Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ விடுதலைப்புலிகளின் தோல்வி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தோல்வியாக ஒழுங்கான முறையில் உருமாறிக் கொண்டிருக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தோல்வி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தோல்வியாக ஒழுங்கான முறையில் உருமாறிக் கொண்டிருக்கிறது

மனோ கணேசனுடன் ரய்சா விக்கிரமதுங்கவின் ஒரு நேர்காணல் ((நன்றி: சண்டே லீடர்)

கேள்வி:- ஒரு மனித உரிமைகள் பிரச்சாரகராக ஒரு தமிழ்கட்சித் தலைவராக ஸ்ரீலங்காவில் தமிழர்களின் தற்போதைய நிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- இதில் இரண்டு விதமான கணிப்புகள் உள்ளன. முதலாவது தமிழர்களின் தினசரி வாழ்க்கை.வடக்கில் இன்று அது பேரவலமாக உள்ளது. இரண்டு நாட்களின் முன்னர்தான் ஒரு வலயக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.அதற்கு மூன்று நாட்களின் முன்னர்தான் ஒரு இந்து மத அர்ச்சகர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.நேற்று மீசாலையில் முன்பு கப்பம் கோரி கடத்தப்பட்டிருந்த ஒரு இளைஞரின் சடலம் கண்டு பிடிக்கப் பட்டது. இந்தக் கொலைகள் யாவும் நடைபெற்றிருப்பது இராணுவத்தின் இறுக்கமான கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தில், இராணுவத்தின் அனுமதி இன்றி யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு நகர்வும் மேற்கொள்ள முடியாது. இவைகள் சில உதாரணங்கள் மட்டுமே. ஒழுங்காக நடைபெறும் கொலைகளும் ஆயுதமுனைக் கொள்ளைகளும் யாழ்ப்பாணத்தில் இப்போது நடைபெறும் தினசரி நிகழ்ச்சிகள். இந்த விடயத்தில் என்னுடன் முரண்படுபவர்கள், யாழ் குடாநாட்டின் காவல்துறையினரின் மாதாந்த பதிவுப் புத்தகத்தை கேட்டு வாங்கிப் பார்வையிடலாம். அரசாங்கம் கோருவது எல்.ரீ.ரீ.ஈ தோற்கடிக்கப் பட்டு விட்டதாக.

யாழ்ப்பாண இராணுவத் தளபதி திரும்பவும் கூறுவது ஆயதம் தாங்கிய சில மூலகங்களே இந்த கொலை,கொள்ளைகளுக்கு காரணம் என்று. தளபதி அவர்களே யார் இவர்கள்? வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளிலும் உள்ள தமிழ் சமூகத்தவர்களிடையே மிகவும் மோசமான பயப்பிராந்தி நிலவுகிறது. ஐயத்துக்கிடமின்றி கொழும்பிலும் இதன் பிரதிபலிப்பு காணப்படுகிறது.இந்தக் குற்றச்சாட்டை போர் நிகழ்ந்த காலகட்டமாகிய 2005 இலிருந்து 2009 ல் நடந்த மனித உரிமை மீறல்களுடன் ஒப்பீடு செய்து ஒருவர் தப்பித்துக் கொள்ள நினைக்கலாம்,அப்போது நாளாந்த அடிப்படையில் 10 தமிழர்கள் கொழும்பிலும்; வடக்கு மற்றும் கிழக்கில் எண்ணிக்கையில் அடங்காத அளவிலும் கடத்தப் பட்டு வந்தார்கள். ஆனால் இப்போது யுத்தம் முடிவடைந்து விட்டது – அப்படித்தான் அரசாங்கம் சொல்கிறது. தமிழ் மக்கள் இந்த புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சமாதானத்தின் பங்கிலாபத்தை அனுபவிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.ஆனால் அந்த அபூர்வமான பொருள் அங்கே இல்லை.

அடுத்த கணிப்பானது, போரின் முன்பும் போரின்போதும் என்ன நடந்தது என்பதற்கு பதிலளிப்பதற்கு சாதாரணமான அரசின் முயற்சிகள் குறைவாகவே உள்ளன. இறந்த காலத்திலேயே வாழும்படி நான் தமிழ் மக்களை ஊக்குவிக்கவில்லை. ஆனால் சாதாரணமாக நடந்தவற்றை எல்லாம் மறந்து விடுங்கள் என்று அந்தக் குடும்பத்தார்களிடம் சொல்லாதீர்கள். போருக்கு முன்னால் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் வைத்து பல தமிழர்கள் கடத்தப் பட்டார்கள, பலர் காணாமற் போக்கடிக்கப் பட்டார்கள் அல்லது கொலை செய்யப் பட்டார்கள். போரின்போது பெருந்தொகையான மரணங்கள் நிகழ்ந்தன, விசேடமாக இறுதிக்கட்டப் போரின் போது.எமது மக்களுக்கு இதற்கான பதில், இதற்கான உத்தரவாதம் தேவை, எனவே இந்த விடயங்கள் தீர்க்கப் படாதவரை இது சம்பந்தமான கேள்விகளுக்கு விடை கிடைக்காதவரை முட்டாள்களாலும் உதவாக்கரைகளாலும் மட்டுமே மனித உரிமைகள் நிலமைகள் முன்னேற்றமடைந்துள்ளன எனக் கூற முடியும். மனோ கணேசன் முட்டாளுமல்ல உதவாக்கரையுமல்ல.

