Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலை ஆட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலை ஆட்டம்

விஸ்வநாத் வஸந்த பவன் மசால் தோசையும் டிகிரி காஃபியையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவதற்குள் நான் இங்கே மண்டையைப் போட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன். இந்தச் சதிகார கும்பலிடம் சிக்கி நான் சின்னாபின்னமாவதற்கு பேசாமல் மேலே போய் சேர்ந்துவிடலாம் என்று தான் இந்த முடிவு. எங்கள் குலசாமி அடியக்கமங்கலம் ஐயனாரை வேண்டிக்கொண்டு போய் சேர்கிறேன். இந்த விவஸ்தை கெட்ட அநீதி பெருக்கெடுத்து ஓடும் மாய உலகத்திற்கு ஒரு பெரிய கும்பிடு. டாட்டா. பை. பை. வாழ்க வையகம்.

-விஷ்ணு

வாடகைக் குடிலுக்கு வெளியே நெடிதுயர்ந்த அரசமரத்தின் கீழிருந்து ஆறாவது முறையாக வேர்க்கடலை மடித்த கசங்கிய வாராந்திரியின் 24-ம் பக்க எண்ணைச் சுற்றியிருக்கும் வெற்றிடத்தில் கோழிக் கிறுக்கலான வரிகளை மேய்ந்தார் விஸ்வநாத். அவரது டாலடிக்கும் சொட்டைத் தலையில் நீராவியடித்த எவர்சில்வர் தட்டு போல முத்துமுத்தாய் வேர்த்தது. கர்சீப்பால் அழுந்தத் துடைத்துக்கொண்டார். கிங்ஸை இழுத்தார். ஸ்னிஃபர் டாக், பனியன் போலீஸ் தனது சம்பிரதாயங்களை செய்துகொண்டிருந்தனர். அறையைத் தலையோடு கால் புரட்டிப்போட்டார்கள். தூரத்தில் ஒரு காகம் ஈனஸ்வரத்தில் கரைந்தது.

“என்னாச்சு சார்?”

“விஷ்ணுவ இன்னிக்கி நேத்திக்கா தெரியும். வருஷாந்திர பழக்கம். காலையிலேர்ந்து கேஷுவலாப் பேசிக்கிட்டு இருந்தோம். எனக்கு அகோரப் பசி. டிஃபனுக்கு வரீங்களான்னேன். பசிக்கலை வேண்டாம்னாரு. வஸந்தபவன்ல சாப்டுட்டு வந்து பார்த்தப்போ கட்டிலுக்கு கீழ தலைகுப்புற கிடந்தாரு. புரட்டினா வாயில நுரை தள்ளியிருந்தது. டென்ஷனாகி மூக்கில கை வச்சுப் பார்த்தேன். ஹி வாஸ் டெட்!” சொட்டை வியர்வை துடைத்து ’கப்’பான கர்ச்சீப்பால் வாயைப் பொத்திக்கொண்டார் விசு.

“எஸ்.பி கோகுல் வந்தாரா?” வினவினார் விஸ்வநாத்.

“இன்னிலேர்ந்து ஒரு வாரம் லீவுன்னு ஸ்டேஷன்ல சொன்னாங்கய்யா” 501 மட்டையாய்த் தரையில் தவழ்ந்தார்.

“நா கிளம்பறேன்” ஐராவத அம்பாசிடருக்குள் தன்னை சிரமப்பட்டு திணித்துக்கொண்டதும் லோக்கல் கடாமீசை எஸ்.ஐ இஸ்திரி போட்ட சல்யூட் அடிக்க ஸ்லோமோஷனில் கையாட்டிவிட்டு விரைந்தார் விஸ்வநாத் டி.ஐ.ஜி.

2 நாட்களுக்கு முன்.............

