Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள்

Featured Replies

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் - 4

-ஆக்கம்: நிராஜ் டேவிட்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான கேணல் ரமேஷ் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால் விசாரிக்கப்படுவதான வீடியோ காட்சி பற்றி கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம்.

உலகத் தமிழர் மத்தியில் ஒருவகை உளவியல் பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தோடே அந்த காட்சி சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினரால் வெளியே கசியவிடப்பட்டதற்கான சாத்தியம் பற்றியும் கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம்.

ரமேஷ் என்ற புலிகளின் முக்கிய தளபதி சிங்களப் படையினரிடம் சடணடைந்திருப்பது, அந்தப் படையினரைப்; பார்த்து மிரளுவது, சிங்களப் படையினரிடம் கெஞ்சுவது, இதுபோன்ற காட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் அந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கின்றது.

ரமேஷ் தொடர்பான அந்த வீடியோக் காட்சி உலகத் தமிழர் மனங்களில் ஏற்படுத்தியிருந்த உளவியல் தாக்கம் பற்றிப் பார்ப்பதற்கு முன்னதாக, ரமேஷ் என்ற போராளி தொடர்பான ஒரு சில விடயங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இந்தியப் படையினருடைய ஆக்கிரமிப்பு காலம் முதற்கொண்டு மட்டக்களப்பு வாழ் மக்கள் மத்தியிலும் போராளிகள் மத்தியிலும் மிகவும் பிரபல்யம் பெற்ற ஒருவராகவே ரமேஷ் இருந்து வந்துள்ளார்.

ரமேஷ் இந்தியப் படை காலத்தில் ரீகன் என்ற தளபதியின் தலைமையிலான அணியில் இருந்தபடி போராடிக்கொண்டிருந்தார்.

ரமேஷ் மட்டக்களப்பின் படுவான்கரையிலுள்ள அரசடித்தீவைப் பிறப்பிடமாக் கொண்டவர். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் க.பொ.த. உயர் தரம் படித்துக்கொண்டிருக்கையில் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். படுவான்கரை பிரதேசத்தில் இந்தியப் படையினருக்கு சிம்மசொப்பனமாக இருந்த பல போராளிகளுள் ரமேஷ_ம் ஒருவர்.

ஒரு சந்தர்ப்பத்தில் மண்முனைத்துறையில் முகாம் அமைத்துத்தங்கியிருந்த இந்தியப் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ரமேஷ் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த அவரைப் போராளிகள் வயல் பிரதேசங்களுக்குள் நகர்த்தினார்கள். திக்கோடைப் பிரதேசத்தில் வைத்து அவரது காயங்களுக்கு முதலுதவி அளித்துவிட்டு வாவி ஓரத்தில் அமைந்துள்ள கண்ணாக் காடுகளுக்குள் அடைக்கலம் புகுந்தார்கள்.

ரமேஷின் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட அந்தப் படுகாயம் சரியாக பராமரிக்கப்படவில்லை. பராமரிக்கும் வசதிகளும் அப்பொழுது புலிகளிடம் இருக்கவில்லை. நாளாந்த உணவிற்கும், அப்பிரதேசம் முழுவதும் பரவியிருந்த இந்திய ஜவான்களின் கண்களில் இருந்து தப்புவதற்கும் அதிக கரிசனை செலுத்தவேண்டி இருந்ததால், அவர்கள் தமது உடலில் ஏற்பட்ட காயங்கள் பற்றி சிந்திப்பதற்கு நேரம் இல்லாமல் இருந்தது.

கண்ணாக் காடுகள் என்பது மூன்று முதல் ஆறு அடிகள் மட்டுமே உயரமான, செறிவான பற்றைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பின் வாவியை அண்டிய பகுதிகளில் இந்தக் கண்ணாக்காடுகள் பரந்து காணப்படுகின்றன. இந்தப் பற்றைகளின் மத்தியிலேயே அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிப் போராளிகள் மறைந்திருந்து செயற்படுவது வழக்கம்.

இந்தியப் படையினருக்கும் இந்த விடயம் நன்றாகத் தெரியும்.

அவர்களுடன் கூடத்திரிந்த தமிழ் இயக்க உறுப்பினர்கள் இதனை அவர்களுக்கு தெரிவித்திருந்தார்கள்.

ஆனாலும், கண்ணாக் காடுகளுக்குள் மறைந்திருக்கும் புலிப் போராளிகளைக்; குறிவைப்பதில் இந்தியப் படையினருக்குச் சில சிக்கல்கள் இருந்தன. மட்டக்களப்பு முழவதும் குறுக்கு நெருக்காக ஓடிக்கொண்டிருக்கும் வாவிக்கரையை அண்டி பல மீற்றர்கள் பரந்து காணப்படும் கண்ணாக் காடுகளுள் குறிப்பாக எந்தப் பகுதியில் போராளிகள் மறைந்திருக்கின்றார்கள் என்று அவர்களுக்கு அறிந்துகொள்வது கஷ்டம். அடுத்தது கண்ணாக் காடுகளுக்குள் நுழைந்தால், அங்கு பதுங்கி நிலை எடுத்திருக்கும் புலிகளின் துப்பாக்கிக்கு, அல்லது புலிகள் விரித்து வைத்திருக்கும் பொறிகளுக்கு இலகுவாக இரையாகக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன. அதனால் புலிகள் மறைந்திருந்த பகுதிகளுக்கு சில அடிகள் தொலைவிற்கு வந்தும்கூட, அங்கு பதுங்கியிருக்கும் போராளிகளை எதுவும் செய்யமுடியாமல் திரும்பிச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் அடிக்கடி ஏற்படுவது வழக்கம்.

