Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவன்-இவன் அழுத்தமில்லாதவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவன்-இவன் அழுத்தமில்லாதவன்

பெரிய ஹீரோக்கள் ஆர்யா, விஷால் கூட்டணியில் பாலா இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புடன் சென்றேன்..அதை படத்தின் பின்பாதி மட்டும்

ஓரளவுக்கு பூர்த்தி செய்தது என்று தான் சொல்ல வேண்டும்....

பொதுவாக கடைநிலை மனிதர்களின் உறவுகளையும் ,உணர்வுகளையும் அழுத்தமாகவும்,அழகாகவும் படம் பிடிக்கும் பாலா அவன்-இவன் படத்தில்

ஏனோ அங்கும் இங்கும் தடுமாறி இருக்கிறார்.. முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் கதை எதை நோக்கி செல்கிறது என்பதை

தெளிவாக உணர்த்துவது சிறந்த திரைக்கதைக்கு அழகு என்று சொல்வார்கள்.. இந்த படத்திலோ முதல் பாதி முடியும் வரை பாலா என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை .....

திருட்டை குல தொழிலாக கொண்டவனின் (ஆனந்த் வைத்யா ) மூத்த

தாரத்து(அம்பிகா) மகன் வால்ட்டர் வணங்காமுடியாக விஷால் ,இரண்டாவது தாரத்தின் ( பிரபா ரமேஷ்) மகன் கும்பிடறேன் சாமியாக ஆர்யா , அதே ஊரில் சொத்துக்களை எல்லாம் பறி கொடுத்து விட்டு தனி மரமாக வாழும் ஜமீன் ஹைனசாக ஜி.எம். குமார்...ஊரில் உள்ள

எல்லோரும் இவரை மதிக்கிறார்கள்..அதிலும் குறிப்பாக விஷால் ,ஆர்யா

குடும்பத்தில் ஒருவன் போல ஹைனெஸ் நெருக்கமாக இருக்கிறார்....

இவர்களைத் தவிர வில்லனாக ஆர்.கே.. விஷால் , ஆர்யாவின் காதலிகளாக ஜனனி ஐயர் மற்றும் மதுஷாலினி நடித்திருக்கிறார்கள்....

ஜமீனின் 60 வது பிறந்த நாள் விழாவில் பெண்கள் போடும் குத்தாட்டத்தோடு படம் தொடங்குகிறது..அதில் பெண்வேடமிட்டு விஷால்

போடும் ஆட்டம் நல்ல அறிமுகம்....விஷாலுக்கு இது முதல் படம்...

ஒரு முழு நடிகனாக அவர் பரிணமித்திருக்கும் முதல் படம்..

பெண்தன்மை கலந்த தோற்றம் ,மாறுகண் பார்வை,இரட்டைக் குரல் என படம் முழுவதும் வியாபித்து இருக்கிறார் விஷால்...சாவி தொலைந்து விட்டதால் ஒரு ஜட்ஜ் வீட்டிற்கு பீரோவை உடைப்பதற்கு அழைத்து வரப்படும் விஷால் அவரிடமே சாவி கேட்பது...ஓட்டைப் பிரித்து திருடப்போன இடத்தில் சின்ன பெண்ணிடம் நகையை புடுங்காமல் செண்டிமெண்ட் பார்ப்பது,..ஜனனி ஐயரை பார்க்கும் போது ஜொள்ளுடன் வழிவது என்று படம்

முழுவதும் சிரிக்க வைக்கும் விஷால் கிளைமாக்ஸ்இல் ஆர்.கே வை பழி தீர்க்கும் போது தான் ஒரு ஆக்ஸன் ஹீரோ தான் என்று நிரூபிக்கிறார்.....

சூர்யா வரும் ஒரு காட்சியில் முக பாவனைகள் மூலம் நவரசத்தையும் காட்டும்

போது விஷால் தானா என்று நம்ப முடியவில்லை...அற்புதம்... (அதே காட்சியில் சூர்யாவின் முகபாவமும் சூப்பர் )

விஷாலுக்கு சமமாக ஆர்யாவை விட ஒரு படி மேலாக எல்லோரையும் கவர்பவர் ஜமீன் ஹைனசாக வரும் ஜி.எம்.குமார்.. ஒட்டு மீசை வைத்துக்கொண்டு குழந்தைத்தனமாக விழுந்து விழுந்து சிரிக்கும்

முதல் காட்சியில் இருந்து முழு நிர்வாணமாக்கப்பட்டு ஆர்.கே வால் சாகடிக்கப்படும் கடைசி காட்சி

வரை மனதில் நிற்கிறார்..

முன்பாதியில் விஷாலை வம்புக்கு இழுக்கும் ஆர்யா பின்பாதியில் விஷால் விஸ்வரூபம் எடுத்தவுடன் அடக்கி வாசிக்கிறார்..போலீஸ்காரர்களுடன் இவர் அடிக்கும் லூட்டி கல..கல..

பிதாமகனில் சூர்யா செய்தது போன்ற பாத்திரம் ஆர்யாவிற்கு இப்படத்தில்

கொடுக்கப்பட்டிருக்கிறது...

