Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லியோன் பேராலயம்: செர்பியச் சிறுகதை

Featured Replies

லியோன் பேராலயம் டேவிட் அல்பாஹரி

தமிழில்: சுகுமாரன்

டேவிட் அல்பாஹரி (David Albahari - 1948)

செர்பிய எழுத்தாளரான டேவிட் அல்பாஹரி கொஸாவோ பிரதேசத்தைச் சேர்ந்த யூத மரபில் பெஜ் நகரத்தில் பிறந்தார். பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். யூகோஸ்லாவியாவிலிருந்து புலம்பெயர்ந்த யூதர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபாடுகொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கிறார்.

டேவிட் அல்பாஹரி செர்பிய மொழியில் குறிப்பிடத் தகுந்த சிறுகதைகளும் பத்துக்கு மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலுள்ள முக்கிய நூல்களை செர்பிய மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரது ஆறு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன. ‘லியோன் பேராலயம்’ (The Basilica in Lyon) சிறுகதை எல்லன் எலியாஸ் புர்சாஜின் மொழியாக்கத்தில் அலெக்சாண்டர் ஹேமன் பதிப்பித்துள்ள Best European Fiction2010 தொகுப்பில் (டால்கீ ஆர்ச்சீவ் பிரஸ் வெளியீடு 2010) இடம்பெற்றுள்ளது.

1

இந்தக் கதை லியோனில் ஆரம்பிக்கிறது. ஆனால் எங்கேயும் முடியலாம். இந்தக் கதையில் நான்கு ஆண்கள், இரண்டு போலீஸ்காரர்கள், ஐந்து பெண்கள், சில காமிராக்கள், ஒரு சைக்கிள் (வெளியில் தெரிவதில்லை) ஒரு பழைய கால்பந்து ஆகியவை இருக்கின்றன. இந்தக் கதை வெவ் வேறு நீளமுள்ள பத்துப் பகுதிகளைக்கொண்டிருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய கதையின் நீண்ட பாகம் ஒரு பேராலயத்தின் முன்னால் நிகழ்கிறது. குறுகிய பாகம் ஏறத்தாழ முழு அமைதியில் கடந்துபோகிறது. எல்லாப் பகுதிகளும் கற்பனையின் துண்டங்களே. ஒரு தருணத்தில், ஆரம்பத்துக்கு முன்பே கதை நகரத்தின் விளிம்புக்கு வெளியில் இருந்தது. மழை பெய்யத் தொடங்கும்வரை அது அங்கேயே நின்றிருந்தது. முகத்தின் வழியாகக் கீழிறங்கிய மழைத் துளிகளைக் கட்டைவிரலால் வழித்து வீசியது. வந்து நின்ற காரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். இருவரும் சூயிங்கம் மென்றுகொண்டிருந்தார்கள். காரை ஓட்டாமலிருந்த பெண் ‘பின்னால் உட்காரலாம். இல்லை, எங்களுக்கு நடுவிலும் உட்கார்ந்துகொள்ளலாம். உன் விருப்பம்போலச் செய்’ என்றாள். தோளைக் குலுக்கிக்கொண்டு வாயால் ஒரு குமிழியை உண்டாக்கி ஊதிவிட்டாள். பின் இருக்கையில் தனியாக உட்காருவது சங்கடமானது என்று கதை நினைத்தது. எனவே இரண்டு பெண்களுக்கும் இடையில் உட்கார்ந்தது. காரை ஓட்டாமலிருந்த பெண் கதவை அறைந்து மூடியதும் கார் நகர்ந்தது. “நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கதை கேட்டது. காரை ஓட்டிக்கொண்டிருந்த பெண் “எங்கே வேண்டுமானாலும்” என்று பதில் சொன்னாள். நல்லது என்று நினைத்துக்கொண்டது கதை. நான் லியோனில் தொடங்கினேன். எங்கேயும் முடியலாம். கதை முதலில் இரண்டு பெண்களில் ஒருத்தியைப் பார்த்துச் சிரித்தாள். பிறகு அடுத்தவளைப் பார்த்துச் சிரித்தாள். பிறகு கண்களை மூடிக்கொண்டாள். உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

the-basilica-towers-over.jpg

2

தன்மீது எறும்புகள் ஊர்வதாகக் கனவு கண்டாள். ஆனால் கண்களைத் திறந்தபோது அவை காரை ஓட்டாமலிருந்த பெண்ணின் விரல்கள் என்பதைப் பார்த்தாள். அந்தப் பெண் சிறுமியின் ப்ளவுஸ் பொத்தான்களை அவிழ்த்து அவளுடைய சருமத்தைத் தனது விரல் நுனிகளால் ஸ்பரிசித்துக்கொண்டிருந்தாள். சிறுமி அருவருப்புடன் அந்தப் பெண்ணின் கையை அப்புறப்படுத்தி விட்டு ப்ளவுஸ் பொத்தான்களைப் போட்டுக்கொண்டாள்.

“என்ன ஆயிற்று? உன்னுடைய சருமம் எப்படி இருக்கிறது என்று தான் பார்க்க விரும்பினேன். உனக்கு மென்மையான சருமம்” என்றாள் அந்தப் பெண். தொடர்ந்து “அது உனக்கு ஏற்கனவே தெரியும் என்று நிச்சயமாக எனக்குத் தெரியும்” என்றாள்.

சிறுமி எதுவும் பேசவில்லை. அவள் தன்னுடைய ப்ளவுஸ் பொத்தான்களைப் போட்டு ப்ளவுஸை பேண்டுக்குள் நுழைத்துச் சொருகினாள். தான் பாவாடை அணியாதது அதிருஷ்டமென நினைத்துக்கொண்டாள். அன்று காலை அவள் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்தைப் பாவாடைக்கும் ஜீன்ஸ் பேண்ட்டுக்கும் இடையில் தேர்ந்தெடுப்பதற்காகச் செலவழித்திருந்தாள். அந்த நேரத்தில் அதைப் பற்றித் தன்மீதே கோபம்கொண்டிருந்தாள். இப்போது மகிழ்ச்சியடைந்தாள். தன்னுடைய முதுகுப்பை இன்னும் பின் இருக்கையில் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக அவள் திரும்பினாள். அது அங்கேயே இருந்தது. ஒருவேளை ஓர் ஓரமாகச் சரிந்திருக்கலாம். ஆனால் பூட்டு சேதப்படாமலிருந்தது. பிறகு சிறுமி கண்ணாடி வழியாக வெளியே பார்த்தாள்; முதலில் கண் விழித்தபோது நினத்ததுபோலவே வெளியே மேகமூட்டமாக இருந்ததைப் பார்த்தாள். ஆனால் உண்மையில் அப்போதுதான் இருட்டத் தொடங்கியிருந்தது. முகப்பு விளக்குகள் சாலையை ஒளிரச்செய்திருந்தன. ஆனால் சிறுமிக்கு இடப்புறமும் வலப்புறமும் வேறு வெளிச்சங்கள் தென்படவில்லை. லியோனிலிருந்து எவ்வளவு தொலைவு தாண்டியிருக்கலாமென யாருக்குத் தெரியும் என்று நினைத்துக்கொண்டாள். அவர்களிடம் நிறுத்தச் சொல்லக் கூடாது என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள். பிறகு “நிறுத்துங்கள், நான் இறங்க வேண்டும்” என்று தானே சொல்லுவதையும் கேட்டாள்.

காரை ஓட்டாமலிருந்த பெண் தேம்பியழத் தொடங்கியிருந்தாள்.

“கடவுள் பெயரால் சொல்கிறேன், பேசாமலிருக்கிறாயா?” என்று அடுத்தவள் கத்தினாள்.

காரை ஓட்டிக்கொண்டிருந்தவள் சிறுமியை ஏறிட்டாள். “நீ, உனக்கு என்ன வேண்டுமென்று சொன்னாய்?”

