Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுல்காந்தியுடன் ஒரு சந்திப்பு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல்காந்தியுடன் ஒரு சந்திப்பு..!

25-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பள்ளிப் பருவத்தில் ஆங்கிலப் பாடத்தை விரும்பிப் படிக்காததன் பலனை கடந்த 22-ம் தேதி முழுமையாக அனுபவித்தேன். முதல்முறையாக முழுமையான ஆங்கில அறிவு இல்லையே என்கிற பெரும் ஏக்கத்தை அன்றைய ராகுல்காந்தியுடனான சந்திப்பு நிகழ்ச்சி எனக்குள் ஏற்படுத்தியது..!

பத்திரிகையாளர் கவிதா முரளிதரனின் சிபாரிசில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜோதிமணி, கடந்த திங்கள்கிழமையன்று உலகத் திரைப்பட விழாவில் படம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு போன் செய்து இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தார்.

முதலிலேயே அவரிடம், “நான் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவன். அங்கு வந்து கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிடைத்தால் என் மனதில் இருக்கும் எதிர்ப்புணர்வுகளைத்தான் கேள்வியாகக் கேட்பேன்..” என்று தெளிவாகச் சொன்னேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். “மாற்றுக் கருத்துக் கொண்டவர்களுடன்தான் உரையாட வேண்டும் என்று எங்கள் தலைவர் ராகுல் விரும்புகிறார். நீங்கள் விரும்பியவற்றைக் கேட்கலாம். தடையில்லை..” என்று உறுதிமொழியளித்ததைத் தொடர்ந்து வருவதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

தாஜ்கன்னிமாரா ஓட்டலில்தான் இந்தச் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சி 12.30-க்கு ஆரம்பம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் அரை மணி நேரம் முன்னதாகவே 12 மணிக்கே துவக்கிவிட்டார்கள்.

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், திரையுலகக் கலைஞர்கள், ஒருபாலின ஈர்ப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரையும் அழைத்திருந்தார்கள்.

அழைப்புக்குக் காரணம் ராகுலுடன் ஒரு நேர்முகம் என்று மட்டுமே நான் நினைத்திருந்தேன். நாட்டு நடப்பு பற்றி எங்களுடைய கருத்தை ராகுல் தெரிந்து கொள்வதற்காகவும், காங்கிரஸ் கட்சியின் பக்கம் ஈர்ப்பதற்காகவும் அழைத்திருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது.

பல்வேறு பத்திரிகைகளில் இருந்தும் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்கள் வந்திருந்தார்கள். விகடனில் இருந்து ஆரோக்கியவேல், குமுதத்தில் இருந்து தளவாய்சுந்தரம், கடற்கரய், என்.டி.டி.வி. ஹிண்டுவின் முரளிதரன், தி வீக் பத்திரிகையின் கவிதா முரளிதரன், ஞாநி, பத்மா, மாலன், மதன், டி.என்.கோபாலன், நமது வலையுலகத் தோழர் அதியமான் என்று எனக்குத் தெரிந்த சிலரும், தெரியாதவர்களில் பலரும் இருந்தார்கள்.

திரையுலகத்தினர் சார்பில் நாசர், அவர் மனைவி கமீலா, நடிகைகள் ரேவதி, ரோகிணி, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் இராம.நாராயணன், தயாரிப்பாளர்கள் 'ஆனந்தா பிலிம்ஸ்' சுரேஷ், அபிராமி ராமநாதன், பெப்ஸியின் செயலாளர் சிவா, அன்பாலயா பிரபாகரன், சித்ரா லஷ்மணன், 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா, வெங்கட், கே.எஸ்.சீனிவாசன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி என்று பலரும் வந்து குவிந்திருந்தார்கள்.

அரங்கத்தின் உள்ளே நுழைந்தவுடன் மேடையில் போடப்பட்டிருந்த சேரில் அமர மறுத்த ராகுல், தானே அதைத் தூக்கி வந்து கீழே வைத்து அதில் அமர்ந்து கொண்டார். ஜோதிமணி வரவேற்புரையை நிகழ்த்தியுடன் மேடையேறி மைக் முன் வந்து நின்றார் ராகுல்.