சுருட்டு பிடித்துக்கொண்டு சவடால் பேசும் அம்பிகா,குடித்து விட்டு மகனுடனே குத்தாட்டம் போடும் பிரபா ரமேஷ்,

இறைச்சிக்காக மாடுகளைக் கடத்தும் குரூர வில்லனாக ஆர்.கே , நெற்றி முழுவதும் விபூதி பூசிக்கொண்டு குற்றவாளிகளுடன்

கெஞ்சிக்கொண்டும்,கொஞ்சிக்கொண்டும் அலையும் சப் இன்ஸ்பெக்டராக

ராமராஜ் என்று எல்லோருமே கவனிக்க வைக்கிறார்கள்...

ஜனனி , மதுஷாலினி இருவரில் முன்னவர் கண்களாலேயே கவர்கிறார்..

"அம்மா மாவு மாவா போவுதுமா' - 'விடுடா என்ன வந்தவங்களுக்கு தோசையா சுட்டு தரப்போற!.. "உனக்காக என்ன செய்யணும் சொல்லு பீயக்கூட திங்குறேன்" போன்ற எஸ்.ராமகிருஷ்ணனின் வசனங்கள் கடைநிலை

மக்களின் யதார்த்தமான பேச்சு வழக்கை பிரதிபலிக்கின்றன...

இசையும்,ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்றார் போல அமைந்திருக்கின்றன..

குறிப்பாக ஆர்யா,மது சம்பத்தப்பட்ட காட்சிகளில் இசையும் , வானத்தைப்

பின்னணியாக கொண்டு முழு பிரேமில் ஆர்யா வசனம் பேசும் இடத்தில்

ஒளிப்பதிவும் அருமை... எடிட்டிங் தொய்வான திரைக்கதையை ஓரளவு

சரிக்கட்டுகிறது..

இயக்குனர் பாலா பிதாமகனில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளில்

வைத்திருந்த காமெடியை இன்றும் ரசிக்கலாம்..ஆனால் அதையே அவன்-இவன் படம் முழுவதும் செய்ய முயற்சி செய்தது ஏனோ ஒட்டவில்லை ..

விக்ரம்,சூர்யா,ஆர்யா வரிசையில் விஷாலையும் நல்ல நடிகனாக

மாற்றியதற்கு பாலாவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்....

அதே போல் ஜி.எம்.குமார் முழு நிர்வாணமாக ஓடும் காட்சியில் துளி கூட

அருவறுப்பு இல்லை ...அனுதாபமே மிஞ்சியது..அது பாலா டச்..

இந்தப்படம் பார்த்த பிறகு சேதுவை தவிர்த்து பாலா செய்த

படங்கள் எல்லாம் ஒரே பாணியில் இருப்பது புலனாகிறது..

அசாதரணமாகவும் , அழுக்கேறியும் கதாநாயகன் , அவன் திருடனாய்,போக்கிரியாய் எப்படி இருந்தாலும் அவனைக் காதலிக்கும்

வெள்ளைத் தோல் கதாநாயகி , குரூரமான வில்லன் , அவன் யாரையாவது

சாகடிக்க அதற்கு பழி தீர்க்கும் ஹீரோ , பட முடிவில் சாவு நிச்சயம்(சேது உட்பட)... ..

அவன்-இவன் பிதாமகன், நந்தாவின் கலவை என்று கூட சொல்லலாம்...

காட்சியமைப்புகளில் நிறைய வேற்றுமைகள் இருந்தாலும் அடிப்படை

விஷயங்கள் ஒன்று போலவே உள்ளன ..எல்லோரையும் சேர்த்து சந்தோசமான பாடல் வரும்போதே யாரோ சாகப்போவதை நம்மால் ஊகிக்க முடிகிறது... pithamaganil விக்ரம்-சூர்யா-சங்கீதா இவர்கள் கூட்டணியில் இருந்த கெமிஸ்ட்ரி இதில் மிஸ்ஸிங் ...

முதல் பாதி படத்தில் காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்கிறார்கள்..அதிலும் ஆர்யாவுடன் கூடவே வரும் குண்டுப்பையன் சிரித்துக் கொண்டே இருக்கிறான்..நமக்கு தான் ஏனோ சிரிப்பு வரவில்லை..

இடைவேளையில் ஒரு திருப்பமாக ஒரு கோடி மதிப்புடைய சந்தனக்கட்டைகளை விஷால் கடத்துவது போல காட்டுகிறார்கள்..பிறகு

அது என்ன ஆச்சுதுனே தெரியல...

வெயிலுக்குப் பின் அங்காடித்தெரு எடுத்த வசந்த பாலன்,ராம் படத்திற்கு பின் பருத்தி வீரன் எடுத்த அமீர் , பொல்லாதவனுக்கு பிறகு ஆடுகளம் எடுத்த வெற்றி மாறன் இப்படி எத்தனையோ பேர் அடுத்தடுத்த படங்களில்

வேறு வேறு தளங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்..

