Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13வது திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் ! பொன்மானா? பொய்மானா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(திரு.எம்.சி.எம் இக்பால் ஆங்கிலத்தில் எழுதி இணையத்தில் 2009 ஜூலையில் பிரசுரமான கட்டுரையின் தமிழாக்கம் )

13th_Agreement_Indo_Sri_Lanka_Accord_in_1997_JR_Rajiv_CI.jpg

1. அறிமுகம்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் போருக்குக் காரணமாக அமைந்த தமிழ் மக்களின் அரசியல் சிக்கலுக்கு ஒரு தீர்வு தரப்படும் என்ற தனது வாக்குறுதியை அரசு நிறைவேறற்றும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். அண்மையில் ஜனாதிபதி இந்து செய்தி நாள் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவ்வாறான தீர்வு அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்தான் முன்வைக்கப்படும் என்ற கூற்று எதிர்பார்த்து இருந்தவர்களை ஏமாற்றிவிட்டது. இந்தக் கூற்றை அடுத்த கையோடு எனுமாப்போல் விரைவில் ஒரு தீர்வை முன்வைக்க ஜனாதிபதிக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக இலங்கையின் இந்தியத் தூதுவர் கூறியதாகச் செய்திகள் வெளிவந்தன. அவ்வாறான அழுத்தங்கள் எதிர்பார்க்கும் பலனைத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வேறு பலரைப் போன்றே இந்தியாவும் 13வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் மேலதிக சரத்துகளின் முழுமையான அமுலாக்கத்தின் மூலமே பரவலாக்கம் மேலும் வலுவாகவும், தமிழ் மக்களின் அபிலாசைகளை சாத்தியமான வகையில் நிறைவு செய்யும் எனவும் கருதுகிறார்கள். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான பிரதிநிதிகளைக் கொண்டுள்ள தமிழர் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ.) இந்த ஆலோசனைகள் தமது எதிர்பார்ப்புகளுக்கு எந்த வகையிலும் ஏற்புடையன அல்ல என நிராகரித்து விட்ட நிலையில், மறு முனையில் ஜாதிக ஹெல உறுமயவும் ஜனதா விமுக்திப் பெரமுனையும் 13வது திருத்தச் சட்ட அமுலாக்கம் நாட்டைப் பிளவு படுத்திவிடும் என மிக மூர்க்கத் தனமாக எதிர்க்கின்றன. அது அவ்வாறு எனில் த.தே.கூ. 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக ஏற்க மறுப்பது என்பது தேவை அற்ற ஒன்று. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இதுபற்றி நிறையவே பல்வேறு இதழ்களில் எழுதப்பட்டும் ஆய்வரங்குகளிலும் தொழிற் பட்டறைகளிலும் விவாதிக்கப்பட்டும் விட்டது. இவற்றுக்கு மத்தியிலும் நிறையப் பேர் 13வது திருத்தச் சட்டத்தின் பல்வேறு சரத்துகளின் உண்மையான பாதிப்புகளை இன்னமும் விளங்கிக் கொள்ளாமலே உள்ளனர். இந்தச் சட்டத்தையும், மாகாண சபைச் சட்டத்தையும் வரைந்தவர்கள் மிகச் சாதுரியமாக பரவலாக்கம் உண்மையாகவே உள்ளது போன்ற ஒரு மாயத் தோற்றப்பாட்டை புகுத்தி விட்டுள்ளார்கள். இந்த நிலையை மிகச் சரியாக இலங்கையின் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி தயான் ஜயதிலகா பின்வருமாறு விபரித்துள்ளார்:

13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பாக ஏதோ ஒன்று இருப்பதாக நினைத்துச் சிங்களவர்கள் எதிர்க்கிறார்கள். அதனால்தான் தமிழர் அதனை ஆதரிக்க வேண்டும். தமிழ் தீவிரவாதிகள் (பிரபாகரன்) 'முன்னரும் இப்போதும் எதிர்க்கிறார்கள் ஏன் என்றால் அதில் பிரிவினைக்கான எதுவுமோ அல்லது அதற்கான வேக வீதியாகவோ இல்லை என்பதால். உண்மையில் அது பிரிவினை இலக்கைப் புதை குழியில் தள்ளுகிறது. அந்த ஒரு காரணத்துக்காக சிங்களவாதிகள், மிதவாதிகள், புரட்சி வாதிகள், அறிவார்ந்த சிங்களத் தேசியவாதிகளும் கூட கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்.'

