Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சவால்களும் வாய்ப்புக்களும்

Featured Replies

அடுத்தது என்ன? தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சவால்களும் வாய்ப்புக்களும்

அடுத்தது என்ன? - இந்த சொற்தொடரை இன்று பரவலாகக் கேட்க முடிகின்றது. இவ்வாறு கேள்வி எழுப்புவோரின் இலக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கிறது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பின் குறியீடாகவும், அதனை வெற்றி கொள்வதற்கான ஸ்தாபன வடிவமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெளித்தெரிந்தது- தெரிகிறது. இதுவே அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இலக்கு வைப்பதற்கான காரணமாகும். ஆனால் இவ்வாறு த.தே.கூட்டமைப்பை இலக்குவைத்து வெளிவரும் கருத்து வெளிப்பாடுகள், த.தே.கூட்டமைப்பை முன்நோக்கி நகர்த்துவதற்கான ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இருக்கின்றனவா? இதனைப் பார்ப்பதற்கு, முதலில் த.தே.கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் எவ்வாறான தரப்பினரிடமிருந்து வெளிவருகின்றன – அவர்கள் எத்தகைய பின்னணிகளைக் கொண்டவர்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

த.தே.கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள்

இன்று த.தே.கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களை எடுத்து நோக்கினால், அவற்றை மூன்று தளங்களில் பார்க்கலாம். ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்னும் நோக்கில் முன்வைக்கப்படும் உறவுசார் விமர்சனங்கள். இவ்வாறான உறவுசார் விமர்சனங்களை முன்வைப்போர் – த.தே.கூட்டமைப்பின் உட்பலவீனங்கள்; கவனிக்கப்பட வேண்டும், மற்றும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்சிக் கட்டுக்கோப்பின் கீழ் த.தே.கூட்டமைப்பு பயணிக்க வேண்டும், ஒரு திட்டமிடப்பட்ட செயற்பாட்டு நிகழ்ச்சி நிரல் கூட்டமைப்பிற்கு அவசியம் என்றவாறான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் அரசியலில் மேலாதிக்கம் செய்த காலத்தில் ஆதரவு – எதிர் - என்ற நிலையிலேயே தமிழ்த் தேசிய அரசியல் நோக்கப்பட்டது. புலிகளுக்கான ஆதரவு நிலை என்பது – புலிகளை ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளுதல் என்பதாகும். விடுதலைப் புலிகளின் புரிதலில், இதற்கு மாற்றான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் அனைவருமே தமிழ் மக்களுக்கு எதிரானவர்களாவர். இந்தப் பின்னணியிலேயே, சில கட்சிகள் த.தே.கூட்டமைப்பிற்குள் இடம்பெற முடியாமல் போனது. ஆனால் புலிகளின் வீழ்சிக்குப் பின்னர் அவ்வாறு வெளியில் இருந்த கட்சிகளும் த.தே.கூட்டமைப்புடன் தம்மை இணைத்துக் கொண்டன. ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் போன்றோரை த.தே.கூட்டமைப்புடன் இணைத்துக் கொண்டமையானது, இரா.சம்பந்தனின் முதிர்ச்சியான அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகும்.

அதேவேளை கடந்தகால முரண்பாடுகளை மறந்து, த.தே.கூட்டமைப்புடன் இணைந்து ஒரு ஆக்கபூர்வமான தீர்வுக்காக உழைக்க வேண்டுமென்னும் நிலைப்பாட்டுக்கு சித்தார்த்தன், ஆனந்தசங்கரி போன்றோர் முன்வந்ததையும், நாம் முன்னேறிய, முதிர்ச்சியான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும். ஆனால் தாம் தீர்மானங்களில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்று ஆனந்தசங்கரி வெளிப்படையாகப் பேசிவருவதானது, மறுபுறமாக த.தே.கூட்டமைப்பின் குறைபாட்டையே பகிரங்கப்படுத்துகின்றது. எனவே த.தே.கூட்டமைப்பு இத்தகைய மனக்குறைகளை போக்கி கூட்டமைப்பை வலுவுள்ள ஒரு அரசியல் ஸ்தாபனமாக உருமாற்ற வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறது. இவ்வகை நோக்கில் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்களை நாம் உறவுநிலை விமர்சனங்கள் என்று வரையறுக்கலாம்.

