Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் பாதுகாப்பு முனெச்சரிக்கை மையம்

Featured Replies

மனதுக்கு இதமாக இரவு நேரங்களில் மொட்டை மாடியில் விண்மீன்களும், நிலாச்சோறும் ரசித்திருப்பீர்கள். பகலில் 'நீலவான ஓடையிலோ' அல்லது 'வானம் எனக்கு போதிமரமோ' முணுமுணுத்துக் கொண்டு மேகங்களை வெறித்திருப்பீர்கள். இது போன்ற சுகமான விஷயங்களை மறந்து 24 மணி நேரமும் ஆபத்தை எதிர்பார்த்து ஒரு கூட்டம் கொட்டாவி விடக் கூட மறந்து வானத்தைப் பார்த்து கொண்டிருக்கிறது, ஒவ்வொரு நாட்டிலும். அவர்கள் யார்?, பயன்படுத்தும் தொழிநுட்பம் என்ன? அதில் உள்ள சவால்கள் குறித்து ஒரு பார்வை.

வான் பாதுகாப்பு என்பது ரேடார் தொழில்நுட்பம் அறிமுகமாகும் வரை வாடகை மிதிவண்டியில் ஊர்சுற்றுவதைப் போல போர் விமானங்களில் பறந்து திரிவது மூலமாகவே நடைபெற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு விமானத்தாக்குதல்கள் தந்த அனுபவத்தினாலும், தனது ஏவுகணைத் தொழில்நுட்பங்களால் தூக்கத்தைக் கெடுத்த ஜெர்மனியாலும் ரேடார் தொழில்நுட்பம் துரிதமாக மேம்படுத்தப்பட்டது. வான் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்படும் ரேடார்கள் தேடுவது அதிவேகமாக பயணிக்கும் ஆபத்தான ஏவுகணைகளை. ஏவுகணைகள் என்பது ராக்கெட் தொழிநுட்பத்தின் மூலம் வெடிகுண்டுகளை குறிப்பட்ட இடத்தை நோக்கி ஏவி விடுவது. செயற்கைக்கோள் ஏவப்படும் ராக்கெட்டுகளுக்கும் இதற்கும் மிகச்சில வித்தியாசங்கள் மட்டுமே. முன்னது புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்லும் (escape velocity), பின்னது செல்லாது. அந்த வெடிகுண்டுகள் என்பது பச்சைச் சணலில் சுற்றிய மான் மார்க் பட்டாசுகள் முதல் ஆயிரம் கிலோ உள்ள நிஜ அணுகுண்டாகவும் இருக்கலாம். ஏவுகணைகள் தாங்கிச் செல்லும் எடை, பயணிக்கும் தூரம், வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் பலவகைப் படும். அவற்றுள் மிகவும் சக்தி வாய்ந்தது தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM - Inter continental Ballistic Missile).

இந்த வகை ஏவுகணைகள் தொடுவானப் பகுதியிலிருந்து (horizon) மேலுழும்பிய பிறகு தான் ரேடார் கண்களுக்குத் தட்டுப்படும். அதன் பிறகு நமக்குக் கொடுக்கப்படும் நேரம் 8 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே. அதற்குள் தாக்குதல் நடக்கும் நாட்டிற்குப் பதில் தாக்குதல் நடத்துவதும், அதனை முறியடிக்கும் எதிர்-ஏவுகணைகளை ஏவுவதும் அல்லது கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் சொல்லுவதும் நேயர் விருப்பம். மேற்கண்ட சமாச்சாரங்கள் நடக்கும் இடம் தான் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் (air defense early warning system). முன்னெச்சரிக்கை மையத்தில் 24 மணி நேரமும் ரேடார் வல்லுநர்கள், கட்டுப்பாடு அறை அதிகாரிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் வேலையில் இருப்பார்கள். ரேடார் மூலம் பெறப்படும் வானலைகளைக் காட்சிப் படுத்தும் கணினிகளும், உயர் அலைவரிசை ரேடியோக்களும், நாட்டின் தலைவரோ அல்லது ராணுவத் தளபதியோ எவருக்கு தாக்குதல் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறதோ அவருக்கு ஒரு நேரடி இணைப்புக் கொண்ட தொலைபேசியும், மற்ற விமானப்படை மையங்களுக்கு தொடர்புகொள்ளும் வசதிகளும் இருக்கும். பணக்கார நாடுகள் அல்லது எதிரிகள் அதிகமுள்ள நாடுகள் (உ.தா. அமெரிக்கா) ரேடார்களோடு செயற்கைக்கோள்கள் மூலம் மொத்த பூமியையும் எங்காவது வெடி வைக்கிறார்களா என்று உற்றுப் பார்த்து கொண்டிருப்பார்கள்.