இருதரப்புமே இதுபற்றிய தப்பான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கும் போது தயான் சிங்களவாதிகள், மிதவாதிகள், புரட்சிவாதிகள், அறிவார்ந்த சிங்களத் தேசியவாதிகளும் கூட ஆதரிக்க வேண்டும் எனத் தூண்டுவது அதிகாரப் பரவலாக்கம் இருப்பதால் அல்ல: மாறாக மாகாண சபை மீது உள்ள ஜனாதிபதியின் அதிகாரம் அதன் அனைத்து அதிகாரங்களையும் எடுத்து விடுகிறது என்பதை எமக்குக் விளக்கமாகக் காட்டவில்லையா ?

13வது திருத்தச் சட்டம் உள்ள படியில் ஏன் போதுமானதாக இல்லை? என்ற கட்டுரையில் கலாநிதி எஸ். நரபாலசிங்கம் இப்படிக் கூறுகிறார்:

'13வது திருத்தச் சட்டம் உண்மையில் கெட்ட எண்ணத்தோடு வரையப் பட்டதும், எல்லா இலங்கை மக்களையும்; சம பங்காளிகள் ஆக்கத் தேவையான எதற்கும் இடம் தராத, பயனற்றதும் ஆகும். அரை நூற்றாண்டுக் காலமாக சொல்லோடு விளையாடியும் செயலில் எதுவும் செய்யாமலும் நாட்டை இந்தத் துயர நிலைக்கே கொண்டு வந்த பின்னரும் கூடவா இப்படி என்பது கவலையாக உள்ளது. சிக்கலான பிரச்சனைகளை கவனத்;தில் கொள்ளாத சிந்தனை ஓட்டமே இன்னமும் நீடிக்கிறது.'

எனவே நாங்கள் குறித்த திருத்தச் சட்டமும் மாகாண சபைச் சட்டமும் கொண்டுள்ள சரத்துகளை காட்டமான பார்வைக்கு உட்படுத்தி அதிகாரப பரவலாக்கம் என்று சொல்லப்படுவது உண்மையா? உருவகமா? எனப் பார்ப்போம்.

2. மாகாண சபையின் நிறைவேற்று அதிகாரங்கள்.

ஜனாதிபதியின் தனித்த விருப்பத்துக்கு அமைவாக நியமிக்கப் பட்ட ஆளுநர் ஒவ்வொரு மாகாண சபையின் நிர்வாகத் தலைவராக இருப்பார். ஆனால் அவர் அந்த அதிகாரங்களை அவரால் நியமிக்கப் பட்ட மாகாண முதலமைச்சர் மற்றும் நான்கு மாகாண அமைச்சர்கள் மூலம் செயற்படுத்துவார். ஆளுநர் ஜனாதிபதியின் விருப்பத்துக்கு அமையவே அவரது பதவி உள்ளது என்ற காரணத்தால் அவர் எப்போதும் ஜனாதிபதியின் திருப்திக்கு இசைவாகவே செயற்பட முடியும். தவறினால் அவரது பதவி பறிக்கப்படும். எனவே ஆளுநர் என்பது ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்கும் வழிகாட்டுதலுக்கும் உட்பட்ட வெறும் அலங்காரப் பொம்மை என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இதன்படி அதிகாரப் பரவலாக்கம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் மாகாண சபையால் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள ஆளுநரின் மீது எந்த விதமான ஆதிக்கமும் செலுத்த முடியாது. இப்போது ஆளுநரிடம் இருப்பதாகக் கூறப்படும் நிறைவேற்று அதிகாரங்கள் எவை எனப் பாரப்போம்.

