Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணை ஆணையங்களை முடக்கிய காங்கிரஸ்; இந்திரா கொலையில் நடந்த அரண்மனை சதி – எம்.கே. நாராயணன் கூறிய பொய் அம்பலமானது : விடுதலை க.இராசேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மட்டுமல்ல, இக்கொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் செயல்பாட்டிலும் பல மர்ம முடிச்சுகள் காணப்படுகின்றன. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுக்கு உண்மையான கவலை இருக்கவே இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

எப்படியாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தினரையும், அந்த இயக்கத்தின் இலட்சியத்துக்காக தமிழின உணர்வோடு செயல்பட முன் வந்த தமிழின இளைஞர்களையும் தண்டித்தாக வேண்டும் என்ற ‘ஒற்றைப் பார்வை’யோடு, காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய முடியாமல், அது தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்கவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பது ராஜீவ் மரணத்துக்கு இழைத்த மிகப் பெரும் அநீதியாகும்.

sanjayindira-300x277.jpgராஜீவ் கொலையில் சதித் திட்டம் தீட்டியவர்கள் மற்றும் ராஜீவ் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடு செய்யாதவர்களைக் காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் ஆட்சி துடிப்புடன் செயல்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மத்தியில் ராஜீவின் ‘எடுபிடி’யான சந்திரசேகர் தலைமை யிலான ஆட்சி நடந்தது. வி.பி. சிங் ஆட்சியை கவிழ்த்த காங்கிரஸ், தனது ஆதரவோடு சந்திரசேகர் தலைமையில் ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கி யிருந்தது. சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியசாமி. ராஜீவ் கொலை நடந்த அடுத்த 6வது நாளில் ஜெக்தீஷ் சரண்வர்மா (ஜெ. எஸ். வர்மா) என்ற உச்சநீதிமன்ற தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை சந்திரசேகர் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த சுபத்காந்த் சகாய், 1991 மே 27 ஆம் தேதி அறிவித்தார். ராஜீவ் காந்திக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோளாறுகள், குறைகள் நடந்தனவா என்பது குறித்து ஆராய்வதே இந்த ஆணையத்தின் பணி என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதை அப்போது காங்கிரஸ் எதிர்த்தது. ராஜீவ் கொலையின் சதித் திட்டங்கள் பற்றியும், விசாரணை வரம்பு விரிவாக்கப்பட வேண்டும் என்று அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த பி.வி. நரசிம்மராவ், பிரதமர் சந்திரசேகருக்கு கடிதம் எழுதினார். ஆனால், ஜெ.எஸ். வர்மா பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகளை மட்டுமே தம்மால் விசாரிக்க முடியும் என்று உறுதியாகக் கூறிவிட்டார். அதன் காரணமாகவே ஜெ.எஸ். வர்மா விசாரணை வரம்பிலிருந்து ஒதுக்கப்பட்ட அயல்நாட்டு சதி தொடர்புகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஜி. ஜெயின் தலைமையில் மற்றொரு விசாரணை ஆணையம் 1991 ஆக. 23 இல் அமைக்கப்பட்டது.

சந்திரசேகர் ஆட்சியின்போதும் அடுத்த சில மாதங்களில் அமைந்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போதும் நீதிபதி வர்மா ஆணையம் செயல்படுவதற்கான நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. அலுவலக செயலாளரோ, பணியாளர்களோ நியமிக்கப்பட வில்லை. மனம் குமுறிய ஜெ.எஸ். வர்மா, வெளிப் படையாகவே, “இந்தியாவின் ஜனநாயக முதிர்ச்சி, எந்த அளவுக்கு உள்ளது என்பதையே இது காட்டு கிறது. இது இந்தியாவின் கவுரவம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. உலக மக்கள் இதை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்” (2.5.1991 ‘இந்து’ நாளேடு) என்று கூறினார். ஒரு வழியாக நீதிபதி சர்மா, 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார். 5 மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம் தான் நரசிம்மராவ் ஆட்சி, அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்தது. உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான் சர்மா அறிக்கையின் பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரித்தார். ஆனால், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களே, இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்த்ததால், பிரதமர் நரசிம்மராவ், அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானது. அதன் பிறகும், இரண்டு ஆண்டுகாலம் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. பிறகு எதிர்கட்சிகள் வற்புறுத்தலைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று அறிக்கையை பரிசீலித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டது.