பாலா அவர்களும் தன் அடுத்த படத்தை சற்று மாறுபட்ட கோணத்தில்

எடுக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு..

http://pesalamblogalam.blogspot.com/2011/06/blog-post_19.html

Edited by தமிழ் அரசு

மாடேத்திக்கிட்டு போற லாரிய ஏதோ சந்தன கடத்தல் பன்ற மாதிரி காட்டியிருக்கிறது ஒரு புதிய திருப்பம்.. மாட்டுக்கறி கடத்துறது போன்ற புதியதொரு வில்லத்தனத்தை அறிமுகப்படுத்திய பாலவிற்கு கோடானு கோடி நன்றிகள்.. அடுத்தடுத்து ஆட்டுகறி கடத்தும் வில்லன்கள்.. கோழிக்கறி கடத்தும் வில்லன்கள்.. மற்றும் கொக்கு,புறா,வாத்து,நண்டு கடத்தும் வில்லன்கள், எறும்பு மருந்தடிக்கும் குரூர வில்லன்கள், கொசு மருந்தடித்து கொசுக்களைக் கொல்லும் முனிசிபலிட்டி வில்லன்கள் போன்ற புதிய பாத்திரங்களுக்கு பிள்ளையார் சுழி..இல்லை இல்லை ஆர்.எஸ்.எஸ் சுழி போட்ட பாலாவிற்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் யாம்..

கண்ணுக்குட்டிய நக்கவிட்டு பால் சொரந்ததுமே இழுத்துக்கட்டி சொட்டுவிடாம கறக்கற பாலை, தயிரும் வெண்ணையுமா தின்னு கொழுக்கிற கூட்டத்த குளிர்விக்க குப்பத்து கார கதாபாத்திரங்களையே துணைக்கு இழுக்கிறது யாருக்கு கொடுக்கிற அல்வா...?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப் படம் பார்க்க வேண்டும் என இருந்தேன் ஆனால் இவர்களது விமர்சனத்தைப் பார்த்தால் படம் சரியில்லை போல இருக்குது :unsure:

மூலம் http://visaran.blogspot.com/2011/06/blog-post_19.html

விடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா

Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz

இன்று (18.06) மாலை இயக்குனர் பாலாவின் ”அவன் - இவன்” திரைப்படம் பார்க்கச்சென்றிருந்தேன். படம் முடிந்து வெளியேறிய பின் இயக்குனர் பாலாவிடம் எனக்கு இருந்த மரியாதை தொலைந்திருக்கிறது.

படத்தில் ”ஹைனஸ்” (பெருமரியாதைக்குரியவர் - மேதகு) என்னும் பெயரில் ஒரு கதாபாத்திரம் உள்ளது. இவர் காட்டில் வேட்டையாடுவது போலவும், அவர் புலிப்பொம்மையை தன் காலடியில் வைத்திருப்பது போலவும் ஒரு காட்சி வருகிறது. இதை விட படத்தில் ராஜபக்சே என்று ஒரு சொல்லும் வந்து போகிறது.

திரு ”ஹைனஸ்” கொலை செய்யப்படுகிறர். இவர் கொலை செய்யப்பட முன் நிர்வாணமாக்கப்பட்டு வில்லனினால் சேற்றினுள் ஓட விடப்பட்டு அடித்துக் கொல்லப்படுகிறார். கொலை செ்யப்பட்ட பின் அவர் நிர்வாணமாக ஒரு மரத்தில் தொங்கவிடப்படுகிறார்.அவரின் உடம்பு மழுவதும் சேறு அப்பிக் கிடக்கிறது. கதாநாயகன் அவரை மரத்தில் இருந்து இறக்கியெடுக்கிறார்.

இந்தக் காட்சிகளைப் பார்க்கும் எவருக்கும் இக்காட்சிகளின் பின்புலம் எதைச் சுட்டுகிறது என்பது மிகத் தெளிவாகவே புரியும். தமிழீழ விடுதலைப் பலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறுதி நிமிடங்கள் எவ்வாறு இருந்திருக்கும் என்று கூறப்படும் சில கருத்துக்களை உள்ளடக்கியும், அவர் கொலைசெய்ப்பட்ட பின் காண்பிக்கப்பட்ட உடலில் இருந்த சேறு, மிகக் குறைவான உள்ளுடுப்புக்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டும் இக்காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, இயக்குனர் பாலா ”அங்கு” நடந்ததை இங்கு சிம்பாலிக்காக காட்டுகிறார்.

ஈழத்தமிழர்களில் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது வைத்திருந்த மரியாதையை நாம் அறிவோம். தவிர, அவர் மேதகு (”ஹைனஸ்”) என்னும் சொற்களைப் பாவித்தும் அழைக்கப்பட்டார் என்பதையும் நாம் அறிவோம். விடுதலைப் பலிகளின் மேல் பற்றுளவராய் இருப்பதோ, இல்லாதிருப்பதோ அவரார் சிந்தனைக்குட்பட்ட செயல். மனிதனாக எவனும் சகமனிதனின் கருத்துக்களை மதிக்க வேண்டும் என்பது மானுடத்தின் எழுதாத விதிகளில் ஒன்று. கருத்துவேறுபாடுகளை தாண்டியும் நண்பர்களாய் இருக்க முடியும் என்பது எனது கருத்து.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியும், தமிழீழ விடுதலைப்பலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டதும் ஈழத்தமிழரில் பெரும் பகுதியினரின் மனநிலையை மிகக் கடுமையாக பாதித்திருக்கும் இந் நாட்களில், இயக்குனர் பாலா இவ்வாறு தனது திரைப்படக் காட்சிகளை அந் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி காண்பித்திருப்பது மிகவும் அநாகரீகமான, பண்பற்ற, கண்டிக்கத்தக்க செயல்.