இவற்றுக்கு பயன்படுத்தப்படும் ரேடார்கள் 30 கி.மீ உயரத்தில் 300 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் திரட்டும் திறன் பெற்றிருக்கும்.இவை ஒவ்வொரு சுற்றாக வான் அலைகளை காற்றில் அனுப்பி, அவை பிரதிபலிக்கப்பட்டால் திரும்பி உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கக் காரணமான பொருளின் (போர் விமானங்கள்/ஏவுகணைகள்) உயரம், தூரம், அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கு (lattitude and longitude) ஆகியத் தகவல்களைப் பெற்றுத் தரும். இப்படி ஒவ்வொரு சுற்றாக தொடரும் போது, இடமாற்றத்தை கணக்கில் கொண்டு அவைகளின் வேகத்தையும் கணித்துத் தரும். இவற்றை ஒருங்கிணைத்துக் காட்சிப்படுத்தித் தருவது கணினிகள் மற்றும் மென்பொருட்களின் வேலை.

சரி, ஏவுகணை வருகிறது என்ன செய்வது?. எதிர்-ஏவுகணை (anti ballistic missile) தொழில்நுட்பம் கைவசம் இருந்தால் (உதா. பேட்ரியாட், பிரித்வி) அவற்றை உபயோகப்படுத்தலாம். இந்தத் தொழில்நுட்பம் கைவரப்பெற்ற நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், சைனா, இந்தியா) உலகில் ஐந்து மட்டுமே. மற்றவர்கள் வசதிக்கேற்ப விலைக்கு வாங்கி வைத்துக் கொள்வதுண்டு. தாக்க வரும் ஏவுகணையின் அகலாங்கு, நெட்டாங்கு கிடைத்தவுடன், எதிர்-ஏவுகணை ஏவுதளங்களின் அகலாங்கு நெட்டாங்கு மூலம் இரண்டுக்கும் இடையேயான தொலைவு வான்மைல்களில் (nautical miles) கணக்கிடப்பட்டு அவற்றின் பயணப்பாதையில் குறுக்கிடுவதற்கேற்ப எதிர்-ஏவுகணைகள் ஏவப்படவேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, மேற்படி வேலைகள் அனைத்தையும் மிகச் சொற்ப நிமிடங்களில் செய்து முடித்தாக வேண்டும். இத்தகைய தாக்குதலுக்கு இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று தாக்கப்பட்டதற்குப் பின் பதில் தாக்குதல் நடத்துவது அல்லது முன்னெச்சரிக்கைத் தகவல் கிடைத்தவும் தாக்கத் தொடங்குவது (launch on warning and launch on attack).

அணுஆயுதங்கள் இருக்கும் நாடுகளுக்கு இடையே இருக்கும் முன்னெச்சரிக்கை தகவல் மையங்கள் மிகமிக விழிப்புடன் இருக்கும். அவற்றுக்கு இடையே தாக்குதல் மூண்டால் எதிரியின் ஏவுகணை நம் வீட்டில் இறங்கும் முன் நமது ஏவுகணைப் புறப்படும் வண்ணம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும். நாமில்லா விட்டால் எதிரியும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் இந்த ஏற்பாடு (Mutual Assured Destruction - MAD).