வர்மாவின் அறிக்கை மத்திய மாநில ஆட்சிகளின் காவல்துறை, உளவுத் துறையைக் கடுமையாகக் குறை கூறியது. ராஜீவ் கொலை நடந்தபோது மத்தியில் நடந்த சந்திரசேகர் ஆட்சியும், தமிழ்நாட்டில் நடந்த ஆளுநர் ஆட்சியும் காங்கிரசின் ‘பினாமி’ ஆட்சிகள் தான் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். ராஜீவுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழக காவல்துறை, தமிழக அரசு, இந்திய உளவுத் துறை மற்றும் ராஜீவ் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த காங்கிரசார் தங்கள் கடமையிலிருந்து நழுவி விட்டனர் என்று குற்றம்சாட்டியது வர்மா அறிக்கை, இவர்கள் ஒழுங்காக செயல்பட்டிருந்தால் ராஜீவ் கொலையைத் தடுத்திருக்க முடியும் என்று கூறியது.

ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகருக்கும், தமிழ்நாடு காங்கிரசுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருந்ததால், மரகதம் சந்திரசேகர், தமிழக காங்கிரசார் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து, தானே ஏற்பாடு செய்தார் என்றும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தியும், தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஒதுங்கி நின்றார் என்றும் ஆணையம் குற்றம் சாட்டியது. வர்மா விசாரணை ஆணையத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எவ்வித ஒத்துழைப்பையும் தரவில்லை என்று கூறிய அந்த பரிந்துரை, “ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டம் நடந்த இடத்தில் காங்கிரஸ் கட்சிக் காரர்களின் செயல்பாடுகள் எந்தவிதமான ஒழுக்கமும் இல்லாமல் பொது இடத்துக்குரிய பொறுப்பு இன்றி இருந்தது” என்று கடுமையாக காங்கிரசாரை இடித்துரைத்தது.

வர்மா அறிக்கை பற்றி பரிசீலிக்க அமைக்கப் பட்ட அமைச்சர்கள் குழு, கடமை தவறிய சில மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. கடமை தவறிய நான்கு மூத்த அதிகாரிகளிடம் அமைச்சரவைக் குழு நேரில் விசாரணை நடத்தி விளக்கம் கேட்டது. உளவுத் துறை தலைவர் எம்.கே. நாராயணன், உள்துறை செயலாளர் ஜி.எஸ். மணிசர்மா, பாதுகாப்புச் செயலாளர் ஜி.எஸ். வாஜ்பாய், அமைச்சரவை செயலாளர் வினோத் பாண்டே ஆகியோர் தான், விசாரணை நடத்தப்பட்ட அதிகாரிகள். ஆனால், இவை எல்லாமே கண் துடைப்பு நாடகம் தான். வர்மா, பரிந்துரையை சமர்ப்பித்தபோது, இந்த அதிகாரிகள் பதவியில் இருந்தார்கள். ஆனால், அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகே, விசாரணை நடத்தி விளக்கம் கேட்கப்பட்டது. பணி ஓய்வு பெற்ற பிறகு, நடவடிக்கை எடுக்க இயலாது என்பதைத் தெரிந்தே, காங்கிரஸ் ஆட்சியினர், இப்படி ஒரு விசாரணை நாடகத்தை நடத்தினர். உடனடியாக, அந்த நான்கு அதிகாரிகளும், தங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதை எதிர்த்து, மத்திய நிர்வாக மன்றத்திடம் முறையீடு செய்தனர். ஓய்வு பெற்ற பிறகு, இவர்களிடம் விளக்கம் கேட்பது, முறையற்றது என்று நிர்வாக மன்றம் தீர்ப்பளித்து விட்டது. ராஜீவ் கொலையில் கடமையை செய்யாமல் தவறிழைத்த அதிகாரிகளை காங்கிரஸ் ஆட்சியே இப்படி திட்டமிட்டு காப்பாற்றியது. வர்மா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படை யில் எந்த ஒரு நடவடிக்கையையும் காங்கிரசாரோ, காங்கிரஸ் ஆட்சியோ இதுவரை எடுக்கவில்லை என்பதோடு குற்றம்சாட்டப்பட்டவர்களையும் காப்பாற்றி விட்டார்கள்.

ராஜீவ் கொலை நடந்தபோது, இந்தியாவின் உளவுத் துறை இயக்குனராக இருந்தவர் எம்.கே. நாராயணன். ஜெ.எஸ். வர்மா ஆணையம், தனது அறிக்கையில் எம்.கே. நாராயணன் ‘நம்பகத் தன்மை’ குறித்து கேள்விகளை எழுப்பியது.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் மீது குண்டு வெடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ படத்தின் மூலப் பதிவு சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் இருந்தது போலவே, உளவுத் துறை இயக்குனர் எம்கே. நாராயணனிடமும் இருந்தது. ஆனால், இந்த வீடியோ மூலப் பதிவை சிறப்புப் புலனாய்வுக் குழுவும் எம்.கே. நாராயணனும், வர்மா ஆணையத்திடம் தரவில்லை. தங்களிடம் அப்படி எந்த ஒரு ‘வீடியோ கேசட்டும்’ இல்லை என்றே சிறப்புப் புலனாய்வுக் குழுத் தலைவர் கார்த்திகேயன், ஆணையத்திடம் கூறி விட்டார் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதன் பிறகு, இந்த வீடியோ காட்சிகளில் ஏதேனும் அழிக்கப்பட் டுள்ளதா என்று வெளிநாட்டு நிபுணர்கள் ஆய்வு செய்து கொண்டிருப்பதாக கார்த்திகேயன் வர்மா ஆணையத்தில் தெரிவித்து விட்டார். கடைசி வரை அந்த படப்பதிவு ஆணையத்திடம் தரப்படவில்லை. விசாரணையின் கடைசி அமர்வில்கூட இது பற்றி நீதிபதி வர்மா கேட்டார். அப்போதும்கூட ஆய்வின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவே, ஆணையத் திடம் கார்த்திகேயன் சார்பில் கூறப்பட்டது.

