Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடைக்காலத் தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் வெள்ளமும் தடுப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இடைக்காலத் தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் வெள்ளமும் தடுப்பும்

2678882211_528fa94bef.jpg

1. இயற்கைப் பேரிடர்களில் வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளிலும் விளைநிலப் பகுதிகளிலும் மீட்கமுடியாத விளைவினை காலந்தோறும் ஏற் படுத்துகிறது. இதனை எதிர் கொண்டு தடுக்கும் முயற்சிகளில் இன்றைய காலகட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். வரலாற்றுக் காலங்களில் வெள்ளத் தினைத் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மக்கள் எப்படி மேற்கொண்டனர் என்பதனை அறிவதே இக்கட்டுரையின் நோக்கம். நிலவுகிற நிலப்பரப்பியலுக்கு ஏற்ப வெள்ளம் மக்களைப் பாதிக்கிறது. குடியிருப்புப் பகுதிகளில் மனிதர்களையும் அவர்களின் செல்வங்களான வளர்ப்பு விலங்குகளையும் அழிப்பதோடு அவர்களுடைய பொருள் சேமிப்பினையும் அழிக்கிறது. விளைநிலப்பகுதிகளில் அவர்களின் பயிரினை அழிக்கிறது. வெள்ளத்தில் அழிந்த பயிரினை வெள்ளச்சாவி1 என்ற கல்வெட்டுச்சொல் விளக்குகிறது. இச்சொல் தமிழகத்தில் பரவலாகக் கல்வெட்டுகளில் பதியப் பட்டுள்ளது.

2. பண்டைத் தமிழகத்தில் வெவ்வேறு நிலக் கிடப்பில் அமைந்த நீராதாரங்களை ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்றன எவ்வாறு வெள்ளப் பேரிடரால் மீட்கப்பட்டன அல்லது முன்னெச்சரிக் கையாகப் பாதுகாக்கப்பட்டன என்பதனை அறிய வேண்டும். தமிழகத்தில் பின்பற்றப்பட்ட இம் முறைகள் எவ்வாறு வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபட்டன என்பதனையும் அறிய வேண்டும். மழை பொய்க்கும் புதுக்கோட்டை, இராமனாதபுரம் போன்ற வட்டாரங்களில் நீர் நிலைகளானக் குளங்களை உருவாக்கும்போது இவ்வட்டாரத்து மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் :

(அ) நீர்ப்பாசனக் குளங்களை உருவாக்கும் போதே நிலக் கிடப்பியல் கூறுகளையும் கவனத்தில் கொண்டுள்ளனர். பாசனக்குளங்களின் கரைகளை உருவாக்குகையில் வேலைப்பளுவினைக் குறைக்கும் பொருட்டு இயற்கையாக அமைந்த கற்பாறைகளையே கரைகளாகத் தெரிவு செய்துள்ளனர்.

இதனால் இருவித விளைவுகள் வந்தன :

(1) கரைகளை உருவாக்குவதற்கான வேலைப் பளுவினைக் குறைத்துள்ளனர்.

(2) இயற்கையாக அமைந்த பாறைக்கரைகள் வெள்ளத்தில் அழிவ தில்லை.

(ஆ) மண்ணால் அமைக்கப்பட்ட குளக் கரைகளின் உட்புறம் கருங்கற்கள், செம்புராங் கற்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இம்முறையில் அமைக்கப் பட்ட கரைகள் இரு முறைகளில் குளத்தினைக் காக்கிறது : (1) நீரலைகளின் வேகத்தினால் கரைகள் பாதிக்கப்படாமல் உள்ளன (2) மழைக்காலங்களில் குளம் நிரம்புகையில் கரைகள் அதனைத் தாக்குப் பிடிக்கின்றன. (இ) குளக்கரைகளில் மரங்கள் வளர்க்கப்படுவதால் மரத்து வேர்களினால் கரைகள் பிணைக்கப்பட்டு இறுக்கமாகின்றன. இதனால், கரைகளில் மண்ணரிப்பு மட்டுப்படுத்தப்படுகிறது.