முதல் கேள்வியே நாடு முழுவதையும் சீக்காடாக்கியுள்ள மதுவைப் பற்றிய பேச்சாக அமைந்தது.

“தீவிரவாதம் பற்றி நிறையப் பேசுகிறோம். ஆனால் இன்று இருக்க கூடிய alcohol lobbyதான் இளைஞர்களுக்கு எதிரான மிகப் பெரிய தீவிரவாதம். நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான விஷயமாக இருக்கிறது. அதை உடனடியாக சரிப்படுத்த வேண்டும்.” என்றார் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த நாராயணன் என்பவர்.

தன் கையில் வைத்திருந்த கோரிக்கை மனு போன்ற ஒன்றையும் ராகுலிடம் காட்ட, ராகுலே மேடையின் ஓரத்திற்கு வந்து அதைப் பெற்றுக் கொண்டார்.

இந்தக் கேள்வியின் தொடர்ச்சியாக வேறொருவர் எழுந்து, “மது குடிப்பவரின் உடம்பை மட்டுமல்ல.. அவரது குடும்பத்தையே சீரழிக்கிறது. இதனை உணர்ந்ததாலோ என்னவோ அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் குடிப்பழக்கம் குறைந்துவிட்டது. இளமையும், மதுவும் இணைவது ஓர் அபாயகரமான கூட்டணி. நமது நாட்டில் இளைஞர்கள் அதிகம். அதனால்தான் மது உற்பத்தி செய்யும் வெளிநாட்டு கம்பெனிகள் இப்போது இந்தியா மீதுதான் மொய்க்கின்றன. இவர்களின் திட்டத்துக்குத் துணை புரிவது போலத்தான் தமிழக அரசும் செயல்படுகிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி போடுவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழக அரசு ஏழை எளியவர்களிடம் இருந்து மதுக்கடைகள் மூலம் தினம்தினம் 100, 150 ரூபாயை பிடுங்கிக் கொள்கிறது. இதனால் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்...” என்றார்.

இதற்குப் பதில் அளித்த ராகுல்காந்தி, “இது மிகவும் தீவிரமான பிரச்சினை இது பற்றி தேசிய அளவில் சிந்திக்க வேண்டும். மங்களூர் பப்களுக்கு வந்த பெண்களை சிலர் தாக்கினார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. மது குடிக்கக் கூடாது என்று யாரையும் கட்டாயப்படுத்துவதையும் நான் ஏற்கவில்லை..

அதே சமயம் மகாத்மா காந்தி பிரச்சாரம் செய்ததைப் போல மதுவின் தீமைகளை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மதுவை ஓர் ஒழுக்கப் பிரச்சினையாக அணுகாமல் அதை சமூகப் பிரச்சினையாக அணுக வேண்டும்..” என்றார்.

இந்த நேரத்தில் ராகுலை இடைமறித்த ஞாநி, “அரசே மது விற்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா..? உண்டு, இல்லை என்று குறிப்பாகச் சொல்லுங்கள்..” என்றார். தயக்கமே இல்லாமல் “ஏற்கவில்லை” என்றார் ராகுல்.

வந்திருந்தவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து அமர வைத்திருந்ததால் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சான்ஸ் வழங்கலாம் என்று முடிவெடுத்து மைக்கை பிரிவுக்கு ஒன்றாக மூவரிடம் கொடுத்திருந்தார்கள். ஆனால் அதற்குள்ளாக பலரும் எழுந்து சப்தமாக கேள்வி கேட்கத் துவங்க.. அவர்களிடம் மைக்கை கொடுக்கும்படியாகிவிட்டது.

“உங்களைச் சுற்றி சந்தேகத்திற்குரிய நபர்கள் இருக்கும்போது எப்படி சாதாரண மக்களை நீங்களும், உங்களது கட்சியும் சென்றடைய முடியும் என்று நம்புகிறீர்கள்...?” என்று சுற்றி வளைத்து ஒருவர் கேட்டார்.

