Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்-1,2,3,4,5

Featured Replies

இன்றைய பூகோள அரசியலிலே, இரு சக்திமிக்க நாடுகளுக்குகிடையிலான உறவென்பதுவும், உறுதித் தன்மையென்பதுவும் பொருளாதரா நலன்களை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது. மாறாக அரசியல் என்பது பொருளாதாரத்துக்கு நிகராக செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாக முக்கியத்துவப்படுத்தப்படவில்லை.

இது, நான்காம் கட்ட ஈழப்போரில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், ஈழத்தமிழர்களுடைய இருப்புக்கான போராட்டம் இனியும் உத்வேகத்துடன் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை, சமிஞ்சை. போராட்டம் என்பது தனித்து போர்க்கலங்களால் மட்டும் நகர்த்தப்படுவதல்ல.

போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரம், ஊடகம், மற்றும் இராஜதந்திரம் போன்றவையும் ஆயுதங்களாக மாற்றமடையும்.

களம், காலம், சூழல் போன்றவற்றை வைத்தே போராட்டத்தின் போக்குநிலையும் அது தரிக்க வேண்டிய ஆயுதமும் நிர்ணயிக்கப்படும். இது, 'ஈழத்தமிழர் அரசியலை முன்னகர்த்துவதற்காக மாயைகளை களைதல் அல்லது தடைகளை அகற்றல்' என்ற எனது தொடர் கட்டுரையின் பாகம் இரண்டிற்காக மார்ச் 3ம் திகதி 2011ல் எழுதப்பட்ட வரி.

அரசியலானது எப்போதும் பொருளியலால் நிர்வகிக்கப்படுகின்ற சமகால உலகின் போக்கில், இலங்கைத்த தீவில் வாழும் தமிழ்மக்களின் புனர்வாழ்வுக்கு நிலையான தீர்வை வழங்குவதற்கேற்ப தனது பொருளாதாரக்கொள்கை குறித்து இந்தியா ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டத்திலுள்ளது என்று இந்தியாவின் முன்னால் இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதி தென்னிந்திய பாரம்பரிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 'இலங்கைத் தீவுடனான தனிப்பட்ட தொடர்புகள் தொடர்பான நினைவுமீட்டல் மற்றும் அதற்கும் அப்பால்' என்ற தலைப்பில் அண்மையில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

மேலே முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் ஈழத்தமிழர்களுடைய இருப்பும், எதிர்காலமும் உரியமுறையில் உறுதிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களையும், சாத்தியப்பாடுகளையும் இன்னமும் கொண்டுள்ளன என்பதற்கான ஆதாரமான வாதங்கள் ஆகும். பூகோள அரசியலிலே அண்மைகாலம் தொடக்கம் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் இத்தகைய ஆதாரவாதங்களை மெய்ப்பிக்கின்றன. காலத்தின் தேவை கருதி அவற்றில் முக்கியமான சில விடயங்களை இப்பத்தியில் ஆய்வுக்குட்படுத்துகிறேன்.

அனைத்துலக உறவென்பது [international Relations] காலத்துக்கு காலம் மாற்றுநிலையாக்கம் [Transformation] அடையும். இதன் அடிப்படையிலலேயே அனைத்துலக ஒழுங்கும் [international Order] மாற்றமடைகிறது.

அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டம்

அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகமான பென்ரகன் [Pentagon] கடந்த ஜனவரி 5ம் [2012] திகதி அடுத்த பத்து ஆண்டுகளுக்கான தமது பாதுகாப்பு திட்டத்தை வெளியிட்டது. இந்த புதிய திட்டத்தில், பாதுகாப்பு செலவீனத்தை குறைப்பதில் கூடிய கரிசனை செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த காலத்தைப் போலல்லாமல், எதிர்வரும் பத்தாண்டுகளுக்கு இரு போர்முனைகளை ஓரே காலப்பகுதியில் திறப்பதை கட்டுப்படுத்துவது அல்லது நிறுத்துவது அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் திட்டங்களில் முக்கியமான விடயங்களில் ஒன்று.

உதாரணமாக, இரண்டாயிரங்களில் ஆப்கானிஸ்தான் [ஒக்டோபர் 2001] மற்றும் ஈராக் [மார்ச் 2003] களமுனைகளை திறந்தது போன்றதொரு நடவடிக்கை இனிவரும் பத்தாண்டுகளுக்கு நடப்பது மட்டுப்படுத்தப்படுகிறது. ஈராக்கிலிருந்து தமது படைகளை திருப்பியழைத்த அமெரிக்கா, எதிர்வரும் பத்தாண்டுகளுக்கு தமது பாதுகாப்பு செலவீனத்தை குறைப்பதில் உறுதியாகவுள்ளது. ஆனால், இக்கட்டுநிலையிலுள்ள ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், அதன் முக்கியத்துவம் கருதி தமது படைகளின் பிரசன்னத்தை வலுப்படுத்தவுள்ளோம் என அறுதியிட்டு கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா அவர்கள்.

சுமார் 487 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்வரும் பத்தாண்டுகளுக்குள் குறைப்பதற்கு பென்ரகன் திட்டம் தீட்டியுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவின் விமானப்படை அண்ணளவாக 200 விமானங்களை இழப்பதோடு, அமெரிக்க இராணுவத்தின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சம் இராணுவத்தால் குறைக்கப்படும்.

இத்தகைய ஒரு இறுக்கமான முடிவை எடுத்த அதிபர் ஓபாமாவும், பென்ரகனும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரசன்னத்தை அதிகரிப்பதற்கான எத்தகைய விலையையும் கொடுக்க தயாராகவுள்ளனர். அந்த வகையிலேயே, அவுஸ்ரேலியாவின் டார்வின் பகுதியிலும், தேவையேற்படின் பிலிப்பைன்சிலும் அமெரிக்காவின் இராணுவ முகாம்களை நிறுவுவதற்கான பணிகள் முன்னெடுக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் தோன்றியுள்ளன.

எதற்காக ஆசிய – பசுபிக் பிராந்தியம் இலக்கு வைக்கப்படுகிறது?

ஆசிய – பசுபிக் பிராந்தியத்திலேயே, ஆசியான் - தென்கிழக்கு ஆசியா நாடுகளிள் கூட்டமைப்பு [Association of Southeast Asian Nations –ASEAN] சார்க் - பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசிய கூட்டமைப்பு [south Asian Association for Regional Cooperation –SAARC] மற்றும் பசுபிக் தீவுகளின் பேரவை [Pacific Islands Forum – PIF] ஆகிய கூட்டமைப்புக்கள் உள்ளடங்கலாக சுமார் ஜம்பது நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த ஜம்பது நாடுகளுக்குள்ளேயே, அமெரிக்காவின் கண்கள் ஆழமாக பதிந்துள்ள சீனா, இந்தியா, ஆப்கானிஸ்தான், வடகொரியா. பாகிஸ்தான், இந்தனோசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளும் உள்ளடங்குகின்றன. அதேவேளை, வளைகுடாப் பிராந்தியத்தில் ஈரானின் ஏவுகணை மற்றும் அணுஆயுத பரிசோதனைத் திட்டம் போன்றவற்றால் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, அமெரிக்கா இரகசிய காய்நகர்த்தல்களையும் செய்யவேண்டிய தேவையெழுந்துள்ளது.

இதற்கான, சிறந்த தளமாக ஆசிய-பசுபிக் பிராந்தியம் உள்ளது. அத்துடன், தனது தேசிய நலனை நிலைநிறுத்துவதற்காக, ஈரானிற்கு பக்கபலமாக சீனா விளங்கக்கூடும் என்ற கருத்துக்கள் உயர்வடைந்து வருகிறது. சீனாவை, தனது வழிக்கு கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக, அமெரிக்கா சீனாவுடன் மறைமுக இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், கடந்த காலங்கள் போல், இம்முறை அது எந்தளவிற்கு வெற்றியளிக்கும் என்பது கேள்விக்குறியே. ஏனெனில், அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையிலான பொருளாதாரரீதியான உச்சக்கட்டப் போட்டி மிகதிருப்புமுனையான ஒரு கட்டத்துக்குள் அண்மைக்காலத்தில் நுழைந்துள்ளது. இந்த 'பனிப்போரின்' ஒரு அங்கமாகவே, ஈரானுடன் பெற்றோலிய வர்த்தகத்துடன் தொடர்புள்ள சீன நிறுவனமொன்றை அமெரிக்கா தடைசெய்யதுள்ளது.

மேலும், ஈரானின் எல்லை நாடுகளான, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் ஆசிய-பிராந்தியத்திலேயே உள்ளன. அத்துடன், உலக எண்ணெய் விநியோகத்தில், குறிப்பாக சீன எண்ணெய் விநியோகத்தில் முக்கியத்துவம் மிக்க இந்து சமுத்திரமும் இந்த ஆசிய – பசுபிக் பிராந்தியத்திலேயே உள்ளது. [இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் தொடர்பான எனது கட்டுரையை பின்வரும் இணைப்பினுடாக வாசிக்கலாம் http://bit.ly/wTB6IG.]

ஆகமொத்தத்தில், அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக அச்சுறுத்தல் விடுக்கும் சீனாவையும், இராணுரீதியாக அச்சுறுத்தல் விடுப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ள ஈரானையும் எதிர்கொள்வதற்கான பொதுத் தளமாகவும், பிரதான தளமாகவும் ஆசிய-பசுபிக் பிராந்தியமே திகழப்போகிறது. இவற்றின் அடிப்படையிலேயே, அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டத்தில் ஆசிய-பசுபிக் பிராந்தியத்துக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இலக்காகியுள்ள ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நகர்வுகள்

ஆசியாவிற்கான தனது பதிலாளர்களாக இந்தியாவையும், ஜப்பானையும் பயன்படுத்துவதை விட்டு, அமெரிக்காவே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. இது, ஆசியபிராந்தியத்தின் முக்கியத்துவத்தையும், இங்கு எதிர்காலத்தில் மேலெழக்கூடிய தீவிரமான நெருக்கடி நிலைகளையுமே கட்டியங்கூறுகிறது. இதற்கு மிகச்சிறந்த அண்மைக்கால உதாரணமாக, அமெரிக்கா இராஜாங்க செயலாளர் கிலாரி கிளிங்டனின் பர்மாவிற்கான (மியான்மார்) சுற்றுப்பயணத்தையும், அங்கு இடம்பெற்ற சம்பவங்களையம் குறிப்பிடலாம்.

சீனாவுடன் நெருக்கமான பிணைப்பை கொண்ட ஒரு இராணுவ ஆட்சியுடைய நாடாகவே பர்மா மிகஅண்மைக்காலம் வரை இருந்துவந்தது. ஆனால், ஆசியாவில் தனது புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்காக அமெரிக்கா புறப்ட்டுள்ளது என்பதன் அடையாளமாக கிலாரி கிளிங்டன் அவர்களின் பர்மாவிற்கான சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.

இந்த பயணத்தின் ஊடாக, சீனாவின் பின்னணியுடன் பர்மாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த அணைக்கட்டுமானமொன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாநாயத்துக்காக போராடும், சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற, ஆங்சாங்-சுகியுடன், கிலாரி அவர்கள் மேற்கொண்ட சந்திப்பும், அதனைத் தொடர்ந்து ஆங்சாங்-சுகியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் அரசியல் கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக பர்மாவின் தற்போதைய ஆட்சியாளர்களால் காட்டப்பட்ட பச்சைக்கொடியும் குறிப்பித்தக்கவை.

