Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புத்தித் தலைகளுடன் வெற்றுத் தலைகளும் போட்டிக்குத் தயாராகின்றன!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தித் தலைகளுடன் வெற்றுத் தலைகளும் போட்டிக்குத் தயாராகின்றன!

-அங்கம்: 01 கடந்த கால ஒளியில் நின்று எதிர்கால வழியை நாம் தெரிவு செய்வோமா?

நாடடிலுள்ள பல்வேறு உள்ளுராட்சி சபைகளுடன் நமது காத்தான்குடி நகர சபையும் கலைக்கப்பட்டுள்ளதுடன், அச்சபைக்கான புதிய மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நமது பிரதேசத்தின் பிரபலங்கள் பலவும் தற்போது முனைப்புக் காட்டி வருகின்றனர். மக்களும் ‘வரட்டும் அந்தத் தீர்ப்பெழுதும் நாள்’ என்று கறுவிக் கொண்டும், உறுமிக் கொண்டும் நாட்களைக் கடத்தி வருகின்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் நமது நகரசபையில் கழிந்த ஆட்சியைக் கைப்பற்றி இருந்தவர்கள் இந்த ஊருக்கும், எமது மக்களுக்குமாகச் செய்த சேவைகளைப்பற்றி அசை போட்டுப் பார்ப்பது அவசியமாகும். அந்த வகையில் ‘வார உரைகல்’ நமது வாக்காளப் பெருமக்களுக்கு கடந்த ஐந்தாண்டு காலத்தில் பெரும்பாலும் மறந்து போயிருக்கக் கூடிய சில விடயங்களை இப்பத்தியில் நினைவுபடுத்த விரும்புகின்றது.

2006 நகரசபைத் தேர்தலும் அதன் முடிவுகளும்

காத்தான்குடி நகர சபைக்கான முதலாவது தேர்தல் 2006 மே மாதம் 20ம் நாள் நடை பெற்றபோது, 24,370 பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இருந்தனர்.

அவர்களில் 16,686 (68.46%) வாக்காளர்களே அத்தேர்தலில் வாக்களித்திருந்தனர். (இதில் எத்தனை வாக்குகள் கள்ளவாக்குகளாக அளிக்கப்பட்டன என்பது வேறு விடயம்) இவ்வாக்களிப்பில் 668 (4.00ம%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டு 16018 (95.99%) வாக்குகளே செல்மதியான வாக்குகளென அறிவிக்கப்பட்டிருந்தது.

டெலிபோன் சின்னத்தில் சுயேட்சைக் குழு-06 எனப் போட்டியிட்ட குழுவினர் 8909 வாக்குகளுக்கு ஆறு ஆசனங்களைப் பெற்றனர்.

இக்குழுவின் தலைமை வேட்பாளராகவும், நகர முதல்வருக்கான வேட்பாளராகவும் போட்டியிட்ட சட்டத்தரணி ஏ.எல். அப்துல் ஜவாத் 9914 விருப்பு வாக்குகளையும், யூ.எல்.எம்.என் முபீன் 3512 விருப்பு வாக்குகளையும், ஏ.எல். எம். மர்சூக் 2973 விருப்பு வாக்குகளையும், எஸ்.எச்.எம். அஸ்பர் 2116 விருப்பு வாக்குகளையும், எம்.எம். கலந்தர் லெப்பை 640 விருப்பு வாக்குகளையும், ஏ.எல்.எம். சலீம் 614 விருப்பு வாக்குகளையும் பெற்று நகரசபை உறுப்பினர்களாகத் தெரிவாகினர்.

இதற்கடுத்த நிலையில் நமது பிரதேச அரசியலில் முதன்முதலாகக் களமிறங்கி மெழுகுதிரி சின்னத்தில் சுயேட்சைக்குழு இல: 03 எனப் போட்டியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் 3223 வாக்குகளைப் பெற்று ஒரு உறுப்பினரைப் பெற்றது. இரண்டாவது உறுப்பினரையும் பெற அக்குழுவுக்கு 28 வாக்குகளே காணாமல் போயிருந்தன.

அக்குழுவில் போட்டியிட்ட ஏ.எஸ்.எம். சுல்பி 245 விருப்பு வாக்குகளைப் பெற்று இக்குழுவின் சார்பான உறுப்பினராகத் தெரிவானார்.