இதற்குப் பதில் சொன்ன ராகுல், “அரசியல் கட்சிகள் தம்மை வெளிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும். மக்களை இன்னமும் நெருங்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் இளைஞர் காங்கிரஸில் ஜனநாயக ரீதியாக தேர்தல்களை நடத்தி வருகிறோம். நேற்று கேரளாவில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் ஒரு குற்றசாட்டுகூட இல்லை. அரசியலுக்கு வரும் நபர்களில் மாற்றத்தை எப்படி கொண்டு வருவது..? அது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அறிவுஜீவிகள் அரசியலுக்கு வராதது சரியான விஷயமில்லை. நீங்கள் ஏன் காங்கிரஸில் சேர்ந்து பொது வாழ்க்கைக்கு வரக் கூடாது..?” என்று திருப்பிக் கேட்க கைதட்டல் தூள் பறந்தது..

சினிமாக்காரர்கள் சார்பில் 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா மைக்கை கையில் வைத்திருந்ததால் 'ஆனந்தா பிலிம்ஸ்' சுரேஷுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

ஏதோ நாட்டுப் பிரச்சினையைத்தான் பேசப் போகிறார் என்று பார்த்தால் அவரோ, தற்போது மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் திரைப்பட வசூலில் இசையமைப்பாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் பங்கு தருவதற்கான சட்ட மசோதாவை எதிர்த்தும், அது பற்றியும் பேசினார்.

இதனை ராகுலே எதிர்பார்க்கவில்லை என்பது அவரது முக பாவனையிலேயே தெரிந்தது. “இந்தச் சட்டம் திரையுலகத்தை அழித்துவிடும்..” என்றார் சுரேஷ். இவருக்குத் துணையாக அபிராமி ராமநாதனும் எழுந்து “மத்திய அரசாங்கம் தற்போது அறிமுகப்பபடுத்தியிருக்கும் சேவை சட்டம் மற்றும் காப்புரிமை சட்டம் எங்களை மிகவும் பாதிக்கும்” என்றார்.

ராகுலோ, “இது பற்றி மேலும் தகவல்கள் கொடுத்தால் நான் கவனிக்கிறேன். நீங்கள் தில்லி வந்து என்னைச் சந்திக்கலாம்..” என்றார். அதற்குள்ளாக தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன் எழுந்து, “சினிமாவுலகில் வீடியோ பைரசி ஒரு பெரிய ஆபத்தாக இருக்கிறது. இதை தடுக்க சி.ஆர்.பி.சி சட்டத்தை உரிய முறையில் மாற்ற வேண்டும்.” என்றார்.

இதற்குப் பதிலளித்த ராகுல்காந்தி, “சட்டத்தில் எது தவறு என்று நினைக்கிறீர்கள்? (இது பற்றி ராகுல் காந்தி விரிவாக பேசினார், அரசியலில் உள்ள சிக்கல்கள் பற்றி சொன்னார்) இது பற்றி தில்லி வந்து என்னைப் பாருங்கள். நிச்சயம் நான் உதவி செய்கிறேன்..” என்று சொல்லி முடிக்கப் பார்த்தார். ஆனாலும் திரைக்கலைஞர்கள் விடாமல் வற்புறுத்த ராகுலே பேச்சை டைவர்ட் செய்யும் பொருட்டு, “நெக்ஸ்ட்” என்று கை காட்டி எஸ்கேப்பானார்.

அடுத்து சக்தி அறக்கட்டளையின் அநிருத்தன் வாசுதேவன் எழுந்து ஒரு நீண்ட கேள்வியைக் கேட்டார். “பாலின சிறுபான்மையினர் தொடர்ந்து பலவிதமான ஒடுக்கு முறைகளை சந்தித்து கொண்டிருப்பதால் அப்படிப்பட்ட இளைஞர்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போல உழைக்க முடியவில்லை. மிக மோசமான ஒடுக்கு முறைகளை அவர்கள் தினசரி சந்திக்கிறார்கள்.

அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அது பற்றி மௌனத்தையே கடைப்பிடிக்கிறார்கள். இந்த விஷயத்தில், தமிழக அரசாங்கம் சில குறிப்பிட முயற்சிகளை எடுத்து வருகிறது. அரவாணிகளுக்காக ஒரு நல வாரியம் அமைத்திருக்கிறார்கள். இதை பிற மாநிலங்களும் கடைபிடித்தால் நன்றாக இருக்கும். ஒரு நபரின் பாலியல் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நீங்கள் ஒரு உறுதியான முடிவு எடுக்க வேண்டும்.” என்றார்.

இதற்குப் பதில் சொன்ன ராகுல், “ஒருவருக்கு ஒழுக்கம் இருக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. எனக்கு என் ஒழுக்கம் இருக்கிறது. எனக்கு என் கருத்துகள் இருக்கின்றன. அதை எல்லோருக்கும் தெரியும் வண்ணம் வெளிபடுத்தும் உரிமையும் எனக்கு இருக்கிறது. நான் என்ன சொல்கிறேன் என்றால் உங்களுடைய ஒழுக்கத்தை எனது கருத்துகளைக் கொண்டு தீர்மானிப்பது எனது வேலையில்லை. இதுவரை இந்தப் பிரச்னையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதோ, அது எங்களாலேயே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா..? article 377 விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருந்தோம். காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரும் அதை ஆதரித்தார்கள். ஒரு தனி நபராக, உங்கள் முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து..” என்று ராகுலும் மிக நீட்டமாகவே விளக்கமளித்தார்.

இலங்கை பிரச்சினைப் பற்றி அதுவரையில் யாரும் தொடாமல் இருந்த நிலையில் கவிதா முரளிதரன் அது பற்றி கேள்வியெழுப்பினார்.

“நான் நான்கு முறை இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறேன். அங்கே ஈழ மக்கள் பட்ட, படுகிற அவஸ்தைகள் கொடூரமானவை. இந்த விஷயத்தில் இலங்கையில் உள்ள தமிழர்கள், காங்கிரஸ் அரசாங்கத்தால் தாங்கள் கைவிடப்பட்டவர்களாக உணர்கிறார்கள். போரினால் பட்ட காயங்களைவிடவும் இந்த வேதனை அவர்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. பேரழிவு போர் சமயத்திலும் இந்தியா தலையிடவில்லை. போர் முடிந்த பிறகு அவர்களுக்கு வீடுகள் கட்டி தருவது தவிர நாம் எதுவும் செய்யவில்லை. இத்தோடு தமது கடமை முடிந்துவிட்டதாக இந்திய அரசு நினைப்பதுபோல் தெரிகிறது..” என்றார் கவிதா.

இதனைக் குறுக்கிடாமல் பொறுமையுடன் கேட்ட ராகுல் தான் தயாராக கையில் வைத்திருந்த குறிப்புகளைப் படித்தே இதற்குப் பதில் சொன்னார்.

“இலங்கை பிரச்னையில் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்பது தவறு. 2000 கோடி ரூபாய் ரயில்வே லைன் அமைக்க கொடுத்திருக்கிறோம். 80,000 வீடுகள் கட்ட உதவி செய்திருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் ஒரு மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அங்கு இந்திய தூதரகம் திறக்கப்பட்டிருக்கிறது. மற்ற பகுதிகளில் திறக்கும் எண்ணமும் இருக்கிறது. நீங்கள் சில வீடுகள் என்று சொல்கிறீர்கள். 80,000 வீடுகள் என்பது சில வீடுகள் அல்ல. 2000 கோடி ரூபாய் என்பது கொஞ்சமான நிதியும் அல்ல. இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்பது நமது நாட்டு நலன் சார்ந்த விஷயம்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து பல முனைகளில் இருந்தும் குரல்கள் எழும்பின. “தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்திருகிறதா?” என்று கேட்டார் ஒருவர்.

