Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேசம் துறந்த கலைஞன் : எம்.எப். ஹுசைன் - ஒரு வாழ்க்கைக் குறிப்பு - மோனிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசம் துறந்த கலைஞன் : எம்.எப். ஹுசைன் - ஒரு வாழ்க்கைக் குறிப்பு - மோனிகா

huss_1.jpg

“இந்தியாவின் பிக்காஸோ” என்று அழைக்கப்பட்ட எம்.எப்.ஹுசைன் தலைசிறந்த இந்திய நவீன ஓவியர் என்ற புகழை ஈட்டியிருந்தாலும், இந்தியாவில் மரணத்தை எதிர்கொள்ளவோ, இந்திய மண்ணில் புதைக்கப்படவோ சாத்தியமாகவில்லை என்பது தேசிய அவமானத்திற்குரிய ஒரு விஷயம். நாஜிக்களின் காலத்தில் வால்டர் பெஞ்சமின், ஜார்ஜ் கிராஸ்ச், பெர்டோல்ட் பிரெக்ட் உட்பட்ட பல கலைஞர்களும், அறிஞர்களும் ஜெர்மனியைவிட்டு வெளியேற நேர்ந்ததை நாம் அறிவோம். பங்களாதேசத்தைவிடுத்து தஸ்லிமா நசுரீனும் வெளியேற்றப்பட்டு வாழ்ந்து வருவதையும் நாம் அறிவோம். மத சகிப்புத்தன்மை பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியாவிலும் ஒரு கலைஞன் நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்தது நம்மை சிந்திக்கவைக்கவில்லை என்றால் நம் சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிட்டோம் என்றுதான் பொருள். இந்து நாளிதழைச் சேர்ந்த என்.ராம் 2006 ம் ஆண்டு யாருக்கும் தெரியாமல் ஹுசைனை விமான நிலையத்தில் வரவேற்று தனது இல்லத்தில் தங்கவைத்து பின் கோர்ட்டுக்கு கூட்டிச் சென்றதை நினைவு கூறுகிறார். இத்தகையதொரு நிலைக்கு ஹுசைனைத் தள்ளியது எது?

மகாராட்டிரத்தில் பிறந்து இந்தூரில் வளர்ந்த ஹுசைன் இந்த மண்ணைச் சார்ந்த மரபுகளுடன் இயைந்து வளரத்தொடங்கினார். இஸ்லாமியக் கோட்பாடுகளையும் குரானையும் மட்டும் கையிலெடுக்காமல் ராமாயண, மகாபாரதக் காட்சிகளை கித்தான்களில் வரித்தார். சிறுவயதிலேயே தனது தாயை இழந்த ஹுசைன் வறுமையின் காரணமாக ஓராண்டு மட்டுமே மும்பையில் உள்ள ஜே.ஜே. கல்லூரியில் ஒவியம் பயின்றார். பிறகு அதனைத் தொடரமுடியாமல் சினிமாவிற்கு போஸ்டர்களும் பேனர்களும் வரையத்தொடங்கினார்.