கேள்வி:- தேசிய கீதத்தின் சரியான பயன்பாட்டைப் பற்றிய சமீபத்திய உத்தரவுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில்:- தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பு வானத்திலிருந்து நேற்று விழுந்ததல்ல. அது 1950 திலோ அல்லது அதற்கு முன்னமேயிருந்துநடைமுறையிலுள்ளது. ஆனந்த சமரக்கோன் அதை உருவாக்கியதும் அப்போது கொழும்பு சகிராக் கல்லூரியில் ஆசிரியராகவிருந்த புகழ்பெற்ற தமிழ் பண்டிதரும் கவிஞருமான நல்லதம்பிப் புலவர் அதை மொழிபெயர்த்தார்.சிங்கள வரிகள் யாவும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டன. இசையமைப்பும் அதேபோலவே இருந்தது.அரசாங்கம் மகிழ்ச்சியடைய வேண்டியது என்னவென்றால் ஒரு தமிழ் பதிப்பு 1940 களிலிருந்து பாடப்பட்டு வந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் சுனாமிப் பேரழிவில் பாதிக்கப் பட்டவர்களின் நினைவு அனுசரிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக பிரதம மந்திரி யாழப்பாணத்துக்கு பயணம் செய்தார். யாழ்ப்பாணத்தில் பொது நிகழ்வுகளில் தேசிய கீதத்தை எந்த மொழியில் பாடுவது என்று பெரிய விவாதமே நடந்தது. அன்றைய தினம் பாவப்பட்ட பாடசாலை மாணவர்கள் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு வற்புறுத்தப் பட்டதற்கு நாங்கள் அனைவரும் சாடசியாக்கப் பட்டோம். ஏன்? நான் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்கிறேன்,தமிழ் இந்த நாட்டில் ஒரு அரசகரும மொழி இல்லையா?அம்பாந்தோட்டையிலோ அல்லது காலியிலோ நடக்கும் ஒரு அரசாங்க நிகழ்வில் தேசிய கீதத்துக்கு தமிழைப் பயன் படுத்துமாறு யாரும் கேட்கப் போவதில்லை.