சில வேளைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன மீது இயக்குனருக்கு பலத்த விமர்சனம் இருக்கலாம். அதையே அவர் இப்படிக் காட்ட முயற்சித்திருக்கலாம். எம்மில் பலருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பலத்த விமர்சனங்கள் இருக்கின்றன. மாற்றுக்கருத்தாளர்கள், தமிழீழ விடுதலைப்பலிகளின் விமர்சகர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் கூட இயக்குனர் பாலா செய்தது போன்ற அநாகரீகமான செய்கைகளை இக் கால கட்டத்தில் செய்யவில்லை. பலரும் ஏனைய ஈழத்தமிழரின் வலிகளை புரிந்து கொண்டு மனிதாபிமானமாகவே நடக்கிறார்கள். அதுவே புரிந்துணர்வுள்ளவர்களின் பண்பு. இவர்களுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இயக்குனர் பாலாவுக்கு இல்லாதிருக்கிறது என்பது மிகவும் வேதனையாகது.

இயக்குனர் பாலாவோ வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலை மிகச் செவ்வனே செய்திருக்கிறார் என்பது எனது கருத்து. அச் செயலை நான் பலமாகவே கண்டிக்கிறேன்.

ஈழத்தமிழ் மக்களை ஏளனம் செய்யும் பல தென்னிந்திய கலைஞர்கிளின் வரிசையில் இயக்குனர் பாலாவும் இணைத்திருப்பது வருத்தத்துக்குரியது.

இப்படியேதும் செய்தால் தான் மத்திய அரசிடம் இருந்து தேசியவிருது கிடைக்குமோ? மக்களின் மனம்நொந்த விருது எதுவும் கலைஞனுக்கு பெருமை சேர்க்காது என்பது நான் சொல்லித்தானா இயக்குனர் பாலாவுக்கு புரியவேண்டும்.

இப் பதிவு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்டதல்ல. சகமனிதனின் வலிகளை புரிந்து கொள்ளாமல் அவர்களின் மனதினை புண்படுத்தும் இயக்குனர் பாலாவின் செய்கையை நான் ஆதரிக்கவில்லை என்பதற்காகவே எழுதப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் பாலாவின் இன்னொரு திரைக் காவியம் - அவன் இவன்

வித்யாசாகர்

ஒவ்வொரு மனிதரின் ஒவ்வொரு விதமான வாழ்க்கையின் வெவ்வேறு காட்சிகளை ஒவ்வொன்றாய் தன் ஏட்டில் பதிந்து கொண்டுதான் வருகிறது ஒவ்வொரு திரைப்படமும். அதிலும் எளிய மக்களின் வாழ்தலை சமகாலப் பதிவாக்கும் அரிய திரைப்படங்கள் தமிழரின் கலைத் திறனை மெய்ப்பிக்கும் சான்றாகவே தற்காலங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

அவ்வகையில், ஒரு எழில்மிகு கிராமத்தில் வசிக்குமொரு குடும்பத்தின் இரு மகன்களையும், அவர்களின் யதார்த்த வாழ்க்கையினையும் கல்லுக்குள் துளிர்க்கும் இலைபோல் அவர்களுக்குள்ளும் வரும் காதலையும், அதை ஏற்கும் மனிதம் மிக்க மனிதர்களையும், மனிதம் எதிர்க்கும் மிருகப் பிறப்பொன்றின் இறப்பையும் உணர்ச்சிப் பொங்கப் பொங்க காட்டி, நம் கண்முன் அவர்களை அழவைத்து அதில் நம்மையும் ஒன்றவைத்து, அவர் செய்ய நினைத்த அத்தனையையும் செய்து, அதற்கும் நம்மை தலையாட்டி ரசிக்கவும் வைக்கும் திரு. பாலாவின் இன்னொரு திரைக் காவியம் இந்த "அவன் இவன்" திரைப்படம்.

கல்லை எடுத்துக் கையில் கொடுத்தால் கூட அதில் ஒரு துளி நடிப்புத் தன்மை இருக்குமெனில் அதையும் வெளியில் கொண்டுவந்து கல்லையும் நடிக்க வைத்து உலகிற்கு ஒரு மாறுபட்ட திரைப்படத்தைக் கொடுத்துவிடக் கூடிய தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் இந்த பாலா.

