Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்கள் நிலத்தை, வளத்தை இழந்து நிற்கதியாக நிற்கிறார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் நிலத்தை, வளத்தை இழந்து நிற்கதியாக நிற்கிறார்கள்

img1110618054_1_1.jpg

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் நேர்காணல்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் உக்கிரமாக நடந்த கிளிநொச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார். இலங்கையில் தமிழர்கள் அனுபவித்துவரும் துயரமும், அவலமும் அவருடைய பேச்சில் மட்டுமின்றி, அவருடைய முகத்திலும் நிரந்தரமாக குடிகொண்டிருந்தது. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய சிறீதரன், இலங்கையில் போருக்குப் பின் மக்களுடைய வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை ஆழமாக விவரித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு தமிழ்.வெப்துனியா.காமிற்கு ஒரு நேர்காணல் தருமாறு எனது வேண்டுகோளை ஏற்று மூத்த வழக்குரைஞர் தடா சந்திரசேகர் சிறீதரனிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவரிடம் பேசியதே கீழே தரப்பட்டுள்ளது. போருக்குப் பின் அங்கே எல்லாம் அமைதியாகவும், செழிப்பாகவும் உள்ளன என்று இங்கே பரப்புரை செய்யப்படுகிறது. இதோ ஈழத்தின் உண்மைக் குரல் - ஆசிரியர்.

தமிழ்.வெப்துனியா.காம்:

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போருக்குப் பின்னர், இரண்டு ஆண்டுக்காலம் ஆகிவிட்ட நிலையில், அந்தப் பகுதிகளில் பொருளாதார ரீதியாக மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகள், உள்கட்டமானங்கள் மேம்படுத்துதல், அந்த மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான நிவாரண உதவிகள் எல்லாம் விரைவாக நிறைவேற்றப்படுகிறது என்று சிங்கள அரசு சொல்கிறது. மற்றொரு பக்கத்தில், அந்தப் பகுதிகளுக்கு வந்த ராபர்ட் பிளேக், அங்கு நடந்து வரும் வேலைகள் திருப்தி அளிப்பதாகக் கூறியிருக்கிறார். அங்கு கள நிலவரம் எப்படி உள்ளது? போரில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை எப்படி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். ஏனென்றால், நீங்கள் கிளிநொச்சி மக்களவை உறுப்பினராக இருக்கிறீர்கள். இதுகுறித்து விளக்குங்கள்.

சிவஞானம் சிறீதரன்:

அந்தப் பகுதிகளில் நீங்கள் சொல்வது போன்று அபிவிருத்திப் பணிகள் என்பது ஒரு சிறிய அளவில், அதாவது உலக நாடுகள் வழங்குகின்ற உதவித் தொகைகளை, தமிழர்களுடைய அழிந்துபோன தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உலக நாடுகள் இலங்கை அரசிற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை கடனாகவும், உதவியாகவும் வழங்குகின்றன. அந்த உதவிகளில் ஒரு சிறிய அளவிற்கு வடக்கு, கிழக்கு பகுதியை பாவித்துக்கொண்டு, பெரும் பகுதியை சிங்களப் பகுதிக்கு, அதாவது தென் பகுதிக்கு அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதில் முக்கியமாக ஏ9 பாதை என்று சொல்லப்படுகிற, கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லக்கூடிய பிரதானப் பாதையில் உள்ள சில கட்டடங்கள் திருத்தப்பட்டு, மெருகூட்டப்பட்டு, பூச்சு பூசப்பட்டு கண்கவர் நிலையில் வைக்கப்படுகின்றன. அதேவேளையில் ஏ9 பாதையில் சில இடங்களில் திருத்தம் செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால், யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் கொழும்புவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பாதையில் இப்பொழுது திருத்தம் செய்யும் பணிகளை அங்கு அவதானிக்க முடிகிறது. அதேபோல, இதுவரை ஒரு ரயில் பாதை அங்கு போடப்படவில்லை. இவற்றிற்கெல்லாம் அப்பால் அங்கு வாழுகின்ற கிராமங்களில் இருக்கின்ற மக்கள் அவர்களுடைய கிராமங்களுக்குச் செல்வதற்கு, உதாரணமாக கிளிநொச்சியில் இருந்து வீரவில் என்ற கிராமத்திற்கு செல்வதற்கு கிட்டத்தட்ட 38 கி.மீ. தூரத்திற்கு குண்டும் குழியுமான கிரவல் நிறைந்த, தண்ணீர் நிறைந்த பாதையூடாகவே அந்த மக்கள் செல்ல வேண்டியிருக்கிறது. இதுவரையில் அந்தப் பாதையில் கிரவல் கூட போடப்பட்டு நிரப்பப்படாத சூழலே அங்கு தென்படுகிறது. ஆகவே மக்களுடைய வாழ்க்கையில் அங்கு எந்தவிதமான அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது, ஒரு வீடு தேவை என்று இருப்பவனுக்கு, உனக்கு வீடு தரமுடியாது, அங்கு ஒரு அலமாரி இருக்கிறது கொண்டு போ என்று சொல்வது போன்று இருக்கிறது. வீடே இல்லாத ஒருவன், எப்படி அலமாரியை பெற்றுக்கொள்ள முடியும். இதுபோலத்தான், தமிழர்களுக்கு ஒரு தீர்வு வழங்கப்படாமல், தமிழர்கள் போராடி, அவர்கள் வாழ்ந்த மண்ணிலே அவர்கள் வாழ்வதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சூழலில், உங்களுக்குத் (அரசியல்) தீர்வு தேவையில்லை, உங்களுக்கு அபிவிருத்திதான் என்கின்ற மாயையான பதங்கள் பிரயோகிக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள்.

காலம் காலமாக இதேபோன்ற சொல் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் அவர்களுடைய வீடுகளோ, காணிகளோ, பாதைகள், ஆலயங்கள் யாவுமே திருத்தப்படாத நிலையில், புத்தர் சிலைகள் அங்கு வைக்கப்பட்டு, புத்த ஆலயங்கள் அங்கு அமைக்கப்படுகின்ற சூழலையே எங்களால் அவதானிக்க முடிகிறது. ஆகவே, தமிழர்களுடைய கலாச்சாரம், அவர்களுடைய வாழ்க்கை முறைகள், அவர்களுடைய வாழ்வியல் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், சிங்கள மொழி மூலமான பதிவுகளும், சிங்கள காவல் துறையினர், சிங்கள ராணுவத்தினருடைய அடக்குமுறைக்கு மத்தியில், அங்கு தமிழர்களுடைய வாழ்க்கை சோபை இழந்தே காணப்படுகின்றன.

தமிழ்.வெப்துனியா.காம்:

எங்களுக்கெல்லாம் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் என்னவென்றால், முள்வேளி முகாம்களில் இருந்து எல்லா மக்களும், 10 ஆயிரம் பேர் தவிர, மற்றவர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்று. நீங்கள் சொல்லுங்கள், அவர்கள் ஏற்கனவே வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளார்களா? அவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒரு விகிதாச்சரத்தின் அடிப்படையில் எங்கே குடியமர்த்தப்பட்டார்கள், எப்படி என்பதைச் சொல்லுங்கள்?

