Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாய அபிவிருத்தியும் நீர்வளப் பயன்பாடும்-இரா.சிவசந்திரன்

Featured Replies

முகவுரை:-

தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வரலாற்று ஆதாரங்களின் படி இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாண எல்லைப்பரப்பை விடப் பரந்ததெனினும் இங்கு ஆய்வு நோக்கம் கருதி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் என்றே கொள்ளப்படுகின்றது. வடகீழ் மாகாணம் 18,333 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் 558 சதுரகிலோமீற்றர் உள்நாட்டு நீர்ப்பரப்பையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.8 வீதமாக அமைகின்றது. இவை எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி,மன்னார்இ வவுனியாஇ முல்லைத்தீவு என்பன வடமாகாணத்தினுள்ளும், திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை என்பன கிழக்கு மாகாணத்தினுள்ளும் அமைகின்றன.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் உழைக்கும் மக்களில் 60 வீதத்தினர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இப்பிரதேசத்தில் விவசாயமே பாரம்பரியப் பொருளாதார நடவடிக்கையாகஇ நீண்டகாலமாக பெரு மாற்றங்கள் எதுவுமின்றி இருந்து வருகிறது. பிற்காலத்தில்; விவசாயத்துறையில் புகுத்தப்பட்ட புதிய நுட்ப முறைகள் இப்பகுதி விவசாயிகளிடையே வேகமாகப் பரவி உள்ளன. இதில் மாற்றுவிவசாயம்இ விவசாய உள்ளீடுகள்,நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவம் தொடர்பான நுட்ப முறைகள் குறிப்பிடத்தக்கவை.

நிலப்பயன்பாடு:-

தமிழர் பாரம்பரியப் பிரதேசம் அடக்கியுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாய நிலப்பயன்பாட்டை இரு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம்.

01) தோட்டச்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு

02) நெற்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு

இப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.43 வீதத்தையும் மொத்தக் குடித்தொகையில் 35.4 வீதத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை அதிகளவுக்கு வளர்ச்சி பெற்ற பகுதியாக உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப்பெறும் தரைக்கீழ் நீர்வளத்தைப் பயன்படுத்தி இப்பகுதி வாழ் மக்கள் வருடம் முழுவதும் பயிர் செய்கின்றார்கள். மிகவும் சிறிய அளவினதான துண்டு நிலங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிரச்செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வேறு எப்பாகத்திலும் இவ்வகையான செறிந்த பயிரச்செய்கை முறை மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதி செறிவான குடித்தொகையை கொண்டுள்ளது. தோட்ட நிலங்கள் அதிகளவு கொண்ட பகுதிகளில் சதுர மைலுக்கு 3000க்கு மேற்பட்டோர் வாழ்கி;ன்றனர்.

யாழ்ப்பாண குடாநாடு 1025 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இதில் 60 வீதமான பகுதியே மக்கட் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகின்றது. ஏனைய 40 வீதமான பகுதி மணல்இ பாறை ஆகியவற்றையும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ளதால் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையவில்லை. மக்களுக்கு பயன்படுகின்ற 60 வீதமான நிலப்பகுதியில் மூன்றிலொரு பகுதி குடியிருப்பு நிலங்களாக உள்ளன. பனைஇ தென்னை ஆகிய மரப்பயிர்கள் மற்றொரு மூன்றிலொரு பகுதியிற் காணப்படுகின்றன. எஞ்சிய பகுதியே நெற்பயிரும்இ தோட்டப்பயிரும் செய்கை பண்ணப்படும் விவசாயப்பகுதியாகும். அண்மைக்காலங்களில் நெல்வயல் நிலங்கள் தோட்டநிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் தோட்ட நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகின்றது.

இப்பகுதித் தோட்டங்களில் புகையிலை, மிளகாய்,வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள்,திணை வகைகள், பழ வகைகள் என்பன பெருந்தொகையாக விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப உணவுத்தேவையின் கணிசமான பங்கு யாழ்ப்பாணக்குடாநாட்டு உற்பத்தியாலேயே யுத்தத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டது. உதாரணமாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 வீதத்தையும்இ மிளகாய்ச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 15 வீதத்தையும் யாழ்ப்பாணக் குடாநாடே அடக்கியிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் விவசாயிகள் புதிய தொழில் நுட்பமுறையினை புகுத்துவதில் பேரார்வம் கொண்டவர்கள். தோட்டச்செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரம், செயற்கை உரம், களைநாசினி, கிருமி நாசினி என்பன பெருமளவு பயன்படுத்தப்பட்டு விவசாய உற்பத்தி உயர்வடைந்த நிலை காணப்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப்பகுதியின் நிலப்பயன்பாட்டை தாழ்நிலப்பயன்பாடுஇ மேட்டு நிலப்பயன்பாடு என வகைப்படுத்தலாம். மேட்டு நிலப் பயன்பாடு இப்பகுதியில் அதிகம் விருத்தி அடையவில்லை. தாழ்நிலப் பயன்பாட்டில் நெற்செய்கையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆற்று வடிநிலப் பகுதிகளிலும் நீர்த்தேக்கத்தினை அண்டிய பகுதிகளிலும் வண்டல்மண்இ களிமண் படிவுகள் காணப்படும் தாழ்வான பகுதிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதிகளில் பழைய பாரம்பரிய கிராமிய விவசாய நிலப்பயன்பாடும் புதிய குடியேற்றத்திட்ட நிலப்பயன்பாடும் வௌ;வேறான பண்புகளைக் கொண்டமைந்துள்ளன. மன்னார்,முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளின் கரையோரமாகப் பழைய விவசாய நிலப்பரப்புகள் பரந்துள்ளன. முன் காடுகளாக இருந்து தற்போது நில அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளமைந்த பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்டன.