எந்தெந்த நாடுகளுக்கு இந்த முன்னெச்சரிக்கைத் தகவல் மையம் தேவைப்படுகிறது?. கூடவே கிரிக்கெட் விளையாடிக் கொண்டு முக்கிய நகரங்களுக்குள் உல்லாச படகுச் சவாரியில் ஆயுததாரிகளை அனுப்பி வைக்கும் அண்டை நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தோடு இருந்தால் அவசியம் தேவை. அவர்கள் அணுஆயுத பலம் பெற்றிருப்பின் கூடுதல் சிறப்பு. இவ்வளவு வசதிகளும் செய்து கண்காணித்தாலும், வான்பகுதி உண்மையாகவே பாதுகாப்பாக இருக்கிறதா ?. இந்த தொழில்நுட்ப வசதிகளின் நம்பகத்தன்மை என்ன?

  • தொடங்கியவர்

சாலையில் நிற்கும் போது அதிவேகமாக ஒரு வாகனம் கடந்தாலே சட்டை படபடக்கும், நெஞ்சு திடுதிடுக்கும், தூசி வாரியடிக்கும். சுமார் மணிக்கு 150000 மைல் வேகத்தில் ஒரு ஏவுகணை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றால் எப்படி இருக்கும்?. அந்த நேரத்தில் செயல்படுவதா, வியர்வையைத் துடைப்பதா என்று யோசிப்பதற்குள் படம் முடிந்துவிடும்.

வான் பாதுகாப்புப் பணியில் உள்ள சவாலே, தாக்குதலின் அதிவேகம் தான். அதிவேக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள் 5000 முதல் 10000 கிலோ மீட்டர் வரை 15000 மைல் வேகத்தில் ஆயிரம் கிலோ எடையுடன் பயணிக்கும் அசுரபலம் பெற்றது. கிட்டத்தட்ட பூமிப்பந்தின் சரிபாதியை ஒரு மணிக்குள், ஒலியை விட ஐந்து ம்டங்கு அதிகான வேகத்தில் கடக்கும் ஒரு வஸ்துவைச் சமாளிப்பது தான் குறிக்கோள். ஒரு நாடு ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடித்தவுடன் அதன் திறன்களை, பெருமைகளை முரசறிவிப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு கிலியேற்படுத்ததான் இந்த ஏற்பாடு. இவ்வாறு அறிவித்தவுடன் அதன் எதிரி நாடுகள் உடனே ஒரு காகிதம், எழுதுகோலோடு சம்மணமிட்டு வீட்டுப்பாடம் செய்யும் குழந்தையைப் போல கணக்குப் போட ஆரம்பிப்பார்கள். என்ன கணக்கு?. அந்த ஏவுகணையால் நம் நாட்டில் இருக்கும் முக்கியமான இடங்களில் அடிவாங்க எவ்வளவு நேரமாகும் என்று தான்.

ஒரு உதாரணக் கணக்கு. இஸ்லாமாபாத்திலிருந்து மும்பைக்கு எப்படி கணக்கிடுவார்கள் என்று பார்ப்போம். முதலில் இரண்டு நகரங்களின் அகலாங்கு, நெட்டாங்கு (latitude & longitude) விவரங்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும். இஸ்லாமாபாத் (33.6° N 73.1° E), மும்பை (18°55'N, 72°50'E). இந்த இரண்டு அகலாங்கு, நெட்டாங்குகளுக்கிடையே உள்ள தூரத்தினைக் கணக்கிட ஒரு சூத்திரம் (formula) இருக்கிறதென்றாலும், உற்றுப்பார்த்தால் தலைவலிக்கும் வாய்ப்பிருப்பதால் மக்கள் நலன் கருதி தவிர்க்கப்படுகிறது. . இதற்கென்று கணினியில் நிரல் எழுதி வைத்திருப்பார்கள்http://www.nhc.noaa.gov/gccalc.shtml

