Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்தான்புல் இளவரசி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்தான்புல் இளவரசி

யோ. கர்ணன்

மூன்றுநாளாகப் போக வெளிக்கிட்டு, முடியாமலிருந்தது இன்றுதான் சாத்தியப்படுகிறது. தகவல் கிடைத்ததும் உடனே போக வேண்டுமென்றுதான் வெளிக்கிட்டன். வேற யாருமென்றாலும் போகாமலிருந்து விடலாம். இது வெள்ளைக் காக்கா. அவனுக்கு ஒன்றென்றால் போகாமலிருக்க ஏலாது. எங்கட குடும்பத்தில ஒராள் மாதிரி. ஆனால் கடந்த மூன்று நாட்களாக வெளிக்கிட வெளிக்கிட ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்குது. செல்லடிப் பிரச்சனைதான். ஒரு நாள் நாங்களிருக்கிற வலைஞர் மடத்தில செல்லடியிருந்தது. மற்ற நாள் அவனிருக்கிற மாத்தளன் ஆஸ்பத்திரியடியில செல்லடியாகயிருந்தது. நேற்று இடையில இருக்கிற பொக்கணையில செல்லடி. ஏதாவதொரு இடை பார்த்து போகலாமென்று இருக்கத் தான், இண்டைக்கு விடிஞ்சதில இருந்து செல் சத்தத்தைக் காணயில்லை. இடைக்கிடை துவக்குச் சத்தம்தான் கேட்டுது. வெளிக்கிட்டு றோட்டுக்கு வர, றோட்டு வெறுமையாகக் கிடக்குது. ஆரோ ஒரு மனுசன் குனிஞ்சபடி ஓடிப் போனார்.

ஓடி ஒளிஞ்சிருந்த ஆட்களின்ர தலைக்கு மேல செல் விழுந்து செத்த கதையெல்லாம் நிறைய இருக்கிறதால, நான் நிற்கயில்லை. மோட்டார் சைக்கிள் பெற்றோல் ராங்கிற்கு மேல நெஞ்சை வைச்சு, ஒரு சாகச ஸ்ரைலில பறந்தன். இடைக்கிட மேலால ரவண்ஸ் சீறிக் கொண்டு போகுது. இது ஒரு சின்ன இடத்திலதான். அங்காலயெல்லாம் வலு நோமல்.

மாத்தளன் ஆஸ்பத்திரியடிக்கு வர, இன்னும் பார்வையாளரை உள்ளுக்கு விடத் தொடங்கியிருக்கவில்லை. வாசலில நிக்கிற சனம் முண்டியடிச்சுக் கொண்டு நிக்குதுகள். வாச்சர்ப் பொடியன் கத்தினான் - 'இதிலயொருத்தரும் குமிஞ்சு நிக்காதையுங்கோ. செல் விழுந்தால் ஒரேயடியாக எல்லாரும் போக வேண்டியிருக்கும்' என்று. சனம் கேக்கயில்லை. ஒரு வயசானவர் தான் கொஞ்சம் மரியாதை குறைவாகப் பேசினார். சொறணை கெட்ட தமிழன், பீத் தமிழன் என இரண்டு சொற்களையும் பாவிச்சார். சனமெல்லாம் ஒரு வரிசைக்கு வந்திதுகள். நானும் இடைக்குள்ள புகுந்திட்டன்.

ஏதோ பிராக்கு பார்த்துக் கொண்டிருந்த என்ர மூளைக்குள்ள ஒரு பொறி பறந்திது. வரிசையில எனக்கு முன்னால நாலாவதோ அஞ்சாவதோ நிற்கிற பெட்டையின்ர பக்கவாட்டுச் சாயலை பார்க்க தெரிஞ்ச ஆள் மாதிரியிருக்குது. அவள் ஒருக்கால் றோட்டை பார்க்க திரும்பியிருந்தாள். அப்பதான் இந்த பொறி பறந்து சந்தேகம் வந்தது. எட்டியெட்டிப் பார்த்துக் கொண்டு நின்றன். பெட்டை திரும்பி முகத்தைக் காட்டுறாளில்லை. எனக்கு பின்னால நின்ற கிழவனிட்ட 'இடத்தை பார்த்துக் கொள்ளுங்கோ.. முன்னுக்கு எத்தனை பேர் நிக்கினமென்டு எண்ணிக் கொண்டு வாறன்' என இடத்தைப் பொறுப்பு குடுத்திட்டு பூனை நடை நடந்தன். அது அவள் தானென்றால், அவள் என்னை காணக் கூடாது.

