Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராஜதந்திர நகர்வே தமிழர்களுக்கு இன்று தேவை

Featured Replies

இராஜதந்திர நகர்வே தமிழர்களுக்கு இன்று தேவை

இலங்கையின் இன விவகாரத்திற்கான அண்மைக் காலப் பயணத்தில் ஏன் தோல்விகள் ஏற்பட்டன என்பது குறித்து நோர்வே மற்றும் இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து அறிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. நோர்வே தனது அறிக்கையை பகிரங்கப்டுத்தியுள்ளது.

நோர்வேயின் அறிக்கை சமாதான பயணத்தின் தோல்வி குறித்துப் பேசும் அதேவேளையில் தோல்விக்கு வழி சமைத்த சக்திகள் பற்றியும் குறிப்பிடுகின்றது.

குறிப்பாக இந்தியாவின் செல்வாக்கு சமாதான முயற்சிகள் உடைந்து போவதற்கு எவ்வாறு காரணமாகியது என்பது குறித்து விளக்குகின்றது.

உண்மையில் எதிரியின் எதிரி நண்பன் என்ற வகையில் இந்தியாவும் இலங்கையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான கூட்டினை அமைத்துக் கொண்டன. அதன் விளைவு விடுதலைப் புலிகள் மாத்திரம் அழிக்கப்படவில்லை. சமாதானத்திற்கான பயணம் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது. அதிகாரப் பரவலாக்கம் குறித்த அராங்கத்தின் இன்றைய போக்குகள் இதனைத் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன.

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் இத்தோல்வி குறித்து ஆராய்ந்த அதேவேளையில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கான வழிவகைகளைக் காண்பதை நோக்காகக் கொண்டதெனக் கூறப்பட்ட போதும் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படமாட்டாதென அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் “செத்துப் போன சமாதான சடலத்தை” கடந்த இரு வருடங்களாக அறுவை செய்து பார்த்ததின் பிரதிபலிப்பாக@வ இந்த அறிக்கைகள் உள்ளன. ஆனால் “சாகடிக்கப்பட்ட சமாதானம்” மீண்டும் உயிர் பெறுவதற்கான வழி வகைகளை காண்பதாக நோர்வேயின் “போஸ்ட் மோர்ட்டோம்” அமையவில்லை. அதே போல் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பெரிதாக அமைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களுக்கு இல்லை.

இன விவகாரத்திற்கான தீர்வு நோக்கிய பயணத்தில் தமிழ் மக்கள் நிறையவே தோல்விகளைச் சந்தித்துள்ளனர். ஆனால் அண்மைக்கால தோல்விக்காக தமிழ் மக்கள் கொடுத்த விலை அதிகம்.

தோல்வி என்பது விடுதலைப் புலிகளுக்கு என்று கூறப்பட்ட போதும் உண்மையில் தமிழ் மக்களே மீண்டும் ஒரு தோல்வியைச் சுமந்து நிற்கின்றனர். இந்த தோல்விகளுக்கு பரிகாரம் காணுவதாக நோர்வேயின் அறிக்கையோ, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையோ அமையப் போவதில்லை.

இந்த ஒரு பின்னணியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் அரச தரப்புடனான பேச்சுவார்த்தைக்கென மேசையில் அமர்ந்துள்ளது. இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியாக அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவதென அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் நான்கு தடவைகள் சந்தித்து பேசப் போவதாகவும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் அர்த்தமுள்ளதாக அமையுமா?

ஆக்கபூர்வமானதாக இருக்குமா? நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்குமா?

என்பதே தமிழ் மக்களின் கேள்விகளாக உள்ளன.

ஏற்கெனவே 12 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வெற்றிகரமாக வெறுங்கையுடன் கூட்டமைப்பினரை அனுப்பிய பெருமை அரச தரப்புக்குண்டு. அந்த வகையில் மீண்டும் தொடரும் பேச்சுவார்த்தைகள் எந்தத் திசையை நோக்கிப் போகும் என்பது குறித்து அனுமானிப்பது தமிழ் மக்களுக்கு அவ்வளவு ஒன்றும் பெரிய காயமில்லை.

