Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சுக்கான உத்தேச திகதிகள்

புலிகள் தரப்புக்குத் தெரிவிப்பு

பெப்ரவரி 15,16 இல் அல்லது

21,22 இல் நடத்தத் திட்டம்

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தநிறுத்த உடன்பாட்டு விதிகளைச் செம்மையாக நடைமுறைப்படுத்துவது பற்றிய நேரடிப் பேச்சு களை ஜெனீவாவில் நடத்துவதற்கான மூன்று தொகுதித் திகதிகள் பிரேரிக்கப்பட்டிருக் கின்றன.

பெப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் இந்தப் பேச்சுகளை நடத்த லாம் என்பதை சுவிற்ஸர்லாந்து அரசின் ஆலோசனையோடு அனுசரணையாளர்களான நோர்வேத் தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குத் தெரியப்படுத்தி யிருக்கின்றனர் என அறியவருகின்றது.

பெப்ரவரி 15, 16இல் அல்லது, பெப்ர வரி 21, 22இல் அல்லது பெப்ரவரி 22,23இல் இந்தப் பேச்சுகளை ஜெனீவாவில் நடத்த லாம் என நோர்வே அனுசரணையாளர்கள் பிரேரித்திருக்கின்றனர்.

ஆனால், இத்திகதிகளில் எப்போது பேச்சை நடத்தலாம் என்பது குறித்து புலி களின் தலைமை இன்னும் திட்டவட்டமான பதில் எதையும் வெளிப்படையாக நோர் வேக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அறியவந்தது.

நேரடிப் பேச்சு நடத்துவதற்கு முதலில் அதற்கான புறச்சூழ்நிலை ஏற்படவேண்டும், தமிழர் தாயகத்தில் இராணுவக் கெடுபிடிகள், தாக்குதல்கள் போன்றவை இல்லாத அமைதி நிலைமை நீடிக்க÷வண்டும் எனப் புலிகளின் தலைமை கருதுவதாகத் தெரிகின் றது.

அத்தகைய நிலைமை நிலவுவதற்கான சாத்தியங்கள் தென்படமுதல் பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் அர்த்தமில்லை என்பதில் புலிகளின் தலைமை உறுதியாக இருப்பதாகவும் தெரிகின்றது.

எனவே, அரச படைகளின் தாக்குதல்கள், ஒட்டுப்படைகளின் அட்டகாசங்கள் போன் றவை தணிந்து, அந்தப் படைகளை அரசுத் தøலமை தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வருவது உறுதிப்படுத்தப்படுமானால், உத் தேச பேச்சுக்குப் பிரேரிக்கப்பட்டுள்ள மூன்று தொகுதித் திகதிகளில் ஒன்றைப் புலிகளின் தலைமை ஏற்று அதற்கு இணங்கக் கூடும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன

தகவல் மூலம்-உதயன்

  • Replies 65
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோர்வேயின் புதிய விஷேட பிரதிநிதி ஜெனீவா பேச்சில் பங்குபற்றுவார்

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக நோர்வே அரசினால் புதிய விஷேட தூதுவரொருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ஜெனீவா நகரில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், நோர்வே அரசு இதற்காக விசேட தூதுவரொருவரை நியமித்துள்ளது.

ஆனால், சொல்ஹெய்ம் தொடர்ந்தும் சமாதான முயற்சிகளுக்கு பொறுப்பான நோர்வேயின் அனுசரணையாளராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய விஷேட பிரதிநிதி ஜெனீவா பேச்சில் கலந்து கொள்வாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், ஜெனீவாவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது துணைப் படையினரின் ஆயுதங்களைக் களைவது மற்றும் உயர் பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களை மீண்டும் குடியமர அனுமதிப்பது என்பன குறித்தே பிரதானமாக ஆராயப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை சீராக அமுலாக்குவதன் மூலமே குடா நாட்டில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தலாம் எனவும் இதன் மூலமே படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரலாம் எனவும் சொல்ஹெய்முடனான சந்திப்பின் போது விடுதலைப் புலிகள் வலியுறுத்தியிருந்தனர்.

இதேவேளை, நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்துடன் லண்டனுக்கும் தொடர்பு கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை ஜெனீவாவில் நடத்துவது குறித்து ஆராய்ந்ததாகவும் அதன் பின்னரே இலங்கைக்கு வந்து வன்னிக்கு சென்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்ததாகவும் தெரிய வருகிறது.

தகவல் மூலம்-தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் சந்தர்ப்பவாதத்தை

அமைதி முயற்சிகளில் காட்டாதீர்!

""எமது ஆட்சிக் காலத்தில் நாம் புலிகளுடன் மேற்கொண்ட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் நிறையக் குறைபாடுகள் இருக்கின்றன எனவும், அதனாலேயே யுத்த நிறுத்த மீறல் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைதிப் பேச்சுக்களில் முஸ்லிம்களுக்கும் இடம்: மகிந்த உறுதி

இலங்கை அமைதிப் பேச்சுக்களில் முஸ்லிம்களும் இடம்பெறுவார்கள் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

மகிந்தவின் அலரி மாளிகையில் அனைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது மகிந்த இதைத் தெரிவித்தார்.

கௌரவமான அமைதியை உருவாக்கும் போது முஸ்லிம்களுக்கோ இதர இனத்தவருகோ எதிராக பாரபட்சமாக நடந்து கொள்ளமாட்டோம் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் நன்மைக்காக வடக்கு கிழக்கில் மகாண தலைமைச் செயலகங்களின் கிளைகள் அம்பாறையில் அமைக்கப்படும் என்றும் மகிந்த ராஜபக்ச இந்த சந்திப்பின்போது அறிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட அனைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.எம்.சய்யீத், அமைச்சர் நஜிப் ஏ. மஜித், அமீர் அலி மற்றும் பொதுச் செயலாளர் ஒய்.எல்.எஸ். ஹமீத் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாக ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்கப்படும் குழுவில் சட்டத்தரணி பைஸ் முஸ்தாபா இடம்பெறக் கூடும் என்றும் அனைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவா பேச்சுக்களுக்கு 10 பேர் கொண்ட அரசாங்கக் குழு

[புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:10 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]

ஜெனீவாவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளின் பெயர்கள் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மகிந்தவின் அலரி மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 பேரைக் கொண்டதாக இக்குழு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் குழுவில் அமைச்சர்கள், அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் சில சட்டத்தரணிகள் இடம்பெறக் கூடும்.

அரச குழுவினரைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜெனீவா பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரல் தற்போது சிறிலங்கா சமாதான செயலகத்தினாலும் ஏனைய தரப்புகளினாலும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலை விடுதலைப் புலிகள் தயாரிக்கவில்லை என்றும் அது மக்களை திசை திருப்ப கிளப்பிவிடப்பட்டுள்ள வதந்தி என்றும் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி நிரலை அரசாங்கம், நோர்வே மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோர் கூட்டாக இணைந்தே தயாரிப்பார்கள். அதேநேரம் பேச்சுவார்த்தைகளை இம்மாதம் 21 மற்றும் 22 ஆம் நாட்களில் நடத்தலாம் என்று விடுதலைப் புலிகள் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிகழ்ச்சி நிரலுக்கென கல்விமான்களின் கருத்துக்கள் அறியப்பட்டு வருகின்றன என்றும் சிறிலங்கா அராசங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் குழுவில் அவர்களின் இராணுவப்பிரிவைச் சேர்ந்த ஜெயம் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத் தரப்பிலும் இராணுவ அதிகாரி ஒருவரை இணைத்துக் கொள்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவல் மூலம் - புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சிறிலங்கா அரசாங்க குழு

[வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2006, 18:09 ஈழம்] [கொழும்பு நிருபர்]

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜெனீவாவில் நடத்த உள்ள யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுக்களுக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் குழுவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமை வகிப்பார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகவியலாளர்களிடம் ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

இக்குழுவில் இடம்பெற உள்ள இதர உறுப்பினர்களும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றார் அனுரா பிரியதர்சன யாப்பா.