2 மக்கள்தொகை குறைவாயுள்ள நிலப்பிரதேசங்களில் உழைப்பிற்காக மக்களைத் திரட்டுவதில் சிக்கல் உள்ளபோது இம்முறை எளிதில் பயன்தரும். இது போன்ற முன்னெச்சரிக்கைத் தடுப்பு முறைகளை பெரும்பாலும் மேற்சொன்ன வட்டாரங்களில் காணலாம்.

3. புதுக்கோட்டை வட்டாரத்தில் வேறு வேறு வகையான முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு முறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. இங்கு நீர் நிலைகளைப் பாதுகாப்பதற்கு வட்டாரத் தலைவர் களும், ஊராரும், தனியாரும்கூடக் கூடிச் செயற் பட்டுள்ளனர். இச்செயல் இவ்வட்டாரத்து மக்களின் கூட்டுப் பொறுப்பினைக் காட்டுகிறது. ஒரு முறை ஒன்றுக்கும் மேற்பட்ட ஊரார், நாடு அளவிலான தலைவருடன் இணைந்து வெள்ளாற்றில் வருகிற நீரினை ஓர் ஊரினுடைய குளத்திற்கு விலக்கிக் கொடுத்துள்ளனர்.

3 இவ் வேலைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஊரினுடைய மக்களின் கூட்டு முயற்சியினைக் கவனத்திற் கொள்ள வேண்டும். இவ்வட்டாரத்தின் கீரனூர் என்ற ஊரிலிருந்த அரையர்கள் தங்களுக்குள் ஒத்துப் பேசி அவ்வட்டாரத்திலுள்ள நீர்நிலைகளை எவரும் சேதப்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்தனர். இதுவும் ஒருவகையான கூட்டு முயற்சியே. இவ்வூரின் அருகிலுள்ள குளத்தூரின் பெரியகுளத்தின் மிகு நீரினை வெளியேற்றும் கலிங்குதான் அக்கினியாறு பிறக்குமிடமாகும். இதுபோன்று இவ்வட்டாரத்தில் ஓடும் வெள்ளாற்றின் கலிங்குதான் குண்டாற்றி னுடைய தொடக்கமாகும்.

4. இவ்வட்டாரத்திலுள்ள வேளாண்குளங் களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவுமான முயற்சியில் குளச்சுவந்திரம் என்ற பெயரில் அரையர்கள் செயல் பட்டு வந்தனர். இவ்வுரிமைதான் இவர்களுக்கு ஆளும் உரிமையான அரசு சுவந்திரத்தினைப் பெற்றுத் தந்தது. இப்படி அரசு சுவந்திரத்தினைப் பெற்ற வல்லநாட்டு அரசுமக்கள்தான் வல்லநாட்டுக் குளத்தினை அண்மைக்காலம்வரை பாதுகாத்தும் பராமரித்தும் வந்தனர். இக்குளத்தினுடைய மிகுநீர் அடுத்தடுத்து அமைந்த குளங்களில் தேக்கி வைக்கப் படுகிறது. இதனால், நீர்தரும் முதன்மைக்குளம் வெள்ளக்காலங்களில் சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது. இவ்வாறு இவ்வட்டாரத்தில் பல குளங்கள் தொடர்குளங்களாக உள்ளன. இப்படி மிகுநீரின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது.5

5. தமிழகத்தின் வடக்குப்பகுதியில் அமைந்து உள்ள ஏரிகள் நிறைந்த செங்கல்பட்டு வட்டாரத்தில் பல்லவர் காலத்தில் ஏரிவாரியப் பெருமக்கள் என்ற குழுவினர் நீராதாரங்களைப் பராமரித்து வந்து உள்ளனர். ஆண்டுதோறும் ஏரிகளில் படியும் வண்டல்மண்ணினைத் தூர்வாரும் பொறுப்பும் கூட இவர்களிடம் இருந்துள்ளது. ஏரிகளிலே ஓடங்களில் சென்று தூரினை அள்ளி ஆண்டு தோறும் ஏரியினை ஆழப்படுத்தும் வேலையினை செய்துள்ளனர். ஏரியினை ஆழப்படுத்துவது குழி குத்தி என்ற கல்வெட்டுச்சொல்லால் பதியப்பட்டு உள்ளது.6 இதுபோன்று பணியினைக் குளத்தார் என்ற குழுவினர் எறும்பியூர் குளத்தினைச் செய்து வந்துள்ளனர்.7