ஆனாலும் ஒரு வேலையை மட்டும் இந்திய இராணுவத்தினரால் சாதாரணமாகச் செய்யமுடிந்தது. கண்ணாக்காடுகளை அண்டிய பிரதேசங்கள்; வழியாக இந்தியப் படையினர் பயணம் செய்யும் சந்தர்ப்பங்களிலெல்லாம், கண்ணாக்காடுகளை நோக்கி சகட்டுமேனிக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவிட்டு செல்வது வழக்கம். அதிஷ்டவசமாக துப்பாக்கிச் சூட்டில் அப்பட்டு புலிகள் செத்துத் தொலைக்கட்டும் என்பது அவர்களது எண்ணம். சிலவேளைகளில் புலிகள் பதுங்கியிருப்பதாக அவர்கள் சந்தேகித்துவிட்டால், குறிப்பிட்ட அந்தப் பகுதிகளை நோக்கி செல்தாக்குதல்களை மேற்கொண்டு அந்தப் பகுதியையே சுடுகாடாக்கிவிடுவார்கள். இதில் அகப்பட்டு பல போராளிகளும், ஆதரவாளர்களும் கொல்லட்டதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான ஒரு ஆபத்தான இடத்தில்தான் ரமேஷ் மறைந்திருக்கவேண்டி ஏற்பட்டது.

ரமேஷ் மறைந்திருந்த கண்ணாக் காட்டை அண்டிய பிரதேசத்தில் ஒரு இந்தியப் படைப் பிரிவு வந்து முகாம் அமைத்து தங்க ஆரம்பித்தது. சாதாரணமாகவே இதுபோன்று வரும் காவல் உலா அணிகள், ஏதாவது ஒரு பகுதியில் தங்கிவிட்டு பொழுதுபட்டதும் முகாமிற்கு திரும்பிவிடுவார்கள். ஆனால் அன்று அங்கு வந்த காவல் உலா அணி, சிறிய கூடாரம்; ஒன்றை அமைத்து, அங்கேயே தங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்தப் பிரதேசத்தை அண்டிய கிராமத்தில் இந்தியப் படையினர் பாரிய முகாம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டடிருந்தார்கள். அந்த முகாம் அமைத்து முடிக்கும் வரை, முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன், அண்டைய பிரதேசங்களில் பல படைப்பிரிவினர் சிறிய சிறிய முகாம்களை அமைத்து நிலை கொண்டிருந்தார்கள். ரமேஷின் போதாத காலம், அவர் பதுங்கியிருந்த கண்ணாக் காட்டிற்கு அருகிலும் ஒரு இந்தியப் படைப்பிரிவு கூடாரம் அமைத்து நிலைகொள்ள ஆரம்பித்தது.

மிகவும் இக்கட்டான நிலை. சிறிது அசைந்தாலும் இந்தியப் படையினரின் பார்வையில் பட்டுவிடும் அபாயம். உணவு எதுவும் இல்லை. இயற்கை உபாதைகளைக்கூடத் தீர்க்கமுடியாத நிலை. போராளிகள் தமக்குள் பேசிக்கொள்ளமுடியாது. கண்களாலும், சைகைகளினாலும் மட்டுமே தொடர்புகளை பேண முடிந்தது.

இந்தியப் படையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிக்கவும் முடியவில்லை. ஏனெனில் புலிகளிடம் கைவசம் சிறிய அளவு அயுதங்களே இருந்தன. ரமேஷ் வேறு படுகாயம் அடைந்து நகர முடியாமல் இருந்தார். அதை விட, இந்தியப் படையினர்மீது தாக்குதல் நடாத்திவிட்டு எங்குமே தப்பிப்போகமுடியாத அளவிற்கு அப்பிராந்தியம் முழுவதும் இந்தியப் படையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள்.

ரமேஷின் காயம் மிகமோசமான கட்டத்தை அடைந்தது. எந்தவித சிக்சையும் அளிக்கமுடியாத இக்கட்டான நிலை.

உயிர்போகும் வலி.

வாய்விட்டு முனகக்கூட முடியாத அபாயம்.

சிறு சத்தம் வெளிவந்தால்கூடப் போதும். கூட இருந்த மற்றய போராளிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

அடுத்து என்ன நடக்கும் என்று ஒவ்வொரு கணமும் நகர்ந்துகொண்டிருந்த நேரத்தில், திகைப்பின் உச்சத்திற்கே கொண்டுசெல்லும் மற்றொரு சம்பவம் ரமேஷ_க்கு ஏற்பட்டது.

எதேச்சையாக தனது காயத்தில் கைவைத்த ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

தனது இடுப்புக் காயத்தில் இருந்து சிறிய சிறிய புழுக்கள் வெளிவருவதை ரமேஷ் உணர்ந்தார்.