மேலும், சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தமது இனத்தின் விடுதலைக்காக போராடிவரும் கச்சின் (Kachin) போராளிகளுடன் சமாதான முன்னெடுப்புகளுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிப்பது போன்ற பர்மாவின் ஜனநாயகத்துக்கான பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பர்மாவின் ஆட்சிபீடம் இணங்கியுள்ளமை பர்மா-சீனா உறவில் உருவாகத் தொடங்கியுள்ள ஒரு இடைவெளியின் ஆரம்பப்புள்ளியாகவும், அமெரிக்காவுக்கும் பர்மாவிற்கும் இடையில் தோற்றம் பெற்றுள்ள உறவின் ஆரம்பமாகவும் பார்க்கலாம்.

1955 ம் ஆண்டு அமெரிக்காவின் இராஜாங்கா செயலாளர் ஜோன் போஸ்ரர் டலஸ் அவர்களின் [John Foster Dulles] சுற்றுப்பயணத்துக்குப் பின்னர், பர்மாவிற்கு பயணம் செய்த முதாலாவது இராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளிங்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

இது, பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்கு சவால்விட்டுள்ள சீனாவுக்கு, அமெரிக்காவால் விடுக்கப்பட்டுள்ள ஒரு இறுக்கமான சமிஞ்சையும் மறைமுக எச்சரிக்கையும் ஆகும். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அவர்களின் ஆசியாவுக்கான அண்மைய சுற்றுப்பயணமும், அவுஸ்ரேலியாவிலும் அதன் பின்னர் பென்ரகனில் அவர் ஆற்றிய உரையும் இதன் ஒரு அங்கமே.

ஆகவே, சீனாவை பலவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு மிகவிரைவாகவே தோன்றிவிட்டது என்பது கண்கூடு. அதன் பிரதான நகர்வாக, சிங்கத்தின் கோட்டைக்குள்ளேயே புகுவது போலவே, ஆசியாவிற்குள் புகுந்தே சீனாவுக்கான சாவலை விட அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதனை ஒரு சாணக்கிய இராஜதந்திரமாக பார்க்கலாம்.

இது, அமெரிக்காவின் எதிரிநாடுகளுடனும், அண்டை நாடுகளுடனும் சீனா கடந்த காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஒரு பதிலடியாக அமைந்துள்ளதெனவும் கூறலாம். ஆகவே, இனிவரும் காலத்தில், சீனாவை பலவீனமாக்கும் நடவடிக்கைகள் ஆசியப் பிராந்தியத்தில் கூர்மையடைப் போகின்றன. ஆதலால், ஆசியாவிலுள்ள முக்கியமான சிக்கல்கள், இனக்குழும போராட்டங்கள், ஆயுதக்கிளர்ச்சிகள் எல்லாம் வல்லாதிக்க சக்திகளின் நலன்களுக்காக கருவியாக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளது.

அந்த வகையிலேயே, இலங்கைத் தீவின் முக்கியத்துத்துவம் அங்கு தன்னாட்சிக்காக போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ்மக்களின் போராட்டமும் இன்னொரு கட்டத்துக்குள் நுழையப்போகின்றது.

இதனால், ஈழத்தமிழர்களுக்கு ஏற்படப்போகும் சாதக, பாதகங்கள் என்ன? இதனை எவ்வாறு ஈழத்தமிழர்கள் கையாள்வது, இத்தகைய சூழலுக்கு பொருத்தமான சில அனைத்துலக உதாரணங்கள், இவற்றின் அடிப்படையில் பிராந்திய அரசியலில் ஈழத்தமிழர்களின் முக்கியத்துவம் போன்ற விடயங்களை அடுத்த பத்தியில் ஆராய்வோம்.

*ஊடகவியலாளரான நிர்மானுசன் பாலசுந்தரம் அனைத்துலக அளவிலான மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன், சமாதானம் மற்றும் மோதுகை மாற்றுநிலையாக்கம் தொடர்பான துறைகளிலான ஆய்வாளரும் ஆவார். கட்டுரை பற்றிய கருத்துகளை எழுதுவதற்கும் ஆக்கபூர்வமான விவாதங்களை முன்வைப்பதற்கும்: bnirmanusan@gmail.com

http://www.puthinapp...?20120115105374

Edited by வீணா

கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்று தெரியவில்லை. ஆனால், அரசியலில் இருந்து பொருளாதாரம் வந்ததா இல்லை பொருளாதரத்தில் இருந்து அரசியல் வந்ததா என்றால், நீண்டகால அடிப்படையில் பொருளாதரத்தில் இருந்தே அரசியல் வந்தது எனலாம்.

அந்த வகையில் மாறுபடும் பொருளாதார உலகில் ஏற்படும் அரசியல் மாற்றங்களை எமதாக்கி அரசியல் விடுதலை பெறுவோம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சில சந்தர்ப்பங்களில், அனைத்துலக ஒழுங்கில் உண்டாகும் மாற்றங்களால் புரட்சிகள் உருவாகக்கூடும். வேறு சில சந்தர்ப்ங்களில், புரட்சிகளின் தோற்றத்தால் அனைத்துலக ஒழுங்கு மாற்றமடையும். புதினப்பலகைக்காக *நிர்மானுசன் பாலசுந்தரம்.

கடந்த பத்தியிலே, பூகோள அரசியலில் பொருளாதாரத்தின் முக்கியத்துவம், அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டத்தின் சுருக்கமான முக்கிய உள்ளடக்கங்கள், எதற்காக ஆசிய – பசுபிக் பிராந்தியம் அமெரிக்காவால் இலக்கு வைக்கப்படுகிறது? இலக்காகியுள்ள ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நகர்வுகள் போன்றவிடங்களை ஆய்வுக்குட்படுத்தியிருந்தேன்.

இந்தப் பத்தி, அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டத்தினை மையப்படுத்தி தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகளுக்கான தயார்படுத்தல் மற்றும் அதற்கு ஆதரவான அனைத்துலக அளவிலான உதாரணங்களையும் ஆராய்கிறது.

தமிழர்களின் இருப்பையும், எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சிந்தனைப் புரட்சியும், மாற்றங்களின் ஆரம்பமும்.

தமிழர்களின் துயர்படிந்த நெருக்கடி மிகுந்த இன்றைய சூழல் என்பது, எதிர்மறையான சிந்தனைப் பரப்புக்குள்ளேயே தமிழர்களை வைத்திருக்கத் தூண்டும். ஆகவே, எந்தப் புரட்சிக்கும் முன்னர், தமிழர்களுடைய மனங்களிலே ஆக்கபூர்வமான எதிர்காலத்தை நோக்கிய சிந்தனைப் புரட்சி உண்டாகவேண்டும்.

அத்துடன், தமிழர்கள் நலன்களை முன்வைத்து நகர்வது போல காட்டிக்கொள்ளும் நபர்கள், அமைப்புகள் மற்றும் நாடுகளின் இரகசிய நிகழ்ச்சி நிரலை புரிந்துகொண்டு, அதனைத் எதிர்கொண்டபடி அடுத்த கட்டத்தை உரியமுறையில் எட்டுவதற்கான உத்திகளும், உபாயங்களும் வகுக்கப்பட வேண்டும். ஏனெனில், இத்தகைய சக்திகளே, தமிழர்களை எதிர்மறையான சிந்தனை தளத்திற்குள்ளேயே முடக்கி, தமிழ்த் தேசியத்திற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

உலகிலேயே விடுதலைப் போராட்டங்களுக்கு முதன்மையாகத் திகழ்ந்த தமிழ்த் தேசிய ஆயுதப் போராட்டம், தமிழ் மக்கள் மட்டுமன்றி, உலகின் பல்வேறு சக்திகளும், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கும் கூட அதிர்ச்சியளிக்கக் கூடிய முறையில் முடிவுக்கு வந்தது.

அதேபோல், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் உண்டான ஆரம்பப் புரட்சிகளும், அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட ஆட்சிமாற்றமும் மேற்குலகின் புலனாய்வு அமைப்புகள் தொடக்கம் யாருமே எதிர்பார்த்திராத ஒன்றே.

கடந்த காலங்களிலே தாய்லாந்து மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சிகள் கூட எதிர்வுகூறல்கள் இன்றி இடம்பெற்ற சம்பவங்களே ஆகும். போராட்டகரமான அரசியல் வாழ்விலே, புரட்சிகரமான மாற்றங்கள் எக்கணத்திலும் நிகழலாம். புரட்சிகள் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், சாதகமாகவும், பாதகமாகவும் அமையக்கூடும். ஆனால், புரட்சிகள் எப்போது, என்ன வடிவத்தில் இடம்பெறலாம் எனக் கூறமுடியாது.

சில சந்தர்ப்பங்களில், அனைத்துலக ஒழுங்கில் உண்டாகும் மாற்றங்களால் புரட்சிகள் உருவாகக்கூடும். வேறு சில சந்தர்ப்ங்களில், புரட்சிகளின் தோற்றத்தால் அனைத்துலக ஒழுங்கு மாற்றமடையும்.

ஆகவே, தமிழர்களின் சமகால நிலையை கவனத்திற்கொண்டு சிறப்பான எதிர்காலத்துக்கு திட்டமிட வேண்டும். மாறாக, இன்றைய சவால்களை காரணமாகக் கொண்டு தமிழர்களின் எதிர்காலத்தை மீளமுடியாத வகையில் அடமானம் வைக்கமுடியாது.

தமிழர்கள் பூகோள அரசியலில் சக்திமிக்க நாடுகளின் தேசிய நலன்களை கவனத்திற்கொண்டு, தமது தேசநலன்களுக்கான காய்களை அரசியல் சாணக்கியத்துடன் நகர்த்த வேண்டும். இது, சக்திமிக்க நாடுகளுடனான பொதுப்புள்ளி சந்திப்பின் ஆரம்பமாக அமையக்கூடிய வகையில் இருத்தல் வேண்டும். அதிலிருந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

எந்த சக்தியுமே, தமிழினம் ஒரு இனப்படுகொலையை எதிர்கொண்டு நிற்கிறது, நீண்டகாலமாக அவலங்களை சுமந்துகொண்டு வாழ்கின்றனர் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்க முன்வரப்போவதில்லை. ஆனால், தமிழர்களுடனான உறவு தமது தேசியநலனுக்கு சாதகமாக அமையும் என எண்ணினால், அதற்கேற்ற வகையில் காய்களை நகர்த்துவார்கள்.

தமிழர்கள் மனநிலை ரீதியான பலவீனமானவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்த பலவீனமான மனநிலையைப் பயன்படுத்தி தமது தேசியநலன்களை அடைவதற்கான கருவிகளாக தமிழர்களை பயன்படுத்திவிடுவார்கள். இதன் காரணமாக, தமிழர்களது நலன் புறக்கணிக்கப்படக்கூடிய சூழலுக்கான சாத்தியப்பாடுள்ளது.

ஆகவே, தமிழர்கள் தாம் பலவீனமானவர்கள் என்ற மனநிலையை முதலில் உதறித் தள்ளவேண்டும். சவால்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கு சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும் கனிந்திருக்கின்றன. அவற்றை சரிவர இனம் கண்டு, அதற்கேற்ற நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

யதார்த்தபூர்வமாக சிந்திக்கும் தன்மையும், சுயவிமர்சனமும் இருக்க வேண்டும். ஆனால், அவை ஒரு தேசத்தையோ, அமைப்பையோ, இனத்தையோ அல்லது தனிமனிதர்களையோ நகரமுடியாத சகதிக்குள் அமிழ்த்தி பின்னோக்கி நகர்த்துவதாக அல்லாமல், குறிப்பிட்டவற்றை உயர்ந்த நோக்கத்திற்காக முன் நோக்கி நகர்த்த வேண்டும். எதை எண்ணுகிறாயோ, அதுவே ஆகிவிடுகிறாய் என்ற கூற்றை நினைவிற்கொள்ளல் நன்று.