அத்தேர்தலில் மூன்றாவது இடத்தை அடைந்து 2486 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது ஒரு உறுப்பினரைப் பெற்றது.

அக்கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட றவூப் ஏ. மஜீட் 1938 விருப்பு வாக்குகளைப் பெற்று நகர சபையின் உறுப்பினராகத் தெரிவானார்.

நான்காவது ஸ்தானத்திற்கு தேசிய காங்கிரஸ் 968 வாக்குகளுடன் கரை சேர்ந்து இச்சபைக்கான கடைசி உறுப்பினரைப் பெற்றது. அக்கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட சட்டத்தரணி ஏ.ஏ.எம். றூபி 674 விருப்பு வாக்குகளைப் பெற்று சபை உறுப்பினரானார்.

இவ்வாறு தெரிவான இந்த ஒன்பது உறுப்பினர்களில் ஆறு உறுப்பினர்களைப் பெற்ற சுயேட்சைக்குழு ஆளுந்தரப்பாகப் பதவியேற்றதுடன் நகர முதல்வராக சட்டத்தரணி அப்துல் ஜவாத், உதவித் தவிசாளராக யூ.எல். எம். என். முபீன் ஆகியோரைக் கொண்டு இயங்கியது.

ஏனைய மூன்று உறுப்பினர்களும் எதிரணி உறுப்பினர்களாக சபையில் அங்கம் வகித்தனர்.

ஆளுந்தரப்பின் பதவியேற்பு வைபவம்

ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் பதவிப் பிரமாண வைபவம் 12.06.2006 திங்கட்கிழமை மாலை காத்தான்குடி இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஸ்ரீ.ல.மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கலந்து சிறப்பித்தார்.

இங்கு உரையாற்றிய எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ‘நடந்து முடிந்த தேர்தலிலே ஸ்ரீ.ல.மு. காங்கிரஸுக்கு மக்கள் தந்துள்ள ஆணையை, கடமைப் பொறுப்பை எந்த சக்திக்கும் அஞ்சாது நாம் முன்னெடுப்போம். இம்மக்களுக்காக பதவிகளைப் பெற்றிருப்போர் இரவு பகலாக உழைக்க வேண்டும். ஊழல், இலஞ்சமில்லாத நிர்வாகத்தை திறன்பட மேற்கொள்ள வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்’ எனக் குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் நகரபிதாவாக சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்ற சட்டத்தரணி ஏ.எல். அப்துல் ஜவாத், ‘இக்காத்தான்குடி நகரை வழி நடாத்தும் பொறுப்பு எம்மீது மக்களால் கையளிக்கப்பட்டுள்ளது. இனி எம்மால் நிம்மதியாகத் தூங்க முடியாது. எங்களிடம் பொறுப்புக்களைச் சுமத்திவிட்ட உங்களால் இனி நிம்மதியாகத் தூங்க முடியும். எல்லா வகையிலும் மிகவும் பின்னடைந்து காணப்படும் நிலையிலேயே நாம் இந்நகரைப் பொறுப்பேற்றுள்ளோம். எனினும், அல்லாஹ்வின் உதவியோடு எதிரணி உறுப்பினர்களையும் எங்களோடு இணைத்துக் கொண்டு இவ்வூரைக் கட்டியெழுப்பப் பாடுபடுவோம்’ எனக் கூறினார்

இங்கு பிரதி நகரபிதாவாகப் பதவியேற்ற யூ.எல். எம்.என் முபீன் பேசும்போது, ‘நீண்ட காலமாக இச்சபைக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படாத காரணத்தால் நகரின் பிரச்சினைகள் வளர்ந்துள்ளன. 1ம் குறிச்சி மடுவத்தில் அறுக்கப்படும் மாடுகளின் கழிவுகளை 6ம் குறிச்சி ஏ.எல்.எஸ். மாவத்தையில் கொண்டு சென்று கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சுகாதாரச் சீர்கேட்டை எதிர்கொள்கின்றனர்.