இம்மாத இறுதியில் ஜெனீவா பேச்சுக்கள் நடைபெறும் என்றும் இப்பேச்சுகள் இருநாட்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்த அனுரா பிரியதர்சன யாப்பா, பேச்சுக்கள் நடைபெறும் நாள்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அரசாங்கக் குழுவுக்கு சிறிலங்கா சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமை வகிப்பார்.

தகவல் மூலம் - புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சுக்கான சூழமைவு என்ன?

ஞாபகன்

தென்னிலங்கை ஆட்சியாளர்களான ஜே.வி.பி, ஹெல உறுமய மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டணியினர் தமிழ் மக்களை எந்த முறையில் அணுக வேண்டும் என்பதை சில வாரங்களுக்கு முன்பு வரை திட்டமிட்ட ஒரு முன்மொழிவாக வைத்திருந்தனர். அதனையே தேர்தல் பிரசார பொருளாகவும் கூட கொண்டு சென்றிருந்தனர். ஆனால், தமிழ் மக்களையோ விடுதலைப் புலிகளையோ அவர்கள் நினைத்த கோணத்தில் நெருங்கவோ அணுகவோ முடியாது என்பதை இப்போதாவது அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

இதனை ஜே.வி.பி, ஹெல உறுமய போன்றன விளங்கிக் கொண்டனவோ இல்லையோ மகிந்தராஜபக்ஷ மிகக் குருரமான முறையில் விளங்கிக் கொண்டிருக்கின்றார். தமிழர் தரப்பை எவ்வாறு அணுகலாம் என்று தனது நலனின்பால் நின்று மகிந்த போட்ட கணக்குக்கு மாறாக, தமிழர் தரப்பு அவரை எவ்வாறு அணுக வேண்டும் என்று தீர்மானித்து செயற்படுகின்றது.

தனது வெற்றிக்கு பின்னால் நின்ற சிங்களக் கடும்போக்குவாதிகளின் வழிகாட்டலில் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக மகிந்த இராணுவ கட்டமைப்புக்களில் சில மாற்றங்களை மேற்கொண்டார். சிறிலங்கா இராணுவத் தளபதி, இராணுவப் புலனாய்வுத் தளபதி போன்றோர்களின் புதிய நியமனங்கள் தமிழர் தரப்புக்கு – மக்களுக்கு காட்டிய சமிக்ஞை திமிர்த்தனமானது என்பதில் ஐயமில்லை.

சமிக்ஞைகளோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்கள் நடைமுறைப்படுத்திய படையியல் செயற்பாடுகளும் மோசமானவை. யதார்த்தத்தில் இருந்து வெகுதூரத்தில் நின்றுகொண்டு தமிழ் மக்களை அச்சுறுத்தி பணியவைக்கும் தந்திரோபாயத்தை கையாயத் தலைப்பட்டதன் விளைவை அவர்கள் அனுபவித்தார்கள். போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது அப்பாவி தமிழ் மக்ககள் கொல்லப்பட்டதற்கு சமனாக தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த சிங்களச் சிப்பாய்களின் உயிர்களும் வாங்கப்பட நேர்ந்தது.

அதேநேரம் சர்வதேச ரீதியாக உதவி பெற்று புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று மகிந்த நம்பிய இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கையைவிட்டன. மகிந்த சூடியிருந்த எதிர்நிலைப்பாடுகள் எவையோ அவற்றையே அவர் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டும் என்று அவை அழுத்தம் கொடுத்தன.

குறிப்பாக நோர்வேயை அனுசரணையாளர்களாக கொண்டு பேச்சுக்களை ஆரம்பிப்பதுதான் மகிந்த செய்யவேண்டிய காரியம் என்பதை அவர்கள் உறுதிபட வெளிக்காட்டினர். இது தமிழர் தரப்புக்கு முரண்பாடில்லாததாகவும் அமைந்த அதேவேளை ஐரோப்பிய நாடுகளை மையமாக கொண்டே பேச்சுக்களை நடத்த இயலும் என்று விடுதலைப்புலிகளின் விருப்பத்தையும் மதிப்பதாகவும் இருந்திருக்கின்றது.

இந்த சாதகமான அம்சங்கள் தான் கடந்;த வாரம் தேசியத் தலைவர் நோர்வே சமாதானத் தூதுவரும் அபிவிருத்தி அமைச்சருமான எரிக்சொல்ஹெய்ம் அவர்களை சந்தித்தபோது ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்க காரணமானது.

இந்தப் பேச்சுக்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையை செம்மையாக அமுல்படுத்துவது பற்றியதாகவே அமையவுள்ளன. மகிந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஒற்றையாட்சிக்கும் அரசியல் யாப்புக்கும் முரணாக இருப்பதாகவும் அதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரே மிகப்பெரிய முரண்பாட்டின் வடிவமாக இதனை எவ்வாறு முழுமையாக அமுல்படுத்துவது என்று பேசுவதற்று இணங்க வேண்டிய இராஜதந்திர சிக்கலுக்குள் அகப்பட்டிருக்கின்றார்.

அவர் பதவிக்கு வந்ததும் வடக்கு கிழக்கில் என்னென்ன இராணுவக் கெடுபிடிகளை ஆரம்பித்து வைத்தாரோ அவை எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வந்தால் தான் பேசமுடியும் என்ற ஒரு நிபந்தனையையும் ஏற்றுக்கொண்டு அமுல்செய்ய வேண்டியவராக இருக்கின்றார். அவ்வாறு செய்தாலே ஜெனீவா பேச்சுக்களுக்கு சாத்தியம் இருக்கும் என்ற மிகக் கடுமையான யதார்த்தம் அவருக்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது.

இதை செய்யாமல், பேச்சுக்களுக்காக ஜெனீவாவுக்கு போகாமல் விட்டால் அவரது படைகள் மிகக் கடுமையான பாடத்தை படிக்கும் என்பதும் இலங்கைத்தீவு விரைவிலேயே இரண்டு நாடுகளாக பிளந்துவிடும் என்பதும் தெனிவாகவே இப்போது அவருக்கு விளங்கியிருக்கின்றன. இதனை ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் விளங்கிக் கொண்டிருக்கின்றன. என்றாலும் அவர்கது இனவாதப் பழக்கதோசம் இன்னும் நோர்வேக்கு எதிரான நிலைப்பாடாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனினும், இவர்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையை கிழித்து வீசிவிட வேண்டும் என்று இன்னும் பேசுமளவுக்கு துணிச்சலுடன் இல்லை என்பது தமிழர் தரப்பின் வலுவை அவர்கள் உணர்ந்துள்ளமைக்கு சாட்சியமாகும்.

ஆனால், தென்னிலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான சூழ்ச்சிகளில் - இன அழிப்பு போரைத் தொடங்கும் முனைப்பில் இருந்து விலகிவிட்டதாக கருதமுடியாது. மானசீகமாக அது தமிழர் தரப்பு பலமிழந்து அழிந்து போகவேண்டும் என்ற சிந்தனையில் தான் இருக்கின்றது.

