Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தத் தலைகீழ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?:

Featured Replies

இந்தத் தலைகீழ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?:

"ஒப்பற்ற தியாகிகளாகக் கருதப்பட்டவர்கள்; பெரும் போர் வீரர்களாக மதிக்கப்பட்டவர்கள்; வரலாற்றை உருவாக்கக்கூடிய வல்லவர்கள்" என்று புகழப்பட்டவர்கள் எல்லாம் இன்று,தெருவிலே........?

"..................................ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் சிறந்த சமூகமொன்றிற்கான அடிப்படைத் தேவையாகும். துருவ மயப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு ஊடாக இதுவரை கட்டி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகம் மேற்குலகிற்கு இடம்பெயரத் தொடங்கியதும் புதிய விடயங்களைக் காணத் தொடங்கியது. ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டிப் பாடுபட்டோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக மேலும் மோசமான குழப்ப நிலை உருவாகியுள்ளது. ஒரு சிறந்த தீர்மானத்தை எட்டுவதற்காக சகலருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற திடமான நம்பிக்கையில் பொங்குதமிழ் இணையத்தில் வெளிவந்த [ கருத்துருவாக்கம் வெண்ணிலா] இக்கருத்துக்கும் இன்போ தமிழ் இந்தக் கருத்துக்கும் சந்தர்ப்பம் வழங்குகின்றது....................."

- இன்போ தமிழ்குழுமம் -

இனி,

இப்போது ‘முன்னாள் போராளிகள்’ என்ற விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் இன்றைய நிலைவரம் பற்றிய விவகாரம் ஈழச்சூழலில் கொஞ்சம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது ‘பொங்குதமிழில்’ இடம் பெற்ற நேர்காணல் ஒன்றில் போராளியாகச் செயற்பட்டிருந்த ஒருவரும் – தமிழ்மாறன் என்பவர் – உண்மை நிலவரத்தைத் தெரிவித்திருந்தார். முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்கள், புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், எவ்வாறான பிரச்சினைகளை எல்லாம் எதிர் நோக்குகின்றார்கள் என்பது இன்று மிகவும் சோகமான கதைகளாக – நிஜங்களாக உள்ளன.

ஒப்பற்ற தியாகிகளாகக் கருதப்பட்டவர்கள், பெரும் வீரர்களாக மதிக்கப்பட்டவர்கள், வரலாற்றை உருவாக்கக்கூடிய வல்லவர்கள் என்று புகழப்பட்டவர்கள் எல்லாம் இன்று தெருவிலே கவனிப்பாரில்லாமல் திரிகிறார்கள். ஒரு ஆண்டுக்குள் ஏற்பட்ட இந்தத் தலைகீழ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

இந்தப் போராளிகளை ‘ஓடிய குதிரைகளாக’ இந்தத் தமிழ்ச்சமூகம் பார்ப்பதனால்தான் இந்தப் பிரச்சினைகளா?புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டதா? அல்லது தமிழ்ச் சமூகத்தின் பொதுவான இயல்பில் இதெல்லாம் மிகச் சாதாரணமாக நடந்தேறும் சங்கதிகளா?

அதனால்தான் இந்தப் போராளிகளின் இத்தகைய நெருக்கடி நிலைகுறித்தும் சிதைவு குறித்தும் தமிழ்ச் சமூகம் பெரிதும் அக்கறை கட்டவில்லைப் போலும்.

இது தனியே விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்கு மட்டும் இன்று ஏற்பட்ட விசேட பிரச்சினை இல்லை. இதற்கு முன்னரும் இந்தப் பிரச்சினை இருந்திருக்கிறது.