சார்க் உச்சி மாநாட்டிற்கு மாலைதீவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி என்.டி..வி. தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் “அரசியல் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களுக்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அக்குழுவில் இடம் பெறவுள்ளோரின் பெயர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைக்கவில்லை” எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றத்தில் 23 அரசியல் கட்சிகள் அங்கம் வகிப்பதாகவும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண சிறப்பான இடம் நாடாளுமன்றம் என்பதால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க விரும்பியதாகவும், அரசாங்கம் எதிரணியும் ஒன்று சேர்ந்து தீர்வொன்றைத் தர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் கூற்றுப்படி தீர்வு நோக்கிய பயணத்தில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நாட உள்ளமை உறுதியாகின்றது.

மறுபுறம் அதிகாரப் பகிர்வு தொடர்பாக கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது இரு தோணிகளில் பயணிக்க விரும்புகிறது. ஒருபுறம் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை மறுபுறம் நாடாளுமன்றத் தெரிவுக்குழு. இந்தப் பயணத்தில் கூட்டமைப்பின் கை ஓங்குமா? தமிழ் மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமா? என்பது குறித்து தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு தெளிவுபடுத்தியாக வேண்டும்.

இன விவகாரத்திற்கான தீர்வில் அரசின்இரு வேறுபட்ட பயணங்கள் சாத்தியமா? என்பது குறித்தும் கூட்டமைப்பு சிந்திக்க வேண்டும்.

அதேவேளையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதை ஒரு ஆவணமாக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இழுத்துவிட நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கைக்கு ஒரு அங்கீகாரத்தைத் தேடிக் கொள்ள அரச தரப்பு முனைகின்றது. நாடாளுமன்றம் தமிழ் மக்களுக்கு எத்தகைய தீர்வினை வழங்கும் என்பதினை தமிழ் மக்கள் அறிவர். கடந்த கால அனுபவத்தைப் பொய்யாக்கும் வகையில் நாடாளுமன்றம் செயற்படுமாகவிருந்தால் அது வரலாறு படைத்ததாக அமையும்.

அரசாங்கம் இன விவகாரத்திற்கான தீர்வுக்கு தெரிவாக ஒரு புறம் கூட்டமைப்பிலும், மறுபுறம் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிலும் பயணிக்க முடியாது. ஒன்றில் தெரிவுக் குழுவா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையா என்பது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு தோல்வி குறித்து மரண விசாரணை நடத்திக் கொண்டிருக்க முடியாது.

அரசாங்கத்தைப் பொறுத்து இன விவகாரத்தை சர்வதேச அரங்கிலிருந்து பறித்தெடுத்து உள்நாட்டு விவகாரமாக்கி தனது நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப காய்களை நகர்த்துவதே திட்டமாகும்.

அதேவேளையில், அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் மனித உரிமை சபைக்கு வரவிருக்கும் போர்க் குற்றச் சாட்டுக்களை திசை திருப்புவதற்கும் கூட்டமைப்பின் பேச்சுத்துணை தேவைப்படுகிறது என்பதே உண்மையாகும். அத்துடன் கூட்டமைப்பினர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தின் பெறுபேறுகளை சிதறடிப்பதை நோக்கமாகக் கொண்டும் அரசாங்கம் காய்களை நகர்த்துகின்றது.

இதற்கு கூட்டமைப்பு துணைபோவதாக இருக்கக்கூடாது. தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கேற்ப நிகழ்ச்சி நிரலுக்கு அரசாங்கத்தைக் கொண்டு வருவதே கூட்டமைப்பின் பணியாக இருக்க வேண்டும்.

கூட்டமைப்பினரின் இந்தப் பயணம் கடினமானதென்பது தமிழ் மக்கள் அறிவர். ஆனால், தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள கூட்டமைப்பிற்கு இது தார்மீகக் கடமையாகும்.