மேற்கு வங்கத்தில் தாகூரின் குடும்பத்தார் நவீன ஓவிய பிதாமகர்களாக வலம் வந்த காலம் அது. அவற்றிற்கு ஒரு மாற்று தேடுவதற்காக “முற்போக்கு ஓவியர்கள் குழுமம் ” என்ற ஒரு குழுமம் மூலம் நவீன ஓவியப் பாணிகளை அறிமுகப்படுத்தினர் ஹுசைனின் ஓவியக் கல்லூரி வகுப்புத்தோழர்களான எப்.என்.சூசாவும், ராசாவும். அவர்கள் ஹுசைனையும் தங்களது குழுவில் சேர்த்துக் கொள்ள அவரது ஓவியப்பயணம் ஆரம்பமாயிற்று. சூசா கோவாவைச் சார்ந்த ஒரு கிறித்துவர். ராசா காஷ்மீரத்தைச் சார்ந்தவர். இம்ப்ரஷனிசம், அரூப வெளிப்பாட்டியம் (அப்ஸ்ட்ரேக்ட் எக்ஸ்பிரஷனிஸம்) போன்றவற்றால் ஈர்க்கப்பட்டிருந்த அந்த குழு, ஐரோப்பாவின் இப்பாணிகளை ரஷ்யாவைச் சார்ந்த வாஸிலி காண்டிஸ்கி போன்றோர் எப்படிக் கையாண்டார்கள் என்பதையும் தெரிந்து வைத்திருந்தது. காண்டின்ஸ்கியையும் பிக்காசோவின் வீச்சையும் சேர்த்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார் ஹுசைன். தாந்த்ரீக வடிவங்களில் ஆர்வம் கொண்ட ராசா பாரம்பரிய வண்ணங்களைக் கொண்டு ஜியோமிதி டிசைன்களில் ஓவியம் தீட்டினார். சூசாவோ பாதி அரூப வெளிப்பாட்டிய முறையில் ஏசு கிறிஸ்துவையும் பெண் நிர்வாணங்களையும் கோட்டோவியமாகத் தீட்டினார். ஹுசைன் பிக்காசோவைப் போலவே மிகவும் கடினமான உருவங்களையும் காட்சிகளையும் எளிமைப்படுத்தி தனது ஓவிய முறையில் கோடுகளாலும் வண்ணங்களாலும் வரித்துவந்தார். அவரது அன்னை தெரசாவின் ஓவியம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. மஞ்சித் பாவா, கிருஷன் கண்ணா, ஆரா உள்ளிட்ட எழுவரைக் கொண்ட இந்த மும்பாய்க்குழு மிகவும் பிரசித்தி பெற்றது.

இதன் பிரதான உறுப்பினர் ஹூசைன் தனது ஓவியங்களில் காந்தியையும் சுதந்திர இந்தியாவின் எழுச்சியையும் வரைந்து அதன் மூலம் பிரசித்தி பெற்றார். தேசியக் கொடி எழுச்சியைக் காட்டும் குதிரை வெளிச்சத்தைக் காட்டுவதன் மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை உணர்த்தும் லாந்தர் விளக்கு (பிக்காஸோவின் குவர்னிகாவிலும் இந்த லாந்தர் விளக்கு மிகவும் முக்கிய பங்கு வகிப்பதைக் காணலாம்) போன்றவை ஹுசைனின் ஓவியத்தின் முக்கியக் கூறுகளாயின. 1946ல் பிரபலமடைந்த மும்பாய் முற்போக்கு ஓவியர் குழுமத்தின் மூல கர்த்தாக்களில் ராசா பாரிஸ் நகரிலும் சூசா அமெரிக்காவிலும் சென்று வாழத் தொடங்கிவிட்டனர். ஹுசைன் மட்டுமே இந்தியாவைவிட்டு எங்கும் செல்லாமல் இங்கேயே தங்கி வரையத் தொடங்கினார்.

ஓவியத்தைத் தாண்டி பற்பல பரீட்சார்த்த படைப்புகளில் ஈடுபட்டிருந்த அவர் “ஹுசைன் தோஷி குஃபா” (ஹுசைன் தோஷி குகை) என்ற பெயரில் குகை வடிவில் ஒரு கட்டிடம் அமைத்து அதனுள் ஒரு ஓவியக் கூடம் நடத்தினார் தனது ஒவியங்களைத் தாண்டிய செயல்பாடுகளின் மூலமும் கவனத்தை ஈர்ப்பவராகவே ஹூசைன் பல சந்தர்ப்பங்களில் விளங்கினார். எமெர்ஜென்ஸி காலத்தில் இந்திரா காந்தியை துர்க்கையாக சித்தரித்து பலரிடம் கெட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டார். சிறுவயது முதலே சினிமாவின்பால் இருந்த அவரது காதல் அவரை அந்திமக்காலத்தில் திரைப்படம் எடுக்கவைத்தது. கஜகாமினி, மீனாக்ஷி என்ற இரு திரைப்படங்களை உருவாக்கினார். அழகியல் ரீதியில் மட்டுமே அதிக அக்கறையுடன் எடுக்கப்பட்ட இந்த படங்கள் சாராம்ச ரீதியில் வலுவாக அமையாததால் அவை திரை விமர்சர்களின் பாராட்டுதல்களைப் பெறாமல் போயின. இந்தி நடிகையான மாதுரி தீக்சித்தின்பால் அவருக்கு இருந்த ஈர்ப்பின் காரணமாக மாதுரியை தனக்கு உற்சாகம் அளிக்கக் கூடிய மனம் கவர்ந்த படைப்புத்தேவதை (னீusமீ) என்று சொல்லிக் கொண்டார். அதன் காரணமாக மாதுரியை மட்டுமே வைத்து “கஜகாமினி வரிசை” ஓவியங்களைத் தீட்டினார்.