முன்னர் மக்களுக்காகத் தீவிரமாகச் செயற்பட்ட பல இடதுசாரிகளை இந்தச் சமூகம் கைவிட்டுவிட்டது. பின்னர், பல இயக்கங்களிலும் மக்களுக்கு மனிதநேயத்தோடு பணிசெய்த பல ஆயிரக்கணக்கானவர்களைப் பற்றிய நினைவே இந்தச் சமூகத்துக்கு இல்லாமற் போய்விட்டது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் யாரும் இந்தளவுக்கு அக்கறைப்படவில்லை. இந்த வரிசையில் – இந்த வகையில்தான் இப்போது புலிகளின் போராளிகளையும் கைவிட்டிருக்கிறது இந்தச் சமூகம்.

ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய தனியான – விரிவான பார்வை எமக்கு முதலில் இருக்க வேணும். இது ஒரு பெரிய விவகாரம். இந்த விவகாரத்தை நாம் சரியாக ஆராய்ந்தால், அரசியல் ரீதியாகவும் வாழ்க்கை மற்றும் சமூக நிலையிலும் நம்முடைய தமிழ்ச் சமூகம் எந்தளவுக்குப் பின்னடைந்து போயிருக்கிறது. அது எவ்வளவு சிதைவுக்குள்ளாகியிருக்கிறது என்று தெரியும். இன்னும் அது அபாய நிலையிலேயே உள்ளது என்பதும் புரியும்.

போராட்டத்தில் பல்வேறு தரப்பினர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். பல இயக்கங்களிலும் அவர்கள் பங்காற்றியிருக்கிறார்கள். முன்னர் விடுதலைப் புலிகளால் மற்ற இயக்கங்கள் தடைசெய்யப்பட்டபோது ஒரு சாரார் கொல்லப்பட்டனர். இன்னொரு சாரார் புலிகளால் கைது செய்யப்பட்டனர். இதிலிருந்து மீண்டவர்களில் அநேகர் வெளிநாடுகளை நோக்கிப் பெயர்ந்தனர். சிலர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர். அப்படித் தஞ்சமடைந்தவர்கள் பின்னாளில் இந்திய ஆதரவோடும் அதற்குப் பின்னர், இலங்கை அரசாங்கத்தின் ஆதரவோடும் அரசியல் அரங்கிற்கு மீண்டும் வந்தனர்.

இயக்கமோதல்களால் பாதிக்கப்பட்டவர்களிலும் இயக்க மோதல்களுக்குப் பின்னர் போக்கிடமின்றி, ஆதரவின்றி, எதிர்காலத்தை எப்படி ஒழுங்குபடுத்துவது என்று தெரியாதிருந்தவர்களிலும் அதிகமானவர்கள் அடிநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களே.

இப்போது விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் எப்படிக் கவனிப்பாரின்றி இருக்கிறார்களோ, அதைப்போலவே இந்த வேறு இயக்கங்களைச் சேர்ந்தோரும் இருந்தனர். இவர்கள் தமது கல்வியை இடையில் தவறவிட்டவர்களாக இருந்தனர். தொழில்களைப் பயிலாதோராக இருந்தனர். கையில் சேமிப்போ வருவாயோ இல்லாதோராக இருந்தனர். ஒரு தொழிலைச் சுயமாகச் செய்ய முடியாத அளவுக்கான பொருளாதார வசதிகளற்றோராகவும் இருந்தனர். மட்டுமல்ல, அப்போது இவர்களை ஆதரிப்பதற்கும் உதவுவதற்கும் புலம் பெயர் சூழலிலும் ஆட்கள் இருக்கவில்லை.

இப்படி இருந்தபடியால் இவர்களை இலகுவாகக் கையாள்வதற்கு இவர்களைச் சேர்ந்த இயக்கக்காரர்களுக்கு வசதியாகிப் போனது. எனவேதான் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற இயக்கங்கள் மீண்டும் இன்னொரு வடிவில் உருக்கொள்ள முடிந்தது. அத்துடன் இவர்களை இந்திய இராணுவமும் இலங்கை அரசும்கூட தமது வசதிப்படி கையாண்டன. இதன்காரணமாக இந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு எதிரானவர்களாகவும் சமூகத்துக்கு ஆபத்தானவர்களாகவும் பார்க்கப்படும் ஒரு நிலை உருவாகியது.