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் கருணா அம்மானோ ஒரு பொது நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தென்பகுதியின் உட்புறத்துக்கு விஜயம் செய்தால், தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பினைப் பாட அரசாங்கம் அனுமதிக்குமா? நான் அப்படி நடக்கும் என நினைக்க வில்லை. பிரதமர் மகிழ்ச்சியோடும் ஆதரவோடும் அந்த இளம் பாடசாலை சிறார்களை அவர்களது சொந்த மொழியிலேயே பாட அனுமதித்திருக்க வேண்டும்.அது தான் அரச தலைவருக்குரிய நன்னடத்தையாக இருந்திருக்கும்,அத்தோடு அந்தச் சிறுவர்களுக்கு சிங்களம் தெரியாது தமிழ் மட்டுமே தெரியும் என்கிற செயல்முறைக்கும் ஏற்றதாகவும் இருந்திருக்கும். இதில் ஏற்றவும் சிறந்த நகைச்சுவை என்னவென்றால் தமிழ் சிறுவர்களிடத்தும் பெரியவர்களிடத்தும் சிங்களத்தை வலுகட்டாயமாகத் திணித்து விட்டு இந்தப் பிரதம மந்திரி தனது பேச்சில் தமிழர்களின் இதயங்களையும் சிந்தனைகளையும் வெல்வதின் மூலம் தேசிய ஐக்கியத்தை நிலை நிறுத்தக் கோரியுள்ளார். அது ஒரு கேலிக்கூத்து.சமத்துவம் இல்லாமல் அங்கு சமாதானம் எப்படி வரும் ஐயா? தமிழ் பேசும் மக்களை அதுவம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழுமிடத்தில் சிங்களத்தில் தேசிய கீதம் பாட வற்புறுத்துவது சிங்கள பௌத்த ஏகாதிபத்தியம். தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடை செய்யும் இந்த முயற்சி தமிழ் மக்களை இந்த நாட்டில் அந்நியப் படுத்த மேற்கொள்ளப் படும் மற்றொரு வருத்தத்துக்குரிய செய்கை.நான் ஆச்சரியப் படுவது என்னவென்றால், தேசிய நல்லிணக்கத்துக்கான ஆலோசனைகளைப் பற்றிப் பேசிவரும் அரசாங்கம் அதே நேரத்தில் இவ்வாறான முரண்பட்ட செயல்களை அதுவும் ஸ்ரீலங்காவுக்கு மீள் ஒருங்கிணைப்புக்கான மேலதிக முயற்சிகள் தேவையான வேளையில் மேற்கொள்வதைப் பற்றித்தான். எங்களது அரசியல் தலைவர்கள் எங்களது தேசிய கீதம் இன ஒற்றுமையின் அடையாளமாகவும் மற்றும் இனங்களை ஒன்று படுத்தப் பயன்படக் கூடிய வகையில் தமிழ் மொழியிலும் இருப்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.ஸ்ரீலங்காவில் வாழும் நாம்; இன்னும் அதிக பொதுவான மற்றும் தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு; இன,மொழி.மத வேறுபாடுகளை ஒவ்வொருவருக்குமிடையில் ஒன்று படுத்த முயலவேண்டும். ஆனால் துரதிருஸ்ட வசமாக நாங்கள் இதற்கு எதிர் திசையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி :- தமிழ் புலம் பெயர்ந்தவர்களைப் பற்றி எதிர்மறையான பல விளம்பரங்கள் செய்யப் படுகின்றனவே.அவர்களால் எழுப்பப்படும் அந்த விடயங்கள் ஏற்கத்தக்கனவா?

பதில்:- புலம் பெயர் சமூகம் ஸ்ரீலங்கா சமூகத்தின் ஒரு பகுதி. ஸ்ரீலங்காவின் சமன்பாட்டிலிருந்து யாராலும் புலம் பெயர் சமூகத்தினை நீக்கி விட முடியாது. இந்த நிலைப்பாட்டை விளங்கிக் கொண்டு அதன் நிறை குறைகளை ஆராய ஆரம்பிப்போம். ஒரு கட்சித் தலைவர் என்கிற முறையில் புலம் பெயர்ந்தவர்களின் ஆர்ப்பாட்ங்களில் புலிக் கொடியினை வீசுவதனை என்னால் அனுமதிக்க முடியாது. எல்.ரீ.ரீ.ஈ ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். இந்நாட்டின் பொறுப்புள்ள பிரஜை என்ற வகையில் இந்நாட்டு சட்டங்களை நான் மதிக்கிறேன். எல்.ரீ.ரீ.ஈ பிரித்தானியாவில் கூட தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கம் என நான் புரிந்து கொண்டுள்ளேன். உண்மையில் இந்தப் புலிக்கொடிகள் புலம் பெயர்ந்தவர்கள் சொல்ல வந்த செய்தியை தவறாக வழி நடத்தி விட்டன. அத்தோடு இங்குள்ள சில இனவாதிகளுக்கு அது ஆயதமாகியும் விட்டது. எப்படியாயினும் அது ஒரு தொழில்நுட்பப் பிரச்சனை. மிகப் பெரிய விடயம் என்னவென்றால் புலம் பெயர் சமூகத்துக்கு எதிர்ப்பு காட்ட சகல உரிமைகளும் உண்டு. ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் ஸ்ரீலங்காவின் நிலமைகளையும் இங்கு நடைபெறும் குற்றச் செயல்கள் சம்பந்தமான தங்கள் கருத்துக்களை அவர்கள் விளக்குகிறார்கள். இங்குள்ள தங்கள் இனத்துக்கும் உறவுகளுக்கும் வேண்டி அவர்கள் குரலெழுப்புகிறார்கள்.மறுபக்கத்தில் புலம் பெயர்ந்தவர்களின் ஆர்ப்பாட்டம் பற்றி கண்டனம் தெரிவிப்பவர்கள் கொழும்பில் வெகு சுதந்திரமாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். மந்திரிகள்,அரசியல்வாதிகள்,கட்சித் தலைவர்கள், ஆகியோர் இங்கு வருகை தரும் வெளிநாட்டு உயர் பதவியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், இன்னும் சொல்லப் போனால் பெரிய அளவில் ராஜாங்க தூதரகங்கள் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகங்கள் உட்பட்டவைகளின் முன்னால் கூட்டம் கூடி ஆர்ப்பாட்டம் நடத்துவது மட்டுமல்லாமல் நகரின் சுவர்களில் இழிவு படுத்தும் சுவரொட்டிகளையும் ஒட்டுகிறார்கள். நாம் வாழும் சமுதாயத்தில் இவைகள் தேவையானதுதான். ஆனால் அவை ஒரு தரப்புக்கு மட்டுமே உரித்தானதல்ல.அந்த உரிமைகள் புலம் பெயர் ஸ்ரீலங்காவாசிகளுக்கும் உரியது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