“நான் இறங்க வேண்டும்” என்றாள் சிறுமி.

“இங்கேயா, நிச்சயமாகவா?” என்று காரை ஓட்டிக்கொண்டிருந்தவள் கேட்டாள்.

“ஆமாம், நிச்சயமாகத்தான்” என்றாள் சிறுமி. உண்மையில் இது போல நிச்சயமில்லாமல் ஒருபோதும் அவள் இருந்ததில்லை.

காரை ஓட்டிக்கொண்டிருந்த பெண் பிரேக்கின் மீது காலை வைத்தாள். சிறுமியிடம் “உனக்காகத் திரும்பி வரமாட்டேன். புரிந்ததா?” என்றாள்.

“சரி” என்றாள் சிறுமி. திரும்பிப் பையை எடுப்பதற்காகத் துளாவினாள்.

காரை ஓட்டிக்கொண்டிருந்த பெண் அவளுடைய கையைத் தொட்டு “அது அங்கேயே இருக்கும்” என்றாள்.

சிறுமியால் தன் கண்களை நம்ப முடியவில்லை. “அங்கேயே இருக்கும் என்றால் என்ன சொல்லவருகிறீர்கள்? என்னுடைய பொருட்கள் எல்லாம் அதில் இருக்கின்றன.”

“சரிதான்” என்றாள் அந்தப் பெண்.

காரை ஓட்டாமலிருந்த பெண் மறுபடியும் தேம்பியழத் தொடங்கினாள். முன்பைவிடவும் உரத்த குரலில் தேம்பியழுதாள். ஒவ்வொரு முறை மூச்சு வாங்கியபோதும் தேம்பல் இன்னும் உரத்துக்கொண்டிருந்தது.

“சரி” என்று கத்தினாள் அடுத்தவள். “சரி, அவளை அவளுடைய பாழாய்ப்போன மூட்டையை எடுத்துக்கொள்ள விடு, யாருக்கென்ன?” என்றாள்.

இருக்கையின் பின்னாலிருந்த பையைச் சிறுமி பிரயத்தனப்பட்டு எடுத்தாள். காரை ஓட்டாமலிருந்த பெண் காரிலிருந்து இறங்குவதற்காகக் காத்திருந்தாள். அவளுக்குப் பின்னால் இறங்கினாள். “நன்றி” சொல்லிக்கொண்டே அவள் கையை நீட்டினாள். காரை ஓட்டாமலிருந்த பெண் அவளுடைய கையை உற்றுப் பார்த்துவிட்டு இன்னும் உரக்கத் தேம்பியழுதாள்.

ஓட்டுநர் இருக்கையிலிருந்த பெண் “உள்ளே வா” என்று கத்தினாள்.

காரை ஓட்டாமலிருந்த பெண் திரும்ப உட்காருவதற்குள் கார் புறப்பட்டது. அது தொலைவில் போனதைச் சிறுமி கவனித்துக்கொண்டிருந்தாள். அதன் விளக்குகள் சிறிதாகிச் சிறிதாகி மொத்தமாக மறைவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். எதிர்த்திசையில் திரும்பினாள். பையை முதுகில் போட்டுக்கொண்டாள். எங்கே போகிறோம் என் பதைத் தெரிந்தவள் போல நிச்சயமாக அடிவைத்து நகர்ந்தாள்.

3

சாலையையொட்டியிருந்த வாய்க்காலில் ஈரமான புற்களின் மேலிருந்து தாறுமாறாக எழுந்தாள் அவள். அங்கே எப்படி வந்தோம் என்று அவளுக்குத் தெரியவில்லை. இருட்டில் காலடிகள் தடுமாறியபோது பயம் தன்னை மேலும் மேலும் பீடித்தது அவளுக்கு நினைவு வந்தது. திரும்பவும் அந்த இரண்டு பெண்களுக்கும் நடுவில் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் கொடுத்திருக்கலாமென்றும் சிறு ஸ்பரிசம் ஒருபோதும் நோகடிக்காதென்றும் அவள் நினைத்தாள். ஆனால் அவள் தன்னுடைய மனத்தை மாற்றிக்கொள்வதற்குத் தாமதமாகியிருந்தது. ஏதாவது கார் கடந்துபோகலாம் என்ற நம்பிக்கையில் அவள் நடக்கலாம். அதையும் அவள் சந்தேகப்படத் தொடங்கினாள். அதற்கிடையில் அவளைச் சுற்றிக் கேட்டுக்கொண்டிருந்த இரவின் ஓசைகளுக்கு அவள் பழக வேண்டியிருந்தது. கொஞ்ச நேரம் சாலையின் மறுபக்கத்தில் யாரோ நடந்துகொண்டிருந்ததாக அவள் நினைத்தாள். அவளுக்குப் பக்கத்தில் சில மரக்கிளைகள் உரசும் ஒலியைக் கேட்டுப் பயத்தில் வெருண்டு நின்றாள். நீண்ட நேரத்துக்குக் கிளைகளின் உரசல் கேட்டுக்கொண்டிருந்தது, ஆனால் அந்த ஒலி விலகிப் போய்க்கொண்டிருந்ததாக நம்பி நடக்கத் தொடங்கினாள். இரவுப் பறவைகளின் கலவையான ஓசைகளைக் கேட்க முடிந்தது. ஆனால் அதைப் பிரித்துச் சொல்ல அவளால் முடியவில்லை. அவளுடைய முகத்துக்கு முன்னால் பறந்த உயிரியைப் பறவையல்ல, வௌவால் என்று முடிவுசெய்தாள். நிச்சயமாக அது வௌவால்தான், பறவையல்ல. தானொரு வௌவாலாக இருந்தால் இருட்டில் வழியைக் கண்டுபிடிக்க முடியும் என்று முனகிக்கொண்டாள். அவளுடைய வெறுமை கசங்கிய உடைபோல அவளைப் பொதிந்தது. அந்தச் சமயத்தில் அவள் எதன் மீதோ இடறிச் சாலையருகில் உட்கார்ந்தாள். உறக்கம் வருவதாக உணர்ந்தாள். அவள் எழுந்து நின்று சுற்றிலும் பார்த்தாள். இன்னும் விடியாத பொழுது, பனிமூட்டம் வயல்கள்மீது சரிந்திருந்தது, மரங்களில் இலைகள் நடுங்கிக்கொண்டிருந்தன, சாலை ஈரமாக இருந்தது. தன்னுடைய கூந்தல் எப்படியிருக்கிறது என்று கற்பனைசெய்ய அவளுக்குத் தைரியமில்லை. தன்னுடைய ஒப்பனை கலைந்திருக்கும்; தான் கோரமாகத் தெரிவோம். பிறகு அவள் ஒரு மோட்டார் காரின் ஓசையைக் கேட்டாள். ஒரு காரைப் பார்த்தாள். தன்னுடைய இரண்டு கைகளையும் உயரத் தூக்கினாள். தன்னுடைய பிளவுஸ் ஜீன்ஸ் பேண்ட்டிலிருந்து இழுபட்டதை உணர்ந்தபடியே இது என்ன மாதியான சமிக்ஞை என்று ஆச்சரியப்பட்டாள். ஆனால் அதற்குள் கார் நின்று அதற்குள்ளிருந்து நரைத்த தலையும் நரைத்த மீசையும் கொண்ட மத்திய வயதான மனிதர் எட்டிப்பார்த்தார்.

“வெகு அதிகாலையிலேயே நாம் வெளியே வந்திருக்கிறோம், இல்லையா?” என்று கேட்டார் அந்த மனிதர்.

“அது நீண்ட கதை” என்றாள் சிறுமி.

“அது லியோன் போகும் வழி முழுக்கத் தீராமல் இருக்குமா? அல்லது குறைந்தபட்சம் நகர எல்லைக்குப் போய்ச் சேர்வது வரைக்குமாவது?”

