Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வெட்டித்துறையில் மகமையும் அமஞ்சியும்!.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஊர்களுக்கும் பழங்கதைகள் நிறைய இருக்கும் அவற்றை அகழ்ந்து எடுத்துப் புதுப்பித்து அல்லது எதிர்காலச்சந்ததிக்கு ஆதாரமாக சேகரித்து வைக்கவேண்டியது நம் ஒவ்வொருவர் கடமை. சிறிது சிறிதாக நம் கண் முன்னாலேயே நம்முடைய மூதாதைகளின் ஆவணங்கள் அழிக்கப்படுகின்றன அல்லது தேடல்கள் அற்று மக்கிப் போகின்றன. இத்தகைய ஒரு கால கட்டத்தில் எமது இருப்பின் சாட்சிகள் திட்டமிடப்பட்டு அரச வல்லமையால் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு எதிராகப் போராடி பாதுகாக்கத் திராணியற்று வாழும் மக்களாக எம்மினம் இன்று வாழத்தலைப்பட்டிருக்கிறது. முகவரி தொலைந்த மனிதர்களாக நீண்ட கால ஒழுக்கில் நம் இனம் வாழ்ந்துவிட முடியாது. இன்றைய காலம் மிகவும் சோதனைக்கு உரியதாக இருப்பினும் எம்மினம் சாதிக்கவேண்டிய பலவிடயங்கள் இருக்கின்றன. காலம் இழுத்துவந்த புதிய வெள்ளத்தில் பழையன அள்ளுண்டு போவதை அனுமதிக்கக் கூடாது. போரால் அழிந்து போயுள்ளோம். கூர்ப்பற்ற தேடல்களால் தொலைந்தும் போயுள்ளோம். தொடுதலற்ற எல்லைகளைக் கொண்ட பாரம்பரிய வேர்களை நாம் அடையாளங்கண்டு நாளைய தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியது இன்றைய நம்முடைய கடமையும் கூட. அந்த வகையில் நம் எல்லோருக்குப் பின்னாலும் வரலாறுகள் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நாம் வரலாறு காவிகளாக மாறாவிட்டாலும் தெரிந்தவர்களாக வாழவேண்டும். அந்த வகையில் என் ஊர் சார்ந்த ஒரு பதிவை இங்கு எடுத்துவருகிறேன். நீங்களும் உங்கள் ஊர்கள் சார்ந்த தகவல்களை எடுத்து வாருங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்போம்.

வல்வெட்டித்துறையில் மகமையும் அமஞ்சியும்!.....

தமிழ்நீ. பொன்.சிவகுமாரன் (ஆய்வும் ஆக்கமும் 10.04.2011)

வல்வெட்டித்துறையின் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கும் மேலான நீண்ட வரலாற்றில் 1852 முதல் 1942 வரையான பர்மாவுடனான வர்த்தககாலம் குறிப்பிடக்கூடியதாகும். வல்வெட்டித்துறையின் பொற்க்காலமென்றும் இதனை நாம் கொள்ளலாம். பெரும் கோயிலான வாலாம்பிகா ஸ்ரீ வைத்தீஸ்வரர் தேவஸ்தானம் உட்பட மேலும் பல கோவில்கள் இக்காலத்திலேயே நிறுவப்பட்டன. அல்லது சிதைந்திருந்த பல கோவில்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டன. இதனைவிட சிவகுரு வித்தியாசாலை, சிதம்பராக் கல்லூரி, றோமன் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் அதன் ஆரம்பக்கல்லுரி என்பனவும் இக்காலத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் இவ்விடைக்காலத்திலேயே வல்வெட்டித்துறை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆங்கிலேயரும் 1878இல் முன்பிருந்த சுங்கக் கட்டிடங்களை மீளமைத்து புதியகட்டிடங்களை கட்டினர். (Notes on Jaffna page 230)

கடலோடிகளாகவும் கடல்வணிகர்களாகவும் சிறப்புப்பெற்றிருந்த வல்வெட்டித்துறை மக்களும் மத்தியகாலத்தில் தமிழகத்தில் சிறப்புப்பெற்றிருந்த வணிகக்கணங்களான திசையையாயிரத்து ஐந்நூற்றுவர், வீரவளஞ்செயர், நானாதேசிகர் போல 17ஆம் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் “வல்வெட்டித்துறையார்” என்பவர்களும் தனியான வணிகக் கணமாகவே வளர்சிபெற்று வந்துள்ளனர் என்பதை நாம் அறியலாம். இதனை உறுதிப்படுத்துவது போன்று வல்வெட்டித்துறைப் பட்டினமானது வணிகநகராகவே வளர்ந்து வந்துள்ளமையும் அதன் வளர்சியில் அரசர்களுடையதோ அல்லது பின்வந்தகாலங்களில் அரசாங்கங்களின் உதவியின்றியும் என்பதைவிட அரசுகளின் உதவியினை எதற்கும் எதிர்பாராமல் சுயமாகவே அது எப்பொழுதும் வளர்ந்து வந்துள்ளதை நாம் காணலாம். இவ்வகையான சில பட்டினங்களைப்பற்றி தென்னிந்திய சாசனங்கள் குறிப்பிடுகின்றன.