கேள்வி :- இந்த தேசிய கேள்விக்கு ஏதாவது ஒரு தீர்வு உள்ளது என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்:- என்ன தீர்வு? எங்கே? நாங்கள் தீர்வுக்கு நெருங்கியதான எந்த இடத்திலும் இல்லை.உண்மையில் இப்போதுள்ள அரசாங்கம் தமிழ் மிதவாதிகளுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் தான் வழங்கிய எல்லா உத்தரவாதித்துவம் மற்றும் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்குகிறது. யுத்தத்துக்கு பின்னான காலகட்டம் தீர்வுகளைக் கொண்டு வரும் என நாங்கள் நம்பியிருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. பயங்கரமான அழிவைத் தோற்றுவித்த யுத்தத்தின் அடி வேரான தேசிய இனப் பிரச்சனையை தீர்;த்து வைக்க வழங்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை அரசாங்கம் தவறவிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியானது தமிழ் மற்றும் முஸ்லிம்களின் தோல்வியாக ஒழுங்காக உருமாற்றப் பட்டு வருகிறது. இதில்தான் ஆபத்து தங்கியுள்ளது.இம்மாதிரியான சிந்தனைகள் அரசாங்க கொள்கை வகுப்பாளர்களின் இடையிலுள்ள மிகப் பெரிய இயலாமை. அலரி மாளிகையிலாகட்டும், பாராளுமன்றத்திலாகட்டும் ஏன் ஒரு சிறிய மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திலாகட்டும் இம்மாதிரியான சிந்தனைகள்தான் வழக்கத்தில் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அந்தச் சிந்தனையானது “நாங்கள் தமிழர்களை எதிர்த்து வென்று விட்டோம்,இது முஸ்லிம்களுக்கும் கூட ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்,இது எங்கள் சிங்களம் மட்டும் உள்ள நாடு, நாங்கள்தான் இங்கு எஜமான்கள். இந்த நிலையை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் அப்படி யாராவது இருந்தால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்.” முன்பு கூறிய தேசிய கீதப் பிரச்சனைகூட இந்த சிந்தனைகளின் வெளிப்பாடுகளில் ஒன்று.

கேள்வி :- உங்கள் சகோதரர் ஒரு நேர்காணலில் கூறியிருப்பது ஹீத்துரோ விமான நிலையத்தில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்.ரீ.ரீ.ஈ க்கு சார்பான ஒரு சிறிய குழுவினரே என்று, இந்தக் கணிப்பீட்டினை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்:- எனக்கு எனது கட்சியில் ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாராளுமன்றததில் கட்சி தாவிய அந்த நபரைப் பற்றியா பேசுகிறீர்கள்? அந்த மனிதர் எங்கள் கட்சியில் இருந்போது ஒரு குறிப்பிடத் தக்கவராக இருந்தார், இப்போது அவர் அவமானத்துக்குரிய ஒருவராகவும் எதற்கும் பயனற்ற ஒருவராகவுமே இருக்கிறார். எனவே முதற்கண் ஒரு அரசியல் அற்பனுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அது சம்பந்தமான பொது விடயங்களை உங்களுடன் பேசுகிறேன்.ஜனாதிபதிக்கு ஒக்ஸ்போட் பயணத்தை மேற்கொள்ளும்படி சிலர் தவறாக வழிகாட்டினார்கள். அதன்பின் மிகவும் நெருக்கடியான நிலையில் லண்டனில் முதல் குறி தவற விடப்பட்டதும் அதன் தொடர்ச்சியாக கொழும்பில் பல தவறான குறிகள் இலக்கு வைக்கப்பட்டன.