அடுத்தவகை விமர்சனம் - த.தே.கூட்டமைப்பிற்கு தற்போதைய அரசியல் சூழலை கையாளுவதற்கு போதிய ஆற்றலில்லை என்று நிரூபிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்களாகும். இவ்வகை விமர்சனங்களை முன்வைப்போர் மறைமுகமாக ஒரு மாற்றுத் தலைமையை முன்னிறுத்த முயல்கின்றனர். சமீபத்தில் வெளிவந்த 'சிவில் சமூக அறிக்கை' என்பதும் அத்தகைய ஒன்றுதான். இதில் சில முரண்பாடுகள் இருப்பினும் ஒரு கருத்து வெளிப்பாடு என்ற வகையில் அதனை வெளிப்படுத்துவதற்குள்ள சுதந்திரம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆனால், இவ்வாறான விமர்சனங்களை அரசுடன் தொடர்புபடுத்துவது அடிப்படையிலேயே தவறானதாகும். சமீபத்தில் வெளிவந்த அறிக்கையை த.தே.கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களே அரசுடன் தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டிருந்தனர். இதுவும் ஒரு வகை ஏகப்பிரதிநிதித்துவவாத அரசியலின் தொடர்ச்சியே! ஒருவகையில், புலிகள் தாங்கள் எதிரிகள் என்று கருதியோரை மக்களின் பொதுப்புத்தியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு மேற்கொண்டதொரு உபாயத்தின் தொடர்ச்சியென்றே இதனைச் சொல்லலாம். எனவே த.தே.கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் விமர்சனங்களை முதிர்ச்சியுடனும், அறிவுடனும் எதிர்கொள்ளும் நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.

மூன்றாவது வகை விமர்சனம் - த.தே.கூட்டமைப்பு இன்றைய அரசியல் சூழலை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றியது. இவ்வகை தரப்பினர் கடந்த முப்பது வருடகாலமாக செல்வாக்குச் செலுத்திய அரசியல் நம்பிக்கையொன்றின் வீழ்சியைத் கருத்தில் கொள்பவர்களாகவும், இன்றைய உலக அரசியல் ஒழுங்கில் பிராந்திய சர்வதேச அரசியல் அணுகுமுறைகளில் இலங்கை எத்தகைய கவனிப்புக்குள்ளாகியிருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு சிந்திப்பவர்களாகவும் இருக்கின்றனர். த.தே.கூட்டமைப்பு இலங்கையின் நிலைமைகளில் இருந்து முடிவுகளை எடுக்க வேண்டுமேயன்றி, புலம்பெயர் அல்லது ஏனைய தரப்பினர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து சிந்திக்கக் கூடாது என்ற வாதத்தையும் இவ்வகை தரப்பினர் முன்னிறுத்தி வருகின்றனர்.

அடிப்படையில் இக்கட்டுரை, மேற்படி முதலாவது மற்றும் மூன்றாவது தரப்பினரையே முக்கிய தரப்பினராக அடையாளம் காண்கிறது. இன்று மாற்றுத் தலைமையை மறைமுகமாக முன்னிறுத்துவோர் புதிய அரசியல் சூழலை விளங்கிக் கொள்ள முடியாதவர்களாகவும், ஒரு வகை கடந்தகாலத்தின் கற்பனையை வலிந்து தங்கள் மீது திணித்துக் கொண்டவர்களாகவுமே இருக்கின்றனர். தவிர, கூட்டமைப்பிற்கு மாற்றான அரசியல் என்ன என்பதையும் சொல்ல முடியாதவர்களாகவே இருக்கின்றனர். இதுவே இவர்களின் பலவீனமாகவும் இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பு, குறிப்பான இன்றைய அரசியல் சூழலை கையாள முடியாமல் போகும்போது ஒரு மாற்றுத் தலைமை தவிர்க்க முடியாமல் போகலாம் என்ற யதார்த்தத்தையும் இந்தக் கட்டுரை ஏற்றுக் கொள்கின்றது.