நோர்வே தூதுவர் சந்திப்பதற்று முன்வரை எந்தநேரத்திலும் போர் ஒன்று தொடங்கும் அதை எதிர்கொள்ளவேண்டும் என்ற தயார்ப்படுத்தலில் இருந்திருக்கின்றன. போரொன்றை தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் அதற்கான திட்டங்களிலும் ஈடுபட்டிருக்கின்றன. தைப்பொங்கல் தினத்துக்கு பின் போர் ஒன்று வெடிக்கும் என்று தென்னிலங்கை சிங்கள ஊடகங்களும் அவதானிகளும் எதிர்வு கூறி படைகளை உசார் நிலைக்குட்படுத்தியிருக்கின

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனீவா பேச்சு பெப் 15இல் என்ற அரசின் அறிவிப்புக்கு புலிகள் மறுப்பு

ஜெனீவாவில் பெப்ரவரி 15ஆம் நாள் பேச்சுக்கள் நடைபெறும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், எங்களது அரசியல் ஆலோசகரும் எமது பேச்சுக்குழுவிற்கு தலைமை வகிப்பவருமான அன்ரன் பாலசிங்கம், அனுசரணையாளர்களுடன் இது தொடர்பாக நாளாந்தம் பேசி வருகிறார். ஆனால் பேச்சுக்களுக்கான நாள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் தாயகத்தில் தேடுதல்களும் சுற்றிவளைப்புக்களும் தொடர்கின்றன. மக்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்

ஜெனீவா பேச்சுக்கு செல்லும் அரசாங்க தூதுக்குழுவில் மாற்றம் ஏற்படும் சாத்தியம்

ஜெனீவாவில் நடைபெறவுள்ள அரசு விடுதலைப் புலிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கான திகதியை குறித்தொதுக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்களென அறிவிக்கப்பட்ட குழுவில் மாற்றங்கள் நிகழக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்கள் கடத்தப்பட்டதனால் சர்வதேசளவில் தோன்றியிருக்கும் எதிர்மறைக் கருத்துகள் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையிலேயே பேச்சுகளுக்கான திகதியை நிர்ணயிப்பதில் இழுபறி நிலையேற்பட்டுள்ளது.

அரச தூதுக்குழுவில் இடம்பெறுபவர்களை தெரிவு செய்வதில் அசௌகரியத்தை எதிர்நோக்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தற்போது ஜெனீவாவுக்கு செல்லும் தூதுக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்களை பற்றி வரும் விமர்சனங்கள் காரணமாக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்களை மாற்றம் செய்வது குறித்து சிந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜெனீவா செல்லும் அரச குழுவில் இடம்பிடித்துள்ள ஒருவர் தற்போது எழுந்துள்ள சூழ்நிலை குறித்து கூறுகையில்

ஜெனீவா செல்லும் அரச தூதுக் குழுவினரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவே தெரிவு செய்தார். இக்குழுபற்றிய எதிர்வாதங்களும் உள்ளன. இதனால் சில சமயங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரச குழுவில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

குறிப்பாக அமைச்சர் ரோகித போகல்லாகம நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறொருவர் நியமிக்கப்படலாம். உண்மையில் கூறினால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அரச குழு இறுதியான குழுவல்லவென்று கூறமுடியும்.

அத்துடன் சட்டநிபுணர் பாயிஸ் முஸ்தபா அரச தூதுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து வட கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் தலைமைகளிடத்திலும் வேறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.

வட கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம்களில் ஒருவரே அரச குழுவில் இடம்பெற வேண்டுமென்பதையே அம் முஸ்லிம் தலைவர்கள் விரும்புகின்றனர். சட்டநிபுணர் பாயிஸ் முஸ்தபா கூட முஸ்லிம் சமூகத்தின் ஆதரவின்றேல் அரச தூதுக்குழுவிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தூதுக்குழுவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதென்றார்.

thinakkural

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாப் பேச்சு வார்த்தை உடனடியாக சாத்தியமில்லை

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவால் தமிழர் புனர் வாழ்வுக்கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ள இந்நிலையில் சிறிலங்கா அரசுடனான பேச்சுக்களுக்கு உடனடியாக சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்களின் மனிதாபிமான பணிகளை முன்னின்று மேற்கொண்டு வரும் தொண்டு நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுதக்குழுக்களால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் விடுவிக்கப்பட்ட இருவர் தெரிவித்துள்ள தகவல்களின்படி கடத்தியவர்கள் இராணுவத்துடன் இயங்கும் ஆயுதக்குழுக்கள்தான் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி.ரெஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த கடத்தலால் தமிழ்மக்கள் பீதியும் குழப்பமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் அரசாங்கத்துடன் இப்போது எப்படி பேச்சு நடத்தமுடியும். பெப்ரவரி 15 என்று தெரிவிக்கப்பட்டு வரும் பேச்சுக்கான காலக்கெடுவில் புலிகள் பேச்சில் கலந்து கொள்ள முடியாது. அப்படியானால் இம்மாத இறுதியில் அதற்கான சாத்தியம் உண்டா என்பது குறித்து ஆராயலாம்.

விடுதலைப் புலிகள் ஜெனீவாவில் நடைபெறும் பேச்சுக்களில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் அதற்கான சூழ்நிலையை முற்றாக சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் கடத்தல் சம்பவத்தால் பேச்சு குறித்து உடனடியான முடிவு ஒன்றுக்கும் தற்போதைக்கு வர முடியாது உள்ளது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையில் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டதை கண்டித்து கிளிநொச்சியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பர நாதன் தெரிவிக்கையில்:-

தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் பேச்சு மேசைக்கு தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை ஒருபோதும் அனுப்பமாட்டார்கள் என்றிருந்தார்.

ஆனால், புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தல் விடயம் ஜெனீவா பேச்சுக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று சிறிலங்கா படைத்துறை அமைச்சின் ஆலோசகர் கொட்டகதெனியா கூறியிருக்கிறார்.

தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவா பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் முட்டுக்கட்டை

ஓரிரு தினங்களில் நோர்வே தூதுவர் வன்னி செல்லும் சாத்தியம்

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஜெனீவா பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலையை நீக்குவதற்காக விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்துவதற்காக இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் வன்னிக்குச் செல்லவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஓரிரு தினங்களில் இவரது வன்னிப் பயணம் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெனீவா நகரில் இம்மாதம் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் நடத்த தாம் தயாராய் இருப்பதாக அரசாங்கம் நோர்வே ஊடாக விடுதலைப் புலிகளுக்கு அறிவித்துள்ளது.

ஆனால், அரசாங்கம் அறிவித்துள்ளபடி 15 ஆம், 16 ஆம் திகதிகளில் ஜெனீவாப் பேச்சுவார்த்தையை நடத்த தாம் தயாரில்லை என தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிப்பதில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரொருவர்,

தமது இயக்கம் ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராய் இருப்பதாகவும் ஆனால், தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்களது கடத்தல் சம்பவமானது, பேச்சுக்கான புறச் சூழ்நிலையை மிக மோசமாக பாதிப்படையச் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் பேச்சுகளை ஜெனீவாவில் மீள ஆரம்பிக்க தாம் தயார் என புலிகள் நோர்வே மூலம் அரசாங்கத்திற்கு தெளிவாகத் தெரிவித்த பின்னரும் அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் துணைப்படையினரால் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இதனால், தமிழ் மக்கள் பதற்றமடைந்துள்ளதுடன் குழப்பமடைந்துமுள்ளனர். எனவே, அரசாங்கத்துடன் 15 ஆம் திகதி பேச்சு நடத்துவதென்பது முடியாத காரியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், துணை இராணுவக் குழுக்களே ஜெனீவாப் பேச்சுகளை ஆரம்பிப்பதில் முட்டுக் கட்டையாகவுள்ளன. எனவே, அவர்களது ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.