1935 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நில அபிவிருத்திச் சட்டத்தின் பின்னர் இப்பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பல நோக்கு குடியேற்றத்திட்டம், பாரிய குடியேற்றத்திட்டம்இ கிராம விஸ்தரிப்புத் திட்டம், மத்திய வகுப்பார் குடியேற்றத்திட்டம், இளைஞர் திட்டம் ஆகியனவாக இவை அமைக்கப்பட்டுள்ளன. குடியடர்த்தி மிக்க பகுதிகளில் இருந்து மக்களை நகர்த்தவும்,நிலமற்றோருக்கு நிலமளிக்கவும்,வேலையற்றிருந்தோருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும்இ குடியேற்றத்திட்ட உருவாக்கம் ஓரளவு உதவியுள்ளது. கிளிநெச்சியில் இரணைமடுக்குளத்திட்டம்,மன்னாரில் கட்டுக்கரைக்குளத்திட்டம், வவுனியாவில் பாவற்குளத்திட்டம், திருகோணமலையில் கந்தளாய் குளத்திட்டம்இ மட்டக்களப்பில் உன்னிசசைக்குளத்திட்டம்,அம்பாறையில் கல்லோயாத்திட்டம் என்பன மாவட்டத்திற்கொன்றான உதாரணங்களாகும். பிற்;காலங்களில் இப்பகுதிகளிலே படித்த இளைஞர்களுக்கென உபஉணவு உற்பத்தித் திட்டங்கள் பல ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை மேட்டு நிலப்பயிர்களை ஊக்குவிப்பனவாகவும்இ ஏற்று நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விவசாய அபிவிருத்தி திட்டங்களாகவும் அமைந்தன.

இவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த முத்தையன் கட்டு இளைஞர் திட்டம், கிளிநெச்சி மாவட்டத்தில் அமைந்த விஸ்வமடு, திருவையாறு,இளைஞர் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. ஏனைய குடியேற்றத்திட்டங்கள் போலன்றி இளைஞர் திட்டங்கள் பொருளாதார ரீதியில் திருப்தியைத் தருவனவாக விருத்தியடைந்திருந்தன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மொத்த நிலம் ஏறத்தாழ 156692 ஹெக்டேயர் ஆகும். இது இலங்கையின் மொத்த நெல் விளைபரப்பில் பரப்பில் 31.3 வீதமாக அமைகின்றது. இப் பிரதேசத்தின் மொத்த நெல் விளை பரப்பில் 62 வீதத்தைக் கிழக்கு மாகாணம் உள்ளடக்கியுள்ளது. மொத்த நெல் விளை நிலத்தில் 33 வீதம் பருவ கால மழையை நம்பிய மானாவாரி நிலங்களாக உள்ளன. ஏனையவை நீர்ப்பாசன வசதியுடைய குளங்களை அடுத்துள்ளன. பாசன வசதியுடைய நிலங்கள் சிலவற்றிலே வருடத்திற்கு இருதடவை நெல் விளைவிக்கப்படுகின்றது. வருடத்திற்கு இரு தடைவ நெல் விளைவிக்கப்படும் விளைபரப்பு 28 வீதமாக அமைகின்றது.

பொதுவாக இப்பிரதேசத்தில் அதிகளவு நெல் விளைபரப்பு பருவ மழையை நம்பியதாகையால் பருவமழை பெய்துவரும்; காலங்களில் நெல் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. நெற்செய்கையில் நிலவும் இந் நம்பிக்கையற்ற நிலையை மாற்றவும் மிகுதி 72 வீதமான நிலப்பரப்பில் இருபோகச் செய்கையை மேற்கொள்ளவும் ஏற்கனவே பயிர்செய் பரப்பாகப் பயன்பட்டு வரும் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசன வசதியை அதிகரித்தல் வேண்டும். இவற்றில் தெளிவு பெறுவதற்கு இப்பிரதேசத்திலுள்ள நீர்வளம்இ பாசன வாய்ப்புகள் பற்றி தெளிவு அவசியமாகும்.

நீர்வளமும் நீர்ப்பாசனமும்

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் விவசாயச் செய்கை பெருமளவுக்கு மழை வீழ்ச்சியை நம்பியதாகவே அமைந்துள்ளது. வருடம் 2000 மில்லி மீற்றருக்கு (75 அங்குலம்) குறைந்த மழைவீழ்ச்சி பெறும் இலங்கையின் வரண்ட வலயத்தின் பெரும்பாகத்தை உள்ளடக்கியுள்ள தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் வருடச் சராசரி மழைவீழ்ச்சி 1250 மி.மீ ஆகும். மழைவீழ்ச்சிப் பரம்பலில் பிரதேச வேறுபாடுகள் உள்ளன. மன்னார்இ அம்பாறை மாவட்டங்களின் தென் பகுதிகள் குறைந்தளவான 750 மி.மீ முதல் 1000 மி.மீ வரை மழை பெறஇ அம்பாறைஇ மட்டக்களப்பு மாவட்டங்களின் மேற்குப் பகுதிகள் உயர்ந்தளவான 2000 மி.மீ மேற்பட்ட மழைவீழ்ச்சியை பெறுகின்றன. எனினும் 1000-2000 மி;மீ வரை (50- 75 அங்குலம்) மழை பெறும் பரப்பளவே தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் அதிகமாகும். அதாவது யாழ்ப்பாணம்,கிளிநெச்சி, வவுனியா, திருகோணமலை மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை ,மட்டக்களப்பு மாவட்டங்களின் பெரும் பாகமும் 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை பெறும் பகுதிகளாக அமைகின்றன.

