Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் தாங்களாக முன்வந்து நடத்தும் போராட்டத்தைத் தவிர்த்து செயற்கைப் போராட்டம் நடத்தத் தூண்டப்படுகிறார்கள்

Featured Replies

தமிழ் மக்கள் தாங்களாக முன்வந்து நடத்தும் போராட்டத்தைத் தவிர்த்து செயற்கைப் போராட்டம் நடத்தத் தூண்டப்படுகிறார்கள்.

இத்தனைக்கும் பின்புகூட அரசியல் தீர்வைக் காப்பதில் இன்றய அரசாங்கம் அக்கறை செலுத்துவதாய்த் தெரியவில்லை. ஆட்சிக்கு வரும் பெருங் கட்சிகளையும் சேர்ந்த இரு பெருந் தலைவர்களின் கூற்றுகளையே நான் மேற்கோளாய்க் காட்டியுள்ளேன்.அப்படி நீங்கள் கூறிய குறைந்த பட்சத் தீர்விலிருந்து விலகிச் செல்வது எப்படி நீதியாக முடியும்? தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. என்பதற்கான சாட்சிகளாய் மேற்கூறிய இரு முக்கி தலைவர்களின் கூற்றுகளே அமைந்துள்ளன.

தமிழ்பேசும் மக்களின் தனித்துவத்தை அழிக்க அரசு திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களினதும்,முஸ்லிம் மக்களினதும் தனித்துவ அடையாளங்களையும் அவற்றுக்கான தளங்களையும் அழிப்பதற்கு குடியேற்றங்களை ஒரு முக்கிய கருவியாக ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் பயன்படுத்த முனைகிறது. ஒரு மக்கள் கூட்டத்தின் குடியடர்த்திதான் அவர்களினது அடையாளத்தைப் பேணுவதற்கும் வளர்ப்பதற்குமான தளமாகும். குறைந்த பட்சம் அம்பாறையில் முஸ்லிம் மக்கள் அடர்த்தியாக இருப்பதால்தான் இலங்கையின் ஏனைய பகுதிகளில் ஐதாக இருக்கும் முஸ்லிம்கள் கூடத் தலைநிமிர்ந்து வாழ வழியேற்படுகின்றது.அவ்வாறான முஸ்லிம் மக்களின் குடியடர்த்தியை அழிக்கவல்ல குடியற்றங்களை மேற்கொண்டால் இலங்கை முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் தமது அடையாளங்களையும்,அதிகாரங்களையும் இழந்துவிடுவர்.

ஓர் இனத்தை அழிப்பதற்கு குடியேற்றமே முக்கியமானதும் அபாயகரமானதுமான ஆயுதமாகும். அளவால் பெரிய இனமான சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் தமிழர்களோ, முஸ்லிம்களோ அவ்வளவு தொகையில் குடியேற்றினாலும் சிங்கள இனத் தனித்துவத்தை அவர்களால் மாற்ற முடியாது.ஆனால் அளவால் சிறிய இனத்தவர்களான தமிழர்,முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்கள் ஒரு சிறு தொகையில் குடியேறினாலே தமிழ்,முஸ்லிம் இனங்களின் தனித்துவம் விழுங்கப்பட்டுவிடும். ஆதலால் குடியேற்றங்கள் முற்றிலும் சிறுபான்மை இனங்களை அழிக்கவல்லவை. இவை எல்லா வகைகளிலும் நிறுத்தப்பட வேண்டியது அவசியமான விடயமாகும்.

பெரும்பான்மை இனமே தனக்கிருக்கும் எண்ணிக்கைப் பலத்தை வைத்துக்கொண்டு அரசியல் அதிகாரத்தை தன் கையில் வைத்திருக்கிறது.இலங்கை அரசியலில் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கு தீர்மானங்களை எடுப்பதில் பங்கில்லை. அரசியலில் பங்காளிகள் அற்ற மக்களாய் இவர்கள் உள்ளனர். ஓர் இனத்தின் எண்ணிக்கைப் பலத்தால் ஏனைய இனங்களின் உரிமைகளை நிராகரிப்பது ஜனநாயகம் ஆகிவிட முடியாது.

இலங்கை வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்கள் இப்போது ஒடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அரசியல் பங்கையும்,உரிமையையும் மறுத்ததன் விளைவுதான் ஆயுதம் தாங்கிய அரசியல் தோன்றக் காரணமாய் அமைந்தது. நீங்கள் "பயங்கரவாதம்" என்று எதனைக் கூறுகிறீர்களோ அதனை நீங்கள்தான் உற்பத்தி செய்தீர்கள்.இப்போது இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் அழிவின் பின்பும் நீதியான தீர்வைப் பற்றி நீங்கள் யோசிப்பதாய் இல்லை.