சமாதான பேச்சுகளின் போது, யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவது பற்றியே பிரதானமாக பேசப்படவுள்ளது. அந்த உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாரில்லை. அப்படி அவர்கள் திருத்த முற்படுவார்களேயானால், பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜெனீவாப் பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் குழப்பநிலை தோன்றியுள்ளது.

இம் மாத நடுப்பகுதியில் இந்தப் பேச்சுகள் நடைபெறுமென முதலில் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது இம் மாதம் பிற்பகுதியிலாவது நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையிலேயே தற்போதைய சூழ்நிலையின் இறுக்கத்தை தணிக்கும் நோக்கில் நோர்வே தூதுவர் வன்னி சென்று புலிகளின் தலைவர்களுடன் பேசுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுகளை எங்கு நடத்துவது என்ற சர்ச்சைக்கு நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தீர்வு கண்ட நிலையில் தற்போதைய சர்ச்சைக்கு ஹான்ஸ் பிரட்ஸ்கார் தீர்வு காண்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தகவல் மூலம்- தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாவில் பெப்ரவரி 22 இல் பேச்சு: நோர்வே அறிவிப்பு

ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே பெப்ரவரி 22ஆம் நாள் பேச்சுக்கள் நடைபெறும் என்று நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.

நோர்வே வெளிவிவகார அமைச்சு இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நோர்வே அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜெனீவாவில் பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் பேச்சுக்கள் நடைபெற உள்ளன.

ஜெனீவா பேச்சுக்களுக்கு நோர்வே நாட்டை அனுசரணையாளராக இருக்க சிறிலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இப்பேச்சுக்கள் நடைபெற உள்ளன.

கடந்த 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இருதரப்பு உயர்நிலையில் நடைபெறும் முதலாவது பேச்சுவார்த்தை இது.

"இரு தரப்பினரும் பாதுகாப்பு நிலைமைகளை வலுப்படுத்துவது தொடர்பாக சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டமை நல்ல விடயம்" என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

"அனுசரணையாளர் பணியை முன்னெடுக்கும் நோர்வே நடைமுறைச் சாத்தியமான தீர்வை உருவாக்குவதற்கு உதவி வழங்கும். யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீதான அழுத்தத்தைக் குறைக்க முன்முயற்சிகள் மேற்கொள்ளும்".

"இப்பேச்சுக்கள் குறுகியதானது என்றாலும் அமைதிப் பேச்சுக்களை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு மிகவும் முக்கியமான நடவடிக்கை. பேச்சுக்கள் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்." என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

நோர்வே குழுவுக்கு சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தலைமை வகிப்பார். அக்குழுவில் சிறிலங்காவுக்கான நோர்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர், விதார் ஹெல்கிசன் ஆகியோர் இடம் பெறுவர்.

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்டும் பேச்சுக்களில் பங்கேற்பார்.

அமைதி முயற்சிகளில் சுவிஸ் அரசாங்கம் மிகவும் ஆதரவு வழங்கி வருவதால் ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்றும் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக லண்டனில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் நோர்வே சிறப்புத் தூதுவருமான அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் பேச்சுக்களுக்கான நாள் தொடர்பில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இப்பேச்சுக்களின் முடிவில் நோர்வே அரசாங்கம் சார்பில் பேச்சுக்களுக்கான நாள் அறிவிக்கப்பட்டது.

தகவல் மூலம் - புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவா பேச்சுக்களுக்கு விடுதலைப் புலிகள் சார்பில் 6 பேர் குழு பங்கேற்பு

ஜெனீவாவில் பெப்ரவரி 22 ஆம் நாள் சிறிலங்கா அரசாங்கத்துடன் நடைபெறும் யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளின் சார்பில் 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஊடகத்துக்கு விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தொலைபேசியூடாக அளித்த நேர்காணல்:

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், விடுதலைப் புலிகளின் இராணுவத் தளபதிகளில் ஒருவரான ஜெயம், சமாதான செயலகத்தைச் சேர்ந்த இளந்திரையன் ஆகியோரும் இக்குழுவிற்கு செயலாளராக அடேல் பாலசிங்கமும் பங்கேற்பார்கள்.

பேச்சுக்களுக்கான நாள் குறித்த விவரம் எமது தலைமைப்பீடத்துக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னர் ஜெனீவாவுக்கு எமது குழுவினர் புறப்படுவதற்கான அறிவுறுத்தல்கள் விரைவில் வழங்கப்படும்.

சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுக்களில் முடிவுகளை எதிர்பார்க்கிறோம். விடுதலைப் புலிகள் தரப்பினர் என்ன நிலைப்பாட்டை பேச்சுவர்த்தையில் முன்வைப்பர் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க இயலாது.

விடுதலைப் புலிகளின் விளக்கமறியலில் உள்ள இரு சிறிலங்கா காவல்துறையினரை விடுதலை செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகள் நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்றார் தயா மாஸ்டர்.

தகவல் மூலம் - புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாங்க பேச்சுக்குழுவிற்கு பயிற்சியளிக்க இந்திய அரசியல் ஆய்வாளர் நாராயணசாமி இன்று கொழும்பு வருகை

ஜெனீவாப் பேச்சுக்களில் பங்கு பற்றும் சிறிலங்கா அரச தரப்புக் குழுவிகருக்கான பயிற்சிகள் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியை வழங்கவுள்ள இந்தியாவின் அரசியல் ஆய்வாளர் நாராயனசாமி இன்று கொழும்பு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுக்களில் பங்கு கொள்ளும் அரசதரப்பு குழுவினருக்கு உளவியல் பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்சியாளர்களின் பட்டியலில் இந்திய அரசியல் ஆய்வாளர் நாராயணசாமி, எஸ்.எஸ்.குணசேகர மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்களும் உள்ளடங்கியுள்ளனார்.

விடுதலைப் புலிகளின் இராஜதந்திர நகர்விற்கு ஈடுகொடுக்க முடியாது வெளிநாட்டு ஆலோசகர்களையும் உள்வாங்கி பேச்சுக்களுக்கு முகம் கொடுக்கும் நிலையில் சிறிலங்கா அரசு இருக்கும்போது இந்தப் பேச்சுப்களில் விடுதலைப்புலிகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு அரச தரப்பு எந்தளவிற்கு இணங்கும் என்பதில் பலத்த கேள்விகள் எழுவதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனார். அரச தரப்புப் பேச்சுக்குழுவிற்கு ஜே.வி.பி. யினால் பயிற்சிகள் வழங்கப்படுவதானது இவ்வாறான கேள்விகளை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

பேச்சுக்களின்போது எடுக்கப்படும் தீர்மானங்களை தன்னுடன் தொலைபேசியில் கலந்தாலோசித்தே எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரசுத் தலைவர் பேச்சுக்குழுவிற்கு ஏற்கனவே அறிவித்திருப்பதானது தமிழ் மக்களின் இயல்பு வாழ்வில் எந்தளவு இதய சுத்தியுடன் சிறிலங்கா அரசு செயற்படுகிறது என்பதை தெளிவாக காட்டுவதாகவும் நோக்கர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தகவல் மூலம்- சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனிவாப் பேச்சுகள் கடுமையாக இருக்கும்

சொல்ஹெய்மின் கருத்து இது

ஜெனிவாப்பேச்சுகள் கடுமையாக இருக்கும் என்கிறார் நோர்வே அனுசரணைக் குழுவின் பொறுப்பாளரும் அந்நாட்டு அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம்.

உத்தேச ஜெனிவாப் பேச்சுகள் தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையிலேயே இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் நேற்று எரிக் சொல்ஹெய்ம் அன்டன் பாலசிங்கம் சந்திப்பையடுத்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

இந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு:

பெப்ரவரி 22 23ஆம் திகதிகளில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெறும் பேச்சுகளுக்கு நோர்வே அனுசரணை வழங்கும்.