எருமைச் சோம்பலான மத்தியானப் பொழுது. கடலோரத்தில் போலீஸ் தலைமையகம் தேனீச் சுறுசுறுப்பாக இருந்தது. அரசு புராதனச் சின்னங்கள் காப்பகம், விளக்கொளி காணாது வௌவால் தொங்கி இருளோன்று கிடக்கும் குக்கிராமக் கோவில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் ஊரறியாத ரகசிய பொக்கிஷ அறைகளில் என்று ஓரிடம் விடாமல் சிலைக் கடத்தல் கும்பல் ஒன்று தன் கைவரிசையைக் காட்டி போலீஸ் கண்ணில் இரத்தம் சொட்ட விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருந்தது.

சட்டசபையில் “அரசின் மெத்தனம்” என்ற எதிர்கட்சிகளின் வெளிநடப்பில் முதல்வர் ஐ.ஜியை வரச்சொல்லி காதில் ரத்தம் வழிய வை(த்)தார். காதைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து கடுப்புடன் ஜீப்பேறியவர் “டிப்பார்ட்மெண்ட்ல கள்ளத்தனமான ஸ்ட்ராங் கனெக்‌ஷன் இல்லாம இது இவ்வளவு சக்ஸஸ்ஃபுல்லா நடக்காது. ஒவ்வொரு தடவையும் யாருன்னு கிட்டத்தில போனதுக்கப்புறம் கோட்டை விட்டுர்றோம். ஷேம் ஆன் அஸ்” என்று மீட்டிங் போட்டு திட்டினார். கை எச்சில் ஆகுமென்று பார்க்காமல் நாக்கைப் பிடிங்கிக் கொள்ளும்படி மேல்தட்டு போலீஸாரின் மானத்தை வாங்கினார்.

டீ வடையோடு அவசரகால மீட்டிங் முடித்துச் செவிக்குணவோடு வயிற்றுக்கும் ஈய கேன்டீனுக்கு ஓடினார்கள். விஷ்ணுவும் அங்கே சிறப்பு விருந்தினர். சென்ற மாதம் அவன் குற்றவாளிகளை மோப்பம் பிடித்து நெருங்கியதில் மகாபலிபுரம் அருகே ரோடோர ரெண்டுங்கெட்டான் ஃப்ரெஞ்ச் விடுதியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதற்குள் தப்பிவிட்ட அவர்கள் அறையில் ரவையூண்டு கசக்கிச் சுருட்டிய டாய்லெட் நாப்கின் ஒன்று விஷ்ணுவிற்கு கிடைத்தது.

காரிடாரில் ஷூ சரசரக்க நடக்கும் போது விஷ்ணு நீட்டிய நாப்கின்னில் SWH26F என்று குருதிச் சிகப்பில் கிறுக்கியிருந்தது. இரத்தமா என்ற சந்தேகத்தில் எஸ்.பி கோகுல் டாமி போல காகிதத்தை உச்சி முகர்ந்து பார்த்தார்.

“சார்! அது செர்ரி ஃப்ளேவர்டு லிப்ஸ்டிக்.”

“ஓஹோ.. இதுதான் மகாப்ஸ்ல கிடைச்சுதா விஷ்ணு?”

“ஆமாம் சார்! டிபார்ட்மெண்ட் மக்கள்லெல்லாம் நாள் பூரா ஜல்லடையா சலிச்சுட்டுப் போன பிறகு ஹோட்டல் மானேஜர்கிட்ட கீ வாங்கி அந்த அறையை ஒரு தடவை இண்டு இடுக்கெல்லாம் துருவிப் பார்த்தேன். டாய்லெட் பேஸினோட ப்ளாஸ்டிக் சீட்டர்ல பபிள் கம் மாதிரி ஏதோ ஒட்டியிருந்தது. இடதுகையால எடுத்துப் பிரிச்சுப் பார்த்தேன்.”

“கிரேட் விஷ்ணு. இது சவுத் வெஸ்ட்ல இருக்கிற பிளாட்ல சிக்ஸ்த் ப்ளோர், ஹவுஸ் நம்பர் டூன்னு எதாவது தேறுமான்னு பாருங்க”

“சார்! எந்த ஊர்ல..வீதியில... எங்கேயிருந்து சவுத் வெஸ்ட்டு... ப்ளாட் ஃபிக்ஸ் ஆக மாட்டேங்குதே”

”என்னாச்சுப்பா. ரெண்டு பேரும் சாப்பிடப்போகலை. எனக்கு வயித்தைக் கிள்ளுது” இருவரையும் தன் கைகளுக்குள் பின்னாலிருந்து அணைத்துக் கேட்டார் விசு.

