Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் 2012 ஆம் ஆண்டு: -இதயச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் 2012 ஆம் ஆண்டு: -இதயச்சந்திரன்

[sunday, 2012-01-01 00:27:03]

2012srilanka-Politicsseithy.jpg

இன்று 2012 இல் காலடி வைக்கிறது உலகம். கடந்த ஆண்டு நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தால், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, மனித உரிமைப் பேரவைக் கூட்டங்களும், தீர்வில்லாப் பேச்சுவார்த்தைகளுமே நினைவிற்கு வருகின்றது. நீண்ட போரினால் பாதிப்புற்ற மக்களின் இயல்பு வாழ்வு திரும்பி விட்டதாவென்கிற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

மண் சுமந்த மேனியர், நிலமில்லாமல் அலைகின்றார். 54 ஏக்கர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்ணும், பாதுகாப்பு அமைச்சிற்கு தாரை வார்க்கப்படுகின்றது.

தமிழர் நிலங்களில் இராணுவம் குடி கொண்டால் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென ஒற்றையாட்சித் தத்துவம் எதிர்வு கூறுகிறது.

காணி உரிமை தரமாட்டோமெனவும், இராணுவ முகாம்களை அகற்றமாட்டோமெனவும் ஆட்சித் தரப்பு கொண்டிருக்கும் விடாக் கண்டன் நிலைப்பாட்டின் சூத்திரம் இப்போது புரிகிறது. கல்வி அமைச்சிற்கும் ,அரச அதிபருக்கும் எத்தனை முறைப்பாடுகளை இலங்கை தமிழர்ஆசிரியர் சங்கம் முன்வைத்தாலும், மத்தியில் முழு இலங்கைக்குமான சிங்கள இறைமையின் அதிகாரங்களைக் குவித்து வைத்திருக்கும் அரசு , எதனையும் செவிமடுக்கப் போவதில்லை.

தீர்வு முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்க மறுக்கின்றது என்கிற பரப்புரையில் அரசு ஈடுபடுவதோடு, அதற்கான சர்வதேச ஆதரவைத் திரட்டுவதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது.

"புலம்பெயர் மக்களே அமைதியின் எதிரிகள்' என்று இந்தியாவிலிருந்து வெளிவரும் "டெக்கான் குரோனிக்கல்' என்கிற பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளார். சுயாதீன போர்க் குற்ற விசாரணை யொன்று நிகழ்த்தப்பட வேண்டுமென, தொடர் அழுத்தங்களை இலங்கை அரசு மீது பிரயோகித்து வரும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை முதன்மை எதிரிகளாக அரசு பார்ப்பதையிட்டு ஆச்சரியமடையத் தேவையில்லை.

அரசிற்கு இரண்டு பிரச்சினைகள். ஒன்று சர்வதேச போர்க் குற்ற விசாரணைகளிலிருந்து தப்புவது, அடுத்ததாக இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றிற்கு உடன்படாமல் இழுத்தடிப்பது என்பதாகும். முதலாவது பிரச்சினையில் புலம்பெயர் சமூகம் அதிக சிரத்தையுடனும் ஈடுபடுவதால் அவர்கள்மீது அரசிற்குக் கோபம்.

இரண்டாவதாக, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இழுத்து காலத்தை நீடிக்கும் வியூகத்தினை நிறைவேற்ற முடியாமல் கூட்டமைப்பு தடுக்கின்றதே என்கிற ஆத்திரம்.

ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் மனித உரிமை சாசனத்தையும் ஏந்தியவாறு தமது படையினர் போரிட்டார்களென்று எத்தனை "ஒலிவ்' இலை கதைகளைக் கூறினாலும், "விடாது கறுப்பு' என்கிற பாணியில் பின்தொடரும் சுயாதீன சர்வதேச விசாரணை அழுத்தங்களால் அரசு ஆடிப் போயிருப்பதே நிஜம்.

கூட்டமைப்பினர் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு தமது பிரதிநிதிகளின் பெயர்களை வழங்காமல், வட- கிழக்கு இணைப்பு, காணி உரிமை மற்றும் காவற்துறை உரிமையென்ற நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களைப் பற்றி பேசுகிறார்கள் என அரசு ஆதங்கப்படுகிறது. புலம்பெயர் சமூகமே, தீர்வொன்றிற்கு வராமல் கூட்டமைப்பை கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறது என்கிற பழியையும் சுமத்த முற்படுகிறது.