இலங்கையில் பிணக்கோடு தொடர்புபட்ட தரப்புகளான இலங்கை அரசும் புலிகளும் பெப்ரவரி 22 23இல் ஜெனிவாவில் நடைபெறும் பேச்சுகளுக்கு அனுசரணை வழங்கும்படி நோர்வேயை கேட்டுள்ளன.

2002 பெப்ரவரி 22 ஆம் திகதி கையெழுத்தான யுத்த நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கத்தை எப்படி மேம்படச்செய்யலாம் என்பது பற்றி இருதரப்பினரும் கலந்துரையாடுவர்.

மூன்றாண்டு காலத்தில் இத்தகைய உயர்மட்டத்தில் இரு தரப்பினரும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்தடவையாகும்.

""மோசமடைந்திருக்கும் பாதுகாப்பு நிலைமையை எவ்வாறு சீர்செய்வது என்பது குறித்து உயர்மட்டத்தில் கலந்துரையாட தரப்புகள் இணங்கியிருப்பது மிகச் சாதகமான அம்சமாகும்'' என்கிறார் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்.

""நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் யுத்த நிறுத்தத்தை அதிலிருந்து விடுவிப்பதற்கான யதார்த்த பூர்வமான தீர்வை தரப்புகள் எட்டுவதற்கு அனுசரணையாளர் என்ற முறையில் நோர்வே தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்''.

""அமைதி முயற்சிகளை மீண்டும் சாதகமான தடத்துக்கு கொண்டுவரும் திசையில் ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க அடியை தரப்புகள் முன்னெடுத்து வைக்கின்றன. அத்தோடு பேச்சுகள் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்''. என்றார் சொல்ஹெய்ம்.

நோர்வே பிரதிநிதிகள் குழுவுக்கு சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் தலைமை வகிப்பார். அக்குழுவில் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கரும், விடார் ஹெல்கிசனும் இடம்பெறுவர். இலங்கை கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லண்டும் பிரசன்னமாகியிருப்பார்.

""அமைதி முயற்சிகளுக்கு எப்போதும் சுவிட்ஸர்லாந்து அளித்துவரும் மிகுந்த ஆதரவுப் போக்குக் காரணமாகவே சந்திப்புக்கு ஜெனிவாவை தரப்புகள் தெரிவுசெய்தன'' என்று மேலும் தெரிவித்தார் அமைச்சர் சொல்ஹெய்ம்.

இப்படி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பேச்சு வர்த்தைக்கும் டிரெய்னிங்கா? என்ன சுவிஸில போய் அடிபடவா போகிறார்கள்?
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாவை சதுரங்க மேடையாக நோக்கக் கூடாது

போர் நிறுத்த உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கான பேச்சுவார்த்தையை எந்த நாட்டில் நடத்துவதென்பது குறித்து முன்னர் முரண்பட்ட அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது ஜெனீவாவில் சந்திப்பதற்கு இணங்கிக் கொண்ட போதிலும், இப்போது புதியதொரு சச்சரவு மூண்டிருக்கிறது. பேச்சுவார்த்தைக்கான திகதி தொடர்பானதே அது. பெப்ரவரி 15 இல் ஜெனீவாவில் பேசுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு விடுதலைப் புலிகள் தயாரில்லை என்று கூறப்படுகிறது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் கிழக்கில் கடத்தப்பட்ட சம்பவங்களின் பின்னரான நிலைவரங்கள் காரணமாக பெப்ரவரி நடுப்பகுதியில் ஜெனீவாவுக்கு செல்லக் கூடிய நிலையில் தாங்கள் இல்லை என்று கூறும் விடுதலைப் புலிகள், மாத இறுதியிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதை விரும்புவதாகவும் தெரிய வந்திருக்கிறது. இதன் விளைவாக திகதி தொடர்பில் இரு தரப்பினருக்குமிடையே தோன்றக்கூடிய முரண்பாடுகள் பேச்சுவார்த்தையை தாமதிக்கச் செய்து விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

இந்நிலையில், பேச்சுவார்த்தை தொடர்பில் கொழும்பு ஊடகங்களில் வெளியாகும் சில தகவல்கள் சுவாரஸ்யமானவையாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஜெனீவாவுக்கு அரசாங்கத்தினால் அனுப்பப்படவிருக்கும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு அனுபவம் குறைந்ததாக இருப்பதால் அதன் உறுப்பினர்களுக்கு பேச்சுவார்த்தைகளின் அடிப்படைகள் குறித்து விளக்கமளிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தலைமையிலான குழுவுடன் ஒப்பிடும்போது, அரசாங்கத் தூதுக் குழு சிக்கலான விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான முதிர்ச்சியைக் கொண்டதாக இல்லை என்றும் அதன் உறுப்பினர்களில் எவருமே விடுதலைப் புலிகளுடன் முன்னர் நடத்தப்பட்ட எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலோ அல்லது தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டங்களிலோ பங்குபற்றியவர்கள் அல்ல என்றும் அத்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையுடன் உள்நாட்டு நிபுணர்களினால் நடத்தப்படவிருக்கும் பயிற்சி வகுப்புகளில் தென்னாபிரிக்கா, வட அயர்லாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்களின் உதவிகளையும் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்று நேற்று திங்கட்கிழமை அதன் ஆசிரிய தலையங்கத்தில் கலாநிதி பாலசிங்கத்தின் பேச்சுவார்த்தை ஆற்றல்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. கொழும்பு அரசாங்கங்களின் பேச்சுவார்த்தைக் குழுக்களில் உறுப்பினர்கள் அடிக்கடி மாற்றப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள். ஆனால், விடுதலைப் புலிகள் நடத்திய அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் ஆரம்பம் முதலிருந்தே கலாநிதி பாலசிங்கம் பங்கேற்று வந்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கும் அந்த ஆங்கிலப்பத்திரிகை, அவர் எஸ்கிமோவர்களுக்கே பனியை விற்கக் கூடியவர் என்று வர்ணித்திருக்கிறது.

ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்களையே பேச்சுவார்த்தைக்கு அனுப்ப வேண்டுமென்பதால், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்க காலத்தில் விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரசாங்கக் குழுவுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தற்போதைய அரசாங்கத்தின் பக்கம் இழுத்தெடுத்து ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு கட்டத்தில் பேசப்பட்டது. ஆனால், அரசாங்கத்தில் இணையப் போவதில்லையென்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கொண்டே சமாதான முயற்சிகளை ஆதரிக்கப் போவதாகவும் பேராசிரியர் பீரிஸ் அறிவித்ததையடுத்து அந்த ஊகங்கள் முடிவுக்கு வந்தன.

எது எவ்வாறிருப்பினும், ஜெனீவாவுக்கு அனுப்பப்படவிருக்கும் அரசாங்கத் தூதுக் குழுவுக்கு பேச்சுவார்த்தைகளை எவ்வாறு நடத்துவதென்பது குறித்து விளக்கம் அளிப்பதற்கான பயிற்சி ஏற்பாடுகள் முக்கியமான ஒரு கேள்வியைக் கிளப்புகின்றன. பேச்சுவார்த்தைகளை மதிநுட்பத்துடனும் அனுபவ முதிர்ச்சியுடனும் நடத்தக் கூடிய ஒரு குழுவினால் இலங்கையை அது இன்று எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியில் இருந்து மீட்டுவிட முடியுமா? சதுரங்க விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பப்படுவோருக்கு பயிற்சியளிக்கும் பாணியில் அல்லவா இந்த விவகாரத்தை அரசாங்கம் கையாளப்பார்க்கிறது.

