Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் பிடியில் இருந்து விலகி சர்வதேச மயப்படும் இலங்கை விவகாரம் - செல்வரட்னம் சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பிடியில் இருந்து விலகி சர்வதேச மயப்படும் இலங்கை விவகாரம் - செல்வரட்னம் சிறிதரன்
23 நவம்பர் 2013
 


global_CI.jpg



மழை விட்டாலும் தூவானம் இன்னும் விடவில்லை என்று சொல்வார்கள் இலங்கையில் நடந்து முடிந்துள்ள பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்த நிலைமையிலேயே இருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையில் பாரதத்தின் பிடிக்குள் அடங்கியிருந்த இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம், இந்திய அரசிடமிருந்து கைநழுவி சர்வதேசமயப்படுகின்றதா என்ற சந்தேகமும், நடந்து முடிந்துள்ள பொதுநலவாய மாநாட்டையடுத்து எழுந்துள்ளது.

கொழும்பு மாநாட்டுத் தலையிடி

பொதுநலவாய அமைப்பி;ன் உறுப்பு நாடு என்ற வகையில் அந்தஸ்து ரீதியாக கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய தேவை இந்தியப் பிரதமருக்கு இருந்தது. ஆயினும் இந்தியப் பிரதமர் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கை ஒரு அரசியல் பேரலையாக தமிழ் நாட்டில் இருந்து எழுந்து மத்திய அரசை மோதியிருந்தது. இதனால் இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வதா இல்லையா என்ற பெரியதொரு பிரச்சினை புதுடில்லியின் அரச மட்டத்தி;ல் ஏற்பட்டிருந்தது. இந்தப் பிரச்சினை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குப் பெரும் தலையிடியைக் கொடுத்திருந்தது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன, அதனால் கொழும்பில்  நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக கருணாநிதியும் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் குரல் கொடுத்து, இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருந்தன.

இந்த அழுத்தத்தின் காரணமாக பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்லாமல் விட்டிருந்த போதிலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட் தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்றின் மூலம், இந்தியா அதில் கலந்து கொள்வது என தீர்மானித்து  அந்தக் குழு கொழும்பு சென்றிருந்தது. இப்போது பொதுநலவாய மாநாடு நடந்து முடிந்துவிட்டது. இருந்த போதிலும், அதில் இந்தியா கலந்து கொண்டமைக்கு எதிரான அலைகள் இன்னும் ஓய்ந்தபாடாகத் தெரியவில்லை.

மத்திய அரசுக்கு எதிராக வழக்கு

தமிழக சட்ட சபையில் ஏகமதனாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும், அதையும் மீறி, இந்தியா இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டமையானது, வரம்பு மீறிய செயல் எனக் கூறி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களான சுந்தரவதனம், ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள்.

இலங்கையில் நடைபெற்ற உச்சி மாநட்டில்; கலந்துகொள்வது என்று மத்திய அரசு எடுத்த முடிவும், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில் கலந்துகொண்டதும் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர்கள் கோரியிருக்கின்றார்கள்.

கடந்த 1994ஆம் ஆண்டு நடைபெற்ற எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், அடிப்படை கட்டமைப்புகளை மீறாமல் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அதன் அடிப்படையில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், மக்களின் போராட்டங்களை கருத்தில் கொள்ளாமல், தமிழகத்தின் பிரதிநிதிகளை மத்திய அரசு கலந்து ஆலோசிக்காமல் பொதுநலவாய  மாநாட்டில் கலந்துகொள்ள மத்திய அரசு முடிவெடுத்தது என்று இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர்கள் வாதிடுகின்றார்கள்.

இனி இலங்கை குறித்த வெளியுறவு தொடர்பான விடயங்களை தமிழ்நாடு அரசு அல்லது தமிழ் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்பதற்காக நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கின்றோம் என்று, இந்த வழக்கின் மனுதாரர்களான வழக்கறிஞர்கள் சுந்தரவதனன், ராஜாராமன் ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்திய ஏன் கலந்து கொள்ளவில்லை?

பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கின்ற முக்கியமான பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் அயல் நாடாகிய இலங்கையில் அந்த அமைப்பின் மாநாடு நடக்கும்போது, அதில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு, இந்தியாவுக்கு வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். மாநாடு நடைபெறுகின்ற பிராந்தியத்தின் வல்லரசு என்ற வகையிலும் இந்தியா அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத் தேவை எழுந்திருந்தது.