  • தொடங்கியவர்

த.தே.கூட்டமைப்பும் சவால்களும்

இன்றைய சூழலில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக, மக்களால் தெரிவு செய்யப்பட்டதொரு தலைமை என்ற வகையில், த.தே.கூட்டமைப்பு அக-புற ரீதியாக எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைப் பார்ப்போம். முதலாவது சவால் - கூட்டமைப்பு, பல்வேறு முரண்பட்ட அரசியல் பண்பு கொண்ட கட்சிகளின் கூட்டு என்பதிலிருந்து தொடங்குகின்றது. அந்தவகையில் ஒவ்வொருவரும் தங்களது பிரத்தியேக அரசியல் இருப்பில் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

புலிகளின் தலைமையில் த.தே.கூட்டமைப்பு இருந்த காலத்தில், கூட்டமைப்பு அரசியல் தலைமையாக இருக்கவில்லை. எனவே தங்களின் அரசியல் இருப்பை பாராளுமன்ற ஆசனத்திற்கு வெளியில் தேடவேண்டிய அவசியப்பாடும் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அப்படியே கூட்டமைப்பு விரும்பியிருந்தாலும் கூட, அது அவர்களுக்கு முயல் கொம்பாகவே இருந்திருக்கும். ஒரு வேளை யுத்தம் 2010 வரை தொடர்ந்திருக்குமானால் இன்றைய தலைவரான சம்பந்தன் அரசியலிலிருந்துகூட ஒதுங்கியிருக்கக் கூடும். அந்தளவிற்கே கூட்டமைப்பின் தலைமைத்துவ தகுதி நோக்கப்பட்டது.

ஆனால் புலிகளின் வீழ்சியைத் தொடர்ந்து, த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களின் தேசியத் தலைமை என்னும் தகுதியை சுலபமாகப் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் அது ஒரு பெயரளவு நிலைமையாகவே இருந்தது. இன்றுவரை தலைமைத்துவத்திற்கான ஒரு வகை பனிப்போர் தன்மையிலேயே கூட்டமைப்பின் உள்ளமைப்பு காணப்படுகிறது. இதற்கு சிறந்த உதாரணம் - சமீபத்தில் கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்து வெளிவந்த சிவில் சமூக அறிக்கையில், தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினருமான பேராசிரியர் சிற்றம்பலம் பெயரிட்டிருந்தார். இது கூட்டமைப்பின் தலைமைத்துவ பனிப்போர் தன்மைக்கு சிறந்த ஆதாரமாகும். இந்த நிலைமையே மறுபுறத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்களே முன்னுக்குப் பின் முரண்பாடான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதன் காரணமுமாகும். இந்த நிலைமை உரிய முறையில் சீர் செய்யப்படவில்லையாயின், சம்பந்தருக்குப் பின்னரான கூட்டமைப்பு என்பது உடைவுறுவது நிட்சயமாகும். எனவே இது இன்றைய நிலையில் கூட்டமைப்பு எதிர்கொண்டிருக்கும் முக்கிய அகநிலைச் சவாலாகும். இன்றைய சூழலில் தமிழர்களின் தலைவர் என்ற வகையில் இதனை கருத்தில் கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு மூத்த தலைவரான சம்பந்தருக்குண்டு.

இந்த அகநிலைச் சவாலே கூட்டமைப்பிற்கான புறநிலைச் சவாலுக்கான இடைவெளியாகவும் இருக்கின்றது. இன்றைய நிலையில் கூட்டமைப்பானது, நிலைமைகளுக்கு ஏற்றவாறான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டுமென்பது சம்பந்தரின் புரிதலாக இருந்தபோதும், அதற்கு கூட்டமைப்பில் உள்ளவர்களே மாறான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவே மறுபுறமாக, கூட்டமைப்பின் அரசியல் தலைமைத்துவ தகுதியை கேள்விக்குள்ளாக்க முயல்வோருக்கான வாய்ப்பாகவும் இருக்கிறது.