ஏதோ அலுவலாக வந்த பாவனையில நடந்து வந்து, அவளைப் பக்கவாட்டில பார்த்தன். அவளே தான். இஸ்தான்புல் இளவரசி. என்ர கடவுளே என்ன மாதிரி சீரழிஞ்சு போய் நிக்கிறாள். முந்தியென்டால் அவள் இந்த வரிசையில இப்பிடி நின்றிருக்கத் தேவையில்லை. அவள் றோட்டுக் கரைக்கு வரவே, உந்த வாச்சர்ப் பொடியன் கதவை திறந்து அவளை மட்டும் உள்ளுக்க விட்டிருப்பான். இப்ப ஆளே மாறிப் போய் நிற்கிறாள். கொஞ்சம் கறுத்து, மெலிஞ்சு, தலையையும் ஏனொதானோவென்று விட்டிருக்கிறாள். ஆனால் இப்பவும் அந்த ஒற்றைச் சுருள்முடி முகத்தில விழுந்திருக்குது. நான் அசுமாத்தம் காட்டாமல் திரும்பி வரிசைக்குப் போயிற்றன்.

இப்ப வாச்சர்ப் பொடியன் கதவைத் திறந்து ஆட்களை உள்ளுக்கு விட்டான். அவள் என்னைக் காணக் கூடாது. கொஞ்சம் இடைவெளி விட்டு, அவளுக்கு பின்னாலேயே உள்ளட்டன். அவள் வலது பக்கமிருக்கிற கட்டடத்திற்குள்ள உள்ளட்டாள். அவள் இயல்பாக போறதை பார்க்க, அவளுக்கு இந்த இடம் பரிச்சயமாயிருக்க வேணும். எனக்கு வெள்ளைக் காக்கா எங்கயிருக்கிறானென்பது தெரியாது. அவள் வலது பக்கம் போனதால நான் இடது பக்கம் திரும்பினன். அஞ்சாம் வகுப்பு மட்டுமிருந்த சின்னப் பள்ளிக்கூடம் தான் ஆஸ்பத்திரியாயிருக்குது. அது கொள்ளாத காயக்காரர் என்றதால, கட்டிடத் தாழ்வாரங்கள், மர நிழல், தண்ணீர்த் தொட்டிக்கு கீழ என எல்லா இடமும் காயக்காரர் படுக்க வைச்சிருக்கினம். ஒவ்வொரு கட்டிடமாக, மரமாக, முகமாகத் தேடிக் கொண்டு போனன். இதுக்குள்ள இஸ்தான்புல் இளவரசியைக் காணக் கூடாதென்ற பதற்றம் வேற.

ஆஸ்பத்திரி சிற்றிவேசனைப் பார்க்கத் தலை சுத்திச்சுது. இந்த முனகலையும், ஒப்பாரியையும், இரத்த நெடிலையும் நான் எப்பவும் விரும்பிறதில்லை. இன்றைக்கு இந்த கண்றாவிகளுக்க தான் சுத்தி திரிய வேண்டியிருக்குது. அது பள்ளிகூடமாக இருக்கேக்க சைக்கிள்க் கொட்டிலாக இருந்த தகர கொட்டிலுக்க உள்ளட்டன். வலது பக்கம் நாலாவது ஆளாக வெள்ளை படுத்திருந்தான். அவனை கண்டதும் எனக்கு அழுகை வந்திட்டுது. அவன்தான் என்னை சமாதானப் படுத்தினான்.