சிவஞானம் சிறீதரன்:

உங்களுக்குத் தெரியும், யாழ்ப்பாணத்தின் வடக்குப் பதியான வடமராச்சியின் கிழக்குப் பகுதியும், கிளிநொச்சி மாவட்டம் முழுமையாகவும், முல்லைத் தீவு மாவட்டம் முழுமையாகவும், வவுனியாவினுடைய வடக்குப் பகுதியான நெடுங்கேணி, கனராயன்குளம் பகுதியும், மன்னார் மாவட்டத்தினுடைய வடக்குப் பகுதியான பண்டிவிரிச்சான், மடு, பெரியகுளம் போன்ற பகுதிகளும் மக்கள் வாழ்ந்த இடங்கள். இங்கிருந்து முழுமையாக இடம்பெயர்க்கப்பட்ட நிலையில் அவர்கள் முள்ளிவாய்க்கால் வரை கொண்டு செல்லப்பட்டார்கள். ஆனால், அவர்கள் மீண்டும் குடியேறுவதற்காக எத்தணித்த பொழுது, கிளிநொச்சி மாவட்டத்தில் பரவிப்பாஞ்சான், பளை பிரதேசத்தில் உள்ள 16 கிராமத் தொழிலாளர் பிரிவுகளில் 8 கிராமத் தொழிலாளர் பிரிவுகளில் மட்டும் மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏனைய 8 கிராமத் தொழிலாளர் பிரிவுகளில் இதுவரையில் மக்கள் குடியேற்றம் செய்யப்படவில்லை. அதாவது, பளை பிரதேசத்திற்குட்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களில் 10 ஆயிரம் பேரே குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதேபோல், கிளிநொச்சி மாவட்டத்தின் பரவிப்பாஞ்சான் என்ற நகரப் பகுதி முழுமையான இராணுவத் தளமாகவே (Cantonment) உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கு மக்கள் நுழைவதற்கு எந்த அனுமதியும் அளிப்பதில்லை. இதேபோல, முல்லைத்தீவு மாவட்டத்தை எடுத்துப் பார்த்தால், 60 விழுக்காடு மக்கள் குடியேற்றம் செய்யப்படவில்லை. 40 விழுக்காடு மக்கள்தான் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். முல்லைத் தீவு மாவட்டமான உடையார்கட்டில் இருந்து புதுக்குடியிருப்பு, முல்லைத் தீவு நகரம் வரையான கிட்டத்தட்ட 60 விழுக்காடு நிலப்பரப்பில் மக்கள் குடியேற்றம் செய்யப்படாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மக்கள் அகதிகள் முகாம்களிலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலுமே வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட 80 ஆயிரம் மக்கள் இதுபோன்று குடியேற்றம் செய்யப்படாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். நிவாரணமும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் சாப்பாட்டிற்கே அன்றாடம் வாழ்க்கையில் திண்டாடுகின்ற மனிதர்களாக இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி பிரதேச மக்களும் இந்த மாதிரியான பாதிப்புகளை சந்தித்திருக்கிறார்கள். ஆகவே, முழுமையாக அங்கு குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

தமிழ்.வெப்துனியா.காம்:

80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவர்கள் இடங்களில் குடியமர்த்தப்படவில்லை என்று சொல்கிறீர்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

சிவஞானம் சிறீதரன்:

செட்டிகுளம் மாணிக் ·பார்ம் என்று சொல்லப்படுகின்ற முகாமில் கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். வவுனியாவில் நகரப் பகுதியில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலே சிலர் கொட்டில்களிலும், சிலர் வாடகை வீடுகளிலும் வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் யாழ்பாணத்தில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வாழ்கிறார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா நகரப் பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் உறவினர்கள், நண்பர்கள் இடங்களில் கொட்டில்களை அமைத்து ஏனைய மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே, அவர்கள் சொந்த இடங்களுக்கு செல்லவிடாது இவ்வாறு அவர்கள் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்.வெப்துனியா.காம்:

80 ஆயிரம் பேர் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. சாதாரண வாழ்க்கை கூட அவர்களுக்கு கிட்டவில்லை. மேலும் 60 ஆயிரம் பேர் இன்னமும் முகாம்களில் இருக்கிறார்கள் என்றால், இந்த 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் போக மீதி உள்ள கிட்டத்தட்ட 1.35 லட்சம் பேர்தான் குடியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறு குடியமர்த்தப்பட்ட இந்த மக்களினுடைய நிலை எவ்வாறு உள்ளது?