ஜனாதிபதி ஸ்ரீலங்கா வருவதற்கு முன்னரே பொதுசன ஐக்கிய முன்னணியில் உள்ள பல மூலகங்கள் தங்கள் சொந்த இலாபத்துக்காக அந்த நிலமையை காசாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.அரசாங்க பிரதம கொரடா தினேஷ் குணவர்தன கூட அந்த விடயத்தை பாராளுமன்றில் எழுப்பினார். முழுநாடுமே அந்த அருவருப்பான காட்சிக்கு சாட்சியாக இருந்தது. நான் அரசாங்க பிரதம கொரடாவாக இருந்திருந்தால்,நான் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருப்பேன், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் மற்றும் தமிழ் முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பேன். நான் அதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – பொதுசன ஐக்கிய முன்னணித் தலைவர் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகக் கருதாமல் நாட்டின் தலைமை சம்பந்தப்பட்ட ஒரு தேசிய பிரச்சனையாக மாற்றி லண்டன் ஆர்ப்பாட்டத்தைப் பற்றிப் பாராளுமன்றில் ஒரு பிரேரணையை நிறைவேற்ற முயற்சித்திருப்பேன். அது ஒன்றுபட்ட ஸ்ரீலங்காவின் செய்தியாக புலம் பெயர்ந்தவர்களுக்கிடையில் உள்ள மூலகங்களுக்கும் பிரித்தானிய அரசையும் கூடச் சென்றடைந்திருக்கும்

.இதற்கு மாறாக அரசாங்க அங்கத்தவர்கள் ஜனாதிபதியை கவரத்தக்க விதத்தில் புள்ளிகளைப் பெறுவதில் போட்டி போட்டார்கள். ஒரு களியாட்டக் காவடி தூக்கும் அமைச்சர் திரும்பவும் அதை வீதிகளில் இறக்கி விட்டார். இது ஜனாதிபதிக்கு லண்டனில் நடந்ததை விட அதிகமான அவமரியாதையை ஏற்படுத்தியது. அது பயனற்ற ஒரு நிலையில் முடிவுற்றது. நீங்கள் உங்கள் கேள்வியில் குறிப்பிடும் இந்த நபரும் ஒரு கோமாளி வேடம் போட்டார். அடுத்த அமைச்சர் அவை மாற்றத்தின் போது ஒரு பிரதியமைச்சர் பதவியை அடைவதற்காக அவர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.அவரும் தேர்தல் முடிவடைந்து மூன்று மாதங்களின் பின் எதிர்கட்சியில் இருந்து கட்சி தாவிய மற்றோர் பாரளுமன்ற உறுப்பினரும் கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டை நடத்தினார்கள் அதில் அவர்கள் புலம் பெயர்ந்தவர்களைப் பற்றி அவ்வாறு குறிப்பிட்டார்கள்.இப்படிச் சொல்வதனால் ஜனாதிபதியை மகிழ்ச்சியடைய வைக்கலாம் என அவர்கள் நினைத்திருப்பார்கள். இந்த கூற்றுக்கள் யாவும் பெறுமதியற்றவை, ஏனெனில் அவை நேர்மையற்றவை. அவர்கள் அரசாங்கப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் தங்கள் சொந்த நலன்களுக்காக அப்படிப் பேசுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் மூத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பொதுவாக இந்த விடயத்தை முதிர்ச்சியான நிலையில் எதிர்த்தார்கள். பொதுசன ஐக்கிய முன்னணியின் பங்காளிகள் எனச் சொல்லப் படுபவர்கள மட்டும்தான் இப்படி. இந்த மூலகங்களில் இருந்து ஜனாதிபதி பாதுகாக்கப்பட வேண்டும்.

கேள்வி :- புலம் பெயர் சமூகத்தினராலும் சில வெளிநாட்டு சமூகத்தினராலும் முன்வைக்கப் படும் போர்க் குற்றச்சாட்டுகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? போர்க்குற்றங்கள் யாவும் எல்.ரீ.ரீ.ஈ பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதின் முற்றான விளைவே என உங்கள் சகோதரர் சொல்லியிருக்கிறாரே இதை நிங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்:- போர்க் குற்றம் என்றால் என்ன? நீங்கள் சண்டையில் நேரடியாக ஈடுபடாத ஒரு ஆளுக்கு தீங்கு செய்யவோ, சித்திரவதை செய்யவோ, கொலை செய்யவோ முயற்சிப்பது மற்றும் போர்க்கைதிகளைத் தவறாக நடத்துவது என்பன. இம் மாதிரியான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன,விசேடமாக இறுதிக் கட்டப் போரின்போது அது நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கிறது. எல்.ரீ.ரீ.ஈ யோ அல்லது அரச படைகளோ யார் இதற்குக் காரணம் என்று எங்களுக்குத் தெரியாது,ஆனால் மரணங்கள் நடந்திருக்கின்றன.அதனால்தான் எங்களுக்கு ஒரு விசாரணை தேவை. அதனால்தான் இந்த நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள். நானும் அவர்களுடன் இணைந்துள்ளேன். பான் கீ மூனின் ஆணைக் குழுவுக்கு இணையாக இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள உள்நாட்டு ஆணைக் குழுவான கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் இயங்கி வருகிறது. பான் கீ மூனின் ஆணைக் குழுவை மறந்து விடுவோம், பாதிக்கப் பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் இந்த உள்நாட்டு ஆணைக் குழுவுக்கு முன்பாக பதிவு செய்த சாட்சியங்களை நீங்கள் பார்வையிட்டால் மக்களின் கடுந்துயரையும் நிலமையின் முக்கியத்துவத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.அதிக எண்ணிக்கையிலான பெண்கள் ஆணைக் குழுவுக்கு முன்பாக வந்து தங்கள் கணவன்மார்கள் அல்லது பிள்ளைகளின் இருப்பிடத்தைக் கூறுமாறு கேட்கிறார்கள். அப்படியானால் அவர்கள் எங்கே?