ஹுசைனை நேரில் பார்க்கும் வாய்ப்பு நியூயார்க்கில் எனக்குக் கிடைத்தது. 2007-இல் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.எப்.ஹுசைனின் மீனாக்ஷி படம் திரையிடப்பட்டது. படம் தொடங்குவதற்கு முன் பேசுவதாக இருந்த ஹுசைன் லண்டனிலிருந்து தனது விமானம் தாமதமானதன் காரணமாக திரைப்படம் முடிந்த பின்னரே வந்தார். நான் எதிர்ப்பார்த்த தொண்ணூற்றி இரண்டு வயது கிழவராக இல்லாமல் அறுபதுகளில் உள்ள ஒரு ஹிந்தி பட நடிகனைப்போல் நிமிர்ந்த தோள்களும் கம்பீரமுமாக வெள்ளை நிற சஃபாரி உடையணிந்து அரங்கிற்குள் நுழைந்தார் ஹுசைன். பார்வையாளர்கள் தமது கேள்விகளை முன் வைத்தபோது ஒரு பெண் நண்பர், “உங்களுக்கு உற்சாகமளிப்பவர்கள் என்று சொல்லிக் கொண்டு நீங்கள் சினிமா நடிகைகளை காட்சிப்பொருளாக்கிப் பயன்படுத்துவது நியாயமா?” என்று கேட்டார். அதற்கு ஹுசைன், “நானா அவர்களைப் பயன்படுத்துகிறேன்? நான் கொடுக்கக்கூடிய பணத்திற்கு யார் வேண்டுமானாலும் நடிக்கத் தயாராக இருப்பார்கள்” என்று கொஞ்சம் அலட்சியமாகவே கூறியது எனக்கு உவப்பாக இருக்கவில்லை.

ஹுசைனின் பின்னாளைய பிரபலத்திற்கு காரணம் அவரது ஓவிய முறை என்பதைக் காட்டிலும் அதனை மையப்படுத்தி பாசிச சக்திகள் உருவாக்கிய சர்ச்சைகள் எனக் கொள்ளலாம். சமீபத்தில் காலமான ஹுசைனின் நண்பரான தாயிப் மெஹதாவின் மகிஷாசுர மர்த்தினி ஓவியம் பல கோடி ரூபாய்களுக்கு விற்றது. தாயிப் மெஹ்தாவின் மர்த்தினி மாட்டுடன் சண்டையிடுவது போலல்லாமல் காதல் கொள்வதுபோன்று தோற்றமளிப்பதுடன் நிர்வாணமாகவும் காட்சியளிப்பது யாருடைய கண்களிலும் உருத்தலைத் தோற்றுவிக்கவில்லை. அதே போன்று ஹுசைனின் சமகாலத்தவரான கே.ஜி.சுப்பிரமணியத்தின் துர்க்கை ஓவியங்களும் கடவுளின் நிர்வாணக் காட்சியை பார்வையாளர்கள் முன் வைத்தன. அந்த ஓவியங்களும் யாரையும் தொந்திரவு செய்யவில்லை என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அதுவரை யதார்த்த மனித உருவம் கொடுக்கப்படாத கடவுளர்களுக்கு மனித உருவம் கொடுத்த ரவிவர்மா ஐரோப்பிய நிலவமைப்புகளை பின்புலமாகக் கொண்டு மேட்டுக்குடி பெண்களை மாடல்களாகக் கொண்ட தெய்வங்களை வரைந்தது யதார்த்தமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. கலம் காரி, சுவரோவியங்களின் நாட்டுப்புறபாணியில் ரவிவர்மாவின் தெய்வங்கள் அமையவில்லை. இதனால் தெய்வங்களைச் சித்தரிப்பதில் நம்முடைய மரபுகள் என்ன என்பது காலண்டர் ஓவியங்களை மட்டுமே அறிந்த தலைமுறையினருக்கு பரிச்சயமின்றிப் போனது. பாதாமியில் உள்ள சாளுக்கியர் காலத்து லஜ்ஜா கெளரி என்ற சிற்பம் நிர்வாணமாக நம் முன் குத்துக்காலிட்டுக் கொண்டு தனது தொடைகளிடையே யோனியை விரித்துக்காட்டி அதனால் வெட்கமடைந்து ஒரு தாமரைப்பூவால் முகத்தைப் போர்த்திக் கொள்கிறது. இப்படிப்பட்ட ஒரு மரபில் ஹுசைனுடைய சரஸ்வதி ஓவியம் மட்டும் எப்படி மக்களை ஆத்திரமடையச் செய்திருக்க முடியும்?