6. நீராதாரங்கள் ஆறுகளாக உள்ள நிலப் பிரதேசங்களில் தமிழர்கள் வேறு முறையிலான நடவடிக்கைகளைப் பின்பற்றியுள்ளனர். காவிரி பாயும் சோழமண்டலத்தில் ஆற்றினையும், ஆற்றங் கரைகளையும், ஆற்றிலிருந்து வாய்க்கால்களுக்கு நீரினைத் திருப்பிவிடும் தலைவாய்களையும் பாது காக்கவும், பராமரிக்கவும் கூட்டுமுயற்சிகளை மக்கள் எடுத்துள்ளனர். ஆற்றிலிருந்து நீரினைக் கால்வாய்களுக்குத் திருப்பும் தலைவாயினைக் காப்பதற்கு தலைவாய்ச்சான்றார், தலைவாய் அரையர்கள் என்ற குழுவினர் இயங்கியுள்ளனர்.8 இவர்கள் பொதுவாக போர்க்குலத்தவராக இருத்தல் வேண்டும். உடல் பலமும், நீரியல் தொழில்நுட்பமும் அறிந்திருந்த ஒரு குழுவினரே இயற்கைப் பேரிடர் களினின்றும் தலைவாயினை வெள்ளக் காலங் களில் காத்திருப்பர். இன்றைக்கும் குளித்தலை, பேட்டைவாய்த்தலை போன்ற ஊர்களில் வசிப் போர் போர்க்குலத்தவரான முத்தரையர்கள் வசிக் கின்றனர்.

தொடக்க காலங்களில் செல்வாக்குமிக்கவர் களாக ஆளுமை பொருந்திய இவர்கள் கோயில் நிறுவனங்களின் மேலாண்மை எழுந்தபிறகு செல் வாக்கு இழக்கத் தொடங்கினர். இச்செயல்பாடு காவிரி கொங்குப் பகுதியினின்றும் சோழமண்டலத்திற்குப் புகும் நிலப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. காவிரியின் சமவெளிப்பகுதியான பாடல் பெற்ற நிலப்பகுதி களில் வெள்ளத்தினைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில முயற்சிகளை மேற்கொண்டனர். இதனைக் கூட்டாக மக்கள் செய்துள்ளனர். காவிரி ஆற்றினையும், வாய்க்கால்களையும் பராமரிக்க ஆற்றங்கரை, ஆற்றுக்குலை, ஆற்றங்கரைத்தேவை போன்ற வரிகளை ஒரு சேவைக் கடனாக மக்கள் அந்தந்த ஊர்களில் செய்து வந்தனர். ஆற்றுக்கால், அட்டுக்கரை போன்ற சேவை வரிகள் மக்களின் கூட்டு முயற்சியினை வெளிப்படுத்துகிறது. இவை பற்றிப் பேசும் கல்வெட்டுச் சான்றுகள் இன்றைக்கும் வெள்ளத்தில் அவதியுறும் திருச்சிராப் பள்ளி, ஸ்ரீரங்கம், திருவையாறு, திருச்செந்துறை போன்ற இடங்களில் இருந்து கிடைக்கின்றன.9