நாங்கள் இதற்கான பதில்களைக் கண்டறிய வேண்டும். அரசாங்க பதிவுகள் வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமே 90,000 விதவைகள் உள்ளதாகச் சொல்கிறது. இது திருமணமான ஆண்களின் மரண எண்ணிக்கை.அப்படியானால் பெண்கள்? திருமணமாகாத ஆண்கள்? குழந்தைகள்? இவை குரலற்றவர்களின் கேள்விகள்.இதை சாதாரண சிறிய விடயமாகக் கருதி உங்களால் ஒதுக்கித் தள்ள முடியாது. இது நான் முழுத் தவறையும் இராணுவத்தின் மீது சுமத்தி எல்.ரீ.ரீ.ஈ யினை மன்னிப்பதாக கருத வேண்டாம்.அங்கு யுத்தம் நடைபெற்றது. இரண்டு தெரிந்த கட்சியினரும் மற்றும் வேறு சில ஒட்டுக் குழுக்களும். அங்கு குற்றங்கள் நடந்திருப்பதாக நான் விளக்கினேன். எதுவுமே நடக்கவில்லை என்று கூறி சில சித்திரங்களுக்கு நீங்கள் ரோஜா வர்ணம் தீட்டலாம். ஒலியற்று ஊமையாகிப் போன மக்களின் குரல்களுக்காக சாவதற்கு வேண்டியே நான் வாழ்கிறேன். குரலற்றுப் போன மக்களுக்காக விசாரணை செய்து விடைகளைக் கண்டு பிடிப்போம். இதுதான் உண்மையான நல்லிணக்கத்தின் ஆரம்ப ஸ்தானம்.

கேள்வி:- வடக்கு மற்றும் கிழக்கில நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில் :- ஆரம்பத்தில் இந்த அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் மறுவாழ்வு மற்றும் மீள்கட்டமைப்பு விடயங்களை பொதுசன ஐக்கிய முன்னணியின் தனிப்பட்ட கட்சி விடயத்தைப் போலவே கையாண்டது. வடக்கு மற்றும் கிழக்கில் எண்ணிலடங்கா அழிவுகள் ஏற்பட்டிருப்பதனால் அது எல்லாக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடத்தப் பட்டிருக்க வேண்டும். மீள்கட்டமைப்பு மற்றும் மீள் குடியேற்றத் திட்டங்களில் எதிர்க்கடசியினர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்பியிருந்தார்கள்.ஆனால் அது நடக்கவில்லை. கிழக்கு மாகாணம் சுத்தமாக்கப் பட்ட உடனடியாகவே அரசாங்கம் அவசரஅவசரமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்தியது. நான் ஜனாதிபதியிடம் கேட்கிறேன் - நீங்கள் வடக்கில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை நடத்தினீர்கள். வடக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் பின் வாங்குவது ஏன்? இதைச் சுலபமாகச் சொல்லிவிடலாம் அங்கு ஒரு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால், கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்துச் சொல்வதானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றும். அதுதான் நாட்டின் முதலாவது பொதுசன ஐக்கிய முன்னணியின் கீழ் இல்லாத நிருவாகமாக இருக்கும். அபபடி நடப்பதை அரசாங்கம் விரும்பவில்லை என்பதுதான் வெளிப்படையான இரகசியம்.அதனால்தான் நான் சொல்லுகிறேன் இந்த அரசாங்கம் மீள்கட்டமைப்பு அல்லது மீள் குடியேற்றம் அல்லது அரசியல் தீர்வு எந்த முயற்சியாக இருந்தாலும் அதைத் தன் சொந்த அரசியல் நிகழ்ச்சித் திட்டப்படி நடத்துகிறது என்று. நான் ஜனாதிபதியிடம் கேட்பது உடனடியாக வடக்கு மாகாணசபையின் தேர்தல்களை எந்த வித தாமதமும் இன்றி உடன் நடத்தி வடக்கில் இராணுவ நிர்வாகத்துக்கு முடிவுகட்டி மீள்கட்டமைப்பு மற்றும் மீள் குடியேற்றத் திட்டங்களை அந்த மாகாண மக்களால் தெரிவு செய்யப்படும் புதிய மாகாணசபையிடம் கையளிக்கும்படி.இது பிரச்சனைகளின் பாதியைத் தீர்த்து வைக்கும்.