அந்நிய தேசங்களிடமிருந்து குண்டு வீச்சு விமானங்களை வாங்கிவந்து அந்நிய உதவிகளுடன் தமிழ் மண்ணில் குண்டு மழை பொழியப்பட்டது.இன்று தமிழ்ச் சிறுவர்கள் விமானங்களைக் கண்டால் அஞ்சுகிறார்கள்.இந்த யுத்தத்தில் அழிந்தது உயிர்கள் மட்டுமல்ல தமிழ் மக்களின் நீண்ட பல தலைமுறை காலச் சொத்துகள்,புனித இடங்கள், தூய்மை குலையாத கிராமங்கள் எனப் பலவும் அழிந்துள்ளன. சாதாரணமாக உயரிழப்புகளை வெறும் புள்ளிவிபரங்களாக மட்டும் பார்த்துவிட முடியாது. இறந்து பட்டவர்களின் தொடர்ச்சியாய் அவர்களை எண்ணி ஏங்கித் தவிக்கும் குடும்பங்களை எப்படிக் கணிப்பது. இது கணிப்பீடுகளுக்கும் புள்ளிவிபரங்களுக்கும் அப்பாலான பெருந் துயரம்.

குடும்பங்களின் சிதைவுகளை உங்களில் யார் எண்ணிப்பார்த்தீர்கள்? சிங்கள மக்களிடம் நீதிமான்கள் இல்லையா என்று தமிழ் நெஞ்சங்கள் குமுறுகின்றன. வெளிநாட்டு உதவி பெற்று வெறுங் கட்டிடங்களை கட்டுவதாலும் வீதிகள் பாலங்கள் போடுவதாலும் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை அகற்றிவிட முடியாது.தமக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுவதை தமிழ் மக்கள் உணர்கின்றார்கள்.தமிழ் மக்களுக்கான நீதியைப் பற்றி சிங்களவர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்

தமிழ் மக்களின் உரிமையை ஏற்றுக்கொள்வதில்தான் சிங்கள இனத்துக்கான கௌரவம் இருக்கின்றது. ஓர் இனத்தின் கௌரவம் அது ஏனைய இனங்களின் உரிமையை எவ்வாறு மதிக்கின்றது என்பதிலே தங்கியுள்ளது.இலங்கை ஒரு பல்தேசிய இன நாடு என்பதை ஏற்றுக்கொள்வதில் இருந்துதான் சிங்கள இனத்தின் கௌரவம் ஆரம்பமாக முடியும். ஒரே மக்கள் என்று கூறிக்கொண்டு ஏனைய இனங்களை நீங்கள் மறுப்பதனால் சமாதானத்தையோ, நீதியையோ நிலைநாட்ட முடியாது.

பயங்கரவாதத்தை அழித்துவிட்டதாக இலங்கை அரசு மகிழ்ச்சி அடைவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக உலகில் உள்ள பல்வேறு நாடுகளிடமிருந்து உதவிகளையும் ஆயுதங்களையும் பெற்று தமிழ் மண்ணில் இரத்த ஆறை ஓடவிட்டதில் என்ன பெருமை இருக்க முடியும்? ஒரு சிறிய இனத்தை ஆயுத முனையில் அடக்கி உரிமையை மறுப்பதில் என்ன பெருமையும் கௌரவமும் இருக்கமுடியும்?

எல்லாவிதமான வெற்றி விழாக்களுக்கும்,கொண்டாட்டங்களுக்கும் அப்பால் தமிழ் மக்களின் துயரங்களையும் காயங்களையும் புரிந்து கொள்வதில் இருந்து அரசியலை ஆரம்பியுங்கள். தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து வந்ததன் விளைவாக அவர்களின் செஞ்சங்களில் வடுக்கள் ஏற்பட்டன. அந்த வடுக்களை மாற்றுவதிலிருந்து அரசியலை ஆரம்பியுங்கள்.ஒரே மக்கள் என்று சொல்வதனால் தமிழ்மக்களுக்கு இழைத்த அநீதி இல்லாது போய்விடப்போவதில்லை. "ஒரே மக்கள்' என்று சொல்வதனால் மட்டும் அவர்களின் நெஞ்சங்களில் உள்ள வடுக்கள் ஆறிவிடப் போவதில்லை. மாறாக "ஒரே மக்கள்'என்ற சொல்லால் அவர்களின் அனைத்து உரிமைகளையும் ஒரேயடியில் மறுக்கிறீர்கள். ஆதலால் "ஒரே மக்கள்' எனும் பதத்தை மக்கள் அநீதியின் உச்சக்கட்டமாகவே பார்க்கின்றனர்.