அவருடன் கூடப் பதுங்கியிருந்த மற்றைய போராளிகளுக்கும் தனது நிலையை சைகையால் தெரிவித்தார். என்ன செய்வது என்று எவருக்குமே தெரியவில்லை.

இத்தனைக்கும் இந்தியப் படையின் அந்தக் காவல் உலா அணி அந்தப் பகுதியில் கூடாரம் அடித்து தங்க ஆரம்பத்து மூன்று நாட்டகளாகிவிட்டன. பத்துப் பேரடங்கிய அந்த அணி தமது கூடாரத்திற்கு அருகில் தீ மூட்டி சப்பாத்தி தயாரித்து, குறுமா தயாரித்து சாப்பிட்டபடி பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் எப்பொழுது அந்த இடத்தை விட்டு கிழம்புவார்கள் என்பதும் எவருக்கும் தெரியவில்லை. பதுங்கியிருந்த போராளிகளுக்கு உணவு வசதிகள் எதுவும் இல்லை. கைவசம் இருந்த ஓரிரு பிஸ்கட் பக்கெட்டுகளும் எப்பொழுதோ காலியாகிவிட்டிருந்தன. தண்ணீர் போத்தலிலும் ஒரு சொட்டு நீர் கிடையாது. ரமேஷ் ஒரு முடிவுக்கு வந்தார்.

சயனைட்டை உட்கொண்டு தன்னை மாய்த்துக்கொள்வதே வலியில் இருந்து மீட்சி பெறுவதற்கும், தன்னுடன் இருந்த மற்றைய போராளிகளைக் காப்பாற்றுவதற்கும் உள்ள ஒரே வழி என்று அவர் நினைத்தார். தனது உயிர்போகும் வலியால் ஒருவேளை தன்னையும் அறியாமல் கத்தித் தொலைத்துவிட்டால், தன்னுடன் தங்கியிருக்கும் மற்றைய போராளிகளின் கதி அதோ கதியாகிவிடும் என்பதே அவரது பிரதான அச்சம்.

சையணைட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு கண்களால் விடை கோரினார்.

மற்றயப் போராளிகள் அவசரப்படவேண்டாம் என்று சைகையால் கெஞ்சினார்கள்.

கண்ணாக் காட்டினுள் இப்படி இழுபறி நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், வெளியே ஒரு அதிசயம் நடைபெற ஆரம்பித்தது.

கடந்த மூன்று நாட்களாக அங்கு கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த இந்தியப் படையினர் தமது மூட்டை முடிச்சுக்கள் சகிதமாக அங்கிருந்து கிழம்ப ஆயத்தமானார்கள். அவர்களது பேச்சிலிருந்து மறைந்திருந்த புலிகளால் இதனை உணரக் கூடியதாக இருந்தது.

ரமேசுடன் பதுங்கியிருந்த ஒரு போராளியின் பெயர் முராண்டி (இயற்பெயர் வரதன்). கோவில் போரதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மிகவும் திறமைசாலி. மெதுவாக நகர்ந்து கண்ணாக்காட்டின் எல்லைக்குச் சென்று நிலமையை நோட்டம் விட்டார். திரும்பிவந்து ரமேஷிடம் இந்தியப் படையினர் வெளியேறிக்கொண்டிருக்கும் செய்தியை சைகையால் தெரிவித்தார். ரமேஷிடம் இருந்த சையனைட்டையும் பறித்தெடுத்தார்.

ஒருவாறாக இந்தியப் படையினர் அங்கிருந்து கிளம்பினார்கள்.

அன்று இரவு ரமேஷ_ம் மற்றைய போராளிகளும் வெளியேறி மாவட்டத்தின் எல்லைக் கிராமம் ஒன்றிக்கு சென்றார்கள். அங்கு தங்களது ஆயுதங்களை மறைத்து வைத்துவிட்டு, அயலிலுள்ள சிங்களக் கிராமம் ஒன்றிற்கு பொதுமக்கள் போல் சென்றார்கள். ரமேஷிட்கு அங்கு சிகிட்சை அளிக்கப்பட்டது.

கிழக்கைப் பொறுத்தவரையில் ரமேஷ் என்பவன் ஒரு கதாநாயகன்.

கருணாவின் பிரிவைத் தொடர்ந்து மட்டக்களப்பை மீட்கும் நோக்கோடு விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்களல்லவா? அந்த படை நடவடிக்கையில் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளான சொர்ணம், பாணு, சூசை, தற்பொழுது புலிகளின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கின்ற சுரேஷ் போன்றவர்கள் உட்பட பல சிரேஷ்ட தளபதிகள் நேரடியாக பங்குபற்றியிருந்த பொழுதும், அந்த படைநடவடிக்கையின் கட்டளைத் தளபதியாக விடுதலைப் புலிகளின் தலைமையால் அடையாளப்படுத்தப்படும் அளவிற்கு தளபதி ரமேஷ் முக்கியத்துவம் பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

அப்படிப்பட்ட ரமேஷ் சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்து, அந்தப் படையினரிம் கெஞ்சிக்கொண்டிருப்பதான காட்சி நிச்சயம் பாரிய உளவியல் தாக்கத்தினை ரமேஷை அறிந்தவர்களுக்கும், ரமேஷ் சார்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பை நேசிப்பவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்ததாக, ஊடகங்களில் வெளியான ரமேஷ் தொடர்பான காட்சிகள் எப்படியான பாதிப்பினை ஏற்படுத்திருந்தது என்பதை அறியும் நோக்கோடு, ரமேஷை அறிந்த, அவருடன் நெருங்கிப் பழகிய, பலரைத் தொடர்புகொண்டு இந்தச் சம்பவம் தொடர்பான ஒரு கருத்துப் பகிர்வை மேற்கொண்டேன்.

