Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்து பூராடனார்..

Featured Replies

http://muelangovan.b...og-post_10.html

ஈழத்துப்பூராடனாரின் அண்மைக் காலத்து நூல்கள்...

wrapper.jpg

தமிழழகி காப்பியம்

கனடாவில் வாழும் தமிழீழத்தைச் சார்ந்த மட்டக்களப்புக்கு அருகில் உள்ள செட்டிப்பாளையம் என்ற ஊரில் பிறந்த அறிஞர் க.தா.செல்வராசகோபல் அவர்கள் கடந்த பதினாறு ஆண்டுகளாக எனக்கு இலக்கியத் தொடர்புடைய உறவினர்.அவர்தம் நூல்களைக் கற்று அடிக்கடி பல புதுச்செய்திகளை அறிபவன்.இதுவரை நேரில் இருவரும் சந்தித்ததில்லை எனினும் மார்க்சு ஏங்கெல்சு நட்பு போன்றது எங்கள் நட்பு.அவருக்கும் எனக்கும் அகவை வேறுபாடு மிகுதி.எனினும் உணர்வாலும் இலக்கிய ஆர்வத்தாலும் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

கனடாவில் வாழ்ந்தபடியே தொடர்ந்து தமிழ் இலக்கியப் பணிகளைச் செய்துவருகிறார். பல்வேறு நூல்களைத் தமிழ் வளர்ச்சி நோக்கி வெளியிட்டு வருகிறார்.அகவை முதிர்ச்சி, அதன்வழிப்பட்ட பல்வேறு நோய்கள்,அதற்குரிய மருத்துவம்,மருந்து மாத்திரைகளுக்கு இடையே வாழ்ந்துகொண்டிருந்தாலும் இலக்கியம் படைப்பதையும் அதனை அச்சிட்டு வெளியிடுவதையும் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்.அவரின் நூல்கள் தமிழழகி காப்பியம் ஐந்தாம் தொகுதியும், சீவகசிந்தாமணி ஆய்வுச்சிந்தனைகள் என்ற நூலும், பெருங்கதை ஆய்வு நோக்கு என்ற நூலும் எனக்கு அண்மையில் கிடைத்தன.இந்த நூல்களின் படிகள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்,திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பார்வைக்கு உள்ளன என்பது கூடுதல் செய்திகள்(இவரின் பிற நூல்களுக்கும் இந்தப் பல்கலைக்கழகங்களில் உள்ளன)

தமிழழகி காப்பியம்

தமிழழகி காப்பியம் ஐந்தாம் தொகுதியாக வெளிவந்துள்ளது.346 பக்கம் அளவு கொண்டது. தமிழ்முனிவராக வாழ்ந்த வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை அழகிய மரபுப்பாடலில் விளக்கும் நூல்.தமிழ் வரலாறு அறிய விழைவார்க்கு இந்த நூல் அரிய செய்திகளைத் தரும்.சீவன் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்குக் காணிக்கையாக்கப்பட்டுள்ளது.வழக்கம்போல் எழுத்துச்சீர்திருத்தம் கூடாது என உரைக்கும் பகுதிகள் நூலின் முகப்பில் உள்ளன.ஈழத்துப்பூராடனாரின் தமிழ் இலக்கியப்பணிகள் முகப்பில் வழங்கப்பட்டுள்ளன.

பன்னிரண்டாயிரம் பாடல்கள்,2070 பக்கங்கள்,ஒன்பது காண்டங்கள் கொண்ட காவியம் படைக்கவேண்டும் அது 81 படலங்களாகவும்,567 அங்கங்களாகவும் விளங்கவேண்டும் என்ற திட்டமிடலுடன் உருவான காப்பியத்தின் ஐந்தாம் பகுதி இந்த நூலாகும்.

தமிழ்மாமுனிவராக வாழ்ந்த வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூல் இத்தாலி நாட்டுப்படலம்,இளமைப்படலம்,துறவுபூண்ட படலம்,தமிழகஞ்சேர் படலம்,தமிழழகி காட்சிப்படலம்,தமிழழகி வேட்கைப்படலம்,தமிழழகி விழைவுப்படலம்,தொன்னூல் படலம்,தேம்பாவணி சூடிய படலம் என்னும் ஒன்பது படலங்களைக்கொண்டு அமைந்துள்ளது.

இந்த நூலுக்கு உட்பொருள் விளக்கக் காரிகையும்,தற்சிறப்புப்பாயிரமும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.ஈழத்துப்பூராடனார் கட்டுரை வரைவதில் வல்லமை பெற்றமை போலப் பாடல் எழுதுவதில் வல்லமை பெற்றவர் என்பதற்குத் தற்சிறப்புப் பாயிரம் ஒன்றே சான்றாகும்.

.....

வடக்கில் இருந்தும் மேற்கில் உதித்தும்

தடங்கொள் பலவாஞ் சமயம் சூழ்ந்து

தமிழரின் வணக்கத் தகையதிற் புகுந்து

உமிழ்ந்த நஞ்சின் உரத்தாற் சைவம்

ஒன்றே குலம் ஒருவனே தெய்வமென்

ஒருமை தத்துவம் உடைந்தே போனது...