மணிக்கிராமப்பட்டினம், நானாதேசிகமடிப்பட்டினம், எறிவீரப்பட்டினம்......இத்தகைய பட்டினங்கள் சுயாட்சியுரிமை பெற்ற நிர்வாகப்பிரிவுகளாகவும் சமுதாய அமைப்புகளாகவும் விளங்கின. பாதுகாவல், வரிசேர்த்தல், சமுதாயவழமைகளை நிலைநாட்டுதல். தகராறுகளை விசாரித்து தீர்ப்புவழங்குதல், பொதுநலப்பணிகளை மேற்கொள்ளுதல், அறநிலையங்கள், கோவில்கள், அறக்கட்டளைகள் என்பவற்றை பொறுப்பேற்று நடத்துதல் போன்ற செயல்களை வணிகக்கணங்களின் கட்டுப்பாட்டிலுள்ள பட்டினங்கள் மேற்க்கொண்டிருந்தன. சபை, ஊர் போன்ற அமைப்புக்களைப் போல பொதுவிடயங்களைக் குறித்த தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் மேற்க்கொள்வதற்காக வணிகக்கணத்தவர் அனைவரும் “நிறைவரக்கூடிக்” கூட்டாக செயற்படுத்துவது வழக்காமாயிருந்தது.(ஈழத்து இலக்கியமும் வரலாறும். பக்கம்210-211 பேராசிரியர்.சி.பத்மநாதன்) இவ்வகையாகக் கூடும் வணிகப்பெருமக்கள் தமக்குத்தாமே சிலவரிகளை இட்டுக்கொண்டார்கள். இவ்வரியைப்பற்றி கடல்வழி வணிகம் (ஆசிரியர்.நரசய்யா) என்றநூலின் 196வது பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது.

11-16 ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் வர்த்தகர்கள் வணிகக்குழுமங்கள் மூலம் தமக்குத்தாமே தன்னிச்சையாக சில வரிகளை இட்டுக் கொண்டார்கள். இதன் மதிப்பு அவர்கள பிரதிநிகள் மூலம் கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டது. இந்த தன்னிச்சையான வரிச்சுமை 11ம் நூற்றாண்டு சாசனங்களில் “மகமை” என்றும் மகன்மை என்றும்கூட குறிப்பிடப்டுகின்றது. இந்தவரி சாதாரணமாக கோவில்களிற்காக அல்லது மதம் சம்மந்தபட்ட வேலைகளிற்காகவே பயன்படுத்தப்பட்டது. இந்தவரி பெரியகுழுக்களால் நிர்ணயிக்கப்பட்ட காரணத்தால் இது “தன்சமயகாரியம்” என்றும் சொல்லப்படுகின்றது.

அப்போதைய வணிகப்பெருமக்கள் தம்மீது தாமாகவே விதித்துக்கொண்ட “பட்டனப்பகுடி” என்னும் இவ்வரியைப்பற்றி பி. சண்முகம் என்ற ஆராய்சியாளர் தான் எழுதிய “இந்து சமுத்திரத்தின் புரதான இடைக்கால வணிகச்செயல்பாடுகளும் கல்வெட்டு சான்றுகளும்” என்னும் நூலில் 92-94ம் பக்கங்களில் தொடர்ந்து கூறுகின்றார். இவ்வரி பட்டணப்பகுடி என வழங்கப்பட்டது. பட்டினம் (கடலோர நகரம்) என்பது ஊரையும் பகுடி என்பது வரியையும் குறிக்கும். பட்டினப்பகுடி என்பதில் பகுடி என்ற இப்பதம் பகுதி அல்லது பங்கு என்றும் பொருள்படும். ஆதலால் இங்கு கூறப்படும் பகுடி அல்லது பகுதி மற்றும் பங்கு என்பதெல்லாம் கடல்வணிகர்களின் தன்னிச்சையான வரிச்சுமையான மகமை என்பதற்குள் அடங்கிவிடுகின்றன. இவையாவும் ஒருவருடைய அல்லது ஒவ்வொரு குழுக்களுடைய பங்கு என்பதை மகமை அல்லது மகன்மை என நாம் பொருள் கொள்ளலாம். மகமை என்பதை தமிழ் அகராதிகள் “தருமக்கொடை” எனக் குறிக்கின்றன. (தமிழ்மொழி அகராதி --- தமிழ் தமிழ் அகராதி. பக்கம் 1089. நா. கதிரவேற்பிள்ளை)