அவர்களிடம் இணர்டு கேள்விகளைக் கேட்டேன்:

1. ரமேஷ் தொடர்பான வீடியோக் காட்சி உங்களுக்கு எப்படியான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது?

2. எங்கே அந்த வீடியோ காட்சியைப் பார்த்தீர்கள்?

இது தொடர்பாக அவர்களுடன் பேசிய பொழுது, அவர்களில் பலரை அந்தக் காட்சி உளவியல் ரீதியாகப் பலவீனமடைய வைத்திருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

பலர் பல நாட்கள் துக்கமின்றி இருந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த வீடியோக் காட்சியைத் தாம் திரும்பத் திரும்ப பார்த்ததாகவும், பல நாட்கள் அந்தக் காட்சி தமது கண்களை விட்டு அகலாமல் இருந்ததாகவும் தெரிவித்தார்கள்.

சிலரோ விடுதலைப் புலிகள் தொடர்பாக தங்களது மனங்களில் இருந்த கம்பீரம், இந்தச் சம்பவத்தைப் பார்த்ததன் பின்னர் சிறிய அளவிலாவது குறைந்துவிட்டிருந்ததை ஒப்புக்கொண்டார்கள். எதிரியிடம் சரணடைந்த பல போராளிகளுக்கு தண்டணை வழங்கிய செயலைச் செய்த தளபதிகளே எதிரியிடம் மண்டியிடுவது போன்ற காட்சி ஒருவகை விரக்தியை ஏற்படுத்தியதாக பலர் கூறினார்கள்.

சிலருக்கு இனம் புரியாத அச்சம் ஏற்பட்டதாகக் கூறுகின்றார்கள்.

மொத்தத்தில் இந்தக் காட்சி உலகத் தமிழர் மனங்களில் ஒருவித உளவியல் தாக்கத்தினை ஏற்படுத்திவிட்டிருந்தது என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

ஏனென்றால் ரமேஷ் என்கின்ற தளபதியை அறிந்தவர்களுக்கு அவரது கம்பீரம், கட்டுப்பாடு, செயல், போர்குணம் போன்ற விடயங்களில் ஒரு கதாநாயகனாகத்தான் அவர் இருந்திருக்கின்றார். அப்படிப்பட்ட ரமேஷ் கூணிக், குறுகி எதிரியிடம் மன்றாடிக்கொண்டிருக்கும் காட்சியை எவராலும் இலகுவில் ஜீரணிக்க முடியவில்லை.

அடுத்ததாக, இந்த வீடியோக் காட்சியை எங்கே பார்த்தீர்கள் என்ற கேள்விக்கு, அனேகருடையது அல்ல - அனைவரது பதிலுமே: தமிழ் தேசிய ஊடகங்கள் என்றே வந்ததே.

நான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அனைவருமே ரமேஷ் தொடர்பான காட்சியை தமிழ் தேசிய ஊடகங்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் இணையத் தளங்கள், தமிழருக்குச் சார்பாக, தமிழர் நலனில் அக்கறைப்படும் ஊடகங்கள் என்பனவற்றில்தான் தாம் பார்த்ததாகத் தெரிவித்திருந்தார்கள்.

ஆக மொத்தத்தில், ரமேஷினுடைய இந்த வீடியோக் காட்சி விடையத்தில் மூன்று முக்கிய விடயங்களை இங்கு நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன்.

முதலாவது: உலகத் தமிழர் மனங்களில் பல்வேறு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு எதிரியானவன் ஒரு வீடியோக் காட்சியை வெளியிட்டுள்ளான். இரண்டாவது,: அந்த வீடியோக் காட்சி உலகத் தமிழர் மத்தியில் பல்வேறு உளவியல் தாக்கத்தினை ஏற்படுத்தத்தான் செய்தது.

மூன்றாவது: எதிரியின் அந்த உளவியல் யுத்தத்தை தம்மை அறியாமல் எமது தமிழ் தேசிய ஊடகங்களே முன்னெடுத்து இருக்கின்றன. நாம் மிகவும் அக்கறைப்பட்டு பார்க்கவேண்டிய விடயம் இது.

'ஊடக தர்மம், அறிந்துகொள்ளும் உரிமை, அறிவிக்கவேண்டிய கடமை, நாம் வெளியிடாவிட்டாலும் எதிரி வேறு வழியாக வெளியிடத்தானே செய்வான்" –என்பதுபோன்ற பல வாதங்களை நீங்கள் முன்வைக்கலாம்.

நானும் அதில் உடன்படுகின்றேன் ஒரு ஊடகவிலயாளனாக.

ஆனால் எமது எதிரி எம்மை நாசமாக்கும் நோக்குடன் எமக்கு எதிராக மேற்கொள்ளுகின்ற ஒரு உளவியல் போருக்கு, எமது ஊடகங்களே வலுச்சேர்ப்பது போன்று செயற்படுவது சரியா என்று எழுகின்ற கேள்விக்கு, என்னால் சரியான பதிலைக் கூறமுடியாமலே இருக்கின்றது ஒரு தமிழனாக.