7. வெள்ளக்காலங்களில் மிகு நீரினைத் திருப்பி விட வாய்க்கால்களின் குறுக்கே குலை, குரம்பு, குரப்பு என்ற சிறு சிறு மண் அணைப்புகளை உருவாக்கி நீரினைத் திருப்பிவிட்டுள்ளனர். இவற்றைச் செய்யும் வேலை குலைவெட்டி, குரப்புவெட்டி என்று கல் வெட்டில் சுட்டப்பட்டுள்ளது. இதே வேலையினை ஆற்றின் காலிற்குச் செய்தால் அது கல்வெட்டில் ஆற்றுக்கால்வெட்டி என்று சுட்டப்பட்டுள்ளது. இவ்வாறான கூட்டுப் பொறுப்புகள் பெரும்பாலும் காவிரிபாயும் நிலப்பகுதியான திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் பகுதியில் இருந்தனவாகக் கல்வெட்டுச் சான்றுகள் உறுதியளிக்கின்றன. இவை பெரும் பாலும் கி.பி. 985 முதல் கி.பி.1070 வரையிலான காலகட்டத்தில் திறம்பட நிகழ்ந்துள்ளதாகக் கல் வெட்டுச்சான்றுகள் விளக்குகின்றன. இதனால் இக்காலகட்டத்தில் வெள்ளப்பெருக்கு மிகுதியாக நிகழ்ந்துள்ளது என்று பொருளல்ல. மக்கள் ஒருங் கிணைந்து செயற்பட்டுள்ளனர் அல்லது ஒருங் கிணைக்கப்பட்டுள்ளனர் என்று கருதவேண்டியுள்ளது. இவ்வாறு இடைக்காலத் தமிழக வரலாற்றில் மக்களின் கூட்டு முயற்சியே இயற்கைப் பேரிடரினை எதிர்கொண்டது என்று சொல்ல வேண்டும்.

குறிப்புகள்

1. புதுக்கோட்டை போன்ற வரண்ட பகுதிகளில் கூட வெள்ளத்தில் பயிர்கள் அழிந்ததற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. இப்படி பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு வரியிடுகையில் வெள்ளப்பாதிப்பிற்குத் தக்கபடி வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. பெருவெள்ளப் பெருஞ்சாவிப் பொகில் பயிர்பார்த்து பார்த்த முதலுக்கு (283), பெரு வெள்ளப் பெருஞ்சாவிப்பொகில் கண்டு கண்காணிச்சு வாரம் கொள்ளக் கடவதாகவும்(279), வெள்ளச்சாவி வறச் சாவி பயிர்பார்த்து பயிர் கூராடின நிலத்துக்கு (544) போன்ற கல்வெட்டுத்தொடர்கள் வெள்ளத்தால் உண்டான அழிவினையும் அதனால் உண்டான வரிகுறைப் பினையும் விளக்குகின்றன (89, 274, 302, 349, 359, 421, 625). ஓரளவு ஆற்றுப்பாசனம் பெறும் வடாற்காடு பகுதியிலும் கூட வெள்ளத்தால் பயிர் அழிந்தன என்பதைக் கல்வெட்டுகள் சுட்டுகின்றன (தெ.க.தொ., 7: 96) இவ்வூர் யாண்டு....... பெருவெள்ளங் கொண்டு ஊரும் பொகமு மழிந்து அநத்தப்பட்டு இவ்வூரிறை இறுக்கைக் குடலிலாமையில் என்று இக்கல்வெட்டுச் சான்று உரைக்கிறது.

2. இது போன்ற கரைகளை உடைய குளங்களும், குளக்கரைகளும் களஆய்வில் காணப்படுகின்றன. திருநெல்வேலி வட்டாரத்திலுள்ள ஒரு குளத்தின் கரை இயற்கையான பாறையால் அமைந்ததனை இவ்வேரியின் வடகடைப்பாறை என்று ஒரு கல்வெட்டுச்சான்று சுட்டுகிறது (தெ.க.தொ, 5:747). புதுக்கோட்டை வட்டாரத்தில் கி.பி. 800-இல் உருவாக்கப்பட்ட அணிமதஏரியின் கரை இயற்கையாக அமைந்த பாறைகளே. அதே வட்டாரத்தில் உள்ள மயிலாப்பூர் என்ற ஊரில் உள்ள ஒரு குளமும் இது போன்ற கரையினைக் கொண்டுள்ளது (கள ஆய்வில் கண்டவை). குளக்கரையில் மரங்களை வளர்ப்பதன் மூலம் கரையினை வலுப்படுத்துவதை இக்கரையிலே வச்சு ஆக்கின மரமுள்ளவை என்ற கல்வெட்டுத்தொடர் விளக்குகிறது (534).