மேலும் பட்டினப்பகுதி(டி)யின் சிறந்த விசேடம் என்னவெனில் இவ்வரி நிச்சயிக்கப்படுகையில் அரசனோ அல்லது அவன் பிரதிநிதிகளோ இந்த தீர்மானங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை என்பதுதான். இந்த வரிவிதிப்பிலோ அப்படிவந்த வருமானத்தைச் செலவிடுவதிலோ அரசாங்கத்திற்கு எவ்விதபங்கும் உரிமையும் இருக்கவில்லை. பட்டினப்பகுடி எனப்படும் இதனை ஆந்திரப்பிரதேசத்திலும் கர்நாடகாவிலும் ஆயம் அல்லது தர்மாயம் எனக் குறிப்பிடுகின்றனர்.

பட்டினப்பகுதி(டி) அல்லது தர்மசமயகாரியம் என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மகமை அல்லது மகன்மை என்பது வணிகர்கள் குறிப்பாக கடல்வழி வணிகர்கள் தமது கோயில் திருப்பணி வேலைகட்கும் கோவிலின் நித்திய கருமங்களிற்காகவும் செலவிடும் தொகையை குறிக்கும். அத்துடன் அவர்களது வாணிபப்பொருட்களான அரிசி, நெல்தானியம், புடவை போன்ற பொருட்களின் மேல் குறிப்பிட்ட தொகையை பெறுவதும் மகமையாகும். கி.பி பத்தாம் நூற்றாண்டின் இராஜஇராஜசோழன் காலம் முதல் புகழ் பெற்ற வணிகக்கணங்கள் வழங்கிய இவ்வாறான அறக்கொடைகள் பற்றிய சான்றாதாரங்கள் பல இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. இவைகளில் குறிப்பாக இலங்கையில் “இலங்காதிலக” கல்வெட்டும் இந்தியாவின் கொங்குநாட்டு பெரியபாளையம் திருக்குவளைக் கற்றளியான ஆவுடையநாயனார் கோவில் கல்வெட்டும் முக்கிய தகவல்களைத் தரக்கூடியன.

மேற்க்குறிப்பிட்ட கல்வெட்டுக்களின் ஊடாக குறிப்பிட்ட மகமையானது நிச்சயிக்கப்படுகையில் பலகுழுக்களும் தனிமனிதர்களும் கையெழுத்திட்டு கூறிய மகமை முறைமையினை செயற்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

1948இல் இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் பெரும் கடல்வணிகர்களின் வணிகப்பட்டினமாகத் திகழ்ந்த வல்வெட்டித்துறையிலும் மேற்கூறிய மகமை முறைமை வழக்கிலிருந்ததை அறியமுடிகின்றது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான வரலாறுகளிற்கு ஆதாரமாகக் கொள்ளக்கூடிய கல்வெட்டாதாரங்கள் நகரமயமாக்கலினாலும் மக்களின் வரலாற்று அறிவின்மையினாலும் இறுதியாக போர்க்கால சூழ்நிலையினாலும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் வல்வெட்டித்துறையின் பழம்பெரும் கோவில்களான வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன்கோவில், மற்றும் வல்வெட்டித்துறை நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் என்பவற்றில் காணப்படும் மூலச்சான்றாதாரங்களான உறுதிகளில் இவ்மகமை பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.

01.10.1982இல் செ.வயித்திலிங்கம்பிள்ளையும் பூ.க.முத்துக்குமாரசாமி என்பவரும் இணைந்து வெளியிட்ட “வல்வெட்டித்துறை ஊரின்னிசை” நூலில் காணப்படும் மகமை பற்றிய குறிப்புகள்

1. திருச்சிற்றம்பலபிள்ளையார் கோவில்(பக்கம் 10)

அ.

01.02.1846 பிரசித்த நொத்தாரிசு கதிர்காமர் சிதம்பரநாதர் முன்னிலையில் எழுதப்பெற்ற உறுதியிலும் 06.05.1846இல் பிரசித்த நொத்தாரிசு ம. கணபதிப்பிள்ளை முன்னிலையில் எழுதப்பெற்ற உறுதி யாலும் மகமைத்தொகையில் என்ன விழுக்காடு நெடியகாட்டு திருச்சிற்றம் பலப்பிள்ளையார் கோவிலுக்கு கொடுக்கப்பட வேண்டுமென்கிற விபரம் தெளிவாக காட்டப்பெற்றிருக்கிறது. இவ்வுறுதிகள் ஊரிலுள்ள பல பெரியார்கள் முடித்துக் கொடுத்துள்ளார்கள். மகமைகள் வசூலிப்பதுவும் செலவுசெய்வதும் பெரியவர் திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை உட்பட ஜவர் கொண்ட குழுவினரிடம் ஒப்படைக்கப்பெற்றது.

