் மீண்டும் யாழ் நூலகம் இப்போது உள்ளதுபோல் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. நாங்கள் நூலகத்திலிருந்து வெளியே வரும்போது, ஒரு பஸ் வந்து நின்றது. அதிலிருந்து நாற்பது, ஐம்பது பேர்கள் கீழே இறங்கி, வரிசையாக உள்ளே செல்ல ஆரம்பித்தனர். பார்வையாளர்கள் நேரம். வந்தவர்கள் அனைவரும் சிங்களர்கள் என்று நினைக்கிறேன். போர் முடிந்தபின், பல சிங்களர்கள் முதல்முறையாக யாழ்ப்பாணம் வந்து சுற்றிச் செல்கிறார்கள். யாழ் நூலகத்தைப் பார்க்கும்போது அவர்கள் மனத்தில் என்ன தோன்றுகிறது என்று கேட்க நினைத்தேன். கேட்கவில்லை.

இலங்கையில் தமிழர்களுக்கு நிலவும் அசாதாரண சூழ்நிலை சுற்றிப் பார்த்தாலே விளங்கும். யாழ் நூலகம் மீண்டும் வந்துவிட்டது – என்ன, புத்தகங்களுக்குத்தான் சிறிது குறைச்சல். ஆனால் அருகில் பல சிலைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. அதில் ஒன்று ஆல்பிரட் துரையப்பாவின் சிலை. அதே நேரம், நூலகத்தின் பின்புறத்தில் ஆல்ஃபிரட் துரையப்பா பெயரில் விளையாட்டு மைதானம் ஒன்று கம்பீரமாக நிற்கிறது. நூலகத்துக்கு அருகில் சிறு பூந்தோட்டம் ஒன்றின் இடையில் தந்தை செல்வாவின் கம்பீரமான சிலை, எந்தவிதமான தாக்குதலுக்கும் உள்ளாகாமல் பத்திரமாக நிற்கிறது.

நூலகத்தின் பின்புற வாயில் இருக்கும் தெருவில் நான்கடி தள்ளி நடந்தால் இன்று இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒன்று இருக்கும் கட்டடம் தெரிகிறது. அங்குதான் 1974-ல் நான்காவது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அருகில் இருந்த துரையப்பா விளையாட்டரங்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்ட மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் முடிவெடுத்தபோது, அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் மாநாடு நடந்த இடத்திலேயே பொதுக்கூட்டம் நடத்தப்பட, அங்கு காவலர்களின் ஒத்தாசையுடன் கலவரம் நிகழ்த்தப்பட்டு, துப்பாக்கிச் சூடு நிகழ, 9 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கான நினைவுச் சின்னம் அந்த இடத்துக்கு எதிரில் நிறுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்த நடந்த போர்களின்போது அந்த நினைவுச் சின்னம் அழிக்கப்படும். பிறகு மீண்டும் நிறுத்திவைக்கப்படும். இறுதியில் பிரேமதாச காலத்தில் அரசே அந்த நினைவுச் சின்னத்தை மீண்டும் எழுப்பிக்கொடுத்ததாம். அந்த இடத்தில் உடைந்து கிடக்கும் காங்கிரீட் கம்பங்களுக்கு இடையே, புதிய நினைவுச் சின்னம் அனைத்து அழிவுகளையும் சண்டைகளையும் நினைவுபடுத்தியபடி உள்ளது.

அதன் பின்னே ஒரு ஒற்றைப் பனைமரம் தனித்து நிற்கிறது.

(தொடரும்)

  • தொடங்கியவர்

பகுதி ஐந்து

யாழ் மத்தியக் கல்லூரி வாசலில் ஒரு புத்தகக் கடை உள்ளது. பிரசன்னாவும் மணிகண்டனும் போய்ப் பார்த்துவிட்டு வந்தனர். உடனேயே நான் அங்கு சென்று பார்த்தேன். அரசின் சார்பாக பல முக்கியமான பாட நூல்களுக்கான மொழிபெயர்ப்பு உரிமங்களை வாங்கி, அவற்றை சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். ஏ.எல்.பஷாமின் The Wonder that was India புத்தகம் ‘வியத்தகு இந்தியா’ என்ற பெயரில் மொழிபெயர்த்துக் கிடைத்தது. 495 இலங்கை ரூபாய். மேலும் சில புத்தகங்கள், மிகப் பழைய பதிப்புகள், 20 இலங்கை ரூபாய்க்கும் 10 இலங்கை ரூபாய்க்கும் கிடைத்தன. பால் சாமுவேல்சனின் பொருளாதாரம் அதில் ஒன்று. அந்தப் புத்தகம் இப்போதும் என் மேஜையில் உள்ளது. வாழ்நாளின் அதை நான் படிக்கப்போவதில்லை என்றாலும் வாங்கி வைத்துள்ளேன்.