இப்பகுதி வடகீழ் மொன்சூன் காற்றினாலும்இ சூறாவளி நடவடிக்கைகளினாலும் ஒக்டோபர்இ முதல் ஜனவரி வரையிலான காலப்பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. இப்பகுதியில் வருடம் முழுவதும் கிடைக்கப்பெறும் மொத்த மழைவீழ்ச்சியின் 70 வீதம் மேற்படி நான்கு மாத காலத்திற்குள்ளாகவே பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் மழை நீரில் 20-25 வீதம் புவி மேற்பரப்பு ஓடு நீராகக் கடலையடைகின்றதெனவும் 40–45 வீத நீர் ஆவியாக்கம்இ ஆவியுயிர்ப்பினால் இழக்கப்படுகின்றதெனவும்இ எஞ்சிய நீரே பயன்பாட்டிற்குரியதாக அமைகின்றதெனவும் சில கணிப்பீடுகளிலிருந்து தெரிகின்றது. இவ்வளவு குறைந்த காலத்தில் மழைவீழ்ச்சியினால் மாத்திரம் கிடைக்கும் நீர் வளத்தைப் புவி மேற்பரப்பு நீராகவும் தரைக்கீழ் நீராகவும் சேமித்துப் பாசனப் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் போதே இப்பிரதேசத்தின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் பாசனத்திற்குக் கிடைக்கக் கூடிய நீர் வளங்களை இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

01) புவி மேற்பரப்பு நீர்வளம்

02) தரைக்கீழ் நீர்வளம்

புவி மேற்பரப்பு நீர்வளம்

புவி மேற்பரப்பு நீர் வளமே யாழ்ப்பாணக்குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப்பகுதியில் பாசனத்திற்குப் பயன்படும் வளமாய் உள்ளது. தரைக்கீழ் நீர்வளம் முக்கியமாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாசனத்திற்குப் பயன்படுகின்றது.

புவிமேற்பரப்பு நீர்வளம் என்னும் போது ஆறுகள்,குளங்கள் என்பவற்றில் தேக்கப்படும் நீரினைக் குறிக்கும். இப்பிரதேசத்தில் மகாவலி தவிர ஏனையவை வறண்ட பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் ஆறுகளேயாகும். பருவ காலங்களில் மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீர் வளத்தையே இவை கொண்டுள்ளன. இவ்வகை ஆறுகளையோ கிளை ஆறுகளையோ அவற்றின் வடிநிலப்பரப்பில் தடுத்து அணைகட்டி குளங்களாக உருவாக்கியுள்ளனர். ஒரு சில ஆறுகள் திசைதிருப்ப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பாசன நாகரிகம் கிறீஸ்து காலத்திற்கு முன்பாகவே தமிழர் பிரதேசங்களில் பரவியிருந்தமையை மகாவம்சமே குறிப்பிடுகின்றது. குவேனி விஜயனைச் சந்தித்தபோது இவ்வாறான குளமொன்றின் அணைக்கட்டில் நூல்நூற்றுக் கொண்டிருந்தாள். எனவும், அக்குளம் மன்னார் பிரதேசத்தில் அமைந்திருந்ததெனவும் மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகள் சிலவற்றிலிருந்து தெரிய வருகின்றது.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியிற் காணப்படும் குளங்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

01) சிறு குளங்கள்( இவை 200ஏக்கர் பரப்பளவுக்கு உட்பட்டவை)

02) நடுத்தரக் குளங்கள்(200-1500 ஏக்கர் பரப்பளவுக்கு இடைப்பட்டவை)

03) பாரிய குளங்கள் ( 1500 ஏக்கர் பரப்பளவுக்கு மேற்பட்டவை)

இவற்றுள் சிறு குளங்களின் பராமரிப்பு அவ்வப்பிரதேச கமநல சேவை நிலையத்திடம் உள்ளது. ஏனையவை நேரடியாக நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவையாகும். 1900 ஆண்டில் இலங்கையில் நிறுவப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களமே இந் நாட்டின் விவசாய அபிவிருத்திக்கு உதவும் பொருட்டு நீர்ப்பாசனத்திட்டங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது.

1959 இல் நீர்ப்பாசனத்திணைக்களம் இலங்கைத்தீவின் உள்ளார்ந்த நீர்வளம் பற்றிய குறிப்புகளுடன் படம் ஒன்றினை வெளியிட்டது. இதில் இலங்கையிலுள்ள 103 ஆற்று வடிநிலங்கள் பலவற்றில் பெருந்தொகையான நீர்த்தேக்கங்கள்இ கால்வாய்கள்இ அமைத்து பாசன அபிவிருத்தி செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் விபரமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மேற்படி 103 ஆற்று வடிநிலங்களில் 61 வடிநிலங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நீர்ப்பாசனத்திணைக்களம், வடிகால் விருத்தியையும் நீர் வெளியேறும் அளவையையும் கருத்தில் கொண்டு ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கப்பெறும் நீரின் ஆண்டுச் சராசரி அளவை மதிப்பிட்டுப் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி வவுனியாவையும் ஆனையிறவையும் இணைக்கும் கோட்டிற்கு மேற்காக ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின் அளவானது 500 ஏக்கர் அடி நீரில் இருந்து 300 ஏக்கர் அடி நீராகக் குறைந்து செல்வதையும் கோட்டிற்கு கிழக்காக முல்லைத்தீவு,கொக்கிளாய்ப் பிரதேசம் வரை 500 முதல் 650 ஏக்கர் அடியாக அதிகரித்துச் செல்வதையும் படம் காட்டுகின்றது. கிழக்கு மாகாணத்தில் ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின் ஆண்டுச் சராசரி அளவு 1000 முதல் 1500 ஏக்கர் அடியாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதிலிருந்து வடமாகாணத்தை வடகிழக்கு மாகாணம் நீர்வளம் அதிகம் கொண்ட பிரதேசமாக அமைந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு பெறக்கூடிய நீரின் அளவும்,பல்வேறு விதமாக இழக்கப்படும் நீரின் அளவும் கணிக்கப்படின்இ தேக்கிப் பயனபடுத்தத்தக்க நீர்வளத்தின் அளவை மதிப்பிட்டு பாசனத்தை அபிவிருத்தி செய்தல் இலகுவானதாகும்.