அவன் நல்லா வாடிப் போயிருந்தான். 'பைற்றர்' அடிச்சதில ஒரு செல் பீஸ் அவனின்ர துடையெலும்பை உடைச்சுப் போட்டுது. இந்தக் காலை சரி செய்யிறதென்றால், கப்பலில சீற் கிடைச்சு திருகோணமலை போனால்த் தான் செய்யலாமென்றும், கப்பலில போறதென்றால் இயக்கத்திடம் பாஸ் கிடைக்க வேணும், பாஸ் கிடைச்சாலும் கப்பல் வர வேணும், கப்பல் வந்து ஏத்தினாலும் அங்க ஆமிக்காரன் என்ன செய்யிறானோ தெரியாதென்றான். என்ன நடந்தாலும் வெள்ளை பழைய குணத்தை விடயில்லை. அதே பகிடிதான். என்ன, கொஞ்சம் அடங்கிய தொனியில, உற்சாகம் குறைஞ்சிருக்குது.

கிளிநொச்சியில கடைசி மட்டுமிருந்த இரண்டு மூன்று முஸ்லீம் குடும்பங்களில இவனின்ர குடும்பமும் ஒன்று. பள்ளிக்கூடத்தில நானும் அவனும் பக்கத்துப் பக்கத்துக் கதிரை. அவனின்ர பகிடியளால எந்த நேரமும் சிரிச்சுக் கொண்டிருப்பன். அப்பிடிச் சிரிச்சு, வகுப்பில சிரிச்சதென்று வாத்தியிட்ட நான் மட்டும் அடியும் வாங்கியிருக்கிறன்.

திடீரென்றுதான் ஞாபகம் வந்தவன் போல உற்சாகமாக - 'டேய்..உன்ர பழைய சரக்கு.. இஸ்தான்புல்.. தெரியுந்தானே.. அவளின்ர தகப்பனும் இந்த வாட்தான். அந்தா.. அந்தத் தொங்கல்' என்று காட்டினான்.

அந்தத் தகர கொட்டகையின்ர மற்ற தொங்கலில அவளிருந்தாள். படுத்திருந்த தகப்பனைச் சரியாகப் பார்க்க ஏலாமலிருந்தது. அவள் தான் தகப்பனுக்குச் சாப்பாடு தீத்திக் கொண்டிருந்தாள்.

வெள்ளையை அடையாளம் கண்டு, இரண்டு நாளுக்கு முதல் அவள் வந்து கதைத்தவளாம். அவளது கூடாரத்தருகில் செல் விழுந்து தாயும் தமையனும் செத்துப் போனார்களாம். தகப்பனின்ர ஒரு கால் உடைந்து, ஆஸ்பத்திரியில தான் கழற்றினார்களாம். இவளுக்கும் காயமாம். காயம் மாறி, போன கிழமை தான் வீட்ட போனவளாம். கேட்க கேட்க எனக்கு பெருமூச்சு தான் வந்தது.

அவளை ஒரு முறை வடிவாகப் பார்க்க வேணும் மாதிரியிருந்தது. அவள் நடைபாதைக்கு முதுகை காட்டிக் கொண்டிருக்கிற துணிவில போனன். அவளது தகப்பனை அடையாளம் பிடிக்க முடியாமலிருந்தது. ஒரு எலும்புக்கூடு போலயிருந்தார். தாடி ஒரு பற்றை காடு போல படர்ந்திருந்தது. அவள் கையில வைச்சிருக்கிற சாப்பாட்டு கிண்ணத்தை தான் பார்த்தன். கஞ்சி. T.R.O குடுக்கிற கஞ்சியாக இருக்க வேணும்.

திரும்பி போய் வெள்ளைக்குப் பக்கத்தில இருக்க, 'ஒரு வகையில நடந்ததெல்லாம் நல்லதுக்குதான்' என்றான்.