ஆயினும், மனித உரிமை நிலைமைகளில் இலங்கை சர்வதேச மட்டத்தில் பி;ன்னடைந்திருப்பதனால், அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அங்கு நடைபெறுகின்ற இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்பதே தமிழ் நாட்டின் அரசியல் நிலைப்பாடாகும். தமிழ் நாட்டில் இருந்து எழுந்திருந்த அழுத்தம் காரணமாகவே இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டைப் புறக்கணித்திருந்தார். புறக்கணித்திருந்தார் என்று சொல்வதிலும் பார்க்க, போகாமல் ஒதுங்கியிருந்தார் என்பதே பொருத்தமானதாகும்.

ஏனெனில் மாநாட்டை அவர் புறக்கணித்திருந்தால், அதற்கான காரணத்தை இந்திய அரசு வெளியிட்டிருக்கும். வெளியிட்டிருக்க வேண்டும். பொதுநலவாய மாநாட்டிற்கு வரப்போவதில்லை என்பதை இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்கு அறிவித்திருந்த போதிலும், அதற்கான காரணம் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்று இலங்கை கூறியிருந்தது.

உள்நாட்டு அரசியல் காரணங்களினாலேயே கொழும்பில் நடக்கும் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதிருக்க முடிவுசெய்திருந்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சரான ஜி.எல். பீரிஸே தெரிவித்திருந்தார் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தை உண்மையிலேயே இந்தியா பொதுநலவாய மாநாட்டுடன் சம்பந்தப்படுத்தி, அதன் காரணமாக, அதில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால், அந்த காரணத்தை இந்திய அரசு வெளிப்படையாகவே கூறியிருக்கும் - கூறியிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

தமிழ்நாட்டின் அரசியல் செல்வாக்கு

மாறாக, மத்திய அரசின் மீது தமிழ் நாடு கொண்டுள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக, தமிழ் நாட்டு சட்ட சபையில் மேற்கொள்ளப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அடங்கிப் போக வேண்டியதயிற்று. இதன் காரணமாகவே, இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடுதான், இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தை அதன் பிடியில் இருந்து கைநழுவிச் செல்வதற்கு வழி வகுத்திருக்கின்றது என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றார்கள்.

இந்தியா ஒரு பெரிய நாடு. அதனை ஓர் உபகண்டம் என்றுகூடச் சொல்வார்கள். அந்த அளவு பெரிய நாடாக இருந்த போதிலும், இந்திய மத்திய அரசாங்கமானது, வலுவான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றதா என்று வினவத்தக்க வகையில் இனப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட – பின்னடைந்துள்ள இலங்கையின் மனித உரிகை விவகாரத்தைக் கையாண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

ஏனெனில் இலங்கை விடயத்தில் இந்திய மத்திய அரசு தமிழ் நாட்டின் விருப்பு வெறுப்புகள், அரசியல் முடிவுகளைக் கடந்து செயற்படாத ஒரு போக்கையே கைக்கொண்டு வருகின்றது. இந்தியா என்ற ஒரு பெரிய நாடு, உறுதியான ஓர் அரசியல் நிலைப்பாட்டில் இல்லாமல், தனது மாநிலம் ஒன்றின் கைப்பிடிக்குள் அடங்கிச் செயற்படுகின்ற ஒரு நாடாக, இலங்கையில் நடைபெற்ற பொதுலவாய மாநாடு தொடர்பில் எடுத்த முடிவின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

குறுகிய வட்டத்திற்குள் நோக்கும்போது, தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டில் இந்திய மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துவது நன்மை பயக்கத்தக்கது என்றே தோன்றுகின்றது.