பொதுவாக தமிழர் பாரம்பரியப் பிரதேசம் பாசன அபிவிருத்திக்கு உள்ளார்ந்த நீர் வளங்களைப் பெருமளவு கொண்டுள்ளது. இவ்வடிகால் வளங்களில் சிலவற்றிலேயே நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் அபிவிருத்தியை வேண்டியிருக்கும் சிறு, நடுத்தரக் குளங்கள் தவிர பாரிய குளங்களின் எண்ணிக்கை வட மாகாணத்தில் 10 ஆகவும், கிழக்கு மாகாணத்தில் 15 ஆகவும் அமைந்துள்ளது. இப்பாரிய குளங்களில் பல இன்னும் பெருப்பிக்கக் கூடியனவாயும் பல குளங்கள் ஒன்றுடன் ஒன்றை இணைந்து நீர் கொள்ளளவை அதிகரிக்கக்கூடிய அமைப்புக்களுடனும் காணப்படுகின்றன. இவ் இணைப்பானது ஒரு வடிகாலுடன் இன்னோர் வடிகால் இணைக்கும் வகையிலும் அமைக்கப்படலாம். இப்பிரதேசத்தின் தரைத்தோற்றம் பரந்த தாழ்நிலத்தையும் அலைவடிவான தரைத்தோற்ற அமைப்பினையும் கொண்டுள்ளதால் இங்கு இவ்வாறான அபிவிருத்திக்குரிய வாய்ப்புகள் உள்ளன.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியிலேயே எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்தி செய்யக்கூடிய உள்ளார்ந்த வாய்ப்புகள் நிறைய உண்டு. இங்கு இரு வழிகளில் விவசாய அபிவிருத்தியை முன்னெடுக்கலாம்.

01) ஏலவேயுள்ள விளை நிலங்களில் விளைவை அதிகரித்தல்

02) புதிய நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல்

ஏலவேயுள்ள விளைநிலங்களின் விளைவை அதிகரிப்பதற்கு பசுமைப்புரட்சி அளித்த நவீன விவசாய அபிவிருத்தி செய்முறையினை நல்ல முறையில் பரவச் செய்தல் வேண்டும் நவீன விவசாய முறைகள் வெற்றியளிக்க வேண்டுமாயின் பாசன வசதி பெறத்தக்க நிலங்களாக விளைநிலங்கள் மாற்றப்படுதல் அவசியம். புதிய உயர் விளைச்சல் தரும் நெல்லினங்களின் அக்கறையான விஞ்ஞானபூர்வமான முறையிலான கவனிப்புகளுக்கு பாசன வசதியுடன் கூடிய நிலங்களே அவசியமானவை.

விளைவை அதிகரிப்பதற்கு இன்னோர் வழி வருடத்தில் இரண்டு அல்லது மூன்று போகங்கள் நெற்செய்கை மேற்கொள்வதாகும். இது நீர்ப்பாசன வசதிகள் அதிகரிக்கப்பட்டால் சாத்தியமாகும். பெரும்போகம்இ சிறு போகம்இ இடைப்போகம் என வருடத்தில் மூன்று போகங்கள் நெற்பயிர் செய்து இப்பகுதியில் பலர் வெற்றி கண்டுள்ளனர்.

புதிய நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்குரிய நிலவளம் யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நிறையவே உண்டு. ஒரு நாட்டின் மொத்த நிலத்தில் 25 வீதம் காடாக இருக்கவேண்டும் என்ற கருத்தை மனதிற் கொண்டு திட்டமிட்ட முறையில் புதிய விவசாய குடியேற்றத்திட்டங்களை இப் பகுதிகளில் ஏற்படுத்தலாம். ஏலவேயுள்ள குடியேற்றத்திட்டப் பகுதிகளை விஸ்தரித்தலிலும் சாத்தியமே. இந் நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசன வசதிகளைத் திட்டமிட்ட முறையில் விருத்தி செய்தல் வேண்டும். இப்பிரதேசத்தில் ஏலவே அபிவிருத்தி செய்யப்பட்ட நீர்ப்பாசனக்குளங்களின் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலமும்இ வடிநிலத்திலுள்ள பாரியஇ நடுத்தரஇ சிறு குளங்களை இணைப்பதன் மூலமும்இ முடிந்தால் வடிநிலத் திசைதிருப்பத்தை ஏற்படுத்துவதன் மூலமும் நீர்ப்பாசன வளங்களை அதிகரித்து விவசாய நிலப்பரப்புகளை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் இங்குள்ள 60 வடிநிலங்களில் சிலவே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன. பல பயனபடுத்தக்கூடிய உள்ளார்ந்த வளங்களைக் கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டாக வவுனியாவில் ஊற்றெடுத்து மன்னார் இலுப்பைக் கடவையில் சங்கமமாகும் பறங்கியாறு இதுவரை பாசன வசதிக்காக முறையாகப் பயனபடுத்தப்படவில்லை. இவ் வடிநிலத்தில் இரணைமடு நீர்த்தேக்கம் போன்ற பாரிய இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் என நீர்ப்பாசனவியலாளர்கள் கருத்துகின்றனர். இதுபோன்றே வவுனிக்குளத்திட்டத்தின் கீழ் உள்ள பாலியாற்றிலும் இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் எனவும் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே தமிழர் பாரம்பரியப் பிரதேச பிரதான நிலப்பகுதியில் முறையான திட்டமிடல் நடவடிக்கைகள் மூலம் பாரம்பரிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்து விவசாய அபிவிருத்தி செய்தல் சாத்தியமே.

தரைக்கீழ் நீர்வளம்

தரைக்கீழ் நீர்வளம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மனித வாழ்வுக்கும் வளத்திற்கும் வரலாற்றுக்காலம் முதல் அடிப்படையாக இருந்து வருகின்றது. வட மாகாணத்தின் மொத்தக் குடித்தொகையில் 70 வீதத்தினர் யாழ்.குடாநாட்டில் செறிந்திருப்பதற்கும் குடாநாடு செறிந்த பயிர்ச்செய்கைப் பிரதேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர்வளமே காரணமாகும்.