மேலுள்ள சுட்டியின் பக்கத்திற்கு சென்று அகலாங்கு நெட்டாங்கு விவரங்களை அளித்தால் தூரத்தைக் கணக்கிடலாம். நாம் தேர்ந்தெடுத்த நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் 851 வான்மைல்கள் (nautical miles). நிமிடத்திற்கு 140 வான்மைல்கள் பயணிக்கும் பாகிஸ்தானின் ஷாகின் வகை ஏவுகணைகளைக் கணக்கில் கொண்டால் 6 அல்லது 7 நிமிடங்களில் பத்திரமாக மும்பையில் தரையிறங்க வாய்ப்புகள் அதிகம். புள்ளிவிவரங்களின் படி பாகிஸ்தானிடம் பலவகை ஏவுகணைகள் இருந்தாலும், விமர்சகர்கள் பார்வையில் அவர்களிடம் உள்ளது இரண்டே வகைதான் என்பது கிளைக்கதை. ஒன்று சைனா பொங்கல் சீராகக் கொடுத்தது மற்றது வடகொரியாவில் தலைத்தீபாவளிக்கு வாங்கியது.

இவ்வாறு ஏவுகணைகள் அனுப்பும் போது எதிர்-ஏவுகணைகள் மூலம் வானிலேயே வானவேடிக்கை நிகழ்த்தப்படும் வாய்ப்பிருப்பதால் எப்போதுமே இவை சிங்கம் போல் தனித்து வந்து ஆபத்தில் மாட்டிக் கொள்வதில்லை. கூட்டமாக அனுப்பப்படுவதே வழக்கம். அதில் ஒன்று அல்லது இரண்டைத் தவிர மற்றதெல்லாம் புஸ்வாணமாக இருக்கும். இவற்றுக்கிடையே உள்ள வித்தியாசங்களை உணர்ந்து குறிபார்த்து அடிக்கும் கடமை வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையத்தின் பொறுப்பு. எப்படி கண்டுப்பிடிக்கிறார்கள்?. புஸ்வாண ஏவுகணைகள் (decoys) காற்று வெளியில் பயணிக்கும் போது உண்மையான ஏவுகணைகளை விட விரைவில் வெப்பம் குறைந்து விடும். அதனால் ரேடார் வானலைகளின் பிரதிபலிப்பில் ஏற்படும் வித்தியாசங்களை வைத்து புஸ்வாணங்களைத் தவிர்த்துவிட்டு எதிர் தாக்குதல் நடக்கும்.

இத்தனை பிரயத்தனப்பட்டு வான்பரப்புப் பாதுகாக்கப் பட்டாலும், நாடு முழுமைக்குமான பாதுகாப்பு இதுவரை எந்த நாட்டுக்கும் இல்லை. அமெரிக்கா மட்டும் அதற்கானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தாக்குதல் நடக்கும் சமயத்தில் அத்தனைத் தொழில்நுட்பங்களும் துருப்பிடித்து விடாமல் சரியாக செயல்பட வேண்டியது அதிமுக்கியம். அதற்காக இந்தியா போன்ற கைப்புள்ளைகள் அவ்வப்போது போர்ப்பயிற்சியிலும், அமெரிக்கா போன்ற மைனர் குஞ்சுகள் அவ்வப்போது தீவிரவாதம் அடக்கி, அமைதி பரப்பும் காரணம் காட்டி நேரடியாகப் போரிலும் ஈடுபடுவது வழக்கம் :D.

வான் பாதுகாப்பு மையங்களுக்கும் சில குறைகள் உள்ளன. அரிதாக சில சமயங்களில் சூரியனோ, சந்திரனோ சரியாக ரேடாரின் நேர்க்கோட்டில் வரும்போது, மேகக்கூட்டங்களும் இருந்து அதிகமான ஒளியை ரேடாரை நோக்கி செலுத்தும் வண்ணம் சந்தர்ப்பங்கள் நேரலாம் (false alarm). இங்கு பணியில் இருப்போர் எச்சரிக்கைத் தகவல் கிடைத்ததும், வகுப்பில் தூங்குபவனை எழுப்பிய மறுவினாடி சிலிர்த்துக் கொண்டு வாத்தியாரைக் கவனிப்பது போல், உடனே பதில் தாக்குதலுக்குத் தயாராகி விடக் கூடாது. எச்சரிக்கைத் தகவல் உண்மை தானா, அல்லது பிழையான எச்சரிக்கையா என்றெல்லாம் ஆராய்ந்து விட்டே அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும்.