தமிழீழ விடுதலைப் புலிகள் பூகோள அரசியலையும், புதிய அனைத்துலக ஒழுங்கையும் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்ற கருத்தை புலிகள் களத்திலே இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் முன்வைக்கத் தொடங்கியிருப்போருக்கும், புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்;ட காரணத்தால், தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டம் வெற்றிபெறுவது கேள்விக்குறியே எனக் கருதுவோருக்கும் பொதுவானதும், பொருத்தமானதுமான கருத்தொன்றை இப் பத்தியிலே பதிவுசெய்வது அவசியம் எனக் கருதுகிறேன்.

[மேற்கூறிய இரு சாரருக்குமான பதில் அமெரிக்காவின் படை மற்றும் படைக்கல குறைப்புச் சொல்லும் சேதி என்ற பகுதிக்குள்ளும் பரவி நிற்கின்றது]

முதலாவதாக, பூகோள அரசியலையும், புதிய அனைத்துலக ஒழுங்கையும் புலிகள் சரிவர புரிந்துகொள்ளாததால்தான் தோற்கடிக்கப்பட்டார்கள் என்ற கருத்தை முன்வைப்பவர்களில் பலர், நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டம் வரை புலிகளின் இராணுவத் திறனில் நம்பிக்கை வைத்திருந்ததோடு, அதற்கேற்ற வகையிலேயே தமது கருத்துக்களையும் பதிவுசெய்து வந்தனர். அதற்கு முன்னர், அத்தகைய விமர்சனங்களை முன்வைத்திருந்ததாக அறிய முடியவில்லை. அத்தகையவர்கள், இராணுவ பலம் இல்லாத ஒரு காரணத்தினை முன்வைத்து தமிழ்த் தேசியப் போராட்டத்தை இனி முன்னெடுக்க முடியாதென வாதிட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கான முகவரியாக, அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக ஆயுதப் போராட்டம் விளங்கியது. ஆனால், அதன் அழிவோடு, தமிழ்த் தேசியப் போராட்டமும் அழிந்து விட்டதாகவோ அல்லது இனி அது சாத்தியப்பாடான விடயம் இல்லையென்றோ கூறமுடியாது.

உண்மையிலேயே, பலகோணங்களிலும், ஆழமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும் சிந்திப்பதன் அடிப்படையில் முள்ளிவாய்க்காலில் நடந்த விடயங்களைப் பார்ப்போமானால், அங்கு இடம்பெற்ற செயற்பாடுகள் ஊடாகவே அடுத்த கட்ட போராட்டத்திற்கான சேதி சொல்லப்பட்டு விட்டது.

ஒரு போராட்டத்தில் சில, ஆனால் முக்கியமான விடயங்கள் எழுத்திலும், உரையிலும் சொல்லப்படுபவையல்ல. மாறாக, குறித்த செயல்கள் ஊடாக புரியப்பட வேண்டிய சூழலை உருவாக்குகின்றன. இது, ஈழப்போராட்டத்தில் இதற்கு முன்னரும் இடம்பெற்றிருக்கிறது.

முன்னைய காலங்களின் செயல்கள், பின்னர் உரைகளாக, ஆவணங்களாக வெளிவந்தது. ஆனால், முள்ளிவாய்காலில் அடுத்த கட்ட போராட்டத்துக்காக இடப்பட்ட அத்திபாராம் மௌனத்தின் ஊடாக சொல்லி செல்லப்பட்டுள்ளது.

புரிந்தவர்களால், உலக அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய அரசியல் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும். புரியமுடியாதவர்கள், புரிந்துள்ளவர்களை அல்லது புரிய முற்படுபவர்களை குழப்பத்திற்குள் ஆழ்த்தி தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டத்தை அழிப்தற்கு முற்படுவார்கள்.

போராட்டத்தின் தளங்கள், களங்கள், கதாபாத்திரங்கள்; மற்றும் அதன் வடிவங்கள் மாற்றமடையலாம். ஆனால், பாரிய இழப்புக்களுக்கு மத்தியிலும் உரிமைக்காக போராடும் ஒரு இனத்தின் மனஉறுதியும், ஆத்மபலமும் தளர்வடையக்கூடாது. நாளை என்பது, விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் உடையவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அந்த நாளைக்கான மாற்றத்திற்கான ஆரம்பத்தை அறிவியல் ரீதியாக சிந்திப்பதால் உண்டாகும் சிந்தனைப் புரட்சியால் உண்டாக்க முடியும். இந்த சிந்தனைப் புரட்சியில் முற்போக்கு சிந்தனையும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் முன்னணி வகிக்க வேண்டும்.

அமெரிக்காவின் படை மற்றும் படைக்கல குறைப்புச் சொல்லும் சேதி

எதிர்கால போர்க்களங்கள், ஆட்பல எண்ணிக்கையால் வெல்லப்படக் கூடியவையல்ல. மாறாக, தொழில்நுட்ப ஆளுமையே இனி போர்க்களங்களில் மேலாண்மை செலுத்தப் போகிறது. இதன் அடிப்படையிலேயே, அமெரிக்காவின் அடுத்த பத்;தாண்டுக்கான பாதுகாப்பு திட்டத்த்தின்படி, அமெரிக்க இராணுவத்தின் எண்ணிக்கை சுமார் நூறாயிரம் இராணுவத்தால் குறைக்கப்படவிருக்கிறது. அதுமட்டுமன்றி, அண்மையில் லிபியா மீது மேற்கொண்ட தாக்குதல் வரை, அமெரிக்காவின் படைப்பல ஆளுமையை வெளிப்படுத்துவதாக அவர்களின் வான்படை இருந்து வந்தது.

சேர்பியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான தாக்குதல்களிலெல்லாம் அமெரிக்கா வான்படையின் பங்கு முக்கியமானது. அத்தகைய வான்படையின் சுமார் இருநூறு வானூர்திகளையும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் திட்டம் குறைத்துள்ளது. இந்த இருவிடயங்களும், எதிர்கால போர்களங்களில் அதிநவீன இராணுவத் தொழில்நுட்பம் மேலாண்மை செலுத்த போவதையே கட்டியங்கூறுகின்றன.

அதேவேளை, உலக சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் நாடுகள் என அடையாளாப்படுத்தப்படும் சில நாடுகளில், அனைத்துலக ரீதியான இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலாக மக்கள் புரட்சிகளை தூண்டிவிடும் நடவடிக்கைகளும் மும்முரமடைகின்றன.

இவையெல்லாம், ஆளணி வளத்தாலும், சாதாரண மற்றும் குறிப்பிடத்தக்க நவீனரக ஆயுதங்களாலும் எதிர்காலப் போர் அரங்குகளில் செல்வாக்கு செலுத்தமுடியாது என்பதையே வெளிப்படுத்துகின்றன. ஆகவே, தொழில்நுட்ப நிபுணத்துவமும், விரல் நுனி தகவல்களுமே இனிவரும் கால போர்களங்களின் முடிவை நிர்ணயிக்கப் போகின்றன என்பதை எடுத்துக் கூறுகின்றன.

வரலாறு என்றுமே நேர்கோட்டில் பயணிப்பதில்லை

அனைத்துலக உறவுகள் காலத்திற்கு காலம் மாற்றமடைபவை என்பதை கடந்த பத்தியிலே குறிப்பிட்டிருந்தேன். இது, வரலாறு என்றுமே நேர்கோட்டில் பயணிப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. இதற்கான சில அனைத்துலக உதாரணங்களைப் பார்ப்போம்.

பொஸ்னியாவின் செர்பனிக்காவில் 1995ம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையையோ, அல்லது பொஸ்னியாவில் 1992 தொடக்கம் 1995 வரை நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்களையோ மேல்குலகு தடுத்து நிறுத்தவில்லையென்ற குற்றச் சாட்டுக்கள் பரவலாகவுள்ளன.

இத்தனைக்கும், பொஸ்னியா ஐரோப்பாவிற்கான நுழைவாசல்களில் ஒன்று. அத்துடன், அமெரிக்காவுக்கு சவால் விடும் ரஸ்யாவும் இதே பிராந்தியத்திலேயே உள்ளது. அப்படியிருந்தும், அமெரிக்கா, பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் போன்ற சக்திமிக்க மேற்குநாடுகள் பாரிய மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதனை தடுக்கவில்லையென்ற குற்றச் சாட்டினை மேல்குலக ஆய்வாளர்களே முன்வைத்துள்ளனர்.

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில், அமெரிக்காவின் தலையீட்டை வலியுறுத்தி அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஜக் சிராக் [Jacques Chirac] அவர்கள் அழுத்தத்தை காட்டிய போது கூட, அமெரிக்கா தயக்கத்துடனயே சம்மதம் தெரிவித்ததாக ஆய்வுகள் ஊடாக அறியமுடிகிறது.

பாரிய மனித அழிவுகளுக்கு பின்னர், பொஸ்னியாவிலிருந்த இனக்குழும மோதுகைக்கு முடிவுகட்டி சமாதானத்தை உருவாக்கும் முகமாக 1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்குலகால் கொண்டுவரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில், சேர்பிய அதிபர் சுலோபோடன் மிலோசோவிக் [slobodan Milošević], குறோசிய அதிபர் பிரான்ஜோ ருட்மன் [Franjo Tuđman], பொஸ்னிய அதிபர் அலியா செற்போவிக் [Alija Izetbegović] மற்றும் பொஸ்னிய வெளிவிவகார அமைச்சர் முகமட் சசிர்வெ [Muhamed Sacirbey] ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த உடன்படிக்கையானது அமெரிக்காவின் டேற்றன் பிராந்தியத்தில் கைச்சாத்திடப்பட்டதால், டேற்றன் உடன்படிக்கை [Dayton Agreement] என பரவலாக அறியப்படுகிறது. இதில், குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ஆரம்பத்தில் பொஸ்னியா போரில் தலையிடுவது தமது தேசிய நலனுக்கு பெருமளவில் உகந்தது அல்ல என்பதால், அதில் தலையிடுவதற்கு ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய மேல்குலகு, பின்னர் டேற்றன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட முக்கியமானவர்களில் ஒருவரான சுலோபோடன் மிலோசோவிக்குக்கு அனைத்துலக சட்டத்திற்கு அமைவாக மரண தண்டனை பெற்றுக்கொடுத்தமைக்கு பின்னணியிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கொல்லப்பட்ட லிபியாவின் அதிபர் கடாபி ஒரு காலத்தில் மேற்குலகோடு விரோதப் போக்கை கடைப்பிடித்து வந்தார். பின்னர், மேற்குலகுக்கும் அவருக்கும் இடையிலான உறவுகள் அந்நியோன்யம் மிக்கதாக மாற்றமடைந்தது. இறுதியில், கடாபி அந்நியோன்யத்தோடு பழகிய நாடுகளின் துணையுடனே கொல்லப்பட்டார்.