ஊர் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பை கூழங்களை ஆற்றங்கரைப் பகுதியில் குவித்து தீ வைக்கிறார்கள். இதனால் பகலில் துர்நாற்றத்திற்கு முகங்கொடுக்கும் அப்பகுதி மக்கள் இராக்காலங்களில் புகை மூட்டத்தால் அவதிப்படுகிறார்கள். இவ்வாறான எதிரும் புதிருமான பிரச்சினைகளுடன்தான் இன்று இந்நகரசபை நிர்வாகத்தை நாம் பொறுப்பேற்கின்றோம். எதிரணி உறுப்பினர்களின் ஆதரவோடும், மக்களின் ஒத்துழைப்போடும் இந்நகரை அபிவிருத்தி செய்ய விசுவாசத்துடன் உழைப்போம்’ என்றார்

மூன்றாவது இடத்திற்கு தெரிவாகியிருந்த உறுப்பினர் மர்சூக் அகமட்லெப்பை அங்கு பேசும்போது, ‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்லாயிரம் ரூபா செலவு செய்து செய்மதி ஊடாக எமது மக்களிடம் விடுத்திருந்த கோரிக்கையையும் புறக்கணித்தே காத்தான்குடி முஸ்லிம் மக்கள் ஸ்ரீ.ல.மு.கா.வுக்கு வாக்களித்து உள்ளனர்.

முஸ்லிம்களின் தலைவரென்று அமைச்சர் பௌஸி அவர்களையும் எமதூருக்கு அழைத்து வந்தார்கள். அவரது பேச்சையும் எமது மக்கள் கேட்கவில்லை. அவர் சார்ந்துள்ள ஐ.ம.சு. கட்சி நமது நகரில் மாத்திரமல்லாது அமைச்சர் பௌஸி வாழும் கொழும்பு மாநகரிலும் தோற்று விட்டது.

இந்த நிலைமையை அறியாமல்தான் அவர் இன்னமும் ஸ்ரீ.ல.மு. காங்கிரஸை விமர்சித்து வருகிறார். நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல்கள் மூலம் முஸ்லிம் மக்களின் ஒரே குரல் ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியிருந்தார்.

அங்கு பேசிய அனைவரும் அத்தேர்தலில் ஆளுந்தரப்பாக தாம் வென்று வருவதற்கு தனது முழுமையான ஆதரவையும் வழங்கி யிருந்த மௌலவி அல்ஹாஜ் ஏ. அப்துர்றவூப் (மிஸ்பாஹி) அவர்களைப் பெரிதும் பாராட்டிப் பேசினர்.

குறிப்பாக நகரபிதாவாகப் பதவியேற்ற சட்டத்தரணி அப்துல் ஜவாத் பேசுகையில், ‘மௌலவி அப்துர் றவூப் மிஸ்பாஹி அவர்களி;ன் வெளிப்படையான ஆதரவு நமது கட்சிக்கும், எனது வெற்றிக்கும் மிக்க உறுதுணையாக அமைந்திருந்தது. அதற்காக மௌலவி அவர்களுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எனது விஷேடமான நன்றிகளை இத்தருணத்தில் தெரிவிக்கின்றேன்’ என்றார்.

இந்நிகழ்வுக்கு மௌலவி அல்ஹாஜ் அப்துர் றவூப் மிஸ்பாஹி, ‘ஷெய் ஹுல் பலாஹ்’ ஆகியோரும் சமூகமளித்து சிறப்பித்திருந்தனர்.

தேர்தல் முடிவுகள் பற்றி ‘வார உரைகல்’லின் கண்ணோட்டம்

இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக 30.06. 2006ல் வெளிவந்த ‘வார உரைகல்’ அதன் 09வது பதிவில் பின்வருமாறு தனது அரசியல் கண்ணோட்டத்தை அன்று வரைந்திருந்தது:

காத்தான்குடி பிரதேசத்தில் 1994ல் நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலின்போது ஸ்ரீ.ல.மு.கா. வின் ஆதரவு திரட்சியாக இருந்த நிலையிலும் அக்கட்சி 6 ஆசனங்களையே பெற்றிருந்தது.

மௌலவி அப்துர்றவூப் மிஸ்பாஹி அவர்களின் சுயேட்சை அணி 2 ஆசனங்களையும், ஐ.தே. கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தது.