வர்மா ஆணையத்திடம் வழங்கப்பட்ட பிரதி எடுக்கப்பட்ட அந்த வீடியோ பதிவுகளில் வெடிகுண்டுப் பெண் ராஜீவுக்கு மாலையிட முயன்று வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் காட்சிகள் தெளிவின்றி திட்டமிட்டே மங்கலாக்கப்பட் டிருந்தன என்று வர்மா, தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். மிக முக்கியமான இந்தக் காட்சிகள் மட்டும் ஏன் மங்கலாக்கப்பட்டன என்ற கேள்வியை நீதிபதி வர்மா எழுப்புகிறார். பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி விசாரணை நடத்திய வர்மா, ஆணையத்திடம் வீடியோ கேசட் மூலப்பதிவை தர மறுத்த அதே சிறப்புப் புலனாய்வுக் குழு, அன்னிய சதி பற்றி விசாரணை நடத்திய ஜெயின் ஆணை யத்திடம் நான்கு வீடியோ கேசட்டுகளை வழங்கியது. காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உள் நோக்கம் தான். இது தவிர, ராஜீவ் காந்தி விமான நிலையத்திலிருந்து இறங்கி, ஸ்ரீபெரும்புதூர் சென்றது வரை எடுக்கப்பட்ட வீடியோ கேசட், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப் பாளர்கள், அந்த வீடியோ பதிவு தங்களிடம் இல்லை என்றும், அதை காவல்துறை கைப்பற்றியிருக்கலாம் என்றும், வர்மா ஆணையத்திடம் கூறி விட்டனர். ராஜீவுடன் வந்த காங்கிரஸ்காரர்கள் ஏன் ஸ்ரீபெரும் புதூர் போகவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிவருமே என்ற அச்சம்தான் இதற்குக் காரணம். இது குறித்து வர்மா தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ நூலில் அதன் ஆசிரியர் ராஜீவ் சர்மாவும் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறார்.

ராஜீவ் படுகொலையில் இறுதி வினாடி வரை, அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப் பட்டதா? கொலை சதிக்கு திட்டமிட்டவர்கள் மீது கேமிரா பார்வை விழுந்ததா? தாணு மற்றும் சிவராசன் அருகில் யார் யார் நின்றார்கள்? அல்லது அமர்ந்தார்கள்? கேமிராவில் உள்ள சில பதிவுகளை திட்டமிட்டு மங்கலாக்கியது யார்? இதற்கு ஆணை யிட்டது யார்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எம்.கே. நாராயணன் பற்றி வர்மா ஆணையம் தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் குறிப்பிடப்பட வேண்டியதாகும். “ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட் டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எம்.கே. நாராயண னுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை இந்த ஆணையம் உணருகிறது. ஆனால் வெளியே சொல்ல முடியாத காரணங்களால், அவரால் இதற்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது பற்றி, இன்றைய நாள்வரை எம்.கே. நாராயணன் வாயை மூடி மவுனம் சாதிக்கிறார். உயர்மட்டத்தில் நடக்கும் இந்தக் குறைபாடு களுக்கான காரணங்களை கண்டறிந்து, உடனே களைய வேண்டும்” என்று வர்மா ஆணையம் குறிப்பிடுகிறது. இது குறித்து ராஜிவ் சர்மா, தனது நூலில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“ராஜீவ் உயிருக்கு திட்டவட்டமான அச்சுறுத்தல் உள்ளது என்பதை எம்.கே. நாராயணன் முன்கூட்டியே தெரிந்திருந்தாரா? அல்லது ராஜீவ் பாதுகாப்புக் குறைபாடுகளை சரி செய்ய விரும்பினாலும், ‘அதிகார பலம் கொண்ட மேலிட உத்தரவினால்’ அவரால் செயல்பட முடியாமல் போனதா? ராஜீவ் மரணத்தால், அரசியல் ரீதியாக பயனடைந்தவர்கள் யார்? ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள் மே 20 அன்று அப்போதைய உளவுத் துறையின் இணை இயக்குனர் எஸ்.கே. தாக்கூர் அனைத்து மாநில காவல்துறை தலைமை அதிகாரிகளுக்கும், ராஜீவ் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி, ஒரு கடிதம் எழுதியிருந்தார். அப்படியானால், அடுத்த நாள் ராஜீவ் கொலை நடக்கப் போகிறது என்பது முன்கூட்டியே தெரியுமா? ஏன் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை, என்ற கேள்விகளை அவர் முன் வைக்கிறார்.

