Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்கா அமைச்சர் ரம்புக்செலவின் கருத்து கண்டனத்திற்குரிது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nov 8, 2010 / பகுதி: முக்கியச் செய்தி /

சிறீலங்கா அமைச்சர் ரம்புக்செலவின் கருத்து கண்டனத்திற்குரிது: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழர் தாயகம் என்ற ஒன்று கிடையாது என்ற சாரப்பட கடந்த வாரம் சிறீலங்கா அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை வருமாறு:

07-11-2010

தமிழ் இன அழிப்பை நியாயப்படுத்தும் வகையில் அமைச்சர் கெகலிய இறம்புக்வெல கூறிய கருத்துத் தொடர்பாக தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன விகிதாசாரத்தினை மாற்றியமைத்து தமிழ்த் தேசத்தை திட்டமிட்டு அழிக்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அரச ஆதரவுடனான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நியாயப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெகலிய ரம்புக்வெல அவர்கள் கடந்த வியாழக்கிழமை (4-11-2010) அன்று தகவல்த் திணைக்கள கேட்போர் கூடத்தில் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மகாநாட்டில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் “கிழக்கில் இனவிகிதாசாரத்தினை மாற்றும் வகையிலான அரச ஆதரவுடனான குடியேற்றங்கள் ஆபத்தானவை” என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் கெகலிய ரம்புக்வெல அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர்

‘‘…. கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கு காணி இருக்கின்றதோ அங்குதான் காணி வழங்க முடியும்.

ஒரு பிரதேசத்தை ஒரு இனம் சொந்தம் கொண்டாட முடியாது. அதே போல ஒரு பிரதேசத்தை ஒரு இனத்துக்கு வழங்கி விடவும் முடியாது.

நாடு இப்போது விடுவிக்கப்பட்டுள்ளது. எவரும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம்.

மேல்க் கொத்மலை நீர்த்தேக்கம் அமைக்கப்படும்போது இன விகிதாசாரம் மாற்றியமைக்கப்பட்டுவிடும் என்ற பிரச்சினை எழுந்தது பெருந்தோட்ட மக்களின் இனவிகிதாசாரம் குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மின் திட்டத்தை செயற்படுத்தும் போது இன விகிதாசாரம் பற்றி சிந்திக்க முடியாது. இதே அடிப்படையில் கிழக்கில் டி.எஸ்.சேனாநாயக்க நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்து மக்களைக் குடியேற்றினார். எவரும் எங்கும் வழலாம் இதுவே அரசின் கொள்கை….’’

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதாக 05-11-2010 திகதிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அமைச்சரின் இக் கூற்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

தமிழ்த் தேசிய இனம் வரலாற்றுக் காலத்திலிருந்து இலங்கைத்தீவில் தனக்கெனத் தனியானதோர்; தாயகத்தையும் அதில் இறைமையையும் ஆட்சி உரிமையையும் தன்வசம் கொண்டிருந்தது. இந்நிலையில் 1505 இல் போர்த்துக்கேயராலும், 1658 இல் ஒல்லாந்தராலும், 1796 இல் ஆங்கிலேயராலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ்த் தேசம் தனது இறைமையையும் ஆட்சியதிகாரத்தினையும் பிரயோகிக்க முடியாதவாறு நசுக்கப்பட்டது.

எனினும் இலங்கைத்தீவில் வடகிழக்கு பிராந்தியங்களில் காணப்பட்ட தமிழ் இராச்சியங்களையும், தெற்கில் காணப்பட்ட சிங்கள இராச்சியங்களையும் ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் 1505 – 1658 வரையான 153 ஆண்டுகளும், தொடர்ந்து ஒல்லாந்தர் 1658 – 1796 வரையான 138 வருடங்களும், பின்னர் ஆங்கிலேயர் 1796 – 1833 வரையான 37 ஆண்டுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தாமல் தனித்தனியாகவே ஆட்சி செய்தனர்.

எனினும் 1833 இல் ஆங்கிலேயர்களால் முழு இலங்கைத்தீவும் ஒரே அரசியல் நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டு தமிழ்த் தேசத்தின் அங்கீகாரமின்றி ஆங்கிலேய மேலாதிக்கத்தால் தமிழர் தாயகம் சிங்கள தேசத்;துடன் ஒன்றிணைக்கப்பட்டது.