இவ்வாறு பிழையான எச்சரிக்கையினை எவ்வாறு தவிர்க்கிறார்கள்?, இந்த பிழையான எச்சரிக்கை எவ்வளவு ஆபத்தானது

வெறும் ரேடார்களை மட்டும் நம்பி இருக்கும் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையங்கள், ஏவுகணைகள் தொடுவானப் பகுதியைத் தாண்டிய பின்னரே தாக்குதலைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப் பட்ட மையங்கள் வெவ்வேறு பகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ரேடார்களை நிறுவி அனைத்தையும் ஒரு வலையமைப்பில் ஒருங்கிணைத்து கண்காணிக்கப்படும். இதன் மூலம் தவறான எச்சரிக்கைகளை ஒரே நேரத்தில் அனைத்து ரேடார்களையும் சோதித்து அறிந்து கொள்ளலாம். ஒரே நேரத்தில்அனைத்துத் தகவல்களும் தவறானதாக இருந்தால், அது சரியான தகவலாகிவிடும் :lol:.

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் ஏவுகணைகளின் பயணிக்கும் தூரம் மற்றும் வேகத்தின் காரணத்தினால் ரேடார்கள் கொடுக்கும் தகவல்கள் சுதாரித்துக் கொள்ள மிகக் குறைந்த கால அவகாசத்தையே கொடுக்கிறது. இதனைச் சமாளிக்கத்தான் செயற்கைக்கோள்கள் மூலமாக பூமியைக் கண்காணிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் எந்நேரமும் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையத்துடன் தொடர்பில் இருக்கும். 'பாதுகாப்புப் பணிகளுக்கு இப்பொழுது நாங்கள் செலுத்தியிருக்கும் செயற்கைக்கோள் மிகவும் உபயோகமாக இருக்கும்' என்று சொல்லப்படுபவற்றில் அனேகம் இந்த வேலையைத் தான் செய்கின்றன. இந்த செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையின் கீழ் பூமியில் எந்த இடத்தில் பெரிதாக வெடிவெடித்து ஒளிப்பிழம்பு தோன்றினாலும் முன்னெச்சரிக்கைத் தகவல் மையத்திற்கு தெரிவிக்கும்.போகி தினத்தன்று நம்மூரில் இருந்து கூட ஏகப்பட்ட எச்சரிக்கைத்தகவல்கள் செல்ல வாய்ப்புண்டு :lol:. ஏவுகணைகள் ஏவப்படும் போது தோன்றும் மிகப்பெரும் ஒளிப்பிழம்பின் மூலம், ' அது வந்துட்டு இருக்கு.. எல்லாரும் ஓடுங்க..' என்று கூவுவது இந்த செயற்கைக்கோள்கள் தான்.இதன் காரணமாகத் தான் ஏவுகணைச் சோதனைகள் நடத்தும் நாடுகள் வெளிப்படையாக இந்த நாள், இந்த நேரத்தில் சோதனை செய்யப் போகிறோம் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு செய்கிறார்கள். அறிவிக்காமல் சோதனை செய்யும் பட்சத்தில், 'நம்ம வீட்டுக்கு வெடி வச்சிட்டாங்க' என்று எதிரிகள் பதிலடி தாக்குதலில் குமுறி விட வாய்ப்பிருக்கிறது. மேலும் ரகசியமாக செய்யப்படும் அணுகுண்டுச் சோதனைகளும் இத்தகைய செயற்கைக்கோள்களின் பார்வையில் இருந்து தப்பும் பொருட்டே பூமி அல்லது கடலுக்குள் அடியில் வெளிச்சம் வராமல் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு இந்தியாவின் போக்ரான் சோதனை ஓர் உதாரணம்.