இத்தகைக் களங்கக் காலம் இத்தலி

வித்தகன் தைரிய வீரமாமுனி

கிறித்தவப் பணிசெயக் கிழக்குறை நாட்டில்

இறுத்திடு போது இணையிலாத் தமிழதன்

இயல்பைக் கண்டு..."

தமிழ் கற்ற பாங்கைத் தற்சிறப்புப் பாயிரம் சாற்றுகிறது.

வீரமாமுனிவர் செய்த நூல்கள் இலக்கியப்பணிகள் அவர் காலத்திய தமிழக நிலை யாவும் இந்த நூலில் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன.1750 செய்யுட்களில் அமைந்த இந்த நூல் தமிழ்த்தாயினுக்கு மற்றுமோர் அணிகலன் எனில் மிகையன்று.

பெருங்கதை ஆய்வு

wrapper-1.jpg

பெருங்கதை ஆய்வு நோக்கு

கொங்குவேள் மாக்கதை என்னும் பெயரில் வரையப்பட்ட பெருங்கதை கற்பனைக் களஞ்சியமாக விளங்கும் நூல்.இதனை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவர்.சமண சமயம் சார்ந்தவர்.

உதயணன் என்னும் மன்னனின் வாழ்க்கையைச் சுவைப்பட உரைக்கும் நூல்.அக்காலத்தில் இருந்த பல்வேறு கிளைக்கதைகள் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.இசை பற்றிய பல அரிய செய்திகள் இந்த நூலில் உள்ளன.உதயணன் இறுதியில் துறவியானதை உரைக்கும் இந்த நூலை மிகச்சிறப்பாக ஆய்ந்து, நூலுரைக்கும் கதையைக் கட்டுரைப் பாங்கில் தந்துள்ளார்.

நூல் பற்றிய பொதுவான தகவல்களைத் தந்து,பெருங்கதை நூலின் பகுதிகளை விளக்கி, உட்பகுதிகளை விளக்கி,முதல் ஆசிரியர் வரலாறு கூறி,பெருங்கதையின் வடமொழி ஆக்கங்களைக் கூறி,திராவிடமொழிகளில் உதயணன் கதை எவ்வாறு வழங்குகிறது என்ற விவரம் தெரிவித்து அடியார்க்கு நல்லார் கொங்குவேளிர் பற்றி குறிப்பிடுவனவற்றை மிகச்சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.பெருங்கதை என்ற இலக்கியப்பூங்காவில் நுழய இந்த நூல் நமக்குப் பெருந்துணை புரிகிறது.

சீவகசிந்தாமணி ஆய்வுச்சிந்தனைகள்

wrapper-2.jpg

சீவகசிந்தாமணி ஆய்வுச் சிந்தனைகள்

திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணி சமணசமய காப்பியமாகும்.சீவக மன்னனின் வரலாறு சொல்லும் நூல்.பண்டைக்கால இசை,இசைக்கருவிகள் பற்றிய பற்றி அறிய செய்திகளைக் கொண்ட நூல் இது.விருத்தப்பாவை மிகச்சிறப்பாக தேவர் ஆண்டுள்ளார். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிந்தாமணி கற்பவரின் அறிவுக்கு ஏற்பப் பல தகவல்களைத் தந்துகொண்டே இருக்கும்.

திருத்தக்கதேவர் வரலாறு,உரைகண்ட நச்சினார்க்கினியர் வரலாறு,பதிப்பாசிரியர் வரலாறு, காப்பிய நூலாய்வுச்சிந்தனைகள்,கதை ஆய்வுச்சிந்தனைகள்,கதைமாந்தர்கள் பற்றிய விவரம்,காப்பியத்தின் உட்பொருள் என்ற அடிப்படையில் தலைப்புகள் வகுக்கப்பட்டு செய்திகள் ஆராயப்பட்டுள்ளன.உ.வே.சா.அவர்களின் பதிப்பு நூலாசிரியருக்கு மிகுதியும் உதவியுள்ளதை நன்றியுடன் குறிதுள்ளார்.சீந்தாமணிக்காப்பியத்தை எளியநிலை வாசகர்களும் ஆய்வுமுறையில் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்ல உள்ளத்துடன் இந்த நூலைப் படைத்துள்ள ஈழத்துப்பூராடனாரைப் பாராட்டி மகிழவேண்டும்

நூல்கள் கிடைக்குமிடம்

SEEVAN PUBLISHERS

# 3,1292 SHERWOOD MILLS BLVD

MISSISAGUA L5V 1 S 6,

ONT - CANADA

  • கருத்துக்கள உறவுகள்

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிந்தாமணி கற்பவரின் அறிவுக்கு ஏற்பப் பல தகவல்களைத் தந்துகொண்டே இருக்கும்.

எவ்வளவு ஆழமான கருத்து ,இலகு தமிழில் சொல்லப்பட்டிருக்கின்றது!

இணைப்புக்கு நன்றிகள்,வீணா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.