இவ்வாறு நிர்வாக வசதி கருதி தமிழ் இராச்சியத்தினையும் சிங்கள இராச்சியத்தினையும் ஒன்றுபடுத்திய ஆங்கிலேயர்கள் இலங்கைத்தீவை விட்டு வெளியேறும் போது தமிழ்த் தேசத்தின் இறைமையை தமிழர்கள் பிரயோகிக்க முடியாதவாறு சிங்களவர்களிடம் ஆட்சியதிகாரத்தை கையளித்துச் சென்றுவிட்டனர். இதனால் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியில் இருந்து சிங்கள தேசத்தின் தயவில் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவிதி தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

தமிழ்த் தேசம் தனது இறைமையை பிரயோகிக்க முடியாதவாறு சிங்கள தேசத்தின் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசம் தனது இறைமையை பிரயோகிப்பதற்கான அங்கீகாரம் அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்தது. அவ்வாறு இறைமையை பிரயோகிக்க முடியாதவாறு அடக்கி வைத்தால் மட்டும் போதாது, நடைமுறையில் தமிழ்த் தேசம் என்பது வடகிழக்கில் தனக்கென ஓர் தாயகத்தைக் கொண்டு, தனித்துவமான மொழி பண்பாட்டு அடையாளங்களோடு இருக்கக் கூடாதெனக் கருதியது. அவ்வாறு இருப்பது ஒரு இனம்(சிங்களவர்), ஒரு மொழி(சிங்களம்), ஒரு மதம்(பௌத்தம்), ஒரு அரசு(சிங்கள) இவற்றை மட்டும் உள்ளடக்கிய சிங்கள தேசம் என்ற பௌத்த சிங்கள கோட்பாட்டின் இருப்பிற்கான அச்சுறுத்தலாகவே நோக்கியது.

இந்த அச்சம் காரணமாக ஆங்கிலேயர்களது தயவினால் கைப்பற்றிக் கொண்ட ஆட்சியதிகாரத்தினைப் பயன்படுத்தி தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிக்கும் திட்டங்களை திட்டமிட்டு அரங்கேற்றத் தொடங்கியது.

சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், நிலப்பறிப்பு, குடியுரிமைப் பறிப்பு, வாக்குரிமைப் பறிப்பு, மொழியுரிமைப் பறிப்பு, மற்றும் கல்வி, தொழில், பண்பாடு போன்றவற்றில் ஏற்படுத்தப்பட்ட இனரீதியான பாரபட்ச நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பற்ற தமிழ் மக்கள் மீது 1956, 1958 ம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட அரச வன்முறைகள் ஏவிவிடப்பட்டன.

இவ்வாறான வழிகளில் தமிழ் இனத்தின் தனித்துவத்திற்கும் வாழ்விற்கும் தமிழ்த் தேசத்தின் இருப்பிற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த அழிப்பை தடுப்பதற்காக 1957 ஆம் ஆண்டில் இருந்து காலத்திற்குக் காலம் தமிழ்த் தலைவர்கள் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுடன் செய்து கொண்ட அனைத்து அரசியல் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டதுடன், அகிம்சை வழிப் போராட்டங்களும் சிங்கள அரசுகளினால் ஆயுத முனையில் அடக்கப்பட்டன.

1972 இல் நிறைவேற்றப்பட்ட ஒற்றையாட்சி முறையிலான குடியரசு அரசியல் சாசனம் மூலம் தமிழ் இனத்தின் உரிமைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழ் இனம் தனது இருப்பை பாதுகாப்பதற்காக 1976-மே-14 ஆம் நாள், தமிழரின் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய இனத்திற்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முழுமையான இறைமை கொண்ட சுதந்திர தமிழீழ அரசை நிறுவுவதென தீர்மானித்தன.

அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் 1977 ஆம் ஆண்டு ஆடி மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்லில்; சுதந்திர தமிழீழத்திற்கான மக்களாணை வழங்கப்பட்டது. தமிழ் இனத்தின் வாழ்வையும் தனித்துவத்தையும் பாதுகாக்கவும், அதன் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் ஆயுதப் போராட்டமே ஒரே வழி என்ற தவிர்க்க முடியாத நிலைக்கு தமிழ் தேசிய இனம் தள்ளப்பட்டு ஆயுதப் போராட்டம் விரிவடைந்தது.