“பிரச்சினையே இல்லை. அதை விடவும் அது நீளம். என்னுடைய கதைகள் எப்போதும் என் கட்டுப் பாட்டில்தான் இருக்கின்றன.”

“நல்லது” என்றார் அந்த மனிதர். அதன் பிறகே அவளை மேலும் கீழும் பார்த்தார். முதுகுப்பையைப் பின்னால் வைக்குமாறு அவளிடம் சொன்னார் அவர். அவள் அவருக்கு அருகில் உட்கார்ந்து சீட் பெல்ட்டைப் பொருத்திக்கொள்ளும் வரை காத்திருந்துவிட்டு ஓட்ட ஆரம்பித்தார். அவர் பொறுப்பாகக் காரைச் செலுத்தினார். ஒருவேளை, தேவையைவிடவும் குறைவான வேகத்தில். ஏனெனில் முதலாவதாகப் பனிமூட்டம் அடர்த்தியாக இருந்தது. பின்னர் அது மெலிந்து விலகியதும் வேகமாக ஓட்டினார். ஆனால் அப்போதும் பொறுப்புணர்வுடன் சிக்கலான போக்குவரத்துச் சூழல்களைத் தவிர்த்து ஓட்டினார். அதனால் சிறுமி தன்னுடைய கண்கள் மூடிக்கொள்வதை உணர்ந்தாள். நான் தூங்கிவிட்டால் அவர் என் ப்ளவுஸின் பொத்தான்களை அவிழ்ப்பாரோ என்று யோசித்தாள். அவருடைய உள்ளங்கை தன்னுடைய வயிற்றின் மேல் இருப்பதாகக் கற்பனைசெய்தாள். அது அவளைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அவள் தன்னையோ அவரையோ சோதிக்க விரும்பவில்லை.

“எப்படி இருக்கிறாய்? கடைசியில் எழுந்துவிட்டாய் இல்லையா?” என்று கேட்டார் அந்த மனிதர். “காட்டுக்குள் இரவைக் கழிப்பது ஒருவரது மனத்தின் ஒத்திசைவையும் உடலின் ஒத்திசைவையும் தொலைத்துவிடும்” என்றார்.

சிறுமி கண்களைத் தேய்த்துக்கொண்டாள். வீடுகளில் முன்புறத் தோற்றங்கள் அவர்களை வேகமாகக் கடந்துபோயின. தான் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டதை உணர்ந்தாள். அவள் குனிந்து தன்னுடைய பிளவுஸைப் பார்த்தாள். ஆனால் ஒரு பொத்தானும் அவிழ்க்கப்பட்டிருக்க வில்லை. கொஞ்சம் அதீதமாகவே செய்கிறோம் என்று உடனடியாக உணர்ந்துகொண்டே தன்னுடைய பெல்ட் பக்கிளைச் சோதித்தாள். ஒருமுறை, இரண்டுமுறை கொட்டாவி விட்டுக்கொண்டே “நாம் எங்கே இருக்கிறோம்?” என்று கேட்டாள்.

“லியோனில். வேறு எங்கே இருப்போம்!” என்றார் அந்த மனிதர். “லியோனுக்குப் போக வேண்டும் என்றுதானே கேட்டாய்? தவறாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நம்புகிறேன்”

“ஓ, இல்லை. நான் . . . அதாவது . . . ஆமாம். நான் லியோனுக்கு வரத்தான் விரும்பினேன். நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளவில்லை” என்று பதில் சொன்னாள் சிறுமி.

அந்த மனிதர் புன்னகைத்து விட்டுக் கேட்டார் “உன்னை எங்கே விட வேண்டும்?”

“என்னை விடுவதா? ஏன்?” என்று கேட்டாள் சிறுமி.

“நல்லது, நீ எங்கேயோ போகிறாய் என்று யூகிக்கிறேன். அங்கேயே உன்னைக் கொண்டு விடலாம் என்று நினைத்தேன்”

வெள்ளைக் கூடாரங்களின் சிறு தொகுப்பு சிறுமியின் பார்வையில் பட்டது. அவற்றில் பலவற்றிலும் வண்ணக் கொடிகள் பறந்துகொண்டிருந்தன. சில கூடாரங்கள் திறந்திருந்தன. அவற்றின் முன்னால் வெளியே ஆட்கள் திரண்டிருந்தார்கள். “இங்கேதான், இதுதான் நான் போக வேண்டிய இடம்” என்றாள் சிறுமி.

அந்த மனிதர் எதுவும் பேசவில்லை. காரை மெதுவாகச் செலுத்தினார். பிறகு நிறுத்தினார். சிறுமி வெளியில் இறங்கக் காத்திருந்தார். அவளுடைய முதுகுப்பையை எடுத்துக்கொடுத்தார். தனது வாலெட்டை வெளியில் எடுத்து ஒரு பிஸினஸ் கார்டைத் தேடிப் பிடித்து அதைச் சிறுமியிடம் கொடுத்தார். “நான் ஓர் அருங்காட்சியகத்தில் வேலை பார்க்கிறேன். நீ எந்த வேலைக்காக வந்தாயோ அதைப் பகலுணவுக்கு முன்பு முடித்துவிட்டால் என்னிடம் வரலாம். ஒருவேளை நாம் சேர்ந்து பகலுணவு சாப்பிடலாம்.” சிறுமி அந்த முகவரி அட்டையை வாசித்ததைக் கவனித்துப் புன்னகைத்தார். “அருங்காட்சியகம் இங்கேயிருந்து அதிக தூரமில்லை. யாரைக் கேட்டாலும் உனக்கு வழிகாட்டுவார்கள்” என்றார்.

4

சிறுமி அவருக்குக் கையசைத்து விட்டுப் பின்னால் நகர்ந்தாள். பிறகு கூடாரங்களை நோக்கித் திரும்பினாள். அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி அவளுக்கு எந்த யோசனையுமில்லை. காலை வெயிலில் கூடாரங்கள் பளபளத்தன. அங்கே எங்கேயோ சோகமான இசை ஒலித்துக்கொண்டிருந்தது. அவளுடைய காலணிகளைச் சுற்றிக் கூழாங் கற்கள் உருண்டன. தன்னுடைய தோற்றம் எப்படியிருக்கிறது என்று தனக்கே தெரியாமலிருப்பதாகப்பட்டதும் விரல்களைக் கூந்தலுக்குள் ஓடவிட்டாள். பாதுகாப்புப் பணியாளர்கள் சிலரைக் கடந்து கூடாரம் கூடாரமாக அலைந்தாள். ஒவ்வொரு கூடாரமும் ஒவ்வொரு நாட்டை அடையாளப்படுத்தியது. சீக்கிரமே அங்கிருந்த ஏதோ ஒரு விளக்கக் கையேட்டை எடுத்து வாசித்து அது ஒரு தூதரகப் பொருட்காட்சி என்பதையும் எல்லா நாடுகளும் அவற்றின் பொருளாதாரச் சாதனைகளையும் நாட்டுப்புறக் கலை, இசை, நடனம் உட்படக் கலாச்சாரச் சாதனைகளையும் காட்சிக்கு வைத்திருந்ததையும் தெரிந்துகொண்டாள். கையேட்டை வைத்துவிட்டுச் சிறுமி கூடாரங்களுக்கிடையில் தன்னுடைய உலாவைத் தொடர்ந்தாள். கூடாரங்கள் மூடிக்கிடந்ததையும் காற்றாடத் திறந்துகிடந்ததையும் வைத்து ஏதோ வகைமையில் அவற்றைத் தனித்துப் பார்க்க முயன்றாள். தேசியத் தனிக் கூறுக்கு ஏற்ப இந்த வகைமை இருக்கிறதா என்று பார்க்க முயன்றாள். ஆனால் விரைவிலேயே அப்படி வகைமைகள் இல்லை என்பதைப் பார்த்தாள். உதாரணமாக, குரொஷியக் கூடாரங்களும் செர்பியக் கூடாரங்களும் திறந்திருந்தபோது பல்கேரியக் கூடாரங்களும் கிரேக்கக் கூடாரங்களும் மூடியிருந்தன. அவை எல்லாமும், அவளுடைய புரிந்துகொள்ளலில் பிழையில்லையென்றால், ஒரே பால்கன் பிரதேசத்தைச் சேர்ந்தவை. அவள் செர்பியக் கூடாரத்துக்குள் சென்று மத்திய காலச் சுவரோவியங்களின் நகல்களைப் பார்த்தாள். அங்கே போடப்பட்டிருந்த மேஜைகள் ஒன்றில் உட்கார்ந்திருந்த இளைஞன், அவளுக்கு ஏதாவது கேட்க வேண்டியிருக்குமானால் பதில் சொல்லத் தயாராக இருந்ததைத் தெரிவிக்க மெதுவாக இருமினான்.