இலங்கையின் அரசியல் நிலைமையும் கூட்டமைப்பும்

அரசியல் நிலைமை என்பது விருப்பத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடைப்பட்ட ஒன்றாகும். துரதிஸ்டவசமாக இத்தகைய புரிதல் நமது அரசியல் அரங்கில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்துவருகிறது. இதுவே பல்வேறு சந்தர்ப்பங்களில் நமது பின்னடைவுக்கும் காரணமாக இருந்திருக்கின்றது. இன்று நமது விருப்பம் எதுவாக இருப்பினும், நமக்கு முன்னால் ஒரு அரசியல் யதார்த்தம் இருப்பதை விளங்கிக் கொள்ள வேண்டிய கடப்பாடு நமக்குண்டு. இந்த யதார்த்தத்தை புறக்கணிக்கும்போது நாம் நமக்கான அரசியல் அரங்கை இழந்து போகின்றோம் என்பதே உண்மை.

எந்தவொரு பயணமும் வெறுமையில் ஆரம்பிப்பதில்லை. ஏதாவது ஒரு இடத்தில் இருந்தே நாம் அதனை ஆரம்பித்தாக வேண்டும். இன்றைய சூழலில் தமிழரின் அரசியல் பயணத்தை எந்த இடத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்? இதுவே புலிகளுக்கு பின்னரான அரசியல் அரங்கில் வெளித்தெரியும் பிரதான அகநிலை முரண்பாடாகும். இந்தக் கட்டுரை – தமிழர் அரசியலை ஒரு ஆரோக்கியமான தீர்வுநோக்கி நகர்த்த வேண்டுமாயின் முதலில், இலங்கையின் அனைத்து ஸ்தாபன ஏற்பாடுகளையும் நாம் பயன்படுத்த வேண்டுமென்றே வாதிடும்.

எவ்வாறு பாராளுமன்றத்தை கையாளுகின்றோமோ, எவ்வாறு உள்ளூராட்சி சபைகளை பயன்படுத்துகின்றோமோ அதேபோன்றே மாகாணசபை முறைமையையும் நாம் பயன்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். மாகாண சபையை ஏற்றுக் கொண்டால், அது ஒரு அரசியல் தற்கொலை என்போர், பாராளுமன்றத்தை பயன்படுத்துவதையோ, உள்ளூராட்சியை பயன்படுத்துவதையோ நிராகரிக்கவில்லை. இலங்கையின் அனைத்து அரசியல் ஸ்தாபன வடிவங்களையும் தமிழர் நிராகரிக்க வேண்டுமென்னும் ஒரு வாதத்தை ஒரு தரப்பினர் முன்வைப்பின், மாகாணசபை முறைமையை அவர்கள் நிராகரிப்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

ஆனால் இன்று மாகாண சபையை நிராகரிக்க வேண்டும் என்போர், த.தே.கூட்டமைப்பை கேள்விக்குள்ளாக்க வேண்டுமென்னும் நோக்கமுடையவர்களாக இருக்கின்றனரே தவிர மறுபுறமாக இலங்கையின் அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டு பேசுவோராக இல்லை. விடுதலைப்புலிகள் தனிநாட்டுக்காக போராடிய சந்தர்ப்பத்திலும் கூட, மறுபுறமாக அரச கட்டமைப்புக்களை பயன்படுத்தும் நடைமுறையையே கொண்டிருந்தனர். வன்னியில் ஒரு நடைமுறை அரசை நிர்வகித்த காலத்தில் கூட, அரசாங்க அதிபரின், ஏனைய அரச திணைக்களங்களின் நிர்வாகத்தை புலிகள் முற்றாக நீக்கியிருக்கவில்லை. மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு பங்கு கொள்ளுவதென்னும் விவாதத்தின்போது மட்டுமே, சிலர் அதனை தமிழர் நலனுக்கு மாறான ஒன்றாகக் காட்ட முயற்சிக்கின்றனர். இது அடிப்படையிலேயே சில தரப்புக்களின் விருப்பங்களைக் கருத்தில் கொண்டு மேலெழுந்திருக்கும் வாதமாகும்.