இங்கு கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் ஓவியம் அல்லது கலை மரபுகள் பற்றி எந்த அக்கறையுமற்ற பாமர மனநிலையில் அரசியல் உள்நோக்குடன் வரைந்தவரது மத அடையாளத்தை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கேவலமான சூழ்ச்சிதான் ஹுசைனுக்கு எதிரான இந்துத்துவ கும்பலின் போராட்டம். ஹுசைனாகிய இஸ்லாமியர் இந்துக் கடவுளரை எப்படி நிர்வாணமாக வரையலாம் என்பதுதான் கேள்வியே தவிர கேள்வி இங்கு இந்துக் கடவுளர் எப்படியெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர், இலக்கியத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளனர் என்பதல்ல அக்கறை. அரசியல் ஆதாயம் இருக்குமாயின் இவற்றை எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் போட்டுக் கொள்ளலாம்.

சமீபத்தில் பரோடாவில் நடந்த ஒரு நிகழ்வு இந்தியாவில் பாசிசப் போக்கு ஹுசைனுடன் நிற்கப்போவதில்லை என்பதற்கு மேலுமொரு சான்று. 2007ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி பரோடாவைச் சார்ந்த சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தின் ஓவியக் கல்லூரியில் முதுகலை மாணவர்களின் செய்முறைத் தேர்வினை (ஜீக்ஷீணீநீtவீநீணீறீ மீஜ்ணீனீ) ஒட்டிய ஒரு கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் தங்களது இரண்டாண்டுப் படைப்புகளை கண்காட்சியாக வைத்திருந்தனர். சமீபத்தில் பிரபலமான ஃப்ளெக்ஸ் பிரிண்ட் எனப்படும் ப்ளாஸ்டிக் பிரிண்டிங் முறையில் சந்திரமோகன் என்ற மாணவர் துர்க்கையை அன்னையாகக் கருதி அவளது யோனியிலிருந்து தான் வெளிவருவது போன்ற ஒரு ஓவியத்தைத் தீட்டியிருந்தார். அந்த வழியாகச் சென்ற தேர்தலில் போட்டியிடப்போகும் ஒரு இந்துத்துவ அடிப்படைவாதிக்கு இதனைப் பார்த்ததும் இதைக் கொண்டு அரசியலில் பிரபலமடைவதற்கான ஒரு யுக்தி தோன்றியது. அடுத்த அரைமணி நேரத்தில் அடியாட்களுடன் அப் பிராந்தியத்தின் நிருபர்கள் சூழ அவர் “இந்துத்துவத்தை அவமானப்படுத்தியவன் ஒழிக!” என்று கோஷமிட்டவாறு கல்லூரிக்குள் புகுந்ததுடன் அந்த மாணவரைத் தாக்கவும் செய்துவிட்டார். கல்லூரியின் கடைசி வேலை நாள் அது. என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் போலீசும் வளாகத்திற்குள் வந்து மாணவனைக் கைது செய்து சென்றுவிட்டது. இதன் பின் அப்போது கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றிருந்த சிவாஜி பணிக்கர் தனது அனுமதியில்லாமல் உள் நுழைவு செய்தமைக்காக போலீஸ் ஸ்டேஷனில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய முற்பட்டார். மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்று திரண்டு வளாகத்தின் உள்ளே முன் அனுமதியின்றி நுழைந்ததைக் கண்டித்து “ட்ரெஸ் பாஸிங்” வழக்கு பதிவு செய்வதற்கான எப்.ஐ.ஆர் போடுவதற்காக இரவு முழுவதும் உட்கார்ந்திருந்தும் காவல் நிலையத்தில் அது பதிவு செய்யப்படவில்லை. மறுநாள் பல்வேறுபட்ட வகைகளில் கலைக்கும், நிர்வாணத்திற்கும் பண்டுபட்டு வந்த தொடர்புகளைக் குறித்து பல விளக்கங்கள் கல்லூரி ஆசிரியர்கள் தரப்பிலிருந்தும் கலைப்பிரிவு மாணவர்கள் தரப்பிலிருந்தும் கொடுக்கப்பட்டன. கஜுரஹோ, சூரியனார் கோயில் போன்ற நமது சரித்திரப் புகழ் வாய்ந்த கோயில்களில் காணப்படும் நிர்வாண/ ஆண்பெண் உறவைக் குறிக்கக்கூடிய சிற்பங்களின் புகைப்படங்கள் கொண்ட ஒரு புகைப்படக் கண்காட்சிக்கும் வழிவகை செய்யப்பட்டது. அதனையடுத்து கல்லூரி முதல்வர் சிவாஜி பணிக்கர் வேலையிலிருந்து தற்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் அவர் அக்கண்காட்சிக்கு மன்னிப்புக் கேட்கும் வரை கல்லூரி வளாகத்திற்கு உள்வரக் கூட அனுமதி மறுக்கப்பட்டார். எல்லோர் முன்னிலையிலும் தனது கண்காட்சிக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமெனப் பணிக்கப்பட்ட சிவாஜி பணிக்கர் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் தனது பணி நீக்கக் கோரிக்கையை அளித்துவிட்டார். மூன்று வருடங்கள் இழுத்து அடித்ததன் பிறகு சென்ற மாதம் அவரது பணிநீக்கக் கோரிக்கையை அங்கீகரித்தது கல்லூரி அதிகாரவட்டம்.