“எனக்குக் கேட்க எதுவுமில்லை” என்றாள் சிறுமி.

அவள் கழுத்தைப் பாதி மட்டும் திருப்பித் தோள்வழியாகப் பேசினாள். எனவே இளைஞனுக்கு அவள் பேசியது சரியாகக் கேட்கவில்லை. அவன் எழுந்து அவள் அருகே போனான். “நான் புரிந்துகொண்டது சரியென்றால் நீங்கள் ஏதோ கேட்க விரும்புகிறீர்கள், இல்லையா?” என்றான்.

IMG_8891_edited-1.jpg

சிறுமி திரும்பினாள். அந்த இளைஞனின் கண்கள் சுவரோவியத்திலிருக்கும் தேவதைகளில் ஒன்றின் கண்களைப் போலவே இருப்பதைக் கவனித்தாள். “இல்லை, எனக்குக் கேட்க கேள்விகள் எதுவுமில்லை என்றுதான் சொன்னேன்” என்று பதிலளித்தாள்.

இளைஞன் தோளைக் குலுக்கிச் சிரித்தான். “மன்னிக்க வேண்டும். அந்த இசையால் . . .” என்றான்.

உண்மைதான். வழியின் குறுக்காக இருந்த கூடாரங்கள் ஒன்றில் இசை முழங்கிக்கொண்டிருந்தது. அது என்ன வகையான இசை என்று சிறுமிக்குத் தெரியவில்லை. சீனாவைப் பற்றியும் கொரியாவைப் பற்றியும் இந்தோனேசியாவைப் பற்றியும் யோசித்தாள். கடைசியில் இசை முடிந்ததும் அதற்கு மேல் எதைப் பற்றியும் யோசிக்காமலிருந்தாள். அவள் திரும்பியபோது இளைஞன் மறுபடியும் அந்த மேஜையில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தாள். நிற்க யோசிக்காததுபோல அவள் வேகமாக அவனை நோக்கிப் போனாள். அவன் தன்னுடைய தேவதைக் கண்களால் அவளைப் பார்த்தான். “எனக்கும் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. அருங்காட்சியகம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டாள். “லியோன் நகரத்தின் வரைபடம் என்னிடம் இங்கே எங்கோ இருக்கிறது. உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று தன்னைச் சுற்றிப் பார்த்தான்.

“அது பக்கத்திலிருக்குமானால் என்னை அங்கே அழைத்துப் போக முடியுமா?” என்று கேட்டாள் சிறுமி.

மேஜை மேலிருந்தவற்றைப் புரட்டிக்கொண்டிருந்த இளைஞன் அதை நிறுத்தினான். தன்னுடைய கைகளையே, அவற்றிலிருந்து ஏதோ பதில் வரக் கூடுமென்பதுபோல ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான். பிறகு சட்டைப் பையிலிருந்து ஒரு கைப்பேசியை வெளியே எடுத்து எவருடைய எண்ணையோ டயல்செய்தான். தனக்குப் புரியாத மொழியில் இளைஞன் பேசிக்கொண்டிருந்தபோது அவள் செர்பிய மடாலயங்களைப் பற்றிய நூல்களின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தாள். இளைஞன் உரையாடலை முடித்து கைகளை நீட்டி முறித்தான். அவன் பேசிக்கொண்டிருந்த யாரோவை சிறுமிக்கும் தெரியும் என்பதுபோல “அவள் வந்தவுடன் நாம் போகலாம். நீங்களே பார்க்கலாம். அது மிகவும் பக்கத்தில்தான்” என்றான். “ஆனால் உங்களுக்கு நிச்சயமில்லை என்றால் மெனக்கெடுவதில் அர்த்தமில்லை. லியோனில் மக்கள் எளிதாகக் காணாமற்போகிறார்கள். எந்தத் தடயமும் இல்லாமல் மறைந்து விடுகிறார்கள்.”

5

அருங்காட்சியகத்துக்கு அருகில் வந்ததும் அந்த இளைஞன் திரும்பிப் போகத் தயாரானான். சீக்கிரம் போக வேண்டும் என்றும் ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியத் தூதர்கள் செர்பியக் கூடாரத்துக்கு வரவிருப்பதாகவும் அவனை எதிர்ப்பார்த்துத் தூதரக அதிகாரி காத்திருப்பதாகவும் அரை மணிநேரத்துக்கு மேல் அவரால் இருக்க முடியாது என்றும் அந்த முற்றத்தைத் தாண்டினால் அவளாகவே அருங்காட்சியகத்தின் நுழை வாயிலுக்குப் போய்விடலாமென்றும் சொன்னான். சிறுமி வேறு ஏதோ கேட்க விரும்பினாள். ஆனால் அதற்குள் அவன் வேகமாக விலகி வந்து போய்க்கொண்டிருந்தவர்கள் மத்தியில் மறைந்து போனான். சிறுமி பைக்குள்ளிருந்து முகவரி அட்டையை எடுத்தாள். பணம் வசூலிக்கும் இடத்திலிருந்த நுழைவுச்சீட்டு விற்பவள் அவள் பார்க்க விரும்பிய நபரை அழைத்தபோது அங்கே மூலையில் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து காத்திருந்தாள்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு அங்கே தோன்றிய மனிதன், பணம் வசூலிக்கும் இடத்திலிருந்த நுழைவுச்சீட்டு விற்பவளிடம் போனான். அவள் சிறுமியைச் சைகையில் காட்டியதும் இவளை நோக்கி வந்து தான் எந்த வகையில் உதவ முடியுமென்று கேட்டான். அவன் அன்று காலையில் இவளை லியோனுக்குக் கொண்டுவந்தவனல்ல. சிறுமி அந்த முகவரி அட்டையை மறுபடியும் எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

“ஆமாம், இது நான்தான்” என்றான் அந்த மனிதன்.

“இல்லை. அது நீங்களல்ல” என்றாள் சிறுமி.

அறை அமைதியாக இருந்தது.

“நான் யார் என்று எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்” என்றான். அவனுடைய குரல் இணக்கமற்றதாகவும் கடினமானதாகவும் மாறியிருந்தது.

“பிறகு எப்படி உங்களுடைய முகவரி அட்டை எனக்குக் கிடைத்தது?” என்று கேட்டாள் சிறுமி.

“நானும் அதைப் பற்றித் தெரிந்துகொள்ளத்தான் ஆசைப்படுகிறேன்” என்றான் அவன். நுழைவுச்சீட்டு விற்பவளை நோக்கித் திரும்பி “இந்த முகவரி அட்டை எங்கேயிருந்து கிடைத்தது என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை” என்று கத்தினான். நுழைவுச்சீட்டு விற்பவள் பரிதாபத்துடன் தலையாட்டினாள்.