ஆயுதப் போராட்ட பலத்தின் விளைவாக தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாமல் அழிப்பதற்கான திட்டமிட்ட சிங்கள குடியேற்ற நடவடிக்கைகள் கடந்த 35 ஆண்டுகளாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் அளப்பரிய உயிர்த்தியாகங்கள் ஊடாக 2002 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாக்கப்பட்டது.

ஆனாலும் 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுத் தலைமையானது சமாதானக் கதவுகளை முற்றாக மூடி யுத்தத்தை தீவிரப்படுத்தியது. அந்த யுத்தம் மூலம்; தமிழ்த் தேசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்த் தேசத்தின் இருப்பை அழிக்கும் வகையில் பல வேலைத்திட்டங்கள் அசுர வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசு மேற் கொள்ளும் இந்த இன அழிப்பு நடவடிக்கையை முற்று முழுதாக நியாயப்படுத்தும் வகையில் அமைச்சரின் கருத்து அமைந்துள்ளது.

‘‘இலங்கைத் தீவின் அனைத்துப் பிரதேசங்களும் அனைவருக்கும் சொந்தம்’’ என்று கூறுவதன் மூலம் அரசு பெருந்தன்மையாக நடந்து கொள்வதாகவே வெளியில் இருந்து மேலெழுந்தவாரியாக அவதானிப்பவர்களுக்குத் தென்படும்.

இலங்கை என்ற ஒரு நாட்டிற்குள் இரண்டு தேசங்கள் என்ற யதார்த்தம் ஏற்றுக் கொள்ளப்படும் போது தனித்துவமான இறைமை கொண்ட தமிழ்த் தேசத்தின் தமிழ் பேசும் மக்களும், சிங்கள தேசத்து மக்களும் சமனான அந்தஸ்த்துடையவர்களாகவே இருப்பர். இலங்கை என்ற நாட்டிற்குள் தனித்துவமான இறைமை கொண்ட தமிழ்த் தேசத்தில் அதிக பெரும்பான்மையாக தமிழ் மக்கள் காணப்படுகின்றனர்.

ஆனால் தமிழ்த் தேசத்தின் இறைமையை மறுத்து சிங்கள தேசத்தின் இறைமையை மட்டும் கருத்திற் கொண்டபடி இலங்கைத்தீவிலுள்ள, எண்ணிக்கையில் அதிகமான சிங்கள மக்களோடு தமிழ் மக்களை ஒன்றுகலக்கும் போது மொத்த சனத் தொகையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக ஆக்கப்பட தமிழ் மக்கள் தமது தனித்துவமான தேசம் என்ற தகுதியை இழந்து சிறுபான்மையினராகவும் ஆக்கப்படுகின்றனர்.

அத்துடன் தமிழ்த் தேசத்தில் மேற்கொள்ளப்படும் அரச ஆதரவுடனான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக தமிழ்த் தேசத்திற்குள்ளளேயே தமிழ் மக்கள் சிறுபான்மையினராக மாற்றப்படும் பேராபத்தும் உண்டு.

இவ்வாறான சூழலில் ஐனநாயக நடைமுறைகளின் படி பெரும்பான்மை விரும்பும் விடயமே தீர்மானமாக நிறைவேற முடியும். அவ்வாறான சூழ் நிலையில் தமிழ் மக்கள் தமக்கே உரித்தான தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற நிலைப்பாட்டை இழந்தால் அவர்கள் சிறுபான்மையாக மட்டுமே இருக்க முடியும். அத்துடன் அவர்கள் விரும்பும் எந்தவொரு தீர்மானத்தையும் ஐனநாயக முறைப்படி நிறைவேற்றவே முடியாது.

அதேவேளை ‘‘இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களும் அனைவருக்கும் சொந்தம்’’ என்ற கோசத்துடன் சிங்கள மக்கள் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டுக் குடியேற்றப்படுவார்களாயின் அப்பகுதியில் பூர்வீகமாக வாழும் தமிழ்பேசும் மக்களை விட எண்ணிக்கையில் பெரும்பான்மையினராகிக் கொள்ள முடியும். அத்துடன் ஐனநாயக முறைப்படி தாம் விரும்பும் எந்தத் தீர்மானத்தினையும் நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும்.

இந்த யதார்த்தம் சிங்கள தேசத்திற்கு நன்கு புரிந்திருக்கின்றமையினாலேயே 1940களில் இருந்து ‘‘காணி எங்கு இருக்கின்றதோ அங்கு தான் காணிகளை வழங்க முடியும்’’ என்று கோசமிட்டவாறு தீவிரமான சிங்கள மயப்படுத்தலை வறண்ட பிரதேசக் குடியேற்றங்கள் என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளத் தொடங்கியது.