ஆளுநர் அத்தகைய அதிகாரங்களை நேரடியாகவோ, அல்லது அமைச்சர் குழுவின் அமைச்சர்கள் மூலமாகவோ அல்லது தனக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் மூலமாகவோ செயற்படுத்துவார் என 13வது திருத்தச் சட்டம் சொல்கிறது. அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் என்பது மாகாண சபைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண பொதுச் சேவை உறுப்பினரைக் குறிக்கும். குறிப்பிட்ட பகுதி மாகாண பொதுச் சேவை ஒன்றை உருவாக்கவும், அதன் உறுப்பினரின் நியமனம் இடமாற்றம் பணி நீக்கம் மற்றும் ஒழுக்க நெறிக் கட்டுப்பாடு என்பன ஆளுநரின் பொறுப்பில் இருக்கும் எனவும் கூறுகிறது. ஆகவே, மாகாண சபைக்கு அதன் தீர்மானங்களைச் செயற்படுத்தும் அதன் பொதுச் சேவை அதிகாரிகளின் மீது எதுவித மேலாதிக்கமும் கிடையாது என்பது இதன் மூலம் தெரிகிறது. அவர்கள் ஆளுநரின் வழிகாட்டலுக்குக் கட்டுப் பட்டவர்களாயும் அவருக்கே விசுவாசம் உள்ளவர்களாகவும் இருக்கக் கடமைப் பட்டுள்ளனர்.

அடுத்து ஆளுநர் தனது நிறைவேற்று அதிகாரங்களைச் செயற்படுத்தும் மாகாண அமைச்சர்களின் அதிகாரங்கள் எவை எனப் பார்ப்போம். முதல் அமைச்சரும் அமைச்சர் குழுவும் மாகாண ஆளுநர் தமது கடமைகளைச் செய்ய உதவியும் ஆலோசனையும் வழங்க 13வது திருத்தச் சட்டம் வகை செய்கிறது. எனவே மாகாண அமைச்சர்களுக்குச் சுயமாக மாகாண நிர்வாகம் செய்யும் அதிகாரம் கிடையாது என்பது தெளிவாகிறது. மேலும் அமைச்சர் குழு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் ஆளுநருக்கு முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும் எனவும் சட்டம் கூறுகிறது. எனவே பதவி நீக்கம் உட்பட பாரிய பின் விளைவுகளுக்கு உட்படாது இருக்க வேண்டும் எனில் மாகாண அமைச்சர்கள் ஆளுநருக்குத் தெரியாமல் எதுவும் செய்ய முடியாது. ஆளுநரால் வழங்கப்பட்ட கடமைகளாக இருப்பினும் அமைச்சு பற்றிய எந்த ஒரு தகவலும் ஆளுநருக்குத் தேவை எனில் மாகாண அமைச்சர்கள் கொடுக்க கட்டாயப் படுத்துகிறது இந்தச் சட்டம்.

வைபவ ரீதியான சபையின் தொடக்க விழா, அமைச்சர்கள் தெரிவு மற்றும் சபை ஒத்தி வைப்பு போன்ற மாமுலான நடவடிக்கைகள் போன்றவற்றில் மட்டுமே ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனைகளைக் கேட்கக் கடமைப் பட்டுள்ளார்.

3. சட்டவாக்க அதிகாரங்கள்.