அண்மைக்காலத்தில் தீவிரமடைந்த வன்முறைகளினால் சீர்குலைந்து போயிருக்கும் போர் நிறுத்தத்தைக் காப்பாற்றுவதற்கான ஜெனீவா பேச்சுவார்த்தையே நாடு மீண்டும் முற்றுமுழுதான போருக்குள் தள்ளப்படுவதைத் தடுப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பமாகும். இச் சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு சூதும் வாதும் தேவையில்லை. சமாதானம் மீது இதயசுத்தியான அக்கறையே போதுமானதாகும்.

மீண்டும் போர் மூளுவதைத் தடுப் பதற்கு செய்யவேண்டியவை எவை என்பதைத் தெரிந் திருந்தும் அவற்றைச் செய்வதற்கு முயற்சிக்காமல் இருப்பதனாலேயே நிலைவரங்களில் மேம்பாட்டைக் கொண்டு வர முடியாமல் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டால், அதுவொன்றே ஜெனீவா பேச்சு வார்த்தைகளில் உருப் படியான விளைபயன்களை ஏற்படுத்தும்.ஜெனீவா பேச்சுவார்த்தை அரங்கை சதுரங்க ேமடையாக நோக்குவது மேலும் ஆபத்தையே கொண்டுவரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆசிரியர் தலையங்கம்-தினக்குரல் (07/02/06)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவா பேச்சுக்கள்: இராணுவத்தினருடன் மகிந்த ராஜபக்ச ஆலோசனை

ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள பேச்சுக்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தினருடன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று ஆலோசனை நடத்தினார்.

முப்படைகளின் தளபதிகள், அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் ஆகியோருடனும் மகிந்த நேற்று செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இச்சந்திப்பின் போது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சில முக்கிய சரத்துகள் தொடர்பாக தங்கள் கருத்துகளை இராணுவத் தரப்பினர் விளக்கியுள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. மற்றும் அமைச்சர்களும் தங்களது நிலைப்பாட்டை மகிந்தவிடம் விரிவாக விவரித்துள்ளனர்.

சிறிலங்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில் சில பாரிய திருத்தங்களை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இணைத்தல் அவசியம் என்று இந்த சந்திப்பில் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் போது அதிதீவிர நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கக் குழு கடைபிடிக்க வேண்டாம் என்றும் ஏனெனில் யுத்த நிறுத்தம் நீடிப்பதற்கு அது அவசியமானது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

தகவல் மூலம் - புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவா பேச்சுக்கள் முக்கியத்துவமானவை: கண்காணிப்புக் குழுத் தலைவர்

ஜெனீவாவில் சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்கள் மிக முக்கியமானவை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

யுத்த நிறுத்த ஒப்பந்தப் பேச்சுக்களுக்கான நாள் தொடர்பிலான முட்டுக்கட்டைகள் நீங்கி பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

இருதரப்பினருக்கும் இப்பேச்சுக்கள் முக்கியமானதாக இருப்பதால் சாதகமான நிலைமை ஏற்படக் கூடும்.

யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாக இருதரப்பினரும் விரிவான பேச்சுக்களை நடத்துவர் என்று நான் நம்புகிறேன்.

இப்பேச்சுக்களில் இறுதித் தீர்வு குறித்த விடயங்கள் இடம்பெறாது. யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாகவே பேச்சுக்கள் நடைபெறும் என்றார் அவர்.

தகவல் மூலம் - புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாவில் பெப். 22 இல் பேச்சுக்கள்: சுவிஸ் வரவேற்பு

ஜெனீவாவில் பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுக்கள் நடைபெற உள்ளதை சுவிஸ் அரசாங்கம் வரவேற்றுள்ளது.

சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சுவிசில் எதிர்வரும் பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை நடத்த சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த முடிவை சுவிஸ் அரசாங்கம் வரவேற்கிறது.

நோர்வே அனுசரணையின் முயற்சியால் கடந்த சனவரி 25 ஆம் நாளன்று யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை சுவிசில் நடத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்தப் பேச்சுக்கள் ஜெனீவாவில் நடைபெற உள்ளது.

இருதரப்பினரும் ஏற்கக் கூடிய தீர்வை உருவாக்குவதற்கான ஏதுவான சூழ்நிலைக்கான இடத்தை சுவிஸ் அரசாங்கம் வழங்கும்.

கடந்த சனவரி 25 ஆம் நாளுக்குப் பின்னர் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதையும் சுவிஸ் அரசாங்கம் வரவேற்கிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்றும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு பேச்சுக்களைத் தொடங்குவதற்கான சூழ்நிலையை இருதரப்பினரும் ஏற்படுத்த வேண்டும் என்று சுவிஸ் அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் மூலம் - புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசாங்கக் குழுவுக்கு அமெரிக்கா பயிற்சி

ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கள் நடத்த உள்ள சிறிலங்கா அரசாங்கக் குழுவுக்கு அமெரிக்கா நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ள அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இன்று பேச்சுவார்த்தைத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான இத்தகைய பயிற்சிகளில் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹவார்ட் பேச்சுவார்த்தை திட்டத்தைச் சேர்ந்த சிறப்பு வல்லுனர்களால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ள குழுவினருக்கும் அவர்களின் உபகுழுவிற்கும் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது

இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் 4 நாட்கள் நடைபெற உள்ளன என்று இந்த நிகழ்வில் பங்கேற்ற பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தியரி, கற்பித்தல், பயிற்சி மற்றும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள், இவற்றிற்கான திறனை அபிவிருத்தி செய்யும் வகையில் 1979 ஆம் ஆண்டு ஹவார்ட் பேச்சுவார்த்தைகள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கத் தரப்பிற்குத் தலைமை தாங்கும் சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு பேச்சுவார்த்தைகளின் அடிப்படை விடயங்கள் குறித்து இந்த பயிற்சி நிகழ்ச்சியின் போது விளக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமஸ்டி, ஐக்கியம், ஒற்றுமை, ஒருவரைச் சார்ந்திருத்தல் ஆகியவற்றின் அடிப்படைகள் குறித்தும் உரைகள் நிகழ்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துறையிலிருக்கும் உள்நாட்டு வல்லுனர்களின் உதவியும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் குழுவிற்கு வழங்கப்பட உள்ளது.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள அரசாங்கத் தரப்பினர் பயிற்சிகளைப் பெறும் முதலாவது நிகழ்வு இதுவாகும்.

தகவல் மூலம் - புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவா பேச்சில் பங்கேற்போருக்கு ஆலோசனை வழங்க இரு குழுக்கள்: மகிந்த நியமனம்

ஜெனீவாவில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக செல்லும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைச்சர்கள், சில அமைச்சு செயலாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய இரு குழுக்களை நியமிப்பதற்கு மகிந்த தீர்மானித்துள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்கள் அடங்கிய குழுவானது சமாதான நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லும் வகையில் திட்டங்களை வகுத்து தேவையான ஆலோசனைகளை வழங்கி செயற்படும் பிரதான குழுவாகும்.

அதன் கீழ் செயற்படும் சட்டத்தரணிகளைக் கொண்ட உப குழுவானது இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கும்.