உண்மையில் இந்தப் பிரச்சினையை அதன் காரண காரியங்களுடன் பார்ப்பதற்கும் அணுகுவதற்கும் யாரும் தயாராக இருக்கவில்லை. இதனால், இவர்கள் – அதாவது புலிகள் அல்லாத வேறு இயக்கங்களில் இருந்த வறியவர்களும் அடிநிலைச் சமூகங்களைச் சேர்ந்தோரும் சந்தேகிக்கப்பட்டனர். அல்லது புறக்கணிக்கப்பட்டனர். இதனால் இவர்கள் சந்தித்த அவலம் சாதாரணமானதல்ல.

இவ்வளவுக்கும் இவர்கள் போராட்டத்துக்காகவே தங்களை அர்ப்பணித்து முன்வந்தவர்கள். இடையில் தலைமைகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் இவர்கள் பொறுப்பாளிகளே அல்ல. என்றபோதும், அவற்றின் விளைவுகளை இவர்களே முற்றுமுழுதாகச் சந்தித்தனர். அதையும் கடந்து, இந்தச் சிக்கல்களில் மறுபடியும் சிக்கிக் கொள்ள விரும்பாதவர்களும் தப்பி விடவில்லை. அவர்களும் வாழ்க்கையில் மிகமிகச் சிரமப்பட்டனர்.

இதை நாங்கள் இன்னொரு நிலையிலும் காணலாம். முன்னர் இடதுசாரி இயக்கங்களில் இணைந்து செயற்பட்ட பல இடதுசாரிகள் பின்னாளில் மிகமிக அவலம் நிறைந்த வாழ்க்கையை வாழநேரிட்டது. ஒரு காலம் இடதுசாரிகள் சமூகத்துக்குச் செய்த பங்களிப்புகளும் அவர்களுடைய பாத்திரங்களும் மிகப் பெரியவையாக இருந்தன.

சாதியத்துக்கெதிராகவும் பிற ஏற்றத்தாழ்வுகளுக்கெதிராகவும் போராடியவர்கள் இந்த இடதுசாரிகள். சமூகத்தை அறிவு மயப்படுத்துவதில் – சிந்தனைப் பாரம்பரியமொன்றை நோக்கி நகர்த்தியதில் இடதுசாரிகள் முக்கியமான பங்காற்றினார்கள். இடதுசாரிகளின் போராட்டம் என்பது ஒரு காலம் மகத்தானவையாக – சமூக மாற்றங்களையும் முற்போக்கு நிலையையும் ஏற்படுத்துபவையாகவும் இருந்தன. ஆனால், இந்த இயக்கங்கள் வலுக்குறைந்தபோது இந்த இயக்கங்களில் செயற்பட்ட இடதுசாரிகளையும் இந்தத் தமிழ்ச் சமூகம் மெல்லக் கைவிட்டது. பின்னர் அவர்களை அப்படியே மறந்து விட்டது.

ஆகவே இந்த மரபையொட்டியே இப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்களையும் இந்தச் சமூகம் மெல்லக் கை விட்டிருக்கிறது. தமிழ்ச் சமூகத்துக்கு எப்பொழுதும் ‘ஓடக்கூடிய குதிரைகளே தேவை. ஓடிய குதிரைகள் தேவையில்லை’. ஓடிய குதிரைகள் செலவுக்கானவை. பிரயோசனமற்றவை. இதுதான் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மையப் போக்காகவும் இருந்தது.

இதன்விளைவாக புலிகள் இயக்கத்தில் ‘காற்றுப் போனவர்கள்’ என்று வர்ணிக்கப்பட்ட ஒரு தொகைப் போராளிகள் புலிகள் பலமான நிலையில் இருந்தபோதே இவ்வாறு ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.

பின்னர் இவர்களை மக்களும் அப்படியே மறந்து போனநிலையும் உண்டு. இந்த மாதிரியான அம்சங்களின் கூட்டுத்தான் இப்போது முன்னாள் போராளிகளின் பிரச்சினைகள் – அவர்களுடைய அவலமான நிலைமை என்று உருவாகியிருக்கிறது.