நான் ஐஞ்சாமாண்டு சோதினை பாஸ் பண்ணி, ரவுனிலயிருக்கிற பள்ளிகூடத்திற்குப் படிக்க போக, அங்க எனக்கு பக்கத்து கதிரை இர்பான். அந்த நேரம் இப்பிடியொரு பெயரும் ஆளும் அங்க ஆச்சரியமான சங்கதி. நானறிஞ்ச முதல் முஸ்லீம் பொடியன் அவன் தான். பிறகு பிறகுதான் தெரியும், எங்கட வடக்கு தமிழீழத்துக்க மேலும் கொஞ்ச முஸ்லீம்கள் இருக்கிறது. அதுவும் ரவுணுக்க சாப்பாட்டுக் கடை வைச்சிருந்த ஆளின்ர பெட்டையள் எல்லாம் நல்ல வடிவு. பிறகு, நாங்கள் வளர்ந்ததுக்குப் பிறகு அந்த பெட்டையளைப் பார்க்கிறதுக்காகவே அந்த கடைக்குச் சாப்பிட போனம். நாங்கள் காசு குடுத்துச் சாப்பிட்டதுதான் மிச்சம். ஆர் ஆரோ எல்லாம் சாய்ச்சுக் கொண்டு போயிற்றாங்கள்..

கொஞ்ச நாளில இரண்டு பேரும் நல்ல இறுக்கம். அவன் ஆள் நல்ல வெள்ளையாக இருந்ததினால, வெள்ளைக் காக்கா என்ற பெயர் வந்திட்டுது. வெள்ளையும் நானும் பல பத்து இடங்களிற்குத் திரிய தொடங்கினம். எனக்கு முதல்முதல் புளு பிலிம் காட்டியதும் அவன் தான். இதுகள் தெரிஞ்சால் இயக்கம் மண்டையிலதான் போடும் என்று சொல்லித்தான் கூட்டிக் கொண்டு போனான். எனக்கு பயமாய்த் தானிருந்தது. சிம்ரன் நடிச்ச படம், அந்த மாதிரியிருக்குமடா என்று அவன் சொன்ன வசனம் என்னை சகல பயங்களிலிருந்தும் மீட்டெடுத்தது. நாங்கள் அங்க போக, கொஞ்சம் வயசான இரண்டொரு பேர் நின்றிருந்தினம். எனக்கென்றால் சரியான வெட்கமாகயிருந்தது.

பிறகு அந்த வீட்டில தான் இயக்கத்திற்குத் தெரியாமல் தமிழில இருக்கிற பெரும்பாலான நடிகையளின்ர பெயரில வாற புளு பிலிம்கள், எங்கட சினேகிதப் பொடியன் ஒருத்தனின்ர தங்கச்சியை அவளின்ர சினேகிதன் அப்பிடி இப்பிடி எடுத்த வீடியோ எனத் தொடங்கி கடைசியில போன மாதம் ஆமிக்காரரிற்குத் தெரியாமல் சனல்4 வீடியோ வரையும் இஞ்ச தான் பார்த்தம்.

படம் முடிஞ்சு வெளியில வர, பக்கத்து வீட்டிலயிருந்து எங்களோட படிக்கிற பெட்டையொன்று வெளிக்கிடுது. எனக்கு கால் இரண்டும் பின்னத் தொடங்கி விட்டுது. வெள்ளைதான் ஏதோ பேசி கூட்டிக் கொண்டு போனான். அதுக்குப் பிறகு அவளை வகுப்பில கண்டாலும் வெக்கமாயிருக்கும்.

எங்களுக்கு வரலாறு படிப்பிச்ச வாத்தியார் நல்ல பகிடியான மனுசன். அந்தாளின்ர வகுப்பு எப்பவும் கலகலப்பாகத்தானிருக்கும். அவருக்கு பொழுது போகயில்லையென்றால், வகுப்பை நாலு பிரிவாக பிரிச்சு பொது அறிவுப் போட்டி வைப்பார். இலங்கையில எத்தனை மாவட்டமிருக்குது, யாழ்ப்பாணத்தின்ர கடைசி மன்னன் யார் என்ர ரைப் கேள்விகள் தான். பொது அறிவுப் போட்டியென்றால் பொடியளுக்கும் வலு புளுகம். ஒவ்வொரு ரீமிலயும் பொடி பெட்டையள் கலந்திருக்கிறது தான் காரணம். இப்பிடித் தான் ஒரு முறை எங்கட ரீமிற்கு வந்த கேள்வி: இந்தியாவின் யமுனையாற்றங்கரையிலிருக்கும் தாஜ்மகால் எனும் அழகேயுருவான கட்டிடம் யாரின் நினைவாக கட்டப்பட்டது?