வறண்ட பிரதேசங்கள் என்பது தமிழர் தாயகப் பிரதேசங்கள் மட்டுமல்ல. மாறாக தென்மாகாணம், வடமத்திய மாகாணம் என்பனவும் கூட வறண்ட பிரதேசங்களேயாகும். இங்கும் ஏராளமான காணிகள் உள்ளன. இங்கும் பல குடியேற்றத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. வடமத்திய மாகாணத்தில் பராக்கிரம சமுத்திரம், மின்னேரியாக் குளம், கிரியத்தல குளம், என்பவற்றை மையமாகக் கொண்டு (1940 களில்) குடியேற்றத் திட்டங்களையும், தென் மாகாணத்தில் 1965 களில் உடவளவைக் குடியேற்றத் திட்டத்தையும், 1980 களில் துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான குடியேற்றத் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தியது.

இவ்வாறு சிங்கள தேசத்தில் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு குடியேற்றத் திட்டத்திலும் தமிழ்த் தேசத்திலிருந்து மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு குடியமர்த்தப்படவில்லை. இதன் மூலம் அரசாங்கம் சிங்கள தேசத்தின் இன விகிதாசாரம் மாற்றமடையாமல் பார்த்துக் கொண்டது.

ஆனால் அதே காலப் பகுதியில் தமிழ்த் தேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்லோயா, அல்லை, கந்தளாய், போன்ற அனைத்துக் குடியேற்றத்திட்டங்களிலும் சிங்கள தேசத்திலிருந்து மக்களைக் கொண்டுவந்து குடியமர்த்தி தமிழ்த் தேசத்தின் இன விகிதாசாரத்தை குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் இன விகிதாசாரத்தைப் பெரிதும் மாற்றியமைத்தது. இது கடந்த காலங்களில் நடந்தது. இன்று வடமாகாணத்தின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

குடியேற்றங்கள் என்பது ஒரு வழிப் பாதையல்ல. சிங்கள தேசத்து மக்கள் அரச ஆதரவுடன் தமிழ்த் தேசத்தில் குடியேற்றப்படுவார்கள் ஆனால் தமிழ்த் தேசத்து மக்கள் சிங்கள தேசத்தில் குடியேற்றப்பட மாட்டார்கள் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் தமிழ்த் தேசத்தின் மக்களை அவர்களின் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றி மீண்டும் குடியேற விடாமல் அவர்களை அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் முடக்கி வைத்துக் கொண்டு சிங்கள தேசத்து மக்கள் தமிழ்த் தேசத்தில் எங்கும் சென்று குடியேறலாம் என்று அவர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுவதன் நோக்கம் இன விகிதாசாரத்தை மாற்றியமைப்பதேயாகும்.

வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழந்து வந்துள்ள இலங்கைத் தீவின் வடகிழக்கு பிராந்தியம் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய தாயகப் பிரதேசமாகும். அது அவர்களின் பிறப்புரிமை. இதனை மறுக்க சிங்கள அரசுக்கு எந்த உரிமையோ, அதிகாரமோ இல்லை. தமிழ்த் தேசத்தில் ஏனைய இனத்தவர்கள் குடியேற்றப்படலாமா? இல்லையா? என்பதனை தீர்மானிக்கும் உரிமை தமிழ்த் தேசத்திற்கு மட்டுமே உண்டு. இது தமிழ்த் தேசத்திற்குள்ள தனித்துவமான இறைமையின் வழி வந்த அதிகாரமாகும்.

தமிழ்த் தேசத்தின் இருப்பை அழிக்க சிங்கள தேசம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐனநாயக ரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்து உறுதியுடன் மேற்கொள்ளும்.

இனப் பிரச்சினைக்கான தீர்வென்னும்போது, தமிழ்த் தேசத்திற்கு தனித்துவமான இறைமை உண்டு என்ற யதார்த்தம் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நிலையில் தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் சம அந்தஸ்த்துடையவர்கள் என்ற நிலையில் இருந்து பேச்சுகளில் ஈடுபட்டு இறைமையுள்ள இரண்டு தேசங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு நாட்டுக்குள் வாழ்வது என்பது பற்றிய இறுதித் தீர்மானத்திற்கு வரவேண்டும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.