2. முத்துமாரியம்மன் கோவில்(பக்கம் 20)

அ.

01.02.1846இல் பிரசித்த நொத்தாரிசு கதிர்காமர் சிதம்பரநாதர் முன்னிலையில் இராசிந்தான் முத்துமாரியம்மன் கோயில் நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோயில்களிற்கு மகமை எப்படி கொடுக்கப்பட வேண்டும் என வல்வையர் முடிவு செய்திருக்கிறார்கள்.

ஆ.

06.05.1868இல் பிரசித்த நொத்தாரிசு ம.கணபதிப்பிள்ளை முன்னிலையில் மகமைகள் எவ்வாறு அம்மன் கோவில்இ பிள்ளையார் கோவில்இ புட்டணிபிள்ளையார் கோவில், வைகுந்தப்பிள்ளையார் கோவில்களிற்கு கொடுக்கப்பட வேண்டுமென முடிவு செய்திருக்கிறார்கள்.

05.2006இல் பா.மீனாட்சிசுந்தரம் எழுதிவெளியிட்ட”வரலாற்றில் வல்வெட்டித்துறை” என்ற நூலில் “மகமை” பற்றிய மேலும் பல விடயங்கள் காணப்படுகின்றன.

1. திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோவில்(பக்கம் 16)

அ.

முற்காலத்தில் கப்பல் வணிகம் செவ்வனே நடைபெற்று வந்ததால் கப்பல்தொழிலில் ஈடுபட்ட எல்லோரிடமும் மகமைகள் வசூலிக்கப்பட்டு கோயிலுக்கு சேர்க்கப்பட்டு வந்தன. 01.02.1846இல் பிரசித்த நொத்தாரிசு கதிர்காமர் சிதம்பரநாதர் முன்னிலையில் எழுதப்பெற்ற உறுதியாலும் மகமைத்தொகையில் என்ன விழுக்காடு நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலுக்கு கொடுக்கப்பட வேண்டுமென்ற விபரம் காட்டப்பட்டிருக்கின்றது.

1. முத்துமாரியம்மன் கோவில்(பக்கம் 47)

அ.

1846ம் வருடம் பெப்ரவரி மாதம் 1ம்திகதி வடமராட்சி பிரசித்த நொத்தாரிசு கதிர்காமர் சிதம்பரநாதர் என்பவரால் முடிக்கப்பட்டு பதியப்பட்ட மகமை உறுதியில் இராசிந்தான் மணல் முத்துமாரியம்மன் கோவில் நெடியகாட்டு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோவில் அகியவற்றிற்கு கொடுக்கப்பட வேண்டிய மகமை வீதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. மகமை என்பது அக்காலத்தில் கப்பல் மாலுமிகளின் ஊதியத்தில் இருந்து திரட்டப்படும் நிதிகளில் ஒன்றாகும். இந்த மகமை உறுதியில்

1. பட்டம் கட்டிஉடையார்

2. வைரவநாதர் வேலாயுதர்

3. ஆறுமுகத்தார் விஸ்வநாதர்

4. கந்தர் கதிர்காமன்

5. கதிர்காமன் நாகமுத்து

6. வேலாயுதர் முருகன்

7. திருமேனி குழந்தைவேலு

8. ஐயம்பிள்ளை ஆதிமுலம்

இவர்களுடன் இன்னும் நானூறு பேர் கைச்சாத்திட்டதோடு வல்வெட்டி விதானையாரும் தொண்டைமானாறு விதானையாரும் சாட்சிகளாகவும் கையொப்பமிட்டனர்.

ஆ.

06.05.1868இல் முடிக்கப்பட்ட மகமை உறுதியில் நெடியகாட்டு திருச்சிற்றம்பல பிள்ளையார்கோவில், இராசிந்தான்மணல் முத்துமாரியம்மன கோவில், புட்டணிப்பிள்ளையார் கோவில், வைகுந்தப்பிள்ளையார் கோவில் என்பவற்றிற்கு கொடுக்கப்பட வேண்டிய மகமை வீதங்கள்

1. திருமேனியார் குழந்தைவேற்பிள்ளை,

2. வேலுப்பிள்ளை மயில்வாகனம்.

3. ஆறுமுகத்தார் விஸ்வநாதர்.