சிவஞானம் சிறீதரன்:

குடிமயர்த்தப்பட்ட தங்களுடைய இடங்களில் வீடுகளை கட்டி தங்களுடைய சொந்த நிலத்தில் வாழ்வதற்கான தகுதிகள் இல்லாத நிலையில், அவர்கள் மரங்களுக்கு கீழே புதிய கொட்டில்களை அமைத்துதான் இன்னமும் வாழ்கிறார்கள். அங்கே வீடுகளுக்கு கதவுகள் இல்லை, ஜன்னல்கள் இல்லை, வீடுகளுக்கான பாதுகாப்பு இல்லை. ஆனால் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என்ற பெயரில் சிறைச்சாரம் செய்யப்படுகிறார்களே தவிர, அவர்கள் முழுமையான ஒரு சுதந்திரமான வீட்டு வசதியுடன் இல்லை. அதாவது, 2009ஆம் ஆண்டு யுத்தம் நடைபெறுகிற பொழுது அந்த மக்கள் எவ்வாறு தங்கள் சொந்த வீடுகளில் பாதுகாப்பாகவும், செழுமையாகவும், மற்றவர்களுக்கு உணவளித்து வாழ்ந்த வன்னி மக்கள், இன்று தங்களுக்குப் பாதுகாப்பாற்ற, வாழ முடியாத நிற்கதியான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்.வெப்துனியா.காம்:

நீங்கள் பதிலளிக்கும் போது ஒன்றைக் கூறினீர்கள், முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமே இராணுவக் குடியிருப்பாக (கண்டோன்மெண்ட்) மாற்றப்பட்டுள்ளது என்று, அவ்வாறு அமைக்கப்பட்ட அந்த ராணுவ தளத்தால் அங்கு மீள் குடியமர்த்தப்பட வேண்டிய மக்கள் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டார்கள்.

சிவஞானம் சிறீதரன்:

முல்லைத் தீவு மாவட்டத்தினுடைய சிவப்பாற்றிலேறு என்கின்ற கிராமம் 2,500 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட பகுதி. அங்கு 560 குடும்பங்கள் இருந்தன. இந்த 560 குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,900 பேர் அந்த மண்ணிலே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கடந்த 2009 ஆம் ஆண்டு வரை செழிப்போடும், மிகச் செழுமையாகவும் 1,800க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் வைத்து அந்த மண்ணிலே மிகச் செழிப்பாக வாழ்ந்த மக்கள். இன்று அந்த கிராமத்தையே முழுமையாக அபகரித்து இராணுவத் தள மையமாகவும், இராணுவத்தினருக்கான வீடுகள் என்று கூறியும் கட்டடங்கள் அமைத்து அந்த மக்களை அங்கே மீளக் குடியேறவிடாமல் தடுத்திருக்கிறார்கள். இதேபோல, கிளிநொச்சி, முல்லைத் தீவிற்கு எல்லைப் புறமான புதுமுருகண்டி பிரதேசத்தில் அங்கிருந்த கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வாழமுடியாமல் தடுக்கப்பட்டு அவர்கள் அனைவரும், அயலவர், நண்பர்கள் இடங்களில் கொட்டில் அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த இடத்திலும் இராணுவத்தினர் தளம் அமைத்தும், தங்களுக்கான வீடுகள் அமைத்தும் வருகிறார்கள். ஆகவே, இந்தப் பகுதிகள் முழுமையாக இராணுவத்தினருக்கு பயன்படுத்துவதற்கு அப்பால், இராணுவத்தினருடைய குடும்பங்கள் வாழ்வதற்கென கூறி வீடுகளும், அதற்கான ஆயத்த வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே, இது எங்களுடைய மக்களைப் பொறுத்தவரையில் மிகக் கூடிய அளவில் அவர்களை அந்த மண்ணில் இருந்து அகற்றக்கூடிய நடவடிக்கையாகவும், அதே நேரத்தில் சிங்களக் குடியேற்றங்களை மெல்ல மெல்ல புகுத்துவதற்கான மிகக் கச்சிதமான நடவடிக்கையாகவே நாங்கள் இதனைப் பார்க்கிறோம்.