கோகுல் முன்னால் நடக்க பின்னால் தொடர்ந்த விஷ்ணுவின் சட்டைப் பாக்கெட்டில் துருத்திய கசங்கிய காகிதம் விஸ்வநாதன் கண்களை உறுத்தியது. மாநில அளவில் சிலைப் பாதுகாப்புச் சிறப்புக் காவல் படைக்குத் தலைமையதிகாரியாக நியமித்திருந்தார்கள்.

“விஷ்ணு.. அதென்ன பாக்கெட்ல?”

“ஒன்னும் இல்ல சார்! போன கேஸ் துப்புத் துலக்கும்போது மகாபலிபுரத்தில ஒரு சீட்டுக் கிடைச்சுது. அதான் கோகுல் சார்கிட்ட...”

“சொல்லிட்டீங்களா?” என்று பதபதைத்தார்.

“இல்ல. சொல்லலாம்னு.........”

“உஹூம். யார்கிட்டயும் மூச்சுக் காட்டாதீங்க. இது ரொம்ப சென்ஸிடிவ்வா போயிகிட்டு இருக்கு. நிறைய காரியங்கள் டிப்பார்ட்மெண்ட் ஆட்களுக்குக் கூடத் தெரியாம ரகசியமா செய்ய வேண்டியிருக்கு. எங்கிட்ட குடுங்க.. இதப் பத்தி அவர்கிட்ட எதுவும் ஏற்கனேவே பேசிட்டீங்களா?”

“ஆமா. இந்த மாதிரி ஒரு காகிதம் கிடைச்சுருக்குன்னு சொன்னேன். சாப்பிட்டுட்டு பேசலாம்னாரு” விஜிடெபிள் புலாவ் மூக்கைத் துளைக்கும் ஹாலுக்குள் இருவரும் பிரவேசித்தார்கள். கையலம்பும் இடத்தில் கோகுல் கையை சுத்தமாக சோப்பாயில் போட்டுக் கழுவிக்கொண்டிருந்தார்.

“விஷ்ணு. ஒன்னு பண்ணுங்க. இந்தச் சீட்டை என் கையில கொடுத்துடுங்க. கோகுல்கிட்ட தவறான செய்தியை சொல்லி திசை மாத்திடுங்க.. இந்தப் பேப்பரைப் பத்தி கேட்டார்னா எங்கிட்ட இருக்குன்னு சொல்லிடுங்க.. ஓ.கே”

மதியச் சாப்பாடு தொப்பையர்களின் பெல்ட்டை இறுக்க சமூகக் கடமையாற்ற காவல் நிலையங்களுக்கு விரைந்தார்கள். கோகுல் விஷ்ணுவை அழைத்து “உங்களுக்குக் கிடைத்த அந்தக் குறியீடுகளை எனக்கு மெயில் அனுப்பிடுங்க” என்று உத்தரவிட்டபடி அவசரமாக கவர்னரின் தில்லி பயண பந்தோபஸ்து ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.

**

நான்கு மணிக்கு அண்ணாசாலையில் அவ்வளவாக கழுத்தை நெறிக்கும் பம்பர்-டு-பம்பர் டிராஃபிக் இல்லை. ”நடிகை விவாகரத்து” என்று வம்பர்களை சுண்டி இழுத்த கொட்டை எழுத்துக்களில் அச்சடித்து மாலை பத்திரிக்கைப் போஸ்டர் ஆடிக்கொண்டிருந்த கடையில் ஒரு வில்ஸ் வாங்கி பற்ற வைத்தான் விஷ்ணு. ஆணும் பெண்ணும் அணுக்கமாக உட்கார்ந்திருக்கும் விளம்பரத் தட்டியில் ஓசிக்கு தன் கடைப்பெயரையும் வில்ஸ் கம்பெனியார் செலவில் அச்சடித்து மாட்டியிருந்தார்கள். டபிள்யூ மட்டும் மெகா சைஸில் காலை நீட்டிக்கொண்டு தெரிந்தது. விஷ்ணுவிற்குள் பல்பு எரிந்தது.