பிரதான குழுவிற்கென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, வர்த்தக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரோகித போகொல்லாகம, ஊடக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, அரச வங்கிகளை அபிவிருத்தி செய்யும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் அஜித் நவாட் கப்ரால், நீதியமைச்சின் செயலாளர் சுஹந்த கம்லத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.பலியக்கார, பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர யுத்தநிறுத்த ஒப்பந்தத்தைத் திருத்துவது தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்கும் சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவில் மகிந்தவின் சட்டத்தரணி ஆர்.கே.டபிள்யு.குணசேகர, டி.எஸ்.ஜயசிங்க, எஸ்.எஸ்.விஜேவர்த்தன, பி.பீ.மெண்டிஸ், எஸ்.எல்.குணசேகர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமாதான நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கான திட்டங்களை வகுத்தல் மற்றும் தேவையான ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது கடந்த வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மகிந்தவின் செயலகத்தில் கூடி இது தொடர்பாக ஆராய்ந்துள்ளது.

தகவல் மூலம் - புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரச தரப்பு பேச்சுக்குழுவில் பிரேரிக்கபட்ட உறுப்பினர்கள் தகுதியற்றவர்கள் - ஜாதிக ஹெல உறுமய.

விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்ட உறுப்பினர்கள் தகுதியற்றவர்கள் என ஜாதிக ஹெலஉறுமய தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் பேச்சாளர் நிஸாந்தசிறீ வர்ணசிங்க,ஜெனிவாப் பேச்சுவார்த்தைக்கு ஜாதிக ஹெல உறுமய ஆரம்பத்தில் இருந்தே தனது எதிர்ப்பைக் காட்டி வந்துள்ளது.

அத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்பவர்கள் குறித்து எமக்கு திருப்த்தி இல்லை. காரணம் ஆரம்பகால திம்பு பேச்சில் இருந்து இன்று வரை விடுதலைப் புலிகள் தரப்பில் பேச்சுக்களுக்கு கலாநிதி அன்றன் பாலசிங்கம் தலமை தாங்குகிறார். அவர் பேச்சுவார்த்தை குறித்து சிறந்த அனுபவம் கொண்டவர்.

ஆனால் அரச தரப்பில் அப்படி அனுபவம் உள்ளவர்கள் இல்லை. அது நிஸாந்தசிறீ வர்ணசிங்க தெரிவித்தது. இதேவேளை இது குறித்து இனத்துவ முரண்பாட்டு கற்கை நெறி தொடர்பான ஆலோசகர் செரான் லக்திலக கருத்து தெரிவிக்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு அடிப்படையான யுத்த நிறுத்த உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படுவது அவசியம்.

இது ஒரு சமூக விஞ்ஞானம் நுட்பமான அணுகுமுறைகள் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். ஆனால் அரசதரப்பு பிரதிநிதிகள் அந்த அறிவை அனுபவத்தை பெற்றிருக்கின்றார்களா என்பது கேள்வியே என அவர் தெரிவித்தார்.

தகவல் மூலம் - பதிவு.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயிற்சி பெறும் அரச குழுவினர்

ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு செல்கின்ற அரச குழுவினருக்கு இப்போது சிறிலங்காவின் ஜனாதிபதி அவர்கள் பயிற்சி அளிப்பதற்கான தடல்புடல் ஏற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றார்.

முழுக்க முழுக்க பேரினவாத சிந்தனையில் மூழ்கி ஒற்றையாட்சி என்ற குறுகிய அரசியல் சித்தாந்தத்துக்குள் மூழ்கியிருக்கும் சிங்கள் தேசம் சர்வதேச அரங்கில் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் பேசுவதற்கான தகுதியற்ற நிலையில் உள்ளதையே இந்த பயிற்சிகள் வெளிப்படுத்துகின்றது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹவார்ட் பேச்சுவார்த்தை திட்டத்தைசேர்ந்த சிறப்பு வல்லுனர்களால் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவினருக்கும், அவர்களது உப குழுவினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. சமஸ்டி, ஐக்கியம், ஒற்றுமை ஒருவரைச் சார்ந்திருத்தல் போன்ற அடிப்படைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன. இதேவேளை சிறிலங்காவின் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு ஆலோசனை வழங்குவதற்கு இரு குழுக்கள் மகிந்தரால் நியமிக்கப்பட்டுள்ளது. முக்கிய அமைச்சர்களைக் கொண்ட இக்குழுவில் மகிந்தரின் சகோதரரும் படைத்துறை அமைச்சின் ஆலோசகருமான கோத்தபாய ராஜபக்ச அவர்கள் இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை போர் நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு அல்லது, திருத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மகிந்தரின் சட்டத்தரணிகளும் அடங்குகின்றனர்.

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நான்காண்டுகள் நிறைவடையும் இந்த தருணத்தில் இந்தப் பேச்சுக்கான சந்திப்பு ஜெனீவாவில் நடைபெறப் போகின்றன.

எங்கே பேசுவது எப்போது பேசுவது? என்பதற்குத் தீர்வு காணப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக எதனைப் பேசுவது என்பதுதான் முக்கிய விடயம். போர் நிறுத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அதுதான் இப்போது தமிழர் தரப்பால் எதிர்பார்க்கப்படுகின்ற பிரச்சினை.

போர் நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் முழுமையாக அரசு அமுல்படுத்துமிடத்து பேச்சுக்கான சூழலில் நம்பிக்கை ஏற்படுவதுடன் போர் சிறிது காலத்துக்கு தள்ளிப் போடப்படலாம். இப்போதைக்கு போர் மூளல் அபாயமில்லை என்றதொரு சூழலை உருவாக்க முடியும். மாறாக ஜெனீவாப் பேச்சுக்களில் நம்பிக்கையீனம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுமிடத்து மீண்டும் மீண்டும் பேசுவதால் பயன் ஏற்படமாட்டாது.

முதலாவதாக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முரணாகவும், போர் இந்தளவு ஆபத்தான கட்டத்திற்கு தள்ளிவிட்டுள்ள நிழல் யுத்தத்திற்கு மூல காரண கர்த்தாக்களாக இருக்கின்ற ஒட்டுப்படை விவகாரத்துக்கு தீர்வு காணும் விடயத்தில் சிறிலங்கா அரசு புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும். அத்துடன் அவர்கள் வடக்குக் கிழக்கிற்கு வெளியே அகற்றப்பட வேண்டும். இந்த விடயத்தில் அரசு பாராமுகமாக இருக்குமாயின் ஜெனீவாப் பேச்சுக்கள் என்பது தொடர்ந்து முன்கொண்டு செல்வது சாத்தியமில்லை.

எனவே போர் நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படை விடயங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் இதற்கு அமெரிக்காப் பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற வேண்டிய அவசியம் இருக்காது என்பது பொதுவான கருத்து.

இவை ஒரு புறமிருக்க தென்னிலங்கை இனவாத சக்திகள் இன்னும் சமாதான வழிமுறை தொடர்பாக எவ்வித அடிப்படை விட்டுக் கொடுப்புக்களையும் கொண்டிருக்கவில்லை.

ஹெல உறுமய ஜே.வி.பி போன்ற கட்சிகள் தெரிவித்திருக்கும் கருத்து சிந்திக்க வேண்டியது. ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு செல்வோர் எதுவித தீர்மானத்தையும் எடுக்கக் கூடாது என இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே இந்த நிலையில் அவதானிக்குமிடத்து ஜெனீவாவாப் பேச்சுக்கான அரச தரப்பு குழுவினர் தீர்மானங்களை அல்லது முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையுமா என்பது கேள்விக்குறி.

எனவே பேச்சு வார்த்தை, போர் நிறுத்த உடன்படிக்கையை முழு அளவில் அமுல்படுத்து வதன் மூலமே முன்கொண்டு செல்லலாம் அதற்கான ஒரு சூழல் ஏற்பட வேண்டியது அவசியம் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகவுள்ளது.

நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு-

ஆசிரியர் தலையங்கம்(09/02/06)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்லாந்தில் சட்டகிப் பேச்சும்

சுவிஸில் ஜெனிவாப் பேச்சும்

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஜெனிவாப் பேச்சுகளுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன.