இவர்கள் ஒரு காலத்தில் மதிப்பாகவும் புகழோடும் இருந்தவர்கள் என்பதை எல்லோரும் இலகுவாக மறந்து விட்டார்கள். இவர்களால், இனிமேல் முன்னரைப் போலச் செயற்பட முடியாது, ஒரு அதிகார அமைப்பை நிறுவமுடியாது, செல்வாக்கு வலயமொன்றை நிர்மாணிக்க முடியாது என்பதால், இவர்களை எல்லோரும் இன்று கைவிட்டு விட்டனர்.

இது மிகவும் அபாயகரமான கட்டம். இவர்கள் தன்னலமற்ற முறையில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். தங்களை ஒறுத்து வாழ்ந்தவர்கள். ஒரு சிறிய வட்டத்தில் மட்டும் இதற்கு மாறான விமர்சனங்களை யாரும் வைக்க முடியும். மற்றும்படி பெரும்பாலானவர்கள், தங்களை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்தவர்களே!

விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இவர்களை இன்று சமூகம் புறக்கணிக்கிறது, பாராமுகமாக இருக்கிறது என்றால், ஒரு இரண்டு ஆண்டுகளுக்குள் இப்படியான ஒரு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால், முன்னர் இவர்களுடைய அங்கீகாரத்துக்காகவும் அறிமுகங்களுக்கவும் காத்திருந்தவர்களும் ஆலாய்ப்பறந்தவர்களும் இன்று இவர்களை இப்படிக் கைவிட்டிருக்கிறார்கள் என்றால், அது இவர்களுக்குள் பெரிய ஏமாற்றத்தையும் தாக்கத்தையுமே ஏற்படுத்தும்.

இது நிச்சயமாக ஒரு வன்மத்தை இவர்களிடையே உண்டாக்கும். இந்த வன்மம் என்பது எதிர்காலத்தில் ஏதோ ஒரு வகையிலான வன்முறைக்கான அடிப்படைகளை ஏற்படுத்தும். சாதாரண ஒரு ஏழைப் பெண்ணின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையே பூலான் தேவியை உருவாக்கியது. இப்படி சமூகமே நன்மைக்கும் தீமைக்குமான காரணிகளை உருவாக்குகிறது.

உளவியற் பாதிப்பு அல்லது உளத்தாக்கம் என்பது சாதாரணமாக அமைவதில்லை. இவர்களைப் பொறுத்தவரை தாம் வஞ்சிக்கப்பட்டதாகவும் ஏமாற்றப்பட்டதாகவும் இப்போது உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். இதை இவர்களில் பலரும் வாய் விட்டே சொல்கிறார்கள். இந்தச் சமூகத்துக்காகவா போராட வந்தோம்? என்று இவர்கள் கவலையடைந்திருக்கிறார்கள்.

இது இவர்களை ஒரு பயங்கரமான நிலைமைக்கு இட்டுச் செல்லலாம்.

குறிப்பாக விடுதலைப் புலிகள் பிற இயக்கங்களைத் தடை செய்தபோது இந்தச் சமூகம் அதைப் பார்த்துக் கொண்டும் அங்கீகரித்துக் கொண்டும் இருந்ததே என்ற ஒரு உட்கோபம் அப்போது பிற இயக்கங்களிடம் இருந்தது.

இதனால், இந்த இயக்கங்களில் மீண்டும் இணைந்து கொண்டோர் சமூகத்தைப் பழிவாங்க முயன்றனர். இதுவொரு அரசியற் செயற்பாடு என்பதற்கப்பால் இது ஒரு உளவியற் பாதிப்பு என்பதே சரியானதாகும். ஆனால், இந்த உளவியலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன இலங்கை இந்தியத் தரப்புகள். இதைப் புரிந்து கொள்ளாமல் அந்தப் போராளிகளை தமிழ்ச் சமூகம் எதிர்த்தது. அவர்களை மேலும் எதிர்நிலைக்குத் தள்ளியது. இதன்விளைவாக தமிழ்ச் சமூகத்துக்குள்ளேயே உட்சிதைவுகள் ஏற்பட்டன. மாற்றுக்குழுக்கள், மாற்று இயக்கங்கள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் யார்?