இதற்கும் பதில் அளித்த ராகுல், “இலங்கை அரசாங்கம் தமிழர்களை நடத்தும் விதம் குறித்து எங்களுக்கு கடுமையான ஆட்சேபனைகள் இருக்கிறது. நாங்கள் இலங்கை அரசாங்கம் மீது அழுத்தத்தை கொடுத்துதான் வருகிறோம். பிரணாப் முகர்ஜி, நாராயணன் உட்பட பல பிரதிநிதிகளை அனுப்பியிருகிறோம். ஆனால் இன்னொரு நாடு மீது கொடுக்கப்படும் அழுத்தத்திற்கு சில எல்லைகள் இருக்கிறது. நாங்கள் அந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்துதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட அழுத்தத்தை நாம் கொடுக்க மாட்டோம் என்று நீங்கள் ஏன் நினைகிறீர்கள்? அவர்கள் நமது மக்கள்..” என்றார்.

இந்த நேரத்தில் வேறொருவர் எழுந்து “நீங்கள் இலங்கை அரசு செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிக்கூட பேசவில்லையே..” என்றார்.

சற்று டென்ஷன் கூடிய நிலையில் பேசத் துவங்கிய ராகுல், “மன்னிக்க வேண்டும். நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. இங்கு நடந்த ஐந்து தேர்தல் கூட்டங்களிலேயே நானே அதைப் பற்றி பேசியிருக்கிறேன். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமல்ல, மனிதர்கள் அப்படி நடத்தப்படக்கூட கூடாது. நமக்கு இலங்கை தமிழர்களுடன் நெருங்கிய உறவு இருக்கிறது. இந்தியாவிற்கு இருக்கிறது. தமிழ்நாட்டிருக்கு இருக்கிறது. இந்த அரசாங்கத்தால் என்ன முடியுமோ, அதை நாம் அவர்களுக்கு நிச்சயம் செய்வோம். அதை நான் தனிப்பட்ட முறையிலும் செய்வேன். இந்தப் பிரச்னை தீர்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இன்னும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள்..?” என்று அவரே கேள்வியெழுப்பினார்.

இந்த நேரத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த மாலன் எழுந்து “இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்திருக்க வேண்டும்..” என்றார்..

இந்த நேரத்தில் ஒரு கேள்வி அரங்கத்தில் எழுந்தது. ”நீங்கள் ராஜபக்சேவை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு அழைத்தீர்களே..?” என்று..! கேள்வி கேட்டவர் எழுத்தாளர் தேவிபாரதி.

பட்டென்று தனது கைகளைத் தூக்கிக் கும்பிட்டுக் காட்டிய ராகுல், “அவரை நான் அழைக்கவில்லை” என்றார். தேவிபாரதியும் விடாமல், “உங்களது காங்கிரஸ் அரசுதான் ராஜபக்சேவை அழைத்தது. அது எங்கள் விருப்பத்திற்கு எதிரானது..” என்றார்.

கூடவே அடுத்துச் சொல்ல வேண்டியவைகளை தமிழில் தேவிபாரதி சொல்லத் துவங்க.. ஒரு அளவுக்கு மேல் புரியாத நிலையில் கேட்டுக் கொண்டிருந்த ராகுல்.. பட்டென்று அவரைப் புறக்கணித்துவிட்டு அடுத்த நபருக்குத் தாவிவிட்டார். இந்த நேரத்தில் இவருக்கு வேறு யாராவது ஆங்கிலத்தில் பேசி கை கொடுத்திருக்கலாம்..

அடுத்து பஞ்சாயத்து அமைப்புகள் அவற்றின் செயல்பாடுகள் பற்றி ஒருவர் கேள்வியெழுப்பினார். இந்த நேரத்தில் ராகுலின் செயலாளர் இன்னும் 2 நிமிடங்கள்தான் என்று ஞாபகப்படுத்திவிட ராகுல் அவசரத்துடன் பேசத் தொடங்கினார்..

“பஞ்சாயத்து அமைப்புகள் பற்றி நிறைய ஆர்வம் இருக்கிறது. இதை பற்றி என்னை தில்லி வந்து சந்தியுங்கள்.” என்று கேட்டுக் கொண்டார்.