சட்டவாக்க அதிகாரங்களைப் பொறுத்த மட்டில் 13வது திருத்தச் சட்டத்தின் 9வது பட்டியல் விடயங்கள் கடமைகள் என்ற வகையில் 3 பட்டியல்களைக் கொண்டுள்ளது. ஓதுக்கப் பட்ட பட்டியல் (சுநளநசஎநன டுளைவ –சுடு.)இ மாகாண சபைப் பட்டியல் (Pசழஎinஉயைட ஊழரnஉடை டுளைவ-Pஊடு) சமாந்தரப் பட்டியல் (ஊழnஉரசசநவெ டுளைவ-ஊடு) என்பன. ஒதுக்கப்பட்ட பட்டியல் மத்திய அரசுக்கு உரியதான அதிகாரங்களை மட்டுமே கொண்டது. அது போன்றே மாகாணசபை சட்டம் இயற்ற அதிகாரம் அளிக்கப்பட்ட விடையங்களைக் கொண்டது மாகாண சபை பட்டியல். அப்படி நிறைவேற்றப் படும் சட்டம் 1987க்கு முன்னர் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் பற்றிய விடயமாயின அச்சட்டத்தின் முன்னுரையில் அது சட்டத்துக்கு முரனானது அல்ல எனக் கூறப்படுமிடத்து அச்சட்டம் மாகாணத்தில் செயலற்றிருக்கும்.

எவ்வாறாயினும், மாகாண சபைப் பட்டியலில் உள்ள விடயத்திலும் கூட மாகாண சபையின் சட்டவாக்க அதிகாரம் முற்றிலும் உரித்தானது அல்ல. இன்னொரு வகையில் சொல்வதானால் ஒதுக்கப்பட்ட விடையங்கள் மத்திய அரசுக்கே உரித்தான அதிகாரம் என்றால் மாகாண சபைப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் மாகாண சபைக்கே முற்றிலுமான உரிய அதிகாரம் அல்ல. மாகாண சபைப் பட்டியலில் உள்ள விடையம் பாராளுமன்ற மசோதாவாக வரும் பட்சத்தில் அது எல்லா மாகாண சபைகளுக்கும் கருத்துத் தெரிவிக்கும் வகையில் அனுப்ப வேண்டும் என்று மட்டுமே அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. எல்லா மாகாண சபைகளும் இணங்கும் பட்சத்தில் மசோதா சாதாரண பெரும்பான்மைப் பலத்துடன் நிறை வேற்றப் படலாம். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறை வேற்றப் படுமாயின் அச்சட்டம் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லா மாகாண சபைகளுக்கும் செல்லுபடியாகும்.

சமாந்தரப் பட்டியலில் உள்ள விடயங்களைப் பொறுத்தமட்டில், பாராளுமன்றமும் மாகாண சபைகளும் சட்டம் இயற்ற முடியும் ஆனால் இருதரப்பின் சம்மதத்தின் பேரில் அவை அமைதல் வேண்டும். இந்த இடத்தில் இது ஆலோசனையுடன் என்றே அல்லாது ஓப்புதலுடன் என்று அர்த்தம் ஆகாது. ஏற்புடைமை அற்ற தன்மை உள்ள நிலையில், பாராளுமன்றத்தின் சட்டமே செல்லுபடியாகும்.