புத்தகங்களைத் துழாவிக்கொண்டிருந்தபோதுதான் அந்த வயதானவர் பேச்சுக் கொடுத்தார். ‘இந்தியாதான் எங்களை ஏமாத்திருச்சு’ என்றார். ‘இந்திரா காந்தி இருந்திருந்தா எங்களை இந்த நிலையில் விட்டுவைத்திருப்பாரா?’ என்று கேட்டார். யாழ்ப்பாணத்தில் இந்திய, இலங்கை, ஈழத்தமிழர் உறவுகளை வெளிப்படையாகவே பேசுகிறார்கள். அக்கம் பக்கம் பார்த்து, பயந்து பேசவேண்டும் என்ற அவசியம் இருப்பதாகத் தோன்றவில்லை.

இந்திரா காந்திமீது ஈழத் தமிழர்களுக்கு நிஜமாகவே இந்த அளவுக்கு நம்பிக்கையா என்பது எனக்கு ஆச்சரியம்தான். பங்களாதேச விடுதலை தொடர்பாக இந்தியா ஈடுபட்டதற்குக் காரணம், அது முழுக்க முழுக்க அதன் பழைய எதிரி பாகிஸ்தான் தொடர்பானதே. அத்துடன் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து ஓரிரு மாதங்களில் மட்டும் வந்த அகதிகளின் எண்ணிக்கை பல லட்சங்கள். இலங்கைப் பிரச்னையில் பல ஆயிரம் பேர் இந்தியா வந்திருந்தாலும் இந்த அளவு எண்ணிக்கையில் இருக்கவில்லை.

தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ராஜிவ் காந்தியின் இறப்புக்காகத்தான் மன்மோகன் சிங், சோனியா காந்தி இருவரும் ஈழத்தமிழர்களைப் பழிவாங்கினர் என்று ஆணித்தரமாகச் சொன்னார் அவர். மறுப்பது கடினமே.

அதே தினத்தில் யேசுராஜாவைச் சந்தித்தேன். ஈழத்தமிழ் இலக்கிய விமரிசகர். ஈழ, தமிழக படைப்புகளைப் பற்றி நிறைய விமரிசனங்களை எழுதியுள்ளார். கறாரான இலக்கியப் பார்வை கொண்டவர். கடுமையான சூழலிலும் யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு ‘தெரிதல்’ என்ற இலக்கிய இதழைக் கொண்டுவந்தார். பத்மநாப ஐயரின் தூண்டுதலால், எனக்கு அந்த இதழ்களை உடனுக்குடன் அனுப்பிவைப்பார். இப்போதைய தமிழ்நாட்டு இலக்கியம், ஈழத்தமிழ் இலக்கியம் ஆகியவற்றுடன் ஈழத்தின் இன்றைய நிலைமை பற்றியும் பேச்சு சென்றது. ‘நான் இவ்வாறு சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். தமிழ்நாடு ஒரு குப்பை. எங்களுக்கு தமிழகத்திலிருந்து எதுவும் வேண்டாம். முடிந்தால் இங்கு சிங்களவர்களுடன் இயைந்து வாழ்வதையே விரும்புகிறோம்’ என்றார் அவர். தமிழ்நாட்டிலிருந்து தரமற்ற இலக்கியங்களும் சினிமாக் குப்பைகளும் இலங்கைத் தமிழர்களின் நுகர்ச்சிக்காகச் செல்வதை அவர் கடுமையாக எதிர்க்கிறார் என்பது புரிந்தது. நாங்கள் வெளியிட்டிருந்த சுஜாதா புத்தகங்களையும் கேலி செய்தார் அவர். நாங்கள் விரும்பியே சுஜாதா புத்தகங்களை வெளியிடுகிறோம் என்பதை அவரிடம் சொன்னேன்.

சிங்கள சினிமாக்கள் பற்றி பேச்சு திரும்பியது. சிங்களத்தில் ஆகச் சிறந்த பல படங்கள் வெளியானதைப் பற்றிப் பேசினார். அவர் சொன்ன சில பெயர்களில் பிரசன்ன விதானகே பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சில படங்களை விவரித்தார். எப்படி அவை சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன என்று விளக்கினார். தமிழில் படம் எடுக்கும் முயற்சிகள் உள்ளனவா என்று கேட்டேன். பெரும் முயற்சிகள் ஏதும் இல்லை; குறும்பட முயற்சிகள்தான் என்றார்.

அவரிடமும், ஒருவித கடுமையான தோல்வி மனப்பான்மை தென்பட்டது. இனி தமிழர்கள் நிலை மோசம்தான் என்பதாக அவர் நினைப்பதாகவே பட்டது.