புத்தளத்தில் இருந்து பரந்தன்இ முல்லைத்தீவை இணைத்து வரையப்படும் கோட்டிற்கு வடமேற்காகவுள்ள பகுதிகள் மயோசின்காலச் சுண்ணாம்பு பாறையமைப்பைக் கொண்டுள்ளன. இப்படிவுகள் தரைக்கீழ் நீரைப் பெருமளவு சேமித்து வைக்கக் கூடிய தன்மை வாய்ந்தவையாகும். சுண்ணக்கல்லை அடிப்படையாகக் கொண்ட செம்மண்இ செம்மஞ்சள் மண்கள் நீரை உட்புகவிடும் இயல்பை அதிகளவு கொண்டவையாகவும் அமைந்துள்ளன. மழையால் பெறப்படும் நீர் இப்பகுதிகளில் இலகுவாக உட்புகுந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகின்றது. உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீர் வில்லையாக உவர்நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கின்றது. குடாநாட்டின் கரையோரப் பகுதிகளிலிருந்து மையப் பகுதியை நோக்கிச் செல்லும் போது இவ் வில்லையின் தடிப்பு அதிகரித்துச் செல்லுகின்றது. ஆகக்கூடிய தடிப்பு 100 அடி முதல் 110 அடி வரை உள்ளது. இந்த வில்லையானது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நடுவேயுள்ள உவர் நீர் ஏரிகளினால் துண்டுகளாக்கப்பட்டுள்ளன. இந்த உவர்நீர் ஏரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றினால் துண்டுபடும் நன்னீர் வில்லை துண்டுபடாது தொடராக அமையும்.

சுண்ணக்கற் பாறைப் படிவுகள் பிரதான நிலப்பகுதியில் ஆழமாகக் கீழ் பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் ஆழமற்று மேற்பாகப் பகுதியிலும் காணப்படுகின்றன. இதனால் அதிகம் ஆழமற்ற கிணறுகளை தோண்டுவதன் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின்றது. மாறாக புத்தளம்இ பரந்தன்இ முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாகக் காணப்படுகின்றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செலவில் குழாய்க் கிணறுகள் அமைத்தே தரைக்கீழ் நீரைப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.

கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தோண்டப்பட்டன. யாழ்ப்பாணத்தில் மனித குடியிருப்பின் வரலாறு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது. அக்காலத்தில் இருந்தே கிணறுகள் தோண்டி தரைக்கீழ் நீரைக் குடிப்பதற்காகவும்இ விவசாயத்திற்காகவும் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளமைக்கான சான்றுகள் நிறைய உண்டு. கிணறுகளில் இருந்து மனித சக்தியால் குறிப்பாக துலா மூலமும்இ உள்ளுர் சூத்திர முறையாலும் நீரானது பாசனத்திற்குப் பெறப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந்துள்ள பாசன முறையிலான விவசாயச் செய்கை பிற்பட்ட கால கட்டங்களில் உப உணவுச் செய்கை எனும் சிறப்பானதும் செறிவானதும் நவீனத்துவமானதுமான பயிர்ச்செய்கை முறையாக மாறிய பின்னர் நீர் இறைக்கும் இயந்திரத்தின் பாவனை யாழ் குடாநாட்டின் சகல கிராமங்களிலும் அதிகரித்து வந்துள்ளது.

இவற்றினால் அண்மைக் காலங்களில் குடாநாட்டின் பல பகுதிகளில் தரைக்கீழ்நீர் உவர்நீராதல் போன்ற பிரச்சனைகள் தோன்றியுள்ளன. இது அபாயகரமானதோர் நிலைமை என்பதில் சந்தேகமில்லை. இச்சவாலை நல்லமுறையில் எதிர்கொள்வதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளார்ந்த தரைக்கீழ் நீர்வளம்இ அதன் பாவனைஇ அவற்றின் முகாமைத்துவம்இ அபிவிருத்தி என்பவைகள் பற்றி நுண்ணாய்வுகள் பல செய்யப்படுதல் வேண்டும். 1965 இல் இங்கு அமைக்கப்பட்ட நீர்வளசபை வடபகுதி தரைக்கீழ் நீர் உவர் நீராதல் பற்றியும் குழாய்க்கிணறு தோண்டி பாசன விருத்தி செய்யும் வாய்ப்புகள் பற்றியும் சில ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும் இன்றுவரை அவை முறையாக வெளியிடப்படவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்வளம் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் முன்னெப்போதுமி;ல்லாதவாறு இன்றைய காலகட்டத்தில் மிக அக்கறையுடன் சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம். திட்டமிட்ட முறையில் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. மேல் விபரித்த அம்சங்கள் அனைத்தையும் மனங்கொண்டு நாம் செய்ய வேண்டிய பணிகள்இ ஆலோசனைகள் என்பன இங்கு அனைவரதும் அக்கறையான கவனத்திற்கு முன்வைக்கப்படுகிறது.