கேள்வி: :- சமீபத்தில் சில செய்திகள் தெரிவிப்பது தெற்கில் இருந்து மக்கள் வடக்குக்கு நகர்வதாக,உள்ளக இடம் பெயர்ந்தோர் இன்னமும் மீள்குடியேற்றத்துக்காக காத்திருக்கும் வெளிச்சத்தில் அதைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?

பதில் :- ஸ்ரீலங்காவின் எந்த இனத்தவரும் ரொரான்ரோவிலோ, பரீசிலோ, வெலிங்டனிலோ வாழலாம். அப்படியானால் ஏன் எங்களால் எங்கு வேண்டுமானாலும் வாழ முடியாது. எந்த ஒரு தமிழ் தலைவரோ அல்லது கட்சியோ வடக்கில் சிங்களவர் குடிவருவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என நான் நம்பவில்லை. ஆனால் இந்த விடயம் முறையாகத் திட்டமிடப்பட்டு சிங்கள மக்களை ஊக்கப்படுத்தி வடக்கிற்கு குடியேற அனுப்பி வைக்கப் படுகிறது. அவர்களுக்கு அரச ஆதரவு வழங்கப்படுகிறது. திட்டமிட்ட குடியேற்றத்துக்கும், குடிவரவுக்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. குடிவரவு தனிப்பட்ட விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். திட்டமிட்ட குடியேற்றத்தை அனுமதிக்க முடியாது. காசா நிலப் பரப்பிலோ அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்திலோ இன்று என்ன நடைபெறுகிறது. இவையாவும் வடக்கில் வாழும் தமிழர்களுக்கு ஆபத்தான உதாரணங்கள். சமீபத்தில் சிங்களவர் வடக்கில் குடியேறுவதையும் தமிழர்கள் கொழும்பில் வாழ்வதையும் சமப்படுத்தி நிறையக் கதைகள் பேசப்பட்டன.

முதலாவதாக கொழும்பில் உள்ள தமிழர்கள் புதியவர்களல்ல. அவர்கள் இந்தப் பிரதேசங்களில் 1940 முதலே வாழ்கிறார்கள். இரண்டாவதாக கொழும்பு ஒரு தேசிய தலைநகரம். மிக வசதியுடன் கிடைக்கக் கூடிய மருத்துவ மற்றும் கல்வி மற்றும் அரச சேவைகள் இங்குள்ளன. அத்தோடு ஒரேஒரு சர்வதேச விமான நிலையம் கொழும்பில்தான் உள்ளது. போரின்போது ஏராளமான தமிழர்கள் தப்பிக்க விரும்பி கொழும்புக்கு நகர்ந்தார்கள்.இப்போது போரின்போது கொழும்பில் அடைக்கலம் தேடியிருந்த ஏராளமான தமிழர்கள், திரும்பவும் வடக்கு கிழக்கில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு சமூகம் பரம்பரையாக வாழ்ந்து வரும் நிலப்பரப்பில் மற்றொரு சமூகத்தை நிரந்தரமாக குடியேற்றுவதற்கு ஆதரவளிப்பது தீய நோக்கம் கொண்ட செயல். குடிப்பரம்பியலை மாற்றமடைய வைப்பதற்காக மேற்கொள்ளப் படும் தீய செயல். அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

உண்மையில் உள்ளக இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப் படவேண்டும்.இப்போது நான் அதை பொய்யும் புரட்டுமாகவே கருதுகிறேன். மறுபக்கத்தில் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதைத் துரிதப்படுத்த வேண்டும். எல்.ரீ.ரீ.ஈ யாழ்ப்பாணத்திலிருந்து அப்பாவி முஸ்லிம்களை வெளியேற்றியபோது எனது கட்சி அதை எதிர்த்துக் குரலெழுப்பியது. நாங்கள் இன்னமும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். அந்த முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டும்.அரசாங்கம் இந்த உள்ளக இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உதவ வேண்டும். சிங்களவர்கள் எப்பொழுதும் யாழ்ப்பாணத்தில் வரவேற்கப் படுவார்கள். என்னுடைய ஏராளமான சிங்கள நண்பர்களை இணைத்துக்கொண்டு உல்லாசமாக ஆடிப்பாடிக்கொண்டு யாழ்பாணத்துக்கு சுற்றுலா செல்வதற்கு காத்திருக்கிறேன். நிச்சயமாக இறுதியில் தமிழில் தேசியகீதம் பாடப்படும்.