அமெரிக்கக் கும்பல் ஒன்றுதான் MEtal Lord For ME என்பதை ஸ்லோகனாகக் கொண்டு பேரியக்கமாக நிழலுலகத்தில் இயங்கி வந்தார்கள். மீமீ இயக்கத்தினர் ஒவ்வொரு கலைநயமிக்க இடங்களிலும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி கன்னக்கோல் போட்டார்கள். திருடுவதற்கு பக்கத்தில் முகாமிட்டு ஓரிரு நாட்கள் கலாரசிகர்களாக சென்று வேவு பார்த்து யாருக்கும் சந்தேகம் வராதபடி லவட்டிவிடுவார்கள். வில்ஸ் என்கிற வெள்ளைக்காரச் சிலைத் திருடனைப் பற்றிய சர்வதேச குற்ற அறிவிப்பு ரகசியமாக சென்னைக் காவல்துறைக்கும் மெயிலாக கிடைத்திருந்தது. இது வில்ஸாக ஏன் இருக்கக்கூடாது என்று விஷ்ணுவிற்கு ஒரு பட்சி சொன்னது.

“சார் இந்தாங்க பாக்கி...” என்று விஷ்ணுவிற்கு எரிந்த பல்பை அணைத்தான் கடைக்காரன். ஊதிக்கொண்டே பொடிநடையாக வந்ததில் அலையலையாய் புகை SWH26F என்ற எழுத்துக்களில் விண்ணில் வட்டமடித்தது. சோஃபி என்ற பெயரை மகாபலிபுர ஹோட்டல் லெட்ஜரில் பார்த்தது ஞாபகம் வந்ததும் கணக்கு சரியாகிறது என்ற மகிழ்ச்சியில் சிகரெட் புகையோடு சேர்ந்து ஆகாயம் மேலே ஏறினான் விஷ்ணு.

“கோகுல் சார். இந்த கேஸ்ல நாம பாதிக் கிணறு தாண்டிட்டோம்னு நினைக்கிறேன்” மகிழ்ச்சி பொங்க கோகுலை அழைத்துப் பேசும்போது “பா........ம்” என்று ஹார்ன் அடித்த மாநரக பஸ் எதிர்முனையில் கோகுலை மீண்டும் “ஹா.....ஒன்னும் சரியாக் கேட்கலை” கேட்க வைத்தது.

கிடைத்த இரண்டு க்ளூவையும் விவரித்த விஷ்ணுவை ”டின்னருக்கு எட்டு மணிக்கு மவுண்ட்ரோட் ஹோட்டல் செந்தூருக்கு வந்துடுங்க.. மத்தத அங்க பேசிக்கலாம்” என்று அலைபேசியின் தொடர்பைத் துண்டித்தான்.

கோகுல் டி.ஐ.ஜி விஸ்வநாத்தின் வீட்டில் அழைப்புமணிப் பொத்தானை அமுக்கி அது சங்கீதம் வாசிக்கும் போது மாலை 7 மணி.

கதவு திறந்தபோது பெர்முடாஸும் டீஷர்ட்டுமாய் வயதை இரண்டால் வகுத்து விஸ்வநாதன் இளமையாய் நின்றிருந்தார்.

“ப்ளீஸ் கம். என்ன இந்த நேரத்தில?”

“சார்! அந்தச் சிலை திருட்டு கேஸ் க்ராக் பண்ணிடலாம்னு நினைக்கிறேன். அதப் பத்தி உங்ககிட்ட பேசிட்டு....”

“டூ மினிட்ஸ் உள்ள வந்து உட்காருங்க கோகுல். தலைக்கு கொஞ்சம் தண்ணிய ஊத்தி ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வந்துடறேன். வீட்ல அம்மாவும் பொண்ணும் விண்டோ ஷாப்பிங் போயிருக்காங்க. நா வந்துதான் உங்களுக்கு எதாவது திரவம் குடிக்கக் கொடுக்கனும்.” என்று டர்க்கி டவலை சுற்றிக் கொண்டு ஓடினார்.