தொடர்ந்தும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வை ஒரு வகையான 'புதிர்' நிலையில் வைத்துக்கொள்ள முயற்சிப்போரே இத்தகையதொரு அரசியல் நிலைப்பாட்டை முன்தள்ள முயல்கின்றனர். இதனை த.தே.கூட்டமைப்பு பாரதூரமானதொரு விடயமாக கருத வேண்டியதில்லை என்பதே இக்கட்டுரையின் துணிபு. இலங்கையின் சகல அரசியல் ஸ்தாபனங்களிலும் தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதும், அவ்வகை அரசியல் ஸ்தாபனங்களின் ஊடாக கிடைக்கவுள்ள அனைத்து நன்மைகளையும் தமிழர்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையிலான பொறிமுறையொன்றை திட்டமிடுவதுமே இன்றைய சூழலில் த.தே.கூட்டமைப்பு செய்ய வேண்டிய முதன்மைப் பணியாகும். 'அடுத்தது என்ன' என்று கேள்வியை எழுப்புவோருக்கு இக்கட்டுரையின் பதிலும் இதுவேயாகும்.

அரசியல் தீர்வும் த.தே.கூட்டமைப்பும்

இது இன்னுமொரு சிக்கலான ஆனால் நிராகரித்துச் செல்ல முடியாத விடயமாகும். இன்று த.தே.கூட்டமைப்பின் மீது விமர்சனங்களை முன்வைப்போர், அரசியல் தீர்வு விடயத்தையே முதன்மையான ஒன்றாகக் கொள்கின்றனர். இன்றைய அரசு புலிகளை வெற்றிகொண்ட அரசாகவும், அதே வேளை சிங்கள மக்களது ஆதரவில் மட்டுமே ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளக் கூடியளவிற்கான ஆளுமையைக் கொண்டிருப்பதாலும், அரசியல் தீர்வு விடயத்தை இரண்டாம் பட்சமாகவே கருதுகிறது. எனினும் சர்வதேச ரீதியாக குறிப்பாக போரின்போது இடம்பெற்றதாக, சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களால் எழுந்துள்ள அழுத்தங்களை சமாளிக்க வேண்டிய பொறுப்புக்கும் இந்த அரசு ஆளாகியுள்ளது. இவ்வாறான சர்வதேச அழுத்தங்களை சமாளிக்கும் வகையிலேயே அரசு, கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது.

புலிகள் அழிக்கப்பட்ட நிலையில், அரசு மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தை தொடர்பில் அரசின் அடிப்படைவாத பங்காளிகள் எதிர்ப்பைக் காட்டிவரும் சூழலிலும் கூட, அரசு கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை புறம் தள்ளவில்லை. இதனை நாம் மேற்படி சர்வதேச அழுத்தங்களின் ஊடாகவே புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அரசிற்கு இனப்பிரச்சனைக்கான ஒரு நியாயமான தீர்வைக் காண வேண்டுமென்னும் ஈடுபாடு பெரியளவில் இல்லை என்பதை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். நிட்சயமாக ஒரு சர்வதேச அழுத்தத்தின் ஊடாகத்தான் தமிழ் மக்களுக்கானதொரு தீர்வைக் காண முடியும். ஆனால், சில ஆய்வாளர்கள் சொல்லிவருவது போன்று, தற்போது தமிழர்களுக்கு சாதகமானதொரு சர்வதேச வெளி உருவாக்கியிருக்கிறது என்றவாறான வாதங்கள் எல்லாம் அப்பாவித்தனமானது. முன்னரும் இப்படியொரு கற்பனையிலேயே தமிழ் மக்கள் சிறைவைக்கப்பட்டனர். புலிகளின் அழிவு அந்த சிறையை உடைத்து மக்களை வெளியில் கொண்டு வந்தது. ஆனால் மீண்டும் அதே பல்லவி.