அன்று காலையில்தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்திருந்தேன். அவர்தான் யாழ் கல்விக் கண்காட்சியைத் தொடங்கி வைத்திருந்தார். சாதாரண உடையில் இருந்தார். தேவானந்தா குத்துவிளக்கு ஏற்றி, இலங்கைக் கொடியை ஏற்றி, கொடிக்கு சல்யூட் அடித்து, தேசிய கீதம் பாடி, பின் விழா பற்றிய உரையை தமிழில் பேசினார். அவருடைய தாடி வைத்த முகம்தான் யாழ்ப்பாணத்தில் எங்கும் தட்டிகளில் காணப்பட்டது.

எங்கள் கடைக்கு வந்த தேவானந்தா, ‘கிழக்கு’ என்ற பெயர்க் காரணம் குறித்துக் கேட்டார். அதற்கும் கிழக்கிலங்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றேன். சென்னையில் தனக்கு சேஷாத்ரி என்ற பெயரில் ஒரு கம்யூனிஸ்டைத் தெரியும் என்றார். அப்படி யாரையும் எனக்குத் தெரியாது என்றேன். நிறையப் புத்தகங்களை வாங்கிக்கொண்டார். அரசியல் பேச சகவாசமும் போதாது; சாவகாசமும் இல்லை.

ராஜபக்‌ஷேயின் காரியம் ஆகிவிட்டதால், தேவானந்தா ஓரங்கட்டப்படுகிறார் என்று ஒருவர் சொன்னார். முன்னாள் விடுதலைப் புலியும், ராஜபக்‌ஷே மகனுடன் கூடப் படித்தவருமான ஓர் இளைஞனை தமிழர்கள் தலைவராக முன்னுக்குக் கொண்டுவர ராஜபக்‌ஷே முயற்சி செய்வதாகவும் கேள்விப்பட்டேன்.

டக்ளஸ் தேவானந்தா என்றவுடன் எனக்கு இரண்டு சம்பவங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. ஒன்று, சூளைமேடு துப்பாக்கிச் சூடு. இப்போது இந்தப் பகுதியை எழுதிக்கொண்டிருக்கும்போதும் தொலைக்காட்சியில் அதைப் பற்றித்தான் செய்தி வாசிக்கப்படுகிறது. தன்மீதுள்ள அந்த வழக்கை ரத்து செய்யுமாறு தேவானந்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அடுத்து, புஷ்பராஜா (‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ எழுதியவர்) கிழக்கு பதிப்பக அலுவலகத்தில் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னது.

அது 2005-ம் ஆண்டு. ராகவனும் நானும் புஷ்பராஜாவுடன் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் அவர் பிரான்ஸிலிருந்து சென்னை வந்துவிட்டு, குறுகிய காலத்துக்காக இலங்கை சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பியிருந்தார். இலங்கையில் தான் இருப்பது தெரிந்தால் யார் வேண்டுமானாலும் தன்னை ‘போட்டுத் தள்ளியிருக்கலாம்’ என்றார் புஷ்பராஜா. ‘உங்களை யார் இப்போது கொல்லப்போகிறார்கள்? புலிகளா?’ என்று நான் கேட்டேன். ‘ஏன், டக்ளஸ் தேவானந்தாவே என்னைக் கொலை செய்வாரே’ என்றார் புஷ்பராஜா.

அந்த நினைவு, டக்ளஸ் தேவானந்தா அருகில் நின்றபோது, தவிர்க்கமுடியாமல் வந்தது.

அடுத்த நாள் காலை பிரபாகரனின் தாயாரைப் பார்க்கப்போகிறேன், பிரபாகரன் வசித்த வீட்டைப் பார்க்கப்போகிறேன் என்று நான் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

(தொடரும்)

  • தொடங்கியவர்

பகுதி ஆறு

யாழ்ப்பாணம் நகரில் கல்விக் கண்காட்சி; அதற்குப் போகப்போகிறோம் என்பது மட்டும்தான் மனத்தில் இருந்ததே தவிர, வல்வெட்டித்துறை, வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியவை மனத்தில் ஒருபோதும் இல்லை.

ஞாயிறு காலை சுமார் 11.30 மணி இருக்கும். ஜன்னல் அருகில் ஏகாந்தமாகச் சாய்ந்து உட்கார்ந்தபடி காற்று வாங்கிக்கொண்டிருந்தபோது சிரித்த முகத்துடன் காந்தளகம் சச்சிதானந்தம் கண்காட்சி அரங்கில் நுழைந்தார். ‘உதயன் பத்திரிகையில் உங்கள் கட்டுரையைப் பார்த்தேன். இங்கே வந்தால் உங்களைப் பிடித்துவிடமுடியும் என்று வந்துவிட்டேன். எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டுக்கொண்டே கட்டியணைத்தார். சாதாரணமாகப் பேசிக்கொண்டே இருக்கும்போது, திடீரென, தான் அடுத்து வல்வெட்டித்துறை சென்று பார்வதி அம்மாளைப் பார்த்து ஒரு வார்த்தை பேசிவிட்டு, பின் மறவன்புலவு கிராமத்துக்குச் சென்று பார்க்கப்போவதாகச் சொன்னார்.