மொத்தத்தில் உலகத்தின் வாயை அடைத்துவிட இலங்கை நினைக்கிறது, அதனை நோக்கி காய்களை நகர்த்தியும் வருகிறது. தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் இதனை எதிர் கொள்ளும் வகையில் வியூகங்களை வகுத்தாக வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் இன்னொரு தோல்வியைச் சந்திப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷை குறித்த பயணத்தில் 60 வருடங்களை இழந்துள்ளனர் முதல் 30 வருடங்கள் சிங்களத் தலைமைகளுடன் சேர்ந்திருந்து உரிமைகளைப் பெற்றுவிடலாம் என தமிழ்த் தலைமைத்துவங்கள் முயற்சித்தனர். பேசிப்பார்த்தனர். அஹிம்சை வழியில் போராடியும் பார்த்தனர். சிங்களத்தலைமைகள் பேச்சுவார்த்தையைப் புறம் தள்ளினர். ஒப்பந்தங்களை கிடப்பில் போட்டனர் அல்லது கிழித்து வீசினர்.காடையர்களை ஏவி தமிழர்களைத் தாக்கினர்.

இறுதியில் கடந்த 30 வருடங்களாக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினர். அவர்களும் “சமாதான பொறிக்குள்” அகப்பட்டு அழிக்கப்பட்டனர். தற்போது மூன்றாம் கட்ட நகர்வுக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைக்கான நகர்வு நுழைந்துள்ளது.

தமிழ் மக்களின் சாhர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்வார்த்தையில் இறங்கியுள்ளது. பேச்வார்த்தைப் பயணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவனத்துடன் முன்னெடுத்தாக வேண்டும். ஏனெனில், கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அரசாங்கமும் அதன் குழுவும் நிபுணத்துவம் வாய்ந்தவை. இதற்கேற்ற வகையில் கூட்டமைப்பு தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தமிழ் மக்களின் மூன்றாவது கட்ட நகர்வானது சாணக்கியத்துடனான இராஜதந்திர நகர்வுகளாகவே இருக்க வேண்டும்.

“கூட்டமைப்பு நிதானம் தவறிச் செயற்படின் அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிக்கத் தொடங்குவர். எந்த அறிக்கையும் வரலாம் , பேச்சுக்கள் நடக்கலாம்; அடிப்படைக் கொள்கைகளில் ஆட்டம் காண இடமளிக்காதீர்” என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்த கருத்தை இங்கு முன் வைத்து வலியுறுத்த விரும்புகின்றோம்.

சரியான நேரத்தில் அவரது கருத்து வெளிவந்துள்ளது. எனவே, கூட்டமைப்பு பேச்சுவார்த்தை மேசையில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். நிபுணத்துவம் பெற்றவர்களை உள் வாங்கிக் கொள்ளவேண்டும். பேச்வார்த்தையை முன்னெடுக்க ஏதுவாக நிபுணத்துவக் குழுவை தனக்கென அமைத்துக்கொள்ள கூட்டமைப்பு முன்வரவேண்டும்.

அரச தரப்பைப் பொறுத்து இந்தியாவின் பஞ்சாயத்துப் பாணியில் உள்ளூராட்சி சபைகள் மட்டத்திலான அதிகாரப் பரவலாக்கல் பற்றிய யோனைகளுடனேயே உள்ளது. கூட்டமைப்புடனான முதலாவது சுற்றுப் பேச்வார்த்தையில் இது பற்றிக் கூட்டமைப்பினருக்கு உணர்த்தப்பட்டதாக செய்திகள் அப்போது கசிந்தன. அதனை உறுதிப்படுத்துவதாக அதாவது அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கலில் எத்தகைய நிலைப்பாட்டிலுள்ளதென்பதை நாடி பிடித்துப் பார்க்கக் கூடியதாக அமைச்சரும் பேராசியருமான ஜி.எல்.பீரீஸ் அவர்களின் கூற்று அமைந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (17.11.2011) பண்டாரநாயக்க சர்வதேச கற்கை நெறிக்கான கேட்போர் கூடத்தில் இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலாளரும், தூதுவருமான சியாம் சரண் அவர்களை வைத்துக் கொண்டு, இந்திய மாநில அரசுகள் ஒரு பக்கம் இருக்க மத்திய அரசின் நிதி நேரடியாக பஞ்சாயத்து சபைகளுக்கூடாக மக்களைச் சென்றடைவதாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அமமையார் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டி முறையிலான மாநில அல்லது பிராந்திய அல்லது மாகாண அரசுகளோ இலங்கைகுப் பொருத்தமானதல்ல. பஞ்சாயத்து முறையிலான உள்ளூராட்சி சபைகளே பொருத்தமானது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாகவே அமைச்சர் பீரீஸ் அவர்களின் கூற்று அமைந்துள்ளது. மொத்தத்தில் பேச்வார்த்தை என்பது கல்லில் நார் உரிப்பதாகவே கூட்டமைப்பினருக்கு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே, மீண்டும் இப்பத்தியில் கோருகின்றோம். தீர்வுப் பொதியை முன்வைத்து கூட்டமைப்புப் பேச்வார்த்தைக்குச் செல்வதே சிறந்தது.