“காலையில் என்னை லியோனில் இறக்கிவிட்ட மனிதரிடமிருந்து அது கிடைத்தது” என்று சிறுமி பதில் சொன்னாள்.

“இன்று காலையில்தான் லியோனுக்கு வந்தாயா?” அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான். மறுபடியும் திரும்பி நுழைவுச்சீட்டு விற்பவளைப் பார்த்துக் கத்தினான். “நீ இதை நம்புகிறாயா? இவள் இன்று காலையில்தான் லியோனுக்கு வந்தாளாம்.” நுழைவுச்சீட்டு விற்பவள் மறுபடியும் பரிதாபத்துடன் தலையாட்டினாள்.

“இன்று காலையில்தான் லியோனுக்கு வந்தேன் என்பதில் என்ன ஆச்சரியமிருக்கிறது?” என்று கேட்டாள் சிறுமி.

“நீ இன்று காலையில்தான் இங்கே வந்திருக்கிறாய். இருந்தும் இந்த ஊரைச் சேர்ந்தவள்போலப் பேசுகிறாய். நம்ப முடியவில்லை. உன்னைச் சோதனையிட அனுமதிப்பாயா?” என்றான் அந்த மனிதன்.

“இல்லை. நான் போக வேண்டும்” என்றாள் சிறுமி.

“அவள் போக வேண்டுமாம்” என்று நுழைவுச்சீட்டு விற்பவளிடம் கத்தினான் அந்த மனிதன். நுழைவுச்சீட்டு விற்பவள் வெறுமனே விழித்துவிட்டுத் தன்னுடைய தொலைபேசியை எடுத்தாள்.

இதெல்லாம் எங்கே போய் முடியும் என்று சிறுமி சட்டென்று உணர்ந்தாள். திடுமென எழுந்து அந்த மனிதனை அவளுடைய எல்லா வலுவையும் பயன்படுத்தித் தன்னிடமிருந்து தள்ளிவிட்டாள். அவன் ஒரு கைவைத்த நாற்காலி மேல் தடுமாறி விழுந்தபோது வெளியே ஓடினாள். முற்றத்தில் யாருமில்லை. நிறையப் பசுந்தாவரங்களும் நிழல்களும் மட்டுமே இருந்தன. நுழைவாசலில் கிடந்த பெஞ்சில் பழைய கால்பந்து மட்டுமே இருந்தது. சிறுமி நிற்காமல் போய்க்கொண்டிருந்தாள். தெருவில் ஓடி, வலப்புறமாகத் திரும்பி, செர்பியத் தூதரகத்திலிருந்து வந்த இளைஞன் போன வழியில் விலகி ஓடி, இடப் புறமிருந்த முதல் தெருவுக்குள் திரும்பிப் பிறகு வலப்புறமாகத் திரும்பி மறுபடியும் இடப்புறமாகத் திரும்பி வழிதவறியதாகத் தோன்றும் வரை ஓடினாள். பிறகு ஒரு சிறிய சதுக்கத்தை அடைந்தாள். உட்கார வேண்டும் என்று நினைத்தாள்.

6

சிறிய சதுக்கத்திலிருந்த உணவு விடுதியின் மேஜையில் உட்கார்ந்திருந்தாள் சிறுமி. தேவாலய மணிகளின் கூட்டிசை அவ்வப்போது அவளை வந்தடைந்துகொண்டிருந்தது. ஆனால் முதலாவது மணியோசையிலிருந்து எண்ண அவளால் ஒருபோதும் முடியவில்லை. எனவே நேரம் என்னவாக இருக்கும் என்றும் அவளால் யோசிக்க முடியவில்லை. சற்று முன்பு அவள் மூன்று மணியொலிப்புகளை எண்ணினாள். ஆனால் அப்படி எண்ணுவதற்கு முன்பே ஐந்து மணியொலிப்புகளை எண்ணிவிட்டிருந்தாள். அவள் கையை உயர்த்திப் பணியாளனை அழைத்தாள். ஆனால் கேட்டபோது அவனிடமும் கடிகாரம் இல்லாமலிருந்தது.

7

இரவு கவிந்தது. உண்மையில் இன்னும் பகலே தீராமலிருந்தபோது சட்டென்று இரவானது. ஒருவேளை லியோனில் இப்படித்தான் இரவு பதுங்கிக் காத்திருந்து எழுவதாக இருக்கலாம் என்று சிறுமி நினைத்தாள். அவன் உட்கார்ந்து மூன்றாவது எஸ்பிரஸ்ஸோ காப்பியை அருந்திக்கொண்டிருந்த இடத்திலிருந்து சதுக்கத்தைப் பார்க்க முடியவில்லை. இருள் அடர்த்தியாகவும் தொட்டுணரக்கூடியதாகவும் இருந்தது. எனவே அவள் முகத்தை அடிக்கடி துடைத்துக்கொண்டும் சிகையிலிருந்து இருட்டை எடுத்து வீசிக்கொண்டுமிருந்தாள். அவள் பணம் செலுத்த விரும்பினாள். ஆனால் நீண்ட நேரமாகப் பணியாளரைப் பார்க்க முடியவில்லை. எனவே அவள் எழுந்து உணவு விடுதியின் வாயிலைத் தேடினாள். அதற்கு முன்னால் அவள் பார்த்திராத கதவைக் கண்டாள். அதைத் திறந்து ஆட்கள் நிரம்பியிருந்த அறைக்குள் நுழைந்தாள். அவர்கள் மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குழுக்களாக நின்று ஒருவரையொருவர் கவனிக்காமல் ஆழ்ந்த உரையாடலில் மூழ்கியிருந்தார்கள். அவள் உள்ளே வந்ததைப் பார்த்த யாரோ பேச்சை நிறுத்தி அவளை உற்றுப்பார்த்தார்கள். சீக்கிரத்தில் எல்லாச் சிறு குழுக்களைச் சேர்ந்தவர்களும் அங்கே வந்து அமைதியாக அவளையே உற்றுப்பார்த்துக்கொண்டு நின்றார்கள். அவளுடைய காலடி ஓசை மட்டுமே அங்கே கேட்டுக்கொண்டிருந்தது. தான் எங்கே இருக்கிறோம் என்று அவள் யோசிக்கும்வரைக்கும் இது தொடர்ந்தது. தான் லியோனில் இருப்பதால் தனக்குச் சொற்பமே தெரிந்திருக்கிறது, விரைவில் தனக்கு எதுவுமே தெரியாமல் போய்விடும் என்று நினைத்தாள் அவள். அப்படியான நகரங்கள் இருக்கின்றன என்று நினைத்தாள். நீங்கள் வளர்ந்து பெரிதாகி ஏதோ ஒன்றாக மாறும் நகரங்களைப் போலல்லாத சில நகரங்களில் வீடுகளிலும் தெருக்களிலும் கரைந்து நீங்கள் காணாமற்போய்விடுகிறீர்கள். பிந்தைய சுபாவமுள்ள எந்த நகரத்தையும் - தன்னை அறிந்துகொண்ட ஒரு நகரத்தில் சுற்றித் திரிந்து ஒரு மூலையில் நிற்கும் தோற்றம் ஞாபகத் திரளில் இருந்தாலும்கூட - அவளால் நினைவுகூர முடியவில்லை. ஆனால் அவள் இப்போது லியோனில் இருக்கிறாள் அல்லது குறைந்தபட்சம் லியோனில் இருப்பதாக நம்பினாள். மற்ற எல்லாவற்றையும் அவள் மறந்துவிட வேண்டும். இதற்குள் ‘வெளியே’ என்று எழுதப்பட்டிருந்த இடுங்கிய வாசலுக்கு வந்து சேர்ந்திருந்தாள். கதவின் குமிழை அவள் நெருங்கியதும் அறை மறுபடியும் இரைச்சலால் நிரம்பியது. அதற்கு மேலும் அவளை யாரும் கவனிக்கவில்லை. அவளும் அவர்களைப் பார்க்கவில்லை. அவள் கதவைத் திறந்து வெளியே வந்து தனக்குப் பின்னால் அதை மூடிவிட்டுச் சுவரில் சாய்ந்து நின்றாள். வேறு எங்கிருந்தோ வருவதைக் கேட்பதுபோல அவளுடைய இதயம் துடித்துக்கொண்டிருந்தது. ஒருவழியாக வந்துசேர்ந்துவிட்டேன் என்று நினைத்தாள் சிறுமி. தரையில் தன்னுடைய கால்களுக்கிடையில் கசங்கிய ஓர் உறை கிடந்ததைக் கவனித்தாள். அதை எடுத்தாள். உறையின் மேல் இந்தச் சொற்கள் இருந்தன. ‘உனக்குத் தான் - சீக்கிரம் திற’. “நான் இங்கே இருப்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள். தனக்கு இடப்பக்கம் பார்த்தாள். வலப் பக்கம் பார்த்தாள். அவளுடைய கேள்விக்குப் பதிலளிக்க அங்கே யாரும் இல்லை. உறைக்குள் ஒரு துண்டுக் காகிதம் இருந்தது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. “நான் பேராலயத்தின் அருகில் உனக்காகக் காத்திருக்கிறேன்.”