கேள்வி விழுந்ததும் அந்த பெட்டைக்கு மேல. அது பெட்டை முகட்டை பார்க்கிறதும், மேசையில பேனையால கீறுறதுமாக நிற்குது. ஒருநாளும் இல்லாத புதினமாக வாத்தியார் சொன்னார், நாலு விடையைத் தான் சொல்லுவதாகவும் அதில் சரியானதைக் கண்டுபிடித்தால் போதுமென்று. மற்ற ரீம் காரர் குழம்பத் தொடங்கி விட்டினம். உதென்ன நியாயமென்று. வெள்ளை சொன்னான்: 'பாரடா.. வடிவான பெட்டையென்றதும் வாத்தியும் வழியுறான்'. அவர் சொன்ன விடைகள் இவை. நல்லூர் மகாராணிக்காக, இஸ்தான்புல் இளவரசிக்காக, மொகாலய ராணிக்காக, வடநாட்டு இளவரசி குஸ்பூவிற்காக. பெட்டை ஒரு யோசனையுமில்லாமல் சொன்னாள் - 'இஸ்தான்புல் இளவரசிக்காக'.

இஸ்தான்புல் இளவரசி இப்படிதான் எங்கள் வகுப்பிற்கு வந்தாள். எல்லாரும் இஸ்தான்புல் இளவரசி, இஸ்தான்புல் இளவரசி என்று கூப்பிட பெட்டை இரண்டு நாளாக அழுது கொண்டிருந்தாள். மூன்றாம் நாள், சமய ரீச்சரிட்டப் போய் கொம்ப்ளைன் பண்ணினா, கூப்பிட்டு வைச்சு, இப்பிடியொரு வடிவான, சாந்தமான பெட்டை இந்த வகுப்பிலயில்லை ஊரிலயே இரு கிறாளா என்று கேட்டா. பிறகு சொன்னா, 'டேய்.. பொடியள்.. வடிவாக் கேளுங்கோ.. உலகத்திலயே துருக்கிப் பெட்டையள்தான்ரா வடிவானவளுகள். அவளுகளின்ர முகத்தில இருக்கிற லுக்கும்,சாந்தமும் வேறயொரு மூஞ்சயிலயுமிருக்காது. இந்த பிள்ளையில அப்பிடியொரு லுக் இருக்குது. பிள்ளை நீ கவலைப்படாத. நீ இஸ்தான்புல் இளவரசிதான்.'

ரீச்சர் பேசினதால பொடியள் அந்த பெயரை பாவிக்காமல் விடயில்லை. ஆனால் பெட்டை அதுக்காகக் கவலைப்பட்ட மாதிரி தெரியயில்லை. சில நேரம் சந்தோசப்பட்ட மாதிரியுமிருந்தது. அவள் ஏ.எல் படிக்கிற காலத்தில உண்மையிலயே இஸ்தான்புல் இளவரசி மாதிரித் தானிருந்தாள். அவளின்ர நடை, உடை, எடுப்பு, சாய்ப்பு எல்லாத்திலயும் ஒரு இளவரசித் தோரணை வந்த மாதிரி எனக்குப் பட்டது. அவள் ஒருத்தரையும் ஏறெடுத்தும் பார்த்தாளில்லை. சில பொடியளும் சேவகர்கள் மாதிரி பீல் பண்ண தொடங்கிச்சினம்.