இவரின் படத்தில் மட்டுமே, நடிக்கும் அத்தனைப் பேரும் சிறந்த நடிகர்களாக கருதப்படும் அளவிற்கு ஒவ்வொருவரின் உழைப்பையும் வாங்கி அவர்களின் முகத்தில் தனித்துவ நடிப்பெனப் பூசிவிடுகிறார். இப்படத்திலும் அத்தகைய உழைப்பு ஒவ்வொரின் நகர்விலும் தெரிகிறது. குறிப்பாகப் படம் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் நம் உணர்வுகளையெல்லாம் கதாபாத்திரமே ஆட்கொண்டுவிட, நாடி நரம்புகளை இழுத்து சுண்டிவிட்டுச் செல்கிறது அனைத்துக் காட்சிகளும்.

பேசும் வசனத்தைக் காட்டிலும், இசை வலிமைமிக்க இடத்தைப் பெற்றிருக்கிறது இப்படத்தில். வார்த்தையின்றி வரிகளின்றி சப்தத்தால் நரம்புகளை மீட்டி, காணும் காட்சிகளுக்கு மத்தியில் ஒரு வாய் அசையாமல் பேசுமெனில் அதை யுவனின் இசை என்று மெச்சிக் கொள்ளலாம். அப்படி வீரமும் காதலும் கலையும் சிறந்த தமிழரின், ஒருவகை மனிதர்களின் வாழ்வை ஒரு புல்லாங்குழலின் சந்துகளில் புகுந்து வெளிவரும் காற்றின் சப்தமாய் இசைத்துக் கொடுத்திருக்கிறார். இப்படத்திற்கென. நிச்சயம் இந்த "அவன் இவன்" திரைப்படத்தின் வெற்றியில் இசையின் பங்கும் நடித்தவர்களின் பங்கினைப் போல் இன்றியமையாத ஒன்று.

பொதுவாக, நடிகர்கள் முகப்பூச்சு தடவியோ அல்லது முகபாவம் சற்று மாற்றியோ நடிப்பதென்பது இயல்பு, ஆனால் படம் முழுக்க தன் முகத்தையும் பிறப்பின் குணத்தையும் மாற்றி, இயக்குனர் எண்ணிய ஒரு கதாபாத்திரத்தை தன் திறமையின் உச்சம்வரை பயன்படுத்தி, தன்னை வெற்றியென்னும் ஒரு வார்த்தைக்காய் வருத்தி திரைக் காவியத்தின் பதிவில் தனக்கான ஒரு தனி இடத்தைப் பதிவு செய்து கொண்டார் விஷால்.

அவர், அழும் காட்சியில் நம்மை அழவைத்து, சிரிக்கும் காட்சியில் அவர் சிரிக்காமல் நம்மைச் சிரிக்கவைத்து, பார்க்கும் பார்வையில் நடிப்பை நிரப்பி, அசையும் வாயின் கோணத்திற்கேற்ப நம்மையும் திரும்ப வைக்கும், வாய்திறந்து மலைப்பாகப் பார்க்கவைக்கும் வினோத நடிப்பும், இதுவரை திரைத்துறையினர் சிந்தித்திராத அல்லது செய்திராத சாதனைக்குரிய பாத்திரமும் தான் விஷாலின் கதா பாத்திரம்.

உனக்குத் தான் முந்தைய படத்தில் தனியிடம் தந்தேன் இல்லையா, இதில் நான் சொல்வதை மட்டும் செய்யென்று சொல்லிவிட்டிருப்பார் போல் இயக்குனர் பாலா நடிகர் ஆர்யாவை. என்றாலும், தன் திறனில் குறையில்லா ஆர்யா விட்டேத்தியாய் திரியும் சில காட்சிகளிலும் சரி, காதலின் ஈர்ப்பில் மதிமயங்கும் இடமும் சரி, கோபமுறும் குடித்து ஆடும், கண்கலங்கி அழும் அண்ணனின் அழுகையைப் பார்க்க இயலாமல் கண்நீர்வடிக்கும் காட்சியிலும் சரி; தன்னை முழுமையாய் படத்தில் ஈடுபடுத்தி தானும் ஒரு நிகரற்ற நல்ல கலைஞன் என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

த்ரிஷா போட்டால் ஓடும், ஐஸ்வர்யா நடித்தால் படம் பெரிதாகப் பேசப்படும் எனும் எண்ணங்களை இயக்குனரின் திறமையினால் உடைத்துக் காட்டும்விதமாய் பெயர்பெற்றுவிடாத நாயகிகளுக்குக் கூட பெரிய கதாநாயகி அந்தஸ்து உண்டு என்பதைத் தன் படத்தின் மூலம் நிரூபிக்க நினைத்திருப்பார்போல் இயக்குனர். அதை நிறைவாய் தன் நடிப்பினால் காட்டிச் சென்றுள்ளனர் இப்படத்தின் கதாநாயகிகளான தேன்மொழி மற்றும் பேபி எனும் பாத்திரத்தினர்.

உண்மையில், அவர்கள் அசைக்கும் கண்களும் சரி, சிரிக்கும் இதழ்களும் சரி, பேசும் உச்சரிப்பும் சரி, அதைப் படம் பிடித்த விதமும் சரி; மொத்தமுமே காணக் காண ரசிக்கத் தக்க அழகு என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. அதுபோல், அவர்கள் வந்து போகும் ஒவ்வொரு காட்சியிலும் மிக இலகுவாக நம் தேசத்து தமிழச்சியை, தமிழ்ப்பெண்களைப் படத்தில் அடையாளம் காட்டிப் போகின்றனர்.