தேசிய அளவிலான கொள்கையாக பாராளுமன்றம் வகுக்கும் எல்லா விடயங்களும் அதிகாரங்களும் ஒதுக்கப் பட்ட பட்டியல் ஏற்பாடு செய்கிறது என்பதைக் கவனிக்க முடியும். இந்த சரத்தை எல்லா ஆட்சியாளரும் தொடர்ச்சியாக மீறி வருகின்றனர். சாதாரண பெரும்பான்மை கொண்டே தேசியக் கொள்கையை வகுக்க பாராளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆனால் மாகாண சபையோ சாதாரண பெரும்பான்மை கொண்டு எந்த ஒரு தேசியக் கொள்கையையும் மீறும் வகையில் சட்டம் இயற்ற முடியாது என்று ஆகிறது. தேசிய விடயங்கள் பற்றி; மாகாண சபை கட்டுப்பட வேண்டிய தேசிய வரைவாக மாகாண சபைப் பட்டியலும் சமாந்தரப் பட்டியலும் உள்ளன. உதாரணத்துக்கு மாகாண சபைப் பட்டியலில் வீதி போக்குவரத்து சட்டவரைவு பற்றிய இந்த நிகழ்வைக் குறிப்பிடலாம். இப்போது அநர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சராக இருக்கும் திரு. மகிந்த சமரசிங்க முதலாவது மேல்மாகாண சபையின் போக்கு வரத்து அமைச்சராக இருந்த காலத்தில், மேல்மகாணத்துக்கு போக்கு வரத்துச் சேவையைத் தொடங்க சட்டம் இயற்றி சீனாவிடமிருந்து 3 பேருந்துகளையும் விலைக்கு வாங்கி போக்கு வரத்துச் சேவையைத் தொடக்கியும் வைத்தார். தொடங்கப்பட்ட சில வாரங்களுக்கு உள்ளாகவே அப்படியான ஒரு போக்கு வரத்துச் சேவை போக்கு வரத்து பற்றிய தேசியக் கொள்கைக்கு முரணானது எனப் பிரகடனப்படுத்தி மாகாண அமைச்சரையும் அன்றைய ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கினார். வேறு விதமாகச் சொல்வதானால், 13வது திருத்தச் சட்டம் தேசியக் கொள்கை பாராளுமன்றச் சட்டவாக்கம் மூலமே இருத்தல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள நிலையிலும் பதவிக்கு வரும் அரசுகள் எல்லாம் தேசிய கொள்கையை அமைச்சரவை ஆணைகள் அமைச்சர்களின் சுற்று நிருபங்கள் மூலம் வடிவமைத்து வருகின்றன.

1995ல் குணவர்த்தன ஆணைக்குழு என்ற ஒன்று மாகாண சபைகளின் செயற்பாடுகள் பற்றி தெரிந்து அறிக்கை தர நியமிக்கப்பட்டது. மாகாண சபைப் பட்டியலில் உள்ள விடயங்களைக்கூட மத்திய அரசின் அமைச்சர்கள் தேசியக் கொள்கை அமுலாக்கம் என்ற சாட்டில் தமது ஆதிக்கத்தை மாகாண அமைச்சர்களின் நிர்வாகத்தில் செலுத்தும் அளவுக்கு உள்ளதாக குழுவின் அறிக்கை கூறுகிறது. மாகாண சபைச் சட்ட விதிகள் ஆளுநர் மீது மாகாண பொதுச் சேவை விடயமாகப் பல அதிகாரங்களை வைத்துள்ள நிலையில், பொதுச் சேவைகள் அமைச்சர் தொடர்ந்தும் மாகாண பொதுச் சேவை அதிகாரிகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் சுற்று நிருபங்களை விடுத்து வருகிறார் என்ற விடயம் கவனத்துக்கு வந்தது..

மாகாண சபைகள் 1988ல் முதல் முறையாகச் செயற்பட தொடங்கிள பொழுது, மாகாண சபைகள் இயற்ற வல்ல சட்டவிதிகளைப் பொறுத்த வரையில் ஏற்கனவே அமுலில் 300 சட்டங்கள் மாகாண சபைப் பட்டியல் சமாந்தரப் பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாக இருப்பது கண்டறியப் பட்டது. இவை எல்லாமே மத்திய அரசின் அமைச்சர்கள் அதிகாரிகளின் கடமைகள் பற்றியவை. இந்த அதிகாரங்கள் கடமைகளை மாகாண சபையின் அமைச்சர்கள் அதிகாரிகள் வசம் மாற்ற வேண்டிய நடவடிக்கைகளை மாகாண சபைகள் செய்ய வேண்டியிருந்தது. மாகாண சபைகளிடம் சட்டவாக்கம் செய்யத் தேவையான சட்ட வரைவாளரோ அல்லது சட்ட வரைவுகளைச் செய்யும் ஆற்றலோ இல்லாத காரணத்தால் அதிக அளவான முன்னைய சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருப்பதும் மாகாண சபைகள் செய்ய வேண்டிய கடமைகள், விடயங்கள் மீது மத்திய அரசு இப்போதும் அதிகாரம் செலுத்துகிறது. இதனை சரி செய்வதற்கு 1989ம் ஆண்டின் மாகாண சபைகள் (மேலதிக சரத்துகள்) சட்டம் ( ஊழளெநஙரநவெயைட Pசழஎளைழைளெ) இல.12 நிறைவேற்றப் பட்டது. இதன் மூலம் முன்னர் மத்திய அரசின் விடயங்களும் அவற்றுக்கான அதிகாரிகளும் எனக் கூறப்பட்டவை தற்போதைய மாகாணசபை விடையங்கள் எனவும் அவற்றுக்கான மாகாண அதிகாரிகள் எனவும் கொள்ளப்பட வேண்டும் என்ற திருத்தம் செய்யப்பட்டது. ஆயினும் 200க்கு மேற்பட்ட சமாந்தரப் பட்டியலில் அடக்கப் படாத விடயங்கள் இந்தத் திருத்தச் சட்ட வரம்புக்குள் வராது உள்ளன. இதற்கும் காரணமாக இருப்பது மாகாண சபைகள் இந்தச் சட்டங்களை கண்டு அறிந்து அவசியமான மாற்றங்களைச் செய்யத் தேவையான வசதி வளங்கள் இல்லாத நிலையில் இருப்பதே ஆகும். இதன் காரணமாக அவைகள் அந்த விடயங்களில் தமது அதிகாரங்களைச் செயற் படுத்த முடியாது உள்ளன. அத்தகைய விடயங்களில் மத்திய அரசு தொடர்ந்தும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்து வருகிறது.