அப்ப தான் எனக்கு அவளில மெல்லிய லவ் வருது. அது காதல் படம் வந்த சீசன். சினேகிதப் பொடியனொருத்தனின்ர வீட்டில பார்த்தம். எனக்கென்றால் அந்த படத்தைப் பார்க்க பார்க்க, நான் ஹீரோ மாதிரியும் அவள் ஹீரோயின் மாதியுமான பீலிங் ஒடத் தொடங்கிச்சுது. இந்த படம் பார்த்த அன்றுதான் முடிவு செய்தன். வாழ்ந்தாள் அவளோடு. இல்லையேல் மண்ணோடு.

பிறகென்ன, இராத்திரியில நித்திரையில்லாமல் கிடந்து றேடியோவில போடுற சோகப் பாட்டுக்களைக் கேட்கத் தொடங்கினன். எனக்காகவே அவையள் பாட்டுப் போட்டது மாதிரியுமிருந்தது. என்ர பாடுகளைத் தாங்க மாட்டாத வெள்ளையும், பகீரும் தான் இந்தக் காதல் ஈடேறுவதற்கான வழிவகைகளை தேடத் தொடங்கினாங்கள்.

மூன்று நாளாக இரவு பகலாக யோசிச்சு, நாங்கள் மூன்று பேரும் ஒரு கடிதம் எழுதினம். என்றும் அன்புள்ள என் இனிய ரூபினிக்கு என்று தொடங்கி, இப்படிக்கு உன் நினைவினால் வாடும் முரளி என்று முடிஞ்சது. இடையிடையே மானே, தேனே மாதிரியான ஐயிற்றங்களையும் போட்டம்.

அந்தக் கடிதத்தைப் பொக்கற்றுக்குள்ள வைச்சுக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு மாசம் அலைஞ்சன். எனக்கு உந்த வேலை மட்டும் சரிவரயில்லை. எல்லாம் ரெடி பண்ணிக் கொண்டு அவளுக்குக் கிட்டப் போக, ஏதாவதொரு பிரச்சனை வந்து கொண்டேயிருந்தது. பாலசுப்ரமணியம் பாடிய 'பூங்கொடி தான் பூத்ததம்மா' என்ற பாட்டைத் தான் முணுமுணுத்துக் கொண்டு திரிஞ்சன். அதில வாற 'ஊமைக்கு பாடலென்ன..கோழைக்கு காதலென்ன' என்ற வரி நல்லாப் பிடிச்சிருந்தது.

அந்த நேரம் எங்கட பள்ளிக்கூடத்தில நவராத்திரியோ சிவராத்திரியோ தெரியயில்லை, ஏதோ ஒன்று நடந்தது. பாட்டும், பரதமும், நாடகமுமாக பள்ளிக்கூடம் அமர்களப்பட்டது. அவளும் ஒரு நாடகம் நடித்தாள். பாயும்புலி பண்டார வன்னியன் என்ற பெயராக இருக்க வேணும்.

இன்றைக்கு விசயத்தை முடிக்கிறதென்ற முடிவுக்கு வந்திருந்தன். மேடையில கரகாட்டம் நடந்து கொண்டிருந்தது. அடுத்தது அவள் நடிக்கிற நாடகம். மண்டபத்திலயிருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிற கட்டிடத்திற்குள்ள அந்த நாடக கோஸ்டியினர் வெளிக்கிட்டுக் கொண்டிருந்தினம். வெள்ளை ஒரு பெட்டையைப் பிடிச்சு ரூபினி நிற்கிற அறையை அறிந்தான். எனக்காகவே அமைந்த சந்தர்ப்பம் போல மேல்மாடி வகுப்பறையொன்றில் தனியாக நின்றாள். சொல்ல வேண்டியவற்றை நாக்கு நுனியில் வைத்துக் கொண்டு கதவில் கை வைத்தன்.