மேற்கண்ட நிகழ்வை ஹுசைனின் வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒரு நிகழ்வாகத்தான் நான் பார்க்கிறேன். நிர்வாணம் என்பது நமது கோயில்களில் ஒன்றிப்போன அம்சம். பாரம்பரியத்தை கையிலெடுப்பதாகக் கூறிக்கொண்டு விக்டோரிய நெறிமுறைகளை மனதிலிட்டுக் கொக்கரிக்கும் இந்துத்துவ பாஸிசம், நமது கலை பாரம்பரியத்தின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஒரு கும்பல் மூலம் படைப்புலகத்தை ஆட்டிப்படைக்கிறது இதில் அடங்கியுள்ள அரசியலை புரிந்துகொள்ளுமளவு நம் வெகுஜன மனநிலை தயாராகவில்லை என்பதே நாம் சந்திக்கும் ஆபத்து. நாம் பாரம்பர்யத்தை விசாரணையின்றி தொடரவேண்டியதில்லை. ஆனால் கலாபூர்வமான செயல்பாடு என்பது அந்த விசாரணையின் பகுதி என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

1935ல் தொடங்கி எழுபத்தியாறு வருடங்கள் ஓவியராக வாழ்ந்த சகாப்தம் ஹுசைனுடைய சகாப்தம். அவர் வரையத் தொடங்கி 61 வருடங்களுக்குப் பிறகு சரஸ்வதி படத்திற்காக 1996ம் ஆண்டு விமர்சிக்கப் பெறுகிறார் ஹுசைன். கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஹுசைனால் 1970 ஆண்டு நிர்வாணமாக வரையப்பட்ட இந்துக் கடவுள்களின் தொகுப்பை வெளியிடுகிறது விசார் மிமாஸா என்ற இந்துப் பாசிஸப் பத்திரிக்கை. “ஹுசைன் ஒரு ஓவியரா இல்லை கசாப்புக் கடைக்காரரா?” என்று தலைப்பிடப்பட்ட அந்த கட்டுரை ஹுசைனின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. அதற்கு முன் 1955ல் அவர் பெற்ற பத்மஸ்ரீ, 73ல் பெற்ற பத்மபூஷன், 91ல் பெற்ற பத்மவிபூஷன் என்னும் எல்லா பட்டங்களையும் தாண்டி ஒரு இந்துத்துவப் பத்திரிக்கையின் அவதூறு அவரை நாட்டைவிட்டு தூக்கியெறியச் செய்யும் சக்தி கொள்கிறது. அதன்பின் 98ல் அவரது வீட்டில் புகுந்து ஒவியங்களையும் பொருட்களையும் நாசப் படுத்திச் செல்கிறது ஒரு இந்து வெறியர் கும்பல். பஜ்ரங்தள் உறுப்பினர்களால் அவரது ஹுசைன் தோஷி குகை உடைத்து நொறுக்கப்பட்டு அதனுள் இருந்த விநாயகர், ஹனுமான், புத்தர் போன்ற ஓவியங்கள் கிழித்தெறியப்பட்டன.