ஆதலால் தமிழ் மக்களின் தனித்துவத்தையும், மறுக்க முடியாத அவர்களின் பிறப்புரிமையான தமிழ் தேசிய உரிமையையும் புரிந்து கொள்வதிலும்,ஏற்றுக் கொள்வதிலும் இருந்தே அரசியலை ஆரம்பிக்க வேண்டும்.

மேடையில் கைகொடுப்பதன் மூலமும், இசைக்கச்சேரிகளை நடத்துவதன் மூலமும் தூதரகங்களில் தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலமும் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கிவிட்டதாகவோ,இன ஒற்றுமையை உருவாக்கிவிட்டதாகவோ கருத முடியாது. இப்போதைய அவசர பணி தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தவல்ல ஒரு தீர்வை இதய சுத்தியுடன் அரசாங்கம் முன்வைப்பதுதான்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு தேவைப்படும் 2/3 பெரும்பான்மைப் பலம் ஜனாதிபதிக்கு பாராளுன்றத்தில் உண்டு. தீர்வைக்காண எத்தகைய தடையும் அவருக்கு இல்லை. நாடு நாடாகச் சென்று வெடி குண்டுகள் கேட்டதற்குப் பதிலாக சிங்கள மக்களின் வீடு வீடாகச் சென்று தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேச சிங்களத் தலைவர்கள் தயாராக உள்ளனரா என்பதற்குப் பதில் கூறவேண்டிய காலமிது.

முஸ்லிம் மக்களின் உரிமையை வற்புறுத்தி இந்துக்களை நோக்கி மஹாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தார்.தீர்வுக்கு புலிகள் தடையாக இருப்பதாகக் கூறி அத்தடையை அகற்ற யுத்தத்தை முதன்மைப் படுத்திய சிங்களத் தலைவர்கள் இப்போது சிங்களப் பக்கத்தில் தீர்வுக்குத் தடையாக இருக்கும் சிங்களச் சக்திகளுக்கெதிராக காந்தி காட்டிய உண்ணாவிரதப் போராட்டத்தையாவது செய்வார்களா? இப்போது நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு கேள்விக்கிடமின்றி முற்றிலும் சிங்களத் தலைவர்களின் பக்கமும், சிங்கள ஊடகங்களின் பக்கமும்,சிங்கள புத்திஜீவிகளின் பக்கமும் வந்துள்ளது.

தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளதையே அண்மைய நாட்களில் நாம் அவதானிக்கின்றோம்.மக்கள் தாங்களாக முன்வந்து நடத்துகின்ற போராட்டங்களை தவிர்த்து செயற்கையாகப் போராட்டம் நடத்த தூண்டப்படுகின்றார்கள்.

கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபராக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய திருமதி சுலோஜினி குகன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.அரசாங்க அதிபருடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக யுத்தகாலங்களிலெல்லாம் மக்களுடன் நின்று ஏழைகளுக்காகப் பணிபுரிந்து ஒரு நிர்வாக சேவை அதிகாரி அவருடைய உடல் நிலையைக் கூட கருத்தில் கெள்ளப்படாமல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு அதைப் பிள்ளைகளுக்காகவும்,வயோதிபர்களுக்காகவும் ஏழைகளுக்காகவும் இரவு,பகல் பாராது பணியாற்றிய இவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காகவும் ஒரு சிலரின் அதிகார அடாவடித் தனங்களுக்காகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அரச அதிபரிடம் ஒரு மகஜரைக் கையளிப்பதற்கு இராணுவத்தினர் தடுத்துள்ளனர்.ஆனால் நிவாரணம்,உதவி எனக் கூறி மக்கள் ஏமாற்றப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டிருக்கிறார்கள்.

சிறைகளிலே வாடும் இளைஞர்,யுவதிகள் தொடர்பாக இந்த அரசால் ஏன் ஒரு நல்ல முடிவை அறிவிக்க முடியவில்லை.வன்னியின் புகழ்பூத்த கல்லூரிகளான மாங்குளம் மகா வித்தியாலயம், கிளி/பூநகரி விக்கினேஸ்வரா வித்தியாலயம் என்பன இப்பொழுது பாரிய இராணுவத் தளமாக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டில் பள்ளிகளைத் திறப்பதை விட சிறைச்சாலைகள் திறப்பதையே ஆசியாவின் ஆச்சரியமாகக் கொள்கிறீர்களா?