ஆனால், மத்திய அரசாங்கத்தில் இருப்பவர்கள், அடுத்து வருகின்ற தேர்தலில் மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்ற அரசியல் நோக்கத்தை முன்வைத்து, தமிழ் நாட்டுக்கு அடங்கிப் போவது பரந்த அளவில் பொருத்தமான காரியமாகாது. தமிழ் நாடு உணர்வுபூர்வமான ஒரு நிலையில் இலங்கைத் தமிழ்மக்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றது. உணர்வின் அடிப்படையிலான ஆதரவு காரணமாகவே, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ் நாட்டில் கொல்லப்பட்டு, அந்தக் கொலையை விடுதலைப்புலிகளே செய்தார்கள் என்றபோது, தமிழ் நாடும்கூட, உணர்வு நிலையில் விடுதலைப்புலிகளை வெறுத்து ஒதுக்கியிருந்தது. தமிழ் நாட்டின் ஆதரவும் அதனையடுத்து, மங்கிப் போயிருந்தது. உணர்வுபூர்வமாக அல்லாமல் காரண காரியங்களைச் சீர்தூக்கிப் பார்த்து அதனடிப்படையில் வழங்கப்படுகின்ற ஆதரவு இன்னும் பலமாக இருக்கும். நீடித்து இருக்கும் என்று துணிந்து கூறலாம்.

இந்தியா முதல் நிலையில் இருந்திருக்க வேண்டும்

இதேபோன்று இந்திய மத்திய அரசும் உணர்நிலையைக் கடந்து, அரசியல் இலாபம் கருதிய நிலைப்பாட்டுக்கு அப்பால் இருந்து செயற்பட்டிருக்குமேயானால், கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டைப் பலனளிக்கத்தக்க வகையில் பயன்படுத்தியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது. அத்தகைய ஒரு நிலைமையில் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தையடுத்து, மனித உரிமை விடயங்களில் சுயமான ஒரு விசாரணை நடத்த வேண்டும். இல்லையேல் சர்வதேச விசாரணையை நாட வேண்டியிருக்கும் என்று, டேவிட் கமரன் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்த இடத்தில் இந்தியா முன்னணியில் இருந்திருக்கும்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் பின் கொழும்பு திரும்பிய பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து, மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் அத்துடன் ஜனநாயக நடைமுறைகளை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று கடுந்தொனியில் எச்சரிக்கை செய்திருந்தார்.

இந்த எச்சரிக்கையையடுத்து நாடு திரும்பி,  பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ள, டேவிட் கமரன் இலங்கை போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பிக்கை தரத்தக்க, வெளிப்படைத்தன்மையுடைய, சுதந்திரமன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறி, இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய விவகாரத்தை பரந்த வீச்சில் சர்வதேச மயமாக்கியிருக்கின்றார்.

இவ்வாறு இலங்கை விவகாரம், பிரித்தானிய பிரதமரினால் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்பே, இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இறுதி யுத்தத்தி;ன்போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கின்றார். மனித உரிமைகளை மீறிச் செயற்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்று அவர் கோரியிருக்கின்றார்.

இலங்கையின் யுத்தமோதல்கள் உள்ளிட்ட இனப்பிரச்சினை விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே இந்தியா பங்களிப்பு செய்து வந்திருக்கின்றது. அத்துடன் அதன் அதிமுக்கிய அயல்நாடாகவும் இலங்கை விளங்குகின்றது. இந்த நிலையில், மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதன் மூலம், யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் - ஒரு சூழ்நிலையில் இந்தியாவே, மனித உரிமைகள் விடயம் குறித்து முதலில் குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

சுமார் 65 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தி;ற்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் இந்த விடயத்தை உலகத்தி;ன் உச்சிக்குக் கொண்டு சென்றதன் பின்னர்தான் இந்தியாவினால் - அதன் முக்கியமான அமைச்சர் ஒருவரினால் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை விசாரணைகள் நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று குரல் எழுப்ப முடிந்திருக்கின்றது.

முன்னெப்போதும் இல்லாத அளவில் இலங்கைக்கு அழுத்தங்கள்

ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு தடவைகள் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளுக்கு முன்னணியில் இருந்து இந்தியா ஆதரவு வழங்கியிருக்கின்றது. இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால், அதேநேரத்தில் ஐநாவுக்கு  வெளியே, பொதுநலவாய அமைப்பு போன்ற ஓர் அமைப்பின் ஒரு மாநாட்டுச் சூழலில் இந்தப் பிரச்சினையை முதலாவது ஆளாகக் கையாண்டிருக்க வேண்டும். அதனைச் செய்வதற்கு இந்தியா தவறியிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

இத்தகைய ஒரு சூழலில்தான், இந்தியாவின் பிடியில் இருந்து இலங்கை விவகாரம் சர்வதேச அரங்கிற்குள் தளம் மாறுவதற்குத் தலைப்பட்டிருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.