அதிலும் காவல்துறை அதிகாரி கதாநாயகியைப் பார்த்து ஒவ்வொரு முறையும் என்னடா கண்ணு என்னடா கண்ணு என்று அழைக்கையில், ஓடிவந்து நிற்கும் அந்த முட்டைக்கண்ணழகு கதாநாயகியைக் காணும் போதெல்லாம் அவரை ஒரு சட்டப் பூர்வமாகப் பார்ப்பதைவிட ஒரு படத்திற்குத் தேவையான ஒரு பாத்திரமாக மட்டுமே பார்த்து ரசிக்கத் தோன்றுகிறது.

முக்கியமாக, இப்படத்தில் வில்லன், கதாநாயகன் என்று சொல்லுமளவிற்கு யாருமில்லை என்றாலும், முழுக்க முழுக்க சிரிப்பாகவே செல்லும் காட்சிகளுக்கிடையில் மிக சாதாரணமாக ஒரு மாட்டிறைச்சிக்காக மாடுகளைக் கடத்தி அறுக்கும் ஒரு மனிதமற்ற பாத்திரத்தைக் காட்டி, அவனின் கோரமுகத்தைப் பல்லிளிக்கவைத்து, அவனை வேண்டுமெனில் வில்லனென எண்ணிக் கொள்ளலாம் என்று எண்ணவைக்கும் அவர்கூட, தன் ஒற்றைக் கையைப் பின்னால் கட்டிக் கொண்டு அடிக்கும் காட்சிகளிலும், கீற்று போல் இரு உதடுகளுக்கிடையில் வெற்றிலை பல் தெரிய பார்க்கும் அழகிலும் நடிப்பைத் துல்லியமாய் இயக்குனர் சொன்னளவிற்கே வெளிப்படுத்தியிருப்பது திறம்தான்.

மேலும், இப்படத்தின் ஒற்றை நாயகர் எனில் அது ஐயா அயனஸின் பாத்திரம். படம் முழுக்க அவரைக் கண்டுவிட்டு வெளியே வருகையில் தன் தாத்தாவோ தனக்குச் சொந்தமான தந்தை ஸ்தானத்து யாரோ ஒருவரை அந்த வில்லன் சித் ரவதை செய்து கொன்ற கோபம் படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் வர, அந்தக் கோபத்தை காட்சிகளின் நகர்வில் தகிக்கும் விதமாக அமைந்த படத்தின் முடிவே இயக்கத்தின் உச்சம் ஆகும்.

அதிலும், வில்லனை ஒற்றை அடியில் கொன்று விடாமல் தான் கொண்டுள்ள அயனஸ் மீதான பாசம் அவ்வளவும் வெளிப்படும் அளவிற்கு விஷால் அடிக்கும் ஒவ்வொரு அடியும் நம்மைப் பாசம் உணர வைக்கிறது.

கடைசியில் வில்லன் அயனஸை சித்ரவதை செய்து நிர்வாணப்படுத்தி மரத்தில் தொங்கவிட, காமிரா திரும்பும் இடமெல்லாம் உடம்பில் பட்டை பட்டையாய்த் தோலுரிய அடித்திருப்பதைக் காட்ட; கொதித்துப் போகும் ரசிகர்களுக்கு இவனை இப்படித் தாண்டா கொல்லணும் என்று புருவம் உயர்த்தி வெறித்துப் பார்க்கும் அளவிற்கு உணர்ச்சிப் பொங்க முடிகிறது படம்.

குறிப்பாக, தனியாக வாழும் ஒரு மனிதரின் வலியையும், சுற்றத்தை அணைத்துக் கொண்ட யாருமே இவ்வுலகில் தனிமைப்படுத்தப்படவில்லை என்கிற கருத்தையும், அன்பு மனதில் நிறைந்திருப்பின், பண்புடன் பழகத் தெரிந்திருப்பின், பிறரின் உணர்வுகளை மதிக்க மனசிருப்பின் யாருமே இவ்வுலகில் அனாதையில்லை எனும் போதனையையுமே மறைமுகமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

அதையடுத்து, சூழ்நிலைகளுக்கு உடன்பட்டுப் போகும் மனித ஜென்மங்கள் யாருமே நிரந்தரமாய் திருந்தாத பிறப்புகளல்ல எனும் உண்மையையும் திருந்தாத மனிதர்கள் உண்டெனில் அவர்களுக்கான முடிவும் அதே விரைவில் அவர்களை தேடி வருகிறதென்பதையும் கதாபாத்திரங்களின் வழியே வழியும் சோகப் பாடலின் மனதுருக்கும் இசை போல் சொல்லிப் போகிறது படம்.