இப்படியான ஒரு சூழ்நிலையில் எமது ஊடகங்கள் எப்படிச் செயற்பட வேண்டும்?

உலகத் தமிழரைக் குறிவைத்து எதிரிகள் மேற்கொள்ளும் உளவியல் போரை நாம் எப்படி முறியடிக்கலாம்?

எதிரி மேற்கொள்ளும் உளவியல் நடவடிக்கைகளுக்கு எமது தமிழ் ஊடகங்களையே அவன் பயன்படுத்துவதை எப்படி நாம் தவிர்க்கலாம்?

இதுபோன்று பலரது மனங்களில் எழும்பும் கேள்விகளுக்கு பதிலைத் தேடுவதானால், முதலில் உளவில் நடவடிக்கை என்றால் என்ன என்று எமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்படும் உளவியல் நடவடிக்கைகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றி நாம் சரியாக அறிந்து வைத்திருக்கவேண்டும்.

எதிர்வரும் வாரங்களில் இவை பற்றித்தாம் ஆராய இருக்கின்றோம்.

உலக சரித்திரித்தில், முக்கியமான யுத்தங்களில் ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்ட உளவியல் நடவடிக்கைகள்…..

ஈழவிடுதலைப் போராட்டத்தில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள்….

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப் படைகள் மற்றும் அதனது உளவுப் பிரிவான ஆய்வுப் பகுப்பாய்வுப் பிரிவு (Research and Analyze Wing -RAW) மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள்….

1ம் கட்டம் முதல் 4ம் கட்டம் வரையிலான ஈழ யுத்தங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள்…

இவைகள் பற்றித்தான் அடுத்த வாரம் முதல் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்

தொடரும்...nirajdavid@bluewin.ch

================================

முன்னைய பாகங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80292

  • தொடங்கியவர்

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் - 5

-ஆக்கம்: நிராஜ் டேவிட்

வன்னியில் யுத்தம் மிகக் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டம்.

அந்த நேரத்தில் புலம்பெயர் தேசங்களில் இயங்கிய அனேகமான தொலைக்காட்சிச் சேவைகள், வானொலிகள், பத்திரிகைகள், இணையத் தளங்கள் என்று புலம் பெயர் தமிழர்களால் நடாத்தப்பட்ட அனைத்து ஊடகங்களும் மிகவும் மும்முரமாக சில காரியங்களைச் செய்துகொண்டிருந்தன.

புலம் பெயர்ந்த நாடுகளில் ஆயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் ஈழத் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான ஒருகிணைப்பை இந்த ஊடகங்கள் கச்சிதமாகச் செய்துகொண்டிருந்தன.

புலம்பெயர் தேசங்களில் ஈழத் தமிழ் ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்திருப்பதற்கான காரியங்களை இந்த ஊடகங்கள் மிகவும் செம்மையாகச் செய்துகொண்டிருந்தன. வதந்திகள் பரவாமல் தடுத்தது, களத்தையும் புலத்தையும் இணைத்துவைத்திருந்தது- என்று தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக பலவிதமான பணிகளை புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் செய்திருந்தன.

இவை அனைத்தையும் கடந்து, இந்தக் காலப் பகுதிகளில் ஒரு முக்கிய பணியையும், புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் செய்துகொண்டிருந்தன.

அதுதான் உளவியல் நடவடிக்கைகள்;. (Psychological Operations)

யுத்த காலப்பகுதியில் எதிரிக்கு எதிராக தமிழ் ஊடகங்கள் செய்த உளவியல் நடவடிக்கைகள் என்பது வெளியில் தெரியாதவைகள்.

ஆனால் ஆக்கபூர்வமானவை.

தமிழர் தரப்பு நடாத்திய போராட்டத்திற்கு மிகவும் இன்றியமையாதவை.

Psycops- Psychological Operations அல்லது Psychological War என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற இந்த உளவியல் யுத்தத்தை தமிழ் ஊடகங்கள் எவ்வாறு மேற்கொண்டன, அந்த உளவியல் யுத்தத்தை மேற்கொள்வதில் தமிழ் ஊடகங்கள் எந்தனை தூரம் வெற்றிகண்டன என்பன பற்றித்தான் முதலில் நாம் ஆராய இருக்கின்றோம்.

இந்த விடயம் பற்றி விரிவாக நாம் பார்ப்பதற்கு முன்னதாக, ஒரு முக்கிய உண்மையை நாம் நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும். புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களில் வெளியாகின்ற அத்தனை விடயங்களும், அந்தந்த நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரங்களினாலும், சிறிலங்கா ஆதரவுக்; குழுக்களினாலும் கச்சிதமாகப் பதிவு செய்யப்பட்டு, மொழிமாற்றம் செய்யப்பட்டு சிறிலங்கா அரச மற்றும் இராணுவத்தின் தீர்மானம் எடுக்கம் சக்திகளுக்கு அனுப்பிவைக்ககப்பட்டுக்கொண்டிருந்தன. அதாவது புலம் பெயர் தேசங்களில் வெளிவந்த விடையங்கள் அனைத்துமே, எமது மக்களுக்குச் சென்றடைந்தன என்பதற்கு அப்பால், எமது எதிரிக்கும் சென்றடைந்தகன என்கின்ற உண்மையை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் உள்வாங்கிக் கொண்டு, உளவியல் போர் என்கின்ற விடயத்திற்குள் நுழைவோம்.

உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்ற ஒரு அம்சமும் இருக்கின்றது. அதாவது தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய அம்சம் உளவியல் நடவடிக்கையில் (Psychological Operations) இருக்கின்றது.

குறிப்பிட்ட இந்த உளவியல் நடவடிக்கையை போரிடுகின்ற அனைத்துத் தரப்புக்களுமே செய்வது வழக்கம்.

மிகப் பெரிய போர் வலுக்கொண்ட அமெரிக்கா கூட, எதிரிக்கு பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியதான உளவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அப்கான் மற்றம் ஈராக் யுத்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தது.

ஒப்பீட்டளவில் அமெரிக்காவை விட பல ஆயிரம் மடங்கு குறைந்த படைவலுவைக்கொண்ட அப்கானிஸ்தான் மீது அமெரிக்கக் கூட்டுப்படைகள் யுத்தம் புரியச் செல்லமுன்னதாகவே, அமெரிக்கா அப்கானிஸ்தானில் தான் பாவிக்க இருக்கும் நவீன ஆயுதங்கள் பற்றி பிரச்சாரத்தை செய்யத் தொடங்கியிருந்தது. அப்பானிஸ்தானில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு முன்னதாகவே, அமெரிக்காவின் இந்த ஆயுத விபரங்கள் அப்கானில் போராடும் தலிபான்களுக்குச் சென்றடையவேண்டும் என்பதில் அமெரிக்க உளவியல் பிரிவினர் மும்முரமாக இருந்தனர். அப்கானிஸ்தானின் டோராபோரா மலைப் பகுதிகளில் மறைந்திருக்கும் தலிபான்களையும், அல்கைதா உறுப்பினர்களையும் அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பான லெஸ்சிக்கட்டர் (Daisy Cutter) என்கின்ற குண்டுகள் எப்படித் தாக்கி அழிக்கப்போகின்றன என்று விபரித்து செய்திப்படம் தயாரித்து வெளியிட்டிருந்தார்கள்.

எதிரிக்கு அச்சத்தை, திகைப்பை, பிரமிப்பை ஏற்படுத்தி, எதியின் உளவியலைச் சிதைப்பதென்பது, உளவியல் போரின் ஒரு முக்கிய செயற்பாடு.

இந்த வகை உளவியல் நடவடிக்கை இந்த நவீன உலக யுத்தங்களில் மாத்திரம் உபயோகிக்கப்படுத்தப்படுவதில்லை. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பதாகவே, எதிரிக்கு திகைப்பை, குழப்பத்தை ஏற்படுத்தி எதிரியின் உளவியலைக் குறிவைக்கும் நடவடிக்கைகளை மாகா அலெக்சாந்தர் (Alexander the Great of Macedonia) மேற்கொண்டதாக, சரித்திரம் தெரிவிக்கின்றது.

கிறிஸ்துவுக்கு முன்னர் 323ஆம் ஆண்டு காப்பகுதிகளில் உலகத்தின் பல பாகங்களையும் வெற்றிகொண்ட மாபெருவீரனும், போரியல் மேதையுமான மகா அலெக்சாந்தர், எதிரிக்கு திகைப்பை ஏற்படுத்தம் உளவியல் நடவடிக்கையை மேற்கொண்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

உலகின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியபடி அலெக்சாந்தர் முன்னேறிக்கொண்டிருந்த போது, தாம் கைப்பற்றி நிலப் பிரதேசங்களில் தனது படை அணியின் சில பிரிவினரை நிறுத்தி விட்டே முன்னேறிக்கொண்டிருந்தார். கைப்பற்றிய பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காகவே அவர் இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தார். பல நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டு முன்னேறிக்கொண்டிருந்த அலெக்சாந்தர் ஒரு சந்தர்ப்பத்தில் தனது நிலமை மோசமான ஒரு கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை உணரத் தலைப்பட்டார். கைப்பற்றிய நிலங்களைப் பாதுகாப்பதற்கென்று பல நாடுகளிலும் ஏராளமான படைவீரர்களை நிறுத்திவிட்டு வந்ததால், அவர்வசமிருந்த படைவீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவடைந்து காணப்பட்டதை அவர் உணர்ந்தார்.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் எதிரி தமது தரப்பு மீது தாக்குதலை மேற்கொண்டால், தம்மால் சமாளிக்கமுடியாத ஒரு நிலை ஏற்பட்டு விடும். தற்பொழுது உள்ளது போன்று தெலைத் தொடர்பின் மூலம் தொடர்புகொண்டு மேலதிக துருப்புக்களை வரவளைக்க முடியாது. அலெக்சாந்தரின் காலப்பகுதியோ கி.மு. 353 முதல் 323 ஆண்டு காலப்பகுதி. அலெக்சாண்டர் தீர்மானித்தார்.

கைப்பற்றிய சில இடங்களை விட்டு பின்வாங்குவதென்று தீர்மனித்தார்.