‘வல்வெட்டித்துறை… நானும் கூட வரலாமா?’

‘ஓ, நிச்சயமாக.’

உடனே சத்யாவைக் கேட்டேன். அவரும் வருவதாகச் சொல்ல, இருவரும் சச்சிதானந்தத்தின் பிக்-அப் டிரக்கில் ஏறிக்கொண்டோம். அது அவருடைய தொண்டு நிறுவனத்தின் சற்றே பழைய வண்டி. ஓட்டுனர் அருகில் இருவர் கொஞ்சம் சிரமப்பட்டே உட்காரலாம். ஆனால் இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று நானும் சத்யாவும் ஏறிக்கொண்டோம். அந்த வண்டியில் துப்பாக்கி படம் போடப்பட்டு, அதன் குறுக்கே சிவப்பால் கோடு அடித்திருந்தது. அப்படி என்றால் ராணுவம் இந்த வண்டியின்மீது தாக்குதல் நடத்தாது.

போகும் வழியில் இலங்கைப் பிரச்னை குறித்து சச்சிதானந்த்தத்துடன் பல விஷயங்களைக் கதைத்தோம். சச்சிதானந்தம், ராஜிவ் கொலை வழக்கின் நீண்ட குற்றப் பத்திரிகையின் இறுதியில் வரும் குற்றம் சாட்டப்பட்டோரில் ஒருவர். அவரது குற்றம் சம்பவத்துக்கு சில நாள்கள் முன், காசி ஆனந்தனுடன் சென்று ராஜிவ் காந்தியைச் சந்தித்தது. அப்போதுதான் புலிகளுடன் சமரசம் செய்துகொள்வது பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள்ளாக புலிகளின் திட்டம் (பொட்டு அம்மான்/சிவராசன் திட்டம்) முடிவாகிவிட்டது. முடிவான திட்டத்தை மாற்றவேண்டியதில்லை என்று முடிவெடுத்து, காரியத்தை முடித்துவிட்டனர்.

சச்சிதானந்தனின் கடவுச் சீட்டு இன்னமும் இந்தியக் காவல்துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அவர் இலங்கை செல்லவேண்டும் என்றால், ஒவ்வொருமுறையும் எழுதிக் கேட்டு, தனியாக அனுமதி வாங்கி, செல்லவேண்டும். அதற்கென வெகுநாள்கள் காத்திருக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து வல்வெட்டித்துறை செல்லும் வழியில் ஆங்காங்கு நடந்திருக்கும் அழிவைப் பார்க்கும்போது அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. பேசிக்கொண்டே இருப்போம். திடீரென பேச்சு நின்று உணர்ச்சிகள் மட்டுமே ஓங்கியிருக்கும்.

ஆங்காங்கே சாலைகள் போட்டுக்கொண்டிருந்தனர். வழி நெடுகிலும் குறிப்பிட்ட தூரம் தள்ளி ஒரு ராணுவ வீரர் கையில் துவக்கு ஏந்தியபடி நிற்பார்.

வல்வெட்டித்துறை போவதற்குமுன் திடீரென கடும் மழை பிடித்துக்கொண்டது. வண்டியின் முன்பக்கக் கண்ணாடியில் அடித்த மழையில் சாலையே தெரியவில்லை. வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பாதை பிரியும் இடத்தை நெருங்கும்போதுதான் மழை விட்டது. வலப்பக்கம் திரும்பினால் பருத்தித்துறை; இடப்பக்கம் திரும்பினால் வல்வெட்டித்துறை.

வல்வெட்டித்துறை என்பது தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து வெகு அருகில் உள்ள ஓரிடம். எட்டிப் பார்த்தால் நாகைக் கடல் தெரிந்துவிடும். 45 நிமிடங்களிலேயே நல்ல படகு ஓட்டுனரால் நாகைக் கடற்கரைப் பகுதிக்கு வந்துவிடலாமாம்.

1980-களில் அப்படி வந்த பல அகதிகளை நான் பார்த்திருக்கிறேன். சிலர் எங்கள் வீடுகளைச் சுற்றி வாடகை வீடுகளில் தங்கியிருந்தனர். பின் அவர்கள் எல்லாம் பிற நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

வழியில் சச்சிதானந்தன், ஆங்காங்கே இடங்களைக் காண்பித்து, இந்த இடத்தில்தான் கேப்டன் மில்லர் முதல் தற்கொலைப்படைத் தாக்குதலைச் செய்தார்; இங்குதான் இந்தத் தாக்குதல் நடந்தது, அந்தத் தாக்குதல் நடந்தது என்று விளக்கிக்கொண்டே வந்தார். வழியில் நிறுத்தி, பார்வதி அம்மாள் எங்கே என்று கேட்டோம். மருத்துவமனைக்கு வழி காட்டினார்கள் மக்கள்.