மேற்குறித்த உதாரணங்கள், பூகோள அரசியலிலே எதுவும், எக்கணமும் நடக்கும் என்பதை எடுத்துக் காட்டுகின்றன. அடுத்த பத்தியிலே, ஈழத்தமிழர்களின் சாதகமான எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் நிகழக் கூடிய மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வோம்.

http://www.puthinappalakai.com/view.php?20120129105469

  • தொடங்கியவர்

எங்களுக்கு மட்டுமே இத்தகைய ஒரு அவலம் நிகழ்துள்ளதாக எண்ணுகின்றனர். எங்களுக்கு நடந்தது மாபெரும் அவலம், சோகம், கொடுமை என்பது உண்மை. ஆனால், போராடும் தேசங்களுக்கு இது ஒன்றும் புதியவிடயமல்ல. 'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம்*

கடந்த பத்தியிலே, தமிழ்மக்களுக்காக காத்திருக்கும் சந்தர்ப்பங்களை உரியமுறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான ஒரு அம்சமாக, உளவியல் ரீதியான ஆரம்பத் தயார்படுத்தலுக்கான மிகச்சுருக்கமான அடிப்படை, அமெரிக்க படை மற்றும் படைக்கல குறைப்பு சொல்லும் செய்தி மற்றும் சர்வதேச ரீதியாக அரசியலில் எதிர்பாராத ரீதியாக இடம்பெற்ற ஆச்சரியம் தரும் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்துக்கு சொல்லும் செய்தி போன்ற விடயங்களை ஆய்வுக்குட்படுத்தியிருந்தேன்.

இந்தவாரப் பத்தியிலேயே, தமிழ் மக்களுக்கு படிப்பினையாக இருக்கக்கூடிய மேலும் சில உலகளாவிய ரீதியான உதாரணங்களை, ஆசிய-பசிபிக் நோக்கிய அமெரிக்காவின் நகர்வோடு இணைத்து பார்ப்பதோடு, ஈழத்தமிழர்களின் சாதகமான எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் நிகழக் கூடிய மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வோம்.

தமிழர்களின் தற்போதைய மனநிலை

தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டமானது, சுமார் நாற்பதாண்டு கால அறவழியிலான போராட்டத்தினூடாகவும், பின்னர் சுமார் நாற்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தினுடாகவும் நகர்ந்து அடுத்த கட்டம் என்னவென்ற நிலையை எதிர்கொண்டு நிற்கிறது.

அறவழிப் போராட்டம், குறித்த இலக்கை எட்டாது என்றவுடன் அடுத்தது ஆயுதப் போராட்டம் என்றும், ஆயுதப் போராட்டம் வீழ்ச்சியடைந்தவுடன், அடுத்தது அறவழிப் போராட்டம் என்றும் எழுந்தவாரியான முடிவுகளுடன் அடுத்த கட்டம் நிர்ணயிக்கப்படுதல் ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

ஆதலால், உகந்த சூழலிலே, பொருத்தமான முறையில் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள், ஆக்கபூர்வமான சுயவிமர்சனங்கள் 'உள்ளக ரீதியிலே' குறிப்பாக தமிழ்தேசியத்தின் எதிரிகளுக்கு தீனிபோடாத வகையில், தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி, உரிமைப் போராட்டத்தை சரியான பாதையில் நகர வழியேற்படுத்துவதற்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்தத் தருணத்தில்திலே, பலஸ்தீனத்துக்கான எனது சுற்றுப்பயணத்தின் போது, தகுதிவாய்ந்த, ஆனால் தன்னை அடையாளப்படுத்த விரும்பாத ஒரு பலஸ்தீனியர் சொன்ன கருத்தை இங்கு பதிவுசெய்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

“எங்களுக்குள் (பலஸ்தீனியர்களுக்குள்) பல பிளவுகளும், இரு பெரும் பிரிவுகளும் இருக்கிறன. எங்களது அணுமுறைகளிலும், எங்களது இலக்கை நோக்கிய எமது செயற்பாடுகளை வெளிப்படுத்துவதில் வேறுபாடுகளும், நெருக்கடிகளும் உள்ளன. ஆனால், இங்குள்ள [பலஸ்தீனத்தில்] எல்லோருக்கும் தெரியும் எங்களுடைய பிரதான எதிரி யார் என்று. அத்துடன், எங்களுடைய இலக்கில் நாம் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளோம். ஒரு குடும்பத்துக்குள் முரண்பாடுகள் தோன்றுவதே போன்றதே, எமக்குள் நிலவிவந்த முரண்பாடுகளும். ஆனால், எமது முரண்பாடுகள் எமது எதிரியை பலப்படுத்துவதானது, எமது இலக்கை நாமே சிதைப்பதற்கு வழியமைத்துவிடும் என்பதை அச்சத்துடன் புரிந்துகொண்டோம். எமது பிளவுகளை எதிரி விரும்பினான் என்பதையும் அறிந்து கொண்டோம். ஏனெனில், எம்மை அழிப்பதற்கு அது அவனுக்கு தீனிபோட்டது. ஆதலால், நாம் ஒன்றிணைந்தோம். எங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகளை, எமக்குள் நாமே பேசி உடன்பாடுகளுக்கு வந்தோம். அது எமது சகோதரத்துக்குள் பகமை வளர்வதை கட்டுப்படுத்தியது. இன்று நாம், எமது போராட்டத்தில் இன்னொரு வரலாற்று மைல்கல்லை கடந்து, புதியதொரு சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்றார் அவர்.

அவருடைய கருத்து தமிழர்களது உரிமைப் போராட்டத்துக்கும் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். அதனை, புரியவேண்டியவர்கள் சரிவரப் புரிந்து, தமிழ் மக்கள் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு ஏற்ற வகையில் தமது பங்களிப்பினை வழங்குவது பொறுப்புமிகுந்ததும், வரவேற்கத்தக்கதுமான செயலாகும்.

அடுத்து, 'ஏன் இப்படி நடந்தது', 'நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம்', 'எல்லாம் போச்சுது', 'சர்வதேசம் எங்களை கைவிட்டுவிட்டதே', 'இனி என்ன நடந்தால் என்ன', 'அனைத்துலகம் என்ன செய்யும் அல்லது ஏதாவது எங்களுக்காக செய்யுமா?', 'எங்களுக்கு நீதிகிடைக்க அல்லது தீர்வு வர எவ்வளவு காலம் காலம் எடுக்கும்?' மற்றும் '(ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறது?' போன்ற ஆதங்கங்களும், கேள்விகளும் தமிழ்மக்களிடத்தில் பரவலாக உள்ளன.

மேலே குறிப்பிட்ட கேள்விகளும் ஆதங்கங்களும், மனிதப் பேரவலத்தினால் தமது உறவுகளையும், உடமைகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தில் இயல்பானவை அல்லது தவிர்க்கமுடியாதவை என்பதையே உலக வரலாறு சொல்லி நிற்கிறது. அதேவேளை, ஏனைய போராட்டங்களோடு ஒப்பிடுமிடத்து, தமிழ்த் தேசியப் போராட்டம் குறுகிய காலத்துக்குள் 'மீள் எழுச்சியில்' ஒருபடி முன்னிலை வகிக்கின்றது என கூறலாம்.

இதற்கொரு உதாரணமாக, 2009 மே மாதம் என்பது தமிழ்மக்களது வாழ்வில் அதிஉயர் நெருக்கடியும், ஆழமான சோகமும் நிறைந்த மாதம். சிங்கள தேசம் வெற்றிப் பெருமிதத்தில் இறுமாப்பும், எக்காளமும் இட்டபடியிருந்த நேரம். ஆனால், வெற்றிபெற்றதாக அறிவித்தவர்கள், அதை அனுபவிக்க முடியாத நிகழ்வு தொடங்கியது.

மின்சாரக் கதிரை என்று சிறிலங்கா அதிபர் அடிக்கடி அலறும் நிலை தொடங்கியது. ஒரு சிலரைத் தவிர, தமிழர், சிங்களவர் என்ற வேறுபாடில்லாமல் யார் நினைத்திருந்தார் போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்ற விடயம் மேற்கிளம்பி படுகொலையாளர்களை பதறவைக்கும் என்று? ஆம், பெரும்பான்மையானவர்கள் நினைத்திராதது நடந்தது. இது ஒரு ஆரம்பமே.

இது சரியான திசையில் நகரவேண்டுமானால் தமிழர்கள் மனநிலையில் உறுதியும், பின்வாங்காத தன்மையும், எங்களுக்கான காலம் வரும் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும். இது, இருந்தால், மாற்றுநிலையுடைய பூகோள அரசியலையும், விரிவாக்கப்படும் அமெரிக்காவின் வியூகத்தையும் தமிழ்த் தேசியத்துக்கு சாதகமான முறையில் கையாளலாம். வேட்கையுடனும், இலட்சியப் பற்றோடும், விடாமுயற்சியோடும் செயற்படுபவனுக்கே நாளை சொந்தமாகும்.

உலக வரலாறு சொல்லும் பாடம்

தமிழ்மக்களில் ஒரு சாரார், எமக்கு நடந்த இன்னலால் மனமுடைந்து போயுள்ளனர். அதன் வெளிப்பாடாக எங்களுக்கு மட்டுமே இத்தகைய ஒரு அவலம் நிகழ்துள்ளதாக எண்ணுகின்றனர். எங்களுக்கு நடந்தது மாபெரும் அவலம், சோகம், கொடுமை என்பது உண்மை. ஆனால், போராடும் தேசங்களுக்கு இது ஒன்றும் புதியவிடயமல்ல.

உரிமைக்கான போராட்டத்திலே, வெற்றிபெற்றிருந்தாலும் சரி, தோல்வியடைந்திருந்தாலும் சரி, எங்களுக்கு ஏற்பட்டது போன்ற நிலையை அவர்களும் சந்தித்திருக்கிறார்கள் என்பது மெய்நிலை. இதுக்கமைவான விடயங்களை இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். இந்தக் கட்டுரையில் தமிழ் மக்களுக்கு அவசியமான ஒரு உதாரணத்தை நோக்குவோம்.

உலக வரலாற்றிலே முதன்முதலாக இடம்பெற்ற இனப்படுகொலையாக ஆர்மேனியர்கள் மீது துருக்கி மேற்கொண்ட இனப்படுகொலை பதிவாகியுள்ளது. இனப்படுகொலையின் ஆரம்பம் 1850ம் ஆண்டுகளில் முளைவிட்டிருப்பினும், அனைத்துலகம் அதனை முதலாம் உலகப் போர் முடிவோடே கவனமெடுக்கத் தொடங்கியது. ஆதலால், அதனை 1915 ம் தொடக்கம் 1923 வரை நடைபெற்ற இனப்படுகொலையாகவே வரலாறு பதிவுசெய்துள்ளது.

குறித்த எட்டாண்டு காலப்பகுதிக்குள், 10 தொடக்கம் 15 இலட்சம் வரையான ஆர்மேனியர்கள் துருக்கிய பேரரசினால் படுகொலைசெய்யப்பட்டனர். ஆனால், இன்றுவரை இதனை துருக்கி இனப்படுகொலையென ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் 'இனப்படுகொலையின் மறுக்கும்' [Genocide Denial] நிலை தொடர்கிறது. ஆயினும், உலக பொருளாதாரத்தில் துருக்கி துரித கதியில் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், அதனுடனான உறவை பேணுவதற்கே மேற்குலகம் விரும்புகிறது.

அதேவேளை, துருக்கி ஆர்மேனியர்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து ஆர்மேனியர்கள் பல்வேறு தேசங்களுக்கும் பாதுகாப்புத் தேடி நகரத் தொடங்கினர். இன்று வரை ஆகக்குறைந்தது, இறமையுள்ள பத்தொன்பது நாடுகள் ஆர்மேனியாவில் நடைபெற்றது இனப்படுகொலையென்பதை ஏற்று, அங்கீகரித்துள்ளன. ஆனால், அதிகமான ஆர்மேனியர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடுகளில் ஒன்றான அமெரிக்காவோ அதனை இன்னும் ஏற்று அங்கீகரிக்கவில்லை.

இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால், 2005ம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ச்.டபிள்யு.புஸ் அவர்களுக்கு, இன்றைய அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா அவர்கள் ஆர்மேனியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலையை இனப்படுகொலையென அங்கீகரிக்குமாறு கூறி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து, இனப்படுகொலை என்ற சொற்பதத்தையம் பிரயோகித்து வந்தார். ஆனால், அதிபரான பிற்பாடு, ஆர்மேனியர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு தொடர்கின்ற போதும், இனப்படுகொலையென்ற சொல்லை தவிர்த்து வருகிறார். அனைத்துலக உறவில் பொருளாதாரத்தின் வகிபாகத்துக்கு இருக்கும் முதன்மையான நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்.

எது எவ்வாறிருப்பினும், தமது முன்னைய பரம்பரையினர் மீது துருக்கிய பேரரசினால் மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலைதான் என்பதை ஏற்று அங்கீகரிக்க வைக்கும் செயற்பாடுகளில், அமெரிக்காவில் வாழ்ந்துவரும் ஆர்மேனியர்கள் சளைப்பின்றி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் துருக்கிக்கும் - ஆர்மேனியர்களுக்குமிடையிலான கொதிநிலை தொடர்கிறது. ஆர்மேனியா ஒரு தனித் தேசமாக இன்று விளங்கினாலும், புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்கள் அதற்கான வலுவாகவும், அனைத்துலக குரலாகவும் இருந்து வருகிறார்கள்.

இதேவேளை, கடந்த ஜனவரி [2012] மாத நடுப்பகுதியில், ஆர்மேனிய இனப்படுகொலை சட்டம் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, 86 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததோடு, இனப்படுகொலையின் மறுப்பது குற்றச்செயல் எனும் மசோதவும் இயற்றப்பட்டது.

இது, துருக்கிக்கு கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது. அதனால், பிரான்சுக்கும், துருக்கிக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதாரா உறவுகள் மோசமாக பாதிப்படையும் சூழல் உண்டாகியுள்ளது. இதனை பிரெஞ்சு அரசாங்கம் நிச்சயமாக எதிர்பார்த்தே இருக்கும். அப்படி இருந்தும், இத்தகைய ஒரு சட்டத்தை நடாளுமன்றத்திற்கு கொண்டு வந்ததற்கான காரணத்தை அலசும் போது, தமிழ் மக்களுக்கும் அமைவான சில படிப்பினைகளை உணரலாம்.

2010 மே மாதம் உணவு, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு துருக்கிய கப்பல் பலஸ்தீனத்தின் காஸாவை நோக்கிப் பயணித்தது. இதனை இடைமறித்த இஸ்ரேலிய படையினர் அதன் மீது தாக்குதலையும் நடாத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும், துருக்கிக்குமான உறவு மேலும் விரிசல் அடைந்தது. அதன் உச்சக்கட்டமாக இராஜதந்திர உச்சக்கட்ட தொனியூடாக பரஸ்பர எச்சரிக்கைகளும் விடப்பட்டது. இதேவேளை, துருக்கி ஹமாஸ்சிற்கு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது என்ற வலுவான சந்தேகங்களும் உள்ளன.

அத்துடன், பிரெஞ்சு வாக்குரிமை கொண்ட கணிசமான ஆர்மேனியர்கள் பிரான்சில் வாழ்ந்து வருகிறார்கள். எதிர்வரும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், அவர்களது வாக்குகளும் சிறியளவிலான செல்வாக்கினை தன்னிலும் செலுத்தும் சக்தியாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதுபோன்ற பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டே நிக்கொலா சார்க்கோசி அவர்களுடைய அரசாங்கம் இத்தகைய ஒரு துணிகர நடவடிக்கையை எடுத்தது.

இத்தருணத்தில் ஒரு விடயத்தை ஆழமாக பார்க்க வேண்டும். அமெரிக்காவுக்கும், பிரான்ஸ் முதன்மையான நாடுகளில் ஒன்றாகவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் நெருக்கமான ஒத்துழைப்புநிலை பல்வேறுபட்ட விடயங்களிலும் தொடர்கிறது. இரண்டும் மிக இறுக்கமாக நேசசக்திகள். அவ்வாறிருக்க, பொருளாதார நலனினை கருத்தில்கொண்டு, துருக்கியுடன் மென்போக்கை கடைப்பிடிக்கும் அமெரிக்கா, முரண்பாடுகளை தோற்றுவிக்கக் கூடிய நிகழ்வுகளை தவிர்த்து வருகிறது. இத்தனைக்கும், இஸ்ரேலின் அதிநம்பிக்கைக்குரிய நாடு அமெரிக்கா. அத்தகைய இஸ்ரேலுடன் துருக்கி கசப்பான உறவை பேணும்போதும் கூட, துருக்கியை நோக்கிய அமெரிக்காவின் மென்போக்கு நிலை தொடர்கிறது.

அதேவேளை, பிரான்சுக்கும், துருக்கிக்குமிடையில் சிறப்பான பொருளாதார உறவு நீடித்து வந்தது. இது இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் கணிசமாக தாக்கத்தை செலுத்த வல்லது. அப்படியிருந்தும், பிரான்ஸ் அத்தகைய ஒரு முடிவை எடுத்துள்ளது.

ஆனால், இந்தமுடிவு அமெரிக்காவின் நாடிபிடித்து பார்க்காமல் செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு குறைவு. பின்வழிக் கதவு கலந்துரையாடல்கள் நிச்சயமாக நடந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் நிறையவே உள்ளது.

ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், தமது பொதுநலனை கருத்தில்கொண்டு இரு நெருங்கிய நேசஅணிகள் எதிரும் புதிருமாக செயற்படுவது, இராஜதந்திரத்தில் ஒன்றும் புதியவிடயமல்ல. குறித்த மூன்று தரப்புகளும் ஒரு விடயத்தை நோக்கி நகரும் போது, அங்குள்ள நேச சக்திகள் தங்கள் நலனை பூர்த்தி செய்யும் நோக்கோடு, கலந்துரையாடி முன்னெடுக்கும் நகர்வு அனைத்துலக உறவில் சாதாரணமானது. இது, பொது எதிராளியை தமது நலனை நோக்கிய வலைக்குள் வீழ்த்துவதற்கு துணைநிற்கும். இதில் அமெரிக்காவுக்கும் பிரான்சுக்கும் நல்ல புரிந்துணர்வு நிலை உள்ளக ரீதியில் நிலவும்.

இதைவிட தீவிரமான ஒரு நிலை, ஆசிய-பசுபிக் நோக்கிய அமெரிக்காவின் வியூக விரிவாக்கத்தோடு இலங்கைத் தீவிலும் உருவாகப் போகிறது. அது ஏன்? அதனால் ஈழத்தமிழர்களின் சாதகமான எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் நிகழக் கூடிய மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகளை விரிவாக ஆராய்வோம்.

http://www.puthinappalakai.com/view.php?20120205105518

  • கருத்துக்கள உறவுகள்

எமது படுகொலைகளுக்கு பின்பும் அதைத்தொடர்ந்து போர்க்குற்றம்தொடர்பான தெளிவிலும் நான் தெளிவாக இருந்ததற்கு மூலகாரணம் நான் இங்கு வந்ததிலிருந்து 15 வருடங்களுக்கு அதிகமாக வேலை செய்த முதலாளி ஆர்மேனியர். அவர்களது தளம்பாநிலையும் வேட்கையும் பொருளாதார வளர்ச்சியும் பேரழிவை மறக்காது ஒவ்வொருவருடமும் அவர்கள் அதை நினைவு கூருவதும் என்னுள் படிந்திருப்தை உணர்ந்தேன்.

இன்று அவர்கள் வெற்றியடைந்துள்ளனர். நாமும்......

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கடந்த பத்தியிலே, தமிழ்மக்களின் தற்போதைய மனோ நிலை, தமிழ் மக்களின் சமகால சூழலுக்குப் பொருத்தமான உலகளாவியரீதியிலான உதாரணங்களை ஆய்வுக்குட்படுத்தியிருந்தேன்.

இந்த வாரப் பத்தியிலே, ஆசிய-பசுபிக் நோக்கிய அமெரிக்காவின் வியூக விரிவாக்கத்தோடு இலங்கைத் தீவில் ஒரு தீவிரமான ஒரு நிலை உருவாகப் போகிறது. அது ஏன்? அதனை தமது எதிர்காலத்திற்கு சாதகமான முறையில் மாற்றுவதற்காக ஈழத்தமிழர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகளையும் ஆராய்வோம்.

தக்கன பிழைக்கும், வல்லன வாழும்

ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை எறும்பு போன்றதாகவும், அவர்களுக்கு எதிரானவர்களின் பலம் எறும்போடு மோதும் யானைக்கு நிகரானதாகவும் உள்ளது என்பது உண்மை. ஆனால், எறும்பு யானையின் தும்பிக்கைக்குள் நுழைந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள். ஆகவே, தம்மை எறும்புக்கு நிகராக எண்ணிக்கொண்டிருக்கும் தமிழர்கள், அந்த எண்ணத்தை கைவிட்டு யானையின் தும்பிக்கைக்குள் நுழையவேண்டிய கட்டாயத்தையும், அதற்காக உருவாகிவரும் வாய்ப்புக்களையும் சரிவர இனம் கண்டு, அந்த வாய்ப்புக்களை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டு, அதனோடிணைந்த திட்டங்களைவ வகுக்க வேண்டும். இது இன்றைய தவிர்க்க முடியாத தேவையும், எதிர்காலத்துக்கான அத்திபாரமும் ஆகும்.

இராணுவ அறிவியலிலே கூறுவார்கள், "எதிரியை கொல். இல்லையேல் அங்கவீனப்படுத்தென்று. எதிரியை கொல்வதென்பது, அதனூடக அவன் பலம்சேர்க்கும் இலக்கை வீழ்த்துவதற்கே. எமக்கு சவாலாகவும், எதிரிக்கு பலமாகவும் இருக்கும் விடயம், இரு தரப்புக்குமான பொது இலக்காகிறது. ஆகவே, அதனை பாதுகாப்பவன் அங்கவீனப்படுவதென்பது, இலக்கை வீழ்த்துவதற்கான எமது முயற்சியை ஒரு அங்குலமாவது இலகுபடுத்தும். அதேவேளை, எதிரியானவன் பலம் எந்தவகையிலும் அதிகரிக்கப்படாத வகையில் கவனம் செலுத்த வேண்டும்."

இன்னும் ஒருவகையில் கூறுவதனானால், "மிகப் பலம்பொருந்திய ஒரு இராணுவ முகாமை வீழ்த்த முடியாத தருணங்களில் அல்லது அந்த முகாமை வீழ்த்தும் முயற்சியின் ஒரு அங்கமாக, குறித்த முகாமுக்கு அத்தியாவசியமான விநியோகங்கள் நிறுத்தப்பட வேண்டும். அதற்குப் பலமளிக்கும் காவலரண்கள், மினிமுகாம்கள் தயார்படுத்தலின் போதே தகர்க்கப்படுவதோடு, அவை மீளபலமடையாத சூழல் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், அந்த முகாமின் கட்டளை பீட(ம்)ங்கள், தொலைத்தொடர்பாடல் மையங்கள் மற்றும் முக்கிய ஆயுத இயங்குதளங்கள் போன்றவை தாக்குதலுக்கு முன்னரே இனங்காணப்பட வேண்டும். எதிரியினதும், எங்களினதும் பலமும், பலவீனமும் தொடர்ச்சியாக மதீப்பீடு செய்யப்பட வேண்டும். இவையனைத்தும் காலப் போக்கில் குறித்த முகாமை கைப்பற்றுவதை அல்லது அழிப்பதை இலகுபடுத்தும்" என்கிறது இராணுவ அறிவியல்.