விடைபெறும்போது, “ நான் கிளம்புகிறேன். விடைபெறுவதற்கு முன்பு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இலங்கை தமிழர் பற்றிய பிரச்னையை எழுப்பியிருக்கிறீர்கள். இந்திய அரசாங்கம் தொடர்ந்து இலங்கை மீது அழுத்தம் கொடுகிறது. இது எனக்கு தெரியும். காரணம், இந்திய அரசாங்கத்திடம் நானே இதைப் பற்றி தொடர்ந்து பேசியிருக்கிறேன். இனி நான் இதை தனிப்பட்ட முறையில் இன்னும் தீவிரமாக எழுப்புவேன். தனிப்பட்ட முறையிலும் கவனம் செலுத்துவேன்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

கீழே இறங்கிய ராகுலிடம் கை குலுக்கவும், புகைப்படம் எடுக்கவும் கூட்டம் முண்டியடித்தது. ஒரு சிலர் சில கோரிக்கைகள் பற்றிய கோப்புகளை அவரிடம் கொடுத்தார்கள். அனைத்தையும் வாங்கிக் கொண்டு கிளம்பினார்.

நிகழ்ச்சி துவங்கிய சில நிமிடங்களில் ராகுலுடன் வந்திருந்த இளைஞரணித் தலைவர்களே மைக்குகளை வாங்கிக் கொண்டார்கள். வந்திருப்பவர்களில் முக்கியப் பிரமுகர்கள் யார் என்று அந்த வெளிமாநில இளைஞரணித் தலைவர்களுக்குத் தெரியாததால், நமது பிரபலங்கள் பலருக்கும் கேள்வி கேட்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

ராகுலே கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் பேசியிருப்பார் என்று நினைக்கிறேன்.. கேள்வி கேட்டவர்களும் மிக அதிகமான நீளத்திற்கு கேள்விகளை இழுத்துக் கொண்டே போனதும்கூட நேரமின்மைக்கு ஒரு காரணமாகிவிட்டது.

150 பேரை அழைத்து ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்தாக வேண்டுமெனில் முடிகிற காரியமா..? ஒருவருக்கு ஒரு கேள்வி.. இரண்டு வரிகளில் கேள்விகளை முடித்திருந்தால்கூட நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கும். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கடைசியில் கேள்வி கேட்க எழுந்த மதனைக்கூட உட்கார வைத்துவிட்டார்கள்.

நானும் ஐந்து கேள்விகளோடு சென்றிருந்தேன். இன்னும் ஒரு பதினைந்து நிமிடங்கள் நீடித்திருந்தால்கூட நிச்சயமாக ஒரு கேள்வியாவது கேட்டிருப்பேன். வாய்ப்பில்லாமல் போனதில் எனக்கும் வருத்தம்தான்..!

அதே சமயம் இன்னும் கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்திருந்தால் பலரையும்போல் இடைமறித்தே அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது..! ம்.. இப்போது வருத்தப்பட்டுப் புண்ணியமில்லை..!

அத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு போனதையே சில நண்பர்களும், தோழர்களும் விரும்பவில்லை. “ராகுலை நீங்கள் ஏன் சென்று சந்திக்க வேண்டும்..?” என்கிறார்கள்.

நான் கேட்க நினைத்திருந்த கேள்விகளில் ஒன்று : “நளினியையும், மற்றவர்களையும் விடுதலை செய்ய ஏன் நீங்களும், உங்களுடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை? உங்களுடைய தாயார் விரும்பினால் நளினியை விடுதலை செய்வதில் எனக்கு ஆட்சேபணையில்லை என்று கலைஞர் சொல்லிவிட்டாரே. இப்போது நீங்களும், உங்களது தாயாரும் விரும்பினால் நளினி விடுதலையாவாரே. ஏன் அவருக்குக் கருணை காட்ட மறுக்கிறீர்கள்..?” என்பதைத்தான்..!

இந்தக் கேள்வியை சக பத்திரிகையாளர்களே ராகுலிடம் கேட்கலாம். சோனியாவிடம் கேட்கலாம். கேட்டிருக்கலாம். ஆனால் இதுவரையில் எனக்குத் தெரிந்து கேட்கவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.

இது என்றில்லை..! கலைஞரிடம்கூட நீராராடியா டேப் விவகாரத்தில் கனிமொழி, தயாநிதி பற்றிச் சொல்லியிருப்பதற்கு என்ன பதில் என்றுகூட நமது பத்திரிகையாளர்கள் கேட்டதில்லை. கேட்க முடிவதில்லை என்பதுதான் உண்மையானது.