அதுமட்டுமல்லாது எட்டு கிரிமினல் வழக்குகளும் அவர் மீது பதிவு செய்யப்படுகின்றன. 2004ல் மதங்களிடையே பகைமையை வளர்க்கும் ஓவியம் அவருடையது என்ற குற்றச்சாட்டை தில்லி உயர் நீதி மன்றம் மறுத்துவிடுகிறது. மற்றொருபுறம் அதே ஆண்டு ஒரு தொழிலதிபர் 100 கோடிக்கு நூறு படங்கள் என்ற அடிப்படையில் நூறு படங்கள் வரைந்து தரச்சொல்லி ஹுசைனுடன் ஒப்பந்தம் போடுகிறார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியா டுடே ஹுசைனின் நிர்வாண பாரத மாதாவும் அதன் மீது எழுதப்பட்டிருக்கும் மாநிலங்களின் பெயர்களைக் கொண்ட ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறது. இதனைத் தொடர்ந்து போடப்பட்ட மான நஷ்ட வழக்குகளைக் கண்டு மனம் நொந்துபோன ஹுசைன் நான்கு வருடங்களுக்குப் பின் இந்தியாவை விடுத்து கதாரின் குடிமகனாக நாடு பெயர்கிறார்.

ஜூன் ஒன்பதாம் தேதி மரணமடைந்த ஹுசைனின் மரணத்தினால் மிகுந்த அவமானத்திற்கு ஆளாகிறது ஜனநாயக இந்தியா. எழுபதாம் வருடம் ஹுசைனால் வரையப்பட்ட கடவுளர்களின் நிர்வாண ஓவியங்கள் 96ம் வருடம் முக்கியத்துவம் பெறுவது எப்படி? 1992 ம் ஆண்டு நடந்த பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் உள்ள இந்தியா அதற்கு முன் இருந்த இந்தியாவைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது என்னும் உண்மை இதனால் விளங்குகிறது. சுதந்திரப் போராட்டத்தைக் குறித்த ஓவியங்களிலும் இந்து கடவுளர் ஓவியங்களிலும் தனது முத்திரையைப் பதித்துவந்த ஹுசைனின் தனிநபர் அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டிய நிலை 92 ம் ஆண்டுக்கு முன்னர் இல்லவே இல்லை. ஆனால், பாபர் மசூதிக்குப் பின்னுள்ள இந்தியாவில் கிரிக்கெட் ஆட்டக்காரர் முதல் ஹிந்திப் பட கதாநாயகன் வரை எல்லாரையும் இந்து முஸ்லிம் என்று இனம் பிரித்துப் பார்க்கவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுவிட்டதென்பதுதான் உண்மை.

நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய மற்றொன்று இந்து இறைவடிவங்களுக்கு ஒப்பானதாக, அவற்றுள் ஒன்றாக தேசிய உருவகமான பாரத மாதா என்ற பிம்பம் இந்த இருபது ஆண்டுகளில் ஒரு புது வடிவம் கொண்டிருப்பது. சரஸ்வதி போன்ற இந்து தெய்வங்களுக்கு அன்னியராக கருதப்பட்ட ஹூசைன், அவர் குடிமகனாக விளங்கிய தேசத்தின் உருவகத்திற்கும் அன்னியராகவும் அதை அவமதிக்கத் துணிபவராகவும் கருதுவது சாத்தியமாகியது. நிர்வாணம் என்பது புனித நிலையின் குறியீடாக புரிந்துகொள்ளப்படாமல் அவமானகரமானதாகப் புறிந்துகொள்ளூம் மனநிலை கவின்கலைகளுக்கு முற்றிலும் புறம்பானது. ஒரு தனிமனிதனாக ஹுசைன் என்ற கலைஞன் மனித ஆசா பாசங்களுக்கு உட்பட்ட ஒருவர்தான். அவரது பின்னாளைய வணிக ரீதியான வெற்றியும், ஓவியச்சந்தை அவரை பிம்பத்தை ஊதிப்பெருக்கியதும் சக ஓவியர்களையே அவர் மீது விமர்சனம் கொள்ளச் செய்ததும் உண்மைதான். ஆனால் அவரது கலைச்செயல்பாடுகளை விமர்சனம் செய்வதை அவரது கலை வெளிப்பாட்டிற்கான உரிமையை பாதுகாப்பதிலிருந்து வேறுபடுத்திக் காணவேண்டும் என்ற முதிர்ச்சி நம் சமூகத்தில் அபூர்வமாகத்தான் வெளிப்படுகிறது. நடைமுறை அரசியல் பற்றிய கவனமோ, அது குறித்த தேர்ந்த பார்வைகளோ இல்லாத ஹூசைன் பலவிதங்களில் நமது விமர்சனத்திற்குரியவரானாலும், ஒரு முக்கிய இந்திய கலைஞனை இந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தியது இன்றைய இந்தியாவின் அவலநிலை என்பதை நாம் குற்றவுணர்வுடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