மருத்துவமனைக்குச் சற்று தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினோம். கடல், அதை ஒட்டிய சாலை. கடலுக்கு எதிர்ப்புறம் ‘பிரதேச வைத்தியசாலை, வல்வெட்டித்துறை’ என்று தமிழிலும் சிங்களத்திலும் எழுதியிருந்தது. காவலுக்கு என்று யாரும் இல்லை. ஒருவேளை காவல் எல்லாம் பலமாக இருக்கும் என்று நான் நினைத்ததுதான் தவறு. உள்ளே நுழைந்து அங்கு வந்த செவிலிப்பெண் ஒருவரிடம் விசாரித்தோம். மருத்துவர் தற்போது வேலையாக இருக்கிறார் என்றார். மருத்துவரைச் சந்திப்பதற்குமுன் பார்வதி அம்மாளைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று போனோம்.

சாதாரண வார்டுதான் அது. தனி அறை என்று ஏதுமில்லை. மருத்துவமனையும் வார்டும் மிகச் சுத்தமாக இருந்தன. சுமார் 12 படுக்கைகள் இருக்கும் அந்த வார்டில் என்று நினைக்கிறேன். பிள்ளைத்தாய்ச்சிப் பெண் ஒருவர் ஒரு படுக்கையில் இருந்தார். சில நோயாளிகள் தங்கள் படுக்கைகளில் உட்கார்ந்திருந்தனர். சிலர் படுத்திருந்தனர். பார்வதி அம்மாள் படுத்திருந்தார். தொளதொளவென்ற இரவு உடை ஒன்றை அணிந்திருந்தார். நெற்றியில் திருநீறும் பொட்டும்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலப்பக்கம் செயல் இழந்த நிலை. செவிலியர்தான் அவரைத் தூக்கி உட்காரவைக்கவேண்டும்; உணவு கொடுக்கவேண்டும். ஒரு கையில் சலைன் ஏற்றுவதற்கான சிரிஞ்ச் செருகியிருந்தது. முகம் எங்கோ பார்த்தவாறு இருந்தது. சச்சிதானந்தத்தைப் பார்த்தார்; ஆனால் எதுவும் பேசக்கூடிய நிலையில் இல்லை அவர். சச்சிதானந்தம் அவரிடம் சில வார்த்தைகளைச் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். 2003-04(?) காலத்தில் சென்னையில் இருந்த பார்வதி அம்மாளும் வேலுப்பிள்ளையும் இலங்கை செல்ல விரும்பியபோது அவர்களுக்குத் தேவையான பயண ஆவணங்களைத் தான் தயார்படுத்திக் கொடுத்ததையும் வேறு பல செய்திகளையும் பார்வதி அம்மாளின் காதில் அவர் சொன்னார். ஆனால் அவற்றில் எவை அந்த அம்மாளின் சிந்தையில் ஏறின என்று சொல்வது கடினம்.

இவரைத்தான், இந்த மெலிந்த உருவத்தைத்தான் வைத்து ஏகப்பட்ட அரசியல் நடைபெற்றது. அதிகாலையில் சென்னை விமான நிலையம் வந்திறங்கி ஏதோ மருத்துவமனைக்குச் செல்ல இருந்தவரை குண்டுக்கட்டாகத் தூக்கி மற்றொரு விமானம் ஏற்றி மலேசியா துரத்தியது இந்திய அரசு. இத்தனைக்கும் காரணம் அவரை வைத்து அரசியல் செய்ய முனைந்த வைகோ, நெடுமாறன் போன்றவர்கள். முத்துக்குமரனாவது அரசியல் செய்வதற்காகத்தான் உயிரை விட்டார். ஆனால் பார்வதி அம்மாள், எந்த அரசியலையும் முன்வைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. தள்ளாத வயதில், கணவரை இழந்து, தன் புரட்சிக்கார மகனுக்கு என்ன கதி என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் என்னவொரு கொடுமைக்கு ஆளாகியிருந்தார் அவர்!

ஆனால் மேலும் விவரங்கள் கேட்கக் கேட்கத்தான் மனம் வெதும்பியது.

அவரைப் பார்க்க என்று அவரது உறவினர்கள் யாருமே வருவதில்லை என்றனர் செவிலியர். மகள் ஒருவர் சென்னையில் இருக்கிறார். மற்றொரு மகளும் மகனும் கனடாவில் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் ஒருவருமா அவரைத் தன் வீட்டில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை?