1991 இல் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் உள்துறை செயலாளர் பார்கவா தலைமையில், உயர் அதிகாரிகள் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் உளவுத் துறைத் தலைவர் எம்.கே. நாராயணனும் கலந்து கொண்டார். அப்போது ராஜீவுக்கு தரப்படும் பாதுகாப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. எனவே எம்.கே. நாராயண னுக்கு, ராஜீவுக்கு தரப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த எல்லா விவரங்களும் தெரியும் என்று கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த உள்துறை அமைச்ச கத்தின் இணைச் செயலாளர் என்.கே. சிங், என்பவர் வர்மா ஆணையத்தின் முன் தெரிவித்தார். ஆனால், அதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது, அப்படி ஒரு கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளவே இல்லை என்று எம்.கே. நாராயணன் மறுத்தார். நீதிபதி வர்மா விடவில்லை. இருவரையும் எழுத்துப் பூர்வமாக தங்கள் கருத்துகளைக் கூற முடியுமா என்று கேட்டபோது, என்.கே. சிங், எழுத்துபூர்வமாக அக்கூட்டத்தில் பங்கேற்றது உண்மையே என்று எழுதிக் கொடுத்தார். எம்.கே. நாராயணன் எழுத்துப் பூர்வமாக தர முன்வரவில்லை. எம்.கே. நாராயணன், ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கு தனக்குக் கிடைத்த உயர்மட்ட கூட்டத்தின் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வில்லை என்ற முடிவுக்கு தாம் வந்ததாக வர்மா, தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எம்.கே. நாராயணன், பொய் கூறுவதற்கும் தயங்காத ஒரு மனிதர் என்பதையே, இது காட்டுகிறது.

இந்திய உளவுத் துறையை கடுமையாக விமர்ச்சிக்கிறது வர்மா அறிக்கை. “உளவுத் துறையில் அரசியல் தலையீடுகள் மிக சாதுர்யமாக நடக் கின்றன. அதன் செயல்பாடுகள் புரிந்து கொள்ளவே முடியாத அளவுக்கு கறை படிந்து கிடக்கின்றன. அதன் நம்பகத் தன்மை நடைமுறையானாலும், கற்பனையானாலும் மோசமான பாதிப்புக்குள்ளாகி விட்டது. அரசியல் சார்பு, அடியாட்கள் அச்சுறுத்தல் இல்லாமல், சுதந்திரமான, நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட புதிய அமைப்பாக உளவு அமைப்புகள் உருவெடுக்க வேண்டும்” – என்று வர்மா நெத்தியடியாகக் கூறுகிறார்.

ராஜீவ் கொலையில் ‘அன்னிய சதி’ பற்றி விசாரிக்க காங்கிரஸ் ஆட்சி நியமித்த ஜெயின் விசாரணை ஆணையத்தின் கதையோ, இதைவிட மிக மோசம்!

1991 ஆகஸ்டு மாதம் இந்த விசாரணை ஆணை யத்தை அமைத்ததே நரசிம்மராவ் தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சி தான். காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர்களின் வற்புறுத்தலினால்தான் அது வந்தது. ஆனால், பெற்ற குழந்தையை தாயே, கழுத்தை நெறித்து சாகடிப்பது போல், இந்த ஆணையத்தின் செயல்பாட்டையும் காங்கிரஸ் ஆட்சி முடக்கிப் போடவே துடித்தது.ஜெயின் ஆணையம் எப்படி எல்லாம் காங்கிரஸ் மைதானத்தில் பந்தாடப்பட்டது என்ற விவரங்கள் அதிர்ச்சித் தரக்கூடியதாகும். “ராஜீவ் கொலையை மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?” என்று கசிந்துருகி கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் கட்சியினர் இந்த விசாரணை ஆணை யத்தை முடக்கி, ராஜீவ் கொலையில் அன்னிய சதியை மூடி மறைக்க எடுத்த முயற்சிகள் அதிர்ச்சியூட்டு பவையாகும். அந்த துரோகச் செயல்பாடுகளை, அப்படியே பட்டியலிட்டுக் காட்டுகிறோம்.