ஏனெனில் கலைஞர் அதன் பின்பு கோபப்படுவார். பிரஸ் மீட்டை கேன்ஸல் செய்வார். நமக்கு நியூஸ் எதுவும் கிடைக்காது என்பதோடு, இது போன்ற ஆளுகின்ற அரசுகளை சங்கடப்படுத்தும் கேள்விகளை பத்திரிகை முதலாளிகளே விரும்பாததும் ஒரு காரணமாக இருக்கிறது..!

இதேபோலத்தான் ஜெயலலிதாவிடம் “எப்படி ஒரே வருடத்தில் 66 கோடிக்கு அதிபதியானீர்கள்?” என்றோ, கனிமொழியிடம் “ராசா மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கரிசனம்..? நீராராடியாவிடம் அப்படி பேசியிருக்கிறீர்கள்?” என்றோ யாரும் கேள்வி கேட்டதே இல்லை.

பத்திரிகையாளர்கள் சம்பளத்திற்கு வேலை பார்ப்பதால் முதலாளிகள் எப்படி இருக்கச் சொல்கிறார்களோ.. என்ன எழுதச் சொல்கிறார்களோ அதையே செய்துவிட்டுப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

பத்திரிகை முதலாளிகள் மாறினால் ஒழிய இந்த நேரடியான, உண்மையான, பத்திரிகை தர்மம் வெளிப்பட வாய்ப்பில்லை.. இந்தச் சூழலில் இது போன்று எந்தக் கேள்வியும் கேட்கலாம் என்கிற வாய்ப்பு வருகின்றபோது அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது என்று நினைத்துத்தான் இந்த நிகழ்ச்சிக்குச் சென்றோம்.. சென்றேன்.. அழைத்தமைக்காக அமைப்பாளர்களுக்கு எனது நன்றிகள்..!

பத்திரிகைகளை உள்ளே அனுமதிக்காததால் பெரும் ஏமாற்றத்துடன் அவர்கள் வெளியிலேயே காத்திருந்தார்கள். ராகுல்காந்தி ஹோட்டலை விட்டு வெளியேறிய பின்புதான் பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். வெளியில் வந்த பிரபலங்களிடமும், மூத்தப் பத்திரிகையாளர்களிடமும் பல்வேறு சேனல்களும் நடந்ததைக் கேட்டு பேட்டியெடுத்துக் கொண்டன. இதில் அதிகமாகக் கல்லா கட்டியவர் அண்ணன் ஞாநிதான்..!

ஈழப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு ஏற்படும்வரையிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கான எதிர்ப்புக் குரல் நீடிக்கும் என்பதை ராகுல் இந்தக் கூட்டத்தின் மூலம் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்..!

இந்தக் கட்டுரைக்கு பெருமளவில் உதவிய பத்திரிகையாளர் கவிதா முரளிதரனுக்கு நன்றி..!

சில இணையத்தளங்கள், சில பத்திரிகைகளில் கிடைத்தத் தகவல்களை வைத்தும் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் நன்றி..!

http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_25.html

தமிழக மக்களின் அரசியல் இந்த கேள்விகளுக்கு, முக்கியமாக தொப்புள் கோடி உறவுகளான தமிழீழ உறவுகள் பற்றிய கேள்விகளுக்கு நன்றிகள்

இன்று தமிழக மக்களுக்கு ஒரு சரியான தலைமை கிடைக்கும் பொழுது உலகத்தமிழினம் மீண்டும் தலைநிமிர முடியும்.

ராகுலுக்கு நெருக்கடியை உணர்த்திய அனைவருக்கும் நண்றி...

80 000 வீடுகள் இலங்கையில் இந்தியாவால் 2000 கோடி செலவில் கட்டப்படும் நிகழ்வு இதேகாலத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்தனவே....???

புகையிரப்பாதை சிங்களவர்கள் வடக்குக்கு வந்து போக வசதியாக இருக்கலாம்... தமிழர்களுக்கு என்ன நன்மை என்கிறார்...??? `

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.