இது சினிமாவிலயும் வாற சீன்தான். இந்த சீனுக்கு அடுத்த சீன், பனி பொழியும் ஐரோப்பாவில் ஒரு காதல் பாட்டாயிருக்கும். ஹீரோ கதவைத் திறக்க, ஹீரோயின் உடுப்பு மாத்திக் கொண்டிருப்பாள். கதவுப் பக்கம் முதுகுதான் காட்டுவாள். ஹீரோ கனக்க ஒன்றும் பார்க்க மாட்டான். முதுகை... மாசு மருவில்லாமல் வெள்ளை வெளேறென்றிருக்கிறப் பாதி முதுகை மட்டும் தான் பார்ப்பான். கதவுச் சத்தம் கேட்டு திரும்புபவள், என்ன ஏதென்று வகை பிரிக்க முடியாததொரு ஒலியெழுப்புவாள்.

நான் கீழ இறங்கி ஓடி வர, 'விசயம் முடிஞ்சுதோ' என வெள்ளை கேட்டான். அவனையும் இழுத்துக் கொண்டு ஓடிவந்து மண்டபத்தில பின்னுக்கிருந்திட்டன்.

பத்து நிமிசத்தில சிவதாஸ் மாஸ்ரர் மண்டபத்திற்குள்ள வந்தார். ஒவ்வொரு முகமாக தேடித் தேடி என்னை பிடித்து விட்டார். அங்க அவள் நின்றது தெரியாதென்ற என்ர வாதம் எடுபடயில்லை. நல்ல சங்காரம்.

அடுத்தடுத்த நாள் அவளைச் சமாதானப்படுத்த முயன்றோம். அவள் காறித் துப்பாத குறையாக விலத்தி விலத்திப் போனாள். நான் வந்தது கடிதம் தரத்தான், ரேப் பண்ணயில்லை என்பதைப் புரிய வைக்க எடுத்த ஆயிரத்தெட்டு முயற்சிகளும் பலனற்றுப் போயின. ஒரு காவாலியைப் பார்க்கிறது மாதிரியே என்னை பார்த்தாள். கடைசி வரையும் என்ர சமாதானங்களையில்லை, என்ர வாயிலயிருந்து வாற ஒரு வசனத்தையேனும் கேட்க அவள் தயாராகயிருக்கயில்லை.

நாட்டுப் பிரச்சனை மாதிரி, எங்கட பிரச்சனையும் ஒரு முன்னேற்றமில்லாமல் இழுபட்டுக் கொண்டு போச்சுது. இடையில நாட்டு சிற்றிவேசன் இறுக்கமாகி விட்டுது. வீட்டுக்கொராள் நாட்டைக் காக்கப் போக வேண்டியிருந்தது. உந்த காதல், கத்தரிக்காயையெல்லாம் விட்டிட்டு நான் தலைமறைவாகி விட்டன். ஆனால் அவள் மட்டும் மகாராணி தோரணையில ரவுணுக்க பயமில்லாமல் திரிஞ்சாள். உந்த, பிடி காரரிற்றயிருந்து உவள் எப்பிடி திரியிறாள் என்று எனக்கு ஒரே குழப்பம். பிறகுதான் ஒரு கதை வந்தது. அவளின்ர தகப்பன் இயக்கத்துக்கு பத்து இலச்சம் காசு கட்டினவர் என்று. அவர் ரவுணுக்குள்ள ஒரு கராஜ் வைச்சிருந்தார்.

எங்கட வீட்டில இருக்க ஏலாமல் பூநகரியில இருக்கிற மாமா வீட்டில போய் ஒளிஞ்சிருந்திட்டன். இந்தப் பிரச்சனை, இடப்பெயர்வுப் பிரச்சனை என்று அதுக்குப் பிறகு நாடு குழம்பி விட்டது. அவளையும் காணயில்லை. இப்பதான் காணுறன். நான் கடைசியாக கிளிநொச்சி ரவுணுக்க கண்டவளுக்கும், இப்ப மாத்தளன் ஆஸ்பத்திரிக்குள்ள காணுறவளுக்கமிடையில இருந்த ஒற்றுமையென்றால், முகத்தில விழுற சுருள் முடிதான். அந்த முடிக்காக முந்தி ஒரு முறை பள்ளிகூடக் கரும்பலகையில 'நெற்றியில சுருண்ட முடி என்னைச் சுற்றி இழுக்குதடி' என்ற சினிமாப் பாட்டு வரியை எழுதினன்.