4. கந்தப்பர் வாரித்தம்பி

5. சிற்றம்பலம் ஐயாச்சாமி

6. நாகமுத்து சோமநாதி

இன்னும் இருபத்திமூவர் கைச்சாத்திட்டுள்ளனர். மேற்படி மகமையை வசூலிப்பது, செலவு செய்வது, இவற்றிற்கான கணக்குகளை காட்டுவது போன்றவற்றை

1. திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை

2. சுப்பர் சண்முகம்

3. கந்தப்பர் வேலுப்பிள்ளை

4. பெரியதம்பியார் ஆறுமுகம்.

5. வேதவனத்தார் வல்லிபுரம்

ஆகிய ஐவர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு வல்வெட்டித்துறை நெடியகாட்டு திலுச்சிற்றம்பலப்பிள்ளையார், மற்றும் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில்களிற்கான மகமைகள் பற்றி மேற்படி உறுதிகள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை 1883 இல் கும்பாபிஸேகம் செய்யப்பட்ட வைத்தீஸ்வரன் போவிலுக்குரிய மகமை பற்றி வல்வை வைத்திலிங்கப்புலவர் வெளியிட்ட “சைவாபிமானி” சிலவிபரங்களை தெரிவிக்கின்றது. 05.06.1884 இல் வெளிவந்த இப் பத்திரிகைப் பிரதியில் உள்ளவாறே

இக்கோயிலிலே முறையாக ஆறுகாலப்பூசை நடைபெறுகின்றது. இக்கோயிலுக்கு நித்திய விசேசங்களிற்கு வருடமொன்றிற்கு முன்பின் நு.உ.சூ (3.2.6) செல்லும். இதற்கு இவ்வல்வையலுள்ளோர் பிடியரிசி, பிடிநெல்லு, உண்டிகைப்பெட்டி மகிமை, மற்றும் வியாபாரமகிமை, சம்பள மகிமை யாதியவற்றை ஏற்பாடுபண்ணிக் கொடுத்து வருகின்றார்கள்.

என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி மகமை எனப்படும் தருமக்கொடையை பணமாக அன்றி பொருளாகவும் குறிப்பாக நெல், அரிசி என பல வகைகளாகவும் கோயிற்காரியங்களிற்காக கடல்வணிகர்கள் செலவிட்டு வந்துள்ளனர் எனத்தெரிகின்றது. அத்துடன் மகமை என்பதிலும் பொருட்கள், மற்றும் செயல்கள் என்பவற்றிற்கேற்றவாறு முன்பெயர்கள் மட்டும் வேறுபட்டுள்ளமையை அறியமுடிகின்றது. 08.09.1884 இல் வெளியிடப்பட்ட இன்னுமொரு “சைவாபிமானி” பத்திரிகையில்

இவ்வூரிலுள்ள கோயில்களின் தானே ஜஸ்வரிலொருவரும் ஆகிய மள்ள ஸ்ரீ. வே. வயிரமுத்துப்பிள்ளை என்பவர் மேலே கூறப்பட்ட ஏற்பாட்டின்படி தாம் கொடுக்கு மகிமைப்பொருட்களைச் சிரத்தையோடு அவ்வக்காலத்தே கொடுத்து வருவதன்றியும் மட்டக்களப்பிலே தங்களாற் கிள்ளப்படும் நெல்லிற் கிள்ளுதலாகிய ஒரு ஏற்பாட்டை தாமே உண்டு பண்ணிக்கொண்டு இத்தருமத்தையும் நடத்தி வருகின்றார்.

மேற்கண்டவாறு வல்வெட்டித்துறையின் முப்பெரும் கோவில்களும் கடல் வணிகர்களின் சிறப்பான செயற்பாட்டால் ஆரம்பிக்கப்பட்டு அவர்கள் கொடுத்த மகமையாலே வளர்க்கப்பட்டு அன்று போலவே இன்றும் சிறப்பாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறையின் கோயில்கள் பலவும் அக்காலத்தில் சமூகத்தின் உயர்நிலையில் வாழ்ந்த கப்பல் உரிமையாளர்களினால் கட்டப்பட்டன. எனினும் ஊர்வாழ் அனைத்து மக்களினதும் கருத்திற்கு தலைசாய்த்து பொதுவான ஓர்முடிவே கோயில்களில் எட்டப்பட்டுள்ளதனை இம்மகமை உறுதிகள் மூலம் நாம் அவதானிக்கலாம். உதாரணமாக 1846இல் கதிர்காமர் சிதம்பரநாதர் என்பவரால் முடிக்கப்பட்ட மகமை உறுதியில் 400 இற்கும் அதிகமானோர் கையொப்பமிட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சர்கார் பெரியபாளையம் கல்வெட்டில் 64பேர்கள் மட்டுமே கையெழுத்திட்ட நிலையில் இற்றைக்கு 165 வருடங்களிற்கு முன் வல்வெட்டித்துறையில் கோயில் காரியத்திற்காக 400 பேர்களிற்கு மேல் இணைந்து கூட்டாக ஓர்முடிவை எடுத்துள்ளனர். இதன் மூலம் கோயில்களில் செய்யப்படும் திருவிழா உட்பட அனைத்து தர்மகாரியங்களிலும் ஜனநாயக முறைமையுடன் கூடிய ஒத்தகருத்துள்ளவர்களாகவே வல்வெட்டித்துறை மக்கள் அனைவரும் அன்று செயற்பட்டு வந்துள்ளனர் என்பதை அறியமுடிகின்றது.