இதே நிலைமை மீண்டும் வரலாம். மீண்டும் ஒரு பிராந்திய நிலை மாற்றத்தினால் பிராந்தியத் தேவை ஏற்படும்போதோ அல்லது சர்வதேச நிலைமாற்றத்தின் போதோ இப்போது அலைந்து கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அந்தச் சக்திகளுக்கு இரையாகலாம். ஏன், இப்போதே இலங்கை அரசும் அதனது படைத்துறையும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களைக் கையாளத் தொடங்கிவிட்டது.

இதற்குக் காரணம், மிகமோசமான ஒரு சமூகத்தை இப்போது யதார்த்தத்தில் இவர்கள் பார்க்கிறார்கள் என்பதே. சமூகம் இந்தப் போராளிகளைப் பொருட்படுத்தவில்லை என்றால், அது இவர்களைப் புறக்கணிக்கிறது என்றால், இவர்களும் சமூகத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள். அதைப் புறக்கணிப்பார்கள். அப்படிப் புறக்கணிக்கப்படும்போது என்ன நடக்கும்? வன்முறைகள்தானே நிகழும்.

சமூக நேசிப்பில்தான் நன்மைகளும் மென்மைகளும் இருக்கும். சமூக நிராகரிப்பில் எதிர்நிலைகளே உண்டாகும்.

அகச் சூழல் மட்டுமல்ல, புறச்சூழலும் இவர்களுக்குப் பாதகமாகவே இருக்கிறது. அது முற்றிலும்மாறி எல்லாவற்றுக்கும் யாரிலோ தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு இவர்களை மாற்றியிருக்கிறது. ஒரு வங்கிக் கடனைப் பெறமுடியாத நிலை. இவர்களை நம்பிக் கையெழுத்துப் போடுவதற்கு யாரும் தயாரில்லை. இவர்கள் முன்னர் காசு கொடுத்து வாங்கிய காணிகளை இப்போது உரிமை கொண்டாட முடியாத நிலை. அப்போது இவர்களுக்கு இருந்த அதிகாரம் இப்போதில்லை என்பதால், இப்போது இவர்களைச் சமூகம் உதாசீனப்படுத்துகிறது. ஆகவே இவர்கள் இன்னொரு அதிகாரத்தை நோக்கிப் போகவேண்டியேற்படுகிறது. இதன் விளைவாக இவர்கள் அரசாங்கத் தரப்புடன் ஏதோ வகையில் இணையவோ தொடர்பு கொள்ளவோ வேண்டியேற்படுகிறது. அப்படிச் செய்வதன் மூலம்தான் ஓரளவுக்குப் பாதுகாப்பாகவும் வாழ்வின் தேவைகளை நிறைவேற்றக்கூடியதாகவும் இருக்கும்.

ஒரு முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு இடைக்காலத்தில் அவர் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக – கல்வித் தகுதியின் அடிப்படையில் – அரசாங்க உத்தியோகம் ஒன்று கிடைத்து விட்டது. இவருக்கான சம்பளத்தை ஏனைய ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல அரசாங்கம் வழங்கி வந்தது. ஆனால், இவர் புனர்வாழ்வு முகாமிலிருந்து திரும்பி தனது பணிக்குச் சென்றிருக்கிறார். அங்கே இவர் பணியாற்றுவதை தமிழ் உயர் அதிகாரிகள் தடுத்து விட்டனர். இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு, தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் தேடுவதற்காக இவர் அரசாங்க ஆதரவைப் பெற்ற தரப்பினரை நாடியிருக்கிறார். இதில் என்ன தவறிருக்கிறது? இந்த நிலைமைக்கு இவரை இட்டுச் சென்றது யார்?