2002 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணிலின் அரசோடு விடுதலைப் புலிகள் நடத்திய பேச்சுக்கும் இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசோடு நடத்தவிருக்கும் பேச்சுக்குமான களச்சூழலை ஒப்பிட்டு - ஆராய்வது - நோக்குவது இந்தக் காலகட்டத்தில் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

ரணிலின் அரசோடு 2002 செப்டம்பர் 16 - 18ஆம் திகதிகளில் தாய்லாந்தின் சட்டகிப் கடற்படைத் தளத்தில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சும் ஜெனிவாவில் இப்போது 2006 பெப்ரவரி 22 - 23 இல் நடைபெறும் முதல் சுற்றுப் பேச்சும் களநிலவரங்களைப் பொறுத்தவரை பல விடயங்களில் ஒத்திருக்கினறன.

பிரதமர் ரணிலின் அரசுக்கும், புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2002 பெப்ரவரி 22ஆம் திகதி கைச்சாத்தானது. ஆனாலும், அதன் பின் ஏழு மாதங்கள் கழித்தே விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு ரணிலின் அரசினால் கூட்டி வர முடிந்தது.

எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை அவர் 2005 நவம்பர் 17ஆம் திகதிய தேர்தலில் வென்று, மூன்று நாள்களில் பதவியேற்று, மூன்று மாதங்களுக்குள் விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு இழுத்து வருகின்றார்.

ஆனாலும், இரண்டு சந்தர்ப்பங்களிலும் முதல் சுற்றுப் பேச்சுகளின் போது பேச்சு மேசையில் ஆராயப்பட்ட - அல்லது ஆராயப்படப் போகின்ற - விடயம் ஒன்றுதான்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இணக்கம் காணப்பட்ட யுத்த நிறுத்த ஏற்பாடுகளை இலங்கை அரசுத் தரப்பு சரிவர நடைமுறைப்படுத்தவில்லை என்ற புலிகளின் கடும் குற்றச் சாட்டுக்கு மத்தியிலேயே அது குறித்துப் பேசவே முதல் சுற்றுப் பேச்சுக்கு அப்போதும் சரி. இப்போதும் சரி புலிகள் இணங்கினர்.

போர் நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்கு முப்படைகளினது கடுமையான போக்கும், ஒளிவு மறைவாக முன்னெடுக்கப்படும் சதித் திட்ட நடவடிக்கையும் காரணம் என்ற புலிகளின் சீற்றத்துக்கு மத்தியிலேயே இரண்டு சந்தர்ப்பங்களிலும் முதல் சுற்றுப் பேச்சுகள் ஆரம்பமாகின்றன.

ஆனால், அப்போதைக்கும், இப்போதைக்கும் ஒரு வித்தியாசம் இருப்பதை மஹிந்த அரசும் அவரது பேச்சுக் குழுவினரும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு, தாய்லாந்து சட்டகிப்பில் நடைபெற்ற அப்போதைய பேச்சுக்கான ஏற்பாடு குறித்து புலிகளின் மதியுரைஞர் பாலசிங்கம் தமது நூல் ஒன்றில் தெரிவிக்கும் தலைப்பை நோக்குவது பொருத்தமானது. போர் நிறுத்த ஒப்பந்தக் கடப்பாடுகளைக் கடைப்பிடிக்காது சிங்கள ஆயுதப் படைகள் காட்டும் கடும் போக்குக் குறித்த இவ்வாறு அச்சமயத்தில் அவர் குறிப்பிடுகின்றார்:

""ஆயுதப் படைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ரணில் அரசிடம் இருக்கவில்லை என்பதை அவருக்கு (பிரபாகரனுக்கு) விளக்கினேன். அரசியல் தெளிவுடைய யதார்த்தவாதி என்பதால், ரணிலுக்கும், சந்திரிகாவுக்கும் மத்தியிலான அதிகாரப் போட்டியும் பிணக்குப் பற்றியும் பிரபாகரனால் புரிந்து கொள்ளமுடிந்தது. போர் நிறுத்த உடன்பாட்டு விதிகள் சீரிய முறையில் நடைமுறையாக வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க விரும்பிய போதும் அதற்கான அதிகாரம் அவரிடம் இருக்கவில்லை. சந்திரிகாவுடனான பகையுணர்வு கூர்மையடைந்து இருந்ததால் இராணுவ விவகாரத்தில் ஜனாதிபதியின் ஒத்துழைப்பையும் அவரால்பெறமுடியவில்லை. இந்தச் சிக்கலையும் ரணிலின் இயலாத்தன்மையையும் பிரபாகரன் நன்கு அறிவார்......

""தாய்லாந்தில் சாமாதானப் பேச்சுகளை நடத்துவதற்கு இணக்கம் தெவித்த பிரபாகரன், போர் நிறுத்த உடன்பாட்டின் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை மேசையில் பேசலாம் எனவும் தெரிவித்தார்.''

இப்படி கூறுகிறார் மதியுரைஞர் பாலா.

ஆக, அப்போதும், இப்போதும் - இரண்டு சந்தர்ப்பங்களிலும் - போர் நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கம் பற்றிய சிக்கல்தான் முதற்சுற்றுப் பேச்சுக்கான தொனிப் பொருளாக அமைகிறது. ஆனாலும், முக்கிய வித்தியாசம் ஒன்று இருக்கிறது.

அப்போது, நிறைவேற்று அதிகாரத்தையும் படைகளைக் கட்டுப்படுத்தும் பதவி நிலையையும் வைத்திருந்த ஜனாதிபதி சந்திரிகாவுடன் முரண்பட்டுக் கொண்டு, அதிகாரமற்ற வெறும் பிரதமர் பதவியிலிருந்து ரணிலோடு பேசுகிறோம் என்ற பிரக்ஞையுடன்தான் புலிகள் அந்தப் பேச்சுகளில் பங்குபற்றினர். போர்நிறுத்த கடப்பாடுகளை அமுலாக்கும் விடயத்தில் ரணிலின் அரசின் இயலாத்தன்மையையும், கையாலாகாத்தனத்தையும் அவர்கள் புரிந்து கொண்டிருந்ததால் அதிகளவு விட்டுக் கொடுப்புக்கு வாய்ப்பிருந்தது. அதனால், அப்போது பேச்சுகள் ஆறாவது சுற்றுவரை நகர்ந்தன.

ஆனால், இப்போது நிலைமை வேறு. அரசும், நிறைவேற்று அதிகாரமும், படைத்தலைமையும் அனைத்துமே ஒருவரிடம் - ஜனாதிபதி மஹிந்தவிடமே - குவிந்து கிடக்கின்றன. போதாக்குறைக்கு "வெற்றுக் காசோலையில் கையெழுத்திட்டுக் கொடுத்தமை போல' அரசின் சமாதான முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்புத் தரத் தயார் என்ற அறிவிப்போடு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி காத்திருக்கின்றது.

ஆகவே, முன்னைய ரணிலின் அரசு போல சாக்குப் போக்குச் சொல்லாமல் யுத்த நிறுத்தம் தொடர்பான தனது கடப்பாட்டை முழுமையாக நிறைவு செய்வதற்கு இணங்கும் தயார் நிலையில் பேச்சுக்கு அரசுத் தரப்பு வருவதோடு, அதைச் செயலிலும் காட்ட வேண்டும். தவறுமானால் அடுத்த சுற்றுப் பேச்சு சாத்தியமற்றதாகி விடலாம்; நடைபெறாமலேயே போய்விடலாம்

ஆசிரியர் தலையங்கம்-உதயன் (09/02/06)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.