அமஞ்சி!........

வல்வெட்டித்துறையில் திருவிழாக்கள் உட்பட அனைத்து கோயில் காரியங்களும் கடல்வணிகர்களினால் தீர்மானிக்கப்பட்டு செல்வந்தநிலையிலும் சமூகத்தின் உயர்நிலையில் இருந்த கப்பல் உரிமையாளர்களினாலும் கப்பல் தண்டையல்களினாலும் பொறுப்பேற்கப்பட்டு நடத்தப்பட்டு வந்துள்ளன. இன்றும் அவர்களின் சந்ததியினராலேயே அவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களாப் போல் செல்வந்தநிலையில் அல்லாமல் அன்றாடம் உழைத்து தமது சீவனோபாயத்தை நடத்திவந்த வல்வெட்டித்துறை மீனவர்களிற்கும் மற்றும் சாதாரண கப்பல் ஊழியர்களான சுக்கானியர், கிலாசு, என்பவர்களிற்கும் கோயில் சுற்றாடலில்வாழும் இளைஞர்களிற்கும் கூட கோயில்திருவிழாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. முத்துமாரியம்மன் கோவில் பதினோராம், பன்னிரண்டாம் திருவிழாக்கள் வைத்தீஸ்வரன் கோவில் கல்யாணத்திருவிழா என்பன இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.

இத்திருவிழாக்கள் தனிஒரு தொழிலாளியின் வருமானத்தை மீறிய பளுகொண்டன. இதனால் திருவிழாச்செலவை அனைத்து தொழிலாளர்களும் பகிர்ந்து கொண்டனர். எவ்வாறு கடல்வணிகர்கள் கோவிலின் நித்தியசெலவுகளை மகமை என்ற பெயரில் பகிர்ந்து கொண்டனரோ அதுபோலவே குறிப்பிட்ட தமது திருவிழாக்கான செலவுகளை கடைநிலை வருமானம் கொண்ட தொழிலாளர்களும் “அமஞ்சி” மூலம் பகிர்ந்து கொண்டு திருவிழாக்களை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.

“அமஞ்சி” கல்வெட்டுக்களிலும் இலக்கியங்களிலும் காணப்படாத இச்சொல் ஒருசில தமிழ்அகராதிகளில் மட்டுமே காணப்படுகின்றது. மக்களிடையே நானாந்தம் வழங்கும் சொற்களிடையேயும் நூல்களிலும் புழக்கத்தில் இருந்து மறைந்து விட்ட இச்சொல்லானது வல்வெட்டித்துறையில் காணப்படும் சங்கத்தமிழரின் பல அடையாளங்கள் போலவே அமஞ்சியும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது அதிசயமல்ல. ஒவ்வோரு வருடமும் முத்துமாரியம்மன் கோவில் பன்னிரண்டாம் திருவிழா உபயகாரரென்னும் நியமக்காரரால் திருவிழாச்செலவிற்கான நிதிசேகரிப்பில் இச்சொல் வருடாவருடம் உயிர்ப்பிக்கப்பட்டு எமது மக்களிடையே உலவவிடப்படும். இதன்முலம் பல தமிழகராதிகளில் மறைந்துவிட்ட “அமஞ்சி” எமதுமண்ணில் மட்டும் மறையாமல் உயிர் வாழ்கின்றது.

“அமஞ்சி” 1862இல் வெளியிடப்பெற்ற “உவின்சிலோ” தமிழகராதியில் காணப்பட்ட இச்சொல்லிற்கு 1904ஆம் ஆண்டு தான் வெளியிட்ட தமிழ்ச்சொல்லகராதியில் வைமன்.கு.கதிரவேற்பிள்ளை அவர்கள் “கூலி கொடாமல் செய்விக்கும் வேலை” எனப் பொருள்கூறினார். வல்வெட்டித்துறையின் கப்பலோட்டிய குடும்பத்தில் வந்து அவதரித்ததனால் தான் வளர்ந்த சமூகச்சூழலில் நாளாந்த நடைமுறையில் இருந்த “அமஞ்சி” என்ற சொல்லிற்கு தவறாமல் அவர் பொருள் கூறியிருந்தார். இவரைத்தொடர்ந்து மேலைப் புலோலியைச் சேர்ந்த “சதாவதானி” நா.கதிரவேற்பிள்ளை அவர்களும் தனது தமிழ்மொழி அகராதியில் “கூலி கொடாமல் வாங்கும் வேலை” எனப்பொருள் தந்தார்.