“பொறுமையா வாங்க சார். நா வெயிட் பண்றேன்” ’ன்’சொல்லும் போது பாத்ரூமில் நுழைந்திருந்தார்.

கேஜி குழந்தை மேஜைப் போல பென்சிலும், ஸ்கேலுமாக அலங்கோலமாக இரைந்து கிடந்தது. வாரமலரின் ”குறுக்கெழுத்துப் போட்டி” கண்டுபிடிப்பதைப் போல SWH26Fவை குறுக்காகவும் நெடுக்காகவும் கிறுக்கி முயற்சித்திருந்தார். அப்போதுதான் ”Sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான..” என்று விஷ்ணு பெயரில் இருந்த அந்தச் சிட்டு அவன் கண்களுக்கு தட்டுப்பட்டது. எட்டு மணிக்கு விஷ்ணுவை சந்திக்கும்போது கேட்க வேண்டும் என்பதற்காக அவன் அனுப்பிய குறியீட்டு மெயிலின் முக்கிய பாகத்தை எடுத்து மேஜையில் இருந்த சீட்டுடன் பொருத்திப் பார்த்துச் சிரித்தான். விஸ்வநாதனின் மொபைல் வைப்ரேஷன் மோடில் தையதக்காவென்று குதித்தது. கையிலெடுத்துப் பார்த்த கோகுலுக்கு வியப்பு. அதில் Vishnu Informer என்று ஒளிர்ந்தது. இந்த நேரத்தில் இவனெதற்கு இவரைக் கூப்பிடுகிறான் என்று யோசித்தவாறே மீண்டும் மேஜையில் மொபைலைக் கிடத்தினார் கோகுல்.

Savaal%255B3%255D.jpg

”உம். சொல்லுங்க கோகுல்...” என்று ஈரத் தலையைத் துவட்டியவரிடம் கடைசியாக விஷ்ணு கண்டுபிடித்தது வரை சொல்லிவிட்டு எட்டு மணிக்கு விஷ்ணுவை சந்திக்கும் அவசரத்தில் புல்லட் ஏறிப் பறந்தான் கோகுல்.

செந்தூர் ஹோட்டலில் குறை வெளிச்சத்தில் கடைசி டேபிளில் காத்திருந்தான் விஷ்ணு.

“ஸோ, கண்டுபிடிச்சிட்டே” என்று விஷ்ணுவின் முதுகில் தட்டினார் கோகுல்.

“ஆமா சார்! மகாப்ஸ்ல கொள்ளையடிச்சப்போ ஊருக்கு அவுட்டோர்ல இருக்கிற ஈ ஓட்ற ஹோட்டல்லதான் தங்கியிருந்தாங்க. அது மாதிரி இப்ப கடத்தப்போற வென்யூல கூட லோக்கல்ல யாரும் எட்டிப்பார்க்காத லாட்ஜ்லதான் இவனுங்க தங்கப் போறானுங்க”

“எப்டி கண்டுபிடிக்கிறது விஷ்ணு?” தலையைச் சொறிந்தான் கோகுல்.

”இதுவரைக்கும் நடந்த திருட்டுக்கள்ல முருகன் சிலையைத்தான் குறி வச்சு தூக்கியிருக்காங்க. அதனால இப்பவும் ஆறுமுகர் தான் அபேஸ் ஆகப் போறாருன்னு நினைக்கிறேன்”

“சிங்காரச் சென்னையில எந்த ஆறுமுகர்ப்பா கொள்ளையடிச்சிக்கிட்டு போற மாதிரி இருக்காரு”

“ஊஹும். சென்னையில இல்லை. வெளியூர்ல..”

“இண்ட்ரெஸ்டிங்... எந்த ஊரு... கெஸ் பண்ண முடியுதா...”

“தாராளமா.. இந்தக் கட்டத்தைப் பாருங்க” என்று கைத் துடைக்கும் நாப்கின்னில் காத்திருந்த நேரம் வரை கட்டமிட்டதைக் காண்பித்தான்.