12 ஆண்டுகளுக்குப் பின் தற்போது நடைபெற்ற தேர்தலிலும் மௌலவி அப்துர் றவூப் மிஸ்பாஹி அவர்களின் ஆதரவுடன் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் அதே 6 ஆசனங்களையே பெற்றுள்ளது. மிஸ்பாஹி அவர்களின் ஆதரவு பெற்ற ஸ்ரீ.ல.மு. கா அதன் வாக்கு வங்கியை ஸ்திரமாகப் பேணி வந்திருப்பின் இத்தேர்தலில் அவர்கள் 8 ஆசனங்களைப் பெற்றிருக்க வேண்டும்

எனவே இப்பிரதேசத்தில் ஸ்ரீ.ல.மு.கா.வின் வாக்கு வங்கி இறங்கு முகத்தையடையத் தொடங்கியுள்ளது. மௌலவி மிஸ்பாஹி அவர் களின் ஆதரவு கிடைக்கப் பெறாதிருப்பின் ஸ்ரீ.ல. மு.கா 4 ஆசனங்களையே இத்தேர்தலில் பெற்றிருக்கும்.

இத்தேர்தலில் அளிக்கப்பட்ட 16,018 வாக்குகளில் ஸ்ரீ.ல.மு.கா. சார்பு சுயேட்சை அணி 8909 வாக்குகளையும், அதற்கு எதிரான ஏனைய அணிகள் 7109 வாக்குகளையும் பெற்றுள்ளதால் ஸ்ரீ.ல.மு.காவின் வாக்குப் பலம் 1800 என்ற சொற்ப எண்ணிக்கையில்தான் இன்று முன்னணியில் உள்ளது.

நமது மண்ணில் இத்தேர்தலின் மூலமே அறிமுகமான PMGG எனும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மிகக் குறுகிய காலத்திலேயே அதிகளவான வாக்காளர்களின் மனதில் இடம் பிடித்துள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

இவ்வியக்கத்தின் தோற்றமும், அரசியல் களப் பிரவேசமும் எதிர்காலத்தில் காத்தான்குடியை மாத்திரமல்லாது மட்டக்களப்பு மாவட்டத்திலும் கூட பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.

இதன் தேர்தல் பிரச்சார நடைமுறைகளும், அதன் எதிர்கால வேலைத் திட்டங்களாக வாக்காளர்கள் முன் வைத்த தேர்தல் விஞ்ஞாபனமும் பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

கிழக்கு முஸ்லிம் சமூகத்திடம் ஆயுததாரிகளைக் கொண்ட ஜிஹாத் அமைப்பு இயங்கி வருவதாக பெவ்ரல அமைப்பின் தலைவர் கருத்து வெளியிட்டபோது அக்கருத்திற்கு எதிராக மாபெரும் எதிர்ப்புப் பேரணியொன்றை அசம்பாவிதங்கள் ஏதுமின்றி முன்னின்று வழி நடாத்தியமையும்,

தேர்தல் பிரச்சாரக் காலத்தில் சுவரொட்டிகள், பொலித்தீன் அலங்காரங்கள், பட்டாசு வெடிகள் என்கிற ஆடம்பர அனாவசியச் செலவுகளை எல்லாம் முற்றாகத் தவிர்த்து மிக்க நாகரீகமாக முறையில் செயற்பட்டமையும் பலராலும் பாராட்டப்பட்டன.

இத்தேர்தல் காலத்தில் மாற்றுக் கட்சிகள் கீழ்த்தரமாக PMGGயை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டியும், பிரசுரங்கள் வெளியிட்டும், மேடைகளில் வசை பாடியும் தமது பாரம்பரியமான தேர்தல் நடைமுறைக்கு அவர்களையும் வலிந்து இழுத்து விட முனைப்புடன் செயற்பட்ட போதிலும் மிகப் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் அமைதிகாத்து அறவழியில் தமது பிரச்சாரச் செயற்பாடுகளைத் தொடர்ந்ததானது வாக்காளர்களையும், வாக்குரிமையற்ற இளம் மாணவ சமூகத்தையும் விழிப்படையச் செய்தது.

தனிமனித அரசியல் செல்வாக்குக் கலாச்சாரத்திலிருந்தும், அதிகாரத் தலைமையில் இருந்தும் முஸ்லிம் சமூகத்தை விடுபடச் செய்யும் நோக்கில் இஸ்லாமிய வழிமுறையிலான ‘சூறா’ எனும் ஆலோசனைச் சபையின் கூட்டுத் தலைமைத்துவக் கட்டமைப்பில் முஸ்லிம் சமூக அரசியலை வழி நடாத்திச் செல்லும் அவ்வியக்கத்தின் பரீட்சார்த்த முயற்சிக்கு அது எதிர் நோக்கிய முதலாவது தேர்தலிலேயே 3223 வாக்காளர்கள் தமது அங்கீகாரத்தை மனங்கொண்டு வழங்கியிருப்பதானது மாமனிதர் அஷ்ரப் அவர்களின் மறைவின் பின் மலினமாகிவிட்ட மாவட்ட – பிரதேச முஸ்லிம் தலைமைத்துவங்களையும் சிந்திக்கத் தூண்டியதாகவே எடுத்துக் கொள்ளலாம்.