4. நிதிக் கட்டுப்பாடு.

நிறைவேற்று மற்றும் சட்டவாக்க அதிகாரங்களுக்கும் அப்பால், ஆட்சி அமைப்புக்கு தனது திட்டங்களையும் நிர்வாகத்தையும் செய்வதற்கு நிதி தேவைப்படுகிறது. மாகாண அரசின் நிதித் தேவைகள் பற்றி மத்திய அரசுக்கு சிபார்சு செய்யும் ஒரே கடமை மட்டுமே கொண்ட ஒரு நிதி ஆணையத்தை நியமிக்க 13வது திருத்தச் சட்டம் வகை செய்கிறது. ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர். அதன் உறுப்பினராக மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரிச் செயலர், மற்றும் இலங்கையின் பிரதான மூன்று சமூகத்திலிருந்தும் மூவர் என இருப்பர். எனினும் இந்தக் குழுவின் ஆலோசனையை ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒவ்வொரு மாகாண சபைக்கும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் அவரது முடிவாகவே இருக்கும். அரச பொது நிதியிலிருந்து வழங்கப்படும் நிதியும், மாகாண சபைகளின் வரிகள் மற்றும் கடன் போன்றவற்றின் மூலம் பெறப்படும் நிதியும் ஒவ்வொரு மாகாண சபையின் பொது நிதியில் வைப்பு செய்யப்படும். ஆயினும், ஆளுநரின் ஒப்புதல் இன்றி மாகாண சபை எந்த ஒரு பணத்தையும் மீளப் பெற முடியாது. அத்துடன் ஆளுநரின் விதந்துரை இல்லாது மாகாண சபை செலவினத்தை ஏற்படுத்தும் சட்டங்களை இயற்றவும் முடியாது. ஆளுநரின் ஒப்புதல் இல்லாது வரி விதிக்கும் அல்லது வரிவிலக்களிக்கும் சட்டம் எதுவும் மாகாணசபை இயற்றவோ முடியாது. மாகாண சபையின் செலவினங்கள் நிதிப் பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை ஆளுநர் வகுக்கக் கடமைப் பட்டுள்ளார். குறித்த நிதி ஆண்டுக் காலத்தில் மாகாணச் சட்டத்தின் மூலம் அனுமதிக்கப் பட்டால் அன்றி முதல் அமைச்சர் கூட நிதி மீளப் பெற அனுமதி அளிக்க முடியாது. மாகாண சபையால் நிறை வேற்றப்படும் எந்த ஒரு சட்டமும் ஆளுநரின் அங்கீகாரம் அளித்த பின்னரே அமுலாக்கம் பெறும்.