இல்லை என்று ஆவேசத்துடன் சொன்னார் மருத்துவர் மயிலேறும் பெருமாள். அந்த ஆஸ்பத்திரியைக் கட்டிக் காக்கும் ஒரே டாக்டர். 70 வயதானவர். ஏற்கெனவே ஓய்வுபெற்று, இப்போது மருத்துவர்கள் பற்றாக்குறையால் மீண்டும் பணிக்கு வந்திருப்பவர். அரசியல் பேசத் தயங்கவே இல்லை. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். பார்வதி அம்மாளின் கனடா மகனைப் பற்றிக் கடுமையாகத் திட்டினார். வெறுமனே போனில் பேச விரும்புபவர் ஏன் இலங்கை வந்து தன் தாயை அழைத்துச் செல்லவில்லை என்று அவருக்குக் கோபம்.

இந்தியா பற்றித் தன் கடுமையான கண்டனங்களை முன்வைத்தார். பார்வதி அம்மாளைப் பார்த்துக்கொள்ள இந்தியாவின் மருத்துவ உதவி தேவையில்லை என்றார். வல்வெட்டித்துறையிலேயே தன்னால் அவரைப் பார்த்துக்கொள்ளமுடியும் என்றார். ஆனால் பார்வதி அம்மாள் அவ்வப்போது தன் பிள்ளைகளை நினைத்து அழுவதை முன்வைத்தே அவரது வருத்தம்.

அந்த மருத்துவமனை ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் பண உதவி பெற்றுள்ளது. அதைத்தவிர, புலம்பெயர் வல்வெட்டித்துறை வாசிகள் பணம் அனுப்புகின்றனர். மருத்துவர் தன் மேசையில் இருந்த 25 லட்ச ரூபாய்க்கான காசோலையைக் காட்டினார்.

இந்தியா ஏகப்பட்ட பணம் தருவதாகச் செய்திகள் வந்தனவே என்று சச்சிதானந்தனைக் கேட்டேன். ‘சுற்றிப் பாருங்கள், எல்லா நாடுகளின் உதவிகளையும் பார்ப்பீர்கள். ஆனால் இந்தியா உதவி அளித்து ஏதேனும் கட்டப்பட்டுள்ளதா என்று காண்பியுங்கள்’ என்றார். அவமானமாக இருந்தது.

‘என்னுடன் வாருங்கள், அழிவைக் காட்டுகிறேன்; ஆக்கவேலைகளையும் காட்டுகிறேன்’ என்றார். ஒரு பக்கம், சுவிட்சர்லாந்து ஆதரவுடன் புதிதாக மீண்டெழுந்து வரும் ஒரு கிராமம். மறுபக்கம் இடிந்து கிடக்கும் பிரபாகரனின் வீடு.

முதலில் அழிவைக் காணச் சென்றோம்.

(தொடரும்)

  • தொடங்கியவர்

பாகம் ஏழு

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைப் பார்த்துவிட்டு மருத்துவமனையிலிருந்து கிளம்பினோம். செல்லமுத்து குப்புசாமி எழுதியிருந்த பிரபாகரன் பற்றிய வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் பிரபாகரனின் குடும்பம் ஒரு சிவன் கோயிலைப் பராமரிப்பதாக ஒரு தகவல் வரும். அந்த சிவன் கோயிலைப் பார்க்கப் போகலாமா என்று சச்சிதானந்தனிடம் கேட்டேன். ‘அப்படியே பிரபாகரன் வசித்த வீட்டையும் பார்க்கலாம், வாருங்கள்’ என்றார் அவர்.

எனக்குக் கொஞ்சம் தயக்கம்தான். வழியில் நெடுகத் தென்படும் சிங்கள ராணுவ வீரர்களிடம் வழி விசாரித்தோம். அவர்கள் அதிகம் கவலைப்படாமல், வழி காட்டினார்கள். ஆனாலும் தாண்டிச் சென்றுவிட்டோம். மற்றொரு ராணுவ வீரரிடம் கேட்டதில், அவர் வந்த வழியே திரும்பிப் போகச் சொன்னார். ‘வழியில் ஆலமரம் ஒன்று வரும்; அங்கே எங்கள் வீரர்கள் இருப்பார்கள். அங்குதான் உள்ளது பிரபாகரனின் வீடு’ என்றார்.

நடு நடுவில் உள்ளூர்வாசிகள், ஒரு சின்னப் பையன், ஒரு வயதானவர் என்று விசாரித்துக்கொண்டோம். அவர்களுக்கு அந்த வீடு, ‘தலைவர் வீடு’தான்!

ஆலமரமும் ராணுவ வீரரும் கண்ணில் பட்டனர். அருகிலேயே எம்.ஜி.ஆரின் மார்பளவுச் சிலை ஒன்று இருந்தது. சிறு ஊரான வல்வெட்டித்துறையில் என் கண்ணிலேயே இரண்டு எம்.ஜி.ஆர் சிலைகள் தென்பட்டன. என்ன காரணம்?