இன்றைய பூகோள அரசியலிலே, வல்லரசு நாடுகளோ அல்லது வல்லரசாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளோ நேரடியான ஒரு போரில் இறங்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு. ஆனால், பனிப்போர்கள் தீவிரமடையும். இதில், ஒரு தரப்பை வீழ்த்துவதற்கு மறு தரப்பு கடும் பகீரதப் பிரயத்தனம் எடுக்கும். அதேவேளை, இராணுவ அறிவியலை கடைப்பிடித்து, அதனை அமுல்படுத்தும் சூழலில் தமிழர் தேசம் தற்போது இல்லை.

ஆனால், மேற்கூறிய இருதரப்புக்குமே இராணுவ அறிவியலுக்கு இணையான காய்நகர்த்தல்கள் தேவைப்படுகிறது என்பதையே இலங்கைத் தீவுடன் தொடர்புடைய பூகோள அரசியல் விடயங்களும், அனைத்துலக விவகாரங்களும் வெளிப்படுத்தி நிற்கின்றன. அதன்பாற்பட்டே, இராணுவ அறிவியல் உதாரணத்தை மேலே குறிப்பிட்டுள்ளேன்.

சீனாவின் மேலாண்மையும், அமெரிக்காவின் வியூகமும்

பொருளாதார நிலையில் கூட்டிணைவுடன் செயற்பட்ட அமெரிக்காவும், சீனாவும் பொருதவேண்டிய களங்கள் திறக்கப்பட்டாயிற்று. சீனாவின் துரிதகதி அசுர பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை விழிப்படைய வைத்துள்ளது. இது, அனைத்துலக உறவில் ஒரு புதிய அத்தியாயத்துக்கு வழிகோலியுள்ளது.

ஆசியாவில் மேலாண்மையுடன் உள்ள சீனா, ஆபிரிக்கா கண்டம், வட அமெரிக்கா கண்டம் என தனது செல்வாக்கை வியாபித்துள்ள நிலையில், ஆசிய – பசுபிக் பிராந்தியத்தை நோக்கி அமெரிக்கா தன் வியூகத்தை விரிவாக்கியுள்ளது. ஆக, சீனாவை அதன் குகைக்குள்ளேயே எதிர்கொள்வதற்கான ஒரு திட்டம். இதில், இரு பெரும் சக்திகளுக்குமே இலங்கைத் தீவை முன்னிறுத்திய நகர்வுகள் கட்டாயமானவை. இலங்கைத் தீவு ஏன் முக்கியம் என்பதை எனது முன்னைய கட்டுரையொன்றில் சுட்டிகாட்டியிருந்ததை, இந்தத் தொடரின் பாகம் ஒன்றில் தெரிவித்திருந்தேன். எனினும், குறித்த விடயத்தின் அவசியம் கருதி, அந்த இணைப்பை http://bit.ly/wTB6IG மீளவும் இங்கு தருகிறேன்.

'சீனாவின் ஆபிரிக்க கதை' ஆசியாவிலும் தொடங்கி விட்டது. அதன், முதற்பலியாக சிறிலங்காவும், பாகிஸ்தானும் மாற்றம் பெற்றுள்ளன. பர்மா [மியானமார்] விழிப்படைந்ததால், சீனாவின் ஆபிரிக்க கதை அங்கு முழுமையடைவது கேள்விக்குறியாகியுள்ளது. 'சீனாவின் ஆபிரிக்க கதை' என்பது, குறித்த நாட்டுடன் ஒத்துழைப்பு போன்று அல்லது அதற்கு உதவுவது போல காட்டிக்கொண்டே குறித்த நாட்டிலுள்ள வளங்களை சுரண்டுவதோடு, அந்த நாட்டையும் தனக்கு சார்பான வகையில் மாற்றுநிலையாக்கம் செய்யும். இதனை நோக்கிய காய்கள் வெவ்வேறு வகையில் நகர்த்தப்படும். அது பொருளாதரா ரீதியாகவும் இருக்கலாம். இராணுவரீதியாகவும் இருக்கலாம். ஏன், சமய, பண்பாடு ரீதியாக கூட இருக்கலாம்.

இந்த அடிப்படையிலேயே, இலங்கைத் தீவிலும் சீனா காலுன்றி, இன்று மேலாண்மை மிக்க சக்தியாக மாற்றமடைந்துள்ளது. இதன் ஒரு கட்டமாகவே, சிறிலங்காவுக்கு உதவி வழங்குவதில் முதன்மை நாடாக விளங்கிய ஜப்பானை முந்தியுள்ளது. அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதென்ற போர்வையிலேயே, சீனாவின் மேலாண்மையானது இலங்கைத் தீவில் வீச்சடைகிறது. இதனை சீனா தனது நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கிறது. இதற்கு சார்பாக, சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கி 2-6 வீத கடனை குறித்த சீன நிறுவனங்களுக்கு வழங்குகிறது.

2011ம் ஆண்டில் சுமார் 60,000 சீனத் தொழிலாளர்கள் இலங்கைத் தீவினில் இறக்கப்பட்டிருந்தனர் என்கிறது சிறீலங்கா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள். சீனத் தொழிலாளர்களில் பெரும்பாலனவர்கள் சுற்றுலா நுழைவு அனுமதி சீட்டிலேயே சிறிலங்காவுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இதன்நோக்கம், சிறிலங்காவுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் புள்ளிவிபரத்தில் அதிகரிப்பை காட்டுவதனூடாக, மேலதிக வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவர்ந்து, பொருளாதார வருவாயை அதிகரிப்பது. அடுத்து, சீனாவின் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வைத்து, இலங்கைத் தீவில் அதிகரிக்கும் சீனாவின் மேலாண்மையயை கணிப்பீடும் செய்யும் பிராந்திய மற்றும் அனைத்துலக சக்திகளின் கண்ணில் மண்ணைத் தூவ முயற்சிப்பது போன்றவை சிறிலங்கா அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரல்.

உண்மையில், சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட தகவலை விட, இலங்கைக்குள் நுழைந்துள்ள சீனத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். அத்துடன், இவர்களில் பெரும்பாலனோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்கான சீன சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களே, சீனா நிறுவனங்களால் இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களிலில் சாதாரண தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள். ஹம்பாந்தோட்டையில் சீனா அமைத்துள்ள துறைமுகத்துக்காக சுமார் ஒரு பில்லியன் தொடக்கம் ஒன்றரை பில்லியன் அமெரிக்க டொலர் வரை முதலீடுசெய்யப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானங்கள் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், இந்து சமூத்திரத்தில் பயணிக்கும் சீனக் கடற்படையினதும், பொருளாதார கப்பல்களினதும் எரிபொருள் நிரப்பு தளமாகவும், கடற்படை கப்பல்களின் தரிப்பிடமாகவும் மாற்றமடையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட, இலங்கைத் தீவில் சீனா சிறப்பு பொருளாதார வலயத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பண்ணையை நடத்துகிறது. அத்துடன், நுரைச்சோலையில் 900 மெகா வாற்ஸ் அனல் மின்னல் நிலையம், கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை, பளை – காங்கேசன் துறை தொடருந்துப் பாதை, சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கான யாழ்ப்பாண வீட்டுத் திட்டம் போன்றவை சீனாவின் பிரதான செயற்திட்டங்கள் ஆகும்.

இதேவேளை, சீனா இலங்கைத் தீவில் ஆழக் காலூன்றுவதென்பது, இந்தியாவுக்கு ஒரு சவாலான விடயம். இந்த சவால் பொருளாதாரத்தையம் தாண்டி, தேசிய பாதுகாப்புத் தொடர்பாகவும் சிந்திக்கத் தூண்டுகிறது. சிறிலங்கா ஆட்சிபீடமோ, இந்தியாவையும் தடவி, சீனாவை தட்டிக்கொடுத்து தனது காரியங்களை முன்னனெடுக்கும் முனைப்பில் கவனம் செலுத்துகிறது. ஆயினும், சீனா பக்கமே அதிகமாகச் சாய்கிறது.

இந்த வகையிலேயே, இந்தியாவுக்கு போட்டியாகவும், சவாலாகவும் விளங்கக் கூடிய வகையில் பூநகரியில் அனைத்துலக தரத்திலான ஒரு விமான நிலையத்தை அமைக்கும் திட்டம் சீனாவால் முன்னெடுக்கப்படவிருக்கிறது. இரணைமடுவில் அமைக்கப்படவிருந்த விமானநிலையமே, தற்போது பூநகரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நெற் செய்திவெளியிட்டுள்ளது. இதனூடாக இந்தியாவை கண்காணிப்பது மேலும் இலகுவாகும். இலங்கைத் தீவில் சீனாவின் மேலாண்மை அதிகரிப்பதென்பது, அமெரிக்காவை பொறுத்தளவில் அதன் ஆசிய-பசுபிக் நோக்கிய மூலோபாய நகர்வில் முக்கியமா கவனத்திலெடுக்கப்பட வேண்டிய விடயம். ஆனால், இந்தியாவுக்கோ, அதன் தேசிய பாதுகாப்புக்கு சவாலான விடயம். காலப்போக்கில் இது அச்சுறுத்தலாக கூட மாற்றமடையக் கூடும்.

இவற்றின் அடிப்படையிலேயே, சிறிலங்காவை நோக்கிய முத்தரப்பு [இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா] வியூகம் தீவிரம் அடைகிறது. இதில் முன்னணி வகிப்பவர்களாலேயே, இந்து சமுத்திரத்தை சொத்தாகக் கொண்ட ஆசியப் பிராந்தியத்தில் முன்னணி வகிக்க முடியும். இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களே, எதிர்கால வல்லரசாக இருக்க முடியும்.

இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கைத் தீவு அமைந்துள்ளது. அதனடிப்படையில், இலங்கைத் தீவை தமது 'கட்டுப்பாட்டுக்குள்' வைத்திருப்பது குறித்த தரப்புகளுக்கு கட்டாயமானது. அதற்காக ஒரு தரப்பு பொருளாதார நலன் என்கிறது. இன்னொரு தரப்பு தீர்வுத் திட்டம் தொடர்பாக பேசுகிறது. மற்றத் தரப்போ போர்குற்றம் மற்றும் மானுடகுலத்திற்கெதிரான குற்றம் ஆகியவற்றை பேசுகின்றது.

இதில், எல்லோருக்கும் பொதுவான அடிப்படையாதெனில், எல்லோருமே, தத்தமது தேசிய நலனை கருத்தில்கொண்டே காய்களை நகர்த்துகிறார்கள். அந்த நகர்விற்கு தமிழ்த் தேசியம் ஒரு தவிர்க்க முடியாத கருவியாக மாற்றமடைந்துள்ளது. இந்த நிலை, தமிழர் தேசத்திற்கு கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. அதனை, சரிவரப் பயன்படுத்துவதே வளமான எதிர்காலத்திற்காக தமிழர் தேசம் இடும் ஒரு சிறந்த அடிக்கல்லாகும்.

உலகில் நாடில்லாத தேசங்கள் தமது அடையாளத்தை பேணிப்பாதுகாப்பது, தமது தேச நலனை முன்னிறுத்தி செயற்படுவதென்பது ஒன்றும் புதியவிடயமல்ல. ஆகவே, நீதிக்கு போர்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான சுதந்திரமான அனைத்துலக விசாரணையும், நிலையான தீர்வுக்கு இனப்படுகொலை விடயமும் கருத்திலெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

மேற்குறித்த விடயங்கள் ஒன்றோடொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. ஆனால், தமிழ் மக்களுக்கு நிலையானதும், நியாயமானதும் மற்றும் கௌரவமானதுமான தீர்வு என்பதே நீண்டகால இலக்காகவும், இறுதி இலக்காகவும் இருக்க வேண்டும்.