ஆக்கம்: வி.தேவராஜ்

மூலம்: வீரகேசரி - கார்த்திகை 19, 2011

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சமஷ்டி முறையிலான மாநில அல்லது பிராந்திய அல்லது மாகாண அரசுகளோ இலங்கைகுப் பொருத்தமானதல்ல. பஞ்சாயத்து முறையிலான உள்ளூராட்சி சபைகளே பொருத்தமானது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாகவே அமைச்சர் பீரீஸ் அவர்களின் கூற்று அமைந்துள்ளது. "

ஏன் முடியாது என்று அறிக்கை தரமுடியுமா?

"இலங்கையின் இன விவகாரத்திற்கான அண்மைக் காலப் பயணத்தில் ஏன் தோல்விகள் ஏற்பட்டன என்பது குறித்து நோர்வே"

அது சரி.. இவையள் கடைசியா அமைதி காக்க சென்ற பலஸ்தீனத்தில அமைதி திரும்பிட்டுது.

Edited by KuLavi

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வியாழக்கிழமை (17.11.2011) பண்டாரநாயக்க சர்வதேச கற்கை நெறிக்கான கேட்போர் கூடத்தில் இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலாளரும், தூதுவருமான சியாம் சரண் அவர்களை வைத்துக் கொண்டு, இந்திய மாநில அரசுகள் ஒரு பக்கம் இருக்க மத்திய அரசின் நிதி நேரடியாக பஞ்சாயத்து சபைகளுக்கூடாக மக்களைச் சென்றடைவதாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அமமையார் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம்.. வேலைக்கு உணவு திட்டம் என ஊருக்குள் ஏற்கனவே .... திண்னுட்டு திட்டு திரியறான்... எவனும் வேலைய செய்யவே வருவது இல்லை... பஞ்சாயத்து கிளார்க்கு கொடுப்பதுதான் கணக்கு... போக எவனும் அந்த ஏரி மராமத்து வேலையும் ஒழுங்க செய்யுறது இல்லை.. அப்புடியே கல்யாண சத்திரம் மாதிரி கும்பல் கும்பலாக ஏரிக்கரையில் தூங்குவது ... கையில் ஒரு எப்.எம் பாட்டுகேட்க டிரான்ஸ்டர் ரேடியோ.. இப்படி இருந்தால் ஊர் உருப்படுமா? இதையே இலங்கையும் செய்யபோகிறார்களா? தயவு செய்து இதை ஈழதோழர்கள் எதிர்க்கவேண்டும்...

சமஷ்டி முறையிலான மாநில அல்லது பிராந்திய அல்லது மாகாண அரசுகளோ இலங்கைகுப் பொருத்தமானதல்ல. பஞ்சாயத்து முறையிலான உள்ளூராட்சி சபைகளே பொருத்தமானது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாகவே அமைச்சர் பீரீஸ் அவர்களின் கூற்று அமைந்துள்ளது.

இவன் கோணவாய்க்கால் பாளையத்திற்கு நேர்வழி காட்டுவான் போல தெரியுது... தமிழீழ தனி அலகுதான் சரி.... :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.