http://www.pudhuvisai.com/2011/10/blog-post_13.html

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாணம் என்பது புனித நிலையின் குறியீடாக புரிந்துகொள்ளப்படாமல் அவமானகரமானதாகப் புறிந்துகொள்ளூம் மனநிலை கவின்கலைகளுக்கு முற்றிலும் புறம்பானது. ஒரு தனிமனிதனாக ஹுசைன் என்ற கலைஞன் மனித ஆசா பாசங்களுக்கு உட்பட்ட ஒருவர்தான். அவரது பின்னாளைய வணிக ரீதியான வெற்றியும், ஓவியச்சந்தை அவரை பிம்பத்தை ஊதிப்பெருக்கியதும் சக ஓவியர்களையே அவர் மீது விமர்சனம் கொள்ளச் செய்ததும் உண்மைதான். ஆனால் அவரது கலைச்செயல்பாடுகளை விமர்சனம் செய்வதை அவரது கலை வெளிப்பாட்டிற்கான உரிமையை பாதுகாப்பதிலிருந்து வேறுபடுத்திக் காணவேண்டும் என்ற முதிர்ச்சி நம் சமூகத்தில் அபூர்வமாகத்தான் வெளிப்படுகிறது. நடைமுறை அரசியல் பற்றிய கவனமோ, அது குறித்த தேர்ந்த பார்வைகளோ இல்லாத ஹூசைன் பலவிதங்களில் நமது விமர்சனத்திற்குரியவரானாலும், ஒரு முக்கிய இந்திய கலைஞனை இந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தியது இன்றைய இந்தியாவின் அவலநிலை என்பதை நாம் குற்றவுணர்வுடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நன்றி கிருபன் அண்ணா பகிர்விற்க்கு...

Edited by சுபேஸ்

சிறந்த ஓவியர். வரைந்த சில ஓவியங்கள் சர்ச்சைகளுக்கு உள்ளாகி

புறக்கணிக்கப்பட்டார்.

அந்த ஓவியங்கள் சரி பிழை என்பதற்கப்பால் ஒரு கலைஞன் வயோதிப காலத்தில் பிறந்த நாட்டை துறந்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டது காந்திய தேசத்திற்கு சிறு இழுக்கே.

http://www.mfhussain...ingsofmfhussain

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

ஹுசைன் எவ்வளவு பெரிய ஓவியராக இருந்தாலும்....

இந்துக்கடவுள்களை கேலியாக வரைவதை தவிர்த்திருக்க வேண்டும்.

நான் இந்துவாக, இருந்து கொண்டு... அல்லாவை கேலியாக வரைவதை இஸ்லாமியம் ஏற்குமா?

சில வருடங்களுக்கு முன்பு, நெதர்லாந்து பத்திரிகையாளர் அல்லாவை கேலிச்சித்திரமாக வரைந்ததற்கு முழு இஸ்லாமிய நாடுகளும், உலகத்தையே... வெருட்டின. இஸ்லாமியர் மற்றவர்களை கேலி பண்ணலாம், மற்றவர்கள் இஸ்லாமியர்களை கேலி பண்ணக் கூடாது என்பது, எந்த ஊர் நியாயம். ஹூசைனுக்கு, இந்து மதத்தை கேலி பண்ண விருப்பம் இருந்திருந்தால்... முதலில் அவர் இந்துவாக மாறி, பின்பு கேலி பண்ணியிருக்கலாம். "நெற்றிக் கண் திறப்பினும், குற்றம் குற்றமே"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.