குறுங்கால மற்றும் மத்திமகால திட்டங்களை தன்னகத்தே கொண்டு நீண்டகால இலக்கு நகரவேண்டும். குறுங்கால மற்றும் மத்திமகால திட்டங்களை, போரினால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வுக்காக தாயகத்தில் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு தேவையான மனிதாபிமானப் பணிகளை, இனப் பற்றுடன், மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்படும் நபர்கள், அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஊடாக முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவை, போரினால் அழிந்து போயுள்ள சமூக கட்டுமானங்களை மீள நிலைநிறுத்துவதோடு, தன்னிறைவு நிலைக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும். இவற்றிற்கு, தம்மாலான சகல உதவிகளையும், ஆதரவுகளையும் புலம்பெயர் அமைப்புகள் தமக்கு நம்பிக்கையான நபர்கள் மற்றும் அமைப்புகள் ஊடாக வழங்க வேண்டும். இது, புலம்பெயர் சமூகத்தின் தார்மீகப் பொறுப்பும், வரலாற்று கடமையுமாகும்.

அதேவேளை, போர்க்குற்றம் மற்றும் மானுடகுலத்திற்கு எதிரான சுதந்திரமான அனைத்துலக விசாரைணையை தமிழர் தேசத்திற்கு சாதகமான முறையில கையாள்வதற்காக, இது தொடர்பாக புலம்பெயர் தேசங்களில் செயற்படுகின்ற அமைப்புகள் யாவும் விரைவில் ஒருங்கிணைந்து வினைத்திறனுடன் பணியாற்றுவதற்காக ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். அதற்காககவும், அதன் பிற்பாடான செயல்பாடுகளுக்காகவும் ஒரு காத்திரமான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு, அதன்படி அமுல்படுத்தல் நடவடிக்கைகள் ஒழுங்காக நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். இவை, காலத்துக்கு காலம் சுயமதிப்பீடு செய்யப்படுவதோடு, தேவையான நேரங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

போர்க்குற்றம், மானுடகுலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான விடயங்களை தாயகத்திலுள்ள மக்களோ, சிவில் அமைப்புகளோ, தமிழ் அரசியல் தலைமைகளோ வெளிப்படையாக பேசமுடியாத சூழல் நிலவுகிறது. ஆனால், மேற்கத்தேய இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களில் இதனை வலிறுத்த வேண்டிய தார்மீக கடமைiயும், வரலாற்றுப் பொறுப்பும் தாயகத்திலுள்ள அரசியல் தலைமைகளுக்கு உண்டு. அதேவேளை, நம்பிக்கையான அனைத்துலக ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கும் போது, தம்மை இனங்காட்ட வேண்டாம் எனக் கூறிக்கொண்டு மேற்குறித்த கருத்தை வலியுறுத்தலாம்.

இவ்வாறு, களத்தில் உள்ளோரும், புலம்பெயர்ந்தோரும் செயற்படுவது தமிழ்மக்களின் வளமான எதிர்காலத்திற்கு அவசியமாகும். அணுகுமுறைகளிலும், வெளிப்படுத்தல்களிலும் வேறுபாடுகள் இருப்பினும், இறுதி இலக்கில் இருதரப்புக்கும் ஒருமித்த தெளிவும், உறுதியும் இருக்க வேண்டும். அதனடிப்படையிலேயே, இலங்கைத் தீவை நோக்கி நகர்ந்துள்ள முத்தரப்பு காய்நகர்தலால் உண்டாகும் வாய்ப்புக்களை தமிழர் தேசத்திற்கு சார்பாக மாற்றலாம்.

ஆசியா- பசுபிக்கை மையப்படுத்தி அமெரிக்கா வகுத்துள்ள வியூகம் இந்த சந்தர்ப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. தமிழர்கள் எந்த தரப்புடனும் அனுசரித்துப் போகலாம், ஆனால் யாரிடமும் சரணகதியடைய வேண்டிய தேவையோ அல்லது எவரதும் நிகழ்ச்சி நிரலுக்கும் இணங்கி பணியாற்றவேண்டிய அவசியமோ இல்லை. அதற்குப் பெயர் இராஜதந்திரமுமில்லை.

குறித்த வாய்ப்பை பயன்படுத்துவதற்கான தோற்றுவாயாக, போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்துக்கு எதிரான சுதந்திரமான அனைத்துலக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளலாம்.

அடுத்த பத்தியிலே, போர்க்குற்ற விடயத்தை முன்னெடுப்பது சாத்தியமானதா? அதற்கான சவால்கள் என்னவென்பதை ஆராய்வோம்.

*ஊடகவியலாளரான நிர்மானுசன் பாலசுந்தரம் அனைத்துலக அளவிலான மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன், சமாதானம் மற்றும் மோதுகை மாற்றுநிலையாக்கம் தொடர்பான துறைகளிலான ஆய்வாளரும் ஆவார். கட்டுரை பற்றிய கருத்துகளை எழுதுவதற்கும் ஆக்கபூர்வமான விவாதங்களை முன்வைப்பதற்கும்: bnirmanusan@gmail.com

http://www.puthinappalakai.com/view.php?20120218105610

  • 2 months later...
  • தொடங்கியவர்

அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் - பகுதி V

பகுதி - IV லே தமிழர்களை தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளிக்கொணர்வதற்கான சில கருத்துப் பகிர்வுகள், இலங்கைத் தீவில் அதிகரித்து வரும் சீனாவின் மேலாண்மையும் அது இந்தியா தேசிய நலனுக்கு ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் மற்றும் அமெரிக்கா ஆசிய-பிராந்தியம் நோக்கி வகுத்துள்ள உபாயத்தின் ஒரு பகுதியை ஆய்வுக்குட்படுத்தியிருந்தேன். 'அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்' என்ற தொடரின் இறுதிப் பகுதியான இந்தப் பத்தியிலே, தத்தமது தேசிய நலன்களை மையப்படுத்தி ஒவ்வொரு நாடும் மேற்கொள்ளும் நகர்வுகளையும், அது தமிழர் தேசத்துக்கு சொல்லும் சேதியையும் ஆய்வுக்குட்படுத்துகிறேன்.

“இனிவரும் காலத்தில், சீனாவை பலவீனமாக்கும் நடவடிக்கைகள் ஆசியப் பிராந்தியத்தில் கூர்மையடைப் போகின்றன. ஆதலால், ஆசியாவிலுள்ள முக்கியமான சிக்கல்கள், இனக்குழும போராட்டங்கள், ஆயுதக்கிளர்ச்சிகள் எல்லாம் வல்லாதிக்க சக்திகளின் நலன்களுக்காக கருவியாக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளது” என ஜனவரி 15, 2012 பிரசுரமாகிய 'அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்' என்ற தொடரின் முதல் பகுதியிலே குறிப்பிட்டிருந்தேன்.

அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டம் என்றே எனது பத்தி விளித்து நின்றாலும், சீனாவின் வகிபாகம் தொடர்பாகவும் கணிசமான கவனத்தை செலுத்துகிறது. ஏனெனில், அமெரிக்காவின் உபாய திட்டத்தில் பிரதானமான இலக்கு சீனா என வாதிடமுடியும். ஆகவே, சீனாவின் வகிபாகத்தை எடுத்துக்காட்டாமல், அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டத்தை ஆய்வுசெய்வது இந்த கட்டுரையின் இலக்கினை வலுவிழக்கச்செய்துவிடும்.

அதேவேளை, சீனாவின் வகிபாகம் என்னும் போது, சீனாவின் முத்துமாலைத் உபாயம் முக்கிய கருப்பொருளாகும். ஆகவே, இலங்கைத் தீவுக்கு தேவையான சில முக்கிய விடயங்களை 'அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் உபாய திட்டத்திலிருந்தும்', சீனாவின் 'முத்துமாலை உபாயத்திலிருந்தும்' கோர்வையாக்கி நகர்கிறது இறுதிப் பகுதியான இப்பத்தி.

அத்துடன், தேவையேற்படும் தருணங்களில் இந்தியாவின் வகிபாகமும் சுட்டிக்காட்டப்படும். ஏனெனில், இந்தியா தனித்து இலங்கைத் தீவில் செல்வாக்கு செலுத்தக் கூடிய நாடு மட்டுமல்ல. மாறாக, அமெரிக்காவின் ஆசிய பங்காளிகளில் முக்கியமான ஒரு நாடு. இருந்தபோதும், ஒவ்வொரு நாடும் தமது தேசிய நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து செயற்படுகின்றன. ஆதலால், கூட்டாளிகளின் உறவில் மாற்றம் அடையலாம். இதனால், குறித்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளிலும் தாக்கம் உண்டாகும். ஆனால், தேசிய நலன் என்ற விடயத்தில் உறுதிப்பாடு பேணி பாதுக்காக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் சக்திமிக்க நாடுகள் மேற்கொள்ளும்.

தமிழர் தேசத்தின் நகர்வுகளுக்கான அடிப்படை

இத்தகைய சூழலில் தமிழ் மக்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயம் யாதெனில், அனைத்துலக சமூகத்திற்கு என்று ஒரு தனி நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. ஓவ்வொரு நாட்டினையும் நோக்கிய வெளிவிவகாரக் கொள்கைகளை அதன் அடிப்படையிலேயே அவர்கள் திட்டமிடுவார்கள். அந்தக் கொள்கைக்கு சவாலாக ஏதாவது காரணிகள் மேற்கிளம்புமாயின், அதனை முறியடிப்பதற்கு தேவையான நகர்வுகளை மிக சாதுரியமாக மேற்கொள்வார்கள். அதன் ஒரு அங்கமாக இராஜதந்திர உறவுகளில் தலைகீழான மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்களை நிலையான மாற்றங்களாக கருதிவிடமுடியாது. ஆனால், கரையேறுவதற்கு வழிகோலும் ஒரு துரும்பாக பிடித்துக்கொள்ளலாம்.

1980 களில் சிறிலங்கா அரசாங்கத்தை தனது நிகழ்சி நிரலுக்குள் கொண்டுவருவதற்காக தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு ஆதரவினை வழங்கியது இந்தியா. அதே இந்தியா அதற்கு நேர்மாறான கொள்கைகளை பின்னர் எடுத்திருந்தது இதற்கு ஒரு உதாரணம்.

தமிழ் மக்களை நோக்கி நகரும் உறவுகள் அனுதாப நிமிர்த்தமோ, அக்கறை நிமிர்த்தமோ உருவானவை என்பதை விட, இராஜதந்திர நோக்கம் கருதியது என்ற நோக்கில் பார்ப்பதுவே தமிழ் தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமானது.

இலங்கைத் தீவை பொறுத்தவரையில், சிறிலங்கா அரசாங்கமோ அல்லது தமிழர் தரப்போ தீட்டிய திட்டத்தில் விடயங்கள் நகர்த்தப்பட்டுவருவதிலும் பார்க்க, அனைத்துலக சக்திகளே, தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப காய்களை நகர்த்துகின்றன. இது, அவர்களின் தேசிய நலனை பிரதானப்படுத்தியதாகவே இருக்கும். அவர்களுடைய காய் நகர்த்தல்கள், ஒரு தரப்புக்கு சாதகமாகவும், மறு தரப்புக்கு பாதகமாகவும் அமையும். இது, காலத்திற்கு ஏற்ற வகையில், சூழலுக்கு ஏதுவான முறையில், நேர் எதிர்மாறாகவும் இடம்பெறக்கூடும்.