அத்துடன், எதை இவர்கள் விரும்பவில்லையோ அதையே ஏற்றுக் கொள்ள வேண்டிய கொடுமை. முன்னர் இவர்கள் எதிர்த்த படையினரோடு இப்போது கூட்டுவைத்துக் கொள்ள வேண்டிய நிலை. இதைத்தான் ‘முள்முனை யதார்த்தம்’ என்று சொல்வார்கள்.

போராளியாகச் செயற்பட்டவர்கள் இப்பொழுது நாளாந்த வாழ்க்கையை வாழ்வதற்கே வழியற்று – வக்கற்றிருக்கிறார்கள். வசதியுடையவர்களும் வாய்ப்புக் கிடைத்தவர்களும் எப்படியோ வெளியேறிப் போய்விட்டார்கள். ஏனையவர்கள் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே வந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். இன்னொரு சாரார் வெளியே வரவில்லை. வருவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இதுதான் நிலைமை.

போர்க்களத்திலிருந்து வெளியே வந்தபோது இவர்களிடம் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை – கலைந்துபோன கனவுகளையும் துக்கத்தையும் தவிர.

இவர்கள் இப்போது டக்ளஸ் தேவானந்தா, கே.பி, கருணா, பிள்ளையான், அரசாங்கத்தரப்பின் ஆதரவாளர்களாக இருக்கும் கீதாஞ்சலி, அங்கயன் மற்றும் ரங்கா போன்ற தரப்புகளை நோக்கி படையெடுக்கிறார்கள். ஒருவர் பின்னொருவராக இந்தத் தரப்புகளிடம் போய்க்கொண்டிருக்கிறார்கள். மிகச் சிலரே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.

இதைவிட இன்னொரு பெரிய அணி அல்லது பல அணிகள் படையினரோடும் படைப் புலனாய்வாளர்களோடும் சேர்ந்தியங்கத் தொடங்கியிருக்கின்றன.

இதற்கெல்லாம் பல காரணங்கள் உண்டு. சிலருக்குப் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளும் நெருக்குவாரங்களும் உண்டு. சிலருக்கு தொழில் வாய்ப்புப் பிரச்சினை. கல்வி பாதியில் நின்று விட்டது. வயது ஏறிவிட்டது சிலருக்கு. வேறு சிலருக்கு அரசியலில் எப்படியாவது ஈடுபட வேணும் என்ற ஒரு தாகம். சிலருக்கு எப்போதும் அதிகாரத் தரப்பொன்றின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேணும் என்ற நிலை. இந்த மாதிரிப் பல நிலைமைகள் இருக்கின்றன.

இவ்வாறு சிதைந்த – சீரழிந்த நிலைமையையே அதிகார அமைப்புகள் விரும்புகின்றன. உண்மையில் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் இந்த அவல நிலையில் பல முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களைப் படையினர் பயன்படுத்தப் போகிறார்கள். இலங்கை அரசும் இந்திய அரசும் பயன்படுத்த விளைகின்றன. மேற்குலகம் இவர்களைப் பயன்படுத்த விளைகிறது.

ஏன், நாளைக்குப் பிற சக்திகளும் இவர்களைத் தமக்குச் சாதகமாகப் பாவிக்க முனையும். இது நிச்சயமாக ஈழத் தமிழ்ச் சமூகத்துக்கு பல நெருக்கடிகளையும் அபாயங்களையும் கையாள முடியாத நிலைமைகளையும் உருவாக்கப்போகிறது.

உதிரிகள், லும்பன்கள் என்பதற்கும் அப்பால் காயப்பட்டவர்களை – அடிபட்டவர்களை வன்மவாளர்களாக ஆக்கப்போகிறது. இந்த நிலையை எப்படித் தடுக்கமுடியும்?

அது சாத்தியமானதா?