சுண்டிகுளத்திற்கும், கொக்காவிலிற்கும் இடையில் மட்டுமே 10 ஆயிரம் சிங்கள மீனவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதுவரையில் இந்த இரண்டாண்டு காலத்தில் தமிழ் ஈழப் பகுதியில், அவர்கள் பாரம்பரிய பூமியில் எத்தனை ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்பதை ஒரு உத்தேசமாக கூற முடியுமா?

2009 ஆம் ஆண்டு யுத்தம் நடந்த பின்னர், கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களர்கள் தமிழர்கள் பகுதிகளில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடைப்பட்ட மணலாறு பிரதேசத்தில் அளம்பலை, செம்மலை, பதவியா போன்ற இடங்களில் பாரிய சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்பட்டு, 1948 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை அந்த நிலங்கள் முழுமையாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல நீண்ட கால திட்டத்தோடு முல்லைத் தீவு மாவட்டம் கரையோரப் பிரதேசமான கொக்குவாய், கொக்குதொடுவாய், கர்நாட்டுக்கேணி, நாயாறு, முல்லைத் தீவு, செல்வபுரம், செம்மலை, அளம்பில், பூந்தாய் போன்ற கிராமங்கள் ஊடாக முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, வளைஞர்மடம், அம்பலவான் பொக்கனை போன்ற பிரதேசங்களில் எல்லாம் அங்கு வாழ்ந்த தமிழ் மக்களை மீள் குடியேற்றம் செய்யப்படவிடாமல், சிங்களர்கள் தொழில் என்ற அடிப்படையில் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, மிகக் கூடிய வகையில் ஒரு அபாயகரமான சூழலில் முல்லைத் தீவு மாவட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அந்த மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்க, அவர்களுடைய நிலங்களிலே சிங்களவர்கள் குடியேறி வருகிறார்கள்.

தமிழ்.வெப்துனியா.காம்:

நீங்கள் கூறிய விடயம் சோகமானது. இதே நேரத்தில் மற்றொரு கேள்வியையும் கேட்க விரும்புகிறேன். என்னவெனில், குடியமர்த்தப்பட்ட மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ளத் தேவையான பொருளாதாரத்தை எவ்வாறு பெறுகிறார்கள். அல்லது அதில் என்ன இயலாமை உள்ளது?

சிவஞானம் சிறீதரன்:

மக்களுக்காக வழங்கப்பட்ட சகல நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால் அந்த மக்கள் அந்த இடங்களிலே சிறு சிறு வீட்டுத் தோட்டங்களையும், சிறிய அளவில் வயல்களையும் கொண்டு வேளாண் செய்கிறார்கள். சிலர் அரசுத் தொழில் பார்ப்பவர்கள், கூலித் தொழில் செய்பவர்கள், தங்களுடைய வயிற்றை ஏதோ நிரப்பிக் கொள்கிறார்கள். அதே நேரம், தமிழர்கள் தங்களுடைய கடற்கரைப் பிரதேசங்களில் கடல் தொழில் செய்பவர்கள் கடலுக்குச் சென்று தொழில் செய்ய முடியாதவாறு தடுக்கப்படுகிறார்கள். அந்த இடங்களிலே இருக்கிற தமிழர்கள் எந்த நாள் கடலுக்குச் சென்றாலும் அனுமதி அட்டையைப் பெற்றுக்கொண்டுதான் கடலுக்குச் செல்ல முடியும். ஆனால், அந்த இடங்களை சிங்களர்கள் அபகரித்து, இலங்கையில் சங்கு பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ள இந்த வேளையில் முழுமையாக சங்கு பிடித்தல் தொழிலை சிங்களவர்கள் செய்கிறார்கள். இதனால் அந்தத் தமிழர்களுடைய கடல் பிரதேசங்களில் மீன் வளம் இல்லாமல் போகின்றது. அதேபோல, கரைவலை இழுத்தல் என்பது கிட்டத்தட்ட 1,500 மீட்டர் வரைதான் கரைவலைகளை இழுக்க முடியும். ஆனால், சிங்களவர்கள் 6,000 மீட்டர்கள் வரையும் கரைவலைகளை இழுக்கின்றார்கள். தமிழர்கள் 1,500 மீட்டர் வரைதான் கரைவலைகளை இழுக்க முடியும் என்று சட்டம் பிறப்பித்திருக்கிறார்கள். இதன்மூலம் சிங்களவர்கள் கடலில் உள்ள முழு வளங்களையும் சுரண்டிச் செல்ல, தமிழர்கள் தங்களுடைய வயிற்றுப்பாட்டுக்கு கூட ஏதுமற்ற அனாதைகளாக இருக்கிறார்கள். இது, அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய நிலத்தை இழந்து, வளத்தை இழந்து, வாழ்வை இழந்து ஒரு நிற்கதியாக நிற்கின்ற சூழலையே அங்கு உருவாக்கியிருக்கிறது.