8

அடுத்த நாள் காலை சிறுமி போலீஸ்காரன் ஒருவனிடம் “மன்னிக்கவும், பேராலயம் எங்கே இருக்கிறது?” என்று விசாரித்தாள்.

போலீஸ்காரன் அப்பட்டமான வியப்புடன் புருவங்களை உயர்த்தினான். பின்பு வானத்தை அண்ணாந்து பார்த்துச் சைகை காட்டினான்.

சிறுமி சிரித்தாள். “நான் சொர்க்கத்திலிருக்கும் பேராலயத்தைச் சொல்லவில்லை. இங்கே இந்த லியோன் நகரத்தில் பேராலயம் இருக்கிறதா என்று தான் கேட்க வந்தேன்” என்றாள்.

போலீஸ்காரன் ஒரு தீர்மானத்துக்கு வரும்வரைக்கும் தொடர்ந்து தலையால் சைகை செய்துகொண்டும் முகத்தில் அசைவுகளை உண்டு பண்ணிக்கொண்டும் இருந்தான். “சொர்க்கத்தில் அல்ல, அன்பே, இதோ இங்கே குன்றின் மேல், உச்சிக் குன்றில்” என்றான்.

சிறுமி நிமிர்ந்து பார்த்தாள். சரியாக, அவளுக்கு நேர் மேல்பக்கமாகக் குன்றின் மேல் பேராலயத்தைப் பார்க்க முடிந்தது. எம்பிக் குதித்தால் தொட்டுவிடலாம்போல அவ்வளவு அருகில் தெரிந்தது. பின்னர் செங்குத்தான பாதையிலும் படிகளிலும் ஏறியபோது அவள் மிகுந்த ஒத்திசைவும் அழகும் கொண்டு அவளுக்கு முன்னால் நீண்டு நீண்டு படிப்படியாகத் தொடுவானம் முழுவதையும் நிறைத்திருந்த பேராலயத்தையும் கடிதம் எழுதியவரையும் தன்னைத் தானேயும் குறிப்பாக லியோனையும் சபித்தாள்.

கடைசியாக அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்த சிறிதும் பெரிதுமான சுற்றுலாப் பயணிக் குழுக்களால் சூழப்பட்டிருந்த பேராலயத்தை அடைந்ததும் “சரி, இனி என்ன?” என்றும் கடிதம் எழுதியவரைத் தன்னால் அடையாளம் காண முடியுமா என்றும் யோசித்தாள் சிறுமி.

“மன்னியுங்கள், நான் பேராலயத்தின் முன்னால் நிற்பதுபோல ஒரு படமெடுத்துத் தருவீர்களா?” என்று இளைஞனொருவன் கேட்டான். காமிராவை அவள் முன்னால் நீட்டியபடி “எல்லாம் தயாராக இருக்கின்றன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்தப் பொத்தானை அழுத்துவது மட்டுந்தான்” என்றான்.

சிறுமி காமிராவைக் கையில் வாங்கிப் பார்த்துவிட்டு “இந்தப் பொத்தானா?” என்று கேட்டாள்.

“இல்லை, அடுத்தது” என்றான் இளைஞன்.

சிறுமி சுட்டுவிரலைப் பொத்தான் மீது வைத்து இளைஞன் போஸ் கொடுப்பதற்காகக் காத்திருந்து விட்டுக் காமிராவை அவனிருந்த திசையில் திருப்பி அவனைக் குறி பார்த்தாள். ஆனால் அவள் அந்தச் சின்னத் திரையில் பேராலயத்தை மட்டுமே கண்டாள். அந்த இளைஞன் படிகளில் நின்று இளித்துக்கொண்டிருந்தான். ஆனால் சிறுமி எவ்வளவு முயன்றும் அவனுடைய உருவம் பிம்பத்தில் பதியவில்லை.

“எடுத்துவிட்டீர்களா? நான் நகரலாமா?” அந்த இளைஞன் கேட்டான்.

head-of-a-young-girl-c-1878.jpg“நிச்சயம்” என்றாள் சிறுமி. காமிராவைச் சீக்கிரமாக அவனிடம் கொடுத்துவிட்டுப் போய்விட வேண்டும் என்று யோசித்துத் திரும்பினாள். அப்படிச் செய்தால் அவன் எதையும் கவனிக்காமலிருக்கலாம். அல்லது அவன் கவனிக்கும்போது தாமதமாகி விடலாம். இதைப் பற்றித் தான் ஏன் குற்ற உணர்வு கொள்ள வேண்டும் என்று அவளால் சொல்ல முடியவில்லை. ஆனால் அவள் ஏற்கனவே லியோன் நகரத்தாலும் அங்கே அவளுக்கு நேர்ந்துகொண்டிருந்தவற்றாலும் அலுத்துப்போயிருந்தாள். இவற்றிலிருந்து என்ன கதையை அவள் ஒன்றிணைக்க?

எதுவாக இருந்தாலும் அந்த இளைஞன் சிறுமி நினைத்ததைவிடச் சூட்டிகையானவனாக இருந்தான். காமிராவை வாங்கிய அந்த விநாடியே அதைக் கண்ணுக்கு நேராகப் பிடித்துச் சிறுமி எடுத்த படங்களைப் பார்த்தான். “அற்புதம், தொழில் முறைப் புகைப்படக்காரரைப் போலப் படமெடுத்திருக்கிறீர் கள். நாங்கள் அழகாக விழுந்திருக்கிறோம்” என்றான்.

சிறுமி அவனை நோக்கி மெதுவாக நடந்தாள். அந்தச் சின்னத் திரையைப் பார்த்தாள். அதில் ஏற்கனவே அவள் பார்த்த படிகளைத்தான் பார்த்தாள். அவற்றின் மேல் யாரும் நின்றிருக்கவில்லை. “சரி, நான் லியோனை விட்டுப் போவதற்கு இதுதான் சரியான நேரம்” என்று நினைத்தாள்.

“நான் நின்றிருந்த அதே இடத்திலோ வேறு இடத்திலோ நீங்கள் நிற்கும் படத்தை நான் எடுப்பதை விரும்புவீர்களா?” என்று கேட்டான் அந்த இளைஞன்.

“இல்லை, நான் வீட்டுக்குப் போக வேண்டும்” என்றாள் சிறுமி.

“நாங்கள் எல்லாரும்தான் வீட்டுக்குப் போக வேண்டும்” என்றான். “உண்மையில் அது பிரச்சினையல்ல. ஒரு நிமிடம், இல்லை அவ்வளவுகூட ஆகாது.”