மனிதர்களால் சாத்தியமாகாதது எதுவுமே இந்தப் பூமியில் இல்லை. அதிலும் மனிதர்களைக் கையாள்வது, சமூகங்களைக் கையாள்வது என்பவற்றில் இன்றைய அறிவியலும் அரசியலும் மிக வளர்ச்சியடைந்து முன்னேறியிருக்கின்றன.

ஆகவே, நாம் எந்தத் தயக்கமும் கொள்ளத் தேவையில்லை. இந்த நிலையைத் தடுக்க வேண்டுமானால், பாதிக்கப்பட்டிருக்கிற போராளிகளையும் மக்களையும் முதலில் பாதுகாக்க வேணும். அவர்களை அரவணைக்க வேணும், ஆதரிக்க வேணும், அவர்களுக்கு உதவ வேணும். எதற்காக இவர்கள் இந்த நிலைக்கு ஆளாகினார்கள் என்ற புரிதல் நமக்கிருக்குமானால், இவர்களுக்கு உதவுவதும் இவர்களை ஆதரிப்பதும் அங்கீகரிப்பதும் இலகுவானது. இதை விளங்கிக் கொண்டால், இவர்களை நிச்சயமாக எல்லோரும் அரவணைத்துக் கொள்வர். மட்டுமல்ல இவர்களை ஆதரிப்பது கடந்த காலப்பணிக்குச் செய்யும் மதிப்பு மட்டுமல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்குமானது.

இதைத்தான் முன்னர் கே.பி உட்படப் பலரும் சொன்னார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும். அவர்கள் செய்த பங்களிப்புக்கு மதிப்புச் செலுத்த வேண்டும். இதன்மூலம் இவர்களைச் சமூகத்தோடு இணைத்துக் கொள்ளலாம் என்று. இதை டக்ளஸ் தேவானந்தாவும் சொன்னார். இலங்கை அரசாங்கமும் சொன்னது. இன்னும் வேறு ஆட்களும் சொன்னார்கள். இவர்கள் எல்லாம் சொன்னதால், இது ஒரு ‘மனிதாபிமானத் தேவை’ என்ற அடையாளத்தை மாற்றி ‘இது ஒரு அரசிற் பொறி – அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கை’ என்று வெளியே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது.

உண்மையில் அரசும் அரசுடன் இணைந்திருக்கின்ற தரப்புகளும் என்ன நோக்கத்துக்காக இப்படி ஒரு அழைப்பை விடுத்திருந்தன என்பதற்குப் பல விளக்கங்களையும் காரணங்களையும் சொல்லலாம். ஆனால், காயப்பட்ட மக்களுக்கான உதவிகளும் விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கான உதவிகளும் நிச்சயம் தேவை.

அரசாங்கத்தினது நிகழ்ச்சி நிரலையோ அதனது திட்டத்தையோ நாம் கேள்விக்குட்படுத்தலாம். அல்லது நிராகரிக்கலாம். அரசின் அரசியல் நோக்கங்களையிட்டு எச்சரிக்கையோடு இருப்பது என்பதும் சரியானதே. ஆனால், அதற்காக சரியானதை – அவசியமானதை எப்படி நிராகரிக்க முடியும். அப்படி நிராகரிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டிருப்பது யார்? எங்களுடைய மக்களும் எங்களுடைய போராளிகளுமே.

அரசாங்கத்தை நிராகரித்து விட்டு, அரசைக் கடந்து இதை எப்படிச் செய்வது? அரசாங்கம் அதற்கெல்லாம் இடமளிக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழலாம். அப்படியென்றால், அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய அளவுக்கான செயற்பாடுகளில் நாம் ஈடுபட்டிருக்க வேணும். ஆனால், அப்படி நடந்திருக்கிறதா?

சர்வதேச நாடுகளோ அல்லது இந்தியாவோ தலையிட்டு புலம்பெயர் மக்களின் உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களும் போராளிகளும் மறுவாழ்வுக்காகப் பெறுவதற்கு ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா?