தவறுவது மனித இயல்பு என்பதைப் போல எத்தனை தான் கவனமாக வடிவமைக்கப்பட்டாலும் தொழில்நுட்பங்கள் சமயத்தில் தவறுவது உண்டு. அதற்கு செயற்கைக்கோள்களும் தப்புவதில்லை. உதாரணத்திற்கு 1983ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா புதிய தொழில்நுட்பத்துடன் செயற்கைக்கோள் உதவியுடன் புதிய வான் பாதுகாப்பு மையத்தினை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது. அப்போது அமெரிக்காவுடனான பனிப்போர் உச்சத்திலிருந்த நேரம். எந்த நொடியும் இரண்டு பக்கங்களுமே போருக்குத் தயாராக இருந்தன, ஆயிரணக்கான அணுகுண்டுகளுடன். அப்போதைய சோவியத் தலைவர் ஆண்ட்ரோபோவ் (andropov) ஒரு சுடுதண்ணி :D, அதுவும் அமெரிக்கா என்று காதில் சொன்னாலே உடனடி கொதிநிலைக்கும் வரும் திறனை கைவரப்பெற்றவர்.

புதுமனைவிக்குப் பார்த்துப் பார்த்து செய்வது போல, மிகச் சிறந்த, நம்பகமான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து புதிய முன்னெச்சரிக்கை மையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அதில் ஸ்டானிஸ்லோவ் பெட்ரோவும் (lt. col. stanislov petrov) அடக்கம். 1983ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று நள்ளிரவில் முன்னெச்சரிக்கை மையத்தில் பணியிலிருந்தார் பெட்ரொவ். அமெரிக்காவிலிருந்து சியோலுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் விமானத்தை, ரஷ்யாவின் வான்பகுதியில் அத்துமீறி நுழைந்து வேவு பார்த்ததாக 269 பேர்களுடன் சுட்டு வீழ்த்தி, அமெரிக்காவை வெறியேற்றிய சம்பவம் நடந்து மூன்று வாரங்களே ஆகியிருந்தது. பனிப்போரின் உஷ்ணம் வரலாற்றில் அதிகமாக இருந்த தருணங்கள். இரண்டு நாடுகளுமே மொத்த அணுஆயுதங்களுடன், போர் மூண்டால் இரண்டு பேருமே அழியும் வண்ணம் (Mutual Assured Destruction - MAD) தயார் நிலையில் இருந்தன. இரண்டு பேருமே அழிந்து போவோம் என்ற பயமே, கடைசி வரை நேரடிப் போர் நிகழாமல் காத்ததென்பது உபதகவல். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பணியிலிருந்த பெட்ரோவுக்கு வந்தது சோதனை. மொத்த எச்சரிக்கை மையமும் ஏவுகணைத் ஏவப்பட்டு விட்டது என்ற எச்சரிக்கை அலற ஆரம்பித்தது. திரையில் ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாகக் காட்டியது. திகைத்துப் போன பெட்ரோவ் என்ன செய்வது என்று யோசித்து முடிப்பதற்குள்ளேயே அடுத்தடுத்து புதிய எச்சரிக்கை ஒலிகள் அலறியது. கணினிக்குள் எட்டிப் பார்த்தால் ஒன்று, இரண்டு, மூன்று என்று அடுத்தடுத்து கூடிக்கொண்டே போய் மொத்தம் ஐந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் காண்பித்தது. பெட்ரோவின் பணி இத்தகவலை மேலதிகாரிகளிடம் தெரிவித்து பதில் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வதே. ஆனால் பெட்ரோவ் அது தவறான எச்சரிக்கை என்று எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து விட்டார். ஏன்?.