மனிதர்கள் தன்னிடம் கெஞ்சுவதைச் சிறுமி விரும்பவில்லை. “நல்லது” என்று சொல்லிவிட்டுப் படிகளில் ஏறிப் போனாள். அந்த இளைஞன் சரியாக எங்கே நின்றிருந் தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எனவே ஆறாவது படியில் நிற்க முடிவுசெய்தாள்.

“அபாரம். நான் எங்கே நின்றுகொண்டிருந்தேனோ அதே இடம்” என்றான் இளைஞன்.

கையை முகத்துக்கு நேராக உயர்த்தியபடி “விநோதம், அதைப் பற்றித் தான் யோசித்துக்கொண்டிருந்தேன்” என்றாள் சிறுமி.

“தற்செயல்” என்றான் இளைஞன். சிறுமியை இலக்காக்கிக் காமிராவைப் பிடித்திருந்தான்.

“தற்செயல் என்று எதுவும் கிடையாது” என்று பதில் சொன்னாள் சிறுமி. “தற்செயல் என்று நம்புவது ஒருவரின் விருப்பம் மட்டுமே.”

இளைஞன் தோளைக் குலுக்கிக்கொண்டு தானும் அதை நம்புவதாகச் சொன்னான்.

“நானும் அப்படித்தான்” என்று சொல்லிவிட்டுச் சிறுமி வெட்கப்பட்டாள். தற்செயலை நம்புகிறவனாக இருந்தால் தனக்குச் செய்தி அனுப்பிய மனிதன் அவனாக இருக்க முடியாது. ஆனால் அவளாகவே யோசிப்பதை நிறுத்தினாள். நான் ஏன் மனிதன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். அது ஒரு பெண்ணாக இருக்கக் கூடாதா? அந்த இளைஞனின் காமிராவிலிருந்து ஒளிக்கீற்று பளிச்சிட்டபோது சிறுமி பேராலயத்தின் முன்னாலிருந்த தளத்தில் கூடிய பெண்களைப் பார்க்கத் தொடங்கியிருந்தாள்.

9

“நீ என்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாய்” என்றாள் சுண்டெலிச் சாயலுள்ள அந்தக் குட்டைப் பெண். அவள் சிறுமியை நோக்கி முதலில் ஒன்றாவது படி, பிறகு இரண்டாவது, பின்னர் மூன்றாவது என்று மெதுவாக இறங்கி வந்துகொண்டிருந்தாள். இரண்டாவது படியில் நின்றாள். பிறகு மூன்றாவது படிக்கு நகர்ந்தாள்.

படிகளில் யாருடனும் சேர்ந்து நிற்பதில், அதைவிடத் தனக்குப் பிடிக்காத நபருடன் நிற்பதில், சிறுமிக்கு விருப்பமில்லை. ஆனால் அவளாக ஒன்றோ இரண்டோ படிகள் இறங்கிப் போகவில்லையென்றால் குட்டைப் பெண் நெருங்கி வருவாள் என்று அவளுக்குத் தெரியும். சுண்டெலிகள் அப்படித்தான். அவற்றை நீங்கள் தடுத்து நிறுத்த முடியாது என்றும் யோசித்தாள். பிறகு “நான் உங்களை எதிர்பார்த்திருக்கவில்லை. நீங்கள்தான் எனக்காகக் காத்திருக்கிறீர்கள்” என்றாள்.

குட்டைப் பெண் நான்காவது படியில் இறங்கி நின்றாள். “என்னை நம்பு, யார் யாரை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பது பிரச்சினையே அல்ல” என்றாள். அப்போதுதான் குன்றேறிப் பேராலயத்துக்கு வந்தவள் போலச் சிரமப்பட்டு மூச்சுவிட்டுக்கொண்டு “யார் யாரைக் கண்டடைகிறார்கள் என்பதுதான் விஷயம்” என்றாள்.

“மேகங்களுக்குக் கொஞ்சமே கீழாக இந்த ஆகாயத்துக்கு அவ்வளவு தூரம் ஏறி வரவேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டாள் சிறுமி.

“நாம் மேகங்களிடமிருந்து வெகு தொலைவிலிருக்கிறோம். ஆகாயத்திலிருந்து இன்னும் அதிக தூரத்தில்” என்றாள் குட்டைப் பெண்.

அவள் வலது காலை உயர்த்தி ஆறாவது படியின் விளிம்பில் வைத்தாள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுமிக்கு வியர்ப்பதுபோலிருந்தது. இதைக் கவனிக்கக் கூடாது என்று தனக்குள்ளேயே யோசித்தாலும் நொடி நேரத்துக்குக் குட்டைப் பெண்ணின் காலை உற்றுப்பார்ப்பதைத் தடுக்க முடியவில்லை. “சரி, இப்போது என்ன? அவ்வளவு தானா?” என்று கேட்டாள்.

குட்டைப் பெண் ஒரு நொடி எதுவும் பேசாமலிருந்தாள். பின்னர் திடீரென்று ஐந்தாவது படிக்கு நகர்ந்து முகத்தை நிமிர்த்திச் சிறுமியைப் பார்த்து “என்னிடம் சைக்கிள் இருக்கிறது” என்றாள். அப்போது பளிச்சிட்ட ஒளி, எந்தத் தடயமும் இல்லாமல் மறைந்துபோன இளைஞனின் காமிராவிலிருந்து வந்ததல்ல என்று சிறுமி முடிவுசெய்தாள். படிகளில் நின்று தங்களுடைய பேச்சைக் கவனித்தபடியிருந்த பருமனான பெண் வைத்திருந்த காமிராவிலிருந்துதான் வந்திருந்தது. “லியோனில் எல்லாருக்கும் சைக்கிள் இருக்கிறது” என்றாள் அந்தப் பருமனான பெண்.

“உன்னை யார் கேட்டார்கள்” என்று சீறினாள் குட்டைப் பெண். “இந்த நிமிஷம் என் முன்னாலிருந்து தொலைந்து போ, இல்லையென்றால் உன் கண்களைப் பிடுங்கிவிடுவேன்.”

“என்னிடம் அப்படிப் பேச உனக்கு என்ன துணிச்சல்?” என்றாள் பருமனான பெண். “நான் நடுங்கிக்கொண்டிருக்கிறேன், அவளைக் கவனி” என்று சிறுமியைப் பார்த்துச் சொன்னாள். “அவள் மேல் ஏறி உட்கார்ந் தேனென்றால் எதுவும் மிஞ்சாது.”

“உனக்குத்தான் என்ன அதிருஷ்டம் . . . இவ்வளவு பெரிய குண்டி வாய்த்திருக்கிறதே?” என்றாள் குட்டைப் பெண்.

“குள்ளப் பிறவியே” என்று கூவினாள் பருத்தவள்.

“யானையே” என்று திருப்பியடித்தாள் குட்டைப் பெண்.

சிறுமியின் முதுகுக்குப் பின்னாலிருந்து “பெண்களே, பெண்களே, அமைதியாக இருங்கள். நம்முடைய விருந்தாளி நம்மைப் பற்றி என்ன நினைப்பாள்?” என்ற குரல் கேட்டது.

சிறுமி திரும்பியபோது போலீஸ் காரன் ஒருவனைப் பார்த்தாள். பேராலயம் எங்கேயிருக்கிறதென்று அவளுக்கு வழிகாட்டிய அதே போலீஸ்காரன். அல்லது அவர்கள் இருவரும் ஒரே நபரல்லவென்றாலும் இவன் அவனைப் போலத்தான் என்று நினைத்தாள் சிறுமி. எப்படியிருந்தாலும் ஒரு போலீஸ்காரனுக்கும் இன்னொரு போலீஸ்காரனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

“இல்லை. நீ நினைப்பது தவறு” என்றான் அவன். “எல்லாச் சீருடைகளும் அதை அணிபவர்களை ஒரே மாதியானவர்களாக ஆக்குகின்றன. சீருடைகளின் பயனே அதுதானே. ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களாகவோ மாறுபட்டவர்களாகவோ காதல், அன்பு, துக்கம் என்று வெவ் வேறான உணர்ச்சிகள் கொண்டவர்களாகவோ இல்லை என்பதல்ல” அவனுடைய குரல் நடுங்கத் தொடங்கியது. ஒரு விநாடி நிறுத்தினான். ஒரு கணத்துக்குப் பிறகு “உதாரணமாக, இன்று காலை என்னுடைய முயல் செத்துப்போய்விட்டது” என்றான்.