குறிப்பாக, ஒழுக்கம் இல்லா ஆண்களின் மதிப்பு எப்படி மனைவியின் ஒவ்வொரு வார்த்தையினாலும் சுட்டெரித்து தெருநடுவே வீசப்படுகிறது என்பதையும், வீட்டின் வெளிச்சமாக வாழும் பெண்களின் பண்பு சற்று முறை பிசகிப் போனாலும் அது எப்படி அடுத்து வரும் தலைமுறையையே சீர்குலைத்து விடுகிறது என்பதையும் விஷால், ஆர்யாவின் இரு அம்மாக்களான அம்பிகாவும் அவரின் சக்களத்தியாக வரும் நடிகையும் மிக தத்ரூபமாக காண்பவர் ரசிக்கும் அளவிற்கும், கேட்பவர் காதை மூடிக் கொள்ளுமளற்கும் பேசி நடித்துக் காட்டியுள்ளனர்.

அம்பிகாவிற்கு இது ஒரு புதிய தோரணை. அதுபோல் அம்மாவாக இன்னொரு பாத்திர ஆரம்பம் என்றாலும், பேச்சும் பீடிகையும் கொஞ்சம் உதடு கோண வைத்தாலும், இயக்குனர் இப்படத்தில் காட்ட வருவது அதுபோன்று வாழும் ஒரு குடும்பத்தின் கதையினை மட்டுமே என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது.

கள்ளென இரும்பைக் கொடுத்தாலும் மென்று துப்பும் ஒரு சிறப்பு எந்திரம் போல், தான் எதை வேண்டுமானாலும் செய்வேன், எதை வேண்டுமானாலும் முயன்றால் செய்யலாம், என்பதைக் காட்டுமொரு படம் இது என்பதற்கு படத்தில் வரும் ஒரு லாரி ஓட்டுனரிலிருந்து, அரங்கம் அதிர்ந்து போக ஆடும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான ஆட்டங்களே சாட்சி. வெறும் உணர்ச்சி ததும்பும் ஆட்டங்கள் தான் என்றாலும், அந்நிலையில் தானிருந்தாலும் அப்படித்தான் ஆடியிருப்போமோ என்று ஒவ்வொரு இடத்தையும் நம்பவைக்கிறது படம்.

ஐயனஸ், விஷால், ஆர்யா எனும் கதாநாயக வரிசையில் சிறிய பையனாக வரும் இன்னொரு பாத்திரமும் அவனின் நடிப்பும், காட்சிகளை மேலும் நகைக்கத்தக்க உணர்வுகளைக் கூட்டவும் கதையினை அழுத்தமாக நகர்த்திச் செல்லவும் உதவுகிறது என்பதில் சந்தேகமில்லை என்றாலும் அந்த சிறுவனின் நடிப்பும் பாராட்டத்தக்கது.

ஆக, காட்டு இலாகா அதிகாரிகளிலிருந்து காவல்துறை அதிகாரியாக நடித்தவர் முதல் காவலாளிகளாக நடித்த கதாநாயகியோடு வரும் பத்மாக்கா வரை மிகச் சிறந்த ஆட்கள் தேர்வு இப்படத்தில் கையாளப்பட்டுள்ளது. அம்பிகா மட்டுமே கொஞ்சம் வசதியாகத் தெரிந்தாலும், நடிப்பினால் அந்த எண்ணமும் மாறியே விடுகிறது.

ஓரிடத்தில் ஆர்யாவிடம் அந்தக் காவல்துறை அதிகாரி வந்து உன் பேரென்ன என்று கேட்க, என் பெயர் "கும்புடுறேங்க சாமி" என்று ஆர்யா சொல்ல, அவர் வாய் பிளந்து அதென்னயா பெயரென்று பார்க்கையில், 'வேறென்னங்க, நாங்களும் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உங்களையே பார்த்து 'கும்பிட்றேன் சாமி, கும்பிட்றேன் சாமி’ ன்னு சொல்றது' என்று கேட்குமிடத்தில் 'மனிதர்களின் வஞ்சகத்தால் பின்னுக்குத் தள்ளப் பட்ட ஒருசார் மக்களின் வலியை, ஒரு தலைமுறையையே தலைதட்டி வைத்து விட்டதன் கொடுமையினை நாம் உணர்ந்து, புரிந்தேத் தீரவேண்டிய கட்டாயம் அங்கே வலு கொள்கிறது.

இப்படி, படத்தின் நெடுகிலும் யதார்த்தம் எனும் ஒற்றைச் சிறகே விழுந்துப் பறக்க, பெருங்குறையாய் அழுத்திச் சொல்ல அத்தனை ஒன்றும் இப்படத்தில் இல்லை என்றாலும், விஜய்யும் அஜித்தும் ஆர்யாவும் பூர்யாவும் விஷால் நடிப்புக் கண்டால் புர்ரென்று போவார்கள்' எனும் வசனத்தை மட்டும் தவிர்த்திருக்கலாம். இது நல்லதையும் கெட்டதையும் நேராக கொண்டு சென்று காட்டும் இடம் என்பதால் இங்கே யாரொருவரையும் மட்டப்படுத்தாமல் அல்லது வேறுமாதிரி மாற்றியேனும் காட்டி யிருக்கலாம்.