நீதிபதி ஜெயின், தனது விசாரணையைத் தொடங்கு வதற்கு முன்பு, விசாரணைக்கான வரம்பை நிர்ணயிக்க விரும்பினார். எனவே ஏற்கனவே ஜெ.எஸ். வர்மா, விசாரணை ஆணையத்தை நியமித்து அரசு பிறப்பித்த மூல அறிக்கை அடங்கிய கோப்பை, உள்துறை அமைச்சகத்திடம் கேட்டார். ஆனால். அந்த கோப்பே தொலைந்து போய் விட்டதாக அமைச்சகம் கூறிய பதில், நீதிபதியை அதிர்ச்சியடையச் செய்து விட்டது.

• நாடாளுமன்றத்தில், அரசின் அலட்சியத்தைக் கண்டித்து உறுப்பினர்கள் கொந்தளித்தனர். நாடாளுமன்றமே குலுங்கியது. இதைத் தொடர்ந்து காணாமல் போன கோப்பைத் தேடி கண்டுபிடிக்க கோப்பைத் தேடும் ஒரு ‘சிறப்புப் பிரிவு’ உருவாக்கப்பட்டது.

• கோப்புகளைத் தேடிப் பிடிக்க சிறப்புப் பிரிவு அமைத்த சம்பவம், அநேகமாக இதுவே முதல் முறையாக இருக்கும். வலை வீசித் தேடக் கிளம்பிய சிறப்புப் பிரிவு பிரதமர் அமைச்சகம், சட்ட அமைச்சகம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேடியும், கோப்பு கிடைக்காத நிலையில், அந்தக் கோப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நரசிம்மராவ் ஆட்சி அறிக்கை வெளியிட்டது.

• இதனால் ஒரு வருட காலம், ஆணையத்தின் பணி முடங்கியது. பிறகு, முதன்முதலாக பொது மக்கள் கருத்து கேட்கும் பணியைத் தொடங்க, ஆணையம் முன் வந்தது. அப்போது, மத்திய அரசின் வழக்கறிஞரே (அட்டர்னி ஜெனரல்) , ஜெயின் ஆணையத்தின் விசாரணை அதிகாரம் பற்றிக் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வ விளக்கம் தருமாறு சட்ட அமைச்சகத்திடம் நீதிபதி ஜெயின் கேட்டார்.

• ஆனால், நீதிபதிக்கு பதில் தருவதற்கு, சட்ட அமைச்சகம் எடுத்துக் கொண்ட கால அவகாசம், மீண்டும் ஒரு வருடம். ஒரு வருடத்துக்குப் பிறகு, சட்ட அமைச்சகம் தந்த பதிலில் ஏற்கனவே தமிழ் நாட்டில் சி.பி.அய். (சிறப்புப் புலனாய்வுக் குழு) நடத்திய விசாரணையில் ஜெயின் ஆணையம் தலையிடக் கூடாது என்றும், சி.பி.அய். விசாரித்த நபர்களை ஜெயின் ஆணையம் விசாரிக்கக் கூடாது என்றும், அதற்கான அதிகாரம் ஜெயின் ஆணையத்துக்கு இல்லை என்றும் பதில் தந்தது.

• ஜெயின் இதை ஏற்க மறுத்தார். ‘அன்னிய சதி’ பற்றி விசாரிக்கும்போது, எல்லாவற்றையும் விசாரிக்கும் உரிமை தனக்கு உண்டு என்று 60 பக்கங்களில் விரிவான ஆணையை ஜெயின் வெளியிட்டார். சி.பி.அய். செய்த தவறுகளை விசாரிக்கவும், சி.பி.அய். விசாரணைப் பணிகளை நேரில் பார்வையிடவும், தமக்கு அதிகாரம் உண்டு என்றார் ஜெயின்.

• ஜெயின், தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அரசு, அதுவரை, ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டது. இடைக்காலத் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயின் மறுத்து விட்டார்.

• இதைத் தொடர்ந்து ஆணையத்தை நீதிமன்றம் வழியாக முடக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. டெல்லியைச் சேர்ந்த முஸ்டாக் அகமது என்ற வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில், ஜெயின் ஆணையத்தை நியமித்த அரசு ஆணை செல்லாது என்று ‘பொதுநல’ வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். ஏற்கனவே, சி.பி.அய். குற்றவாளிகளைக் கண்டறிந்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டதால், ஜெயின் ஆணையம், மீண்டும் குற்றவாளிகளைக் கண்டறிய முற்படுவது நேர் எதிரான விளைவுகளை உருவாக்கிவிடும். சி.பி.அய். கண்டறிந்தவர்கள் மட்டுமே குற்ற வாளிகள். ஜெயின் ஆணையம், வேறு குற்ற வாளிகளைக் கண்டறிந்தால், வழக்கு விசாரணையை பாதிக்கும்” என்று அவர் கோரியிருந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம், ஏற்கனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் மற்றும் சி.பி.அய். சாட்சிகளை வர்மா ஆணையம் விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. பிறகு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 1995 நவம்பரில், டெல்லி வழக்கறிஞர் மனுவை தள்ளுபடி செய்தது, ஜெயின் ஆணையத்தின் விரிவான விசாரணை அதிகாரத்தை உறுதிப் படுத்தியது.