சிறைச்சாலைகளில் இருப்பவர்கள் தமிழ் இளைஞர்கள், யுவதிகள், தமிழ்ப் பிள்ளைகளின் அப்பாக்கள்,அம்மாக்கள் இதன் மூலம் அவர்களின் குடும்ப எதிர்காலம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை பாருங்கள்.அதேபோல் தமிழ் பாடசாலைகளை இராணுவ முகாம்களாக வைத்திருப்பதன் மூலம் எங்கள் பிள்ளைகளின் கல்வி எவ்வளவு சீரழிக்கப்படுகின்றது.திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் கல்வி எவ்வாறு அழிக்கப்படுகின்றது என்பதை ஒவ்வொரு பொதுமகனும் இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

இன்று 12000 க்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகளின் வாழ்வு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. எனது பிறந்த நாளுக்கு அப்பா வருவாரா? என்று அழுத கண்ணீரோடு தன் தாயைக் கேட்கும் குழந்தைகளை எண்ணிப்பாருங்கள். எம் வயோதிப காலத்தில் எமக்கு உதவ எம்பிள்ளைகள் எப்போ வருவார்கள் என்று ஏங்கித் தவிக்கும் வயோதிபர்களைப் பாருங்கள்.

இராணுவத்தினரிடம் வெள்ளைக்கொடியோடு வந்து சரணடைந்தவர்கள், மனைவிமாரால் ஒப்படைக்கப்பட்டவர்கள்,தாய் தந்தையரால் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே என்று தெரியாமல் உள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமார்,அவர் மகன் உள்ளேவந்து சரணடைந்தததை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. யோகரத்தினம், யோகி, சோ.தங்கன், எழிலன், புதுவை இரத்தினதுரை, இளம்பரிதி போன்றோரை அவர்களின் மனைவி குடும்பத்தினர் ஒப்படைத்ததை நல்லிணக்க ஆணைக்குழு முன் தெரிவித்துள்ளார்கள்.

இன்று இணையத்தளங்களிலும் ஊடகங்களிலும் தமிழ் இளைஞர்,யுவதிகள் நிர்வாணமாக்கப்பட்டுக் கொல்லப்படுவதை செய்திகளாக வீடியோக்களாகப் பார்க்கமுடிகிறது. இதேநிலை சிங்கள சகோதரர்களுக்கு ஏற்பட்டால் உங்களால் சகிக்க முடியுமா? கதிர்காம அழகி மனம்பேரி நிர்வாணமாக்கப்பட்டு அலங்கோலமாக இதேநாட்டில் கொல்லப்பட்டதையும் எண்ணிப் பாருங்கள். அவசரகாலச் சட்டம் தொடர்பாக பிரதமர் குறிப்பிடும்போது புலிகள் மீது மட்டும் தனது பிரச்சினைகளை முன்வைத்தார்.1983 இல் வெலிக்கடைச்சிறையில் தமிழ்ச் சிறைக்கைதிகள் எப்படி வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.குட்டிமணி தங்கத்துரையின் கண்கள் கூட சிங்களப் பயங்கரவாதிகளால் தோண்டப்பட்டது.

இதே ஆண்டு கொழும்பு,மலையகப் பகுதிகளிலிருந்து தமிழ் மக்களின் சொத்துகள் சூறையாடப்பட்டு பலர் வெட்டிச் சாய்க்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் லங்கா ராணி கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டார்களே. இந்த நாட்டில் பயங்கரவாதத்தை தூண்டியது யார்? உருவாக்கியது யார்?

நாகர்கோவில் மற்றும் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை எண்ணிப்பாருங்கள்.இறுதியாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்.

செம்மணிப் படுகொலைகளின் வழக்கு,கிருஷாந்தியின் கொலைவழக்கு குமார் பொன்னம்பலத்தின் கொலை வழக்கு,ரவிராஜ், தராகி சிவராம், ஜோசப் பரராஜசிங்கம் போன்றோரின் கொலை வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.எனவே இங்கு தமிழர்கள் கொலை செய்யப்பட்டால் அவர்கள் அநாதைகளாக ஆதரவற்றவர்களாக கேட்பாரில்லாத பிறவிகளாகத்தான் அன்றும் இன்றும் உள்ளதை இச்சான்றுகள் உணர்த்தும்.இதுதான் தமிழர்களுக்கு இந்த நாட்டில் வழங்கப்படும் நீதி என்பதை உணருங்கள்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=3576:2010-12-16-23-39-27&catid=72:article&Itemid=100

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.