3. 375. வெள்ளாற்றினைக் குளத்திலே விலக்கிக் குடுத்து என்ற தொடர் இதனை விளக்குகிறது. இதே போன்று பிறிதொரு ஆறும் குளத்திற்கு விலக்கப் பட்டுள்ளது. சீலம் கரையாறு மறித்து என்ற தொடர் அதனை விளக்குகிறது (582).

4. 198.

5. புதுக்கோட்டை வட்டாரத்தின் இரண்டாவது பெரியகுளம் வல்லநாட்டுக்குளமாகும். இதில்தான் இவ்வட்டாரத்தின் மிகப்பெரியமடை அமைந்துள்ளது. வெள்ளாற்றிலிருந்து நீரினைப்பெறும் இக்குளத்தினின்று பல தொடர்குளங்கள் நீர் பெறுகின்றன. இதனைப் பல நூற்றாண்டுகளாக அவ்வட்டாரத்தின் வல்லநாட்டுக் கள்ளர் ஆண்டு வந்துள்ளனர், பராமரித்தும் வந்துள்ளனர். இதனை இனவியலுக்கும், நீரியலுக்கும் இடையிலான உறவாக அறிய வேண்டும். இங்குத் தோன்றிய பல இனக் குழு அரசுகள் அங்கங்கே அமைந்துள்ள பெரிய குளங்களை நம்பியே எழுந்தன. இவற்றுக்கு வழுத்தூர் அரசு, பெருங் கொளியூர் அரசு, வல்லத்தரசு போன்றன சிறந்த காட்டாகும்.

6. தெ.க.தொ.6:348. இது போன்ற செயற்பாடுகள் கி.பி. 800 வாக்கிலேயே தொண்டைமண்டலப் பகுதிகளில் ஆட்சியாளர்களாலும், ஊர்ச்சபையர்களாலும் தொடங்கப் பட்டுவிட்டன.

7. தெ.க.தொ, 13:50.

8. திருச்சிராப்பள்ளி வட்டாரத்தின் அல்லூர் என்ற ஊரிலுள்ள தலைவாயர் என்ற குழுவினரின் உரிமை காலஓட்டத்தில் பாதிக்கப்பட்டது போன்றும் அதனால் அவர்களின் குழுத்தன்மை சிதைந்தது போன்றும் தெரிகிறது. இதனால் விளைநிலம் காவிரி பெருகி குலை உடைந்து ஆறேழு ஆண்டுகளாக மணலிட்டுப் புன் செய்யாகக் கிடந்தது என்று கல்வெட்டுச் சான்றுகள் விளக்குகின்றன. இக்கருத்து பிறிதொரு கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது (பார்க்க: சோழ நாட்டில் நீர் உரிமை: கி.பி. 850 முதல் கி.பி. 1250 வரை - இக்கட்டுரை அண்மையில் வெளிவரவுள்ள தமிழக வரலாற்றில் நீர் உரிமை (சங்ககாலம் முதல் கி.பி. 1600 வரை) என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

9. நீர் உரிமை, நீராதாரங்களின் பராமரிப்பு, அதற்கான மக்களின் முன்னெடுப்பு போன்ற செய்திகள் இவ்வூர்களின் கோயில்களில் அமைந்த கல்வெட்டு களிலேயே கிடைக்கின்றன. இவ்வூர்கள் பன்னெடுங் காலமாகவே வேளாண்மையிலும், நீர்ப்பாசனத் தொழில் நுட்பத்திலும் ஈடுபட்டுள்ளனவாக அறியமுடிகிறது. இப்பின்னணியில் இக்கட்டுரையின் ஆறாம் ஏழாம் பத்திகளுக்கு பேரா.ப.சண்முகம் அவர்களின் நூல் பயனுள்ளதாக அமைந்தது (P.Shanmugam, Revenue System of the Cholas: 850-1279, New Era Publications, Chennai.1987)

* குறிப்புகளின் நக அடைப்புகளில் தரப்பட்ட எண்கள் புதுக்கோட்டை கல்வெட்டுத் தொகுதியில் உள்ள கல்வெட்டுகளின் வரிசை எண்கள்.

தெ.க.தொ - தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15146:2011-06-14-10-24-05&catid=1334:2011&Itemid=581

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.