சில அபிவிருத்தி ஆலோசனைகள்

யாழ்ப்பாணத்தில் விவசாயமும் நீர்ப்பாசனமும் எனும் போது அவற்றின் அபிவிருத்தி அம்சமே முன்னுரிமை பெறுகின்றது. யாழ்ப்பாணக்குடாநாட்டில்இ இனிமேலும் நாம் விவசாய விரிவாக்கத்தை: முக்கியமாக விளைபரப்பை அதிகரித்து மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுவது தவறாகும். இது 'உள்ளதையும் கெடுக்கும்' ஆபத்தான நிலையை உருவாக்கக் கூடும். இங்கு தற்போது காணப்படும் விவசாயச் செய்கையை மிகவும் நவீன முறையிலானதாக மாற்றுவதோடு நீர்ப்பாசன முறைகளிலும் நவீனத்துவத்தை கையாண்டு நல்ல முறையில் பாசன முகாமைத்துவத்தைப் பேணி வீண் விரயமாதலைத் தடுத்து ஏலவே உள்ள விவசாய நிலப்பயன்பாட்டை உச்ச வருமானம் தரத்தக்கதாக மாற்றி அமைப்பதே சிறந்த வழியாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலப்பயன்பாடு சிறப்புத்தேர்ச்சி பெற்றதாக மாற்றப்பட வேண்டும். அதிக செலவில் விவசாயம் செய்யும் இப்பகுதியில் ஒவ்வொரு அங்குல நிலமும் உச்ச பயன் தரத்தக்கதாக அமைதல் வேண்டும். விவசாய அபிவிருத்தி விவசாய வர்த்தக முறையிலமைந்ததாக அமையப்பெற வேண்டும். யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் நெற்பயிர்ச்செய்கை தவிர்க்கப்பட்டு அதிக வருமானம் தரத்தக்க பணப்பயிர்ச்செய்கை விருத்தி செய்யப்பட வேண்டும். உப உணவுஇ காய்கறிஇ பழச்செய்கை, பானப்பயிர் செய்கை,எண்ணை வித்துப் பயிரச்;செய்கை போன்றனவாக இவை அமைய வேண்டும். உற்பத்திகளில் சில விவசாய கைத்தொழில்துறை விருத்திக்கு மூலப்பொருள்களை வழங்குபவையாகவும் இருக்கவேண்டும். உண்மையில் இப்பகுதியில் புகையிலை செய்கைஇ காய்கறி செய்கை,திராட்சைப் பழச்செய்கை என்பன ஊக்குவிக்கப்படுதல் வேண்டும். ஏனெனில் இவை செய்கையாளருக்கு குறைந்த நிலத்தில்இ குறைந்த நீர் வளத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் தருவதோடு விவசாய கைத்தொழில் விரிவாக்கத்திற்;கும் உதவுவதாகும். தேயிலை, இறப்பர் ஏற்றுமதியில் இலங்கை அந்நியச்செலாவணி பெறுவது போல் நாம் இவற்றால் அந்நியச்செலாவணியை பெறலாம்.

நகரங்களைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயச் செய்கை நகரச் சந்தையின் தேவைக்குரியவற்றை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்படுதல் வேண்டும். சந்தை நிலமைக்கேற்பவும் யாழ்ப்பாண விவசாயம் மாற்றமுறுதல் வேண்டும். இவ்வகையான நிலப்பயன்பாட்டு மாற்றமே யாழ்ப்பாண பகுதியில் வேண்டப்படுவதாகும்

மழை நீரை தேக்குதலும் குளங்களின் தூர் அகற்றுவதும்.

யாழ்ப்பாணக் குடாநாடு தரைக்கீழ் நீரின் மீள்நிரப்பும் தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதில் பலர் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். இங்கு குறுகிய காலத்திற் கிடைக்கப்பெறும் ஒரே ஒரு மீள் நிரப்பியான மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை மேற்பரப்பில் ஓடி வீணே கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் நாம் முயலுதல் வேண்டும். யாழ்ப்பாணக் குடிhநாட்டின் சுண்ணக்கற் புவியமைப்பின் காரணமாக சுண்ணக்கற் கரைசலால் ஏற்பட்ட 1050 குளங்கள் காணப்படுகின்றன. இக்குளங்களில் நிறையும் தண்ணீரில் பெரும்பகுதி தரையின் கீழ்ச் சென்று நீர்வளத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இவ்வாறான குளங்கள் குப்பைஇ கூழங்கள் கொட்டப்படுவதாலும் தூர் சேர்ந்தமையாலும் நீரினை உட்செலுத்தும் தன்மையில் குறைவடைந்து காணப்படுகின்றன. இவ்வாறான குளங்களைத் துப்புரவு செய்தலும் தூர் அகற்றுதலும் அவசியம.; இங்கு இவ்வறான முயற்சிகள் அரிதாகவே இடம்பெறுகின்றன.

தோட்டங்களை இணக்குவதற்கு குளங்களின் மண்இ மக்கிஇ எடுக்க அனுமதிக்கும் முறை இங்கு உண்டு. இதில் மிக்க அவதானம் தேவை. குளங்களைத் தரைக்கீழ் நீர்ப்பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க விடுதல் கூடாது. இவ்வாறு நிகழின் குளங்கள் மூலம் தரைக்கீழ் நீர் பெருமளவு ஆவியாக வெளியேறிவிடும். எனவே குறிப்பிட்ட ஆழம் வரையே மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில பகுதிகளில் சுண்ணக்கல் நிலத்தோற்றத்தில் ஒன்றாக தரைக்கீழ் நீர் ஓடும். குகைகள் சில மேற்பரப்பு இடிந்த நிலையில் காணப்படுகின்றன. நிலாவரைக்கிணறு, குரும்பசிட்டி பேய்க்கிணறு,புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு,கீரிமலைக் கேணி, அல்வாய் மாயக்கைக் குளம்இ கரவெட்டி குளக்கிணறு, ஊறணிக்கிணறுகள்,யமுனா ஏரி என்பன இவ்வகையில் அமைந்த குகைப் பள்ளங்கள் ஆகும். இவற்றில் சில பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொண்ட பின் பயன்படுத்தத்தக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.

நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி நாள் ஒன்றிற்கு 10 மணித்தியாலங்களில் 30இ000 – 40இ000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை தெரிய வந்தது. இவற்றைப் பாசனத்திற்காக மாத்திரமன்றிஇ மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட்செலுத்துவதற்கும் பயன்படுத்த இயலும். இது இப்பகுதிகளின் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்கக்கூடியதாக அமையும் என துணியலாம்.

