ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்ட அலை ஓயாது! மீண்டும் எழுச்சி பெறும் என மாணவர்கள் பேட்டி!
தமிழ் ஈழ மக்களுக்காக போராடி வரும் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் 12.04.2013 வெள்ளிக்கிழமை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அக்குழுவைச் சேர்ந்த மாணவி திவ்யா,
கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எங்கள் போராட்டங்களை மக்களிடையே கொண்டு சென்ற பெரும் பணியை பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் செய்து வருகிறீர்கள். முதலில் உங்களுக்கு மிக்க நன்றி.
மாணவர்களின் போராட்டம் சிதைந்து விட்டதாக சிலர் செய்தி பரப்பி வருகின்றனர். மாணவர்கள் பல்வேறு குழுக்களாக இருந்தாலும் கொள்கை, போராட்டத்தின் நோக்கம் ஒன்றுதான். மாணவர்களின் போராட்ட அலைகள் என்றும் ஓயாது. தற்போது கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற இருப்பதால், சற்று படிப்பில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். எனவே, தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களின் போராட்டம் தொடரும் என்றார்.
எங்கள் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக் குழு கலந்து ஆலோசனை செய்து நடத்தப்போகும் போராட்டத்தை வரைமுறை செய்துள்ளோம். கோரிக்கைகளையும் மத்திய மாநில அரசுகளுக்கு வைத்துள்ளோம்.
இதைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இலங்கையை புறக்கணிப்போம் என்ற முழக்கத்தின் கீழ், இலங்கை தூதரகம் வெளியேற்றுதல், ஐபிஎல் போட்டிகள், காமன்வெல்த் மாநாடு புறக்கணித்தல் உள்ளிட்டவற்றை கூறி மக்களிடையே பிரச்சார பரப்புரையை நடத்துவோம்.
ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28 வரை சிறப்பு முகாம்களை கலைக்கக் கோரியும், இரட்டை குடியுரிமை வழங்கக் கோரியும், தமிழ் ஈழ அகதி முகாம்களை நோக்கிய மாணவர் பரப்புரை நடைபெறும்.
ஏப்ரல் 29 முதல் மே 5 வரை சிங்களவர்களால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பரப்புரை வழங்கப்படும்.
மே 6 முதல் மே 18 வரை இந்திய அரசின் தமிழின விரோத கொள்கையை கண்டித்தும், நமது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மக்களிடையே பரப்புரை நடத்தப்படும்.
மே 19 அன்று மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் மாணவர்களால் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.
http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20210:2013-04-12-16-09-40&catid=1:aktuelle-nachrichten&Itemid=50