அதிலும் ஒரு சிக்கல்,

முன்னேறிவந்த அலெக்சான்டரின் படைகள் பின்வாங்குகின்றதென்ற செய்தி எதிரிக்குக் கிடைத்தால், அலெக்சாண்டர் படைகளின் பலவீனம் எதிரிக்குத் தெரிந்துவிடும். பின்வாங்குகின்ற அலெக்சாந்தரின் சிறிய எண்ணிக்கையயினாலான படைகளைத் துரத்திவந்து எதிரி தாக்க முற்பட்டால், பாரிய ஆபத்து ஏற்பட்டுவிடும்.

உடனே அலெக்சாந்தர் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். எதிரிக்கு ஆச்சரியத்தையும், அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடியதான ஒரு உலவியல் நடவடிக்கையை எதிரி மீது மேற்கொண்டார் அலெக்சாந்தர்.

உலகப் போரியல் வரலாற்றில் பதிவாகியுள்ள முதலாவது உளவியல் நடவடிக்கை என்று அந்த நடவடிக்கையைக் குறிப்பிடலாம்.

அலெக்சாண்டர் ஒரு உத்தரவை தனது கவசத் தயாரிப்பாளர்களுக்கு இட்டார். சுமார் 7- 9 அடி மனிதர்கள் அணியக் கூடியதான கவசங்களையும், தலைக் கவசசங்களையும், பாரிய வாழ்களையும், தயார்செய்யம்படி உத்தரவிட்டார். அவ்வாறு தயார் செய்யப்பட்ட கவசங்களை கைவிட்டுவிட்டு, அலெக்சாண்டர் படைகள் பின்வாங்கின.

அலெக்சான்டரின் படைகள் கைவிட்டுச் சென்ற கவசங்களையும், ஆயுதங்களையும் கண்ட எதிரிப் படைகள் ஆச்சரியப்பட்டன. மகா அலக்சாண்டரின் படைகள் என்பது பூதங்களைப் போர் வீரர்களாகக் கொhண்ட படை என்று நினைத்து நடுநடுங்கின. இப்படிப்பட்ட படைகளுடன் சண்டை பிடிப்பது தமது அழிவுக்கே வழிகோலும் என்று அச்சப்பட்ட எதிரிப் படைகள், பின்வாங்கிச் சென்ற அலெக்சாண்டரின் சிறிய படையைத் துரத்திச் சென்று தாக்கத் தணியாமல், அப்படியே நின்றுவிட்டன.

எதிரிக்குத் திகைப்பினை ஏற்படுத்தி, எதிரியை அச்சமடைய வைத்து, அவனைக் குழப்பி, எதிரியின் உளவியலைச் சிதைப்பதென்பது ஒரு முக்கிய உளவியல் போர்.

இந்த உளவியல் போரினைத்தான் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் யுத்த காலங்களில் மேற்கொண்டிருந்தன.

வன்னியில் விடுதலைப் புலிகள் பாரிய முற்றுகைக்குள் உள்ளாகி, தோல்வி தமிழர் தரப்பை நெருங்கிக்கொண்டிருந்த நேரங்களில், விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலுக்குத் தயராகிக் கொண்டிருக்கின்றார்கள், இதோ அடிக்கப் போகின்றார்கள், ஸ்டாலின்கிராட் யுத்தம் போன்ற ஒன்றை மேற்கொண்டு வன்னியில் கால் பதிக்கும் அத்தனை சிறிலங்காப் படையினரையும் அழித்துவிடத் தயாராகின்றார்கள் என்று செய்திகளைக் கசியவிட்டார்கள். எதிரியை அச்சுறுத்தினார்கள்.

விடுதலைப் புலிகளின் பலம், பலவீனம் பற்றிய கச்சிதமான தகவல்கள் உள்ளிருந்தும், மேற்குலகப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்தும், சிறிலங்காப் படையினருக்கு தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த போதிலும், புலிகளின் உண்மையான நிலவரம் பற்றிய தெளிவான பிம்பங்களை பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்கள் தொடர்ந்து வினியோகித்துக்கொண்டிருந்த போதிலும், விடுதலைப் புலிகளின் உயர் பீடங்கள் மேற்கொண்ட செய்மதித் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் பதிவுசெய்யப்பட்டு செய்மதி நிறுவனங்களால் எதிரிக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலும்;, புலம்பெயர் ஊடகங்களில் வெளியாகின்கொண்டிருந்த பிரமிப்பை ஏற்படுத்தும் செய்திகள் சிறிலங்காப் படையினரின் வேகமான நகர்வுகளை ஓரளவாவது தாமதப்படுத்தியிருந்ததை, சிறிலங்காப் படையதிகாரிகள் பின்நாட்களின் ஒப்புக்கொள்ளவே செய்திருந்தார்கள்.

யாழ்க்குடாவை மீட்கும் நோக்கோடு, நோமண்டித் தரையிறக்கம் போன்ற ஒரு கடல்வளித் தரையிறக்கத்தை விடுதலைப் புலிகள் செய்வதற்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள் என்று புலம் பெயர் ஊடகங்களில் வெளியான செய்தியும், அதற்காகவே ~யாழ்செல்லும் படைஅணி| என்ற பெயரில் பல ஆயிரம் போராளிகளை புலிகள் தாயர் நிலையில் வைத்திருக்கின்றார்கள் என்ற தகவலும் சிறிலங்கா தேசத்தை போரின் இறுதிக்கட்டம்வரை அச்ச நிலையிலேயே வைத்திருந்தது.