சமபலம் பொருந்திய ஒரு நாட்டுடன் அணுஆயுதப் போர் தொடங்க எந்த புத்திசாலியும் வெறும் ஐந்து ஏவுகணைகள் மட்டும் அனுப்பி வைப்பான் என்று பெட்ரோவுக்குத் தோன்றவில்லை. அவர் எதிர்பார்த்தது நூற்றுக்கணக்கில். மேலும் அந்த வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் முற்றிலும் புதிய தொழில்நுட்பம், அதனால் அதன் நம்பகத்தன்மையின்பால் ஏற்பட்ட சந்தேகம். உண்மையிலேயே ஏவுகணைப் புறப்பட்டதாக இருந்தால், எச்சரிக்கைக்குப் பிறகு சில நிமிடங்களில் தொடுவானப் பகுதியைத் தாண்டியிருக்க வேண்டும். ஆனாலும் மற்ற ரேடார்கள் எந்த கூச்சலும் போடாமல் அமைதியாக இருந்தன. இவையனைத்துமே பெட்ரோவ் தவறான எச்சரிக்கை என்று முடிவு செய்து கமுக்கமாகிவிட்டதற்குக் காரணம். அந்த கணம் பெட்ரோவ் அம்முடிவை எடுக்காமலிருந்தால் மூன்றாவது உலகப்போர் தொடங்கியிருக்கும். அணுகுண்டுகளால் அனேக நாடுகள் குளியலாடியிருக்கும். காரணம் அந்த சூழ்நிலையில் போருக்குத் தயாராக இருந்தது மற்றும் ஆண்ட்ரோபோவின் மனநிலை, சட்டதிட்டங்கள் படி பதிலடி குறித்து முடிவெடுக்க அவருக்குக் கொடுக்கப்பட்ட நேரம், செய்தி கிடைத்த பிறகு 2 நிமிடங்கள் மட்டுமே.

பின்னாளில் இது குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காததால் கடும் ராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பெட்ரோவ், மனமுடைந்து இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றார். விசாரணையில் சூரியனின் ஒளிக்கற்றைகள் அடர்த்தியான மேகக்கூட்டங்களால் பிரதிபலிக்கப்பட்டதில் செயற்கைக்கோளின் கண்கள் கூசிப்போன விஷயம் தெரியவந்தது. 1990 களில் பெட்ரோவின் மேலதிகாரி ஓய்வு பெற்ற பின், பாரம்பரிய வழக்கப்படி தனது அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்ட பின்னரே வெளியுலகிற்கு இச்சம்பவம் தெரிந்தது. பெட்ரோவை அமெரிக்காவும், ஐரோப்பாவும் கொண்டாடின. ரஷ்யாவுக்குத் தன் தொழிநுட்பத் தவறுகள் குறித்து வெளிக்காட்டிக் கொள்ள முடியாத மானப்பிரச்சினை, முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. பின்னாளில் ஐக்கிய நாடுகள் சபையில் விருதளித்து கவுரவிக்கப் பட்டார் பெட்ரோவ். வரலாற்றில் மிகப்பெரிய அணுஆயுதப் பேரழிவின் விளிம்பில் உலகம் தள்ளாடிய தருணமாக இச்சம்பவம் நினைவுகூறப்படுகிறது.

தொழில்நுட்பத் தவறுகளால் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்து இருந்தாலும், வான் பாதுகாப்பு மையத்தில் இருக்கும் பிரச்சினைகள், பணிபுரிபவர்களின் வேலைப் பளு மற்றும் மன அழுத்தம் குறித்த புரிதலுக்காகவே இப்பகிர்வு. வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையங்களை அமைப்பதென்பது தொழில்நுட்பத்துக்கு மட்டுமன்றி, பணப்பைக்குமே கொஞ்சம் சவாலான விஷயம் தான். சட்டைப்பையில் காசில்லை என்றாலும் கடன் வாங்கியாவது பந்தா காட்டும் மைனர்களைப் போல, மக்களுக்கு சாப்பிட ரொட்டியில்லையென்றாலும் நான்கு நாடுகளுடன் முறுக்கிக் கொண்டு 'நானும் ரவுடி தான்' என்று பாதுகாப்புக்கு பொருளாதாரத்தை வாரியிறைப்பது மட்டும் என்றும் மாறாமல் தொடர்கிறது

thanz: suduthanni blogspot.com

  • கருத்துக்கள உறவுகள்

PSLV-on-its-way-to-launchpad-VAB.jpg

நனக்கு ஐ.எஸ்.ஆர் .ஓ(ISRO) கொத்தாயுத்தேனு .. சிறிகரிகோட்டாக்கு இல்லி (பெங்களூர்) வெதர் ரிப்போட்டு (weather Report) சப்போர்ட மாட்தாரா? எல்ரு நித்தரை மாடுத்தாரே... யாரு இல்லி கலசா மாடல்லா... இவத்தேலாம் ஓவர் பீலுமு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.