அதனை மேலும் குறிப்பிடுவதானால், அனைத்துலக சமூகம் இயக்கும் நாடகத்தில் தமிழர் தரப்புக்கு ஒரு வகிபாகமும் சில சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. கிடைத்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி தமிழ்த் தேசத்துக்கான பணியை சரிவர செய்ய வேண்டியது தமிழ்தரப்புகளின் பொறுப்பு. இலங்கைத் தீவு தொடர்பாக அனைத்துலக சமூகம் எடுத்துள்ள அணுகுமுறைகளும், வகுத்துள்ள உத்திகளும், உபாயங்களும் இதனையே எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால், கிடைத்தது ஒரு சந்தர்ப்பம். அது போராட்டத்தை முன்னகர்த்துவதற்கான ஒரு நெம்புகோலே தவிர, மாறாக போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான உத்தரவாதமோ அல்லது ஆதரவுத் தளமோ இல்லை என்பதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையேல், தமிழர் போராட்டம் மீண்டும் ஒருமுறை பின்னடைவ எதிர்நோக்க வேண்டிவரும் என்பதை கவனத்திற்கொள்க.

உத்திகளின் மோதலும், உபாயங்களின் போட்டியும்

“உனது திட்டம் வெற்றியடைய வேண்டுமெனில் எதிராளியை முடக்கு. ஏதிராளியை முடக்க வேண்டுமெனில் அவனது எல்லை வரை முன்னேறி அவனை இயலுமான எல்லாமுனைகளாலும் சுற்றிவளைப்புச் செய். முடிந்தால், அவனது எல்லைக்குள் நுழைந்து அவனது மூலதனத்தில் தாக்கத்தை செலுத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகளில் இறங்கு” என்பது இராணுவ விஞ்ஞானத்துக்கே அதிக பொருத்தமாக இருப்பினும், சக்திமிக்க நாடுகளின் இன்றைய பொருளாதாரப் போட்டிகளுக்கும் ஏற்றதாகவே உள்ளது.

அந்தவகையிலேயே, அமெரிக்காவினதும், சீனாவினதும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.

சீனாவின் முத்துமாலை உபாயம் இந்தியாவை முடக்க முயற்சிக்கிறது. இந்த கருத்துக்கு வலுச்சேர்ப்பது போலவே, பங்களாதேசின் சிட்டாங்கொங்கிலும், பாகிஸ்தானின் கவாடரிலும் [Gwadar] மற்றும் சிறிலங்காவின் ஹம்பாந்தோட்டையிலும் சீனா தனது தேவைக்கு ஏற்ற முறையில் துறைமுகங்களை கட்டமைத்து வருகிறது. இந்த மூன்று துறைமுகங்களும் ஆசியாவின் எண்ணைவள கடற்பாதையில் முன்னணி மிக்கவை. ஆதலால், சீனாவின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக தற்போது திகழ்வதோடு, காலப்போக்கில் இராணுரீதியாகவும் கைகொடுக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் தென்படுகிறது.

இந்தநிலையில், அமெரிக்கா எடுத்துள்ள நகர்வுகள் கவனத்திற்கொள்ளப்படுதல் பொருத்தமாகும். இந்த நகர்வென்பது, ஆசியாவை நோக்கி அமெரிக்கா பாதுகாப்பு உபாய மார்க்கத்தை தீட்டிய பின்னரே தீவிரமடைந்துள்ளமை அவதானிக்கத் தக்கது.

இத்தகைய தருணத்தில், 1971ம் ஆண்டு பங்களாதேசில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்கள் தூசுதட்டப்படுகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் விடயப்பொருள்களாக மாறுவது, தனித்து அமெரிக்காவின் நலன் சார்ந்த நடவடிக்கை மட்டுமல்ல, மாறாக எத்தனை தசாப்தங்கள் கடந்தாலும் போர்க்குற்றங்கள் மறுக்கப்படவோ, மறைக்கபடவோ முடியாதவை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

(போர்க்குற்றம் தொடர்பான விடயங்களையும், அது தொடர்பான அனைத்துலக அனுபவங்களையும் மற்றுமொரு பத்தியிலேயே விரிவாக ஆய்வுகுட்படுத்தி வாசகர்களோடு பகிரத் திட்டமிட்டுள்ளேன்)

அடுத்து, பலோகிஸ்தான் [balochistan] மக்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்யை பாகிஸ்தான் அங்கீகரிக்க வேண்டும் என்னும் தீர்மானம் 2012 பெப்ரவரி மாத ஆரம்பத்திலே அமெரிக்கா கொங்கிரசில் [uS Congress] முன்மொழியப்பட்டது. பாகிஸ்தான் பலோகிஸ்தானை தனது ஒரு மாகாணமாகவே கருதிவருகிறது. அதற்கிணங்க, அங்கு பாகிஸ்தானின் ஆட்சியே இடம்பெற்று வருகிறது. ஆயினும், பலோகிஸ்தான் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு தாம் ஒரு தனித் தேசமாக மிளிர வேண்டும் என்ற விரும்புவதோடு, 1958 ம் ஆண்டிலிருந்து ஒரு போராட்டத்தையம் நடாத்தி வருகிறார்கள்.

பலோகிஸ்தானிற்கு வடக்கே ஆப்கானிஸ்தானும், மேற்கே ஈரானும் அமைந்துள்ளன. அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமான இரு நாடுகள் பலோகிஸ்தானை எல்லையாகக்கொண்டு அமைந்திருப்பது மட்டுமல்ல, சீனா கட்டமைத்து வரும் ஆழ்கடல் துறைமுகம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பலோகிஸ்தானின் கவாடர் [Gwadar] பிராந்தியத்திலேயே அமைந்துள்ளது. மேலும், பலோகிஸ்தான் எண்ணைவளங்களும், கனியவளங்களும் நிரம்பிய பகுதியாகும்.

சீனாவின் முத்துமாலை உபாயம் இந்தியாவை சுற்றிவளைத்துள்ள மூன்றாவதும், முக்கியமானதுமான துறைமுகம், சிறிலங்காவின் ஹம்பாந்தோட்டை துறைமுகமாகும். இலங்கைத் தீவில் துரிதகதியில் அதிகரித்து வரும் சீனாவின் மேலாண்மையை, இந்தியாவுக்கும், மேற்குலகுக்கும் கரிசனை கொள்ளத்தக்க வகையில் தூண்டும் பிரதான காரணி ஹம்பாந்தோட்டை துறைமுகமாகும்.

இவ்வாறான சூழலிலேயே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஒன்று அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் எழுப்பியுள்ள பலவித விவாதங்களுக்கு அப்பால், பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது காட்டாத அக்கறையை தற்போது அனைத்துலகத்தின் முக்கிய பகுதியான மேற்குலகு காட்டியுள்ளது என்பது மெய்நிலை.

தமிழ், சிங்கள மக்களின் விருப்பு, வெறுப்புகளை தாண்டி, இலங்கைத் தீவின் விவகாரம் அனைத்துலக அரங்குக்கு மேற்குலகலகத்தால் இழுத்துவரப்பட்டுள்ளது. இது, அறுவடையில் தமிழர்களுக்கு எத்தகைய இலாபத்தை வழங்கும் என்பதற்கு அப்பால், ஆரம்ப விதை தமிழ்த் தரப்புகளுக்கும் ஒருவித வாய்ப்பினை வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு ஆர்ப்பரிப்பதோ இல்லை முற்று முழுதாக எதிர்ப்பதோ தொலைநோக்கு அரசியல் பார்வையில் ஆரோக்கியமில்லை.

முடிவுரைக்கான முகவுரை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் கடும் அழுத்தத்தை சிறிலங்காவுக்கு வழங்காவிட்டாலும், கனதியான ஒரு சேதியை சொல்லிநிற்கிறது. அது, படிப்படியாகவே, சிறிலங்கா ஆட்சியாளர்கள் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும் என்பதாகும். அதற்குள், மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் வளைந்து கொடுப்பார்களானால், இன்று தமிழ்த் தரப்புக்கு வாய்ப்பாக தென்படும் சூழல் எதிர்காலத்தில் பொறியாக மாறமாட்டாது என்பதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை. ஆயினும், சீனாவின் வலைக்குள் வீழ்ந்துள்ள சிறிலங்காவால், அதிலிருந்து விடுபட்டு மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்குள் வருவது குறுங்காலத்திலோ அல்லது மத்திம காலத்திலோ அவ்வளவு இலகுவான விடயமல்ல.

ஆகவே, அதுவரை போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்கள் சிறிலங்காவை அச்சுறுத்துவதற்கான கருவிகளாக மேற்குலகத்தால் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளினதும் [பங்களாதேஸ், பாகிஸ்தானிலுள்ள பலோகிஸ்தான் மற்றும் சிறிலங்காவின் ஹம்பாந்தோட்டை] விடயங்களில் அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையானது, ஆசியா பிராந்தியத்தின் மீது அமெரிக்கா குவித்துள்ள கரிசனையை வெளிப்படுத்துகிறது.

அதேவேளை, அமெரிக்காவுக்கும் - சிங்கப்பூருக்குமிடையிலான பாதுகாப்பு விவகாரங்களை முதன்மைப்படுத்திய கூட்டுறவு நடவடிக்கைகள் அதிகரிப்பதோடு, பிலிப்பைன்சுடனும், தாய்லாந்துடனும் அமெரிக்கா மேற்கொளும் கடல்சார் நடவடிக்கைகளும், ஒப்பந்தங்களும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் தீவிரமடைந்து வரும் பொருளாதராப் போட்டியை துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அதேவேளை, முன்னால் எதிரி நாடாக விளங்கிய வியட்னாமுடன் அமெரிக்கா வளர்த்துவரும் உறவும் சீனாவுக்கான ஒரு எச்சரிக்கையே.

ஆசியாவில் ஆழக்காலுன்றும் அமெரிக்கா, சீனாவுக்கு மட்டுமல்ல, தன்னோடு ஒத்துழையாத அரசாங்கங்களுக்கும் கனதியான ஒரு சேதியை சொல்கிறது. ஏனெனில், அமெரிக்காவின் தேசிய நலன் என்பது ஆசியாவுடனான இறுக்கமான தொடர்பிலேயே தங்கியுள்ளது. அமெரிக்காவின் முன்னால் பாதுகாப்பு செயலாளர் ஒ வில்லியம்.எஸ்.கோகன் அண்மையில் குறிப்பிட்டது போல, ஆசியானுக்கும் [ASEAN] அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார, அரசியல், பாதுகாப்பு மற்றும் மக்களுக்கும் மக்களுக்குமான உறவென்பது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் அடிப்படையானது.

ஆகவே, ஆசியா எவ்வளவு அமெரிக்காவுக்கு அவசியமோ, அதற்கு இணையான வகையில், ஆசியாவிலுள்ள நாடுகளின் விவாகாரங்களும் அமெரிக்காவின் அக்கறைக்குரியதே. அந்தவகையில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவு இன்றியமையாத கவனத்திற்குரிய மாறியுள்ளதென்றால், அங்கு இழந்து போன இறமையும், உரிமையும் மீட்பதற்காகவும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியையையும் கோரி போராடும் தமிழ்மக்களும், அவர்களுடைய தாயகப்பிரதேசமும் தவிர்க்க முடியாததும், தாக்கமுடையதுமான விளைவுகளை உண்டாக்கவல்லன. அதனை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் தந்திரோபாய ரீதியாக காய்களை நகர்த்தி தமிழர் தேசத்தின் நலனை அடையவேண்டியது தமிழர் தேசத்தின் பிரதிநிதிகளாக பல்வேறு மட்டத்திலுமுள்ள உள்ள அனைவரினதும் வரலாற்று பொறுப்பும், தார்மீக கடமையுமாகும்

http://www.puthinappalakai.com/view.php?20120421106043

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.