தமிழ்.வெப்துனியா.காம்:

நாங்கள் ஒன்றைக் கேள்விப்பட்டோம். மீன் பிடிக்கச் செல்லும் தமிழர்களுக்கு இத்தனை லிட்டர் டீசல் என்று போட்டுவிட்டு அவர்கள் நீண்டதூரம் சென்று மீன் பிடிக்க விடாமல் ஒரு தடையை ஏற்படுத்துகிறது சிறிலங்க அரசு என்று. அதனை சற்று விளக்குங்கள்.

சிவஞானம் சிறீதரன்:

தமிழர்கள் கடலிலே சென்று மீன்பிடிக்கச் செல்வாதானால் அவர்களுடைய படகு இயந்திரங்களுக்கு குறித்த அளவான எரிபொருட்களே வழங்கப்படுகின்றன. அதாவது, சிங்களவர்கள் ஆழ்கடலிலே சென்று மீன் பிடிப்பதற்காக எவ்வளவு எரிபொருட்களையும் அவர்கள் எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாக கொண்டு செல்ல முடியும். ரோலர் போன்ற பெரிய படகுகளைக் கூட அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால், தமிழர்கள் சிறிய இயந்திரப் படகுகளை, பிளாஸ்டிக்கால் ஆன சிறிய இயந்திரப் படகுகளை கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு மிகக் குறைந்த அளவே பெட்ரோல் எரிபொருள் வழங்கப்படுகிறது. ஏனெனில் அதில் அடங்கும் பகுதிகளில் மட்டும் அவர்கள் தொழில் செய்துவிட்டு திரும்ப வேண்டும் என்பதற்காக. ஆகவே, இது தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய தொழிலிலே பாரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர்கள் வாழுகின்ற பொழுதும் அடிமைகளாகவும், அனாதைகளாகவும் வாழ்ந்து, தொழில் செய்ய முடியாதவர்களாக நிற்கதிக்கு உள்ளாகி செயற்கையாகவே அவர்கள் வறுமைக்கு உள்ளாக்கப்பட்டு எந்தக் காலத்திலும் அவர்கள் எல்லோரிடமும் கையேந்தி வாழுகின்ற சூழலில் தள்ளப்படுகிறார்கள்.