ஆயினும் தமிழ் சிவில் சமூகம், கூட்டமைப்பிடம் முன்வைத்த கோரிக்கைகளையிட்டு இதுவரை அரசு வாய் திறக்கவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் எப்பாடுபட்டாவது கூட்டமைப்பை இணைத்துவிட்டால் சிவில் சமூகத்தின் கோரிக்கைகளும் அதற்குள் கரைந்து விடுமென்பதே அரசின் கணிப்பு.

அதேவேளை, தமிழ் மக்களுக்கு காவல்துறை அதிகாரத்தை வழங்கினால். உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, ராகுல் காந்தியை கைது செய்ய எடுக்கும்முயற்சி போன்று, தனக்கும் அந்நிலை ஏற்படலாமென்று பொருத்தமில்லாக் காரணங்களை ஜனாதிபதி முன்வைப்பதை கவனிக்க வேண்டும்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த, காவற்துறை அதிகாரங்களை வழங்க முடியாத நிலையில் தான் இருப்பதாக நியாயப்படுத்தினாலும், அடிப்படையில் சிங்கள இறைமைக்குரித்தான அதிகாரங்களை தமிழ்த் தேசிய இனத்திற்கு விட்டுக் கொடுக்க பெருந்தேசிய இனம் விரும்பவில்லையென்பதே உண்மை நிலையாகும்.

ஆகவே, இத்தகைய இழுபறி நிலையைத் தீர்த்துவைக்க, மூன்றாம் தரப்பொன்றின் அவசியம் உணரப்படுகிறது.

அதற்காக சீனாவின் வெளிநாட்டமைச்சரோ அல்லது வென்ஜியாபோவோ இலங்கைக்கு வரமாட்டார்.

ஆகவே, போரில் உதவி புரிந்த, மேற்குலகின் எதிரியல்லாத, கூட்டமைப்பின் விருப்புத் தெரிவான இந்தியாவே இந்த இறுக்க நிலையைத் தளர்த்த உதவும் மூன்றாவது சக்தியாக இருக்கப் போகிறது.

ஜனவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வருகிறார் இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா. இவர் வருவார் என்பதைப் புரிந்து கொண்ட ஜனாதிபதி, பகவான் சிங்கிற்கு வழங்கிய நேர்காணல் ஊடாக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்டார்.

அத்தோடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 100 தடவைகளுக்கு மேல் கூட்டிய அமைச்சர் திஸ்ஸ விதாரனவும் இந்திய மாநிலங்களின் நிலப்பரப்பளவோடு இலங்கை மாகாணங்களை ஒப்பிட முடியாதெனக் கூறுவதோடு, எல்லாவற்றிலும் ஓரளவு அதிகாரங்களை வழங்க முடியுமென நவீன இணக்கப்பாட்டு பரிந்துரைப்புகளை முன்வைக்கிறார்.

அநேகமாக இலங்கை வரும் அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, சம்பந்தன், திஸ்ஸ விதாரன மற்றும் ஜனாதிபதியை சந்திப்பாரென எதிர்பார்க்கலாம்.

வருகை தரும் இந்திய வெளிநாட்டமைச்சர், மன்னார் எண்ணெய் அகழ்வுப் பணி, புல்மோட்டை இல்மனைற் ஒப்பந்தம், வட பகுதி கடற்கரைப் பிரதேசத்தில் காற்றாலைகளை நிர்மாணிக்கும் வேலைத் திட்டம் என்பதோடு, ஆயிரம் வீட்டை 50,000 மாக அதிகரிக்கும் வழிவகை குறித்தும் பேசுவார்.

ஆனால், ஊடகப் பரப்பில், தமிழர் விவகாரம் குறித்துப் பேசுவதற்கே அவர் இலங்கை வந்துள்ளாரென பூதாகரமாகக் காட்டப்படும்.

இருப்பினும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களின் நேரடி முதலீடுகளை எத்தனை பில்லியன் டொலர்களுக்கு அதிகரிக்கலாம் என்பதோடு, இலங்கை முதலீட்டுச் சபையில் நிலுவையில் இருக்கும் அங்கீகாரமளிக்கப்படாத முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிக்குமாறும் வெளிநாட்டமைச்சர் அழுத்தங்களைப் பிரயோகிப்பார்.