தரைக்கீழ் நீர் குகைவழிகள் மூலம் நீரானது கடலைச் சென்றடையும் நிலையும் இங்கு காணப்படுகின்றது. கீரிமலைக் கேணிக்கு குகை ஊடாக வரும் நீர் இதற்கு உதாரணம் ஆகும். தரைக்கீழ் நீரைக் கடலில் கலக்க வைக்கும் குகை வழிகள் எல்லாப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டு அவற்றை நிலத்தின் கீழாக அணைகட்டித் தடுக்கவேண்டும். இவ்வாறான முயற்சிக்கான ஆலோசனைகள் ஏலவே முன்வைக்கப்பட்டிருப்பினும் செயல்முறையில் இவ்வகை முயற்சிகள் ஒன்றும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

நன்னீர் ஏரித்திட்டம்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் எதிர்கால வாழ்வுக்கும் வளத்திற்கும் இன்றியமையாத திட்டம் பற்றி அக்கறையுடன் நோக்கும் எவரும் இங்குள்ள கடல் நீரேரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றும் திட்டம் பற்றிச் சிந்திக்காதிருக்க முடியாது. நன்னீரேரித் திட்டங்களால் யாழ்ப்பாணத்தின் தரைக்கீழ் நீர்வள சேமிப்பு அதிகரிப்பதோடு வீணே கடலை அடையும் நீர் தரைக்கீழ் நீரின் மீள் நிரம்பியாக மாறும். குடாநாட்டுத் தரைக்கீழ் நீர் வில்லைகள் துண்டுபடாது தொடராகவே இருக்கும். குடாநாட்டின் உவர்நீராதல் பிரச்சனைகள் கணிசமான அளவு குறையும். உவர் நிலங்கள் வளமுள்ள விளை நிலங்களாக மாறும். குடாநாட்டின் நிலப்பரப்பும் நன்னீர் பரப்பும் அதிகரிக்கும். இவ்வாறு பல நன்மைகள் நன்னீர் ஏரியாக்கும் திட்டம் எமக்கு வழங்குமெனத் துணியலாம். உண்மையில் இப்பகுதிக் கடல்நீரேரிகளை நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றிய சிந்தனை நூறு வருடம் பழமை வாய்ந்தது. 1922இல் இரணைமடுக் குளத்தேக்கம் பாரிய அணை கட்டி உருவாக்கப்பட்டபோது ஆனையிறவுக் கடல் நீரேரியை நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றியும் கூறப்பட்டிருந்தமை மனங்கொள்ளத்தக்கது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் நன்னீரேரிகளாக மாற்றப்படக்கூடிய 13 கடனீரேரிகளும் நடைமுறையிலுள்ள 33 உவர்நீர்த்தடுப்புத் திட்டங்களும் உள்ளன. மேற்படி 13 கடனீரேரிகளில் நான்கு கடனீரேரிகளை அதிக செலவின்றி நன்னீரேரிகளாக மாற்றமுடியும். அவையாவன.

01) ஆனையிறவு மேற்கு கடனீரேரி

02) ஆனையிறவு கிழக்கு கடனீரேரி

03) உப்பாறு மற்றும் தொண்டைமானாறு கடனீரேரி

மேற்படி கடனீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டங்கள் பல உருவாக்கப்பட்டு அவற்றில் சில பகுதிகள் செயற்படுத்தப்பட்டுமுள்ளன. உப்புநீர் மீன்பிடிக்கு உதவுமென்று எண்ணும் மக்கள் ஏதோ வழிகளில் கடல்நீரை உள்ளே வர விடுவதனால் இத்திட்டங்கள் பூரண வெற்றியை அளிக்காதுள்ளன. இத் திட்டங்களை நல்ல முறையில் செயற்படுத்துதல் இன்றியமையாததாகும். அத்துடன் குடாநாட்டைச் சூழவுள்ள ஏனைய சில கடனீரேரிகளையும் அதிக பொருள் செலவின்றி நன்னீரேரியாகக் கூடிய வாய்ப்பு உண்டு. உதாரணமாக மண்டை தீவையும் வேலணையையும் பிரிக்கும் கடனீரேரியை சுலபமாக நன்னீரேரியாக மாற்றலாம். மற்றும் பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலம் யாழ்.நகரத்தின் தென்மேற்குப் பகுதியில் பாரிய நன்னீரேரித் தேக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறான திட்டங்களால் நன்னீர் வளம் பெருகுவதோடு நிலப்பரப்புகளில் உவர்த்தன்மை நீக்கப்பட்டு அவற்றை வளமான விளைநிலங்களாக மாற்றமுடியும். இது நிலஇ நீர் பற்றாக்குறையால் அல்லல்படும் யாழ்ப்பாணத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையுமெனலாம்.

கடல் நீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் முக்கியமாக இரு பிரச்சினைகளை முன்வைக்கின்றனர்.

01) சூழல் மாசடைதல் தொடர்பானது

கடல் நீரேரிகளில் நீர்வரத்து தடைப்பட்டு நீரேரிகள் முற்றாக வற்றும் காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீது வேகமாக வீசும் காற்றினால் (சோழக்காற்று) புழுதி வாரி வீசப்படுமென்றும் இதனால் இத்திட்டம் சுற்றுப்புறச் சூழல்மாசடையும் அபாயத்தை கொண்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டுகின்றார்கள். இந்த அபாயத்தை இலகுவாக சமாளிக்கலாம். நன்னீரை வற்றாத அளவுக்கு தேக்கி வைப்பதன் மூலமாகவும் முற்றாக நீர்வற்றும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் திட்டமிட்ட அடிப்படையில் புல் வளர்ப்பதன் மூலமாகவும் இம் மாசடைதல் பிரச்சனையைச் சமாளிக்கலாம். ஒல்லாந்து தேசத்தில் கடல் நீரேரிப் பரப்புகள் பெருமளவு மீட்கப்பட்டு புல் வளர்ப்பிற்கு உட்படுத்தப்பட்டு விலங்கு வேளாண்மை விருத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.

02) கடல் நீரேரிகளில் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும் மக்களின் தொழிற்துறை பாதிப்புறும் என்ற கருத்து

இத்திட்டத்தால் பாதிப்புறும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பொருத்தமான வேறு கரையோரப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பது இயலக்கூடியதே. குடாநாட்டு பரவைக் கடற்பரப்புகளில் மீன்பிடித் தொழில் ஈடுபடுவதைவிட ஆழ்கடல் மீன்பிடியில் அவர்களை ஈடுபட வைப்பது பொருளாதார அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை விளைவிப்பதாக அமையும். எனவே பாதிப்புறும் மக்களை குடாநாட்டின் அல்லது பிரதான நிலப்பகுதியின் கிழக்கு கரையோரமாகக் குடியேற்றி ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கலாம். இம்மாற்றமானது குறுங்கால நோக்கில் கடினமாக அமைந்தாலும் நீண்ட கால பிரதேச அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை பயக்குமென நம்பலாம்.