'பாவம் மச்சான்.. இப்ப சரியான கஸ்ரம் போல...கடையும் முதலே செல் விழந்து எரிஞ்சு போயிற்றுதாம்' என்றான் வெள்ளை.

பார்வையிடும் நேரம் முடிந்து விட்டது. ஆட்களை விரட்டிக் கொண்டு ஒரு தடிமனான பெண்மணி வந்தார். அந்தக் கொட்டகையை விட்டு வெளியே வந்தேன். அவளைக் காணயில்லை. எங்கேயோ தவற விட்டிட்டன்.

அவள் பற்றிய நினைப்புத் தான் மனசுக்குள்ளயிருந்தது. இந்த யோசனையோட மாத்தளன் சந்தி கடக்க, முன்னால தனியாக நடந்து போய்க்கொண்டிருந்தாள். பக்கத்தில மோட்டார் சைக்கிளை நிற்பாட்ட, ஏதோ யோசனையோட போன பெட்டை திடுக்கிட்டுத் திரும்பினாள். முகம் 'டக்'கென மாறியது. அவள் என்னை அடையாளம் பிடிச்சிட்டாள்.

அவளை சமாதானம் செய்ய கனநேரம் தேவைப்படுமென்று நினைச்சிருந்தன். நான் பயந்தது மாதிரி அவள் பழைய கதையொன்றும் கதைக்கயில்லை. ஆரம்பத்தில கொஞ்ச நேரம் அழுதாள். தற்போதைய தனது நிலையை நினைத்தா அல்லது குடும்பத்தை நினைத்தா அழுகிறாள் என்பது தெரியவில்லை. அவள் அழுது முடிக்க மட்டும் நானும் பேசாமலேயே நின்றிருந்தன்.

அவளது வீட்டுக்கு இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டியிருந்தது. எனது மோட்டார் சைக்கிளிலேயே ஏற்றி வந்து விட்டேன். கூடாரத்திற்கு வந்து விட்டுப் போகுமாறு வற்புறுத்தினாள். சரி. போனால் போகுதென்று போனன். கொஞ்ச தூரத்தில நின்ற தென்னையைக் காட்டி, அதற்குக் கீழதான் ஆரம்பத்தில இருந்ததாகவும் அங்குதான் செல் விழுந்ததாகவும் சொன்னாள். இப்போது இவள் தனியாகவேயிருக்கிறாள். TRO குடுக்கிற கஞ்சியை வாங்கி வந்து தகப்பனிற்குக் குடுக்கிறதாகச் சொன்னாள்.

என்னிடமும் இப்போது அதிக பணமிருக்கவில்லை. முன்னூறு ரூபா மட்டுமேயிருந்தது. அவள் மறுத்து விட்டாள். பலவந்தமாக அவளது கையை பிடித்துக் காசை வைத்தேன். பிறகும் இடையிடையே வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு வெளிக்கிடத்தான் வெள்ளை சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அவளது காய விபரத்தை கேட்டன். காயம் மாறி விட்டதாகவும், இப்போது கொஞ்சம் நோவிருப்பதாகவும் சொன்னாள்.

எந்தப் பகுதியில் காயமிருப்பதாகக் கேட்டன்.

கண்ணை மூடி ஒரு முறை பெருமூச்சு விட்டாள். பிறகு ஒரு கதையுமில்லாமல் கூடாரத்திற்குள் உள்ளட்டாள். எனக்கு முதுகை காட்டி திரும்பி நின்று கொண்டு சட்டையை சந்றே தூக்கினாள்.

நான் கனக்க ஒன்றும் பார்க்கயில்லை. முதுகை...மாசுமருவில்லாமல் வெள்ளை வெளேரென்றில்லாமல் கொஞ்சம் கறுத்திருந்த முதுகை தான் பார்த்தன். அதில நாலு இஞ்சி நீளத்தில இன்னும் முழுமையாக ஆறாத காயத் தழும்பிருந்தது.

http://yokarnan.blog...og-post_10.html

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.