ஆனால், பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்திய வட- கிழக்கு இணைப்பு மற்றும் காணி, காவல்துறை அதிகாரப் பகிர்வு குறித்து, கூட்டமைப்பின் சார்பு நிலை எடுத்து எஸ்.எம். கிருஷ்ணா அரசோடு பேசுவாரென கற்பனையில் ஆழ்ந்து விடக் கூடாது.

ஆயினும், கூட்டமைப்பும், அரசும், தமது நிகழ்ச்சி நிரலிற்கு இசைவாக இந்திய வெளிநாட்டமைச்சரை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவார்களென எதிர்பார்க்கலாம்.

அதாவது, மாகாணங்களுக்கான அதிகாரங்களை அரசு வழங்க வேண்டுமென கூட்டமைப்பும், நாடாளுமன்றத் தெரிவுக் குழவில் கூட்டமைப்பு நிச்சயம் கலந்து கொள்ள வேண்டுமென அரசும் அவரிடம் வலியுறுத்தும். ஆனாலும், பிராந்திய மற்றும் பூகோள அரசியல் நலன் அடிப்படையில் இலங்கை அரசோடு சார்ந்து செல்லும் நிலைப்பாட்டினையே இந்திய அரசு எடுக்குமென்பதை சொல்லிப்புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை.

இவை தவிர, இது அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, சகல கட்சிகளும் சேர்ந்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையென்று செந்தோழர் அமைச்சர் டியூ. குணசேகர கூறும் அதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக் குழுவே இதற்கான சரியான அரங்கமென வலியுறுத்துவதை தமிழ் மக்கள் அவதானிக்க வேண்டும்.

உரிமைகள் பற்றிப் பேசினால் அவை நிபந்தனையென்று சகல பெருந்தேசியவாதக் கட்சிப் பிரமுகர்களும் கூறுகின்றார்கள்.

சிவப்பிலிருந்து நீலம் வரை நிறபேதமற்றுப் பேசுகிறார்கள்.

ஆனால், தமிழ்ப்பேசும் மக்கள் தரப்பில் இவ்வகையான ஒற்றுமையைக் காணவில்லை.

முஸ்லிம் காங்கிரஸின் ஹசன் அலி அதிகாரஙகள் குறித்து தெளிவான கருத்தை முன்வைத்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்.

தமிழ் சிவில் சமூகத்தைச் சார்ந்த சான்றோர்களும் அடிப்படைக் கோட்பாட்டில் சமரசமோ, இணக்கப்பாடோ கூடாதென வலியுறுத்துகின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசம், இறைமை என்கிற அடிப்படைக் கோட்பாடுகளிலும் பிராந்திய, சர்வதேச அரசியல் விவகாரங்களிலும் தமது தெளிவான பார்வையை முன்வைக்கிறது.

ஆகவே, வட கிழக்கில் வாழும் தமிழ்ப் பேசும் இனத்தின் அடிப்படை உரிமைகளை ஏற்றுக் கொள்ளும் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை ஏன் உருவாக்கக் கூடாது என்கிற கேள்வி எழுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் சிவில் சமூகம், முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றோடு மலையக அரசியல் கட்சிகளும் ஜனநாயக மக்கள் முன்னணியும், புதிய இடதுசாரி முன்னணி போன்ற சிங்கள முற்போக்கு சக்திகளும் ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் ஒன்றுபடுவது என்பது வெறுமனே எதிர்ப்பரசியல் அல்ல. இந்த ஐக்கிய முன்னணியானது, வட, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களிற்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வுத் திட்டத்தினை முன்வைக்க வேண்டும்.

பௌத்த சிங்கள பேரினவாத சக்திகள், எந்தவொரு தீர்வினையும் முன்வைக்காமல் காலத்தை இழுத்தடித்து நிலங்களை அபகரிக்கும். குடிசன பரம்பலை மாற்றியமைக்கும் என்கிற நீண்ட கால வரலாற்று பட்டறிவினை புரிந்து கொள்வது நல்லது.

மக்கள் மீதும், அவர்கள் அனுபவிக்காமல் மறுக்கப்படும் ஜனநாயக விழுமியங்கள் மீதும் பற்றுக் கொண்டவர்கள், தன் முனைப்பு, கட்சி விசுவாசம், அதிகார ஆசை என்பவற்றுக்கு அப்பால் அணிதிரள வேண்டிய காலத்தின் தேவை இன்று உணரப்படுகிறது. ஏனெனில் நாம் இழந்தது மிக அதிகம்.

நன்றி-வீரகேசரி

01/01/2012

நன்றி - செய்தி இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.