• பதறிப் போன மத்திய காங்கிரஸ் ஆட்சி, முகமூடியைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தது. முஸ்டாக் அகமது என்ற வழக்கறிஞரின் தனி நபர் மனுவை மத்திய அரசே, உச்சநீதி மன்றத்துக்குக் கொண்டு போனது. ஆக, ஒரு வழக்கறிஞரைப் பிடித்து, தனது சார்பில், ‘பொது நல’ வழக்கைத் தொடர்ந்ததே, மத்திய அரசு தான் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. தனி நபர் தொடர்ந்த பொது நலன் வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ததை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டது. அதன் பிறகு, மத்திய அரசே தயாரித்துக் கொடுத்து தனி மனிதர் வழியாக தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

• ஜெயின் ஆணையத்தின் விசாரணையில் ராஜீவ் கொலையில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள் அம்பலமாகி விடுவார்களோ என்று அஞ்சி, அதை முடக்கத் துடித்தது காங்கிரஸ் ஆட்சி. காங்கிரஸ் உறுப்பினர்களின் வலியுறுத்த லால் வேறு வழியின்றி அமைக்கப்பட்டஜெயின் ஆணையத்தை செயல்படவிடாமல் தடுக்க மேற்கொண்ட கடும் முயற்சிகள் பலத்த சந்தேகங்களை மக்கள் மன்றத்தில் எழுப்பி நிற்கின்றன.

ஜெயின் ஆணையமோ விரிவான விசாரணையை நடத்தியது. 1987 ஆம் ஆண்டு முதல் சந்திராசாமியின் சர்வதேச ரகசிய தொடர்புகள், வெளிநாட்டு வங்கிகளில் போட்ட பணம், சுப்ரமணியசாமி தொடர்புகள் பற்றி இந்திய உளவுத் துறை தயாரித்து வைத்திருந்த ஆவணங்கள், ஜெயின் ஆணையத்திடம் வந்து சேர்ந்தன. அந்த ஆவணங்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்படாமல் உளவுத் துறை வசமே இருந்தன. 1998 பிப்ரவரியில் ஜெயின் ஆணையத்தின் செயலாளராக இருந்த டி.ஆர். லுத்ரா, மத்திய உள்துறை செயலாளர் பி.பி. சிங் என்பவருக்கு அதுவரை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு போகாமல், உளவுத் துறை, தன் வசம் ரகசியமாக வைத்திருந்த அந்த ஆவணங்களை, அரசுக்கு அனுப்பி வைத்தார். 1991 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணையம் 12 முறை கால நீட்டிப்பு பெற்றிருந்தாலும், அரசுக்கு புதிய ஆவணங்கள் தரவுகள் கிடைத்துள்ளதால் சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி, அன்னிய சதிகள் பற்றி கண்டறிய மேலும், ஓராண்டு கால அவகாசம் தருமாறு ஆணையத்தின் சார்பில் அதன் செயலாளர் டி.ஆர். லுத்ரா அரசிடம் கேட்டார். அப்போது குஜ்ரால் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

காங்கிரஸ் குஜ்ரால் ஆட்சியில் பங்கேற்கவில்லை; வெளியிலிருந்து ஆதரவு தந்தது. காங்கிரஸ் பலத்தை நம்பியே குஜ்ரால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலை! ஜெயின் ஆணையத்தின் விசாரணகள் தொடருவதை விரும்பாத காங்கிரஸ் தலைமை கால நீட்டிப்புத் தரவேண்டாம் என்றே குஜ்ரால் ஆட்சியை மிரட்டியது; இல்லாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெற்று ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள். எனவே, “கால நீட்டிப்பு தரஅரசு விரும்பவில்லை; அடுத்த ஏழு நாட்களில் ஆணையம் இறுதி அறிக்கை தந்தாக வேண்டும்” என்று 1998 பிப்.27 அன்று நள்ளிரவு உள்துறை அமைச்சகம் ஜெயின் ஆணையத்துக்கு ஆணையிட்டது நீதிபதி ஜெயின் பதறிப் போனார்.

குஜ்ரால் அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நீதிபதி ஜெயினை தொலைபேசியில் அழைத்து, “ஆணையம் விரிவான அறிக்கை தரத் தேவை யில்லை. மேலோட்டமான அறிக்கையை சமர்ப் பித்தாலே போதுமானது. மேலோட்டமான அறிக்கை என்பதால் நாடாளுமன்றத்தில் வைக்கத் தேவையில்லை. அது நேரடியாகவே அமைச் சரவைக்கு வந்து சேர்ந்து விடும். அத்துடன், செயல்பாட்டுக்கான அறிக்கையை (action taken Report) சமர்ப்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று கூறினார்.