சர்வதேச ரீதியாக இலங்கை அழுத்தங்களை எதிர்கொண்டிப்பது உண்மையே. ஆனால் அவைகள் தமிழ் மக்களுக்கான தீர்விற்கான அழுத்தங்களல்ல. மேற்கின் நகர்வுகளுக்கும் இலங்கையின் சமீபகால நகர்வுகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளை அடிப்படையாக் கொண்டவையாகும். ஆனால் இத்தகைய அழுத்தங்களை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றோம் என்பதுதான் விடயம். ஆனால் சர்வதேசம் இலங்கை தொடர்பில் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும், இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வுப் பொறிமுறையை இலங்கைக்குள்ளேயே எதிர்பார்க்கும். அத்தகையதொரு பொறிமுறையில் பங்குகொள்ளுமாறே கூட்டமைப்பையும் வலியுறுத்தும்.

இந்த இடத்தில்தான் அரசு பாராளுமன்ற தெரிவுக் குழுவை ஒரு அணுகுமுறையாக சிபார்சு செய்துள்ளது. அதில் கூட்டமைப்பை பங்குகொள்ளுமாறும் அழைப்பு விட்டிருக்கிறது. ஒரு பல்லின ஜனநாயக நாடு என்ற வகையில், பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாகவே ஒரு நாட்டின் அரசியல் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான முடிவை எடுக்க முடியும் என்னும் வாதத்தையே அரசு முன்வைக்கும். உண்மையில் இந்த வாதம் இலகுவாக நிராகரிக்க முடியாத ஒன்றாகவும் அமையும். இந்தியா, அமெரிக்கா உட்பட்ட புற சக்திகளும் இந்தப் பொறிமுறையை பயன்படுத்துமாறு கூட்டமைப்பிற்கு சிபார்சு செய்யவும் சந்தர்ப்பமுண்டு.

எனவே பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்படின், கூட்டமைப்பு அதில் பங்குகொள்வதை தவிர்க்க முடியாமல் போகலாம். பிறிதொரு கோணத்தில் பார்ப்போமாயின் - கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கு கொள்வதால் அப்படி என்ன பெரிய ஆபத்து நேரப் போகிறது? கூட்டமைப்பு தெரிவுக் குழுவை நிராகரிக்கும் பட்சத்தில் அரசின் வாதமே வலுப்படும். எனவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவையும் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் பயன்படுத்த முயற்சிக்கலாம். அரசு தமிழ் மக்களுக்கான நியாமானதொரு தீர்வைக் காண்பதில் இதய சுத்தியுடன் இல்லை, என்பதை இந்தியா மற்றும் சர்வதேசத்திற்கு நிரூபிப்பதற்கான வாய்ப்பாகவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஊகங்களின் மூலமாக அரசை எதிர்கொள்ளுவதற்கு மாறாக, கூட்டமைப்பு அரசின் இணக்கப்பாட்டு பொறிமுறைகளின் ஊடாகவே அரசை விமர்சிக்கும், கேள்விக்குள்ளாக்கும் ஜனநாயக அரசியல் செயற்பாடுகளை தங்களுக்கான தெரிவாக்க வேண்டும்.

இத்தகைய சவால்களை, வாய்ப்புக்களை முதிர்ச்சியுடன் அணுக முயல்வதே கூட்டமைப்பு அடுத்து செய்ய வேண்டிய பணிகளாக இருக்க முடியும். அடுத்தது என்ன என்னும் கேள்விக்கான பதிலும் இதுவாகவே இருக்க முடியும்.

- யதீந்திரா

==========

ஆயிரம் பூக்கள் பகுதி வாசகர்களும் பங்குகொண்டு விவாதிக்கக்கூடிய ஒரு களம். இங்கு முன்வைக்கப்படும் கருத்துகளுக்கான எதிர்வினைகளுக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிக்க பொங்குதமிழ் தயாராகவே உள்ளது.

முன்வைக்கப்படும் கருத்துகள் விவாதங்களோடு தொடர்பானதாகவும் ஊடக அறம் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். கட்டுரைகளை சுருக்கவும் தவிர்க்கவும் ஆசிரியருக்கு உரிமையுண்டு.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=1e55c05b-e950-453b-be9c-dbac77d4f9d5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.