தமிழ்.வெப்துனியா.காம்:

இப்படிப்பட்ட ஒரு சூழலில் அங்கு உள்ள மக்களுடைய வாழ்க்கை பாதுகாப்பான அளவிற்கு உயர்த்துவதற்கு, அவர்கள் போதுமான அளவு பொருளாதார உதவியைப் பெறுவதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

சிவஞானம் சிறீதரன்:

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு அந்த மண்ணிலே அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கூட தமிழ்நாட்டு மக்கள் தங்களைத் தாங்களே ஆளுகிறார்கள். தங்களுடைய காவல்துறை, தங்களுடைய காணி நிர்வாகம், போக்குவரத்து, நிதி கையாள்கை என்று எல்லாவற்றையும் மிகவும் நேர்த்தியாக செய்து ஒரு சிறந்த மாநிலமாக அவர்கள் தங்களை வளப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல, ஈழத்தில் வாழுகின்ற தமிழர்கள் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையிலான, அவர்களுடைய சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்டு, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய வகையில் தமிழர்களுடைய தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு சுய ஆட்சி இலங்கைக்குள் வழங்கப்பட வேண்டும். நாங்கள் இலங்கைக்குள்தான் அந்த சுய ஆட்சியைக் கேட்கிறோம். சமஷ்டி அடிப்படையிலான, தமிழர்கள் தங்களை ஆளுகின்ற ஒரு சுயாட்சி வழங்கப்படாத வரை எந்தவொரு அபிவிருத்தியும் தமிழர்களுக்கு விடுக்கப்படுகின்ற ஒரு கானல் நீராக, ஒரு பத்திரிக்கை செய்தியாக, வெளியுலகத்திற்கு காட்டுகின்ற ஒரு கபட நாடகமாகவே இருக்குமே தவிர, அதுவொரு அபிவிருத்தியாக அந்த மண்ணிலே மலரப் போவதில்லை. ஆகவே, தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான ஆட்சி உரிமை வழங்கப்படும் வரை அந்த மண்ணிலே எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை.

தமிழ்.வெப்துனியா.காம்:

இந்தச் சூழலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அல்லது பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையை எந்த அடிப்படையில் நீங்கள் மேற்கொள்கிறீர்கள். அதனால் என்ன பயன் விளையும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

சிவஞானம் சிறீதரன்:

நீங்கள் ஒரு பத்திரிக்கையாளர்கள் என்ற வகையிலே, கடந்த கால வரலாறுகள் உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் கடந்த 1958ஆம் ஆண்டில் தந்தை செல்வநாயகம் அவர்கள் திசநாயகவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்திருந்தார். அதேபோல, பிறகு 1968ஆம் ஆண்டிலே ஒரு ஒப்பந்தம் செய்திருந்தார். அதன்பிறகு பண்டா-செல்வா ஒப்பந்தம் செய்திருந்தார். இப்படியே பல ஒப்பந்தங்கள் எல்லாம் அவருடைய காலத்திலேயே கிழித்தெறியப்பட்டது.

அதேபோல, ஜே.ஆர்.ஜெயவர்தனே காலத்தில் போராளிக் குழுக்களுக்கும், அமிர்தலிங்கம் அவர்களுக்கும் இணைந்ததாக திம்புவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு அதுவும் கிழித்தெறியப்பட்டது. அதன்பின்னர், புலிகளுக்கும், சந்திரிகாவிற்கும், ரணில் அரசாங்கத்திற்கும் இடையே கூட பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு கிடப்பிலே போடப்பட்டது. ஆகவே, சிங்கள அரசு காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றியே வந்திருக்கிறது. தமிழர்களுக்கு எந்தவொரு தீர்வையும் தந்ததாக வரலாறு இல்லை.

இப்பொழுதும் கூட தமிழர்கள் எந்தவொரு வளமும் இல்லாமல், பலம் இழந்த நிலையில், நிராயுதபாணிகளாக நிற்கின்ற சூழலில், தமிழர்கள் புலிகள் கேட்ட எதையும் என்னிடம் கேட்கக் கூடாது என்று கொக்கரிக்கின்ற நிலையிலே, ராஜபக்ச அவர்கள் எங்களுக்கு ஒரு தீர்வைத் தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால், இந்திய மத்திய அரசும், இந்தியாவும், ஏனைய உலக நாடுகளும் இன்றைய தமிழர்களுடைய அவல நிலையையும், தமிழர்கள் பட்ட துன்பங்களையும், போரிலே அவர்கள் மடிந்துபோன அந்த நிலைகளையும் கவனத்தில் எடுத்து, தமிழர்கள் இந்த மண்ணிலே அழிந்துபோகின்ற இனம் என்பதை காப்பதற்காக, ஒரு நிரந்தர அரசியல் தீர்விற்கு அவர்கள் வழி செய்வார்கள் என்ற பூரண நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது.