கிளிநோச்சியை சிறிலங்காப் படைகள் ஆக்கிரமிக்கும் வரையில் சுமார் 40000 துருப்புக்களை யாழ்மண்ணில் சிறிலங்காப் படையினர் வெறுமனே நிறுத்திவைத்திருந்தது, இந்த யாழ் செல்லும் படை அணி தொடர்பாக வெளியான செய்தி காரணமாகத்தான்.

செய்தி ஊடகங்களைப் பாவித்து எதிரிக்குத் திகைப்பினை ஏற்படுத்தி, எதிரியை அச்சமடைய வைத்து, அவனைக் குழப்பி, எதிரியின் உளவியலைச் சிதைப்பதென்பது ஒரு முக்கிய உளவியல் போர். இந்தப் போரியை யுத்த காலங்களில் புலம்பெயர் தமிழ் ஊடகங்களில் அனேகமானவை கச்சிதமாகச் செய்திருந்தன என்பதில் சந்தேகம் இல்லை.

யுத்த காலங்களில் எதிரியைக் குழப்பி, எதிரியை அதிpர்ச்சியடைய, பலமிழக்கவைக்கும் உளவியல் நடவடிக்கைகளை, உலகச் சரித்திரத்தில் பல ஊடகங்கள் செய்திருக்கின்றன.

உலகப் பிரசித்தி பெற்றி பீ.பீ.சி கூட, 2ம் உலக மகா யுத்த காலத்தில் இதுபோன்ற உளவியில் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது.

வியட்னாம் யுத்தத்தின் போது அமெரிக்கா படுதோல்வி அடைவதற்கு வியட்னாம் வானொலி மேற்கொண்ட உளவியல் யுத்தமே காணம் என்றும் போரியல் ஆய்வாரள்கள் கூறுகின்றார்கள்.

ஈழத் தமிழழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துவிட்டுள்ள இன்றைய நிலையில், இந்த அடுத்த கட்டப் போராட்டத்தில் உளவியல் நடவடிக்கைகள் நிச்சயம் முக்கியமான பங்கினை வகிக்கப்போகின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே, ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்படுகின்ற உளவியல் நடவடிக்கைகள் பற்றி, அடுத்த வாரம் முதல் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்...nirajdavid@bluewin.ch

நாங்கள் விழிப்பாக இருக்க வேணும்.....

ஆக மொத்தத்தில், ரமேஷினுடைய இந்த வீடியோக் காட்சி விடையத்தில் மூன்று முக்கிய விடயங்களை இங்கு நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன்.

முதலாவது: உலகத் தமிழர் மனங்களில் பல்வேறு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு எதிரியானவன் ஒரு வீடியோக் காட்சியை வெளியிட்டுள்ளான். இரண்டாவது,: அந்த வீடியோக் காட்சி உலகத் தமிழர் மத்தியில் பல்வேறு உளவியல் தாக்கத்தினை ஏற்படுத்தத்தான் செய்தது.

மூன்றாவது: எதிரியின் அந்த உளவியல் யுத்தத்தை தம்மை அறியாமல் எமது தமிழ் தேசிய ஊடகங்களே முன்னெடுத்து இருக்கின்றன. நாம் மிகவும் அக்கறைப்பட்டு பார்க்கவேண்டிய விடயம் இது.

எங்களுக்குள் இருக்கும் மிக மிக கேவலமான விடயம் இங்கே கோடிட பட்டு இருக்கின்றது.... இப்போதும் இலங்கை அரசின் உளவியல் நடவடிக்கையை தான் எங்கட ஊடகங்கள் பல முன் எடுக்கின்றன...

உள்வீட்டு சண்டைக்கும் இலங்கை அரச உளவியல் பிரிவினர் கொடுக்கும் செய்திகளுக்கும் கொடுக்கும் முன்னுரிமை, நாடுகடந்த அரசு, இலங்கை இனக்குரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பெரிய அளவில் எங்களவர் செலவளிப்பதில்லை.... அப்படி செலவளித்தாலும் அவை கண்டு கொள்ளப்படுவதில்லை..

Edited by தயா

எங்களுக்குள் இருக்கும் மிக மிக கேவலமான விடயம் இங்கே கோடிட பட்டு இருக்கின்றது.... இப்போதும் இலங்கை அரசின் உளவியல் நடவடிக்கையை தான் எங்கட ஊடகங்கள் பல முன் எடுக்கின்றன...

உள்வீட்டு சண்டைக்கும் இலங்கை அரச உளவியல் பிரிவினர் கொடுக்கும் செய்திகளுக்கும் கொடுக்கும் முன்னுரிமை, நாடுகடந்த அரசு, இலங்கை இனக்குரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பெரிய அளவில் எங்களவர் செலவளிப்பதில்லை.... அப்படி செலவளித்தாலும் அவை கண்டு கொள்ளப்படுவதில்லை..

எம்மவர் செய்திகளை வாசிப்பதே குறைவு இதில நாம் உளவியல் தாக்கத்தை பற்றியா சிந்திக்க போறோம்....... ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.