இவ் “அமஞ்சி” ஆனது குறிப்பிட்ட திருவிழாவை நடத்துவதற்காக ஊரில் வாழ்ந்த அனைத்து கடற்றொழிலாளர்களும் குறிப்பிட்ட நாளில் கிடைக்கும் அனைத்து வருவாயினையும் ஒட்டுமொத்தமாக திருவிழாக்குழுவினரிடம் கையளிப்பதாகும். இவ்வாறு அனைத்து கடற்றொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கும் மீனின் பெறுமதியில் அன்றைய தொழிலிற்கான செலவு கழிக்கப்பட்டு மிகுதி அனைத்தும் தர்மசமயகாரியமான கோவிற் திருவிழாவிற்காக செலவு செய்யப்படும். இவ்வாறு சேகரித்து செலவு செய்யப்படும் நிதியே “அமஞ்சி” எனப்படும். கப்பல்வணிகரிடம் குறிக்கப்பட்ட வீதத்தில் தொடற்சியாக வசூலித்தல் “மகமை” என அழைக்கப்பட கடற்றொழிலாளரிடம் இருந்து ஒரேநாளில் வசூலிக்கப்படுதல் “அமஞ்சி” எனப்பட்டது.

வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் பன்னிரண்டாம்நாள் திருவிழாவிற்கான செலவானது ஒருநாள் அமஞ்சியில் பெறப்படும் நிதியில் அடங்காமல் மேலும் அதிகரிக்கும் நிலைவந்தால் கடற்றொழிலாளர் தவிர்ந்த ஏனையவர்களிடமும் பின்னாட்களில் அந்நிதித்தேவை பகிர்ந்தளிக்கப்பட்டது. மேலதிகமான செலவுத் தொகையினை இருக்கும் ஏனையவர்களின் தெகையினால் பிரித்து அனைத்து செலவுகளும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். இவ்வாறு ஒருதிருவிழாவிற்கான செலவினை அடக்கும் இதுவும் அமஞ்சி என்றே அழைக்கப்பட்டது.

ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த சுதந்திரத்தின் பின் கப்பல்உரிமையாளர்களும் கப்பல்தண்டையல்களும் அருகிப்போக மகமைகொடுத்தல் என்பது இன்று நடைமுறையில் இருந்து பெருமளவில் மறைந்துவிட்டது. ஆனால் சமூகத்தின் உயிர்நாடியாய் என்றும் வாழும் கடற்றொழிலாளரிடம் குறிப்பிட்ட கோவில் திருவிழாவிற்காக “அமஞ்சி” பெறுதல் இன்றும் வல்வெட்டித்துறையில் நடைமுறையில் உள்ளது.

மகமை, அமஞ்சி என்னும் பெயர்களினால் தர்மகாரியச்செலவுகளை பகிர்ந்தளிக்கும் இம்முறைமையானது பாய்க்கப்பல் வியாபாரம் மறைந்தபின் புதியபெயரில் மாற்றமடையலாயிற்று. கப்பல் உரிமையாளர், கப்பல் தண்டையல் என்னும் உயர்குழாம் மறைந்து ஊரில் அனைவரும் சமன் என்னும்நிலை உருவாகியது. இந்நாட்களில் பொதுத்தேவைகட்காக உண்டியல் குலுக்கல், கொப்பி எடுத்தல் (கொப்பியில் எழுதி குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொள்ளல்) போன்ற முறைகளில் பணம் சேகரிக்கப்பட்டு பொதுத்தேவைகள் சமூகத்தின் மீது பகிர்ந்தளிக்கப்பட்டன. இவ்வாறான தருமக் கொடைகள் ஆரம்பத்தில் கோவில் காரியங்களிற்காகவே பயன்பட்டன. எனினும் பின்வந்த காலங்களில் வேறு தேவைகட்காகவும் இவை பயன்படுத்தப்பட்டன.