இறுதி அறிக்கை தயாரிப்பில் பரபரப்பாக இருந்த ஆணையத்தை சி.பி.அய். அதிகாரிகளும் மிரட்டினர். ஏற்கனவே ஆணையத்தின் அறிக்கை ஊடகங்களில் கசிந்திருந்தன. அவை காங்கிரசுக்கு எதிராகவே இருந்தன. கசிய விட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சி.பி.அய். அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். நீண்ட நேரம் சி.பி.அய். அதிகாரிகளுக்கும் ஜெயின் ஆணையத் திற்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. ஜெயின் ஆணையம் கடும் நெருக்கடிகளை மிரட்டல்களை சந்திக்க வேண்டியிருந்தது. அறிக்கை தயாரிப்புக்கு எதிராக, நீதிபதிக்கு தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. நீதிபதியே உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் இந்த தொலைபேசி மிரட்டல்களைப் பதிவு செய்தார். இதே நீதிபதி 1997 ஆம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவிடம், ஊடகங்கள் புடை சூழ, 2000 பக்க அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையிலிருந்து நிர்ப்பந்தத் தால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை முற்றிலும் முரண்பட்டதாகவே இருந்தது. மிரட்டலுக்கு அஞ்சிய ஜெயின் தனது பரிந்துறைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளனார். முதல் அத்தியாயத்தின் முதல் பக்கத்தில் ராஜீவ் காந்தி படத்தை அறிக்கை தாங்கியிருந்தது. முதல் அத்தியாயம் முழுவதிலும் ராஜீவ் காந்தியின் பெருமைகளையே ஜெயின் புகழ்ந்து தள்ளியிருந்தார். எந்த ஒரு விசாரணை ஆணையமும், இப்படி, தனிநபர் புகழ் பாடிய முன் உதாரணங்கள் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் விரும்பியவாறே அறிக்கை வடிவம் பெற்றது. ஒரு வாரம் கழித்து, நீதிபதி ஜெயின், அவரது சொந்த ஊரான ஜோத்பூருக்குப் போனார். அங்கே எதிர்பாரத ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சோனியா காந்தி – நீதிபதி இல்லம் தேடி வந்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

எந்த ஜெயின் ஆணையத்தை கடமையை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ், அலைக் கழித்ததோ, அதே விசாரணை ஆணையத்துக்கு சோனியாவின் பாராட்டும் நன்றியும் கிடைத்தது. வர்மா ஆணையத்தின் பரிந்துரை முடக்கப்பட்டது. ஜெயின் ஆணையத்தின் பரிந்துரை மிரட்டலால் வளைக்கப்பட்டது. இதுவே விசாரணை ஆணையங்களின் சோகமான முடிவு. இதே சோக முடிவைத் தான் இந்திரா காந்தி கொலையை விசாரிக்க அவரது ‘தவப்புதல்வன்’ ராஜீவ் காந்தியால் நியமிக்கப்பட்ட தாக்கர் ஆணையமும் சந்திக்க வேண்டியிருந்தது.

இந்திரா கொலை பற்றி விசாரிக்க நாடாளுமன்ற விதிகளின் கீழ் தாக்கர் ஆணையம் நியமிக்கப் பட்டது. ஆணையமும் விசாரணை நடத்தி அறிக்கை தந்தது. ஆனால், பிரதமர் ராஜீவ் அதை நாடாளு மன்றத்தில் வைக்க மறுத்தார். விசாரணை அறிக்கை யில் அடங்கியிருந்த உண்மைகளை மறைக்கவே முயன்றார். விதிகளை சுட்டிக்காட்டி உறுப்பினர்கள் எதிர்த்தனர். உடனே ராஜீவ் காந்தி, நாடாளுமன்றத் தின் விதிகளையே திருத்தி அறிக்கையை வெளி வராமல் தடுத்தார். ஆனாலும், ஆணையத்தின் முக்கிய பரிந்துரைகள் ஊடகங்களில் கசிந்துவிட்டன. அந்த செய்திகள் அதிர்ச்சியூட்டு பவையாகும்.

“இந்திரா கொலையில் அவரது இல்லத்துக் குள்ளேயே சதிகள் உருவாக்கப்பட்டன. அரண்மனை சூழ்ச்சி போன்ற (Palace Intrigue) பெரிய சதிகள் அடங்கியுள்ளன. இந்தக் கொலையில் இந்திராவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே. தவான் மீது சந்தேகம் எழுகிறது. இவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்று பரிந்துரை கூறியது. (‘சண்டே’ ஆங்கில வார ஏடு 3.2.1991)