கேள்வி :- வழமையாக ஒரு யுத்தம் முடிவடைந்த பின் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்கள் நாடு திரும்புவார்கள்,அனால் இந்த விடயத்தில் அப்படியில்லை. மக்கள் இன்னமும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.ஏன் அப்படி என்று நினைக்கிறீர்கள்?

பதில் :- போர் முடிவடைந்து விட்டாலும் சமாதானம் இன்னமும் நிலை நாட்டப்படவில்லை;அரசாங்கம் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறி விட்டது. போர் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் ஆகிய போதிலும் அதன் தூசிகள் இன்னமும் அடங்கவில்லை. மறுபக்கத்தில் புகலிடம் தேடும் ஒவ்வொரு தமிழனின் கதையும் நியாயமானது என்று நான் சொன்னால் நான் நேர்மையுள்ளவனாக இருக்க மாட்டேன். சமீபத்தில் நான் அறிந்தேன் சிங்களவர்கள் நாட்டை விட்டு வெளியேறி தமிழர்களைப் போல நடித்து தமிழ்பெயர்களில் புகலிடம் கோருவதாக. ,அவுஸ்திரேலியா, ஐரோப்பா கனடா ஆகிய நாடுகளில் இது நடக்கிறது. ஆனால் கொள்கையளவில் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை நான் ஊக்குவிக்க மாட்டேன்.

சில விசேடமான சம்பவங்களில் சிலர் அச்சுறுத்தல்களையும் உயிராபாத்தையும் எதிர் நோக்குகிறார்கள். அவர்கள் ஓடத்தான் வேண்டும்.அவர்கள் நாட்டுக்கு வெளியே இந்த நாட்டு நிலமைகள் சீராகும் வரை வாழ்வதற்கு ஒரு இடம் தேடுவதை நான் ஆதரிக்கிறேன்.ஆனால் இன்றைய நிலையில் இந்த அச்சுறுத்தல்களையும் சவால்களையும் நியாயப் படுத்த முடியாது.கடத்தல்காரர்கள் இங்குள்ள நிலமையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதை எங்களால் அனுமதிக்க முடியாது. இப்போது நாங்கள் இன்னமும் இந்த நாட்டில் அரசின் ஆயதப் பயங்கரவாதத்துக்கு முகம் கொடுத்தாலும் கூட நான் நினைக்கிறேன் அங்கே ஒரு சிறிய இடைவெளி இருப்பதாக

அது 2005 -2010 காலத்தில் இருக்கவில்லை. அதுதான் ஆபத்து நிறைந்த இன்னலான காலம். அப்போது நான்,சிறிதுங்க, விக்கிரமபாகு, ஆகியோர் தமிழர்கள் மற்றும் தமிழ் மொழி பேசுபவாகள் ஆகியோர் மீது நடத்தப்படும் நீதியற்ற மனிதக் கொலைகள், கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராகப் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தோம். எனவே நாட்டை விட்டு வெளியேற எண்ணியிருக்கும் எனது தமிழ் சகோதர சகோதரிகளிடம் நான் சொல்வது போக வேண்டாம் என்று. எங்களோடு இருந்து எங்கள் உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் போராடும்படி.

மேலும் புலம் பெயர் அங்கத்தவர்களில்; இங்கு உண்மையான ஆபத்து காத்திருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ஸ்ரீலங்காவுக்கு திரும்பி வரவேண்டும். அரசாங்கம் கோருவதைப் போல சமாதானம் நிலைநாட்டப் பட்டு விட்டது அல்லது சொர்க்கம் இங்கு வந்து விட்டது என்றோ பரிகாசமான முறையில் அவர்களிடம் நான் உறுதியளிக்கவில்லை. இந்த அரசாங்கத்தால் ஓரிரவுக்குள் பரிசுத்தவான்களை உருவாக்கிவிட முடியாது. அரச பயங்கரவாதம் என்கிற ஆயுதம் கண்களுக்கு புலனாகிறது. ஆனால் நாங்கள் ஜனநாயகப் போராட்டங்களுக்காக அந்தச் சிறிய இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று இங்கே அந்தப் பயணத்தில தமிழர்கள் மட்டும் இல்லை. திரும்பி வாருங்கள், நாங்கள் சிங்களவருடனும் முஸ்லிம்களுடனும் ஒன்று சேர்ந்து முன்னேற்றகரமான ஜனநாயக சக்தியாகப் போராடுவோம்.

(நன்றி: சண்டே லீடர்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.