மேற்குறிப்பிட்ட கடற்றொழிலாளரின் அமஞ்சி மூலம் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் இராஜகோபுரம் அமைக்கப்பட்டதும் கப்பலில் இருந்து பொருட்களை இறக்கும் “தூக்குத்தொழிலாளர்” களிடமிருந்து பெறப்பட்ட “அமஞ்சி” மூலம் கணபதி படிப்பகம் உருவாக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவைதவிர ஆதிகோவிலடி ஆதிவைரவர் கோவில், மற்றும் ஆதிசக்தி படிப்பகம், சைனிங்ஸ் கலைவாணி கோவிலும் அதனுடன் கூடிய வாணிபடிப்பகம், றெயின்போஸ் சனசமூகநிலையம் என்பன போன்ற வேறுபல சமூகநிறுவனங்களும் முழு வல்வெட்டித்தறை எனச்செயற்படாமல் அவ்வப்பகுதி மக்களினால் தர்மகாரியம் என்ற பொதுநல நோக்கில் “அமஞ்சி” மூலம் புதிதாக உருவாக்கப்பட்டவையாகும்.

மூலம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kodikkarai%20frontpage.jpg

தமிழரின் வரலாற்று சான்றாகநின்று மாமன்னன் 'இராஜராஜனது'பெரும்புகழை இன்றும் எடுத்தியம்புவது தஞ்சைப் பெருங்கோவிலாகும். தனது தாயான 'வானவன்மாதேவி'பெயரில் பொலநறுவையில் கோயிலமைத்த இம்மன்னன் கடலோடிகளின் தாயான 'முத்துமாரியம்மனின்'பெயரில் அமைத்த கோவிலே கோடிக்கரை முத்துமாரியம்மன் கோவிலாகும். வல்லவர்களாக எம்மை உருவாக்கிய வல்வெட்டித்துறை மாரியம்மன் கோடிக்கரையில் இருந்து வல்வெட்டித்துறைக்கு வந்ததாகவே வல்வெட்டித்துறை மாரியம்மன் வரலாறு கூறுகிறது.

வல்வெட்டித்துறையில் இருந்து கோடிக்கரைக்கு நீந்திச்சென்று வரலாறு படைத்தவாகள் நாம். இவ்வகையில் கோடிக்கரையும் வல்வெட்டித்துறையும் அருகருகே இருக்கும் இரு துறைகளாகும். இதனால் காலம் காலமாக இருகரைகளிலும் வாழும் மக்கள் ஓரேவிதமான பண்பாடு, கலாச்சாரம், என்பனவற்றால் பிணைக்கப்பட்டவர்கள். மட்டுமல்ல வழிபாட்டு முறையால் ஒன்றாக்கப்பட்டு ஒன்றாகவே ஒரேஇனக் குழுக்களாக்கப்பட்டவர்கள். இத்தகைய நெருக்கத்தால் வல்வெட்டித்துறையை சேர்ந்தவரால் கோடிக்கரை வரலாற்றைப்பற்றியும் அங்கு எழுந்தருளியிருக்கும். முத்துமாரியம்மனைப்பற்றியும் எழுதப்பட்ட வரலாற்று ஆவணமே 'கோடிக்கரைவரலாறும்மாரியம்மன்வழிபாடும்' என்னும் இந்நூலகும்.

kodikkaraibackpage.jpg

வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் திருவிழாக்காலத்தில் ஆய்வுக்கட்டுரைகளாக valvai.com இல் வெளியிடப்பெற்ற கட்டுரைகள் இந்நூல் ஆக்கத்தின் அடிப்படையாக அமைந்துள்ளமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும். பதினாறுக்கு மேற்பட்ட வண்ணப்படங்களுடன் வெளிவரும் இந்நூலே மேற்படி கோவிலுக்கு எழுந்த முதல் தலபுராணமாகவும் காணப்படுகின்றது. வல்வெட்டித்துறையின் இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேற்பட்ட வரலாற்றில் ஆயிரம்வருடங்களிற்கு முன்பு ஏற்பட்ட வழிபாட்டு மாற்றத்தையும் இராமாயண காலம் முதல் கோடிக்கரையின் வரலாற்றையும் சக்திபீடமாக கோடிக்கரை சிறப்புப் பெற்றமை போன்ற பல்வேறு தகவல்களுடன் வெளிவரும் இந்நூலே வரலாற்றை ஆய்வு ஆசிரியரின் முதல்நூலாகும்.

வல்வெட்டித்துறையின் வழிபாட்டையும் கோடிக்கரையின் வழிபாட்டுடன் கூடிய வரலாற்றையும் ஒருங்கே எடுத்துரைக்கும் இந்நூல் 01.08.2010 ஞாயிற்றுக்கிழமை கோடிக்கரை முத்துமாரியம்மன் கோவிலில் வெளியிடப்பட்டது.

மேற்படிநூலில் இணைக்கப்பட்ட சிலசரித்திரசான்றுகள் !...

Kodikkarai03.jpg

Kodikkarai06.jpg

Kodikkarai07.jpg

Kodikkarai08.jpg

Kodikkarai09.jpg

Kodikkarai10.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.