தமிழ்.வெப்துனியா.காம்:

இந்திய அரசு வட்டாரங்களில் அவர்கள் நீண்டகாலமாக முன்வைப்பது என்னவென்றால், 1987 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தம் அடிப்படையில், இலங்கை அரசியல் அமைப்பில் 13வது திருத்தத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் ஒரு தீர்வை ஏற்படுத்துவது எந்தவிதத்திலாவது தமிழர்களுடைய பிரச்சனைக்கு ஒரு தற்காலிக, இடைக்காலத் தீர்வாக அமையுமா?

சிவஞானம் சிறீதரன்:

13வது திருத்தச் சட்டம் என்று நீங்கள் சொல்கின்ற ஒரு சட்டமே இப்பொழுது இலங்கையில் இல்லை. அதிலிருந்த பல சரத்துகள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டன. ஏற்கனவே வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது ஜே.வி.பி.னுடைய வழக்கு தாக்கல் மூலமாக நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டுவிட்டது. இதிலேயே 13வது திருத்தச்சட்டம் தன்னுடைய முழு செயலையும் இழந்துவிட்டது. அதன்பின்னர், அங்கிருந்த சில காவல் துறை அதிகாரங்கள் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தில் காவல் துறை அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் வழங்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஒரு பிரேரணை இருந்தது. அந்தப் பிரேரணையும் 18வது திருத்தச்சட்டத்தின் ஊடாக நீக்கப்பட்டுவிட்டது.

ஆகவே, 13வது திருத்தச்சட்டம் என்பது இன்று ஒன்றுமே இல்லாத ஒரு கோடு. அதிலே எந்தவிதமுமான ஒரு பொருளடக்கமும் இல்லை. ஆகவே, 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் பேசி எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருப்பதெல்லாம் இல்லாத ஒரு பொருளை இருப்பதாகக் காட்டுகின்ற ஒரு மாயையாகவே தென்படும். ஆகவே இப்பொழுது இருப்பதெல்லாம், தமிழர்கள் இன்று அவர்கள் இழந்துபோன நிலையில், நிராயுதபாணிகளாக இருக்கின்ற சூழலில், அவர்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை, அவர்களுடைய சுய நிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்குள் அவர்களுக்கு முன்வைக்கப்பட வேண்டும். அது சமஷ்டி அடிப்படையிலான இரண்டு தேசங்களாக, பண்டைய காலங்களில் ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு வருகின்ற பொழுது வடக்கு, கிழக்கு ஒரு தேசமாகவும், ஏனைய பகுதிகள் ஒரு தேசமாகவும் இருந்திருக்கின்றன. ஆகவே, இரண்டு தேசங்களும் ஒற்றுமையாக இந்த மண்ணிலே வாழ்ந்திருக்கின்றன. இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு ஒரு தீர்வை இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையில் முன்வைக்கப்பட வேண்டும்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1106/18/1110618054_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களாகிய நாம் வாருங்கள் ஒன்றினைவோம்,நாம் இழந்த மண்ணை மீட்க்க உழைப்போம் உறிதியுடன் போராடுவோம் (சனாயாக வழியில் ) எமது வேற்றுமையை களைந்து ஒன்றுபட்டு செயற்படுவோம்.

''வருக எங்கள் மக்களே வெற்றி பெறுவது எங்கள் பக்கமே எழுக தமிழர் கூட்டமே இனி அழுவதில்லை நாட்டிலே''

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.