Code Location Execution S South Sophia W West Wills H2 Hill Second Hotel to 6F Six Face(ஆறுமுகம்) Six Furlong

கோகுலின் முகம் ஆச்சர்யத்தில் மிளிர்ந்தது. ”சிக்மென்ட் ஃப்ராய்ட் புக் போல கொஞ்சமா புரிஞ்சும் நெறையா புரியாத மாதிரியும் இருக்கு. கேன் யூ எக்ஸ்ப்ளைன்?”

”சென்னையிலிருந்து தென்மேற்கில் ஆறுபடைவீட்டில் இரண்டாவதான பழனி முருகன் ஆலயம் தான் டார்கெட். அதற்கான மாஸ்டர் ப்ளான் மகாபலிபுரத்தில் திருடும் போதே தீட்டியிருக்கிறார்கள். இதை யார்யார் எப்படி எக்ஸிக்யூட் செய்யப் போகிறார்கள் என்பதை இரண்டாவது காலத்தில் வரிசைப்படுத்தியிருக்கிறேன். ஒரே கோட்வேர்டில் ரெண்டு செய்திகள்

மகாபலிபுரத்தில் கைவரிசை காட்டிய அதே சோஃபியா மற்றும் வில்ஸ் இருவரும் தோராயமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு இதை முடிக்கப்போகிறார்கள்.”

மூச்சுவிட்டவுடன் சர்வர் விரல் விட்ட தீர்த்தத்தை ஒரே மடக்காக சாய்த்துக்கொண்டு க்ளாஸை கீழே விஷ்ணு வைத்ததும் கை சுளுக்கும் வரை குலுக்கினார் கோகுல்.

“சிம்ப்ளி சூப்பர்ப் விஷ்ணு. இப்ப உன்னை அப்படியே இருக்கக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு.”

மறுநாள் விடியற்காலை ஆகாயமார்க்கமாக சொக்கநாதரைப் பார்த்துக்கொண்டே மதுரையில் இறங்கினார்கள். பழனிக்கு ஒரு வாடகைக் காரில் பறந்தார்கள். கோயிலுக்கு ஒரு கி.மீ சுற்றுவட்டாரத்திலிருக்கும் ஒவ்வொரு லாட்ஜாக வெளிநாட்டினர் யாராவது தங்கியிருக்கிறார்களா என்று மஃப்டியில் ஏறியிறங்கினார்கள்.

தனது பேத்திக்கு மொட்டையடிக்கக் குடும்பத்தினரோடு பழனிக்கு வந்திருந்த விஸ்வநாத் ஜவ்வாது விபூதி ஸ்டாலருகே விஷ்ணுவைப் பார்த்துவிட்டு கைதட்டிக் கூப்பிட்டார்.

“என்னப்பா இங்க...”

யாரிடமும் சொல்லவேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னதை மீறி நாம் ஈடுபடுகிறோம் என்று தெரிந்தால் கோபிப்பாரோ என்ற பயத்தில் ”இல்ல சார்.. வந்து....” என்று தடுமாறினான்.

“என்னாச்சு... எதுக்கு தயங்குற... நீ எங்க இந்தப் பக்கம்..”

“எங்க மாமா பையனுக்கு மொட்டையடிக்க வந்தோம்...”

“மாமா பையனுக்கா...”

“ச்சே.. இல்ல பேரனுக்கு சார்”

“சரி..சரி... ரொம்ப அவசரத்தில இருக்கீங்க போலருக்கு... உங்களை நாளைக்கு மீட் பண்றேன்” என்று விஷ்ணுவின் விடுதியை ஐஃபோனில் குறித்துக்கொண்டார்.

அவரிடமிருந்து பிய்த்துக்கொண்டு கடைத்தெரு தாண்டி வந்தபோது சந்தில் மறைந்திருந்த கோகுல் “அவரிடம் எதுவும் சொன்னியா?” என்று கேட்டான்.

“இல்லை சார்! அவர்கிட்ட வேணும்னா சொல்லிடட்டா.. நாளைக்கு எங்கிட்ட பேசறேன்னு சொல்லியிருக்காரு...”