தமது தனித்துவமான அரசியல் வழியில் சென்று காத்தான்குடி நகராட்சிமன்றில் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் காலூன்றியுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது மேலும் 28 வாக்குகளைப் பெறத் தவறியமையினால் அதன் இரண்டாவது ஆசனத்தைப் பெற முடியாது போனது உற்று அவதானிக்கப்பட வேண்டிய மற்றொரு விடயமாகும்.

எவ்வாறாயினும் எடுத்த எடுப்பிலேயே இப்பிரதேச மொத்த வாக்காளர்களில் எட்டில் ஒரு பகுதியினர் அவ்வியக்கத்திற்கு தமது அங்கீகாரத்தை வழங்கி ஆதரித்துள்ளது ஈண்டு குறிப்பிட வேண்டியதொன்றாகும்.

மேற்கண்டவாறு அத்தேர்தல் குறித்த கண்ணோட்டத்தை வெளியிட்டிருந்த ‘வார உரைகல்’ அதன் அவ்வார ஆசிரிய தலையங்கத்திலும் பின்வருமாறும் சுட்டிக்காட்டியிருந்தது:

மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் இரு வகைப்படுவர்.

மக்களின் வாக்குகளைப் பெற்று மக்களுக்கான சேவைகளை ஆற்றவெனத் தெரிவு செய்யப்படுபவர்கள் முதலாவது வகையினர். நமது நகரத்தின் நற்பணிகளை ஆற்றவென ஒன்பது மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு கடமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளனர்.

மக்களின் வாக்குகளைப் பெறாமல் மக்களின் பிரச்சினைகளையும், குறைகளையும் ஊடகங்கள் வாயிலாகச் சுட்டிக்காட்டி அவற்றுக்கான தீர்வுகளைக் காண உந்து சக்தியாகச் செயற்படும் ஊடகவியலாளர்கள் இரண்டாவது வகையினர்.

அந்த வகையில் முதலாவது வகையினருக்கு உந்து சக்தியளிப்பதற்காக ஊடகவியலாளர்களான நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

இந்நகர மக்களான நீங்கள் உங்களின் வாக்குரிமைகளை ஆணைகளாக வழங்கி முதலாவது வகையினரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விட்டீர்கள்.

இரண்டாம் வகையினரான உங்களின் பிரச்சினைகளையும், குறைகளையும் முதன்மைப்படுத்தி எடுத்துச் சொல்லும் ஊடகத்துறையினருக்கு உங்களின் ஆதரவு என்றென்றும் இருக்க வேண்டும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் ‘வார உரைகல்’ வலியுறுத்துகின்றது.

நகரசபைக் கூட்டத் தொடரின்போது மக்களின் பிரதிநிதிகள் என்ன செய்கின்றார்கள் என்பதை வாக்களித்து அவர்களை அரியாசனம் ஏற்றிய மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமைப்பாடு ஊடகத்துறையினரான எமக்குள்ளது.

இக் கடமைப்பாட்டை பொறுப்புணர்வுடன் நாமும் செய்வதற்கான உரிய வழிவகைகளை நகர சபையின் மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக ஆளுந்தரப்பினரும், சபைச் செயலாளரும் ஏற்படுத்தித் தர வேண்டும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம். – என அவ்வார ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியிருந்தோம்.

இவ்வாறெல்லாம் முத்தாய்ப்பு வைத்து முழு நம்பிக்கையுடன் பொறுப்பேற்ற நமது முதலாவது நகரசபையின் ஆளுந்தரப்பினர் கடந்த ஐந்து ஆண்டு காலத்திலும் சாதித்த வரலாற்றில் அழிக்க வொண்ணாத சாதனைகளை அடுத்த வாரம் முதல் இன்ஷா அல்லாஹ் தொடர்வேன்.

http://vaarauraikal.wordpress.com/2011/01/28/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.