தமிழ்நாடும் சரி, தமிழ்நாட்டுடன் இணைந்து, கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என குரல் கொடுத்தவர்கள் அனைவருமே, மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு இனியில்லை என்ற அளவில் அழுத்தம் கொடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். புறக்கணி;ப்பின் மூலம் கொடுத்த அழுத்தங்களிலும் பார்க்க, மாநாட்டில் கலந்து கொண்டு, சாதுரியமாகச் செயற்பட்டதன் மூலம், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் அதிகூடிய அழுத்தத்தை இலங்கை மீது பிரயோகித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது,

இலங்கை மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது, அங்கு செல்லவே கூடாது என்று தீர்மானித்திருந்த கனடா மற்றும் மொரீசியஸ் போன்ற நாடுகளி;ல் அடியொட்டி, பிரித்தானியாவும் நடந்து கொள்ள வேண்டும் என்று அதன் பிரதமர் டேவிட் கமரனுக்கு கொடுக்கப்பட்டிருந்த அழுத்தங்களுக்கு மத்தியிலேயே அவர், கொழும்புக்கு வந்து யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தையும் மேற்கொண்டிருந்தார்.

இலங்கைக்குச் செல்வேன். அங்கு நடைபெறுகின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வேன். அந்த நாட்டின் நிலைமைகளை வெளிச்சம் போட்டு காட்டுவேன் என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டே கொழும்பில் காலடி எடுத்து வைத்தார். அவர், தான் சொல்லியவாறே, இலங்கையின் மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திரம், அந்த நாட்டின் உண்மையான ஜனநாயக நிலைமைகள் என்பவற்றை அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றார். இதன் ஊடாக முன்னெப்போதும் இல்லாத அளவில் இலங்கை விவகாரம் - இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் சர்வதேச மயமாகியிருக்கின்றன.

மனித உரிமைகளைப் பாதுகாத்து, முன்னேற்றுமாறு சீனாவும் கோருகின்றது

இலங்கையி;ன் மனித உரிமை நிiமைகள் மேம்பட வேண்டும் என்ற விடயத்தில் பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த பல நாடுகள் குறிப்பாக, இந்தியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் வரிசையில் எதிர்பாராதவிதமாக சீனாவும் இப்போது இணைந்து குரல் எழுப்பியிருக்கின்றது.

'மனித உரிமைகளைப் பாதுகாத்துப் பேணவும், அவற்றை முன்னேற்றுவதற்கும் இலங்கை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கின் காங் கூறியிருக்கின்றார்.

'சர்வதேச மனித உரிமை நோக்கங்களை எட்டுவதற்கு பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் கலந்துரையாடல்களின் மூலமாகவே நாடுகள் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்பது எமது நம்பிக்கை. அந்த வகையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் முன்னேற்றப்பட வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டிருக்கி;ன்றார்.

இலங்கையுடன் மிகவும் நெருக்கமான உறவை ஏற்படுத்தி, பல மில்லியன் ரூபா நிதியை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ள சீனா, கடந்த 2011, 2012 ஆம் ஆண்டுகளில் ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான மனித உரிமை பிரேரணைகளுக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களித்திருந்தது. இப்போது முதன் முறையாக இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அது குரல் கொடுத்திருக்கின்றது.  

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பல முனைகளில் இருந்தும் அழுத்தங்கள் எழுந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தி;ன் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கப் போகின்றது என்பது தெரியவில்லை. தொடர்ந்தும் இங்கு மனித உரிமைகள் மீறப்படவில்லை. நாங்கள் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என பிடிவாதமாக மறுக்கப்போகின்றதா அல்லது சுதந்திரமான விசாரணைகளை நடத்தப் போகின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99379/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா முதல் நிலையில் இருந்து இலங்கையை கேள்வி கேட்க முடியாது. காரணம் இந்தியாவும் கொலைகளில் பங்காளி. போரை ஆரம்பித்தபோது 'நீங்கள் உதவாவிட்டால் எங்களால் போரை வெல்லமுடியாது; பிறநாடுகளிடம் போவதுதான் ஒரே வழி' என்று இந்தியாவை முன்னிறுத்திய செயல் சிங்களவனின் நரித்தந்திரம்.

சோனியா/ராகுல் கூட்டணி மலையாள ஜால்ராக்களை நியமித்து இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தை நாசம் செய்துவிட்டது.

  • 2 weeks later...

நல்ல ஆய்வு. நன்றி கிருபன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.