அப்படியொரு நிலையை உருவாக்க என்ன முயற்சிகள், யாரால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன?

ஆனால், ஒரு உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேணும்.

இந்தப் போராளிகள் இப்போது அரசாங்கத்தின் முழுப்பிடிமானத்துக்குள்ளேயே இருக்கிறார்கள். இவர்களுடைய அகநிலையை இங்கே நான் சொல்லவில்லை. புறச்சூழலைப் பொறுத்தவரை அரசின் பிடிக்குள்தான் இருக்கிறார்கள்.

எனவே இவர்களுக்கான உதவிகள் கிடைப்பதற்கு என்ன வழி செய்யலாம்?

அதை எப்படிச் செய்வது என்று சிந்திக்க வேணும். இந்த மாதிரி நிலைமைகளில் எப்போதும் நாம் உண்மையிலிருந்தும் யதார்த்தத்திலிருந்துமே சிந்திக்க வேணும். நமது விருப்பங்களில் இருந்தும் நிலைப்பாடுகளில் இருந்தும் நாம் இந்த நிலைமைகளை அணுகக் கூடாது. அது தவறுகளுக்கும் எதிர் விளைவுகளுக்கும் இடமளித்து விடும்.

ஆகவே, புலம் பெயர் சமூகமும் இலங்கையில் உள்ள ஏனைய தரப்பினர்களும் இணைந்து இந்தப் பாரிய பொறுப்பான பணியைச் செய்ய வேணும். இதுவொரு ‘அவசரகாலப் பணி – முதலுதவிப் பணி’ என்பதே என்னுடைய கணிப்பு.

விரக்தி நிலைக்கு ஒருவர் தள்ளப்பட்டால் அதன் பாதிப்பு என்பது அந்தச் சமூகத்தையே அதிகம் பாதிக்கும். இது தனிமனிதர்கள் ஒரு சிலருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அல்ல. ஒரு பெருந்திரட்சியானவர்களுக்கு – பன்னிரண்டாயிரத்துக்கும் அதிகமான போராளிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஏற்பட்டிருக்கும் விரக்தி நிலையாகும்.

ஆகவேதான் நாம் பொறுப்போடும் விழிப்போடும் இந்த அபாய நிலையைக் கடக்க வேணும்.

புலம்பெயர் மக்களின் உதவிகளை தன்வசப்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் பல வழிகளிலும் பலருக்கூடாகவும் முயற்சித்து வருகிறது என்பது பகிரங்கமானது. இதையிட்டு ஆதரவும் எதிருமான வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்று வருவதும் பகிரங்கமானது.

இந்த நிலையில் அரசாங்கத்தைக் கடந்து எப்படி உதவலாம்? அதற்கு அரசாங்கம் இடமளிக்குமா என்பது அடுத்த முக்கியமான கேள்விகள். இங்கே நாம் ஒன்றை – ஒரு உண்மையைக் காணவேணும்.எந்த நிலையிலாவது உதவிகள் கிடைக்கவில்லை என்றால் அதனால் பாதிக்கப்படப்போவது தமிழ்மக்கள்தான்.

http://www.infotamil.ch/ta/view.php?22EECW300ggOA4eeAAogcaaddYAdddYYd2accooA3e44OOg2022WMi22

இப்படியான ஆக்கங்களை வாசித்து விட்ட பிழைகளை உணர்ந்து மனிதனாக தமிழன் மாறினால் ஒழிய எமக்கு விடுவு இல்லை.அதுவரை சிங்களம் எங்களை பந்தாடுவது தவிர்கமுடியாது.

அதை விட்டு இன்னமும் கட்டப்பொம்மன் வசனத்துடனும், புலம் பெயர்ந்த நாடுகளில் தானும் தன் பிள்ளையும் மேடை ஏற களியாட்டமும்,விளையாட்டுப்போட்டியும் வைத்து கொண்டு "கேவலம் கெட்ட இனம்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.