“கண்டுபிடிச்சிட்டு சொல்லுவோம்... அதுவரைக்கும் சும்மாயிரு...” என்று அவர்கள் தங்கியிருந்த குடிலுக்குள் தஞ்சமடைந்தார்கள்.

விஸ்வநாத்துக்கு தெரியாமல் வந்துவிட்டதால் பார்த்தால் கோபித்துக் கொள்வார் என்று காரணம் சொல்லிவிட்டு விடியற்காலை பஸ்ஸில் ஊருக்கு கிளம்புவதாக புறப்பட்டான் கோகுல். எட்டு மணிக்கு விஸ்வநாத் விஷ்ணு தங்கியிருந்த தேவஸ்தான குடிலுக்கு வந்தார். பேச்சுவாக்கில் அவரிடம் கோகுலுடன் பழனி வந்த காரணத்தைச் சொல்லிவிட்டு வருந்தினான். "பரவாயில்லை... விடுங்க” என்று விஸ்வநாத் சாப்பிடக் கூப்பிட்டும் விஷ்ணு மறுத்துவிட்டான்.

ரூமில் சோகமாகத் தனியாளாய் உட்கார்ந்திருந்த போது திடீரென்று கோகுல் நுழைந்தான்.

“விஷ்ணு! நீ ரொம்ப புத்திசாலி. நீ கண்டுபிடிச்ச அவ்வளவு விஷயங்களும் நூத்துக்கு நூறு உண்மை. ஆனா அவங்களை பிடிக்கமுடியாது” என்றான் நம்பியாராய்.

“ஏன்?”

“ஏன்னா அவங்க என்னோட பார்ட்னர்ஸ். இன்னும் கொஞ்ச நாள்ல சுவிஸ்ல குடியேறப்போறேன். இதுதான் எங்களோட லாஸ்ட் டீல். இதை விஸ்வநாத்கிட்ட போட்டுக்குடுத்தா உன்னைப் பிடிச்சு உள்ள வைக்க நீதான் இந்தக் கும்பலுக்கு மூலாதாரமா இருக்கேன்னும், இந்தியாவோட மெயின் ஏஜென்ட் நீதான்னும் நிரூபிக்க அந்த மகாபலிபுர ஹோட்டல் மேனேஜரை கணக்குப் பண்ணிட்டேன். அதனால....”

ஷாக்கானான் விஷ்ணு. ”நீங்க என்ன சொன்னாலும் நா ஒத்துக்க மாட்டேன். விஸ்வநாத் சார் வந்ததும் ரெண்டுல ஒன்னு முடிவு பண்ணிடலாம்” என்று டெசிபலைக் கூட்டினான்.

அவனைக் கொலைவெறியுடன் நெருங்கிய கோகுல் சட்டைப் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியிருந்த விஷப் பொடியை விஷ்ணு வாயில் திணித்தான். இரண்டு வினாடிகள் விஷ்ணுவின் வாயை மூக்கோடு சேர்த்துப் பொத்திவிட்டு கையை எடுத்தான். உயிரற்ற சடலமாக சரிந்த விஷ்ணுவைத் தரையில் கிடத்திவிட்டு அருகில் கிடந்த கசங்கிய காகிதத்தில் இந்தக் கதையின் முதல் பாராவைக் கிறுக்கிவிட்டு மறைந்தான்.

**

”ஆமா. கோகுல்தான்... கொள்ளைக்கார வெள்ளைக்காரங்களைப் பிடிச்சிட்டோம். லேசா தட்டின உடனேயே கக்கிட்டாங்க.” செல்ஃபோனில் டி.ஐ.ஜி விஸ்வநாத் குடும்ப ஸகிதம் பேசிக்கொண்டே பழனியின் ”நன்றி மீண்டும் வருக!!”வைத் தாண்டும் போது “முருகனுக்கு அரோகரா!! கந்தனுக்கு அரோகரா!!” என்று காவடியேந்திய பக்தர் கூட்டம் ஆறுமுகனைத் தரிசிக்க சென்றுகொண்டிருந்தது.

http://www.rvsm.in/2011/10/2011.html

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.