படத்தில் இன்னொரு இடை சொருகல் அல்லது திணிப்பு எப்படி வேண்டுமாயினும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால், படத்தின் கதாபாத்திரத்தை மிகைப்படுத்தி, பார்ப்பவரின் உணர்வுகளை சற்று நேரத்திற்கு உறைய வைத்து, பின் மயிர்க்கால் கூச்செரியச் செய்து, உடல் சிலிர்த்துப் போகும் காட்சியும், இசையால் நம்மைக் கட்டிப் போட்டுவிடும் ஓரிடமும் எனில், படத்தின் வெளிச்சம் மிக்கதொரு காட்சி எனில் அது சூர்யா வந்துபோகுமிடம்.

முகபாவத்தில், நடிப்பில், திறனில், மனதில், குணத்தில் என எதிலும் குறை அற்றவனாக தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கும் ஒரு வெற்றியாளன் சூர்யா என்பதே நாம் அவர் மேல் கொண்டிருக்கும் அன்பிற்கும் மதிப்பிற்கும் காரணம் என்பதை உறுதிபடுத்துமொரு காட்சி அக்காட்சி. சூர்யாவின் மனதிற்கான தோற்றத்தையே அவர் அங்கே வருகையில் அவர் முகம் காட்டுகிறதென்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

அதிலும் குறிப்பாக உலகம் அறிந்து கொள்ள வேண்டிய அவரின் அல்லது அவர் தந்தை சிவகுமாருடைய வழிநடத்தலின் அல்லது அவருடைய குடும்பத்தின் சிறப்பு செய்திட்ட இன்னொரு சாதனையின் நேரடி உதாரணம் ஒன்று இருக்குமாயின், அது தான் ‘அகரம் பவுண்டேசன்'.

இன்று தமிழர்கள் விரிந்து வாழும் உலகில் எந்தளவிற்கு ‘அகரம் பவுண்டேசன்' பற்றி தெரியப்பட்டிருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளபட்சத்தில் நம் தமிழர்களின் இமை கிழித்து தான் சொல்ல வந்ததை உணர்வுப் பூர்வமாகச் சொல்லுமொரு ஊடகம் சினிமா என்பதால் அதன் வழியே அகரத்தை உலகின் பார்வைக்குத் திறந்து வைக்கவும், அகரம் குறித்த அனைவரின் சுய விமர்சனத்திற்கு சூர்யாவின் பொதுவான பதிலை சூர்யா மூலமே உலக மக்களுக்குச் சொல்லவும் இக்காட்சி பாலாவால் சேர்க்கப்பட்டிருக்கிறது. இருந்தும், சூர்யா இங்கே நடிக்காமல் தன் நேர்மையான உணர்வுகளையே இங்கு படப் பிடிப்பிற்கென காட்டிச் சென்றிருக்கிறார் என்பது நாம் அறியத் தக்க உண்மை.

ஆக, இப்படி, காலங் காலமாக நிறைய திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தாலும், ஒவ்வொரு படமும் நமக்கு ஒவ்வொரு நியாயத்தை சொல்லிச் சென்றாலும், இத் திரைப்படம் இப்படியொரு வெளியில் காட்டப்படாத மனிதர்களின் வாழ்க்கையை, எந்த ஒரு ஆடம்பரமும் ஆர்பாட்டக் கலப்புமின்றி பதிவு செய்து வைத்திருக்கிறது.

பொதுவாக, இப்படத்தைப் பொருத்தவரை, யார் ஒருவரை மெச்சினாலும் அதிகமாகவே மெச்ச வேண்டும், அல்லது பாரபட்சமின்றி எல்லோரையுமே பாராட்டவேண்டும். சண்டைக்காட்சி, ஒளிப்பதிவு, ஒப்பனை, கட்டிடக் கலை, காட்சிப் பதிவிற்குத் தக்க இடத் தேர்வு என அனைத்துமே சிறப்பு.

அதிலும், குறிப்பாக விருது தரும் மையம் இவ்வருடம் இப்படத்தைப் பார்த்துவிட்டு யாருக்கு விருதைத் தருவது என்று குழம்பிப் போனாலும் போகலாம். இல்லை, ஒருவேளை அத்தனையையும் சேர்த்து விஷாலுக்கே கொடுத்தாலும் கொடுக்கலாம். ஒருவேளை விஷாலுக்கும் இயக்குனருக்கும் இவ்வருட விருது மறுக்கப்படுமெனில் அதை அத்தனை பெரிய விருதாக அல்லது அத்தனைப் பெரிய விடயமாக நாம் கருத வேண்டியதேயில்லை. காரணம், உழைப்பிற்குக் கிடைத்திடாத மதிப்பு; மதிப்பேயில்லை!!

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4464

படத்தில் எதுவுமே இல்லை.

விசாலின் நடிப்பு,கண்ணுக்கு குளிரான காட்சிகள் எல்லாம் ஒழுங்கான கதையில்லாவிட்டால் எவர் படமென்றாலும் தேறாது.பாலாவும் அதுக்கு விதிவிலக்கல்ல.

சனிக்கிழமை 3 மணித்தியாலம்+ 22 டொலர் துண்டு.

180 ட்ரெய்லர் போட்டார்கள் அதைப்பார்த்திருக்கலாம் போலிருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.