அங்கே நிறுத்தி விசாரித்தபோது ராணுவ வீரர், குறுக்குத் தெருவில் உள்ள வீட்டைக் காட்டினார். அங்கே செல்ல முற்படுவதற்குள் சாதாரண உடையணிந்த மிலிட்டரிக் காரர் ஒருவர் அங்கு வந்தார். சீனியர் ராணுவ அதிகாரியாக இருக்கவேண்டும்; அல்லது உளவுத் துறை ஆசாமியாக இருக்கவேண்டும். அவர்தான் முகத்தில் கொஞ்சம் கடுகடுப்பைக் காட்டினார். இது என்னடா, வேண்டாத வேலை என்று நினைத்தாரோ என்னவோ.

வீடு உடைந்து நொறுங்கிக்கிடந்தது. சுற்றி கம்பி வேலி போடப்பட்டிருந்தது. அந்தப் பகுதியே ஆட்கள் யாரும் வசிக்காத ஒரு பிராந்தியமாகவே கண்ணில் பட்டது. வீட்டைச் சுற்றி பல படங்களை எடுத்துக்கொண்டோம். நாங்கள் அங்கே அதிக நேரம் இருப்பதைப் பார்த்த சாதா உடை ஆசாமி எங்களை அங்கிருந்து கிளம்புமாறு துரிதப்படுத்தினார். கடைசியாக சில வீடியோக்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.

பிரபாகரனின் வீடு என்று நாளை அங்கு ஒரு நினைவுச்சின்னம் எழும்புமா என்று தெரியாது. யாரும் இன்று கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துவிட்டுச் செல்லும் இடமாகவும் அது இல்லை. ஒருவேளை பயம்? ஒருவேளை வெறுப்பு?

வல்வெட்டித்துறையின் வரலாற்றிலிருந்தோ, தமிழ் ஈழப் போராட்டத்தின் வரலாற்றிலிருந்தோ, பிரபாகரனை மறுத்து, மறைத்துவிட முடியுமா?

மறவன்புலவில் கட்டுமானப்பணிகள்

அங்கிருந்து கிளம்பும்போது, இலங்கைத் தமிழர் புணர்வாழ்வுக்கென இந்தியா அளிப்பதாகச் சொன்ன பல கோடி ரூபாய்கள் பற்றிப் பேச்சு வந்தது. நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த அதே நேரம்தான் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அங்கு வந்திருந்தார். பத்திரிகையாளர்கள் அவரைப் பிய்த்து எடுத்துவிட்டனர். அவர்களது கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லத் தெரியாமல் நிருபமா தடுமாறியதாகச் செய்திகள் வெளியாகின.

‘இந்தியர்கள் கொடுக்கும் பணம் எங்கே போகிறது என்று தெரியாது; ஆனால் உண்மையான மறுகட்டமைப்பு எங்கே நடக்கிறது என்று காட்டுகிறேன். வா’ என்று அழைத்துச் சென்றார் சச்சிதானந்தன்.

அவரது கிராமமான மறவன்புலவு என்ற இடத்துக்குச் சென்றோம். கண்டி-யாழ்ப்பாணம் நன்கு பேவப்பட்ட சாலையிலிருந்து திடீரென ஒரு குறுக்குச் சாலையில் திரும்பவேண்டும். பின் சரளைக் கற்கள், பின் படுமோசமான குறுகிய சாலை என்று பயணிக்கவேண்டும். இறுதியில் வருகிறது இந்த இடம். 80-100 வீடுகள் இருந்தால் அதிகம். ஒவ்வொரு வீடும் அழிந்து பேய்க் கிராமமாக இருந்த இடம்.

அங்குள்ள ஒவ்வொரு வீட்டையும் மீண்டும் கட்டித்தர வந்துள்ளது Swiss Agency for Development and Cooperation (SDC) என்ற அமைப்பு. உலகின் பல நாடுகளில் இது போன்ற பல வளர்ச்சிக்கான செயல்களைச் சத்தமின்றிச் செய்துவருகிறது இந்த அமைப்பு. ‘வீடு கட்டப் பணம்’ என்பதுதான் திட்டத்தின் பெயர். உடைந்து, அழிந்துபோன உங்கள் வீட்டை நீங்களே புதுப்பித்து, நீங்கள் விரும்பிய மாதிரியில் கட்டிக்கொள்ளலாம். நான்கு நிலைகளில் உங்களுக்குப் பணம் கொடுக்கும் இந்த அமைப்பு. ஒவ்வொரு கட்டத்தைத் தாண்டியதும், அதனை உறுதி செய்துகொண்டே அந்தக் கட்டத்தின் பணம் உங்களுக்குத் தரப்படும்.