எனவே மாகாண சபைக்கு சபையின் நிதி சம்பந்தமான விடையங்களில் சுயமான அதிகாரம் கிடையாது என்பது அப்பட்டமான உண்மை. இந்த விடையத்திலும் கூட பரவலாக்கம் என்ற கருத்தியல் நிதிச் செலவினத்தின் மீது விதிக்கப் பட்டுள்ள கட்டுப் பாடுகளால் இல்லாமல் செய்யப் பட்டுவிட்டது.

5. மாகாண சபைகளின் மீது ஜனாதிபதியின் ஏனைய அதிகாரங்கள்.

காலத்துக்குக் காலம் ஜனாதிபதி எந்த ஒரு மாகாண சபைக்கும் நெறிப்படுத்தல் வழங்க முடியும். அத்தகைய நெறிமுறைகளை மாகாண சபை கடைப் பிடிக்கத் தவறினால், மாகாண நிர்வாகம் அரசமைப்பு விதிகளுக்கு அமைவாக நடத்தப் படவில்லை எனவும் அதனைப் பாராளுமன்றம் கையகப் படுத்துவதாக ஜனாதிபதி அரசமைப்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களபை; பயன் படுத்தி பிரகடனம் மூலம் அந்த மாகாண பையின் செயற்பாடுகளைப் பொறுப்பேற்க முடியும்.

முதலமைச்சர் ஜனாதிபதியின் அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவும் ஜனாதிபதியினதும் அவரது கட்சியினதும் திட்டங்களை அந்த மாகாணத்தில் அமுல் நடத்தும் வரையில் மாகாணத்துக்கும் மத்திய அரசுக்கும் முழுமையான ஒத்துழைப்பு நிலவும். அத்தகைய சூழலில் முதல் அமைச்சரோ அல்லது அமைச்சர் அவையோ அதிகாரப் பரவலாக்கம் பற்றிய ஆளுநரின் தலையீடு பற்றிய எதுவித மனக்கிலேசமும் கொள்ள வேண்டி இருக்காது. ஜனாதிபதியின் அரசியல் கட்சியைச் சாராத முதலமைச்சராக இருந்து மாகாண அபிவிருத்தி பற்றி அவருக்கு எனத் தனியான வேலைத் திட்டம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே சிக்கல்கள் உருவாகும். 'மருத்துவ மனைக் கூலித் தொழிலாளியைக் கூட நியமிக்க தாம் விரும்பியபடி செய்ய', மாகாண ஆளுநர் அனுமதி மறுக்கிறார் என்று கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரும், மாகாண சபைப் பேச்சாளராகவும் உள்ள சுகாதார அமைச்சரும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டும் நிலை கிழக்கில் காணப் படுகிறது. இப்படியான சூழலில் மட்டுமே ஆளுநரின் கட்டளைகளை மீறவோ உதாசீனப் படுத்தவோ சுயாதீனமான அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதை மாகாணசபை உணர்ந்து கொள்ள முடியும். முன்னர் இங்கே சொல்லப்பட்டது போன்று ஆளுநர் என்பவர் ஜனாதிபதியின் மாகாணப் பிரதிநிதி என்பதே உண்மை.

6. ஏனைய பொது விடயங்கள்.