“என்ன பொறுக்க முடியாத அவமானம்” என்றாள் சிறுமி.

“பாவம் முயல்குட்டி” என்றாள் பருத்தவள்.

“வருத்தப்படுகிறேன்” என்றாள் குட்டைப் பெண்.

“அப்புறம், இனி நீங்கள் வேறொரு முயல்குட்டியை வாங்குவீர்கள் இல்லையா?” என்று கேட்டாள் சிறுமி.

போலீஸ்காரன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு “இப்போதா, அது ரொம்பச் சீக்கிரமாகிவிடும். முதலில் நான் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும். அந்த வலியைக் கடந்துவிட்டால் என்னால் எதார்த்தத்தைச் சமாளிக்க முடியும். அதற்குப் பிறகுதான் ஒரு வானம்பாடியை வாங்குவது பற்றித் தீர்மானிப்பேன்” என்றான்.

“ஓ, நானும்கூட எப்போதும் ஒரு வானம்பாடியை வாங்க விரும்பியிருக்கிறேன்” என்றாள் குட்டைப் பெண்.

“உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் இது ஒரு நல்ல யோசனை” என்றாள் பருமனான பெண்.

சிறுமி எதுவும் பேசவில்லை. பேராலயத்தின் முன்னால் நடக்கும் ஒவ்வொன்றும் அவளை எச்சரிக்கையாக இருக்கும்படி உணர்த்தின. சுருக்கமாகச் சொன்னால் அவளருகில் அப்போதுதான் தென்பட்ட அந்த மனிதர்களை அவளால் நம்ப முடியவில்லை. இவ்வளவு பெரிய குழுவினர் அவளை ஏன் ஒரு விளையாட்டில், மேலும் சொன்னால், அவளுக்கு விளங்காத ஒரு விளையாட்டில் இழுத்துவிடுகிறார்கள் என்று புரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் அவளுடைய நினைப்பை இந்தப் போலீஸ்காரன் ஒரு நொடிக்கு முன்னதாகவே படித்துவிடுகிறான், அதற்குப் பிறகு அவளால் எதையும் யோசிக்க முடிவதில்லை. அங்கேயிருந்து விலகி வேறு எங்காவது போகும்வரை வெற்றுக் கண்ணாடி போல இருக்க வேண்டியதாகிறது. கதைகளில் அப்படித்தான். அவை லியோனிலோ வேறு எங்காவதோ தொடங்கலாம். ஒரு நாய் தவ்வி நடந்து தன்னுடைய பிரதேசத்தை அடையாளப்படுத்துவதுபோலப் போகிற வழியெல்லாம் தடயங்களை விட்டுச் செல்லலாம். யாருக்குத் தெரியும், ஒரு நாள் கதை இந்த வழியாகத் திரும்பிவந்து, பழுத்த பழங்களை ஒருவன் பறித்துச் செல்வதுபோல, தான் கைவிட்டுச் சென்ற பகுதிகளை எடுத்துப் போகலாம். இதை யோசித்தபோது சிறுமி போலீஸ்காரனையும் பெண்களையும் பேச்சை நிறுத்தும்படி கையை உயர்த்தினாள்.

“இனி நீங்கள் அதிகம் பேச வேண்டாம். ஏனென்றால், அங்கே முயல் இல்லை. ஒருபோதும் முயல் இருந்ததில்லை” என்றாள்.

அந்தப் பெண்கள் அதிர்ச்சியடைந்தார்கள். போலீஸ்காரன் மறுத்துச் சொல்ல முயன்றான். ஆனால் சிறுமி பல்லைக் கடித்து விரலை ஆட்டிக்கொண்டு அவர்களை எச்சரித்தாள்.

“குழப்பத்துக்குக் காரணமே இல்லை. ஏனென்றால். வாழ்க்கை, அது நமக்கு மட்டுமே சொந்தமானது என்று தோன்றினாலும் அது வேறு யாராலோ சொல்லப்பட்ட கதை. அதனால்தான் நாம் இங்கே இந்தப் பேராலயத்தின் முன்னால் சந்தித்தோம். நம் ஒவ்வொருவருக்கும் நாம் பிரத்தியேகப் பாத்திரம் வகிக்கும் கதை இருக்கிறது. ஆனால் இந்தக் கதைகள் எல்லாம் வேறுபட்டவை. நாம் இங்கேயிருந்து வெளியேறிப் போய் நம்முடைய சொந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். நாம் நம்மைக் காண்கிற இந்தக் கதை தவறான கதை. ஒருவேளை கதை சொல்லியின் கவனக்குறைவால் நாம் இங்கே வந்திருக்கலாம். நாம் இப்போதே இங்கிருந்து போனால், அவசரமாக நகர்ந்தால் ஒருவேளை உண்மையில் நாம் எதற்குச் சொந்தமோ அதை அடைந்துவிடலாம். லியோனில் தொடங்கிய ஒரு கதை அங்கேயே முடிய வேண்டும் என்ற அவசியமில்லை. நிஜமான பேராலயங்கள் நமக்குள்ளே இருக்கின்றன வெளியே அல்ல” என்றாள் அந்தச் சிறுமி.

10

போலீஸ்காரனும் அந்தப் பெண்களும் போனதும் சிறுமி “நல்ல வேலை” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் தனக்கு ஏதாவது நிகழும்வரை பொறுமையாகக் காத்திருப்பது நல்லது என்று நினைத்தாள். நான் காத்திருப்பேன். இந்தக் கதை முடிவில் என்னவாகிறது? என்னவானாலும் அந்த முடிவு ஒரு சாதாரண முடிவாகத் தெரியாது. லியோனும் ஒரு சாதாரண நகரமல்லவே. அவள் அதைப் புரிந்துகொண்டபடி படிகளில் ஏறிப் பேராலயத்துக்குப் போகும் வழியைத் தேடினாள். அவளுடைய கால்கள் நடுங்கின. முகத்தில் வியர்வை வழிந்திறங்கியது. அவளுடைய தொண்டை உப்புத் தாள்போல வறண்டிருந்தது. அவளுக்கு லியோனைப் பிடிக்கவே இல்லை. ஆனால் பேராலயத்தை அடைந்து அதன் சுற்றுப் புறத்திலிருந்த தளத்தில் நின்று நகரத்தைப் பார்த்தபோது தனக்குப் பயமேற்படுத்தாத இருளில் ஒரு மரத் தடியில் அல்லது ஒரு பெஞ்சில் சுருண்டு என்றென்றைக்கும் அங்கேயே தங்கி விடக்கூடுமென்று நம்பினாள். ஒரு கதை பயப்படுவதேயில்லை என்று கதை நினைத்தது. விளக்கம் சொல்லப்படும்போதோ சரிவில் விரட்டப்படும் போதோ அது நடுங்கக்கூடும் என்று நினைத்தது. பின்னதைப் பொருத்தவரை நீண்ட ஏற்றத்துக்குப் பிறகு அந்தப் பொருத்தத்துக்கும் உண்மையான காரணம் இருப்பதில்லை. ஒரு பாதை கீழ்நோக்கி இட்டுச்செல்லும்போது எல்லாம் மிகவும் எளிதாகின்றன.

நன்றி: காலச்சுவடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.