தாக்கர் விசாரணை ஆணையம் குற்றம் சாட்டிய ஆர்.கே. தவான், இந்திராவின் உதவியாளர். அவர் மீது எந்த நடவடிக்கையும் காங்கிரஸ் ஆட்சி எடுக்க வில்லை. ராஜீவ் சில காலம் ஒதுக்கி வைத்திருந்தார். பிறகு சோனியாவின் செல்வாக்கு ஓங்கிய நிலையில் ஆர்.கே. தவான், டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப் பட்டார். காங்கிரஸ் கட்சி அறிவித்த வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்ததே ஆர்.கே. தவான் பெயர் தான். அதன் பிறகு, சீத்தாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில், ஆர்.கே. தவான், காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அப்போது இந்திராவின் ‘அரண்மனையில்’ இருந்த அவரது ஒரே குடும்ப உறுப்பினர் சோனியாதான். அப்படியானால் தாக்கர் கூறிய அரண்மனைச் சதி என்பதன் பெருள் என்ன? இதற்கும் ஆர்.கே. தவானுக்கும் உள்ள தொடர்பு என்ன? குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை உயர் பதவியில் உட்கார வைத்து அலங்கரிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? இந்தக் கேள்விகள் அர்த்தம் பொதிந்தவை.

இந்திரா தனது வீட்டு வளாகத்தில் உள்ள அலுவலகம் வந்தபோது, வழக்கமாக அணியும் குண்டு துளைக்காத கவசத்தை சம்பவம் நடந்த அன்று அணியாமல் வந்தார். அந்த செய்தி ‘அரண்மனைக்குள்’ இருந்தவர்களால் இந்திரா பாதுகாவலர்களில் ஒருவரான பென்சிங் என்பவருக்கு தரப்பட்டதால், பாதுகாவலர் வயிற்றைக் குறி பார்த்து சுட்டார் என்று கூறியது. தாக்கர் ஆணையம்! இந்திராவை சுட்ட அந்தப் பாதுகாவலரை, காவலாளிகள் உயிருடன் பிடிக்காமல், உடனே சுட்டுக் கொன்று விட்டனர். உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுவிட்டன. இந்திரா கொலையில் பொய்யாக வழக்கு தொடரப்பட்டு 5 ஆண்டு காலம், சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு அரசாலே வழக்கை திரும்பப் பெறப்பட்டவர் கிம்ரஞ்சித் கிங் மான். பென்சிங்கை சுட்டுக் கொன்றது ஏன் என்ற கேள்வியை எழுப்பிய அவர், இந்திரா கொலையில் இத்தாலி நாட்டின் தொடர்பு இருக்கிறது. அப்பாவிகள் தூக்கிலிடப்பட்டு விட்டனர். எனவே மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். (‘தி இந்து’ 1.4.1990)

மத்திய காங்கிரஸ் ஆட்சி தனது அதிகாரத்தை உண்மைகளை மூடி மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றவே முயன்றிருக்கிறது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தைப் பார்ப்பன சூழ்ச்சி யோடு குலைக்க தொடர்ந்து சதித் திட்டங்களையும், குழி பறிப்புகளையும் அரங்கேற்றியே வந்திருக்கிறது. இந்த உண்மைகளை நமது தமிழின இளைஞர் களிடம் விளக்கிடும் முயற்சியே இந்தத் தொடர்!

‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ என்ற நூலை உளவு நிறுவன ‘ஆசியுடன்’ எழுதிய ராஜிவ் சர்மா விடுதலைப் புலிகள் மீது சுமத்திய வீண் பழிகள் அவதூறுகளுக்கு உரிய தரவுகளோடு மறுப்பு எழுத வேண்டும் என்று தொடங்கப்பட்ட இந்தத் தொடர், அதன் எல்லைகளைக் கடந்து, வேறு பல உண்மை களையும் உணர்த்திட முயன்றிருக்கிறது! இந்த உண்மைகளை தமிழர்களிடம் கொண்டு சென்றால் இந்த கடும் உழைப்பின் நோக்கம் முழுமையடையும்.

தொடரைத் தொடர்ந்து படித்து உற்சாகமூட்டிய தோழர்களுக்கு நன்றி தெரிவித்து முடிக்கிறேன்.

(‘புலிகளுக்கு அப்பால்’ நூலை எழுதிய ராஜீவ் சர்மா, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது களங்கம் சுமத்தி, சேறு வாரி இரைத்தது உண்மை. ஆனாலும், புலனாய்வுத் துறை ஆதரவுடன் வெளி வந்த அந்த நூலில் பல ரகசிய ஆவணங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஜெயின், வர்மா ஆணையங்கள் தொடர்பாக பல வெளி வராத செய்திகளை ராஜிவ் சர்மா நூல் பதிவு செய்துள்ளது. அதிலிருந்தே விசாரணை ஆணை யங்கள் தொடர்பான தரவுகள் இத் தொடரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.)

(நிறைவு)

- விடுதலை க.இராசேந்திரன்,

பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

http://www.periyarthalam.com/2011/09/16/congress-mkr-indragandhi-murder/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.