மார்ட்டின் (ஏதோ கடைசிப் பெயர்) என்ற ஒரு சுவிட்சர்லாந்து ஆசாமி யாழ்ப்பாணத்தில் (அல்லது கொழும்பில்) உட்கார்ந்துகொண்டு இதை வழிநடத்துகிறார். மறவன்புலவு கிராமத்தில் உள்ள மக்களிடம் பேசினேன். மார்ட்டினைக் கடவுள் என்கிறார்கள். அவருக்குச் சிலை எழுப்ப ஆயத்தமாகியுள்ளனர்.

அங்கே பல வீடுகள் முழுதாகக் கட்டப்பட்டுவிட்டன. உடைந்துபோயிருந்த பள்ளிக்கூடம், கோவில் என அனைத்தையும் சீர்செய்து, செப்பனிட்டு, விரும்பியபடி கட்டிக்கொண்டுள்ளனர்.

சாலைகள் இல்லை. ஆனால் விரைவில் வந்துவிடும் என்றார்கள். மின்சார இணைப்புகூட எல்லா இடங்களுக்கும் செல்கிறது. பக்கத்தில் வயல்கள் உழப்படுகின்றன.

இந்தியா என்னதான் செய்கிறது?

இங்கே நம்மிடம் பெரிதாகப் பேசுகிறார்கள், இத்தனை கோடி, அத்தனை கோடி கொடுக்கிறோம் என்று. அத்தனை பணமும் எங்கே செலவழிக்கப்படுகிறது? மாதா மாதம் தாங்கள் செலவு செய்யும் பணம் எப்படிச் செலவழிக்கப்பட்டது, அதற்கான outcome என்ன என்பதை நம்மிடம் சொல்ல முடியாதா இந்திய அரசால்? சுவிட்சர்லாந்து அரசு மறவன்புலவில் என்ன செய்கிறது என்று தெரிந்துகொள்ளவேண்டுமானால் நீங்கள் போகவேண்டியது இந்த இணையத்தளம்தான். எல்லாத் தகவலும் கிடைத்துவிடும். இந்த அளவுக்கு தகவல் தெரிவிக்க முடியாத நமக்கு எதற்கு வல்லரசுக் கனவும் செக்யூரிடி கவுன்சிலில் நிரந்தர இடமும்?

யாழ் / இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் இனி மறுமலர்ச்சிதானா? எங்கும் சாலைகள், எங்கும் மறு கட்டமைப்பு, எங்கும் சுபிட்சம்தானா?

யாழ் தமிழர்கள் தங்களை தோல்வியுற்றவர்களாகவே பார்க்கிறார்கள். ஒரு பக்கம் போர் முடிந்த ஆசுவாசம். ஓரளவுக்கு நிலைமை முன்னேறியுள்ளது என்ற ஆசுவாசம். மறுபக்கம், எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற வயிற்றில் பந்து உருள்வதுபோன்ற சொல்லமுடியாத வேதனை.

இதற்கு இணையாக வேறு சிலவற்றை என்னால் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்து, இந்தியாவிலிருந்து பிரிந்து காலிஸ்தான் என்ற தனி நாடு கேட்டபோது நடந்த தொடர் நிகழ்ச்சிகள். சீக்கியத் தீவிரவாதிகள் (பிந்த்ரன்வாலே, பப்பர் கால்சா…) நடத்திய அட்டூழியம், தங்கக் கோவில் மீதான ராணுவத் தாக்குதல், சில மாதங்கள் கழித்து இந்திரா காந்தி கொல்லப்பட்டது, தில்லியிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் சீக்கியர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை, தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு சீக்கியத் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டது, விளைவாக பல அப்பாவி சீக்கியர்கள் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டது… இத்தனை நடந்தபிறகும், திடீரென எப்படி எந்தப் பகுதி மீண்டும் மைய நீரோட்டத்தில் இணைந்தது? எப்படி ஒரு தலைமுறை தாண்டி, இன்று சீக்கியத் தீவிரவாதம் என்று ஒன்று இருந்ததா என்ற கேள்விகூட வெளியே வராத அளவுக்கு இயல்பு வாழ்க்கைக்கு ஒரு மாநிலத்தால், ஒரு சமூகத்தால் திரும்ப முடிந்தது?

இலங்கையின் தமிழ் மக்களால் சீக்கியப் பாதையைப் பின்பற்ற முடியுமா? இலங்கையின் சிங்களவர்கள் எந்த அளவுக்குப் பெருந்தன்மையாக இதை அனுமதிபார்கள்? இலங்கையின் அரசியல்வாதிகள் எப்படி நடந்துகொள்ளப்போகிறார்கள்?

இன்று இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் இருப்பதைப்போல, நாளை இலங்கையின் பிரதமராக ஒரு தமிழர் இருப்பது சாத்தியம்தானா?

இலங்கை மக்களின் வெற்றி அதில்தான் தெரியப்போகிறது.

(முற்றும்)

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.