இதுவரையும் நாம் பார்த்தவை எல்லாம் 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள் அமுல் செய்யப் பட்டால் மாகாண சபைகள் தனிநாடு உருவாக்கத்துக்கு இடம் அளித்துவிடும் என்ற நம்பிக்கையைச் சிதறடிக்கும்; முக்கிய சரத்துகளில் சிலவே. அவை தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு மிக எட்டாத தூரத்தில் உள்ளன என்பதே உண்மை. இந்தத் திருத்தச் சட்டம் குறைவாகவோ நிறைவாகவோ அமுலாக்கப் பட்டாலும் போருக்கு வழி வகுத்த காரணங்கள் தொடர்ந்தும் இருக்கவே செய்யும். மாகாண காவல் துறை மற்றும் காணி பற்றிய அதிகாரப் பரவலாக்கம் என்ற இரு விடையங்களும் இது விடயமாக அடிக்கடி கவனத்தில் பர பரக்கப் பேசப்படும் விடயங்களாக உள்ளன. இவற்றுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப் பட்டாலுங்கூட ஏனைய விடயங்கள் பற்றி ஆளுநருக்கு உள்ள அதிகாரங்களால் அவை அனைத்துமே இல்லாது செய்யப் பட்டுவிடும். மேலும் மத்திய அரசு எந்நேரமும் அவற்றின் மீதான தனது தேசியக் கொள்கைகள் என்ற காரணம் காட்டி வலது கரத்தால் கொடுப்பது போல் கொடுத்து அதனைத் தனது இடது கரத்தால் பறித்து விட முடியும்.

சுருங்கச் சொல்வதென்றால், மாகாண சபையின் நிறைவேற்று மற்றும் சட்டவாக்க அதிகாரங்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியிடமே இருக்கும். அவரால் நியமிக்கப்படும் ஆளுநர் மாகாண முதல் அமைச்சர் மற்றும் அமைச்சரவை அங்கத்தவர்களின் உதவியும் ஆலோசனையும் பெற்று தமது அதிகாரங்களைச் செயற்படுத்துவார். முதல் அமைச்சரோ அல்லது அமைச்சர்கள் சபையோ ஆளுநரின் அதிகாரங்களை எந்த வகையிலும் மீற முடியாது.

7. முடிவுரை.

13வது திருத்தச் சட்டம் அரசமைப்பு விதிகளின் அடிப்படையான மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான மிகப் பெரும் பெரும்பான்மை வாக்குகளால் பலத்த வாதத்தின் பின்னர் நிறை வேற்றப்பட்டு அரசமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி மகிந்த ராஜபக்ஷவுக்கு தமிழரின் பிரச்சனைகளை ஒட்டு மொத்தமாகத் தீர்க்கக் கூடிய ஒரு பொன்னான சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளது. நாட்டின் நிலையான அமைதிக்கும் நீடித்த வளமான வாழ்வுக்கும் காலத்தின் கட்டாயம் எனக் கூறி அவர் எந்த விதமான தீர்வை சிங்கள மக்கள் முன் வைத்தாலும் அவரது மக்கள் செல்வாக்கு அவருக்குக் கை கொடுக்கும். அவர் இத்தகைய எதிர்பார்ப்பை மாகாண சபைகளுக்கு பொய்யான அதிகாரப் பரவலாக்கமாக இல்லாது உண்மையான அதிகாரப் பரவலாக்கம் மூலம் அடைய முடியும். எந்த ஒரு சமுதாயமும் பாரபட்சத்துக்கோ இரண்டாம் தர குடிமக்கள் என்ற சிந்தனைக்கோ இடம்தராத தீர்வாக இருக்க வேண்டும். அவர் நாட்டின் தவைராக எழக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இது. அவர் இத்தருணத்தைத் தவறவிட்டால் தமிழரின் பிரச்சனை நாட்டின் தீராத காயமாகவும், தோற்கடிக்கப் பட்ட சக்திகள் மீண்டும் புதை குழிகளிலிருந்து எழுந்து நாடு சுமக்க முடியாத அளவு பாரிய ராணுவச் செலவுகளைச் செய்கின்ற நிலையும் தொடரும்.

இந்தச் செலவானது காலப் போக்கில் தாங்க முடியாத, தாண்ட முடியாத தடைக் கல்லாக நாடு செல்ல வேண்டிய முன்னேற்றப் பாதையை இதுவரை காலமும் இருந்தது போன்றே அடைத்து விடும்.

இதன் ஆங்கில மூலத்தை http://groundviews.org/2009/07/19/devolution-of-powers-under-the-13th-amendment-in-sri-lanka-fact-or-fiction/ -இணையத் தளத்தில் பார்க்க

முடியும்.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.