பயிர்களுக்கு மிதமிஞ்சிய நீர்ப்பாவனை

யாழ்ப்பாணப் பகுதிகளில் நீரிறைப்பு இயந்திரமயப்படுத்தப்பட்ட பின்னர் பயிர்களுக்கு மிதமிஞ்சிய நீர் பாய்ச்சப்படுவதாக கருதப்படுகின்றது. உவர்நீராதல் பிரச்சனைக்கு இதுவும் ஒரு காரணமாகும். உண்மையில் இன்ன பயிருக்கு இன்ன பிரதேசத்தில் இன்ன காலத்திற்கு இவ்வளவு நீர் தேவை என்பதை விவசாயிகளுக்கு நல்ல முறையில் அறிவுறுத்தல் வேண்டும். மேலும் இங்கு காணப்படும் பாசன முறைமை நீர் ஆவியாக்கத்தைக் அதிகரிக்கச்செய்கின்றது. இதனை தடுப்பதற்கு இஸ்ரேல் நாட்டில் காணப்படும் பாசன முறைகளான விசிறல் பாசன முறைமைஇ பல குழாய் வழி இணைப்புகள் மூலம் பயிருக்கு அடியில் நீரைச் செலுத்துதல், ஆவியாக்கம்,ஆவியுயிர்ப்பை தடுப்பதற்கு சில இரசாயணங்களை நீரில் மிதக்கவிடல் போன்ற முறைகளைப் பின்பற்றி ஒருதுளி நீரும் வீணாகாமல் பாசன முகாமைத்துவ முறைகளை மக்கள் பின்பற்றும்படி செய்தல் வேண்டும்.

நீர்வள அபிவிருத்தி தொடர்பான திட்டமிடலுக்கு பல்வேறு தரவுகள் தேவை. இதற்கு புவியியல், பொருளியல்,புவிச்சரிதவியல், மண்ணியல், பொறியியல்,விவசாய அறிவயல் போன்ற துறை சார் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் நீர்வள நிலையங்களாக முதலில் வகுக்கப்படுதல் வேண்டும். ஆறுகள்இ குளங்கள்இ கிணறுகள் என்பவற்றை அவதானித்து நீர்ப்பீட ஆய்வு செய்து அவற்றின் உவர்த்தன்மை, ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு,ஊடுவடித்தல்,போன்ற அம்சங்கள் யாவும் கணிக்கப்பட்டு நீர் வள வலயங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படைத் தரவுகளின் துணையுடனேயே அபிவிருத்தித் திட்டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். இந்த அடிப்படைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் வெற்றி பெறுமென நம்பலாம்.

பிரதான நிலப்பகுதி நீர்வள ஆய்வுகள் இன்னும் சரியாக ஆராயப்படவில்லை. இப்பகுதிக் காடுகளிலே பழைய குளங்கள் பல தூர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இவை புனருத்தாரணம் செய்யப்படுதல் வேண்டும். பயன்பாட்டிலுள்ள குளங்களின் கொள்ளளவைக் கூட்டலாம். தெளிவான ஆய்வுகள் மேற்கொண்டு சூழல் நிலமைகள் பாதிக்கப்படாதவகையில் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம். 1980-81 இல் கனகாம்பிகைக் குளம்இ பிரமந்தலாறுஇ புதுமுறிப்புக் குளம்இ போன்றவற்றின் கொள்ளளவை அதிகரிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. பறங்கியாறுஇ பாலியாறுஇ என்பவற்றைப் பொருத்தமான இடத்தில் மறித்துக் கட்டி புதிய நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கக்கூடிய வளவாய்ப்புகள் பற்றி நீரியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.

பிரதான நிலப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களில் ஏற்று நீர்ப்பாசன வளங்களை அதிகரிப்பதன் மூலம் அங்கு உபஉணவுச் செய்கையை ஊக்குவிக்கலாம். வடபகுதிக் குடியேற்றத் திட்டங்களில் ஏற்று நீர்ப்பாசன வசதிகளுடன் உப உணவு உற்பத்திக்கு முதலிடம் வழங்கிய இளைஞர் திட்டங்களே பெருமளவுக்கு வெற்றியைத் தந்த திட்டங்களாக உள. (உ.ம் முத்தையன் கட்டுஇ விசுவமடுஇ வவுனிக்குளம்) இவ்வாறான ஏற்று நீர்ப்பாசன திட்டங்களில் பணப்பயிர் செய்கைகளே ஊக்குவிக்கப்படுதல் வேண்டும். ஏற்று பாசனமுறை அதிக செலவிலமைக்கப்படுவதால் பணப்பயிர்ச் செய்கையே அதிக வருமானத்தை தரத்தக்கதாக அமையும்.

முடிவுரை

தமிழரின் பாரம்பரியப் பிரதேச நீர்வள அபிவிருத்தியை எமக்கு வேண்டுவதான அபிவிருத்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் இவ்வள அபிவிருத்தி தொடர்பான கொள்கைகள்இ திட்டங்களை உருவாக்குவதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் அப்பிரதேசங்கள் அவ்வப் பகுதி வாழ் மக்களின் நிர்வாகத்தினுள் வருதல் வேண்டும். அப்போது தான் தங்கு தடையின்றி உள்நோக்கம் எதுவும் அற்ற விவசாய பாசனஅபிவிருத்தி திட்டங்களை உருவாக்கலாம். இதனால் விவசாய உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறுவது மாத்திரமன்றி மிகை உற்பத்தி செய்தலும் சாத்தியமாகும்.

நன்றி: கீற்று

GTN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.